அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு
அன்பே இவ்வுலகின் அச்சாணி. இதனை மதங்கள் மட்டும் வலியுறுத்தவில்லை. அறிஞர்களும், சான்றோர்களும், புலவர் பெருமக்களும் வலியுறுத்துகின்றனர். குறிப்பாக உலகப் பொதுமறை தந்த செந்நாப்போதரும், ‘அன்பிற்கும் உண்டோ அடைக்குந் தாழ்’ என்கிறார். இப்படி அன்பினைப் பற்றிப் பேசாதவர்களே இவ்வுலகில் இல்லை எனலாம். சாதாரண மாந்தர்களே இவ்வாறு கூறும்போது, அன்பினையே தனது பேச்சாக, மூச்சாக, உணர்வாக, உயிராகக் கொண்டிருக்கும் நம் அன்பின் கடவுள் இயேசு எவ்வளவு பேசியிருப்பார்.
உலகின் எல்லாச் சமயங்களும் வலியுறுத்துகின்ற ஒருபொன் விதி, பொதுவிதி என்றால் “பிறர் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதையே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்” என்பதாகத்தான் இருக்க முடியும். எடுத்துக்காட்டாக, இந்துமதம், (மகாபாரதம் 5:1517) இசுலாம் (சன்னா) யூதமதம் (தால்முத் சாபத் 3) கன்சிபூசியனிசம் (15:23) தாவோயிசம் (தாய் ஷாங் கான்யாய் பைன்) எனப் பல மதங்களைக் குறிப்பிடலாம். ஆனால் கிறித்தவத்தின் தனித்தன்மை என்னவென்றால், புதிய ஏற்பாட்டு நூல்கள் அனைத்திலும் ‘அன்பு’ பரவிக்கிடக்கின்றது. ‘கடவுள் அன்பாய் இருக்கிறார்’ (1யோவான் 4:8), அன்பாய் இருக்கிற கடவுள் நம்மை அன்பு செய்கிறார், தம் ஒரே மகன் மீது நம்பிக்கைக் கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெரும் பொருட்டு… (யோவான் 3:16, 1யோவான் 4:9) என்று திருவிவிலியம் குறிப்பிடுகின்றது. இதுதான் அன்பின் உச்சம். நாம் கடவுளின் மீது அன்பு கொண்டுள்ளோம் என்பதல்ல, மாறாக அவர் நம்மீது அன்பு கொண்டு தம்மகனை நம் பாவங்களுக்குக் கழுவாயாக அனுப்பினார் என்பதில்தான் அன்பின் தன்மை விளங்குகிறது. (1யோவான் 4:10) அந்த இறைமகன் இயேசு நாம் பாவிகளாய் இருந்த போதே நமக்காகத் தம் உயிரைக் கொடுத்து கடவுள் நம்மீது கொண்டுள்ள அன்பை உலகுக்கு எடுத்துக்காட்டினார். (உரோமையர் 5:8) ஏனெனில் அந்தக் கிறிஸ்துவே தமது நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை (யோவான் 15:13) என்று சொல்லி தம் இன்னுயிரை ஈந்தார். இதில்தான் கிறிஸ்துவின் உண்மையான அன்பின் தன்மை நமக்கு விளங்குகிறது. இதுதான் கிறித்துவின், கிறித்தவத்தின் தனித்தன்மை. எல்லா சமயங்களும் பேசின. ஆனால் நமது ஆண்டவர் சொல்வதோடு செய்தும் காட்டினார். ஆவர் நம் அனைவருக்கும் தலைசிறந்ததொரு முன்னுதாரணமாய், இன்னும் அழுத்தமாகச் சொன்னால் கிறித்து ஒருவரே பத்துக் கட்டளைகளை இரண்டு கட்டளைகளாக்கி, இரண்டினை பொன்விதியாக்கி, பொன்விதியை தன்விதியாக்கி வாழ்ந்து காட்டினார். யாரெல்லாம் இன்று எப்படி இப்பொன்விதியை வாழ்வாக்க முடியும் என்று ஐயப்படுகிறார்களோ அவர்களுக்கு இயேசு சிறந்த யோசனையைக் கொடுக்கின்றார். “நான் உங்களை அன்பு செய்தது போல நீங்கள் மற்றவர்களை அன்பு செய்யுங்கள் (யோவான் 13:34) என்றார். இதனை எந்த மதமும் சொல்லவுமில்லை. எந்த மகானும் செய்யவுமில்லை.
இந்த அன்பின் கடவுள் பகைவருக்கு அன்பு, வெறுப்போருக்கு நன்மை, சபிப்போருக்கு ஆசி, இகழ்வோருக்கு இறைவேண்டல், அடிப்போருக்கு மறுகண்ணம், மேலாடையை எடுப்போருக்கு உன் அங்கி, கேட்பவருக்குக் கொடு, எடுத்தால் திருப்பிக் கேளாதே என்ற பொன் மறையை அன்பினை மையப்படுத்தி அனைவரையும் கடைபிடிக்கச் சொன்னார்.
ஒவ்வொருவரும் பொன் விதியான இயேசுவின் தன் விதியைக் கடைபிடித்தால், இங்கே குற்றங்களுக்கு இடமில்லை, சிறைகளும் தேவையில்லை, இரவு நேரங்களில் நமது வீட்டின் கதவுகளை பூட்டிடும் அவசியமில்லை, திருமணங்களில் விவாகரத்துக்கு இடமில்லை, அனாதை இல்லங்களும் முதியோர் இல்லங்களும் திறக்கப்பட வேண்டியதில்லை, போரையும் தீவிரவாதத்தையும் எண்ணிக் கலங்க வேண்டியதில்லை. மாறாக, இவ்வுலகில் அளவில்லாத மகிழ்ச்சியே மிஞ்சும். ஆகையால் அன்பினை மட்டுமே முன்னிலைப்படுத்தி வாழ முற்படுவோம். அன்பு இல்லையேல் நாம் ஒன்றுமில்லை! நாம் வாழ்வதில் பொருளில்லை!! அவ்வாறன்றி வாழ்ந்தாலும் பயனில்லை!!!
“இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு” (குறள் 987)
– திருத்தொண்டர் வளன் அரசு