அன்னை மரியாளின் வார்த்தைகள்
இந்த உலகம் விந்தையானது. இங்கு நேர்மையோடு, நீதியோடு வாழ வேண்டும், இந்த உலகத்தில் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்று வாழ்கிறவர்களை உலகம் பரிகாசம் செய்கிறது. அவர்களை உதாசினப்படுத்துகிறது. அவர்களை ஒரு பொருட்டாக மதிப்பது கிடையாது. அவர்கள் கூறக்கூடிய கருத்துக்கள், வாழ்விற்கு ஒத்துவராது என்று ஒதுக்கித்தள்ளிவிடுகிறது. இன்றை நற்செய்தியில் அன்னைமரியாளின் பாடல், இந்த உலகம் எப்படியெல்லாம் அமைய வேண்டும் என்று நல்லவர்கள் எண்ணுகிறார்களோ, அவர்களின் எண்ணங்களைப் பிரதிபலிப்பதாக அமைந்திருக்கிறது.
இந்த வார்த்தைகள் சாதாரண வார்த்தைகள் அல்ல. நல்லவர்களோடு தன்னைப் பொருத்திப்பார்க்கிற வார்த்தைகள். இந்த உலகம் எண்ணுவதிலிருந்து வேறுபாடான வாழ்வை, சவாலான வாழ்வை வாழ்வதற்கு முயலக்கூடிய வார்த்தைகள். இது வெறும் வார்த்தைகள் மட்டும் அல்ல. தான் எப்படி வாழப்போகிறேன், தன்னுடைய குழந்தையை எப்படி வளா்க்கப் போகிறேன் என்பதற்கான முன்னுதாரணமான வார்த்தைகள். இந்த வார்த்தைகள் தான் வரலாற்றை இரண்டாக கிழித்துப்போட இருக்கும், உன்னதரான இறைமகன் வாழ இருக்கக்கூடிய வார்த்தைகள். நமது வாழ்வு ஏனோ தானோவென்ற வாழ்வாக இருக்கக்கூடாது. அன்னை மரியாளைப் போன்ற திட்டமிட்ட வாழ்வாக இருக்க வேண்டும். அதுதான் இந்த நற்செய்தி நமக்குத்தரும் செய்தி.
நமது வாழ்வை நாம் திட்டமிட்டு வாழ வேண்டும். நாம் மட்டும் வாழ்ந்தால் போதாது. மாறாக, நம்மைச் சுற்றியிருக்கிறவர்கள் அனைவரும் சிறப்பாக வாழ வேண்டும். அத்தகைய ஒரு வாழ்வை நாம் ஆண்டவரிடத்தில் கேட்டு மன்றாடுவோம்.
~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்