அன்னைமரியாளும், அவளின் வாழ்வும்
மரியாளின் பாடல் கடவுள் மரியாளுக்குத் தந்திருக்கிற ஆசீர்வாதத்தைப்பற்றி நமக்கு பறைசாற்றுவதாக இருக்கிறது. மரியாள் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவள். எந்த அளவுக்கு என்றால், தந்தையாகிய கடவுளே மரியாளை கபிரியேல் தூதர் வழியாக வாழ்த்தும் அளவுக்கு அன்னை மரியாள் நிறைவாக ஆசீர்வதிக்கப்பட்டவள். அன்னைமரியாளுக்கு கடவுளின் மகனைத்தாங்கும் பேறு கிடைத்த அதே வேளையில் அவளுக்கு ஒரு துயரம் நிறைந்த செய்தியும் தரப்படுகிறது. அதாவது, அவளது உள்ளத்தை ஒரு வாள் ஊடுருவும் என்பதுதான் அந்த செய்தி. அதாவது, கடவுளின் ஆசீர் நமக்குக் கிடைக்கும்போது, துன்பங்களையும் துணிவோடு ஏற்றுக்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்கிற செய்தியை இது நமக்குத்தருகிறது.
வாழ்வை மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அதற்காக துன்பம் வருகிறபோது, வாழ்வை ஒரு பாரமாக எண்ணிவிடக்கூடாது. துன்பமும், இன்பமும் கலந்ததுதான் வாழ்க்கை. இந்த நியதியை அறிந்துகொண்டால் வாழ்வு இன்பம்தான். இந்த வாழ்வியல் கலையை அன்னைமரியாள் நமக்கு கற்றுத்தருகிறார். துன்பம் வருகிறது என்பதற்காக, துன்பத்தை விட்டுவிட்டு ஓடிவிடவில்லை. துன்பத்தைத்தாங்குவதன் மூலமாக அதையும் இன்பமாக மாற்ற முடியும் என்பதை அவர் வாழ்ந்துகாட்டுகிறார்.
அன்னை மரியாள் இறைவனால் நமக்குக்கொடுக்கப்பட்ட உயர்ந்த கொடை. அவளுடைய வாழ்வு நமக்கெல்லாம் மிகச்சிறந்த பாடம். அன்னையின் வழிகாட்டுதலில் நாம் நடந்தாலே, அது நமக்கு இறைஆசீரைப்பெற்றுத்தரும் என்பதில் சந்தேகமில்லை. அன்னையின் அன்புக்கரங்களில் நம்மை ஒப்படைத்து, இயேசுவோடு இணைந்து வாழ்வோம்.
– அருட்பணி. தாமஸ் ரோஜர்