அதிகாரவர்க்கத்தின் போலித்தனம்
திருத்தூதர் பணி 12: 1 – 11
திருத்தூதர்கள் காலத்தில், அரசருக்கு வணக்கம் செலுத்துவது, அரசருடைய உருவங்களுக்கு ஆராதனை செலுத்துவது வெறும் கடமை மட்டுமல்ல, அது அவர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தியது. அவர்கள் அதனைச் செய்ய தவறினால், கடுமையான கொடுமைகளுக்கும், சித்ரவதைகளுக்கும் உள்ளாகினர். ஆனால், இயேசுகிறிஸ்துவை நம்பிய கிறிஸ்தவர்கள் இதனை ஏற்றுக்கொள்ள மறுத்தனர். ஏனென்றால், அவர்களைப் பொறுத்தவரையில், இயேசு ஒருவரே ஆண்டவர். அவரைத் தவிர வேறு யாருக்கும், அடிபணிய மறுத்தனர். இது நிச்சயமாக, ஏரோது அரசனுக்கு கோபத்தை வருவித்திருக்கும். இன்றைய வாசகத்தில், ஏரோது அரசன், திருச்சபையைச் சார்ந்த மக்கள் சிலரைப் பிடித்துக் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.
“திருச்சபையைச் சார்ந்த மக்கள்” என்கிற வார்த்தைகள், திருத்தூதர்களைக் குறிக்கிற வார்த்தைகளோ, அல்லது, மேல் மட்ட கிறிஸ்தவ திருச்சபையின் தலைவர்களையோ குறிக்கலாம். ஏரோதுவின் இந்த செயல், கிறிஸ்தவர்கள் தனக்கு எதிராக கலகம் செய்யலாம் என்று அஞ்சியோ, அல்லது பரிசேயர்கள் மற்றும் சதுசேயர்களின் தூண்டுதலினாலோ எழுந்திருக்கலாம். ஒட்டுமொத்தமாக, அவர்களை சட்டத்திற்கு புறம்பாக கைது செய்து, சிறையிலடைத்து, கொடுமைப்படுத்தினான். ஒரு சிலரை வஞ்சகமாகக் கொன்றான். இங்கு சொல்லப்படுகிற ஏரோது, முதலாம் அக்ரிப்பா ஏரோதுவை குறிக்கிறது. இவர் பெரிய ஏரோதுவின் பேரன். உரோமையர்களின் கைக்கூலியாகவும், பாலஸ்தீனத்தின் பெரும்பான்மை யூதர்களின் பாதுகாவலனாகவும் தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டான். யூத மதத்தில் ஈர்ப்பு உள்ள இந்த ஏரோது, மற்றவர்களைக் கடுமையாக துன்புறுத்தினான். நிச்சயம், கிறிஸ்தவம் அவனுக்கு பெரிய தலைவலியாக இருந்திருக்கும். அதனுடைய வெளிப்பாடு தான், இந்த கைது நடவடிக்கைகளும், கொடுமைகளும்.
மக்களுக்கான சுதந்திரத்தை அரசியலமைப்பும், சட்டங்களும் வழங்கியிருக்கிற நிலையில், ஆட்சியாளர்கள் அதனை ஒரு பொருட்டாக மதிக்காமல், தங்கள் நலன் சார்ந்து சிந்திப்பது, இன்று நேற்றல்ல, வரலாற்றில் எப்போதுமே நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது என்பதற்கு, இந்த பகுதி சிறந்த சான்றாக இருக்கிறது. இன்றைக்கு நம்மை ஆளுகிற அரசுகளும், பொய், புரட்டு, வஞ்சகத்தின் மூலம் சாதாரண மக்களை, தன் கைக்கூலியான ஊடகத்தைக் கொண்டு, நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கிறது. ஆனாலும், பாமர மக்கள் இன்றைக்கும் துணிந்து அடிமைத்தனத்தை எதிர்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்கள் பக்கம் நாம் நிற்கிறோமா? என்று எண்ணிப் பார்ப்போம்.
– அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்