அதிகாரப்போதை
இயேசுவை ஆளும்வர்க்கமும், அதிகாரவர்க்கமும் எதற்காக எதிர்த்தார்கள்? என்பதற்கான விடையாக வருவது இன்றைய நற்செய்தி வாசகம். தலைமைக்குருக்களும், மூப்பர்களும் கடவுளைப்பற்றிய செய்தியையும், மக்களை ஆன்மீகத்தில் கட்டி எழுப்புவதற்காக நியமிக்கப்பட்டவர்கள். உண்மையில் இயேசு அந்த பணியைத்தான் செய்துகொண்டிருந்தார். அப்படியென்றால், அவர்கள் இயேசுவின் பணியை, போதனையைக் கேட்டு மகிழ்ச்சியடைந்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் இயேசுவின் மீது கோபப்படுகிறார்கள். இயேசுவை விரோதியாகப் பார்க்கிறார்கள். எதற்காக?
அதிகாரம் தான் அங்கே மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது. ஆள்வதில் ஏற்கெனவே அரசர்களுக்குள்ளாக அதிகாரப்பிரச்சனை. இதில் சமயமும் விலக்கல்ல என்ற தவறான முன் உதாரணத்திற்கு, இவர்கள் அனைவருமே எடுத்துக்காட்டுகள். ஆள்வதும், அதிகாரமும் மக்களை நல்வழிப்படுத்தவே. அதனை இயேசு செய்துகொண்டிருக்கிறார். மக்கள் நலனில் அவர்கள் அக்கறை கொண்டிருந்தால், நிச்சயம் இயேசுவை ஒரு விரோதியாகப் பார்த்திருகக மாட்டார்கள். மாறாக, அவர்கள் இயேசுவை தங்களுக்கு உதவி செய்யக்கூடியவராகப் பார்த்திருப்பார்கள். அதிகாரம் தான் அவர்களை கடவுளையே எதிர்ப்பவர்களாக மாற்றியிருந்தது.
இன்றைக்கு நாம் வாழக்கூடிய உலகத்திலும் அதிகாரப்போட்டிக்காக எத்தனை இழப்புக்களை இந்த சமுதாயம் சந்தித்துக் கொண்டிருக்கிறது. இதனால், எத்தனை உயிர்ச்சேதம், பொட்சேதம். ஆனாலும், அதிகாரப்போதைக்காக இன்றைக்கு எத்தனையோ பேர் சண்டையிட்டு, மக்கள் நலனில் அக்கறை கொள்ளாமல் இருக்கிறார்கள். நாமும் அந்த கூட்டத்தோடு சேராது, கிறிஸ்துவின் பணியாளர்களாய் இருப்பதில் நிறைவுகொள்வோம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்