அன்பு செய்ய கற்றுக்கொள்வோம்
எசேக்கியேல் 24: 15 – 24
எசேக்கியேலின் மனைவி இறந்து போவாள் என்கிற அடையாளம் இறைவாக்கினருக்கு வெளிப்படுத்தப்படுகிறது. அவள் இறந்து போனாலும், அதற்காக எந்தவிதமான புலம்பலோ, வருத்தமோ, அழுகையோ இருக்கக்கூடாது என்று, இறைவாக்கினருக்கு ஆண்டவர் அறிவுறுத்துகிறார். இறந்தவர்க்காக அழுவது என்பது மதக்கடமை. நம்முடைய உள்ளத்து வருத்தங்களை வெளிப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பு. ஆனால், நம்பிக்கை உள்ளவர்களுக்கு அது தேவையில்லை. ஏனெனில், இறப்பு என்பது இன்னொரு வாழ்விற்கான பயணம்.
இந்த நிகழ்ச்சி நடக்கிறபோது, மக்கள், இறைவாக்கினரிடம், அவர் செய்வதன் பொருளைக் கேட்கிறார்கள். அவருக்கு நடந்தது போலவே, இஸ்ரயேல் மக்களுக்கும் நடக்கும் என்பதை, இறைவாக்கினர் அவர்களுக்கு அறிவிக்கிறார். அது நடக்கும் நேரத்தில் அவர்களால் அழவும் முடியாது. தங்கள் வருத்தத்தை யாரிடமும் பகிர்ந்து கொள்ளவும் முடியாது. தங்களுக்கிடையே வெறுமனே புலம்பிக்கொண்டு தான் இருக்க முடியும். அப்போது, மக்கள் அனைவரும், உண்மையான கடவுள், “யாவே“ இறைவனே என்பதை அறிந்துகொள்வார்கள். இந்த காட்சிகளும், நிகழ்வுகளும் இறைவாக்கினர் வழியாக மக்களுக்கு வெளிப்படுத்தப்படுவது, அவர்கள் தண்டனை பெற வேண்டும் என்பதற்காக அல்ல. மாறாக, நடக்கவிருப்பதை அவர்கள் “நினைத்தால்“, “மனம் மாறினால்“ மாற்றலாம் என்பதை வெளிப்படுத்துவதற்காகத்தான் இது அறிவிக்கப்படுகிறது.
ஆக, இறைவன் எப்போதும் மக்கள் சாக வேண்டும், துன்பப்பட வேண்டும் என்று விரும்புகிறவர் கிடையாது. அதற்காக இந்த உலகத்தைப் படைக்கவில்லை. இந்த உலகத்தை கடவுள் படைத்தது அன்பின் வெளிப்பாட்டினால் தான். நாம் இறைவனை அன்பு செய்ய வேண்டும், அதேபோல், இறைவனுடைய சாயலில் படைக்கப்பட்டிருக்கிற மனிதர்களை அன்பு செய்து வாழ வேண்டும். இப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்வதற்கு நாம் தயாராக இருக்கிறோமா? சிந்திப்போம், செயல்படுவோம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்