”அஞ்சாதீர்கள்; சிட்டுக்குருவிகள் பலவற்றைவிட நீங்கள் மேலானவர்கள்” (லூக்கா 12:7)
விவிலியத்தில் பல இடங்களில் ”அஞ்சாதீர்கள்” என்னும் சொல் ஆளப்படுவதை நாம் காணலாம். இதோ ஒருசில எடுத்துக்காட்டுகள்: எசாயா 43:1-2; நீதிமொழிகள் 3:25-26; லூக்கா 1:30; மத்தேயு 10:29-30. மனிதரின் வாழ்க்கையில் அச்சம் ஏற்படுவதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். நமக்கு ஏதோ ஆபத்து நிகழப்போகிறதோ என்னும் எண்ணம் மேலோங்குகின்ற வேளையில் நாம் அச்சமடைகிறோம். நமக்கு ஏற்படுகின்ற பயம் பிற மனிதர் நமக்குத் தீங்கிழைக்கப் போகிறார்களோ என நாம் நினைப்பதால் ஏற்படலாம். அல்லது இயற்கை நிகழ்வுகள் நம் உள்ளத்தில் பயத்தை எழுப்பலாம். அன்றாட உணவும், வாழ்வதற்குத் தேவையான பொருளாதாரமும் நமக்கு இல்லையே என்னும் உணர்வினால் பயம் தோன்றலாம். நோய்நொடிகள் ஏற்படும்போதும், நம்மைச் சார்ந்திருப்போருக்குத் தீங்கு ஏற்பட்டுவிடுமோ என நாம் நினைப்பதாலும் அச்சம் தோன்றலாம். மனித வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் அச்சம் ஏற்படக் கூடும். ஆனால் விவிலியம் நமக்குத் தருகின்ற செய்தி, ”எதைக் கண்டும் நீங்கள் அஞ்சவேண்டாம்” என்பதே. நாம் உண்மையிலேயே அஞ்சவேண்டிய ஒருவர் உண்டு. அவர்தான் நம்மை அன்புசெய்கின்ற கடவுள்.
கடவுளுக்கு அஞ்சி நாம் நடக்கவேண்டும் என்றதும் கடவுள் நம்மைத் தண்டிக்கப்போகிறார் என்னும் எண்ணத்தால் நாம் பயந்து நடுங்க வேண்டும் என்று சிலர் தவறாகப் பொருள்புரிந்துகொள்வது உண்டு. கடவுள் நம்மைத் தண்டிக்கக் காத்திருக்கும் ”நீதிபதி” அல்ல; மாறாக, அவர் நம் அன்புத் தந்தை. எனவேதான், சிட்டுக் குருவிகளைக் காக்கின்ற கடவுள் நம்மைக் காக்காமல் கைவிடமாட்டார் என இயேசு அறிவுறுத்துகிறார். கடவுளின் பராமரிப்பும் காவலும் நமக்கு என்றுமே உண்டு என்னும் உணர்வு நம்மில் வளர்ந்து வேரூயஅp;ன்ற வேண்டும். அப்போது நமக்கு ஏற்படுகின்ற அல்லது ஏற்படக்கூடும் என நாம் நினைக்கின்ற தீமைகள் குறித்து நாம் அஞ்சமாட்டோம். ஏனென்றால் கடவுளை முழுமையாக நம்பி நாம் வாழ்ந்தால் நமக்குத் தீமைகள் ஏற்பட்டாலும் அவை நம்மைக் கடவுளின் அன்பிலிருந்து பிரித்துவிட முடியாது. அப்போது தீமையை எதிர்த்து நாம் போராடவும், நன்மை செய்வதன் வழியாகத் தீமையை வென்றிடவும் கடவுள் நமக்கு வல்லமை தருவார். எதைக் கண்டும் அஞ்சாத உள்ளம் நம்மில் உருவானால் நாமும் பிறருக்குத் துணிவூட்டுகின்ற மனிதராக மாறுவோம். சாதாரண சிட்டுக்குருவியைப் பாதுகாக்கின்ற கடவுளின் பார்வையில் மண்வாழ் மனிதார் மாபெரும் மாண்புமிக்கவர் என்னும் உண்மையை நம் வாழ்வின் வழியாகப் பறைசாற்றுவோம்.
மன்றாட்டு
இறைவா, எங்கள் உள்ளத்திலிருந்து அச்ச உணர்வை அகற்றி உம்மையே நாங்கள் பற்றுக்கோடாகக் கொள்ள அருள்தாரும்.
~அருட்திரு பவுல் லியோன் வறுவேல்