அனைத்துலகோரே! ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள்
இந்த உலகத்தில் இருக்கிற அனைத்து மக்களும் கடவுளை ஆர்ப்பரித்து வாழ்த்த வேண்டும் என்று இந்த திருப்பாடல் அழைப்புவிடுக்கிறது. கடவுளை வாழ்த்துவதற்கு என்ன காரணங்களை ஆசிரியர் கூறுகிறார்? மூன்று பண்புகளை நாம் கடவுளை வாழ்த்துவதற்கான காரணங்களாக கூறப்படுகிறது. அதுதான் ஐந்தாம் இறைவார்த்தையில் நாம் பார்க்கிறோம்: ”ஆண்டவர் நல்லவர், என்றும் உள்ளது அவர்தம் பேரன்பு, அவர் தலைமுறைதோறும் நம்பத்தக்கவர்”. இந்த மூன்று பண்புகளை இன்றைய நாளில் நாம் சிந்திப்போம்.
கடவுள் நன்மைகளைச் செய்யக்கூடியவராக இருக்கிறார். மக்கள் எவ்வளவுதான் நன்றியுணர்வு இல்லாமல் வாழ்ந்தாலும், கடவுள் அதனை ஒரு பொருட்டாக நினைத்து, மக்களுக்கு தீமை செய்ய முற்படுவதில்லை. நன்மை செய்வது ஒன்றையே அவர் இலக்காக வைத்திருக்கிறார். 2. கடவுளின் அன்பு எந்நாளும் மக்களுக்கு இருக்கிறது. கடவுளின் அன்புக்கு மக்கள் தகுதியற்ற நிலையில் இருந்தாலும், கடவுள் மக்களை தொடர்ந்து அன்பு செய்கிறவராக இருக்கிறார். அவரது அன்பு தாயன்பிற்கு ஒப்பிடப்பட்டு சொல்லப்படுகிறது. ஒரு தாய் தன்னுடைய குழந்தைகளை எல்லா நிலைகளிலும் அன்பு செய்கிறார். தாயின் அன்பு எதிர்பார்ப்பு இல்லாத அன்பு. அதைவிட பல மடங்கு உயர்ந்தது கடவுளின் அன்பு. அந்த அன்பின் காரணமாகத்தான் தன்னுடைய ஒரே மகனை இந்த உலகத்திற்கு கையளிப்பதற்கு கடவுள் திருவுளம் கொண்டார். 3. கடவுள் நம்பத்தகுந்தவர் என்கிற வார்த்தை, கடவுளின் வாக்குறுதியைக் குறிப்பிட்டுச் சொல்வதாக இருக்கிறது. கடவுள் ஒருபோதும் வார்த்தை தவறாதவர். அவர் கொடுத்த வாக்குறுதிகளை நினைவிற்கொண்டு, அதனை சரியான காலத்தில் திட்டமிட்டுச் செயல்படுத்துகிறவர்.
கடவுளின் பண்புகளை திருப்பாடல் ஆசிரியர் விளக்குகிற தருணத்தில், கடவுளின் சாயலால் படைக்கப்பட்டிருக்கிற, நம்மிடத்தில் இந்த பண்புகள் மிளிர்கிறதா? என்று யோசித்துப் பார்ப்போம். அந்த பண்புகளை நமது வாழ்வில் வாழ்ந்து காட்ட, இறையருள் வேண்டி மன்றாடுவோம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்