அனைத்து ஆன்மாக்கள் திருவிழா
கல்லறைகளை கண்முன்னே வை
யோவான் 6:37-40
இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் அனைத்து ஆன்மாக்கள் திருவிழா திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். அனைத்து ஆன்மாக்களின் பரிந்துரை உங்களுக்கு இந்த நாளில் கிடைப்பதாக!
இறந்தவர்களை நினைத்துப் பார்க்கும்விதமாக `அனைத்து ஆன்மாக்கள் தினம்’ அல்லது `கல்லறைத் திருநாளை” நாம் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடுகிறாம். இறந்தவர்கள் அனைவரையும் இன்று நாம் நினைத்து அவர்களுக்காக ஜெபிக்கிறோம். நம் அன்னையாகிய திருச்சபை, மோட்சத்திலிருக்கும் தன் மக்களை நினைத்தபின் வேதனைப்படும் தன் மக்களை நினைக்கிறது. அவர்களுக்காக பரிந்து பேசுகிறது. அவர்களுக்கு தன்னாலான உதவி செய்ய முயற்சிக்கிறது. மோட்சத்தில் வாழும் தன் மக்களுடன் அவர்களை சீக்கிரம் ஒன்றிக்கும்படி மன்றாடுகிறது.
இன்று ஒவ்வொரு குருவும் மூன்று திருப்பலிகள் வைக்கிறார்கள். முதல் திருப்பலி உத்தரிக்கிற ஸ்தலத்தில் வேதனைப்படும் அனைவருக்காகவும் ஒப்புக்கொடுக்கப்படுகிறது. இரண்டாவது திருப்பலியை பாப்பானவரது கருத்துகளுக்காக ஒப்புக்கொடுக்க வேண்டும். மூன்றாவது திருப்பலியை குரு தமக்குப் பிரியமான கருத்துக்காக ஒப்புக்கொடுக்கலாம்.
1. அடங்கு
கல்லறைத் தோட்டங்களில் உயர்ந்தவன் – தாழ்ந்தவன், ஏழை – பணக்காரன், ஆண் – பெண் போன்ற எந்தவிதமான வேறுபாடுகளும் கிடையாது. `மனிதனின் பிறப்பிலும் சமத்துவம், இறப்பிலும் சமத்துவம். ஏனெனில், இவை இரண்டும் கடவுளின் கையில்! அனைத்து வேறுபாடுகளும் இவை இரண்டுக்கும் இடையில்தான் உள்ளன. காரணம், அவை உங்கள் கைகளில்தான் இருக்கின்றன. சமத்துவத்தில் பிறந்த நீங்கள், சமத்துவத்தில் இறக்கும் நீங்கள், ஏன் வேறுபாடுகளை ஏற்படுத்துகிறீர்கள்?’ என்னும் கேள்வியை எழுப்புகின்றன கல்லறைகள். முரண்பாடுகளைக் களைந்து வேறுபாடுகளைக் கொண்டாட அழைக்கின்றன கல்லறைகள். சமத்துவ உணர்வுடன் அமைதியுடன் வாழக் கற்றுக்கொடுக்கின்றன கல்லறைகள். ஆகவே அதிகமாக ஆடுவது ஆபத்து, அடங்கு.
2. அடக்கு
`சில்லறை தேடி அலையும் மனிதர்களே… வாழப் பொருள் தேவை. அதே வேளையில் வாழ்வதற்கும் பொருள் வேண்டாமா?’ என்று சிந்திக்கத் தூண்டுகிறது கல்லறைத் திருநாள். நமது வாழ்வு, இறைவன் நமக்குக் கொடுத்துள்ள மாபெரும் கொடை. மாண்புமிக்க அத்தகைய வாழ்வை நல்லமுறையில் வாழ நினைவூட்டுகின்றன கல்லறைகள்! போராசைகளை அடக்கு. உன் ஆணவத்தை அடக்கு. பணத்திற்கான அதிக தேடலை அடக்கு. வாழ்வை பொருளுள்ள விதத்தில் மாற்று. அடக்க வேண்டியவற்றை இன்றோடு அடக்கிவிடு.
மனதில் கேட்க…
1. கல்லறைகளை எப்போதும் என் கண்முன் நிறுத்தி வாழ்கிறேனா?
2. அதிகமாக ஆடக்கூடாது ஆடினால் ஆபத்து அதிகம் என்பதை உணர்ந்து வாழ்கிறேனா?
மனதில் பதிக்க…
தந்தை என்னிடம் ஒப்படைக்கும் எவரையும் நான் அழிய விடாமல் இறுதி நாளில் அனைவரையும் உயிர்த்தெழச் செய்ய வேண்டும். இதுவே என்னை அனுப்பியவரின் திருவுளம் (யோவா 6:39)
ஐஅருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா