அனைத்துலகோரே! ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள்!
திருப்பாடல் 100: 1 – 2, 3, 5
”அனைத்துலகோரே! ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள்!
திருப்பாடல் 100 சமய வழிபாடுகளில் அடிக்கடி தியானிக்கப்படக்கூடிய ஒரு பாடல். யூதர்கள் எப்போதெல்லாம் கடவுளுக்கு நன்றிக் காணிக்கை செலுத்தினார்களோ, அப்போதெல்லாம் இந்த பாடலையும் பாடி கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார்கள். இந்த பாடல் கடவுளின் மகிமையை, மகத்துவத்தை, இனிமையை, சுவையை எடுத்துரைக்கக்கூடிய பாடல். அனைத்துலகோரே! ஆண்டவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள் என்று ஆசிரியர் கூறுகிறார். அனைத்துலகோரே என்று சொல்கிறபோது, அது இஸ்ரயேல் மக்களை மட்டும் குறிக்கக்கூடிய வார்த்தையல்ல. மாறாக, இந்த உலகத்தில் இருக்கிற அனைத்து மக்களும் கடவுளைப் புகழ வேண்டும் என்று குறிப்பிடுகிறது. அந்த புகழ்ச்சி சாதாரண புகழ்ச்சியாக இருக்கக்கூடாது. அது ஓர் ஆர்ப்பரிப்பாக இருக்க வேண்டும்.
ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள் என்றால் என்ன? திருப்பாடல் 98 சொல்கிறது: யாழினை மீட்டி வாழ்த்துங்கள். இனிய குரலில் வாழ்த்துங்கள். எக்காளம் முழங்கி, கொம்பினை ஊதி, ஆர்ப்பரித்துப் பாடுங்கள். ஆர்ப்பரிப்பு என்பது வெறுமனே கூச்சல் போடுவது அல்ல, தொண்டை வறளக்கூடிய அளவுக்கு கத்திப்பாடுவது அல்ல. மற்றவர்களின் கவனத்தைச் சிதறடிப்பது அல்ல. வாயில் வந்த வார்த்தைகளையெல்லாம் பேசுவது அல்ல. மாறாக, ஆர்ப்பரிப்பு என்பது, கடவுளின் மகிமையை உள்ளப்பூரிப்போடு, உதட்டோடு அல்லாமல், உள்ளத்தின் நிறைவிலிருந்து வெளிவருவது. விவிலியத்திலே கடவுளின் பணியாளர்கள் எப்படியெல்லாம் ஆர்ப்பரிப்போடு பாடினார்கள் என்பதை, நாம் பார்க்கலாம். 2சாமுவேல் புத்தகத்தில் தாவீது அரசர், நடனமாடி கடவுளைப் போற்றுகிறார். விடுதலைப்பயணம் 15 ல், ஆரோனின் தங்கை மிரியம், “கஞ்சிரா” என்கிற இசைக்கருவியை மீட்டி, ஆண்டவரைப் போற்றுகிறார். 2 குறிப்பேடு புத்தகத்தில் இஸ்ரயேலின் எல்லா மக்களும், இசைக்கருவிகளை மீட்டி, கடவுளைப் போற்றுகின்றார்கள்.
இன்றைக்கு பக்தி என்கிற பெயரில், வழிபாடுகள் பயத்தை உண்டு பண்ணிக்கொண்டிருக்கிறது. கடவுள் நாம் பார்த்து பயப்படக்கூடியவர் அல்ல. நாம் புகழப்படுவதற்கு காரணமானவர். உண்மையான உள்ளத்தோடு, மகிழ்ச்சி நிறைந்த உள்ளத்தோடு, உடல், உள்ளம், ஆன்மாவோடு இணைந்து, நாம் வழிபாடுகளில் கடவுளைப் போற்றுவோம். வெறும் பார்வையாளர்களாக இல்லாமல், பங்கேற்பாளர்களாக கடவுளைப் போற்றுவோம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்