தமிழக ஆயர்களின் அறிக்கை : இறை இரக்க யூபிலி ஆண்டு

AP3211685_Articoloஇரக்கத்திற்கான இறை அழைத்தல்:

இறை இயேசுவில் அன்புள்ள ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் மற்றும் இறை மக்கள் அனைவருக்கும் ஆசீரும் வாழ்த்துக்களும்!

இறை இரக்கத்தின் யூபிலி

திருத்தந்தை பிரான்சிஸ் இறை இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டை அறிவித்திருக்கிறார். நம் விண்ணகத் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பது போல இரக்கமுள்ளவர்களாய் இருக்க (லூக் 6:36) அழைப்பு பெற்றுள்ள நாம், அதைச் சிறப்பாக உணர்ந்து வாழ்ந்து காட்டும் நோக்குடன், 2015 ஏப்ரல் மாதம் 11-ஆம் தேதியன்று ‘இரக்கத்தின் முகம்’ என்னும் தலைப்பில் அவர் வெளியிட்ட ஆவணத்தின் மூலம் இப்புனித ஆண்டை பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டார்.

இரண்டாம் வத்திக்கான் சங்க நிறைவின் 50-ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் 2015 டிசம்பர் 8-ஆம் தேதியன்று புனித பேதுரு பேராலயத்தில் திருவாயிலைத் திறந்து, திருத்தந்தை துவங்கி வைக்கவிருக்கும் இந்த யூபிலி ஆண்டு, 2016 நவம்பர் 20-ஆம் தேதியன்று கிறிஸ்து அரசர் பெருவிழா அன்று நிறைவு பெறும். இந்த யூபிலி ஆண்டின் முக்கியத்துவத்தைக் குறித்துத் திருத்தந்தை கூறுகையில், ‘சிறப்பு வாய்ந்த வரலாற்று மாற்றங்கள் நிகழும் இக்காலக் கட்டத்தில், இறைவனின் உடனிருப்பையும் நெருக்கத்தையும் உலகிற்கு வெளிப்படுத்தும் அடையாளங்களைத் திருச்சபை வழங்க கடமைப்பட்டிருக்கிறது. இறைத் தந்தையின் இரக்கத்தின்  அடையாளமாகவும், கருவியாகவும் விளங்க,  உயிர்ப்பு விழாவன்று நம் ஆண்டவர் திருச்சபைக்கு அளித்த மறைப்பணியின் உண்மைப் பொருளை ஆய்ந்து அறியவும் இதுவே சரியான நேரம்’ என்றார்.

இரக்கம் இறைவனின் இயல்பு

விவிலியத்தில் இறைவன் இரக்கக் குணம் கொண்டவராக மட்டும் அல்லாமல், இரக்கமே உருவானவராகவும் சித்தரிக்கப்படுகிறார். விவிலியம், திருச்சபை மரபு, இறை மக்களின் ஒட்டு மொத்த நம்பிக்கை வாழ்க்கை ஆகிய அனைத்தும், இரக்கமே இறைவனின் தனிச் சிறந்த பண்பு என்பதற்கு ஆதாராமாய் விளங்குகின்றன என்கிறார் புனித இரண்டாம் ஜான்பால். கட்புலனாகாத கடவுளின் சாயலைக் கட்புலனாக்கும் இயேசுவில் (கொலோ 1:15) நாம் கடவுளைக்; கண்டுணர்ந்து அவரில், இரக்கத்தின் முழுமையை (எபே. 2:4-7) இலவசக் கொடையாக சுவைத்திருக்கிறோம். நாம் பாவிகளாக இருந்தபோதும் கிறிஸ்து நமக்காகத் தியாகப் பலியானார் என்பதில் கடவுளின் அன்பின் தன்மையை நாம் புரிந்து கொண்டோம்(உரோ.5:8). இதனை அடிப்படையாகக் கொண்டே, திருத்தந்தை தமது ஆவணத்தில் இயேசுவை இறை இரக்கத்தின் அடையாளம் எனச் சித்தரிக்கிறார். இரக்கமே உருவான தந்தையின் உருவிலும் சாயலிலும் படைக்கப்பட்டு (தொநூ 1:27) இயேசுவின் சிலுவைப் பலியினால் புனித இனமாக மீட்கப்பட்ட நாம் (1பேது 2:9) தூய ஆவியாரால் இறைத் தந்தையின் இரக்கத்தைப் பிரதிபலிக்க கடமைப்பட்டிருக்கின்றோம். ‘செல், கடவுள் உனக்கு காட்டிய இரக்கத்தைக் குறித்து அவர்களுக்கு சொல்’ என்று கெரசேனர் பகுதியைச் சேர்ந்த பேய் பிடித்தவருக்கு இயேசு பிறப்பித்த அதே ஆணை இன்று நமக்கும் அளிக்கப்படுகிறது. (மாற் 5:19)

இரக்கத்திற்கான அவசர அழைப்பு

இரக்கத்தின் கருவியாய்த் திகழ்வதில்தான்; திருச்சபையின் வாழ்வுஇ பொருள் பெறுகிறது. எனவே திருச்சபையின் அனைத்து மேய்ப்புப் பணிகளும் நம்பிக்கையாளர்களுக்கு இறைவனின் நீடிய இரக்கத்தை வெளிப்படுத்த வேண்டும். திருச்சபையின் போதனையிலும் சாட்சியத்திலும் இரக்கத்திற்குத் தட்டுப்பாடு இருத்தலாகாது.

நமது திருமுழுக்கின் விளைவாக இறை இரக்கத்தின் சாட்சிகளாய்த் திகழ நாம் அழைப்பட்டிருக்கிறோம். இந்த இறையழைத்தல் சரியான முறையில் வாழ்வாக்கப்படும்போது நாம் கிறிஸ்துவின் உடலாக மாறுகிறோம், உலகை இரக்கத்துடன் நோக்க இறைவனின் விழிகளாக, நன்மை செய்ய விரையும் அவரின் கால்களாக, உலகிற்கு ஆசீர் வழங்க அவரின் திருக்கைகளாக நாம் மாறும்பொழுது புனித அவிலா தெரசம்மாள் கண்ட கனவு நனவாகும்.

எல்லைகளைத் தாண்டும் இரக்கம்

கடவுளின் இரக்கம் எல்லைகளைத் தாண்டி அனைவரையும் அரவணைக்கும் இயல்பு கொண்டது. அவரது இரக்கம் அவரது படைப்பு அனைத்தின்மீதும் உள்ளது (திபா 145:9). இறைமகன் இயேசு, மக்களைப் பிரித்து வைத்திருந்த மதில்களைத் தகர்த்தெறிந்தார். தனிமைச் சிறைகளிலிருந்தும் பிரிவினைகளை உண்டாக்கும் ஆதிக்கச் சக்திகளிலிருந்தும் நம்மை விடுவித்தார். இனம், நாடு, பண்பாடு, ஏற்றத்தாழ்வு, பாலினப் பாகுபாடு முதலியவற்றை களைந்தார். ஒருவர் மற்றவரிடமிருந்து நம்மைப் பிரித்து வைக்கும்; சக்திகளையும், பிறரது துயரத்தைக் கண்டும் இளகாத மனநிலையையும், இறைவனின் இரக்கம் குணமாக்குகின்றது. திருத்தந்தை கூறுவது போல, திருச்சபையை மக்களின் வாழ்க்கைச் சூழலிருந்து அன்னியப்படுத்தி, அதை கோட்டையாக்கி விட்டோம். அதன் மதில்களை இப்போது தகர்த்தெறிந்து நற்செய்தியைப் புதிய விதத்தில் அறிவிக்க இந்த யூபிலி ஆண்டில் முற்படுவோம்.

இரக்கமே மறைப்பணி

மனித அவலங்களைக் கண்டும் மனம் இளகாது நம் உள்ளங்கள் இன்று இருகிப்போய்விட்ட நிலை வேதனை அளிக்கிறது. வீதியோரம் கவனிப்பாரற்றுக் கிடக்கும் மனிதரை எவ்விதச் சலனமும் இன்றிக் கடந்து போகிறோம். போதைக்கு வாழ்வை இழந்து நிற்கும் இளையோர், கணவரால் அடி உதைக்கு உள்ளாகும் மனைவிகள், நியாயமான ஊதியம் மறுக்கப்படும் தொழிலாளர்கள், கடனுக்கு நிலத்தை இழந்து தவிக்கும் விவசாயிகள், வருவாய் போதாமல் தத்தளிக்கும் நடுத்தரக் குடும்பத்தினர், சொந்த இடங்களிலிருந்து புலம் பெயர்ந்து அகதிகளாய் நிற்கும் பழங்குடியினர், அநியாயமாய் உயர்ந்து நிற்கும்; மருத்துவச் செலவுகள் எனப் பல நிலைகளில் நம் சகோதர சகோதரிகள் நம் கண் முன்பே துன்புறும்போதும்  நாம் அதைக் குறித்துக் கவலைப்படுவதில்லை. ஊழல், ஏழ்மை, வன்முறை, வேலையில்லாமை எனச் சமூக அநீதிகள் நாள்தோறும் நம் கிராமங்களிலும், தொகுதிகளிலும், குடும்பங்களிலும், அன்பியங்களிலும் அரங்கேறும் போதும்இ  இயற்கைச் சீரழிவு மனிதரால் ஏற்படுகின்ற போதும் நமது உள்ளம் உருகுவதில்லை. இரக்கத்திற்கான இறை அழைப்பு இத்தகைய இருகிய உள்ளங்களை ஊடுருவுகிறது. நம்மால் தடுக்கப்படக் கூடிய, தடுக்கப்பட வேண்டிய தீமைகளை எதிர்க்காதபோது கிறிஸ்தவக் கடமையில் நாம் தவறுவதால் பாவம் செய்கிறோம் என நாம் உணர வேண்டும். இறை இரக்கம் நம்மை ஒழுங்குப்படுத்தி மன்னிப்பு, கனிவு, சகிப்புத்தன்மை ஆகிய பண்புகளை கொண்ட புதிய கண்ணோட்டத்துடன் நம் சமூகச் சூழ்நிலைகளை அணுக வழிவகுக்கிறது.

இரக்கத்தின் தரம்

இரக்கத்திற்கான அழைப்பு நம்மிடமிருந்து வெறும் பரிதாபத்தை அன்று, மாறாக மனித அவலங்களை எதிர்கொண்டு வெற்றி பெற நமது முழுமையான ஈடுபாட்டை எதிர்பார்க்கிறது. துன்பப்படும் ஒருவரின் நிலை கண்டு நம்மில் எழும் அனுதாபம், அவரது உணர்வையே நமதாக மாற்ற வேண்டும். இதையே ‘இன்றைய உலகில் திருச்சபை’ எனும் இரண்டாம் வத்திக்கான் சங்க ஏடு  பின்வருமாறு கூறுகிறது: ‘மகிழ்வும், எதிர்நோக்கும், ஏக்கமும், கவலையும், இன்றைய மனிதரின் வாழ்வில் குறிப்பாக ஏழைகள் மற்றும் துன்புறுவோர் அனைவரின் வாழ்வில் உள்ளன. இம்மனிதரின் மகிழ்வும், எதிர்நோக்கும், ஏக்கமும், கவலையும் கிறிஸ்தவர்களுக்கு முற்றிலும் உரியனவே, கிறிஸ்துவைப் பின்பற்றும் இவர்களின் இதயத்தில் உண்மையான மனிதக் கூறுகள் யாவும் எதிரொலிக்கத்தான் செய்கின்றன… எனவேதான், கிறிஸ்தவச் சமூகம், மனித குலத்தோடும் மனிதகுல வரலாற்றோடும் உண்மையிலே தான் நெருங்கி இணைக்கப் பெற்றுள்ளது என்பதை உணர்கின்றது’ (இ.உ.தி.1).

இரக்கம் நம் இல்லங்களில் தொடங்க வேண்டும்

நம் குடும்பங்கள் இரக்கத்தின் உண்மை இயல்பைக் கற்றுக்கொடுக்கும் பல்கலைக்கழகங்களாக மாற வேண்டும். நம் அன்பியங்கள், பக்த சபைகள், பணிக்குழுக்கள், துறவறச் சபைகள் ஆகியவற்றின் வாழ்வும், பணியும் முதல் கிறிஸ்தவக் குழுமத்தின் முன்மாதிரிகையைப் பின்பற்ற வேண்டும். அவர்கள் ‘அனைவரும் ஒரே உள்ளமும் ஒரே உயிருமாய் இருந்தனர். அவர்களுள் எவரும் தமது உடமைகளைத் தம்முடையதாகக் கருதவில்லை, எல்லாம் அவர்களுக்கு பொதுவாய் இருந்தது’ (திப 4:32, காண்: திப 2:42-47) இரக்கத்திற்கான நமது அழைப்பு இத்தகைய இலக்கை நோக்கி நம்மை வழிநடத்த வேண்டும். இறைத் தந்தையின் இரக்க முகத்தைத் தங்கள் அருளடையாளப் பணியில் நமக்குக் குறித்து காட்டும் குருக்கள், இதில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

இரக்கம் ஒரு இணைந்த முயற்சி

இரக்கத்திற்கான அழைத்தல் மற்றத் திருச்சபைகள், மதங்கள், அரசு மற்றும் அரசுசாரா நிறுவனங்கள் ஆகியவற்றிலுள்ள நல்லெண்ணம் படைத்தவர்களோடு ஒன்றிணைந்து செயலாற்ற நம்மைத் தூண்டுகிறது. நன்மை செய்யும் மனப்பாங்கு, நம்மைச் சமயங்கள், கோட்பாடுகள் கடந்து ஒருங்கிணைக்கிறது என்பது திருத்தந்தையின் தளராத நம்பிக்கை. பிற சமயங்களோடு அன்புறவும் தோழமையும் கொண்டு கிறிஸ்தவ நம்பிக்கைக்கும் வாழ்விற்கும் சாட்சியம் பகரும்போது, அவர்களிடம் காணப்படும் ஆன்மீகம் மற்றும் மதிப்பீடுகளைக் கண்டுணரவும், பாதுகாக்கவும் நம்மால் இயலும் என தாய் திருச்சபை நமக்குக் கற்பிக்கிறது.

மரியாவின் வழியில் இரக்கம்

அனைவரின் மனங்கவர்ந்த ‘கிருபை தயாபத்து மாதாவே’ செபத்தில், மரியா எவ்வாறு இரக்கத்தின் அன்னையாக இருக்கிறார் என்பதை உணர்கிறோம். பிறர் நலனில் அக்கறை கொண்ட அன்னையின் கண்கள் இரசம் தீர்ந்துபோனதை உணர்ந்தவுடன், அவரது இரக்கம் அக்குடும்பத்தை அவமானத்திலிருந்து காப்பாற்ற வழி தேடியது. அவரது பரிந்துரையினால் இயேசுவின் முதல் புதுமை நிகழ்ந்தேறியது. அவரது இரக்கம் சிலுவைக்கு அடியில் தம் மகனின் சடலம் சுமக்கும் தியாகத்தை தாண்டியும் தொடர்கிறது. இரக்கத்தின் முன்மாதிரி நம் அன்னை மரியா.

சில பரிந்துரைகள்

திருத்தந்தையின் ஆவணமானது இந்த யூபிலி ஆண்டினை பொருள்ள வகையில் கொண்டாட அர்த்தமுள்ள சில பரிந்துரைகளை முன் வைக்கிறது:

1.            ஓப்புரவு அருளடையாளம்: இந்த அருளடையாளத்தில்தான் இணையில்லா இறை இரக்கத்தை நாம் ஆழமான விதத்தில் அனுபவிக்கிறோம். இறைவனின் மன்னிப்பு நம்மைப் புது மனிதர்களாய் மாற்றுகிறது. எனவே ஒப்புரவு அருளடையாளத்தை வழங்கும் அருள்பணியாளர்களை இறை இரக்கத்தின் உண்மையான அடையாளங்களாய் விளங்கத் திருத்தந்தை அழைக்கிறார்.

2.            இரக்கத்தின் மறைப்பணியாளர்கள்: திருச்சபையினுடைய தாய்மைப் பண்பின் பிரதிபலிப்பாக இப்புனித ஆண்டில், திருத்தந்தை தாம் மட்டுமே மன்னிக்கக்கூடிய பாவங்களையும் மன்னிக்கும் அதிகாரத்துடன் இரக்கத்தின் மறைப்பணியாளர்களை அனுப்ப திட்டமிட்டிருக்கிறார்.

3.            இரக்கத்தின் வாயில்: வழக்கமாக உரோமை நகரின் நான்கு பேராலயங்களின் திருக்கதவுகளும் யூபிலி ஆண்டுகளில் திருப்பயணிகள் நுழைந்து யூபிலியின் நிறை பேறுபலனை பெற திறக்கப்படும். யூபிலி வரலாற்றில் முதல் முறையாக இந்த ஆண்டு மறைமாவட்ட பேராலயங்கள் மற்றும் திருத்தலங்களிலும் திருவாயில்கள் திறக்கப்படும்.

4.            திருப்பயணங்கள்: நமது மனமாற்றத்தின் உந்துசக்தியாகத் திருப்பயணங்கள் உதவ வேண்டும் என திருத்தந்தை விரும்புகிறார். எனவே உரோமை நகரின் திருக்கதவையோ அல்லது உலகின் வேறு பகுதிகளில் உள்ள திருக்கதவையோ அடையும் அடையாளமாக ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற விதத்தில் திருப்பயணம் மேற்கொள்ளலாம்.

5.            இரக்கத்தின் ஆன்மீக, சமூகக் கடமைகள்: இறை இரக்கத்தைப் பகிர்ந்துக்கொள்ளச்  சிறந்த வழி இரக்கத்தின் கடமைகளுக்கான நமது பிரமாணிக்கத்தைப் புதுப்பித்துக் கொள்வதாகும்.

5. அ. இரக்கத்தின் ஆன்மீகக் கடமைகள் பின்வருமாறு:

1.            அவநம்பிக்கையில் இருப்போருக்கு ஆலோசனை வழங்குதல்

2.            அறியாமையில் இருப்போருக்கு அறிவொளியூட்டுதல்

3.            பாவிகள் மனம்மாற அறிவுறுத்தல்

4.            துன்புறுவோரைத் தேற்றுதல் – வருந்துவோருக்கு ஆறுதல் அளித்தல்

5.            பிறர் இழைத்த தவறுகளை மன்னித்தல் – தீமைகளை மன்னித்தல்

6.            தீமை செய்வோரைப் பொறுமையோடு ஏற்றுக்கொள்ளுதல்

7.            இறந்தோருக்காகவும் வாழ்வோருக்காகவும் செபித்தல்

5. ஆ. இரக்கத்தின் சமூகக் கடமைகள் பின்வருமாறு:

1.            பசியாய் இருப்பவர்களுக்கு உணவு கொடுத்தல்

2.            தாகமாயிருப்போரின் தாகம் தணித்தல்

3.            ஆடையின்றி இருப்பவர்களுக்கு ஆடை அணிவித்தல்

4.            அன்னியரை ஏற்றுக் கொள்ளுதல்

5.            நோயாளர்களைக் குணப்படுத்துதல்

6.            சிறையிலிருப்போரைச் சந்தித்தல்

7.            இறந்தோரை நல்லடக்கம் செய்தல்

இரக்கத்திற்கான அழைப்பு நம்மை மகிழ்ச்சியால் நிரப்ப வல்லது. புனித பவுல் கூறுவது போல, இரக்கச் செயல்களை மனவருத்தத்தோடோ கட்டாயத்தினாலோ செய்யாமல் முகமலர்ச்சியோடு செய்வோம் (காண்: 2 கொரி 9:7).

இறை இரக்கத்தின் யூபிலி ஆண்டுக் கொண்டாட்டம் இறைத் தந்தையின் இரக்கத்தைப் பிரதிபலிக்க நாம் பெற்றுள்ள அழைத்தலைச் சிறப்புடன் வாழ உதவுவதாக! ‘உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பது போல நீங்களும் இரக்கம் உள்ளவர்களாய் இருங்கள்’ (லூக் 6:36) என்று இயேசு விடுத்த அழைப்பிற்கு நாம் தலைவணங்கி இறை இரக்க யூபிலி ஆண்டை கொண்டாடுவோம்.

இவண்,

மேதகு ஆயர் பீட்டர் ரெமிஜியஸ்

தலைவர் – தமிழக ஆயர் பேரவை