அதிகாரம் கொண்ட புதிய போதனை !
இயேசுவின் காலத்தவர் அவரிடம் கண்டு வியந்த புதுமைப் பண்புகளுள் ஒன்று இயேசுவின் அதிகாரம். இயேசு இயற்கையின்மீதும் (மாற் 4:41), மனிதர்கள்மீதும் (யோவா 17:2), அலகையின்மீதும், தீய ஆற்றல்கள்மீதும் (இன்றைய நற்செய்தி வாசகம்) கொண்டிருந்த அதிகாரம் அவர்களுக்கு மலைப்பை ஏற்படுத்தியது. இந்த அதிகாரம் எங்கிருந்து வந்தது என்று பரிசேயர்கள் கேட்டபோது, இயேசு அவர்களுக்கு விடையளிக்க மறுத்துவிட்டார் (மத் 21: 27). இருப்பினும், இயேசுவின் பணியையும், வாழ்வையும் அலசிப்பார்த்தால், எங்கிருந்து இந்த அதிகாரம் அவருக்கு வந்தது என்பதை நாம் கண்டுகொள்ளலாம்.
முதலில், இயேசு தந்தை இறைவனோடு கொண்டிருந்த நெருக்கமான உறவு. தந்தையிடமிருந்தே இயேசு தனது அதிகாரத்தைப் பெற்றுக்கொண்டார். தந்தையின் விருப்பத்தை மட்டுமே செயல்படுத்தியதால், தந்தை அவரை எப்போதும் வலிமைப்படுத்தினார். இரண்டாவதாக, இயேசுவின் தூய, நேர்மையான வாழ்வு. அவரிடம் குற்றம் ஒன்றும் காணவில்லை என பிலாத்துவும் (யோவா 19:4,6), பரிசேயர்களும் (மத் 22:46) அறிந்துகொண்டனர். இந்த அகத்தூய்மை இயேசுவுக்கு அதிகாரம் தந்தது.
நம்முடைய பேச்சிலும், செயலிலும் அதிகாரம் இருக்கவேண்டுமென்றால், நாம் செய்யவேண்டியவை இரண்டு: 1. தந்தை இறைவனிடம் வேண்டி, தூய ஆவியின் ஆற்றலைப் பெறவேண்டும். 2. மனச்சான்றுக்கு கீழ்ப்படிந்து, நேர்மையுடன் வாழவேண்டும். அப்போது, இயேசுவைப் போல நாமும் அதிகாரத்துடன் செயல்படமுடீயும்.
மன்றாடுவோம்: அன்புத் தந்தையே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். இயேசுவைப்போல நாங்களும் அதிகாரம் கொண்டவர்களாகப் பணியாற்ற உமது தூய ஆவியின் ஆற்றலையும், நேர்மையான உள்ளத்தையும் எங்களுக்குத் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.
-பணி. குமார்ராஜா