அதிகாரமும், அடிமைத்தனமும்
பொறுப்புணர்வு என்பது நமது வாழ்க்கையில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய ஓர் உன்னதமான பண்பு. இன்றைய உலகில் பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டியவர்கள், பொறுப்பற்று இருப்பதால் தான், பல பிரச்சனைகள் தோன்ற ஆரம்பிக்கிறது. அதிகாரத்திற்கு ஆசைப்படுகிற எல்லாரும், அதிகாரம் கிடைத்தபிறகு, அதனை பொறுப்பற்ற நிலையில் பயன்படுத்துகின்றனர். தங்களுக்கு சார்பான காரியங்களைச் செய்து, எப்படி இலாபம் ஈட்டலாம் என்றுதான் நினைக்கின்றனர். இதிலிருந்து நாம் விடுதலை பெறுவதற்கு, இன்றைய வாசகம் நமக்கு அழைப்புவிடுக்கிறது.
செல்வந்தர் ஒருவரின் வீட்டுப்பொறுப்பாளரைப் பற்றிய உவமை நமக்குத் தரப்படுகிறது. தன்னுடைய உடைமைகளைப் பாதுகாத்துக்கொள்ள தலைவர் ஒருவரைத் தேர்ந்தெடுத்தால், நிச்சயம் அவர் நல்லவரா? நேர்மையானவரா? பொறுப்புள்ளவரா? எனப்பார்த்துதான், தேர்ந்தெடுத்திருப்பார். வீட்டுப்பொறுப்பாளராக தேர்ந்தெடுககப்பட்டவர், அதற்கான தொடக்கத்தில் தகுதியைப்பெற்றிருக்கிறதனால், தலைவர் அவரை, பொறுப்பாளராக நியமித்திருக்கிறார். ஆனால், தொடக்கத்தில் இருந்த அந்த நல்ல பண்புகள் அதிகாரம் வந்தவுடன் மாறிவிடுகிறது. பணத்தின் மீது மோகம் ஏற்படுகிறது. விளைவு, அவரிடத்தில் குடிகொண்டிருந்த நல்ல பண்புகள் வெளியேறிவிடுகிறது. அவர் பொறுப்பற்ற மனிதராக மாறிவிடுகிறார்.
இன்றைக்கு அதிகாரத்தில் இருக்கிறவர்களின் பிரச்சனையே இதுதான். தொடக்கத்தில் நல்லவர்களாக, மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு தான் வருகிறார்கள். ஆனால், அதிகாரப்போதையும், பணத்தின் மீது ஆசையும், அவர்களை மாற்றிவிடுகிறது. பணத்திற்கு அடிமையாக மாறிவிடுகிறார்கள். சோதனைகளுக்கு அடிமையாகி பொறுப்பற்று மாறிவிடாமல், கடவுளின் அருளோடு உண்மையுள்ளவர்களாக, சோதனைகளை எதிர்த்து வாழ்வோம்.
~அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்