அடைக்கலமும்,ஆற்றலும் ஆண்டவர் நமக்கு தருவார்

நம்முடைய துன்ப வேளைகளில் நமக்கு உற்ற துணையாக இருந்து அடைக்கலமும்,ஆற்றலையும்,தந்து நம்மை பாதுகாத்து நம் தேவைகள் யாவையும் சந்திக்கும் கடவுள் நம்மோடு இருப்பதால் நாம் மனம் கலங்க தேவையேயில்லை.

இந்த நிலவுலகம் நிலை குலைந்தாலும்,மலைகள் ஆழ்கடலில் அதிர்ந்து நடுங்கினாலும், கடலின் அலைகள் கொந்தளித்துப் பொங்கினாலும், அவை பெருக்கெடுத்து வருவதால் குன்றுகள் அதிர்ந்து நடுங்கினாலும் நாம் அச்சம் கொள்ள தேவையில்லை.

ஏனெனில், கடவுள் நமக்கு அரணும்,கோட்டையும்,நமது நம்பிக்கையாயும் இருக்கிறார். அவரின் செயலை காணுங்கள்,அவர் இந்த உலகில் ஆற்றியுள்ள திகைப்பூட்டும் நிகழ்ச்சிகளைப் பாருங்கள். ஆகையால் உங்கள் கவலைகளை மறந்து துயரங்களை தூக்கி எறிந்து, அவரே கடவுள் என்று உணர்ந்து ஆண்டவரின் மாட்சிமையை போற்றுங்கள்.

ஒரு குழந்தை தனது தாயிடம் கேட்பதை அந்த தாய் மறுப்பதே இல்லை. அதைப்போல் தாயைவிட மேலான அன்பு காண்பிக்கும் நமது ஆண்டவர் நாம் கேட்பதை மறுப்பதே இல்லை. விண்ணப்பத்தை
கேட்பவர் உங்களோடு இருக்கிறார், உங்கள் கண்ணீரை காண்கிறார். உங்களை ஆற்றி, தேற்றி, மகிழச்செய்கிறார். அவரே அனைத்துலகின் வேந்தர்: அவருக்கே நாம் அருட்பா தொடுத்து புகழ் பாடுவோம்.

நமது இருதயமும் ஏதொன் தோட்டம் போல் ஒரு அழகான பூந்தோட்டம். தோட்டத்தில் எப்படி விதவிதமான பூக்கள் பூத்து குலுங்குகிறதோ அதுபோல் நம்முடைய இருதயத்திலும் நல்ல, நல்ல எண்ணங்களையும், சிந்தனைகளையும், பூத்து குலுங்கும்படி செய்வோமானால் நம்முடைய வாழ்க்கையில் நடக்கும் எல்லா காரியங்களும் மணம் வீச ஆரம்பிக்கும். தோட்டத்தில் சில வேண்டாத புல், பூண்டு முளைப்பதை நாம் எப்படி களை எடுத்து அப்புறப்படுத்துகிறமோ, அதுபோல்
நம் இருதயத்தில் தோன்றும் வேண்டாத தீய எண்ணங்களையும்,  சிந்தனைகளையும், அப்புறப்படுத்தினால் உண்மையிலேயே நமது இருதயம் ஏதொன் தோட்டம் போல் ஆகும்.ஏதொன் தோட்டத்தில் எப்படி ஆண்டவர் உலாவி வந்தாரோ! அதுபோல் நம்முடைய இருதயத்திலும் வந்து தங்கி உலாவி வருவார். அப்பொழுது நம் வாழ்க்கை செழிக்கும்,என்பதில் ஐயமுண்டோ!!

ஏனெனில், இதயமே அனைத்திலும் வஞ்சகம் மிக்கது:அதனை நலமாக்க முடியாது. அதனை யார்தான் புரிந்து கொள்வர்?ஆண்டவராகிய நானே இதயச் சிந்தனைகளை ஆய்பவர்: உள்ளுணர்வுகளைச் சோதித்து அறிபவர்.ஒவ்வொருவரின் வழிகளுக்கும் செயல்களின் விளைவுக்கும் ஏற்றவாறு நடத்துபவர் என்று எரேமியா 17 : 9,10 ,ஆகிய வசனங்களில் வாசிக்கிறோம்.

ஆகையால் நாம் மனிதரில் நம்பிக்கை வைக்காமல் நமக்கு அடைக்கலமும்,ஆற்றலும் தருகிற ஆண்டவர்மேலே வைத்து நமது ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்வோம்.

ஜெபம்

விண்ணையும், மண்ணையும் படைத்த இறைவா! உம்மை போற்றுகிறோம். வஞ்ச மிக்க எங்கள் இதயத்தை அப்புறப்படுத்தி உமக்கேற்ற இதயத்தை தந்தருளும். நீரே எங்கள் அடைக்கலமும், அரணும், கோட்டையும் ஆன ஆண்டவர்.யாரிடம் செல்வோம் இறைவா! நீரே நிலைவாழ்வு அளிக்கும் எங்கள் ஆண்டவர். உம்மிடமே தஞ்சம் அடைகிறோம். எங்களை ஏற்றுக்கொண்டு நித்தமும் எங்களை வழி நடத்தி எல்லா பொல்லாப்புக்கும் விலக்கி பாதுக்காத்து நீர் விரும்பும் வாழ்க்கை வாழ எங்களுக்கு போதித்து காத்து கிருபையாயிரும். துதி,கனம்,மகிமை உமக்கே உண்டாகட்டும்.ஆமென்!அல்லேலூயா!!!

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.