அந்திரேயா – ஆண்டவர் பக்கமே!
திருத்தூதரான தூய அந்திரேயா பெருவிழா
அந்திரேயா – ஆண்டவர் பக்கமே!
மத்தேயு 4:18-22
இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருத்தூதரான தூய அந்திரேயா பெருவிழா திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.
அந்திரேயா பெத்சாய்தாவைக் சார்ந்தவர்; பேதுருவின் சகோதரர். மீன்பிடித் தொழிலை செய்துகொண்டிருந்தவர். விவிலிய அறிஞர்களின் கூற்றுப்படி அந்திரேயா தொடக்கத்தில் திருமுழுக்கு யோவானின் சீடராக இருந்தவர். ஒருநாள் ஆண்டவர் இயேசு வழியோரமாக சென்றுகொண்டிருக்கும்போது திருமுழுக்கு யோவான் தன்னுடைய சீடர்களிடம் (அந்திரேயா அங்கு இருந்தார்), “இதோ கடவுளின் ஆட்டுக்குட்டி” என்று இயேசுவை சுட்டிக்காட்டினார். உடனே அந்திரேயா இயேசுவிடம், “ரபி, நீர் எங்கே தங்கியிருக்கிறீர்?” என்று கேட்க, அவர் “வந்து பாரும்” என்று சொன்னார். அந்திரேயா ஆண்டவர் இயேசுவோடு தங்கி இறையனுபவம் பெற்றார். அந்த அனுபவத்தை தன்னுடைய சகோதரரான பேதுருவிடம் எடுத்துச் சொல்லி அவரை இயேசுவிடம் அழைத்து வருந்தார்( யோவா 1:35-42). இவரிடமிந்து இரண்டு பாடங்களை நாம் படிக்க போகிறோம்.
1. நிறுத்தவே இல்லை
ஒருமுறை பாத்ராஸ் என்னும் இடத்தில் நற்செய்திப் பணியாற்றிக்கொண்டிருக்கும் போது அந்நகரின் ஆளுநராக இருந்த ஏஜெடிஸ் என்பவரின் மனைவி மாக்ஸ்மில்லா நோய்வாய்ப்பட்டு படுத்தபடுக்கையாய் இருப்பதை அறிந்தார். எனவே அந்திரேயா அவருடைய இடத்திற்குச் சென்று, அவரைக் குணப்படுத்தினார். உடனே அவர் கிறிஸ்துவைத் தன்னுடைய தலைவராக ஏற்றுக்கொண்டு கிறிஸ்தவ மதத்திற்கு மாறினார். இச்செய்தியைக் கேள்விப்பட்ட ஆளுநன் சினம்கொண்டு அந்திரேயாவிடம், “நீ கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை அறிவிப்பதை நிறுத்தவில்லை என்றால், உன்னைச் சிறையில் அடைப்பேன்” என்று பயமுறுத்தினான். ஆனால் புனிதரோ நற்செய்தியை அறிவிப்பதை நிறுத்தவே இல்லை. இதனால் அவன் அவரைச் சிறையில் அடைத்து கடுமையாகச் சித்ரவதை செய்தான்.
சில நாட்களுக்குப் பிறகு அங்கு வந்த உரோமைப் படைவீரர்கள் பெருக்கல் வடிவில் இருந்த சிலுவையில் அவரை அறைந்து துன்புறுத்தினார்கள். அப்போதும் அவர் இரண்டு நாட்களுக்கு அங்கு வந்த மக்களுக்கு நற்செய்தியை அறிவித்துக்கொண்டே இறந்தார். அந்திரேயா மறைசாட்சியாக தன்னுடைய உயிரைத் தியாகம் செய்த நாள் கி.பி.70 ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 30 ஆம் நாள்.
இது நடந்து இருநூறு ஆண்டுகளுக்கு பிறகு ஸ்காட்லாந்து மக்கள் அந்திரேயாவை பற்றிக் கேள்விப்பட்டு, அவருடைய உடலை கான்ஸ்டான்டி நோபிளுக்கு கொண்டுவந்தார்கள். அன்று முதல் ஸ்காட்லாந்து மக்கள் அந்திரேயாவை பாதுகாவலராகக் கொண்டு வாழ்ந்து வருகிறார்கள்.
2. போகவே இல்லை
அந்திரேயாவை இயேசு அழைத்தபோது அவர் எல்லாவற்றையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின்தொடர்கிறார். வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டும் என்றால் உலக செல்வங்களைத் துறந்து, உண்மையான செல்வதைப் பற்றிக் கொள்கிறார். அவர் உலக செல்வத்தின் பின்னால் போகவே இல்லை.
அவர் இயேசுவை செல்வமாக பிடித்துக்கொண்டதால் அவர் அனுபவித்த ஆசீர்வாதங்கள் எண்ணிடலங்கா. அவற்றுள் சில இதோ: ஆண்டவர் இயேசு உயிர்த்தெழுந்த பின்பு இவர் சித்தியாவிற்கு(ரஷ்யா) நற்செய்தி அறிவிக்கச் சென்றார்; அங்கே பைசாந்திய நகரின் ஆயராக இருந்தார் என்று திருச்சபையின் தந்தைகளில் ஒருவரான ஆரிஜின் குறிப்பிடுகிறார்.
மேலும் இவரைப் பற்றிய செய்தி ‘அந்திரேயாவின் பணி’ என்ற திருச்சபையால் அங்கீகரிக்கப்படாத நூலிலிருந்து அதிகமாக படித்தறிய முடிகிறது.
அந்திரேயா பார்வையற்றவருக்கு பார்வையளித்தார் என்றும், இறந்தவரை உயிர்ப்பித்தார் என்றும், பேய்களை ஓட்டினார் என்றும் அந்த நூலிலே படிக்கின்றோம். இவையெல்லாம் இயேசுவின் பின்னால் போனதால் இவருக்கு கிடைத்த ஆசீர்கள்.
மனதில் கேட்க…
1. அந்திரேயாவைப் போன்று நானும் ஆண்டவர் பக்கம் மட்டுமே இருக்கலாமா?
2. கிறிஸ்து இயேசுவைப் பற்றிய அறிவிப்பை அந்திரோ நிறுத்தவே இல்லை. நானும் அவரை பின்பற்றலாமா?
மனதில் பதிக்க…
நற்செய்தியை அறிவிக்காவிடில் ஐயோ எனக்கு கேடு! (1கொரி 9:16)
அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா