அன்பு என்றும் வாழும் !
இன்று புனித மார்த்தாவின் திருநாள். லாசர், மரியா இவர்களின் சகோதரியான மார்த்தா இயேசுமீது சிறப்பான அன்பு கொண்டிருந்தார். இயேசுவும் அவர்களைத் தம் நண்பர்கள் என்று அழைத்தார். என்ன ஒரு சிறப்பு! இயேசுவை நண்பராகக் கொண்டிருப்பது. அவரை இல்லத்துக்கு அழைத்து, விருந்திட்டு உபசரிப்பது. அந்தப் பேறு மார்த்தாவுக்குப் பலமுறை கிடைத்தது.
லாசர் இறந்தபின்னும்கூட மார்த்தா இயேசுவின் வல்லமைமீது கொண்டிருந்த நம்பிக்கை நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. நீர் இங்கே இருந்திருந்தால், என் சகோதரன் இறந்திருக்க மாட்டான் என்று ஆணித்தரமாகக் கூறிய மார்த்தா, அடுத்த வார்த்தைகளில் தன் நம்பிக்கையின் முழுமையையும் வெளிப்படுத்துகிறார். இப்போதுகூட நீர் கடவுளிடம் கேட்பதையெல்லாம் அவர் உமக்குக் கொடுப்பார் என எனக்குத் தெரியும். ஆம், மார்த்தாவின் நம்பிக்கை அவரது அன்பின் அடிநாதமாக இருந்தது.
எனவே, இயேசு அங்கே ஒரு புதுமையை நிகழ்த்துகிறார். லாசரை உயிரோடு எழுப்புகிறார்.
அன்பு இறவாது. அன்பு என்றும் வாழும். அன்பு நம்பிக்கை கொள்ளும். இவை அனைத்துக்கும் எடுத்துக்காட்டாகத் திகழ்ந்த மார்த்தாவுக்காக இன்று இறைவனுக்கு நன்றி கூறுவோம்.
மன்றாடுவோம்: நல்ல நண்பராகத் திகழ்ந்த இயேசுவே, உம்மைப் போற்றுகிறேன். மார்த்தா, மரியா, லாசர் இவர்களை உமது நண்பர்களாக ஏற்றுக்கொண்டு, அவர்களுக்கு உமது மாட்சியையும், ஆற்றலையும் வெளிப்படுத்தினீரே. உமக்கு நன்றி. ஆண்டவரே, மார்த்தா உம்மீது கொண்டிருந்த அணை கடந்த, தடைகளைத் தகர்த்தெறிந்த, இறப்பையும் கடந்த அன்பையும், விசுவாசத்தையும் எனக்கும் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.
~ அருட்தந்தை குமார்ராஜா