அனைத்தும் அவருக்கே சொந்தம்
திருப்பாடல் 24: 1 – 2, 3 – 4, 5 – 6
மனிதன் தன்னுடைய வாழ்நாளில் செல்வம், சொத்து சேர்க்க ஆசைப்படுகிறான். தனக்கானது என்று அவன் சேர்த்து வைக்கிறான். அதற்கு உரிமையும் கொண்டாடுகிறான். இந்த உலகத்தில் இருக்கிற எல்லாரும் இன்புற்றிருக்க வேண்டும் என்கிற எண்ணம் மனிதனிடத்தில் இல்லை. தான் மட்டும் நன்றாக வாழ்ந்தால் போதும் என்று நினைக்கிறான். அதற்கு ஏற்றாற்போல, தன்னுடைய வாழ்வை அவன் நகர்த்துகிறான். இன்றைய திருப்பாடல், இப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்கிற மனிதர்களுக்கு ஓர் ஆழமான உண்மையை எடுத்துரைக்கிறது.
இந்த உலகத்தில் இருக்கிற அனைத்துமே இறைவனுக்கு சொந்தம் என்கிற உண்மை தான் அது. இந்த உலகம் இறைவனால் படைக்கப்பட்டது. இந்த உலகத்தில் வாழ்கிற மனிதர்களும், இறைவனால் படைக்கப்பட்டவர்கள் தான். இறைவன் தான், அனைத்திற்கும் தொடக்கமும், முடிவுமாக இருக்கிறார். இந்த பூமியில் இருப்பது மட்டுமல்ல, இந்த மிகப்பெரிய வான்வெளியின் தொடக்கம் அவரே. நாம் அனைவரும் இறைவனுக்குச் சொந்தமானவர்கள் என்கிற எண்ணம் வேண்டும் என்பதுதான், திருப்பாடல் ஆசிரியர் சொல்ல வருகிற செய்தி. இந்த உலகமும், அதில் இருக்கிற உடைமைகளும் எனக்கே சொந்தம், என்கிற மனித மனநிலை மாற்றம் பெறுவதற்கு இந்த திருப்பாடல் அழைப்புவிடுக்கிறது. “எல்லாம் எனக்கு மட்டும்“ என்கிற தவறான எண்ணத்தை, இது களைவதாக இருக்கிறது.
இந்த உலகம் எனக்கானது மட்டுமல்ல, அனைவருக்கும் சொந்தம் என்கிற பொதுவான் எண்ணம் அனைவரின் உள்ளத்திலும் வர வேண்டும். சுயநல எண்ணத்திலிருந்து நாம் விடுதலை பெற வேண்டும். இந்த உலகத்தில் வளங்கள் இல்லை என்று யாரும் சொல்ல முடியாது. ஆனால், ஒவ்வொருவரும் அதனை, தங்களுக்கே உரிமை கொண்டாடுவது தான், இந்த உலகத்தின் பிரச்சனைகளுக்கு காரணம். பொதுநலத்தோடு சிந்திக்கும் வரம் வேண்டுவோம்.
~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்