அன்னாவின் எதிர்நோக்கு
யூதர்களைப் பொறுத்தவரையில் தங்களது நாடு கடவுளால் சிறப்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட நாடு என்ற எண்ணம் இருந்தது. மற்றவர்களை தாங்கள் ஆளுவதற்காகவே பிறந்தவர்கள் என்கிற சிந்தனையும் அவர்களின் உள்ளத்தில் இருந்தது. ஆனாலும், இது மனித வழிகளைக் கொண்டு நிறைவேற்ற முடியாது, கடவுளின் உதவியுடன் தான் நிறைவேற்ற முடியும் என்று நினைத்தனர். அதற்கான காலம் கனியும்போது, தாங்கள் நினைத்தது அனைத்தும் நடைபெறும் என்று நம்பினர். இந்த நம்பிக்கையுடன் வாழ்ந்தவர்கள் பலர் இருந்தார்கள். இதனைப்பற்றி பல கருத்துக்கள் மக்கள் மனதில் தங்கியிருந்தது. ஒரு சிலர் கடவுள் யாரையாவது அனுப்புவார் என்று காத்திருந்தனர். மற்றும் சிலர், கடவுளே நாம் எதிர்பார்க்காத முறையில் வந்து, அனைத்தையும் மாற்றுவார் என்று எண்ணினர். மற்றும் ஒருசிலர், இதுபோன்றதை நம்பாமல், விடாத செபத்திலும், நடப்பவற்றை அமைதியான முறையிலும் கவனத்தோடு கண்காணித்துக்கொண்டிருந்தனர். நிச்சயமாக இயல்பாகவே கடவுளின் நாள் வரும் என்று நம்பிக்கையோடு எதிர்நோக்கியிருந்தனர். அதில் ஒருவா் தான் இன்றைய நற்செய்தியில் வரும் அன்னா என்கிற பெண். அவர் இறைவாக்கினராகக் கருதப்பட்டாள்.
இஸ்ரயேல் மக்களின் இத்தகைய நம்பிக்கை ஏதோ இன்றோ, நேற்றோ வந்தது கிடையாது. பல தலைமுறைகளாக இருந்து கொண்டிருந்த நம்பிக்கை. பல நூறு ஆண்டுகள் கடந்து சென்றாலும், ஒவ்வொரு நாளும் இதே நம்பிக்கையில் அவர்கள் வாழ்ந்து கொண்டிருந்தனர். அன்னாவுக்கு எண்பது வயதாகிவிட்டது. நாளாக, நாளாக ஒருவருக்கு நம்பிக்கை தளர்ச்சி அடைவதைத்தான் பார்த்திருக்கிறோம். ஆனால், அன்னா இத்தனை வயதை எதிர்நோக்கியிருந்து கடந்திருந்தாலும், அவளது நம்பிக்கையில் எந்த தளர்ச்சியும் இல்லை. துணிவோடு இருக்கிறாள். அவளது எண்ணம், நம்பிக்கை, சிந்தனை அனைத்துமே கடவுளின் அந்த நாளை எதிர்நோக்கித்தான் இருந்தது. அதனால் தான், ஒவ்வொருநாளும், ஆலயத்தில் அமர்ந்து பொறுமையோடு, உறுதியாக கடவுளிடம் வேண்டிக்கொண்டிருக்கிறாள்.
நமது வாழ்வில் இத்தகைய பொறுமை இருக்கிறதா? என சிந்தித்துப் பார்ப்போம். குறிப்பாக, நமது ஆன்மீக வாழ்வில் நமக்கு ஏற்படும் கடுமையான சூழ்நிலைகளில் நாம் உறுதியோடு இருக்கிறோமா? அந்த உறுதி நம்மில் நிலைத்திருக்க கடவுளிடம் மன்றாடுவோம். அமைதியான முறையில், எளிய வழியில் கடவுளின் நாளை எதிர்நோக்கியிருந்த அன்னாவைப்போல, நாமும் கடவுளின் ஆசீருக்காக காத்திருப்போம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்