சங்கீதம்
Chapter 1
1. துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும், 2. கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். 3. அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும். 4. துன்மார்க்கரோ அப்படியிராமல், காற்றுப் பறக்கடிக்கும் பதரைப்போல் இருக்கிறார்கள். 5. ஆகையால் துன்மார்க்கர் நியாயத்தீர்ப்பிலும், பாவிகள் நீதிமான்களின் சபையிலும் நிலைநிற்பதில்லை. 6. கர்த்தர் நீதிமான்களின் வழியை அறிந்திருக்கிறார்; துன்மார்க்கரின் வழியோ அழியும்.
Chapter 2
1. ஜாதிகள் கொந்தளித்து, ஜனங்கள் விருதாக்காரியத்தைச் சிந்திப்பானேன்? 2. கர்த்தருக்கு விரோதமாகவும், அவர் அபிஷேகம்பண்ணினவருக்கு விரோதமாகவும், பூமியின் ராஜாக்கள் எழும்பிநின்று, அதிகாரிகள் ஏகமாய் ஆலோசனைபண்ணி: 3. அவர்கள் கட்டுகளை அறுத்து, அவர்கள் கயிறுகளை நம்மைவிட்டு எறிந்துபோடுவோம் என்கிறார்கள். 4. பரலோகத்தில் வீற்றிருக்கிறவர் நகைப்பார்; ஆண்டவர் அவர்களை இகழுவார். 5. அப்பொழுது அவர் தமது கோபத்திலே அவர்களோடே பேசி, தமது உக்கிரத்திலே அவர்களைக் கலங்கப்பண்ணுவார். 6. நான் என்னுடைய பரிசுத்த பர்வதமாகிய சீயோன்மீதில் என்னுடைய ராஜாவை அபிஷேகம்பண்ணி வைத்தேன் என்றார். 7. தீர்மானத்தின் விவரம் சொல்லுவேன்; கர்த்தர் என்னை நோக்கி: நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜெநிப்பித்தேன்; 8. என்னைக் கேளும், அப்பொழுது ஜாதிகளை உமக்குச் சுதந்தரமாகவும், பூமியின் எல்லைகளை உமக்குச் சொந்தமாகவும் கொடுப்பேன்; 9. இருப்புக்கோலால் அவர்களை நொறுக்கி, குயக்கலத்தைப்போல் அவர்களை உடைத்துப்போடுவீர் என்று சொன்னார். 10. இப்போதும் ராஜாக்களே, உணர்வடையுங்கள், பூமியின் நியாயாதிபதிகளே, எச்சரிக்கையாயிருங்கள். 11. பயத்துடனே கர்த்தரைச் சேவியுங்கள், நடுக்கத்துடனே களிகூருங்கள். 12. குமாரன் கோபங்கொள்ளாமலும், நீங்கள் வழியிலே அழியாமலும் இருக்கும்படிக்கு, அவரை முத்தஞ் செய்யுங்கள்; கொஞ்சக்காலத்திலே அவருடைய கோபம் பற்றியெரியும்; அவரை அண்டிக்கொள்ளுகிற யாவரும் பாக்கியவான்கள்.
Chapter 3
1. கர்த்தாவே, என் சத்துருக்கள் எவ்வளவாய்ப் பெருகியிருக்கிறார்கள்! எனக்கு விரோதமாய் எழும்புகிறவர்கள் அநேகர். 2. தேவனிடத்தில் அவனுக்கு இரட்சிப்பு இல்லையென்று, என் ஆத்துமாவைக் குறித்துச் சொல்லுகிறவர்கள் அநேகராயிருக்கிறார்கள். (சேலா.) 3. ஆனாலும் கர்த்தாவே, நீர் என் கேடகமும், என் மகிமையும், என் தலையை உயர்த்துகிறவருமாயிருக்கிறீர். 4. நான் கர்த்தரை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிட்டேன்; அவர் தமது பரிசுத்த பர்வதத்திலிருந்து எனக்குச் செவிகொடுத்தார். (சேலா.) 5. நான் படுத்து நித்திரை செய்தேன்; விழித்துக்கொண்டேன்; கர்த்தர் என்னைத் தாங்குகிறார். 6. எனக்கு விரோதமாகச் சுற்றிலும் படையெடுத்து வருகிற பதினாயிரம்பேருக்கும் நான் பயப்படேன். 7. கர்த்தாவே, எழுந்தருளும்; என் தேவனே, என்னை இரட்சியும். நீர் என் பகைஞர் எல்லாரையும் தாடையிலே அடித்து, துன்மார்க்கருடைய பற்களைத் தகர்த்துப்போட்டீர். 8. இரட்சிப்பு கர்த்தருடையது; தேவரீருடைய ஆசீர்வாதம் உம்முடைய ஜனத்தின்மேல் இருப்பதாக. (சேலா.)
Chapter 4
1. என் நீதியின் தேவனே, நான் கூப்பிடுகையில் எனக்குச் செவிகொடும்; நெருக்கத்தில் இருந்த எனக்கு விசாலமுண்டாக்கினீர்; எனக்கு இரங்கி, என் விண்ணப்பத்தைக் கேட்டருளும். 2. மனுபுத்திரரே, எதுவரைக்கும் என் மகிமையை அவமானப்படுத்தி, வீணானதை விரும்பி, பொய்யை நாடுவீர்கள். (சேலா.) 3. பக்தியுள்ளவனைக் கர்த்தர் தமக்காகத் தெரிந்துகொண்டாரென்று அறியுங்கள்; நான் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகையில் அவர் கேட்பார். 4. நீங்கள் கோபங்கொண்டாலும், பாவஞ்செய்யாதிருங்கள்; உங்கள் படுக்கையிலே உங்கள் இருதயத்தில் பேசிக்கொண்டு அமர்ந்திருங்கள். (சேலா.) 5. நீதியின் பலிகளைச் செலுத்தி, கர்த்தர்மேல் நம்பிக்கையாயிருங்கள். 6. எங்களுக்கு நன்மை காண்பிப்பவன் யார் என்று சொல்லுகிறவர்கள் அநேகர்; கர்த்தாவே, உம்முடைய முகத்தின் ஒளியை எங்கள்மேல் பிரகாசிக்கப்பண்ணும். 7. அவர்களுக்குத் தானியமும் திராட்சரசமும் பெருகியிருக்கிறகாலத்தின் சந்தோஷத்தைப்பார்க்கிலும், அதிக சந்தோஷத்தை என் இருதயத்தில் தந்தீர். 8. சமாதானத்தோடே படுத்துக்கொண்டு நித்திரைசெய்வேன்; கர்த்தாவே, நீர் ஒருவரே என்னைச் சுகமாய்த் தங்கப்பண்ணுகிறீர்.
Chapter 5
1. கர்த்தாவே, என் வார்த்தைகளுக்குச் செவிகொடும், என் தியானத்தைக் கவனியும். 2. நான் உம்மிடத்தில் விண்ணப்பம்பண்ணுவேன்; என் ராஜாவே, என் தேவனே, என் வேண்டுதலின் சத்தத்தைக் கேட்டருளும். 3. கர்த்தாவே, காலையிலே என் சத்தத்தைக் கேட்டருளுவீர்; காலையிலே உமக்கு நேரே வந்து ஆயத்தமாகி, காத்திருப்பேன். 4. நீர் துன்மார்க்கத்தில் பிரியப்படுகிற தேவன் அல்ல; தீமை உம்மிடத்தில் சேர்வதில்லை. 5. வீம்புக்காரர் உம்முடைய கண்களுக்கு முன்பாக நிலைநிற்கமாட்டார்கள்; அக்கிரமக்காரர் யாவரையும் வெறுக்கிறீர். 6. பொய் பேசுகிறவர்களை அழிப்பீர்; இரத்தப்பிரியனையும் சூதுள்ள மனுஷனையும் கர்த்தர் அருவருக்கிறார். 7. நானோ உமது மிகுந்த கிருபையினாலே உமது ஆலயத்துக்குள் பிரவேசித்து, உமது பரிசுத்த சந்நிதிக்கு நேரே பயபக்தியுடன் பணிந்துகொள்ளுவேன். 8. கர்த்தாவே, என் சத்துருக்களினிமித்தம் என்னை உம்முடைய நீதியிலே நடத்தி, எனக்குமுன்பாக உம்முடைய வழியைச் செவ்வைப்படுத்தும். 9. அவர்கள் வாயில் உண்மை இல்லை, அவர்கள் உள்ளம் கேடுபாடுள்ளது; அவர்கள் தொண்டை திறக்கப்பட்ட பிரேதக்குழி; தங்கள் நாவினால் இச்சகம் பேசுகிறார்கள். 10. தேவனே, அவர்களைக் குற்றவாளிகளாகத் தீரும்; அவர்கள் தங்கள் ஆலோசனைகளாலேயே விழும்படி செய்யும்; அவர்கள் துரோகங்களினுடைய திரட்சியினிமித்தம் அவர்களைத் தள்ளிவிடும்; உமக்கு விரோதமாய்க் கலகம்பண்ணினார்களே. 11. உம்மை நம்புகிறவர்கள் யாவரும் சந்தோஷித்து, எந்நாளும் கெம்பீரிப்பார்களாக; நீர் அவர்களைக் காப்பாற்றுவீர்; உம்முடைய நாமத்தை நேசிக்கிறவர்கள் உம்மில் களிகூருவார்களாக. 12. கர்த்தாவே, நீர் நீதிமானை ஆசீர்வதித்து, காருணியம் என்னுங் கேடகத்தினால் அவனைச் சூழ்ந்துகொள்ளுவீர்.
Chapter 6
1. கர்த்தாவே, உம்முடைய கோபத்திலே என்னைக் கடிந்துகொள்ளாதேயும், உம்முடைய உக்கிரத்திலே என்னைத் தண்டியாதேயும். 2. என்மேல் இரக்கமாயிரும் கர்த்தாவே, நான் பெலனற்றுப்போனேன்; என்னைக் குணமாக்கும் கர்த்தாவே, என் எலும்புகள் நடுங்குகிறது. 3. என் ஆத்துமா மிகவும் வியாகுலப்படுகிறது; கர்த்தாவே, எதுவரைக்கும் இரங்காதிருப்பீர். 4. திரும்பும் கர்த்தாவே, என் ஆத்துமாவை விடுவியும்; உம்முடைய கிருபையினிமித்தம் என்னை இரட்சியும். 5. மரணத்தில் உம்மை நினைவுகூர்வதில்லை, பாதாளத்தில் உம்மைத் துதிப்பவன் யார்? 6. என் பெருமூச்சினால் இளைத்துப்போனேன்; இராமுழுவதும் என் கண்ணீரால் என் படுக்கையை மிகவும் ஈரமாக்கி, என் கட்டிலை நனைக்கிறேன். 7. துயரத்தினால் என் கண் குழி விழுந்துபோயிற்று, என் சத்துருக்கள் அனைவர் நிமித்தமும் மங்கிப்போயிற்று. 8. அக்கிரமக்காரரே, நீங்கள் எல்லாரும் என்னைவிட்டு அகன்றுபோங்கள்; கர்த்தர் என் அழுகையின் சத்தத்தைக் கேட்டார். 9. கர்த்தர் என் விண்ணப்பத்தைக் கேட்டார்; கர்த்தர் என் ஜெபத்தை ஏற்றுக்கொள்ளுவார். 10. என் பகைஞர் எல்லாரும் வெட்கி மிகவும் கலங்கிப்போவார்கள்; அவர்கள் பின்னாகத் திரும்பிச் சடிதியிலே வெட்கப்படுவார்கள்.
Chapter 7
1. என் தேவனாகிய கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிறேன்; என்னைத் துன்பப்படுத்துகிறவர்கள் எல்லாருக்கும் என்னை விலக்கி இரட்சியும். 2. சத்துரு சிங்கம்போல் என் ஆத்துமாவைப் பிடித்துக்கொண்டுபோய், விடுவிக்கிறவன் இல்லாமையால், அதைப்பீறாதபடிக்கு என்னைத் தப்புவியும். 3. என் தேவனாகிய கர்த்தாவே, நான் இதைச் செய்ததும், என் கைகளில் நியாயக்கேடிருக்கிறதும், 4. என்னோடே சமாதானமாயிருந்தவனுக்கு நான் தீமைசெய்ததும், காரணமில்லாமல் எனக்குச் சத்துருவானவனை நான் கொள்ளையிட்டதும் உண்டானால், 5. பகைஞன் என் ஆத்துமாவைத் தொடர்ந்துபிடித்து, என் பிராணனைத் தரையிலே தள்ளி மிதித்து, என் மகிமையைத் தூளிலே தாழ்த்தக்கடவன். (சேலா.) 6. கர்த்தாவே, நீர் உம்முடைய கோபத்தில் எழுந்திருந்து, என் சத்துருக்களுடைய மூர்க்கங்களினிமித்தம் உம்மை உயர்த்தி, எனக்காக விழித்துக்கொள்ளும்; நியாயத்தீர்ப்பை நியமித்திருக்கிறீரே. 7. ஜனக்கூட்டம் உம்மைச் சூழ்ந்துகொள்ளும்; அவர்களுக்காகத் திரும்பவும் உன்னதத்திற்கு எழுந்தருளும். 8. கர்த்தர் ஜனங்களுக்கு நியாயஞ் செய்வார்; கர்த்தாவே, என் நீதியின்படியும் என்னிலுள்ள உண்மையின்படியும் எனக்கு நியாயஞ்செய்யும். 9. துன்மார்க்கனுடைய பொல்லாங்கை ஒழியப்பண்ணும்; நீதிமானை ஸ்திரப்படுத்துவீராக; நீதியுள்ளவராயிருக்கிற தேவரீர் இருதயங்களையும் உள்ளிந்திரியங்களையும் சோதித்தறிகிறவர். 10. செம்மையான இருதயமுள்ளவர்களை இரட்சிக்கிற தேவனிடத்தில் என் கேடகம் இருக்கிறது. 11. தேவன் நீதியுள்ள நியாயாதிபதி; அவர் நாள்தோறும் பாவியின்மேல் சினங்கொள்ளுகிற தேவன். 12. அவன் மனந்திரும்பாவிட்டால் அவர் தம்முடைய பட்டயத்தைக் கருக்காக்குவார்; அவர் தம்முடைய வில்லை நாணேற்றி, அதை ஆயத்தப்படுத்தியிருக்கிறார். 13. அவனுக்கு மரணாயுதங்களை ஆயத்தம்பண்ணினார்; தம்முடைய அம்புகளை அக்கினி அம்புகளாக்கினார். 14. இதோ, அவன் அக்கிரமத்தைப் பெறக் கர்ப்பவேதனைப்படுகிறான்; தீவினையைக் கர்ப்பந்தரித்து, பொய்யைப் பெறுகிறான். 15. குழியை வெட்டி, அதை ஆழமாக்கினான்; தான் வெட்டின குழியில் தானே விழுந்தான். 16. அவன் தீவினை அவன் சிரசின்மேல் திரும்பும், அவன் கொடுமை அவன் உச்சந்தலையின்மேல் இறங்கும். 17. நான் கர்த்தரை அவருடைய நீதியின்படி துதித்து, உன்னதமான கர்த்தருடைய நாமத்தைக் கீர்த்தனம்பண்ணுவேன்.
Chapter 8
1. எங்கள் ஆண்டவராகிய கர்த்தாவே, உம்முடைய நாமம் பூமியெங்கும் எவ்வளவு மேன்மையுள்ளதாயிருக்கிறது! உம்முடைய மகத்துவத்தை வானங்களுக்கு மேலாக வைத்தீர். 2. பகைஞனையும் பழிகாரனையும் அடக்கிப்போட, தேவரீர் உம்முடைய சத்துருக்களினிமித்தம் குழந்தைகள் பாலகர் வாயினால் பெலன் உண்டுபண்ணினீர். 3. உமது விரல்களின் கிரியையாகிய உம்முடைய வானங்களையும், நீர் ஸ்தாபித்த சந்திரனையும் நட்சத்திரங்களையும் நான் பார்க்கும்போது, 4. மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், மனுஷகுமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம் என்கிறேன். 5. நீர் அவனைத் தேவதூதரிலும் சற்று சிறியவனாக்கினீர்; மகிமையினாலும் கனத்தினாலும் அவனை முடிசூட்டினீர். 6. உம்முடைய கரத்தின் கிரியைகளின்மேல் நீர் அவனுக்கு ஆளுகை தந்து, சகலத்தையும் அவனுடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினீர். 7. ஆடுமாடுகளெல்லாவற்றையும், காட்டுமிருகங்களையும், 8. ஆகாயத்துப் பறவைகளையும், சமுத்திரத்து மச்சங்களையும், கடல்களில் சஞ்சரிக்கிறவைகளையும் அவனுடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினீர். 9. எங்கள் ஆண்டவராகிய கர்த்தாவே, உம்முடைய நாமம் பூமியெங்கும் எவ்வளவு மேன்மையுள்ளதாயிருக்கிறது!
Chapter 9
1. கர்த்தாவே, என் முழு இருதயத்தோடும் உம்மைத் துதிப்பேன்; உம்முடைய அதிசயங்களையெல்லாம் விவரிப்பேன். 2. உம்மில் மகிழ்ந்து களிகூருவேன்; உன்னதமானவரே, உமது நாமத்தைக் கீர்த்தனம்பண்ணுவேன். 3. என் சத்துருக்கள் பின்னாகத் திரும்பும்போது, உமது சமுகத்தில் அவர்கள் இடறுண்டு அழிந்துபோவார்கள். 4. நீர் என் நியாயத்தையும் என் வழக்கையும் தீர்த்து, நீதியுள்ள நியாயாதிபதியாய் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறீர். 5. ஜாதிகளைக் கடிந்துகொண்டு, துன்மார்க்கரை அழித்து, அவர்கள் நாமத்தை என்றென்றைக்கும் இல்லாதபடி குலைத்துப்போட்டீர். 6. சத்துருக்கள் என்றென்றைக்கும் பாழாக்கப்பட்டார்கள்; அவர்கள் பட்டணங்களை நிர்மூலமாக்கினீர்; அவர்கள் பேரும் அவர்களோடேகூட ஒழிந்துபோயிற்று. 7. கர்த்தரோ என்றென்றைக்கும் இருப்பார்; தம்முடைய சிங்காசனத்தை நியாயத்தீர்ப்புக்கு ஆயத்தம்பண்ணினார். 8. அவர் பூச்சக்கரத்தை நீதியாய் நியாயந்தீர்த்து, சகல ஜனங்களுக்கும் செம்மையாய் நீதிசெய்வார். 9. சிறுமைப்பட்டவனுக்குக் கர்த்தர் அடைக்கலமானவர்; நெருக்கப்படுகிற காலங்களில் அவரே தஞ்சமானவர். 10. கர்த்தாவே, உம்மைத் தேடுகிறவர்களை நீர் கைவிடுகிறதில்லை; ஆதலால், உமது நாமத்தை அறிந்தவர்கள் உம்மை நம்பியிருப்பார்கள். 11. சீயோனில் வாசமாயிருக்கிற கர்த்தரைக் கீர்த்தனம்பண்ணி, அவர் செய்கைகளை ஜனங்களுக்குள்ளே அறிவியுங்கள். 12. இரத்தப்பழிகளைக்குறித்து அவர் விசாரணை செய்யும்போது, அவைகளை நினைக்கிறார்; சிறுமைப்பட்டவர்களுடைய கூப்பிடுதலை மறவார். 13. மரணவாசல்களிலிருந்து என்னைத் தூக்கிவிடுகிற கர்த்தாவே, நான் உம்முடைய துதிகளையெல்லாம் சீயோன் குமாரத்தியின் வாசல்களில் விவரித்து, உம்முடைய இரட்சிப்பினால் களிகூரும்படிக்கு, 14. தேவரீர் எனக்கு இரங்கி, என்னைப் பகைக்கிறவர்களால் எனக்கு வரும் துன்பத்தை நோக்கிப்பாரும். 15. ஜாதிகள் தாங்கள் வெட்டின குழியில் தாங்களே விழுந்தார்கள்; அவர்கள் மறைவாய் வைத்த வலையில் அவர்களுடைய காலே அகப்பட்டுக்கொண்டது. 16. கர்த்தர் தாம் செய்த நியாயத்தினால் அறியப்படுகிறார்; துன்மார்க்கன் தன் கைகளின் செய்கையிலே சிக்கிக்கொண்டான். (இகாயோன், சேலா.) 17. துன்மார்க்கரும், தேவனை மறக்கிற எல்லா ஜாதிகளும், நரகத்திலே தள்ளப்படுவார்கள். 18. எளியவன் என்றைக்கும் மறக்கப்படுவதில்லை; சிறுமைப்பட்டவர்களுடைய நம்பிக்கை ஒருபோதும் கெட்டுப்போவதில்லை. 19. எழுந்தருளும் கர்த்தாவே, மனுஷன் பெலன்கொள்ளாதபடி செய்யும்; ஜாதிகள் உம்முடைய சமுகத்தில் நியாயந்தீர்க்கப்படக்கடவர்கள். 20. ஜாதிகள் தங்களை மனுஷரென்று அறியும்படிக்கு, அவர்களுக்குப் பயமுண்டாக்கும், கர்த்தாவே. (சேலா.)
Chapter 10
1. கர்த்தாவே, ஏன் தூரத்தில் நிற்கிறீர்? ஆபத்து நேரிடுகிற சமயங்களில் நீர் ஏன் மறைந்திருக்கிறீர்? 2. துன்மார்க்கன் தன் பெருமையினால் சிறுமைப்பட்டவனைக் கடூரமாய்த் துன்பப்படுத்துகிறான்; அவர்கள் நினைத்த சதிமோசங்களில் அவர்களே அகப்படுவார்கள். 3. துன்மார்க்கன் தன் உள்ளம் இச்சித்ததைப் பெற்றதினால் பெருமைபாராட்டி, பொருளை அபகரித்துத் தன்னைத்தான் போற்றி, கர்த்தரை அசட்டைபண்ணுகிறான். 4. துன்மார்க்கன் தன் கர்வத்தினால் தேவனைத் தேடான்; அவன் நினைவுகளெல்லாம் தேவன் இல்லையென்பதே. 5. அவன் வழிகள் எப்போதும் கேடுள்ளவைகள்; உம்முடைய நியாயத்தீர்ப்புகள் அவன் பார்வைக்கு எட்டாமல் மிகவும் உயரமாயிருக்கிறது; தன் எதிராளிகளெல்லார்மேலும் சீறுகிறான். 6. நான் அசைக்கப்படுவதில்லை, தலைமுறை தலைமுறைதோறும் தீங்கு என்னை அணுகுவதில்லையென்று தன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான். 7. அவன் வாய் சபிப்பினாலும் கபடத்தினாலும் கொடுமையினாலும் நிறைந்திருக்கிறது; அவன் நாவின்கீழ் தீவினையும் அக்கிரமமும் உண்டு. 8. கிராமங்களின் ஒளிப்பிடங்களிலே பதிவிருந்து, மறைவிடங்களிலே குற்றமற்றவனைக் கொல்லுகிறான்; திக்கற்றவர்களைப் பிடிக்க அவன் கண்கள் நோக்கிக்கொண்டிருக்கிறது. 9. தன் கெபியிலிருக்கிற சிங்கத்தைப்போல மறைவில் பதிவிருக்கிறான்; ஏழையைப் பிடிக்கப் பதிவிருந்து, ஏழையைத் தன் வலைக்குள் இழுத்துப் பிடித்துக்கொள்ளுகிறான். 10. திக்கற்றவர்கள் தன் பலவான்கள் கையில் விழும்படி அவன் பதுங்கிக்கிடக்கிறான். 11. தேவன் அதை மறந்தார் என்றும், அவர் தம்முடைய முகத்தை மறைத்து, ஒருக்காலும் அதைக் காணமாட்டார் என்றும், தன் இருதயத்திலே சொல்லிக்கொள்ளுகிறான். 12. கர்த்தாவே, எழுந்தருளும்; தேவனே, உம்முடைய கையை உயர்த்தும்; ஏழைகளை மறவாதேயும். 13. துன்மார்க்கன் தேவனை அசட்டைபண்ணி: நீர் கேட்டு விசாரிப்பதில்லை என்று தன் இருதயத்தில் சொல்லிக்கொள்வானேன்? 14. அதைப் பார்த்திருக்கிறீரே! உபத்திரவத்தையும் குரோதத்தையும் கவனித்திருக்கிறீரே; நீர் பதிலளிப்பீர்; ஏழையானவன் தன்னை உமக்கு ஒப்புவிக்கிறான்; திக்கற்ற பிள்ளைகளுக்குச் சகாயர் நீரே. 15. துன்மார்க்கனும் பொல்லாதவனுமாயிருக்கிறவனுடைய புயத்தை முறித்துவிடும்; அவனுடைய ஆகாமியம் காணாமற்போகுமட்டும் அதைத் தேடி விசாரியும். 16. கர்த்தர் சதாகாலங்களுக்கும் ராஜாவாயிருக்கிறார்; புறஜாதியார் அவருடைய தேசத்திலிருந்து அழிந்துபோவார்கள். 17. கர்த்தாவே, சிறுமைப்பட்டவர்களுடைய வேண்டுதலைக் கேட்டிருக்கிறீர்; அவர்கள் இருதயத்தை ஸ்திரப்படுத்துவீர். 18. மண்ணான மனுஷன் இனிப் பலவந்தஞ்செய்யத் தொடராதபடிக்கு, தேவரீர் திக்கற்ற பிள்ளைகளுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் நீதிசெய்ய உம்முடைய செவிகளைச் சாய்த்துக் கேட்டருளுவீர்.
Chapter 11
1. நான் கர்த்தரை நம்பியிருக்கிறேன்; பின்னை ஏன் நீங்கள் என் ஆத்துமாவை நோக்கி: பட்சியைப்போல உன் மலைக்குப் பறந்துபோ என்று சொல்லுகிறீர்கள். 2. இதோ, துன்மார்க்கர் வில்லை வளைத்து, செம்மையான இருதயத்தார்மேல் அந்தகாரத்தில் எய்யும்படி தங்கள் அம்புகளை நாணிலே தொடுக்கிறார்கள். 3. அஸ்திபாரங்களும் நிர்மூலமாகிறதே, நீதிமான் என்னசெய்வான்? 4. கர்த்தர் தம்முடைய பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார்; கர்த்தருடைய சிங்காசனம் பரலோகத்தில் இருக்கிறது; அவருடைய கண்கள் மனுபுத்திரரைப் பார்க்கிறது; அவருடைய இமைகள் அவர்களைச் சோதித்தறிகிறது. 5. கர்த்தர் நீதிமானைச் சோதித்தறிகிறார்; துன்மார்க்கனையும் கொடுமையில் பிரியமுள்ளவனையும் அவருடைய உள்ளம் வெறுக்கிறது. 6. துன்மார்க்கர்மேல் கண்ணிகளை வருஷிக்கப்பண்ணுவார்; அக்கினியும் கந்தகமும் கடுங்கோடைக் கொந்தளிப்பும் அவர்கள் குடிக்கும் பாத்திரத்தின் பங்கு. 7. கர்த்தர் நீதியுள்ளவர், நீதியின்மேல் பிரியப்படுவார்; அவருடைய முகம் செம்மையானவனை நோக்கியிருக்கிறது.
Chapter 12
1. இரட்சியும் கர்த்தாவே, பக்தியுள்ளவன் அற்றுப்போகிறான்; உண்மையுள்ளவர்கள் மனுபுத்திரரில் குறைந்திருக்கிறார்கள். 2. அவரவர் தங்கள் தோழரோடே பொய்பேசுகிறார்கள்; இச்சக உதடுகளால் இருமனதாய்ப் பேசுகிறார்கள். 3. இச்சகம்பேசுகிற எல்லா உதடுகளையும், பெருமைகளைப் பேசுகிற நாவையும் கர்த்தர் அறுத்துப்போடுவார். 4. அவர்கள்: எங்கள் நாவுகளால் மேற்கொள்ளுவோம், எங்கள் உதடுகள் எங்களுடையது; யார் எங்களுக்கு ஆண்டவன் என்று சொல்லுகிறார்கள். 5. ஏழைகள் பாழாக்கப்பட்டதினிமித்தமும், எளியவர்கள் விடும் பெருமூச்சினிமித்தமும், நான் இப்பொழுது எழுந்து, அவன்மேல் சீறுகிறவர்களுக்கு அவனைக் காத்துச் சுகமாயிருக்கப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். 6. கர்த்தருடைய சொற்கள் மண்குகையில் ஏழுதரம் உருக்கி, புடமிடப்பட்ட வெள்ளிக்கொப்பான சுத்த சொற்களாயிருக்கிறது. 7. கர்த்தாவே, நீர் அவர்களைக் காப்பாற்றி, அவர்களை என்றைக்கும் இந்தச் சந்ததிக்கு விலக்கிக் காத்துக்கொள்ளுவீர். 8. மனுபுத்திரரில் சண்டாளர் உயர்ந்திருக்கும்போது, துன்மார்க்கர் எங்கும் சுற்றித்திரிவார்கள்.
Chapter 13
1. கர்த்தாவே, எதுவரைக்கும் என்னை மறந்திருப்பீர், எதுவரைக்கும் உம்முடைய முகத்தை எனக்கு மறைப்பீர்? 2. என் இருதயத்திலே சஞ்சலத்தை நித்தம் நித்தம் வைத்து, எதுவரைக்கும் என் ஆத்துமாவிலே ஆலோசனை பண்ணிக்கொண்டிருப்பேன்? எதுவரைக்கும் என் சத்துரு என்மேல் தன்னை உயர்த்துவான்? 3. என் தேவனாகிய கர்த்தாவே, நீர் நோக்கிப்பார்த்து, எனக்குச் செவிகொடுத்தருளும்; நான் மரணநித்திரை அடையாதபடிக்கு என் கண்களைத் தெளிவாக்கும். 4. அவனை மேற்கொண்டேன் என்று என் பகைஞன் சொல்லாதபடிக்கும், நான் தள்ளாடுகிறதினால் என் சத்துருக்கள் களிகூராதபடிக்கும் இப்படிச் செய்தருளும். 5. நான் உம்முடைய கிருபையின்மேல் நம்பிக்கையாயிருக்கிறேன்; உம்முடைய இரட்சிப்பினால் என் இருதயம் களிகூரும். 6. கர்த்தர் எனக்கு நன்மைசெய்தபடியால் அவரைப் பாடுவேன்.
Chapter 14
1. தேவன் இல்லை என்று மதிகெட்டவன் தன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான். அவர்கள் தங்களைக் கெடுத்து, அருவருப்பான கிரியைகளைச் செய்துவருகிறார்கள்; நன்மைசெய்கிறவன் ஒருவனும் இல்லை. 2. தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று பார்க்க, கர்த்தர் பரலோகத்திலிருந்து மனுபுத்திரரைக் கண்ணோக்கினார். 3. எல்லாரும் வழிவிலகி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்; நன்மைசெய்கிறவன் இல்லை, ஒருவனாகிலும் இல்லை. 4. அக்கிரமக்காரரில் ஒருவனுக்கும் அறிவுஇல்லையோ? அப்பத்தைப் பட்சிக்கிறதுபோல, என் ஜனத்தைப் பட்சிக்கிறார்களே; அவர்கள் கர்த்தரைத் தொழுதுகொள்ளுகிறதில்லை. 5. அங்கே அவர்கள் மிகவும் பயந்தார்கள்; தேவன் நீதிமானுடைய சந்ததியோடே இருக்கிறாரே. 6. சிறுமைப்பட்டவனுக்குக் கர்த்தர் அடைக்கலமாயிருக்கிறார் என்று சொல்லி, நீங்கள் அவனுடைய ஆலோசனையை அலட்சியம்பண்ணினீர்கள். 7. சீயோனிலிருந்து இஸ்ரவேலுக்கு இரட்சிப்பு வருவதாக; கர்த்தர் தம்முடைய ஜனத்தின் சிறையிருப்பைத் திருப்பும்போது, யாக்கோபுக்குக் களிப்பும், இஸ்ரவேலுக்கு மகிழ்ச்சியும் உண்டாகும்.
Chapter 15
1. கர்த்தாவே, யார் உம்முடைய கூடாரத்தில் தங்குவான்? யார் உம்முடைய பரிசுத்த பர்வதத்தில் வாசம்பண்ணுவான்? 2. உத்தமனாய் நடந்து, நீதியை நடப்பித்து, மனதாரச் சத்தியத்தைப் பேசுகிறவன்தானே. 3. அவன் தன் நாவினால் புறங்கூறாமலும், தன் தோழனுக்குத் தீங்குசெய்யாமலும், தன் அயலான்மேல் சொல்லப்படும் நிந்தையான பேச்சை எடுக்காமலும் இருக்கிறான். 4. ஆகாதவன் அவன் பார்வைக்குத் தீழ்ப்பானவன்; கர்த்தருக்குப் பயந்தவர்களையோ கனம்பண்ணுகிறான்; ஆணையிட்டதில் தனக்கு நஷ்டம் வந்தாலும் தவறாதிருக்கிறான். 5. தன் பணத்தை வட்டிக்குக்கொடாமலும், குற்றமில்லாதவனுக்கு விரோதமாய்ப் பரிதானம் வாங்காமலும் இருக்கிறான். இப்படிச் செய்கிறவன் என்றென்றைக்கும் அசைக்கப்படுவதில்லை.
Chapter 16
1. தேவனே, என்னைக் காப்பாற்றும், உம்மை நம்பியிருக்கிறேன். 2. என் நெஞ்சமே, நீ கர்த்தரை நோக்கி: தேவரீர் என் ஆண்டவராயிருக்கிறீர், என் செல்வம் உமக்கு வேண்டியதாயிராமல்; 3. பூமியிலுள்ள பரிசுத்தவான்களுக்கும், நான் என் முழுப் பிரியத்தையும் வைத்திருக்கிற மகாத்துமாக்களுக்கும், அது வேண்டியதாயிருக்கிறது என்று சொன்னாய். 4. அந்நிய தேவனை நாடிப் பின்பற்றுகிறவர்களுக்கு வேதனைகள் பெருகும்; அவர்கள் செலுத்துகிற இரத்த பானபலிகளை நான் செலுத்தமாட்டேன், அவர்கள் நாமங்களை என் உதடுகளினால் உச்சரிக்கவுமாட்டேன். 5. கர்த்தர் என் சுதந்தரமும் என் பாத்திரத்தின் பங்குமானவர்; என் சுதந்தரத்தை தேவரீர் காப்பாற்றுகிறீர். 6. நேர்த்தியான இடங்களில் எனக்குப் பங்கு கிடைத்தது; ஆம், சிறப்பான சுதந்தரம் எனக்கு உண்டு. 7. எனக்கு ஆலோசனை தந்த கர்த்தரைத் துதிப்பேன்; இராக்காலங்களிலும் என் உள்ளிந்திரியங்கள் என்னை உணர்த்தும். 8. கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்; அவர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை. 9. ஆகையால் என் இருதயம் பூரித்தது, என் மகிமை களிகூர்ந்தது; என் மாம்சமும் நம்பிக்கையோடே தங்கியிருக்கும். 10. என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர்; உம்முடைய பரிசுத்தவானை அழிவைக் காணவொட்டீர். 11. ஜீவமார்க்கத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர்; உம்முடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தமும், உம்முடைய வலதுபாரிசத்தில் நித்திய பேரின்பமும் உண்டு.
Chapter 17
1. கர்த்தாவே, நியாயத்தைக் கேட்டருளும், என் கூப்பிடுதலைக் கவனியும்; கபடமில்லாத உதடுகளினின்று பிறக்கும் என் விண்ணப்பத்திற்குச் செவிகொடும். 2. உம்முடைய சந்நிதியிலிருந்து என் நியாயம் வெளிப்படுவதாக; உம்முடைய கண்கள் நியாயமானவைகளை நோக்குவதாக. 3. நீர் என் இருதயத்தைப் பரிசோதித்து, இராக்காலத்தில் அதை விசாரித்து, என்னைப் புடமிட்டுப்பார்த்தும் ஒன்றும் காணாதிருக்கிறீர்; என் வாய் மீறாதபடிக்குத் தீர்மானம்பண்ணினேன். 4. மனுஷரின் செய்கைகளைக்குறித்து, நான் உம்முடைய உதடுகளின் வாக்கினாலே துஷ்டனுடைய பாதைகளுக்கு விலக்கமாய் என்னைக் காத்துக் கொள்ளுகிறேன். 5. என் காலடிகள் வழுவாதபடிக்கு, என் நடைகளை உமது வழிகளில் ஸ்திரப்படுத்தும். 6. தேவனே, நான் உம்மை நோக்கிக் கெஞ்சுகிறேன், எனக்குச் செவிகொடுக்கிறீர்; என்னிடத்தில் உம்முடைய செவியைச் சாய்த்து, என் வார்த்தையைக் கேட்டருளும். 7. உம்மை நம்புகிறவர்களை அவர்களுக்கு விரோதமாய் எழும்புகிறவர்களினின்று உமது வலதுகரத்தினால் தப்புவித்து இரட்சிக்கிறவரே! உம்முடைய அதிசயமான கிருபையை விளங்கப்பண்ணும். 8. கண்மணியைப்போல என்னைக் காத்தருளும். 9. என்னை ஒடுக்குகிற துன்மார்க்கருக்கும், என்னைச் சூழ்ந்துகொள்ளுகிற என் பிராணப்பகைஞருக்கும் மறைவாக, உம்முடைய செட்டைகளின் நிழலிலே என்னைக் காப்பாற்றும். 10. அவர்கள் நிணந்துன்னியிருக்கிறார்கள், தங்கள் வாயினால் வீம்பு பேசுகிறார்கள். 11. நாங்கள் செல்லும் பாதைகளில் இப்பொழுது எங்களை வளைந்துகொண்டார்கள்; எங்களைத் தரையிலே தள்ளும்படி அவர்கள் கண்கள் எங்களை நோக்கிக்கொண்டிருக்கிறது. 12. பீறுகிறதற்கு ஆவலுள்ள சிங்கத்துக்கும், மறைவிடங்களில் பதிவிருக்கிற பாலசிங்கத்துக்கும் ஒப்பாயிருக்கிறார்கள். 13. கர்த்தாவே, நீர் எழுந்திருந்து, அவனுக்கு எதிரிட்டு, அவனை மடங்கடியும்; கர்த்தாவே, என் ஆத்துமாவைத் துன்மார்க்கனுடைய கைக்கு உம்முடைய பட்டயத்தினால் தப்புவியும். 14. மனுஷருடைய கைக்கும், இம்மையில் தங்கள் பங்கைப் பெற்றிருக்கிற உலகமக்களின் கைக்கும் உம்முடைய கரத்தினால் என்னைத் தப்புவியும்; அவர்கள் வயிற்றை உமது திரவியத்தினால் நிரப்புகிறீர்; அவர்கள் புத்திரபாக்கியத்தினால் திருப்தியடைந்து, தங்களுக்கு மீதியான பொருளைத் தங்கள் குழந்தைகளுக்கு வைக்கிறார்கள். 15. நானோ நீதியில் உம்முடைய முகத்தைத் தரிசிப்பேன்; நான் விழிக்கும்போது உமது சாயலால் திருப்தியாவேன்.
Chapter 18
1. என் பெலனாகிய கர்த்தாவே, உம்மில் அன்புகூருவேன். 2. கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் இரட்சகரும், என் தேவனும், நான் நம்பியிருக்கிற என் துருகமும், என் கேடகமும், என் இரட்சணியக் கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமுமாயிருக்கிறார். 3. துதிக்குப் பாத்திரராகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவேன்; அதனால் என் சத்துருக்களுக்கு நீங்கலாகி இரட்சிக்கப்படுவேன். 4. மரணக்கட்டுகள் என்னைச் சுற்றிக்கொண்டது; துர்ச்சனப்பிரவாகம் என்னைப் பயப்படுத்தினது. 5. பாதாளக்கட்டுகள் என்னைச் சூழ்ந்துகொண்டது; மரணக்கண்ணிகள் என்மேல் விழுந்தது. 6. எனக்கு உண்டான நெருக்கத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு, என் தேவனை நோக்கி அபயமிட்டேன்; தமது ஆலயத்திலிருந்து என் சத்தத்தைக் கேட்டார், என் கூப்பிடுதல் அவர் சந்நிதியில் போய், அவர் செவிகளில் ஏறிற்று. 7. அப்பொழுது பூமி அசைந்து அதிர்ந்தது, அவர் கோபங்கொண்டபடியால் பர்வதங்களின் அஸ்திபாரங்கள் குலுங்கி அசைந்தது. 8. அவர் நாசியிலிருந்து புகை எழும்பிற்று, அவர் வாயிலிருந்து பட்சிக்கிற அக்கினி புறப்பட்டது; அதனால் தழல் மூண்டது. 9. வானங்களைத் தாழ்த்தி இறங்கினார்; அவர் பாதங்களின்கீழ் காரிருள் இருந்தது. 10. கேருபீன்மேல் ஏறி வேகமாய்ச் சென்றார்; காற்றின் செட்டைகளைக் கொண்டு பறந்தார். 11. இருளைத் தமக்கு மறைவிடமாக்கினார்; கரும்புனல்களையும், ஆகாயத்துக் கார்மேகங்களையும் தம்மைச் சூழக் கூடாரமாக்கினார். 12. அவருடைய சந்நிதிப் பிரகாசத்தினால் அவருடைய மேகங்கள் பறந்து விலகிற்று, கல்மழையும் நெருப்புத்தழலும் விழுந்தது. 13. கர்த்தர் வானங்களிலே குமுறினார், உன்னதமானவர் தமது சத்தத்தைத் தொனிக்கப்பண்ணினார்; கல்மழையும் நெருப்புத்தழலும் விழுந்தது. 14. தம்முடைய அம்புகளை எய்து, அவர்களைச் சிதறடித்தார்; மின்னல்களைப் பிரயோகித்து, அவர்களைக் கலங்கப்பண்ணினார். 15. அப்பொழுது கர்த்தாவே, உம்முடைய கண்டிதத்தினாலும் உம்முடைய நாசியின் சுவாசக்காற்றினாலும் தண்ணீர்களின் மதகுகள் திறவுண்டு, பூதலத்தின் அஸ்திபாரங்கள் காணப்பட்டது. 16. உயரத்திலிருந்து அவர் கை நீட்டி, என்னைப் பிடித்து, ஜலப்பிரவாகத்திலிருக்கிற என்னைத் தூக்கிவிட்டார். 17. என்னிலும் அதிக பலவான்களாயிருந்த என் பலத்த சத்துருவுக்கும் என்னைப் பகைக்கிறவர்களுக்கும் என்னை விடுவித்தார். 18. என் ஆபத்துநாளில் எனக்கு எதிரிட்டு வந்தார்கள்; கர்த்தரோ எனக்கு ஆதரவாயிருந்தார். 19. அவர் விசாலமான இடத்திலே என்னைக் கொண்டுவந்து, என்மேல் பிரியமாயிருந்தபடியால், என்னைத் தப்புவித்தார். 20. கர்த்தர் என் நீதிக்குத்தக்கதாக எனக்குப் பதிலளித்தார்; என் கைகளின் சுத்தத்திற்குத்தக்கதாக எனக்குச் சரிக்கட்டினார். 21. கர்த்தருடைய வழிகளைக் கைக்கொண்டுவந்தேன்; நான் என் தேவனுக்குத் துரோகம்பண்ணினதில்லை. 22. அவருடைய நியாயங்களையெல்லாம் எனக்கு முன்பாக நிறுத்தினேன்; அவருடைய பிரமாணங்களை நான் தள்ளிப்போடவில்லை. 23. அவர் முன்பாக நான் மனவுண்மையாயிருந்து, என் துர்க்குணத்துக்கு என்னை விலக்கிக் காத்துக்கொண்டேன். 24. ஆகையால் கர்த்தர் என் நீதிக்கும், தம்முடைய கண்களுக்கு முன்னிருக்கிற என் கைகளின் சுத்தத்திற்கும் தக்கதாக எனக்குப் பலனளித்தார். 25. தயவுள்ளவனுக்கு நீர் தயவுள்ளவராகவும், உத்தமனுக்கு நீர் உத்தமராகவும்; 26. புனிதனுக்கு நீர் புனிதராகவும், மாறுபாடுள்ளவனுக்கு நீர் மாறுபடுகிறவராகவும் தோன்றுவீர். 27. தேவரீர் சிறுமைப்பட்ட ஜனத்தை இரட்சிப்பீர்; மேட்டிமையான கண்களைத் தாழ்த்துவீர். 28. தேவரீர் என் விளக்கை ஏற்றுவீர்; என் தேவனாகிய கர்த்தர் என் இருளை வெளிச்சமாக்குவார். 29. உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்ந்துபோவேன்; என் தேவனாலே ஒரு மதிலைத் தாண்டுவேன். 30. தேவனுடைய வழி உத்தமமானது; கர்த்தருடைய வசனம் புடமிடப்பட்டது; தம்மை நம்புகிற அனைவருக்கும் அவர் கேடகமாயிருக்கிறார். 31. கர்த்தரையல்லாமல் தேவன் யார்? நம்முடைய தேவனையன்றிக் கன்மலையும் யார்? 32. என்னைப் பலத்தால் இடைகட்டி, என் வழியைச் செவ்வைப்படுத்துகிறவர் தேவனே. 33. அவர் என் கால்களை மான்களுடைய கால்களைப்போலாக்கி, என்னுடைய உயர்தலங்களில் என்னை நிறுத்துகிறார். 34. வெண்கல வில்லும் என் புயங்களால் வளையும்படி, என் கைகளை யுத்தத்திற்குப் பழக்குவிக்கிறார். 35. உம்முடைய இரட்சிப்பின் கேடகத்தையும் எனக்குத் தந்தீர்; உம்முடைய வலதுகரம் என்னைத் தாங்குகிறது; உம்முடைய காருணியம் என்னைப் பெரியவனாக்கும். 36. என் கால்கள் வழுவாதபடிக்கு, நான் நடக்கிற வழியை அகலமாக்கினீர். 37. என் சத்துருக்களைப் பின்தொடர்ந்து, அவர்களைப் பிடிப்பேன்; அவர்களை நிர்மூலமாக்கும்வரைக்கும் திரும்பேன். 38. அவர்கள் எழுந்திருக்கமாட்டாதபடிக்கு, என் பாதங்களின்கீழ் விழத்தக்கதாக அவர்களை வெட்டினேன். 39. யுத்தத்திற்கு நீர் என்னைப் பலத்தால் இடைகட்டி, என்மேல் எழும்பினவர்களை என் கீழ் மடங்கப்பண்ணினீர். 40. நான் என் பகைஞரைச் சங்கரிக்கும்படியாக, என் சத்துருக்களின் பிடரியை எனக்கு ஒப்புக்கொடுத்தீர். 41. அவர்கள் கூப்பிடுகிறார்கள், அவர்களை இரட்சிப்பார் ஒருவருமில்லை; கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிறார்கள், அவர்களுக்கு அவர் உத்தரவு கொடுக்கிறதில்லை. 42. நான் அவர்களைக் காற்றுமுகத்திலே பறக்கிற தூளாக இடித்து, தெருக்களிலுள்ள சேற்றைப்போல் அவர்களை எறிந்துபோடுகிறேன். 43. ஜனங்களின் சண்டைகளுக்கு நீர் என்னைத் தப்புவித்து, ஜாதிகளுக்கு என்னைத் தலைவனாக்குகிறீர்; நான் அறியாத ஜனங்கள் என்னைச் சேவிக்கிறார்கள். 44. அவர்கள் என் சத்தத்தைக் கேட்டவுடனே எனக்குக் கீழ்ப்படிகிறார்கள்; அந்நியரும் எனக்கு இச்சகம்பேசி அடங்குகிறார்கள். 45. அந்நியர் முனைவிழுந்துபோய், தங்கள் அரண்களிலிருந்து தத்தளிப்பாய்ப் புறப்படுகிறார்கள். 46. கர்த்தர் ஜீவனுள்ளவர்; என் கன்மலையானவர் துதிக்கப்படுவாராக; என் இரட்சிப்பின் தேவன் உயர்ந்திருப்பாராக. 47. அவர் எனக்காகப் பழிக்குப் பழிவாங்கி, ஜனங்களை எனக்குக் கீழ்ப்படுத்துகிற தேவனானவர். 48. அவரே என் சத்துருக்களுக்கு என்னை விலக்கி விடுவிக்கிறவர்; எனக்கு விரோதமாய் எழும்புகிறவர்கள்மேல் என்னை நீர் உயர்த்தி, கொடுமையான மனுஷனுக்கு என்னைத் தப்புவிக்கிறீர். 49. இதினிமித்தம் கர்த்தாவே, ஜாதிகளுக்குள்ளே உம்மைத் துதித்து, உம்முடைய நாமத்திற்குச் சங்கீதம் பாடுவேன். 50. தாம் ஏற்படுத்தின ராஜாவுக்கு மகத்தான இரட்சிப்பை அளித்து, தாம் அபிஷேகம்பண்ணின தாவீதுக்கும் அவன் சந்ததிக்கும் சதாகாலமும் கிருபை செய்கிறார்.
Chapter 19
1. வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது, ஆகாயவிரிவு அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது. 2. பகலுக்குப் பகல் வார்த்தைகளைப் பொழிகிறது, இரவுக்கு இரவு அறிவைத் தெரிவிக்கிறது. 3. அவைகளுக்குப் பேச்சுமில்லை, வார்த்தையுமில்லை, அவைகளின் சத்தம் கேட்கப்படுவதுமில்லை. 4. ஆகிலும் அவைகளின் சத்தம் பூமியெங்கும், அவைகளின் வசனங்கள் பூச்சக்கரத்துக் கடைசிவரைக்கும் செல்லுகிறது; அவைகளில் சூரியனுக்கு ஒரு கூடாரத்தை ஸ்தாபித்தார். 5. அது தன் மணவறையிலிருந்து புறப்படுகிற மணவாளனைப்போலிருந்து, பராக்கிரமசாலியைப்போல் தன் பாதையில் ஓட மகிழ்ச்சியாயிருக்கிறது. 6. அது வானங்களின் ஒரு முனையிலிருந்து புறப்பட்டு, அவைகளின் மறுமுனைவரைக்கும் சுற்றியோடுகிறது; அதின் காந்திக்கு மறைவானது ஒன்றுமில்லை. 7. கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய சாட்சி சத்தியமும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது. 8. கர்த்தருடைய நியாயங்கள் செம்மையும், இருதயத்தைச் சந்தோஷிப்பிக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய கற்பனை தூய்மையும், கண்களைத் தெளிவிக்கிறதுமாயிருக்கிறது. 9. கர்த்தருக்குப் பயப்படுகிற பயம் சுத்தமும், என்றைக்கும் நிலைக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய நியாயங்கள் உண்மையும், அவைகள் அனைத்தும் நீதியுமாயிருக்கிறது. 10. அவைகள் பொன்னிலும், மிகுந்த பசும்பொன்னிலும் விரும்பப்படத்தக்கதும், தேனிலும் தேன்கூட்டிலிருந்து ஒழுகும் தெளிதேனிலும் மதுரமுள்ளதுமாய் இருக்கிறது. 11. அன்றியும் அவைகளால் உமது அடியேன் எச்சரிக்கப்படுகிறேன்; அவைகளைக் கைக்கொள்ளுகிறதினால் மிகுந்த பலன் உண்டு. 12. தன் பிழைகளை உணருகிறவன் யார்? மறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும். 13. துணிகரமான பாவங்களுக்கு உமது அடியேனை விலக்கிக்காரும், அவைகள் என்னை ஆண்டுகொள்ள ஒட்டாதிரும்; அப்பொழுது நான் உத்தமனாகி, பெரும்பாதகத்துக்கு நீங்கலாயிருப்பேன். 14. என் கன்மலையும் என் மீட்பருமாகிய கர்த்தாவே, என் வாயின் வார்த்தைகளும், என் இருதயத்தின் தியானமும், உமது சமுகத்தில் பிரீதியாயிருப்பதாக.
Chapter 20
1. ஆபத்துநாளிலே கர்த்தர் உமது ஜெபத்தைக் கேட்பாராக; யாக்கோபின் தேவனுடைய நாமம் உமக்கு உயர்ந்த அடைக்கலமாவதாக. 2. அவர் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து உமக்கு ஒத்தாசையனுப்பி, சீயோனிலிருந்து உம்மை ஆதரிப்பாராக. 3. நீர் செலுத்தும் காணிக்கைகளையெல்லாம் அவர் நினைத்து, உமது சர்வாங்க தகனபலியைப் பிரியமாய் ஏற்றுக்கொள்வாராக. (சேலா.) 4. அவர் உமது மனவிருப்பத்தின்படி உமக்குத் தந்தருளி, உமது ஆலோசனைகளையெல்லாம் நிறைவேற்றுவாராக. 5. நாங்கள் உமது இரட்சிப்பினால் மகிழ்ந்து, எங்கள் தேவனுடைய நாமத்திலே கொடியேற்றுவோம்; உமது வேண்டுதல்களையெல்லாம் கர்த்தர் நிறைவேற்றுவாராக. 6. கர்த்தர் தாம் அபிஷேகம்பண்ணினவரை இரட்சிக்கிறார் என்பதை இப்பொழுது அறிந்திருக்கிறேன்; தமது வலதுகரம் செய்யும் இரட்சிப்பின் வல்லமைகளைக் காண்பித்து, தமது பரிசுத்த வானத்திலிருந்து அவருடைய ஜெபத்தைக் கேட்பார். 7. சிலர் இரதங்களைக்குறித்தும், சிலர் குதிரைகளைக்குறித்தும் மேன்மைபாராட்டுகிறார்கள்; நாங்களோ எங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைக்குறித்தே மேன்மைபாராட்டுவோம். 8. அவர்கள் முறிந்து விழுந்தார்கள்; நாங்களோ எழுந்து நிமிர்ந்து நிற்கிறோம். 9. கர்த்தாவே, இரட்சியும்; நாங்கள் கூப்பிடுகிற நாளிலே ராஜா எங்களுக்குச் செவிகொடுப்பாராக.
Chapter 21
1. கர்த்தாவே, உம்முடைய வல்லமையிலே ராஜா மகிழ்ச்சியாயிருக்கிறார்; உம்முடைய இரட்சிப்பிலே எவ்வளவாய்க் களிகூருகிறார்! 2. அவருடைய மனவிருப்பத்தின்படி நீர் அவருக்குத் தந்தருளி, அவருடைய உதடுகளின் விண்ணப்பத்தைத் தள்ளாதிருக்கிறீர். (சேலா.) 3. உத்தம ஆசீர்வாதங்களோடு நீர் அவருக்கு எதிர்கொண்டுவந்து, அவர் சிரசில் பொற்கிரீடம் தரிப்பிக்கிறீர். 4. அவர் உம்மிடத்தில் ஆயுசைக்கேட்டார்; நீர் அவருக்கு என்றென்றைக்குமுள்ள தீர்க்காயுசை அளித்தீர். 5. உமது இரட்சிப்பினால் அவர் மகிமை பெரிதாயிருக்கிறது; மேன்மையையும் மகத்துவத்தையும் அவருக்கு அருளினீர். 6. அவரை நித்திய ஆசீர்வாதங்களுள்ளவராக்குகிறீர்; அவரை உம்முடைய சமுகத்தின் மகிழ்ச்சியினால் பூரிப்பாக்குகிறீர். 7. ராஜா கர்த்தர்மேல் நம்பிக்கையாயிருக்கிறார்; உன்னதமானவருடைய தயவினால் அசைக்கப்படாதிருப்பார். 8. உமது கை உமது சத்துருக்களெல்லாரையும் எட்டிப்பிடிக்கும்; உமது வலதுகரம் உம்மைப் பகைக்கிறவர்களைக் கண்டுபிடிக்கும். 9. உமது கோபத்தின் காலத்திலே அவர்களை அக்கினிச் சூளையாக்கிப் போடுவீர்; கர்த்தர் தமது கோபத்திலே அவர்களை அழிப்பார்; அக்கினி அவர்களைப் பட்சிக்கும். 10. அவர்கள் கனியை பூமியிலிராதபடி நீர் அழித்து, அவர்கள் சந்ததியை மனுபுத்திரரிலிராதபடி ஒழியப்பண்ணுவீர். 11. அவர்கள் உமக்கு விரோதமாய்ப் பொல்லாங்கு நினைத்தார்கள்; தீவினையை எத்தனம்பண்ணினார்கள்; ஒன்றும் வாய்க்காமற்போயிற்று. 12. அவர்களை இலக்காக வைத்து, உம்முடைய அம்புகளை நாணேற்றி அவர்கள் முகத்திற்கு நேரே விடுகிறீர். 13. கர்த்தாவே, உம்முடைய பலத்திலே நீர் எழுந்தருளும்; அப்பொழுது உம்முடைய வல்லமையைப் பாடிக்கீர்த்தனம்பண்ணுவோம்.
Chapter 22
1. என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்? எனக்கு உதவி செய்யாமலும், நான் கதறிச் சொல்லும் வார்த்தைகளைக் கேளாமலும் ஏன் தூரமாயிருக்கிறீர்? 2. என் தேவனே, நான் பகலிலே கூப்பிடுகிறேன், உத்தரவுகொடீர்; இரவிலே கூப்பிடுகிறேன், எனக்கு அமைதலில்லை. 3. இஸ்ரவேலின் துதிகளுக்குள் வாசமாயிருக்கிற தேவரீரே பரிசுத்தர். 4. எங்கள் பிதாக்கள் உம்மிடத்தில் நம்பிக்கைவைத்தார்கள்; நம்பின அவர்களை நீர் விடுவித்தீர். 5. உம்மை நோக்கிக் கூப்பிட்டுத் தப்பினார்கள்; உம்மை நம்பி வெட்கப்பட்டுப்போகாதிருந்தார்கள். 6. நானோ ஒரு புழு, மனுஷனல்ல; மனுஷரால் நிந்திக்கப்பட்டும், ஜனங்களால் அவமதிக்கப்பட்டும் இருக்கிறேன். 7. என்னைப் பார்க்கிறவர்களெல்லாரும் என்னைப் பரியாசம்பண்ணி, உதட்டைப் பிதுக்கி, தலையைத் துலுக்கி: 8. கர்த்தர்மேல் நம்பிக்கையாயிருந்தானே, அவர் இவனை விடுவிக்கட்டும்; இவன்மேல் பிரியமாயிருக்கிறாரே, இப்பொழுது இவனை மீட்டுவிடட்டும் என்கிறார்கள். 9. நீரே என்னைக் கர்ப்பத்திலிருந்து எடுத்தவர்; என் தாயின் முலைப்பாலை நான் உண்கையில் என்னை உம்முடையபேரில் நம்பிக்கையாயிருக்கப்பண்ணினீர். 10. கர்ப்பத்திலிருந்து வெளிப்பட்டபோதே உமது சார்பில் விழுந்தேன்; நான் என் தாயின் வயிற்றில் இருந்ததுமுதல் நீர் என் தேவனாயிருக்கிறீர். 11. என்னைவிட்டுத் தூரமாகாதேயும்; ஆபத்து கிட்டியிருக்கிறது, சகாயரும் இல்லை. 12. அநேகம் காளைகள் என்னைச் சூழ்ந்திருக்கிறது; பாசான் தேசத்துப் பலத்த எருதுகள் என்னை வளைந்துகொண்டது. 13. பீறி கெர்ச்சிக்கிற சிங்கத்தைப்போல், என்மேல் தங்கள் வாயைத் திறக்கிறார்கள். 14. தண்ணீரைப்போல ஊற்றுண்டேன்; என் எலும்புகளெல்லாம் கட்டுவிட்டது, என் இருதயம் மெழுகுபோலாகி, என் குடல்களின் நடுவே உருகிற்று. 15. என் பெலன் ஓட்டைப்போல் காய்ந்தது; என் நாவு மேல்வாயோடே ஒட்டிக்கொண்டது; என்னை மரணத்தூளிலே போடுகிறீர். 16. நாய்கள் என்னைச் சூழ்ந்திருக்கிறது; பொல்லாதவர்களின் கூட்டம் என்னை வளைந்துகொண்டது; என் கைகளையும் என் கால்களையும் உருவக் குத்தினார்கள். 17. என் எலும்புகளையெல்லாம் நான் எண்ணலாம்; அவர்கள் என்னை நோக்கிப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். 18. என் வஸ்திரங்களைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் உடையின்பேரில் சீட்டுப்போடுகிறார்கள். 19. ஆனாலும் கர்த்தாவே, நீர் எனக்குத் தூரமாகாதேயும்; என் பெலனே, எனக்குச் சகாயம்பண்ணத் தீவிரித்துக்கொள்ளும். 20. என் ஆத்துமாவைப் பட்டயத்திற்கும், எனக்கு அருமையானதை நாய்களின் துஷ்டத்தனத்திற்கும் தப்புவியும். 21. என்னைச் சிங்கத்தின் வாயிலிருந்து இரட்சியும்; நான் காண்டாமிருகத்தின் கொம்புகளில் இருக்கும்போது எனக்குச் செவிகொடுத்தருளினீர். 22. உம்முடைய நாமத்தை என் சகோதரருக்கு அறிவித்து, சபைநடுவில் உம்மைத் துதிப்பேன். 23. கர்த்தருக்குப் பயப்படுகிறவர்களே, அவரைத் துதியுங்கள்; யாக்கோபின் சந்ததியாரே, நீங்கள் எல்லாரும் அவரைக் கனம்பண்ணுங்கள்; இஸ்ரவேலின் வம்சத்தாரே, நீங்கள் எல்லாரும் அவர்பேரில் பயபக்தியாயிருங்கள். 24. உபத்திரவப்பட்டவனுடைய உபத்திரவத்தை அவர் அற்பமாயெண்ணாமலும் அருவருக்காமலும், தம்முடைய முகத்தை அவனுக்கு மறைக்காமலுமிருந்து, தம்மை நோக்கி அவன் கூப்பிடுகையில் அவனைக் கேட்டருளினார். 25. மகா சபையிலே நான் உம்மைத் துதிப்பேன்; அவருக்குப் பயப்படுகிறவர்களுக்கு முன்பாக என் பொருத்தனைகளைச் செலுத்துவேன். 26. சாந்தகுணமுள்ளவர்கள் புசித்துத் திருப்தியடைவார்கள்; கர்த்தரைத் தேடுகிறவர்கள் அவரைத் துதிப்பார்கள்; உங்கள் இருதயம் என்றென்றைக்கும் வாழும். 27. பூமியின் எல்லைகளெல்லாம் நினைவுகூர்ந்து கர்த்தரிடத்தில் திரும்பும்; ஜாதிகளுடைய சந்ததிகளெல்லாம் உமது சமுகத்தில் தொழுதுகொள்ளும். 28. ராஜ்யம் கர்த்தருடையது; அவர் ஜாதிகளை ஆளுகிறவர். 29. பூமியின் செல்வவான்கள் யாவரும் புசித்துப் பணிந்துகொள்வார்கள்; புழுதியில் இறங்குகிறவர்கள் யாவரும் அவருக்கு முன்பாக வணங்குவார்கள். ஒருவனும் தன் ஆத்துமா அழியாதபடி அதைக் காக்கக்கூடாதே. 30. ஒரு சந்ததி அவரைச் சேவிக்கும்; தலைமுறை தலைமுறையாக அது ஆண்டவருடைய சந்ததி என்னப்படும். 31. அவர்கள் வந்து: அவரே இவைகளைச் செய்தார் என்று பிறக்கப்போகிற ஜனங்களுக்கு அவருடைய நீதியை அறிவிப்பார்கள்.
Chapter 23
1. கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன். 2. அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து, அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் என்னைக் கொண்டுபோய் விடுகிறார். 3. அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார். 4. நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும். 5. என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என் தலையை எண்ணெயால் அபிஷேகம்பண்ணுகிறீர்; என் பாத்திரம் நிரம்பி வழிகிறது. 6. என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்.
Chapter 24
1. பூமியும் அதின் நிறைவும், உலகமும் அதிலுள்ள குடிகளும் கர்த்தருடையது. 2. அவரே அதைக் கடல்களுக்கு மேலாக அஸ்திபாரப்படுத்தி, அதை நதிகளுக்கு மேலாக ஸ்தாபித்தார். 3. யார் கர்த்தருடைய பர்வதத்தில் ஏறுவான்? யார் அவருடைய பரிசுத்த ஸ்தலத்தில் நிலைத்திருப்பான்? 4. கைகளில் சுத்தமுள்ளவனும் இருதயத்தில் மாசில்லாதவனுமாயிருந்து, தன் ஆத்துமாவை மாயைக்கு ஒப்புக்கொடாமலும், கபடாய் ஆணையிடாமலும் இருக்கிறவனே. 5. அவன் கர்த்தரால் ஆசீர்வாதத்தையும், தன் இரட்சிப்பின் தேவனால் நீதியையும் பெறுவான். 6. இதுவே அவரைத் தேடி விசாரித்து, அவருடைய சமுகத்தை நாடுகிற யாக்கோபு என்னும் சந்ததி. (சேலா.) 7. வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்; அநாதி கதவுகளே, உயருங்கள்; மகிமையின் ராஜா உட்பிரவேசிப்பார். 8. யார் இந்த மகிமையின் ராஜா? அவர் வல்லமையும் பராக்கிரமமுமுள்ள கர்த்தர்; அவர் யுத்தத்தில் பராக்கிரமமுள்ள கர்த்தராமே. 9. வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்; அநாதி கதவுகளே, உயருங்கள், மகிமையின் ராஜா உட்பிரவேசிப்பார். 10. யார் இந்த மகிமையின் ராஜா? அவர் சேனைகளின் கர்த்தரானவர்; அவரே மகிமையின் ராஜா. (சேலா.)
Chapter 25
1. கர்த்தாவே, உம்மிடத்தில் என் ஆத்துமாவை உயர்த்துகிறேன். 2. என் தேவனே, உம்மை நம்பியிருக்கிறேன், நான் வெட்கப்பட்டுப்போகாதபடி செய்யும்; என் சத்துருக்கள் என்னை மேற்கொண்டு மகிழவிடாதேயும். 3. உம்மை நோக்கிக் காத்திருக்கிற ஒருவரும் வெட்கப்பட்டுப் போகாதபடி செய்யும்; முகாந்தரமில்லாமல் துரோகம்பண்ணுகிறவர்களே வெட்கப்பட்டுப் போவார்களாக. 4. கர்த்தாவே, உம்முடைய வழிகளை எனக்குத் தெரிவியும்; உம்முடைய பாதைகளை எனக்குப் போதித்தருளும். 5. உம்முடைய சத்தியத்திலே என்னை நடத்தி, என்னைப் போதித்தருளும்; நீரே என் இரட்சிப்பின் தேவன், உம்மை நோக்கி நாள்முழுதும் காத்திருக்கிறேன். 6. கர்த்தாவே, உம்முடைய இரக்கங்களையும் உம்முடைய காருணியங்களையும் நினைத்தருளும், அவைகள் அநாதிகாலமுதல் இருக்கிறதே. 7. என் இளவயதின் பாவங்களையும் என் மீறுதல்களையும் நினையாதிரும்; கர்த்தாவே, உம்முடைய தயவினிமித்தம் என்னை உமது கிருபையின்படியே நினைத்தருளும். 8. கர்த்தர் நல்லவரும் உத்தமருமாயிருக்கிறார்; ஆகையால் பாவிகளுக்கு வழியைத் தெரிவிக்கிறார். 9. சாந்தகுணமுள்ளவர்களை நியாயத்திலே நடத்தி, சாந்தகுணமுள்ளவர்களுக்குத் தமது வழியைப் போதிக்கிறார். 10. கர்த்தருடைய உடன்படிக்கையையும் அவருடைய சாட்சிகளையும் கைக்கொள்ளுகிறவர்களுக்கு, அவருடைய பாதைகளெல்லாம் கிருபையும் சத்தியமுமானவைகள். 11. கர்த்தாவே, என் அக்கிரமம் பெரிது; உம்முடைய நாமத்தினிமித்தம் அதை மன்னித்தருளும். 12. கர்த்தருக்குப் பயப்படுகிற மனுஷன் எவனோ அவனுக்குத் தாம் தெரிந்துகொள்ளும் வழியைப் போதிப்பார். 13. அவன் ஆத்துமா நன்மையில் தங்கும்; அவன் சந்ததி பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளும். 14. கர்த்தருடைய இரகசியம் அவருக்குப் பயந்தவர்களிடத்தில் இருக்கிறது; அவர்களுக்குத் தம்முடைய உடன்படிக்கையைத் தெரியப்படுத்துவார். 15. என் கண்கள் எப்போதும் கர்த்தரை நோக்கிக் கொண்டிருக்கிறது; அவரே என் கால்களை வலைக்கு நீங்கலாக்கிவிடுவார். 16. என்மேல் நோக்கமாகி, எனக்கு இரங்கும்; நான் தனித்தவனும் சிறுமைப்படுகிறவனுமாயிருக்கிறேன். 17. என் இருதயத்தின் வியாகுலங்கள் பெருகியிருக்கிறது; என் இடுக்கண்களுக்கு என்னை நீங்கலாக்கிவிடும். 18. என் துன்பத்தையும் என் வருத்தத்தையும் பார்த்து, என் பாவங்களையெல்லாம் மன்னித்தருளும். 19. என் சத்துருக்களைப் பாரும்; அவர்கள் பெருகியிருந்து, உக்கிரபகையாய் என்னைப் பகைக்கிறார்கள். 20. என் ஆத்துமாவைக் காப்பாற்றி என்னை விடுவியும்; நான் வெட்கப்பட்டுப்போகாதபடி செய்யும்; உம்மை நம்பியிருக்கிறேன். 21. உத்தமமும் நேர்மையும் என்னைக் காக்கக்கடவது; நான் உமக்குக் காத்திருக்கிறேன். 22. தேவனே, இஸ்ரவேலை அவனுடைய எல்லா இக்கட்டுகளுக்கும் நீங்கலாக்கி மீட்டுவிடும்.
Chapter 26
1. கர்த்தாவே, என்னை நியாயம் விசாரியும், நான் என் உத்தமத்திலே நடக்கிறேன்; நான் கர்த்தரை நம்பியிருக்கிறேன், ஆகையால் நான் தள்ளாடுவதில்லை. 2. கர்த்தாவே, என்னைப் பரீட்சித்து, என்னைச் சோதித்துப்பாரும்; என் உள்ளிந்திரியங்களையும் என் இருதயத்தையும் புடமிட்டுப்பாரும். 3. உம்முடைய கிருபை என் கண்களுக்கு முன்பாக இருக்கிறது; உம்முடைய சத்தியத்திலே நடந்துகொள்ளுகிறேன். 4. வீணரோடே நான் உட்காரவில்லை, வஞ்சகரிடத்தில் நான் சேருவதில்லை. 5. பொல்லாதவர்களின் கூட்டத்தைப் பகைக்கிறேன்; துன்மார்க்கரோடே உட்காரேன். 6. கர்த்தாவே, நான் துதியின் சத்தத்தைத் தொனிக்கப்பண்ணி, உம்முடைய அதிசயங்களையெல்லாம் விவரிப்பதற்காக, 7. நான் குற்றமில்லாமையிலே என் கைகளைக் கழுவி, உம்முடைய பீடத்தைச் சுற்றிவருகிறேன். 8. கர்த்தாவே, உமது ஆலயமாகிய வாசஸ்தலத்தையும், உமது மகிமை தங்கிய ஸ்தானத்தையும் வாஞ்சிக்கிறேன். 9. என் ஆத்துமாவைப் பாவிகளோடும், என் ஜீவனை இரத்தப்பிரியரோடுங்கூட வாரிக்கொள்ளாதேயும். 10. அவர்கள் கைகளிலே தீவினையிருக்கிறது; அவர்கள் வலதுகை பரிதானங்களால் நிறைந்திருக்கிறது. 11. நானோ என் உத்தமத்திலே நடப்பேன்; என்னை மீட்டுக்கொண்டு என்மேல் இரக்கமாயிரும். 12. என் கால் செம்மையான இடத்திலே நிற்கிறது; சபைகளிலே நான் கர்த்தரைத் துதிப்பேன்.
Chapter 27
1. கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன்? கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர், யாருக்கு அஞ்சுவேன்? 2. என் சத்துருக்களும் என் பகைஞருமாகிய பொல்லாதவர்கள் என் மாம்சத்தைப் பட்சிக்க, என்னை நெருக்குகையில் அவர்களே இடறிவிழுந்தார்கள். 3. எனக்கு விரோதமாக ஒரு பாளயமிறங்கினாலும், என் இருதயம் பயப்படாது; என்மேல் யுத்தம் எழும்பினாலும், இதிலே நான் நம்பிக்கையாயிருப்பேன். 4. கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்டேன், அதையே நாடுவேன்; நான் கர்த்தருடைய மகிமையைப் பார்க்கும்படியாகவும், அவருடைய ஆலயத்தில் ஆராய்ச்சிசெய்யும்படியாகவும், நான் என் ஜீவனுள்ள நாளெல்லாம் கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன். 5. தீங்குநாளில் அவர் என்னைத் தம்முடைய கூடாரத்தில் மறைத்து, என்னைத் தமது கூடார மறைவிலே ஒளித்துவைத்து, என்னைக் கன்மலையின்மேல் உயர்த்துவார். 6. இப்பொழுது என் தலை என்னைச் சுற்றிலும் இருக்கிற என் சத்துருக்களுக்கு மேலாக உயர்த்தப்படும்; அதினிமித்தம் அவருடைய கூடாரத்திலே நான் ஆனந்த பலிகளையிட்டு, கர்த்தரைப் பாடி, அவரைக் கீர்த்தனம்பண்ணுவேன். 7. கர்த்தாவே, நான் கூப்பிடுகிற சத்தத்தை நீர் கேட்டு, எனக்கு இரங்கி, எனக்கு உத்தரவு அருளிச்செய்யும். 8. என் முகத்தைத் தேடுங்கள் என்று சொன்னீரே, உம்முடைய முகத்தையே தேடுவேன் கர்த்தாவே, என்று என் இருதயம் உம்மிடத்தில் சொல்லிற்று. 9. உமது முகத்தை எனக்கு மறையாதேயும்; நீர் கோபத்துடன் உமது அடியேனை விலக்கிப்போடாதேயும்; நீரே எனக்குச் சகாயர்; என் இரட்சிப்பின் தேவனே, என்னை நெகிழவிடாமலும் என்னைக் கைவிடாமலும் இரும். 10. என் தகப்பனும் என் தாயும் என்னைக் கைவிட்டாலும், கர்த்தர் என்னைச் சேர்த்துக்கொள்ளுவார். 11. கர்த்தாவே, உமது வழியை எனக்குப் போதித்து, என் எதிராளிகளினிமித்தம் செவ்வையான பாதையில் என்னை நடத்தும். 12. என் சத்துருக்களின் இஷ்டத்துக்கு என்னை ஒப்புக்கொடாதேயும்; பொய்ச்சாட்சிகளும் ஆக்கிரமித்துச் சீறுகிறவர்களும் எனக்கு விரோதமாய் எழும்பியிருக்கிறார்கள். 13. நானோ, ஜீவனுள்ளோர் தேசத்திலே கர்த்தருடைய நன்மையைக் காண்பேன் என்று விசுவாசியாதிருந்தால் கெட்டுப்போயிருப்பேன். 14. கர்த்தருக்குக் காத்திரு; அவர் உன் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்; திடமனதாயிருந்து, கர்த்தருக்கே காத்திரு.
Chapter 28
1. என் கன்மலையாகிய கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; நீர் கேளாதவர்போல மவுனமாயிராதேயும்; நீர் மவுனமாயிருந்தால் நான் குழியில் இறங்குகிறவர்களுக்கு ஒப்பாவேன். 2. நான் உம்மை நோக்கிச் சத்தமிட்டு, உம்முடைய பரிசுத்த சந்நிதிக்கு நேராகக் கையெடுக்கையில், என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டருளும். 3. அயலானுக்குச் சமாதான வாழ்த்துதலைச் சொல்லியும், தங்கள் இருதயங்களில் பொல்லாப்பை வைத்திருக்கிற துன்மார்க்கரோடும் அக்கிரமக்காரரோடும் என்னை வாரிக்கொள்ளாதேயும். 4. அவர்களுடைய கிரியைகளுக்கும் அவர்களுடைய நடத்தைகளின் பொல்லாங்குக்கும் தக்கதாக அவர்களுக்குச் செய்யும்; அவர்கள் கைகளின் செய்கைக்குத்தக்கதாக அவர்களுக்கு அளியும், அவர்களுக்குச் சரிக்குச் சரிக்கட்டும். 5. அவர்கள் கர்த்தருடைய செய்கைகளையும் அவர் கரத்தின் கிரியைகளையும் கவனியாதபடியால், அவர்களை இடித்துப்போடுவார், அவர்களைக் கட்டமாட்டார். 6. கர்த்தருக்கு ஸ்தோத்திரம்; அவர் என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டார். 7. கர்த்தர் என் பெலனும் என் கேடகமுமாயிருக்கிறார்; என் இருதயம் அவரை நம்பியிருந்தது; நான் சகாயம் பெற்றேன்; ஆகையால் என் இருதயம் களிகூருகிறது; என் பாட்டினால் அவரைத் துதிப்பேன். 8. கர்த்தர் அவர்களுடைய பெலன்; அவரே தாம் அபிஷேகம்பண்ணினவனுக்கு அரணான அடைக்கலமானவர். 9. தேவரீர் உமது ஜனத்தை இரட்சித்து, உமது சுதந்தரத்தை ஆசீர்வதியும்; அவர்களைப் போஷித்து, அவர்களை என்றென்றைக்கும் உயர்த்தியருளும்.
Chapter 29
1. பலவான்களின் புத்திரரே, கர்த்தருக்கு மகிமையையும் வல்லமையையும் செலுத்துங்கள்; கர்த்தருக்கே அதைச் செலுத்துங்கள். 2. கர்த்தருடைய நாமத்திற்குரிய மகிமையை அவருக்குச் செலுத்துங்கள்; பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள். 3. கர்த்தருடைய சத்தம் தண்ணீர்களின்மேல் தொனிக்கிறது; மகிமையுள்ள தேவன் முழங்குகிறார்; கர்த்தர் திரளான தண்ணீர்களின்மேல் இருக்கிறார். 4. கர்த்தருடைய சத்தம் வல்லமையுள்ளது; கர்த்தருடைய சத்தம் மகத்துவமுள்ளது. 5. கர்த்தருடைய சத்தம் கேதுருமரங்களை முறிக்கிறது; கர்த்தர் லீபனோனின் கேதுருமரங்களை முறிக்கிறார். 6. அவைகளைக் கன்றுக்குட்டிகளைப்போலவும், லீபனோனையும் சீரியோனையும் காண்டாமிருகக் குட்டிகளைப்போலவும் துள்ளப்பண்ணுகிறார். 7. கர்த்தருடைய சத்தம் அக்கினிஜுவாலைகளைப் பிளக்கும். 8. கர்த்தருடைய சத்தம் வனாந்தரத்தை அதிரப்பண்ணும்; கர்த்தர் காதேஸ் வனாந்தரத்தை அதிரப்பண்ணுகிறார். 9. கர்த்தருடைய சத்தம் பெண்மான்களை ஈனும்படி செய்து, காடுகளை வெளியாக்கும்; அவருடைய ஆலயத்திலுள்ள யாவரும் அவருடைய மகிமையைப் பிரஸ்தாபிக்கிறார்கள். 10. கர்த்தர் ஜலப்பிரவாகத்தின்மேல் உட்கார்ந்திருக்கிறார்; கர்த்தர் என்றென்றைக்கும் ராஜாவாக வீற்றிருக்கிறார். 11. கர்த்தர் தமது ஜனத்திற்குப் பெலன்கொடுப்பார்; கர்த்தர் தமது ஜனத்திற்குச் சமாதானம் அருளி, அவர்களை ஆசீர்வதிப்பார்.
Chapter 30
1. கர்த்தாவே, என் சத்துருக்கள் என்னை மேற்கொண்டு மகிழவொட்டாமல், நீர் என்னைக் கைதூக்கி எடுத்தபடியினால், நான் உம்மைப் போற்றுவேன். 2. என் தேவனாகிய கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிட்டேன், என்னை நீர் குணமாக்கினீர். 3. கர்த்தாவே, நீர் என் ஆத்துமாவைப் பாதாளத்திலிருந்து ஏறப்பண்ணி, நான் குழியில் இறங்காதபடி என்னை உயிரோடே காத்தீர். 4. கர்த்தருடைய பரிசுத்தவான்களே, அவரைக் கீர்த்தனம்பண்ணி, அவருடைய பரிசுத்தத்தின் நினைவுகூருதலைக் கொண்டாடுங்கள். 5. அவருடைய கோபம் ஒரு நிமிஷம், அவருடைய தயவோ நீடிய வாழ்வு; சாயங்காலத்தில் அழுகை தங்கும், விடியற்காலத்திலே களிப்புண்டாகும். 6. நான் ஒருக்காலும் அசைக்கப்படுவதில்லையென்று, என் வாழ்விலே சொன்னேன். 7. கர்த்தாவே, உம்முடைய தயவினால் நீர் என் பர்வதத்தைத் திடமாய் நிற்கப்பண்ணியிருந்தீர்; உமது முகத்தை நீர் மறைத்துக்கொண்டபோதோ நான் கலங்கினவனானேன். 8. நான் குழியில் இறங்குகையில் என் இரத்தத்தால் என்ன லாபமுண்டு? புழுதி உம்மைத் துதித்து, உமது சத்தியத்தை அறிவிக்குமோ? 9. கர்த்தாவே, நீர் எனக்குச் செவிகொடுத்து என்மேல் இரக்கமாயிரும்; கர்த்தாவே, நீர் எனக்குச் சகாயராயிரும் என்று சொல்லி; 10. கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிட்டேன்; கர்த்தரை நோக்கிக் கெஞ்சினேன். 11. என் புலம்பலை ஆனந்தக் களிப்பாக மாறப்பண்ணினீர்; என் மகிமை அமர்ந்திராமல் உம்மைக் கீர்த்தனம்பண்ணும்படியாக நீர் என் இரட்டைக் களைந்துபோட்டு, மகிழ்ச்சியென்னும் கட்டினால் என்னை இடைகட்டினீர். 12. என் தேவனாகிய கர்த்தாவே, உம்மை என்றென்றைக்கும் துதிப்பேன்.
Chapter 31
1. கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிறேன்; நான் ஒருக்காலும் வெட்கமடையாதபடி செய்யும்; உமது நீதியினிமித்தம் என்னை விடுவியும். 2. உமது செவியை எனக்குச் சாய்த்து, சீக்கிரமாய் என்னைத் தப்புவியும்; நீர் எனக்குப் பலத்த துருகமும், எனக்கு அடைக்கலமான அரணுமாயிரும். 3. என் கன்மலையும் என் கோட்டையும் நீரே; உமது நாமத்தினிமித்தம் எனக்கு வழிகாட்டி, என்னை நடத்தியருளும். 4. அவர்கள் எனக்கு மறைவாய் வைத்த வலைக்கு என்னை நீங்கலாக்கிவிடும்; தேவரீரே எனக்கு அரண். 5. உமது கையில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்; சத்தியபரனாகிய கர்த்தாவே, நீர் என்னை மீட்டுக்கொண்டீர். 6. வீண்மாயைகளைப் பற்றிக்கொள்ளுகிறவர்களை நான் வெறுத்து, கர்த்தரையே நம்பியிருக்கிறேன். 7. உமது கிருபையிலே களிகூர்ந்து மகிழுவேன்; நீர் என் உபத்திரவத்தைப் பார்த்து, என் ஆத்துமவியாகுலங்களை அறிந்திருக்கிறீர். 8. சத்துருவின் கையில் என்னை ஒப்புக்கொடாமல், என் பாதங்களை விசாலத்திலே நிறுத்தினீர். 9. எனக்கு இரங்கும் கர்த்தாவே, நான் நெருக்கப்படுகிறேன்; துக்கத்தினால் என் கண்ணும் என் ஆத்துமாவும் என் வயிறுங்கூடக் கருகிப்போயிற்று. 10. என் பிராணன் சஞ்சலத்தினாலும், என் வருஷங்கள் தவிப்பினாலும் கழிந்து போயிற்று; என் அக்கிரமத்தினாலே என் பெலன் குறைந்து, என் எலும்புகள் உலர்ந்துபோயிற்று. 11. என் சத்துருக்களாகிய யாவர் நிமித்தமும், நான் என் அயலாருக்கு நிந்தையும், எனக்கு அறிமுகமானவர்களுக்கு அருக்களிப்புமானேன்; வீதியிலே என்னைக் கண்டவர்கள் எனக்கு விலகி ஓடிப்போனார்கள். 12. செத்தவனைப்போல எல்லாராலும் முழுவதும் மறக்கப்பட்டேன்; உடைந்த பாத்திரத்தைப்போலானேன். 13. அநேகர் சொல்லும் அவதூறைக் கேட்டேன்; எனக்கு விரோதமாக அவர்கள் ஏகமாய் ஆலோசனைபண்ணுகிறதினால் திகில் என்னைச் சூழ்ந்துகொண்டது; என் பிராணனை வாங்கத் தேடுகிறார்கள். 14. நானோ, கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிறேன்; நீரே என் தேவன் என்று சொன்னேன். 15. என் காலங்கள் உமது கரத்திலிருக்கிறது; என் சத்துருக்களின் கைக்கும் என்னைத் துன்பப்படுத்துகிறவர்களின் கைக்கும் என்னைத் தப்புவியும். 16. நீர் உமது முகத்தை உமது ஊழியக்காரன்மேல் பிரகாசிக்கப்பண்ணி, உமது கிருபையினாலே என்னை இரட்சியும். 17. கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிட்டேன்; நான் வெட்கப்பட்டுப் போகாதபடி செய்யும்; துன்மார்க்கர் வெட்கப்பட்டுப் பாதாளத்தில் மவுனமாயிருக்கட்டும். 18. நீதிமானுக்கு விரோதமாய்ப் பெருமையோடும் இகழ்ச்சியோடும் கடினமாய்ப் பேசுகிற பொய் உதடுகள் கட்டப்பட்டுப்போவதாக. 19. உமக்குப் பயந்தவர்களுக்கும், மனுபுத்திரருக்கு முன்பாக உம்மை நம்புகிறவர்களுக்கும், நீர் உண்டு பண்ணிவைத்திருக்கிற உம்முடைய நன்மை எவ்வளவு பெரிதாயிருக்கிறது! 20. மனுஷருடைய அகங்காரத்துக்கு அவர்களை உமது சமுகத்தின் மறைவிலே மறைத்து, நாவுகளின் சண்டைக்கு அவர்களை விலக்கி, உமது கூடாரத்திலே ஒளித்துவைத்துக் காப்பாற்றுகிறீர். 21. கர்த்தர் அரணான நகரத்தில் எனக்குத் தமது கிருபையை அதிசயமாய் விளங்கப்பண்ணினபடியால், அவருக்கு ஸ்தோத்திரம். 22. உம்முடைய கண்களுக்கு முன்பாக இராதபடிக்கு வெட்டுண்டேன் என்று நான் என் மனக்கலக்கத்திலே சொன்னேன்; ஆனாலும் நான் உம்மை நோக்கிக் கூப்பிட்டபோது, என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டீர். 23. கர்த்தருடைய பரிசுத்தவான்களே, நீங்களெல்லாரும் அவரில் அன்புகூருங்கள்; உண்மையானவனைக் கர்த்தர் தற்காத்து, இடும்புசெய்கிறவனுக்குப் பூரணமாய்ப் பதிலளிப்பார். 24. கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களே, நீங்களெல்லாரும் திடமனதாயிருங்கள், அவர் உங்கள் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்.
Chapter 32
1. எவனுடைய மீறுதல் மன்னிக்கப்பட்டதோ, எவனுடைய பாவம் மூடப்பட்டதோ, அவன் பாக்கியவான். 2. எவனுடைய அக்கிரமத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, எவனுடைய ஆவியில் கபடமில்லாதிருக்கிறதோ, அவன் பாக்கியவான். 3. நான் அடக்கிவைத்தமட்டும், நித்தம் என் கதறுதலினாலே என் எலும்புகள் உலர்ந்துபோயிற்று. 4. இரவும் பகலும் என்மேல் உம்முடைய கை பாரமாயிருந்ததினால், என் சாரம் உஷ்ணகால வறட்சிபோல வறண்டுபோயிற்று. (சேலா.) 5. நான் என் அக்கிரமத்தை மறைக்காமல், என் பாவத்தை உமக்கு அறிவித்தேன்; என் மீறுதல்களைக் கர்த்தருக்கு அறிக்கையிடுவேன் என்றேன்; தேவரீர் என் பாவத்தின் தோஷத்தை மன்னித்தீர். (சேலா.) 6. இதற்காகச் சகாயங்கிடைக்குங் காலத்தில் பக்தியுள்ளவனெவனும் உம்மை நோக்கி விண்ணப்பஞ்செய்வான்; அப்பொழுது மிகுந்த ஜலப்பிரவாகம் வந்தாலும் அது அவனை அணுகாது. 7. நீர் எனக்கு மறைவிடமாயிருக்கிறீர்; என்னை நீர் இக்கட்டுக்கு விலக்கிக்காத்து, இரட்சணியப் பாடல்கள் என்னைச் சூழ்ந்துகொள்ளும்படி செய்வீர். (சேலா.) 8. நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன். 9. வாரினாலும் கடிவாளத்தினாலும் வாய்கட்டப்பட்டாலொழிய, உன் கிட்டச் சேராத புத்தியில்லாக் குதிரையைப்போலவும் கோவேறு கழுதையைப்போலவும் இருக்கவேண்டாம். 10. துன்மார்க்கனுக்கு அநேக வேதனைகளுண்டு; கர்த்தரை நம்பியிருக்கிறவனையோ கிருபை சூழ்ந்துகொள்ளும். 11. நீதிமான்களே, கர்த்தருக்குள் மகிழ்ந்து களிகூருங்கள்; செம்மையான இருதயமுள்ளவர்களே, நீங்கள் எல்லாரும் ஆனந்தமுழக்கமிடுங்கள்.
Chapter 33
1. நீதிமான்களே, கர்த்தருக்குள் களிகூருங்கள்; துதிசெய்வது செம்மையானவர்களுக்குத் தகும். 2. சுரமண்டலத்தினால் கர்த்தரைத் துதித்து, பத்து நரம்பு வீணையினாலும் அவரைக் கீர்த்தனம்பண்ணுங்கள். 3. அவருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; ஆனந்தசத்தத்தோடே வாத்தியங்களை நேர்த்தியாய் வாசியுங்கள். 4. கர்த்தருடைய வார்த்தை உத்தமமும், அவருடைய செய்கையெல்லாம் சத்தியமுமாயிருக்கிறது. 5. அவர் நீதியிலும் நியாயத்திலும் பிரியப்படுகிறார்; பூமி கர்த்தருடைய காருணியத்தினால் நிறைந்திருக்கிறது. 6. கர்த்தருடைய வார்த்தையினால் வானங்களும், அவருடைய வாயின் சுவாசத்தினால் அவைகளின் சர்வசேனையும் உண்டாக்கப்பட்டது. 7. அவர் சமுத்திர ஜலங்களைக் குவியலாகச் சேர்த்து, ஆழமான ஜலங்களைப் பொக்கிஷவைப்பாக வைக்கிறார். 8. பூமியெல்லாம் கர்த்தருக்குப் பயப்படுவதாக; உலகத்திலுள்ள குடிகளெல்லாம் அவருக்கு அஞ்சியிருப்பதாக. 9. அவர் சொல்ல ஆகும், அவர் கட்டளையிட நிற்கும். 10. கர்த்தர் ஜாதிகளின் ஆலோசனையை விருதாவாக்கி, ஜனங்களுடைய நினைவுகளை அவமாக்குகிறார். 11. கர்த்தருடைய ஆலோசனை நித்தியகாலமாகவும், அவருடைய இருதயத்தின் நினைவுகள் தலைமுறை தலைமுறையாகவும் நிற்கும். 12. கர்த்தரைத் தங்களுக்குத் தெய்வமாகக்கொண்ட ஜாதியும், அவர் தமக்குச் சுதந்தரமாகத் தெரிந்துகொண்ட ஜனமும் பாக்கியமுள்ளது. 13. கர்த்தர் வானத்திலிருந்து நோக்கிப்பார்த்து, எல்லா மனுபுத்திரரையும் காண்கிறார். 14. தாம் வாசமாயிருக்கிற ஸ்தானத்திலிருந்து பூமியின் குடிகள் எல்லார்மேலும் கண்ணோக்கமாயிருக்கிறார். 15. அவர்களுடைய இருதயங்களையெல்லாம் அவர் உருவாக்கி, அவர்கள் செய்கைகளையெல்லாம் கவனித்திருக்கிறார். 16. எந்த ராஜாவும் தன் சேனையின் மிகுதியால் இரட்சிக்கப்படான்; சவுரியவானும் தன் பலத்தின் மிகுதியால் தப்பான். 17. இரட்சிக்கிறதற்குக் குதிரை விருதா; அது தன் மிகுந்த வீரியத்தால் தப்புவியாது. 18. தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்களின் ஆத்துமாக்களை மரணத்திற்கு விலக்கி விடுவிக்கவும்; 19. பஞ்சத்தில் அவர்களை உயிரோடே காக்கவும், கர்த்தருடைய கண் அவர்கள்மேல் நோக்கமாயிருக்கிறது. 20. நம்முடைய ஆத்துமா கர்த்தருக்குக் காத்திருக்கிறது; அவரே நமக்குத் துணையும் நமக்குக் கேடகமுமானவர். 21. அவருடைய பரிசுத்த நாமத்தை நாம் நம்பியிருக்கிறபடியால், நம்முடைய இருதயம் அவருக்குள் களிகூரும். 22. கர்த்தாவே, நாங்கள் உம்மை நம்பியிருக்கிறபடியே உமது கிருபை எங்கள்மேல் இருப்பதாக.
Chapter 34
1. கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்திரிப்பேன்; அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும். 2. கர்த்தருக்குள் என் ஆத்துமா மேன்மைபாராட்டும்; சிறுமைப்பட்டவர்கள் அதைக்கேட்டு மகிழுவார்கள். 3. என்னோடேகூடக் கர்த்தரை மகிமைப்படுத்துங்கள்; நாம் ஒருமித்து அவர் நாமத்தை உயர்த்துவோமாக. 4. நான் கர்த்தரைத் தேடினேன், அவர் எனக்குச் செவிகொடுத்து, என்னுடைய எல்லாப் பயத்துக்கும் என்னை நீங்கலாக்கிவிட்டார். 5. அவர்கள் அவரை நோக்கிப்பார்த்துப் பிரகாசமடைந்தார்கள்; அவர்கள் முகங்கள் வெட்கப்படவில்லை. 6. இந்த ஏழை கூப்பிட்டான், கர்த்தர் கேட்டு, அவனை அவன் இடுக்கண்களுக்கெல்லாம் நீங்கலாக்கி இரட்சித்தார். 7. கர்த்தருடைய தூதன் அவருக்குப் பயந்தவர்களைச் சூழப் பாளயமிறங்கி அவர்களை விடுவிக்கிறார். 8. கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்; அவர்மேல் நம்பிக்கையாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். 9. கர்த்தருடைய பரிசுத்தவான்களே, அவருக்குப் பயந்திருங்கள்; அவருக்குப் பயந்தவர்களுக்குக் குறைவில்லை. 10. சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும்; கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங் குறைவுபடாது. 11. பிள்ளைகளே, வந்து எனக்குச் செவிகொடுங்கள்; கர்த்தருக்குப் பயப்படுதலை உங்களுக்குப் போதிப்பேன். 12. நன்மையைக் காணும்படி, ஜீவனை விரும்பி, நீடித்த நாட்களை அபேட்சிக்கிற மனுஷன் யார்? 13. உன் நாவைப் பொல்லாப்புக்கும், உன் உதடுகளைக் கபட்டுவசனிப்புக்கும் விலக்கிக் காத்துக்கொள். 14. தீமையை விட்டு விலகி, நன்மைசெய்; சமாதானத்தைத் தேடி, அதைத் தொடர்ந்துகொள். 15. கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது; அவருடைய செவிகள் அவர்கள் கூப்பிடுதலுக்குத் திறந்திருக்கிறது. 16. தீமைசெய்கிறவர்களுடைய பேரைப் பூமியில் இராமல் அற்றுப்போகப்பண்ண, கர்த்தருடைய முகம் அவர்களுக்கு விரோதமாயிருக்கிறது. 17. நீதிமான்கள் கூப்பிடும்போது கர்த்தர் கேட்டு, அவர்களை அவர்களுடைய எல்லா உபத்திரவங்களுக்கும் நீங்கலாக்கிவிடுகிறார். 18. நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்குக் கர்த்தர் சமீபமாயிருந்து, நருங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார். 19. நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும், கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார். 20. அவனுடைய எலும்புகளையெல்லாம் காப்பாற்றுகிறார்; அவைகளில் ஒன்றும் முறிக்கப்படுவதில்லை. 21. தீமை துன்மார்க்கனைக் கொல்லும்; நீதிமானைப் பகைக்கிறவர்கள் குற்றவாளிகளாவார்கள். 22. கர்த்தர் தமது ஊழியக்காரரின் ஆத்துமாவை மீட்டுக்கொள்ளுகிறார்; அவரை நம்புகிற ஒருவன்மேலும் குற்றஞ்சுமராது.
Chapter 35
1. கர்த்தாவே, நீர் என் வழக்காளிகளோடே வழக்காடி, என்னோடு யுத்தம்பண்ணுகிறவர்களோடே யுத்தம்பண்ணும். 2. நீர் கேடகத்தையும் பரிசையையும் பிடித்து, எனக்கு ஒத்தாசையாக எழுந்துநில்லும். 3. என்னைத் துன்பப்படுத்துகிறவர்களோடு எதிர்த்துநின்று, ஈட்டியையோங்கி அவர்களை மறித்து: நான் உன் இரட்சிப்பு என்று என் ஆத்துமாவுக்குச் சொல்லும். 4. என் பிராணனை வாங்கத்தேடுகிறவர்கள் வெட்கப்பட்டுக் கலங்குவார்களாக; எனக்குத் தீங்குசெய்ய நினைக்கிறவர்கள் நாணமடைவார்களாக. 5. அவர்கள் காற்றுமுகத்தில் பறக்கும் பதரைப்போலாவார்களாக; கர்த்தருடைய தூதன் அவர்களைத் துரத்துவானாக. 6. அவர்களுடைய வழி இருளும் சறுக்கலுமாயிருப்பதாக; கர்த்தருடைய தூதன் அவர்களைப் பின்தொடருவானாக. 7. முகாந்தரமில்லாமல் எனக்காகத் தங்கள் வலையைக் குழியில் ஒளித்துவைத்தார்கள்; முகாந்தரமில்லாமல் என் ஆத்துமாவுக்குப் படுகுழி வெட்டினார்கள். 8. அவன் நினையாத அழிவு அவனுக்கு வரவும், அவன் மறைவாய் வைத்த வலை அவனையே பிடிக்கவுங்கடவது; அவனே அந்தக் குழியில் விழுந்து அழிவானாக. 9. என் ஆத்துமா கர்த்தரில் களிகூர்ந்து, அவருடைய இரட்சிப்பில் மகிழ்ந்திருக்கும். 10. சிறுமைப்பட்டவனை அவனிலும் பலவானுடைய கைக்கும், சிறுமையும் எளிமையுமானவனைக் கொள்ளையிடுகிறவனுடைய கைக்கும் தப்புவிக்கிற உமக்கொப்பானவர் யார் கர்த்தாவே, என்று என் எலும்புகளெல்லாம் சொல்லும். 11. கொடுமையான சாட்சிகள் எழும்பி, நான் அறியாததை என்னிடத்தில் கேட்கிறார்கள். 12. நான் செய்த நன்மைக்குப் பதிலாகத் தீமைசெய்கிறார்கள்; என் ஆத்துமா திக்கற்றுப்போகப் பார்க்கிறார்கள். 13. அவர்கள் வியாதியாயிருந்தபோது இரட்டு என் உடுப்பாயிருந்தது; நான் உபவாசத்தால் என் ஆத்துமாவை உபத்திரப்படுத்தினேன்; என் ஜெபமும் என் மடியிலே திரும்பவந்தது. 14. நான் அவனை என் சிநேகிதனாகவும் சகோதரனாகவும் பாவித்து நடந்துகொண்டேன்; தாய்க்காகத் துக்கிக்கிறவனைப்போல் துக்கவஸ்திரம் தரித்துத் தலைகவிழ்ந்து நடந்தேன். 15. ஆனாலும் எனக்கு ஆபத்துண்டானபோது அவர்கள் சந்தோஷப்பட்டுக் கூட்டங்கூடினார்கள்; நீசரும் நான் அறியாதவர்களும் எனக்கு விரோதமாய்க் கூட்டங்கூடி, ஓயாமல் என்னை நிந்தித்தார்கள். 16. அப்பத்திற்காக இச்சகம்பேசுகிற பரியாசக்காரரோடே சேர்ந்துகொண்டு என்பேரில் பற்கடிக்கிறார்கள். 17. ஆண்டவரே, எதுவரைக்கும் இதைப் பார்த்துக்கொண்டிருப்பீர்? என் ஆத்துமாவை அழிவுக்கும், எனக்கு அருமையானதைச் சிங்கக்குட்டிகளுக்கும் தப்புவியும். 18. மகா சபையிலே உம்மைத் துதிப்பேன்; திரளான ஜனங்களுக்குள்ளே உம்மைப் புகழுவேன். 19. வீணாய் எனக்குச் சத்துருக்களானவர்கள் என்னிமித்தம் சந்தோஷியாமலும், முகாந்தரமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் கண் சிமிட்டாமலும் இருப்பார்களாக. 20. அவர்கள் சமாதானமாய்ப் பேசாமல், தேசத்திலே அமைதலாயிருக்கிறவர்களுக்கு விரோதமாய் வஞ்சகமான காரியங்களைக் கருதுகிறார்கள். 21. எனக்கு விரோதமாகத் தங்கள் வாயை விரிவாய்த் திறந்து, ஆ ஆ, ஆ ஆ, எங்கள் கண் கண்டது என்கிறார்கள். 22. கர்த்தாவே, நீர் இதைக் கண்டீர், மவுனமாயிராதேயும்; ஆண்டவரே, எனக்குத் தூரமாகாதேயும். 23. என் தேவனே, என் ஆண்டவரே, எனக்கு நியாயஞ்செய்யவும் என் வழக்கைத் தீர்க்கவும் விழித்துக்கொண்டு எழுந்தருளும். 24. என் தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய நீதியின்படி என்னை நியாயம் விசாரியும், என்னைக்குறித்து அவர்களை மகிழவொட்டாதிரும். 25. அவர்கள் தங்கள் இருதயத்திலே: ஆ ஆ, இதுவே நாங்கள் விரும்பினது என்று சொல்லாதபடிக்கும், அவனை விழுங்கிவிட்டோம் என்று பேசாதபடிக்கும் செய்யும். 26. எனக்கு நேரிட்ட ஆபத்துக்காகச் சந்தோஷிக்கிறவர்கள் ஏகமாய் வெட்கி நாணி, எனக்கு விரோதமாய்ப் பெருமைபாராட்டுகிறவர்கள் வெட்கத்தாலும் இலச்சையாலும் மூடப்படக்கடவர்கள். 27. என் நீதிவிளங்க விரும்புகிறவர்கள் கெம்பீரித்து மகிழ்ந்து, தமது ஊழியக்காரனுடைய சுகத்தை விரும்புகிற கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக என்று எப்போதும் சொல்லக்கடவர்கள். 28. என் நாவு உமது நீதியையும், நாள்முழுதும் உமது துதியையும் சொல்லிக்கொண்டிருக்கும்.
Chapter 36
1. துன்மார்க்கனுடைய துரோகப்பேச்சு என் உள்ளத்திற்குத் தெரியும்; அவன் கண்களுக்குமுன் தெய்வபயம் இல்லை. 2. அவன், தன் அக்கிரமம் அருவருப்பானதென்று காணப்படுமளவும், தன் பார்வைக்கேற்றபடி தனக்குத்தானே இச்சகம் பேசுகிறான். 3. அவன் வாயின் வார்த்தைகள் அக்கிரமமும் வஞ்சகமுமுள்ளது; புத்தியாய் நடந்துகொள்வதையும் நன்மைசெய்வதையும் விட்டுவிட்டான். 4. அவன் தன் படுக்கையின்மேல் அக்கிரமத்தை யோசித்து, நல்லதல்லாத வழியிலே நிலைத்து, பொல்லாப்பை வெறுக்காதிருக்கிறான். 5. கர்த்தாவே, உமது கிருபை வானங்களில் விளங்குகிறது; உமது சத்தியம் மேகமண்டலங்கள் பரியந்தம் எட்டுகிறது. 6. உமது நீதி மகத்தான பர்வதங்கள்போலவும், உமது நியாயங்கள் மகா ஆழமாகவும் இருக்கிறது; கர்த்தாவே, மனுஷரையும் மிருகங்களையும் காப்பாற்றுகிறீர். 7. தேவனே, உம்முடைய கிருபை எவ்வளவு அருமையானது! அதினால் மனுபுத்திரர் உமது செட்டைகளின் நிழலிலே வந்தடைகிறார்கள். 8. உமது ஆலயத்திலுள்ள சம்பூரணத்தினால் திருப்தியடைவார்கள்; உமது பேரின்ப நதியினால் அவர்கள் தாகத்தைத் தீர்க்கிறீர். 9. ஜீவஊற்று உம்மிடத்தில் இருக்கிறது; உம்முடைய வெளிச்சத்திலே வெளிச்சம் காண்கிறோம். 10. உம்மை அறிந்தவர்கள்மேல் உமது கிருபையையும், செம்மையான இருதயமுள்ளவர்கள்மேல் உமது நீதியையும் பாராட்டியருளும். 11. பெருமைக்காரரின் கால் என்மேல் வராமலும், துன்மார்க்கருடைய கை என்னைப் பறக்கடியாமலும் இருப்பதாக. 12. அதோ அக்கிரமக்காரர் விழுந்தார்கள்; எழுந்திருக்கமாட்டாமல் தள்ளுண்டுபோனார்கள்.
Chapter 37
1. பொல்லாதவர்களைக்குறித்து எரிச்சலடையாதே; நியாயக்கேடுசெய்கிறவர்கள்மேல் பொறாமைகொள்ளாதே. 2. அவர்கள் புல்லைப்போல் சீக்கிரமாய் அறுப்புண்டு, பசும்பூண்டைப்போல் வாடிப்போவார்கள். 3. கர்த்தரை நம்பி நன்மைசெய்; தேசத்தில் குடியிருந்து சத்தியத்தை மேய்ந்துகொள். 4. கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார். 5. உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார். 6. உன் நீதியை வெளிச்சத்தைப்போலவும், உன் நியாயத்தைப் பட்டப்பகலைப்போலவும் விளங்கப்பண்ணுவார். 7. கர்த்தரை நோக்கி அமர்ந்து, அவருக்குக் காத்திரு; காரியசித்தியுள்ளவன்மேலும் தீவினைகளைச் செய்கிற மனுஷன்மேலும் எரிச்சலாகாதே. 8. கோபத்தை நெகிழ்ந்து, உக்கிரத்தை விட்டுவிடு; பொல்லாப்புச்செய்ய ஏதுவான எரிச்சல் உனக்கு வேண்டாம். 9. பொல்லாதவர்கள் அறுப்புண்டுபோவார்கள்; கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ பூமியைச் சுதந்தரித்துக்கொள்வார்கள். 10. இன்னுங் கொஞ்சநேரந்தான், அப்போது துன்மார்க்கன் இரான்; அவன் ஸ்தானத்தை உற்று விசாரித்தாயானால் அவன் இல்லை. 11. சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள். 12. துன்மார்க்கன் நீதிமானுக்கு விரோதமாய்த் தீங்கு நினைத்து, அவன்பேரில் பற்கடிக்கிறான். 13. ஆண்டவர் அவனைப்பார்த்து நகைக்கிறார்; அவனுடைய நாள் வருகிறதென்று காண்கிறார். 14. சிறுமையும் எளிமையுமானவனை மடிவிக்கவும், செம்மை மார்க்கத்தாரை விழப்பண்ணவும், துன்மார்க்கர் பட்டயத்தை உருவி, தங்கள் வில்லை நாணேற்றுகிறார்கள். 15. ஆனாலும் அவர்கள் பட்டயம் அவர்களுடைய இருதயத்திற்குள் உருவிப்போம்; அவர்கள் வில்லுகள் முறியும். 16. அநேக துன்மார்க்கருக்குள்ள செல்வத்திரட்சியைப்பார்க்கிலும், நீதிமானுக்குள்ள கொஞ்சமே நல்லது. 17. துன்மார்க்கருடைய புயங்கள் முறியும்; நீதிமான்களையோ கர்த்தர் தாங்குகிறார். 18. உத்தமர்களின் நாட்களைக் கர்த்தர் அறிந்திருக்கிறார்; அவர்கள் சுதந்தரம் என்றென்றைக்கும் இருக்கும். 19. அவர்கள் ஆபத்துக்காலத்திலே வெட்கப்பட்டுப்போகாதிருந்து, பஞ்சகாலத்திலே திருப்தியடைவார்கள். 20. துன்மார்க்கரோ அழிந்துபோவார்கள், கர்த்தருடைய சத்துருக்கள் ஆட்டுக்குட்டிகளின் நிணத்தைப்போல் புகைந்துபோவார்கள், அவர்கள் புகையாய்ப் புகைந்துபோவார்கள். 21. துன்மார்க்கன் கடன்வாங்கிச் செலுத்தாமற்போகிறான்; நீதிமானோ இரங்கிக்கொடுக்கிறான். 22. அவரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்; அவரால் சபிக்கப்பட்டவர்களோ அறுப்புண்டுபோவார்கள். 23. நல்ல மனுஷனுடைய நடைகள் கர்த்தரால் உறுதிப்படும், அவனுடைய வழியின்மேல் அவர் பிரியமாயிருக்கிறார். 24. அவன் விழுந்தாலும் தள்ளுண்டு போவதில்லை; கர்த்தர் தமது கையினால் அவனைத் தாங்குகிறார். 25. நான் இளைஞனாயிருந்தேன், முதிர்வயதுள்ளவனுமானேன்; ஆனாலும் நீதிமான் கைவிடப்பட்டதையும், அவன் சந்ததி அப்பத்துக்கு இரந்துதிரிகிறதையும் நான் காணவில்லை. 26. அவன் நித்தம் இரங்கிக் கடன் கொடுக்கிறான், அவன் சந்ததி ஆசீர்வதிக்கப்படும். 27. தீமையை விட்டு விலகி, நன்மைசெய்; என்றென்றைக்கும் நிலைத்திருப்பாய். 28. கர்த்தர் நியாயத்தை விரும்புகிறவர்; அவர் தமது பரிசுத்தவான்களைக் கைவிடுவதில்லை; அவர்கள் என்றைக்கும் காக்கப்படுவார்கள்; துன்மார்க்கருடைய சந்ததியோ அறுப்புண்டுபோம். 29. நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள். 30. நீதிமானுடைய வாய் ஞானத்தை உரைத்து, அவனுடைய நாவு நியாயத்தைப் பேசும். 31. அவனுடைய தேவன் அருளிய வேதம் அவன் இருதயத்தில் இருக்கிறது; அவன் நடைகளில் ஒன்றும் பிசகுவதில்லை. 32. துன்மார்க்கன் நீதிமான்மேல் கண்வைத்து, அவனைக் கொல்ல வகைதேடுகிறான். 33. கர்த்தரோ அவனை இவன் கையில் விடுவதில்லை; அவன் நியாயம் விசாரிக்கப்படுகையில், அவனை ஆக்கினைக்குள்ளாகத் தீர்ப்பதுமில்லை. 34. நீ கர்த்தருக்குக் காத்திருந்து, அவருடைய வழியைக் கைக்கொள்; அப்பொழுது நீ பூமியைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு அவர் உன்னை உயர்த்துவார்; துன்மார்க்கர் அறுப்புண்டுபோவதை நீ காண்பாய். 35. கொடிய பலவந்தனான ஒரு துன்மார்க்கனைக் கண்டேன், அவன் தனக்கேற்ற நிலத்தில் முளைத்திருக்கிற பச்சைமரத்தைப்போல் தழைத்தவனாயிருந்தான். 36. ஆனாலும் அவன் ஒழிந்துபோனான்; பாருங்கள், அவன் இல்லை; அவனைத் தேடினேன், அவன் காணப்படவில்லை. 37. நீ உத்தமனை நோக்கி, செம்மையானவனைப் பார்த்திரு; அந்த மனுஷனுடைய முடிவு சமாதானம். 38. அக்கிரமக்காரர் ஏகமாய் அழிக்கப்படுவார்கள்; அறுப்புண்டுபோவதே துன்மார்க்கரின் முடிவு. 39. நீதிமான்களுடைய இரட்சிப்பு கர்த்தரால் வரும்; இக்கட்டுக்காலத்தில் அவரே அவர்கள் அடைக்கலம். 40. கர்த்தர் அவர்களுக்கு உதவிசெய்து, அவர்களை விடுவிப்பார்; அவர்கள் அவரை நம்பியிருக்கிறபடியால், அவர்களைத் துன்மார்க்கருடைய கைக்குத் தப்புவித்து இரட்சிப்பார்.
Chapter 38
1. கர்த்தாவே, உம்முடைய கோபத்தில் என்னைக் கடிந்துகொள்ளாதேயும்; உம்முடைய உக்கிரத்தில் என்னைத் தண்டியாதேயும். 2. உம்முடைய அம்புகள் எனக்குள்ளே தைத்திருக்கிறது; உமது கை என்னை இருத்துகிறது. 3. உமது கோபத்தினால் என் மாம்சத்தில் ஆரோக்கியமில்லை; என் பாவத்தினால் என் எலும்புகளில் சவுக்கியமில்லை. 4. என் அக்கிரமங்கள் என் தலைக்கு மேலாகப் பெருகிற்று, அவைகள் பாரச்சுமையைப்போல என்னால் தாங்கக்கூடாத பாரமாயிற்று. 5. என் மதிகேட்டினிமித்தம் என் புண்கள் அழுகி நாற்றமெடுத்தது. 6. நான் வேதனைப்பட்டு ஒடுங்கினேன்; நாள்முழுதும் துக்கப்பட்டுத் திரிகிறேன். 7. என் குடல்கள் எரிபந்தமாய் எரிகிறது; என் மாம்சத்தில் ஆரோக்கியம் இல்லை. 8. நான் பெலனற்றுப்போய், மிகவும் நொறுக்கப்பட்டேன்; என் இருதயத்தின் கொந்தளிப்பினால் கதறுகிறேன். 9. ஆண்டவரே, என் ஏங்கலெல்லாம் உமக்கு முன்பாக இருக்கிறது; என் தவிப்பு உமக்கு மறைவாயிருக்கவில்லை. 10. என் உள்ளம் குழம்பி அலைகிறது; என் பெலன் என்னை விட்டு விலகி, என் கண்களின் ஒளி முதலாய் இல்லாமற்போயிற்று. 11. என் சிநேகிதரும் என் தோழரும் என் வாதையைக் கண்டு விலகுகிறார்கள்; என் இனத்தாரும் தூரத்திலே நிற்கிறார்கள். 12. என் பிராணனை வாங்கத்தேடுகிறவர்கள் எனக்குக் கண்ணிகளை வைக்கிறார்கள்; எனக்குப் பொல்லாங்கு தேடுகிறவர்கள் கேடானவைகளைப் பேசி, நாள்முழுதும் வஞ்சனைகளை யோசிக்கிறார்கள். 13. நானோ செவிடனைப்போலக் கேளாதவனாகவும், ஊமையனைப்போல வாய்திறவாதவனாகவும் இருக்கிறேன். 14. காதுகேளாதவனும், தன் வாயில் மறுஉத்தரவுகள் இல்லாதவனுமாயிருக்கிற மனுஷனைப்போலானேன். 15. கர்த்தாவே, உமக்குக் காத்திருக்கிறேன்; என் தேவனாகிய ஆண்டவரே, நீர் மறுஉத்தரவு கொடுப்பீர். 16. அவர்கள் என்னிமித்தம் சந்தோஷப்படாதபடிக்கு இப்படிச் சொன்னேன்; என் கால் தவறும்போது என்மேல் பெருமைபாராட்டுவார்களே. 17. நான் தடுமாறி விழ ஏதுவாயிருக்கிறேன்; என் துக்கம் எப்பொழுதும் என் முன்பாக இருக்கிறது. 18. என் அக்கிரமத்தை நான் அறிக்கையிட்டு, என் பாவத்தினிமித்தம் விசாரப்படுகிறேன். 19. என் சத்துருக்கள் வாழ்ந்து பலத்திருக்கிறார்கள்; முகாந்தரமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் பெருகியிருக்கிறார்கள். 20. நான் நன்மையைப் பின்பற்றுகிறபடியால், நன்மைக்குத் தீமை செய்கிறவர்கள் என்னை விரோதிக்கிறார்கள். 21. கர்த்தாவே, என்னைக் கைவிடாதேயும்; என் தேவனே, எனக்குத் தூரமாயிராதேயும். 22. என் இரட்சிப்பாகிய ஆண்டவரே, எனக்குச் சகாயஞ்செய்யத் தீவிரியும்.
Chapter 39
1. என் நாவினால் பாவஞ்செய்யாதபடிக்கு நான் என் வழிகளைக் காத்து, துன்மார்க்கன் எனக்கு முன்பாக இருக்குமட்டும் என் வாயைக் கடிவாளத்தால் அடக்கிவைப்பேன் என்றேன். 2. நான் மவுனமாகி, ஊமையனாயிருந்தேன், நலமானதையும் பேசாமல் அமர்ந்திருந்தேன்; ஆனாலும் என் துக்கம் அதிகரித்தது; 3. என் இருதயம் எனக்குள்ளே அனல்கொண்டது; நான் தியானிக்கையில் அக்கினி மூண்டது; அப்பொழுது என் நாவினால் விண்ணப்பம் செய்தேன். 4. கர்த்தாவே, நான் எவ்வளவாய் நிலையற்றவன் என்று உணரும்படி என் முடிவையும், என் நாட்களின் அளவு இவ்வளவு என்பதையும் எனக்குத் தெரிவியும். 5. இதோ, என் நாட்களை நாலு விரற்கடையளவாக்கினீர்; என் ஆயுசு உமது பார்வைக்கு இல்லாததுபோலிருக்கிறது; எந்த மனுஷனும் மாயையே என்பது நிச்சயம். (சேலா.) 6. வேஷமாகவே மனுஷன் திரிகிறான்; விருதாவாகவே சஞ்சலப்படுகிறான்; ஆஸ்தியைச் சேர்க்கிறான், யார் அதை வாரிக்கொள்ளுவான் என்று அறியான். 7. இப்போதும் ஆண்டவரே, நான் எதற்கு எதிர்பார்த்திருக்கிறேன்? நீரே என் நம்பிக்கை. 8. என் மீறுதல்கள் எல்லாவற்றிலுமிருந்து என்னை விடுதலையாக்கும், மூடனுடைய நிந்தனைக்கு என்னை ஒப்புக்கொடாதேயும். 9. நீரே இதைச் செய்தீர் என்று நான் என் வாயைத் திறவாமல் மவுனமாயிருந்தேன். 10. என்னிலிருந்து உம்முடைய வாதையை எடுத்துப்போடும்; உமது கரத்தின் அடிகளால் நான் சோர்ந்துபோனேன். 11. அக்கிரமத்தினிமித்தம் நீர் மனுஷனைக் கடிந்துகொண்டு தண்டிக்கிறபோது, அவன் வடிவைப் பொட்டரிப்பைப்போல் அழியப்பண்ணுகிறீர்; நிச்சயமாக எந்த மனுஷனும் மாயையே. (சேலா.) 12. கர்த்தாவே, என் ஜெபத்தைக்கேட்டு, என் கூப்பிடுதலுக்குச் செவிகொடும்; என் கண்ணீருக்கு மவுனமாயிராதேயும்; என் பிதாக்களெல்லாரையும்போல நானும் உமக்கு முன்பாக அந்நியனும் பரதேசியுமாயிருக்கிறேன். 13. நான் இனி இராமற்போகுமுன்னே, தேறுதலடையும்படி என்னிடத்தில் பொறுமையாயிரும்.
Chapter 40
1. கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவர் என்னிடமாய்ச் சாய்ந்து, என் கூப்பிடுதலைக் கேட்டார். 2. பயங்கரமான குழியிலும் உளையான சேற்றிலுமிருந்து என்னைத் தூக்கியெடுத்து, என் கால்களைக் கன்மலையின்மேல் நிறுத்தி, என் அடிகளை உறுதிப்படுத்தி, 3. நமது தேவனைத் துதிக்கும் புதுப்பாட்டை அவர் என் வாயிலே கொடுத்தார்; அநேகர் அதைக் கண்டு, பயந்து, கர்த்தரை நம்புவார்கள். 4. அகங்காரிகளையும் பொய்யைச் சார்ந்திருக்கிறவர்களையும் நோக்காமல், கர்த்தரையே தன் நம்பிக்கையாக வைக்கிற மனுஷன் பாக்கியவான். 5. என் தேவனாகிய கர்த்தாவே, நீர் எங்கள் நிமித்தஞ்செய்த உம்முடைய அதிசயங்களும் உம்முடைய யோசனைகளும் அநேகமாயிருக்கிறது; ஒருவரும் அவைகளை உமக்கு விவரித்துச் சொல்லிமுடியாது; நான் அவைகளைச் சொல்லி அறிவிக்கவேண்டுமானால் அவைகள் எண்ணிக்கைக்கு மேலானவைகள். 6. பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பாமல், என் செவிகளைத் திறந்தீர்; சர்வாங்க தகனபலியையும் பாவநிவாரணபலியையும் நீர் கேட்கவில்லை. 7. அப்பொழுது நான்: இதோ, வருகிறேன், புஸ்தகச்சுருளில் என்னைக்குறித்து எழுதியிருக்கிறது; 8. என் தேவனே, உமக்குப் பிரியமானதைச் செய்ய விரும்புகிறேன்; உமது நியாயப்பிரமாணம் என் உள்ளத்திற்குள் இருக்கிறது என்று சொன்னேன். 9. மகா சபையிலே நீதியைப் பிரசங்கித்தேன்; என் உதடுகளை மூடேன், கர்த்தாவே, நீர் அதை அறிவீர். 10. உம்முடைய நீதியை நான் என் இருதயத்திற்குள் மறைத்துவைக்கவில்லை; உமது சத்தியத்தையும் உமது இரட்சிப்பையும் சொல்லியிருக்கிறேன்; உமது கிருபையையும் உமது உண்மையையும் மகா சபைக்கு அறிவியாதபடிக்கு நான் ஒளித்துவைக்கவில்லை. 11. கர்த்தாவே நீர் உம்முடைய இரக்கங்களை எனக்குக் கிடையாமற் போகப்பண்ணாதேயும்; உமது கிருபையும் உமது உண்மையும் எப்பொழுதும் என்னைக் காக்கக்கடவது. 12. எண்ணிக்கைக்கு அடங்காத தீமைகள் என்னைச் சூழ்ந்துகொண்டது, என் அக்கிரமங்கள் என்னைத் தொடர்ந்துபிடித்தது, நான் நிமிர்ந்து பார்க்கக்கூடாதிருக்கிறது, அவைகள் என் தலைமயிரிலும் அதிகமாயிருக்கிறது, என் இருதயம் சோர்ந்துபோகிறது. 13. கர்த்தாவே, என்னை விடுவித்தருளும்; கர்த்தாவே, எனக்குச் சகாயம்பண்ணத் தீவிரியும். 14. என் பிராணனை அழிக்கத் தேடுகிறவர்கள் ஏகமாய் வெட்கி நாணி, எனக்குத் தீங்குசெய்ய விரும்புகிறவர்கள் பின்னிட்டு இலச்சையடைவார்களாக. 15. என்பேரில் ஆ ஆ! ஆ ஆ! என்று சொல்லுகிறவர்கள், தங்கள் வெட்கத்தின் பலனையடைந்து கைவிடப்படுவார்களாக. 16. உம்மைத் தேடுகிற அனைவரும் உமக்குள் மகிழ்ந்து சந்தோஷப்படுவார்களாக; உம்முடைய இரட்சிப்பை விரும்புகிறவர்கள் கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக என்று எப்பொழுதும் சொல்வார்களாக. 17. நான் சிறுமையும் எளிமையுமானவன், கர்த்தரோ என்மேல் நினைவாயிருக்கிறார்; தேவரீர் என் துணையும் என்னை விடுவிக்கிறவருமாயிருக்கிறீர்; என் தேவனே, தாமதியாதேயும்.
Chapter 41
1. சிறுமைப்பட்டவன்மேல் சிந்தையுள்ளவன் பாக்கியவான்; தீங்குநாளில் கர்த்தர் அவனை விடுவிப்பார். 2. கர்த்தர் அவனைப் பாதுகாத்து அவனை உயிரோடே வைப்பார்; பூமியில் அவன் பாக்கியவானாயிருப்பான்; அவன் சத்துருக்களின் இஷ்டத்திற்கு நீர் அவனை ஒப்புக்கொடீர். 3. படுக்கையின்மேல் வியாதியாய்க்கிடக்கிற அவனைக் கர்த்தர் தாங்குவார்; அவனுடைய வியாதியிலே அவன் படுக்கை முழுவதையும் மாற்றிப்போடுவீர். 4. கர்த்தாவே, என்மேல் இரக்கமாயிரும்; உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தேன், என் ஆத்துமாவைக் குணமாக்கும் என்று நான் சொன்னேன். 5. அவன் எப்பொழுது சாவான், அவன் பேர் எப்பொழுது அழியும்? என்று என் சத்துருக்கள் எனக்கு விரோதமாய்ச் சொல்லுகிறார்கள். 6. ஒருவன் என்னைப் பார்க்கவந்தால் வஞ்சனையாய்ப் பேசுகிறான்; அவன் தன் இருதயத்தில் அக்கிரமத்தைச் சேகரித்துக்கொண்டு, தெருவிலேபோய், அதைத் தூற்றுகிறான். 7. என் பகைஞரெல்லாரும் என்மேல் ஏகமாய் முணுமுணுத்து, எனக்கு விரோதமாயிருந்து, எனக்குப் பொல்லாங்கு நினைத்து, 8. தீராவியாதி அவனைப் பிடித்துக்கொண்டது; படுக்கையில் கிடக்கிற அவன் இனி எழுந்திருப்பதில்லை என்கிறார்கள். 9. என் பிராணசிநேகிதனும், நான் நம்பினவனும், என் அப்பம் புசித்தவனுமாகிய மனுஷனும், என்மேல் தன் குதிகாலைத் தூக்கினான். 10. கர்த்தாவே, நீர் எனக்கு இரங்கி, நான் அவர்களுக்குச் சரிக்கட்ட என்னை எழுந்திருக்கப்பண்ணும். 11. என் சத்துரு என்மேல் ஜெயங்கொள்ளாததினால், நீர் என்மேல் பிரியமாயிருக்கிறீரென்று அறிவேன். 12. நீர் என் உத்தமத்திலே என்னைத்தாங்கி, என்றென்றைக்கும் உம்முடைய சமுகத்தில் என்னை நிலைநிறுத்துவீர். 13. இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அநாதியாய் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் ஸ்தோத்திரிக்கப்படத்தக்கவர். ஆமென், ஆமென்.
Chapter 42
1. மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது. 2. என் ஆத்துமா தேவன்மேல், ஜீவனுள்ள தேவன்மேலேயே தாகமாயிருக்கிறது; நான் எப்பொழுது தேவனுடைய சந்நிதியில் வந்து நிற்பேன்? 3. உன் தேவன் எங்கே என்று அவர்கள் நாள்தோறும் என்னிடத்தில் சொல்லுகிறபடியால், இரவும் பகலும் என் கண்ணீரே எனக்கு உணவாயிற்று. 4. முன்னே நான் பண்டிகையை ஆசரிக்கிற ஜனங்களோடே கூட நடந்து, கூட்டத்தின் களிப்பும் துதியுமான சத்தத்தோடே தேவாலயத்திற்குப் போய்வருவேனே; இவைகளை நான் நினைக்கும்போது என் உள்ளம் எனக்குள்ளே உருகுகிறது. 5. என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு; அவர் சமுகத்து இரட்சிப்பினிமித்தம் நான் இன்னும் அவரைத் துதிப்பேன். 6. என் தேவனே, என் ஆத்துமா எனக்குள் கலங்குகிறது; ஆகையால் யோர்தான் தேசத்திலும் எர்மோன் மலைகளிலும் சிறுமலையிலுமிருந்து உம்மை நினைக்கிறேன். 7. உமது மதகுகளின் இரைச்சலால் ஆழத்தை ஆழம் கூப்பிடுகிறது; உமது அலைகளும் திரைகளும் எல்லாம் என்மேல் புரண்டுபோகிறது. 8. ஆகிலும் கர்த்தர் பகற்காலத்திலே தமது கிருபையைக் கட்டளையிடுகிறார்; இராக்காலத்திலே அவரைப் பாடும் பாட்டு என் வாயிலிருக்கிறது; என் ஜீவனுடைய தேவனை நோக்கி விண்ணப்பஞ்செய்கிறேன். 9. நான் என் கன்மலையாகிய தேவனை நோக்கி: ஏன் என்னை மறந்தீர்? சத்துருவினால் ஒடுக்கப்பட்டு, நான் ஏன் துக்கத்துடனே திரியவேண்டும் என்று சொல்லுகிறேன். 10. உன் தேவன் எங்கே என்று என் சத்துருக்கள் நாள்தோறும் என்னோடே சொல்லி, என்னை நிந்திப்பது என் எலும்புகளை உருவக்குத்துகிறதுபோல் இருக்கிறது. 11. என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு; என் முகத்திற்கு இரட்சிப்பும் என் தேவனுமாயிருக்கிறவரை நான் இன்னும் துதிப்பேன்.
Chapter 43
1. தேவனே, நீர் என் நியாயத்தை விசாரித்து, பக்தியில்லாத ஜாதியாரோடு எனக்காக வழக்காடி, சூதும் அநியாயமுமான மனுஷனுக்கு என்னைத் தப்புவியும். 2. என் அரணாகிய தேவன் நீர்; ஏன் என்னைத் தள்ளிவிடுகிறீர்? சத்துருவினால் ஒடுக்கப்பட்டு நான் ஏன் துக்கத்துடனே திரியவேண்டும்? 3. உமது வெளிச்சத்தையும் உமது சத்தியத்தையும் அனுப்பியருளும்; அவைகள் என்னை நடத்தி, உமது பரிசுத்த பர்வதத்திற்கும் உமது வாசஸ்தலங்களுக்கும் என்னைக் கொண்டுபோவதாக. 4. அப்பொழுது நான் தேவனுடைய பீடத்தண்டைக்கும், எனக்கு ஆனந்த மகிழ்ச்சியாயிருக்கிற தேவனிடத்திற்கும் பிரவேசிப்பேன். தேவனே, என் தேவனே, உம்மைச் சுரமண்டலத்தால் துதிப்பேன். 5. என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு; என் முகத்திற்கு இரட்சிப்பும் என் தேவனுமாயிருக்கிறவரை நான் இன்னும் துதிப்பேன்.
Chapter 44
1. தேவனே, எங்கள் பிதாக்களுடைய நாட்களாகிய பூர்வநாட்களில் நீர் நடப்பித்த கிரியைகளை அவர்கள் எங்களுக்கு அறிவித்தார்கள்; அவைகளை எங்கள் காதுகளால் கேட்டோம். 2. தேவரீர் உம்முடைய கையினாலே ஜாதிகளைத் துரத்தி, இவர்களை நாட்டி; ஜனங்களைத் துன்பப்படுத்தி, இவர்களைப் பரவப்பண்ணினீர். 3. அவர்கள் தங்கள் பட்டயத்தால் தேசத்தைக் கட்டிக்கொள்ளவில்லை; அவர்கள் புயமும் அவர்களை இரட்சிக்கவில்லை; நீர் அவர்கள்மேல் பிரியமாயிருந்தபடியால், உம்முடைய வலதுகரமும், உம்முடைய புயமும், உம்முடைய முகத்தின் பிரகாசமும் அவர்களை இரட்சித்தது. 4. தேவனே, நீர் என் ராஜா; யாக்கோபுக்கு இரட்சிப்பைக் கட்டளையிடும். 5. உம்மாலே எங்கள் சத்துருக்களைக் கீழே விழத்தாக்கி, எங்களுக்கு விரோதமாய் எழும்புகிறவர்களை உம்முடைய நாமத்தினால் மிதிப்போம். 6. என் வில்லை நான் நம்பேன், என் பட்டயம் என்னை இரட்சிப்பதில்லை. 7. நீரே எங்கள் சத்துருக்களினின்று எங்களை இரட்சித்து, எங்களைப் பகைக்கிறவர்களை வெட்கப்படுத்துகிறீர். 8. தேவனுக்குள் நித்தம் மேன்மைபாராட்டுவோம்; உமது நாமத்தை என்றென்றைக்கும் துதிப்போம். (சேலா.) 9. நீர் எங்களைத் தள்ளிவிட்டு, நாணப்பண்ணுகிறீர்; எங்கள் சேனைகளுடனே செல்லாதிருக்கிறீர். 10. சத்துருவுக்கு நாங்கள் இடைந்து பின்னிட்டுத் திரும்பிப்போகப் பண்ணுகிறீர்; எங்கள் பகைஞர் தங்களுக்கென்று எங்களைக் கொள்ளையிடுகிறார்கள். 11. நீர் எங்களை ஆடுகளைப்போல இரையாக ஒப்புக்கொடுத்து, ஜாதிகளுக்குள்ளே எங்களைச் சிதறடிக்கிறீர். 12. நீர் உம்முடைய ஜனங்களை இலவசமாக விற்கிறீர்; அவர்கள் கிரயத்தினால் உமக்கு லாபமில்லையே. 13. எங்கள் அயலாருக்கு எங்களை நிந்தையாகவும், எங்கள் சுற்றுப்புறத்தாருக்குப் பரியாசமும் சக்கந்தமுமாகவும் வைக்கிறீர். 14. நாங்கள் ஜாதிகளுக்குள்ளே பழமொழியாயிருக்கவும், ஜனங்கள் எங்களைக்குறித்துத் தலைதுலுக்கவும் செய்கிறீர். 15. நிந்தித்துத் தூஷிக்கிறவனுடைய சத்தத்தினிமித்தமும், சத்துருவினிமித்தமும், பழிவாங்குகிறவனிமித்தமும், 16. என் இலச்சை நித்தம் எனக்கு முன்பாக இருக்கிறது; என் முகத்தின் வெட்கம் என்னை மூடுகிறது. 17. இவையெல்லாம் எங்கள்மேல் வந்திருந்தும், உம்மை நாங்கள் மறக்கவும் இல்லை, உம்முடைய உடன்படிக்கைக்குத் துரோகம்பண்ணவும் இல்லை. 18. நீர் எங்களை வலுசர்ப்பங்களுள்ள இடத்திலே நொறுக்கி, மரண இருளினாலே எங்களை மூடியிருந்தும், 19. எங்கள் இருதயம் பின்வாங்கவும் இல்லை, எங்கள் காலடி உம்முடைய பாதையை விட்டு விலகவும் இல்லை. 20. நாங்கள் எங்கள் தேவனுடைய நாமத்தை மறந்து, அந்நிய தேவனை நோக்கிக் கையெடுத்திருந்தோமானால், 21. தேவன் அதை ஆராய்ந்து, விசாரியாதிருப்பாரோ? இருதயத்தின் அந்தரங்கங்களை அவர் அறிந்திருக்கிறாரே. 22. உமது நிமித்தம் எந்நேரமும் கொல்லப்படுகிறோம்; அடிக்கப்படும் ஆடுகளைப்போல எண்ணப்படுகிறோம். 23. ஆண்டவரே, விழித்துக்கொள்ளும்; ஏன் நித்திரைபண்ணுகிறீர்? எழுந்தருளும், எங்களை என்றைக்கும் தள்ளிவிடாதிரும். 24. ஏன் உம்முடைய முகத்தை மறைத்து, எங்கள் சிறுமையையும் எங்கள் நெருக்கத்தையும் மறந்துவிடுகிறீர்? 25. எங்கள் ஆத்துமா புழுதிமட்டும் தாழ்ந்திருக்கிறது; எங்கள் வயிறு தரையோடு ஒட்டியிருக்கிறது. 26. எங்களுக்கு ஒத்தாசையாக எழுந்தருளும்; உம்முடைய கிருபையினிமித்தம் எங்களை மீட்டுவிடும்.
Chapter 45
1. என் இருதயம் நல்ல விசேஷத்தினால் பொங்குகிறது; நான் ராஜாவைக்குறித்துப் பாடின கவியைச் சொல்லுகிறேன்; என் நாவு விரைவாய் எழுதுகிறவனுடைய எழுத்தாணி. 2. எல்லா மனுபுத்திரரிலும் நீர் மகா சவுந்தரியமுள்ளவர்; உம்முடைய உதடுகளில் அருள் பொழிகிறது; ஆகையால் தேவன் உம்மை என்றென்றைக்கும் ஆசீர்வதிக்கிறார். 3. சவுரியவானே, உமது மகிமையும் உமது மகத்துவமுமாகிய உம்முடைய பட்டயத்தை நீர் உம்முடைய அரையிலே கட்டிக்கொண்டு, 4. சத்தியத்தினிமித்தமும், நீதியுடன் கூடிய சாந்தத்தினிமித்தமும், உமது மகத்துவத்திலே ஜெயமாக ஏறிவாரும்; உமது வலதுகரம் பயங்கரமானவைகளை உமக்கு விளங்கப்பண்ணும். 5. உம்முடைய அம்புகள் கூர்மையானவைகள், அவைகள் ராஜாவுடைய சத்துருக்களின் இருதயத்திற்குள் பாயும்; ஜனசதளங்கள் உமக்குக் கீழே விழுவார்கள். 6. தேவனே, உமது சிங்காசனம் என்றென்றைக்குமுள்ளது, உமது ராஜ்யத்தின் செங்கோல் நீதியுள்ள செங்கோலாயிருக்கிறது. 7. நீர் நீதியை விரும்பி, அக்கிரமத்தை வெறுக்கிறீர்; ஆதலால் தேவனே, உம்முடைய தேவன் உமது தோழரைப்பார்க்கிலும் உம்மை ஆனந்ததைலத்தினால் அபிஷேகம்பண்ணினார். 8. தந்தத்தினால் செய்த அரமனைகளிலிருந்து புறப்படுகையில், நீர் மகிழும்படி உமது வஸ்திரங்களெல்லாம் வெள்ளைப்போளம் சந்தனம் லவங்கம் இவைகளின் வாசனை பொருந்தியதாயிருக்கிறது. 9. உமது நாயகிகளுக்குள்ளே அரசரின் குமாரத்திகளுண்டு, ராஜஸ்திரீ ஓப்பீரின் தங்கம் அணிந்தவளாய் உமது வலதுபாரிசத்தில் நிற்கிறாள். 10. குமாரத்தியே கேள், நீ உன் செவியைச் சாய்த்துச் சிந்தித்துக்கொள்; உன் ஜனத்தையும் உன் தகப்பன் வீட்டையும் மறந்துவிடு. 11. அப்பொழுது ராஜா உன் அழகில் பிரியப்படுவார்; அவர் உன் ஆண்டவர், ஆகையால் அவரைப் பணிந்துகொள். 12. தீரு குமாரத்தி காணிக்கை கொண்டுவருவாள்; ஜனங்களில் ஐசுவரியவான்களும் உன் தயவை நாடி வணங்குவார்கள். 13. ராஜகுமாரத்தி உள்ளாகப் பூரண மகிமையுள்ளவள்; அவள் உடை பொற்சரிகையாயிருக்கிறது. 14. சித்திரத்தையலாடை தரித்தவளாய், ராஜாவினிடத்தில் அழைத்துக்கொண்டுவரப்படுவாள்; அவள் பின்னாலே செல்லும் அவளுடைய தோழிகளாகிய கன்னிகைகள் உம்மிடத்தில் கூட்டிக்கொண்டுவரப்படுவார்கள். 15. அவர்கள் மகிழ்ச்சியோடும் களிப்போடும் வந்து, ராஜ அரமனைக்குள் பிரவேசிப்பார்கள். 16. உமது பிதாக்களுக்குப் பதிலாக உமது குமாரர் இருப்பார்கள்; அவர்களைப் பூமியெங்கும் பிரபுக்களாக வைப்பீர். 17. உமது நாமத்தை எல்லாத் தலைமுறைகளிலும் பிரஸ்தாபப்படுத்துவேன், இதினிமித்தம் ஜனங்கள் உம்மை என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் துதிப்பார்கள்.
Chapter 46
1. தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமானவர். 2. ஆகையால் பூமி நிலைமாறினாலும், மலைகள் நடுச்சமுத்திரத்தில் சாய்ந்துபோனாலும், 3. அதின் ஜலங்கள் கொந்தளித்துப் பொங்கி, அதின் பெருக்கினால் பர்வதங்கள் அதிர்ந்தாலும், நாம் பயப்படோம். (சேலா.) 4. ஒரு நதியுண்டு, அதின் நீர்க்கால்கள் தேவனுடைய நகரத்தையும், உன்னதமானவர் வாசம்பண்ணும் பரிசுத்த ஸ்தலத்தையும் சந்தோஷிப்பிக்கும். 5. தேவன் அதின் நடுவில் இருக்கிறார், அது அசையாது; அதிகாலையிலே தேவன் அதற்குச் சகாயம்பண்ணுவார். 6. ஜாதிகள் கொந்தளித்தது, ராஜ்யங்கள் தத்தளித்தது; அவர் தமது சத்தத்தை முழங்கப்பண்ணினார், பூமி உருகிப்போயிற்று. 7. சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார்; யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலமானவர். (சேலா.) 8. பூமியிலே பாழ்க்கடிப்புகளை நடப்பிக்கிற கர்த்தருடைய செய்கைகளை வந்து பாருங்கள். 9. அவர் பூமியின் கடைமுனைமட்டும் யுத்தங்களை ஓயப்பண்ணுகிறார்; வில்லை ஒடித்து, ஈட்டியை முறிக்கிறார்; இரதங்களை நெருப்பினால் சுட்டெரிக்கிறார். 10. நீங்கள் அமர்ந்திருந்து, நானே தேவனென்று அறிந்துகொள்ளுங்கள்; ஜாதிகளுக்குள்ளே உயர்ந்திருப்பேன், பூமியிலே உயர்ந்திருப்பேன். 11. சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார், யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலமானவர். (சேலா.)
Chapter 47
1. சகல ஜனங்களே, கைகொட்டி, தேவனுக்கு முன்பாகக் கெம்பீரசத்தமாய் ஆர்ப்பரியுங்கள். 2. உன்னதமானவராகிய கர்த்தர் பயங்கரமானவரும், பூமியின்மீதெங்கும் மகத்துவமான ராஜாவுமாயிருக்கிறார். 3. ஜனங்களை நமக்கு வசப்படுத்தி, ஜாதிகளை நம்முடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்துவார். 4. தமக்குப் பிரியமான யாக்கோபின் சிறப்பான தேசத்தை நமக்குச் சுதந்தரமாகத் தெரிந்தளிப்பார். (சேலா.) 5. தேவன் ஆர்ப்பரிப்போடும், கர்த்தர் எக்காள சத்தத்தோடும் உயர எழுந்தருளினார். 6. தேவனைப் போற்றிப் பாடுங்கள், பாடுங்கள்; நம்முடைய ராஜாவைப் போற்றிப் பாடுங்கள், பாடுங்கள். 7. தேவன் பூமியனைத்திற்கும் ராஜா; கருத்துடனே அவரைப் போற்றிப் பாடுங்கள். 8. தேவன் ஜாதிகள்மேல் அரசாளுகிறார்; தேவன் தமது பரிசுத்த சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறார். 9. ஜனங்களின் பிரபுக்கள் ஆபிரகாமின் தேவனுடைய ஜனங்களாகச் சேர்க்கப்படுகிறார்கள்; பூமியின் கேடகங்கள் தேவனுடையவைகள்; அவர் மகா உன்னதமானவர்.
Chapter 48
1. கர்த்தர் பெரியவர், அவர் நமது தேவனுடைய நகரத்திலும், தமது பரிசுத்த பர்வதத்திலும் மிகவும் துதிக்கப்படத்தக்கவர். 2. வடதிசையிலுள்ள சீயோன் பர்வதம் வடிப்பமான ஸ்தானமும் சர்வபூமியின் மகிழ்ச்சியுமாயிருக்கிறது, அதுவே மகாராஜாவின் நகரம். 3. அதின் அரமனைகளில் தேவன் உயர்ந்த அடைக்கலமாக அறியப்பட்டிருக்கிறார். 4. இதோ, ராஜாக்கள் கூடிக்கொண்டு, ஏகமாய்க் கடந்துவந்தார்கள். 5. அவர்கள் அதைக் கண்டபோது பிரமித்துக் கலங்கி விரைந்தோடினார்கள். 6. அங்கே நடுக்கங்கொண்டு, பிரசவவேதனைப்படுகிற ஸ்திரீயைப்போல வேதனைப்பட்டார்கள். 7. கீழ்க்காற்றினால் தர்ஷீசின் கப்பல்களை நீர் உடைக்கிறீர். 8. நாம் கேள்விப்பட்டபடியே நமது தேவனுடைய நகரமாகிய சேனைகளுடைய கர்த்தரின் நகரத்திலே கண்டோம்; தேவன் அதை என்றென்றைக்கும் ஸ்திரப்படுத்துவார். (சேலா.) 9. தேவனே, உமது ஆலயத்தின் நடுவிலே, உமது கிருபையைச் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். 10. தேவனே, உமது நாமம் விளங்குகிறதுபோல உமது புகழ்ச்சியும் பூமியின் கடையாந்தரங்கள் பரியந்தமும் விளங்குகிறது; உமது வலதுகரம் நீதியால் நிறைந்திருக்கிறது. 11. உம்முடைய நியாயத்தீர்ப்புகளினிமித்தம் சீயோன் பர்வதம் மகிழ்வதாக, யூதாவின் குமாரத்திகள் களிகூருவார்களாக. 12. சீயோனைச் சுற்றி உலாவி, அதின் கொத்தளங்களை எண்ணுங்கள். 13. பின்வரும் சந்ததிக்கு நீங்கள் விவரிப்பதற்காக, அதின் அலங்கத்தைக் கவனித்து, அதின் அரமனைகளை உற்றுப்பாருங்கள். 14. இந்தத் தேவன் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நம்முடைய தேவன்; மரணபரியந்தம் நம்மை நடத்துவார்.
Chapter 49
1. ஜனங்களே, நீங்கள் எல்லாரும் இதைக் கேளுங்கள். 2. பூமியின் குடிகளே, சிறியோரும் பெரியோரும் ஐசுவரியவான்களும் எளியவர்களுமாகிய நீங்கள் எல்லாரும் ஏகமாய்ச் செவிகொடுங்கள். 3. என் வாய் ஞானத்தைப் பேசும்; என் இருதயம் உணர்வைத் தியானிக்கும். 4. என் செவியை உவமைமொழிக்குச் சாய்த்து, என் மறைபொருளைச் சுரமண்டலத்தின்மேல் வெளிப்படுத்துவேன். 5. என்னைத் தொடருகிறவர்களுடைய அக்கிரமம் என்னைச் சூழ்ந்துகொள்ளுந் தீங்குநாட்களில், நான் பயப்படவேண்டியதென்ன? 6. தங்கள் செல்வத்தை நம்பி தங்கள் திரளான ஐசுவரியத்தினால் பெருமைபாராட்டுகிற, 7. ஒருவனாவது, தன் சகோதரன் அழிவைக் காணாமல் இனி என்றைக்கும் உயிரோடிருக்கும்படி, 8. எவ்விதத்தினாலாவது அவனை மீட்டுக்கொள்ளவும், அவனிமித்தம் மீட்கும்பொருளை தேவனுக்குக் கொடுக்கவுங்கூடாதே. 9. அவர்கள் ஆத்துமமீட்பு மிகவும் அருமையாயிருக்கிறது; அது ஒருபோதும் முடியாது. 10. ஞானிகளும் மரித்து, அஞ்ஞானிகளும் நிர்மூடரும் ஏகமாய் அழிந்து, தங்கள் ஆஸ்தியை மற்றவர்களுக்கு வைத்துப்போகிறதைக் காண்கிறான். 11. தங்கள் வீடுகள் நித்தியகாலமாகவும், தங்கள் வாசஸ்தலங்கள் தலைமுறை தலைமுறையாகவும் இருக்குமென்பது அவர்கள் உள்ளத்தின் அபிப்பிராயம்; அவர்கள் தங்கள் நாமங்களைத் தங்கள் நிலங்களுக்குத் தரிக்கிறார்கள். 12. ஆகிலும் கனம்பொருந்தியவனாயிருக்கிற மனுஷன் நிலைத்திருக்கிறதில்லை; அழிந்துபோகும் மிருகங்களுக்கு ஒப்பாயிருக்கிறான். 13. இதுதான் அவர்கள் வழி, இதுதான் அவர்கள் பைத்தியம்; ஆகிலும் அவர்கள் சந்ததியார் அவர்கள் சொல்லை மெச்சிக்கொள்ளுகிறார்கள். (சேலா.) 14. ஆட்டுமந்தையைப்போலப் பாதாளத்திலே கிடத்தப்படுகிறார்கள்; மரணம் அவர்களை மேய்ந்துபோடும்; செம்மையானவர்கள் அதிகாலையில் அவர்களை ஆண்டுகொள்வார்கள்; அவர்கள் தங்கள் வாசஸ்தலத்தில் நிலைத்திருக்கக்கூடாதபடி அவர்களுடைய ரூபத்தைப் பாதாளம் அழிக்கும். 15. ஆனாலும் தேவன் என் ஆத்துமாவைப் பாதாளத்தின் வல்லமைக்குத் தப்புவித்து மீட்பார், அவர் என்னை ஏற்றுக்கொள்வார். (சேலா.) 16. ஒருவன் ஐசுவரியவானாகி, அவன் வீட்டின் மகிமை பெருகும்போது, நீ பயப்படாதே. 17. அவன் மரிக்கும்போது ஒன்றும் கொண்டுபோவதில்லை; அவன் மகிமை அவனைப் பின்பற்றிச் செல்வதுமில்லை. 18. அவன் உயிரோடிருக்கையில் தன் ஆத்துமாவை வாழ்த்தினாலும்: நீ உனக்கு நன்மையை நாடினாய் என்று மனுஷர் அவனைப் புகழ்ந்தாலும், 19. அவன் என்றென்றைக்கும் வெளிச்சத்தைக் காணாத தன் பிதாக்களின் சந்ததியைச் சேருவான். 20. கனம் பொருந்தினவனாயிருந்தும் அறிவில்லாத மனுஷன் அழிந்துபோகும் மிருகங்களுக்கு ஒப்பாயிருக்கிறான்.
Chapter 50
1. வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் வசனித்து, சூரியன் உதிக்குந் திசைதொடங்கி அது அஸ்தமிக்குந் திசைவரைக்குமுள்ள பூமியைக் கூப்பிடுகிறார். 2. பூரணவடிவுள்ள சீயோனிலிருந்து தேவன் பிரகாசிக்கிறார். 3. நம்முடைய தேவன் வருவார், மவுனமாயிரார்; அவருக்குமுன் அக்கினி பட்சிக்கும்; அவரைச் சுற்றிலும் மகா புசல் கொந்தளிப்பாயிருக்கும். 4. அவர் தம்முடைய ஜனத்தை நியாயந்தீர்க்க உயர இருக்கும் வானங்களையும் பூமியையும் கூப்பிடுவார். 5. பலியினாலே என்னோடே உடன்படிக்கை பண்ணின என்னுடைய பரிசுத்தவான்களை என்னிடத்தில் கூட்டுங்கள் என்பார். 6. வானங்கள் அவருடைய நீதியை அறிவிக்கும்; தேவனே நியாயாதிபதி. (சேலா.) 7. என் ஜனமே, கேள், நான் பேசுவேன்; இஸ்ரவேலே, உனக்கு விரோதமாய்ச் சாட்சியிடுவேன்; நானே தேவன், உன் தேவனாயிருக்கிறேன். 8. உன் பலிகளினிமித்தம் உன்னைக் கடிந்துகொள்ளேன்; உன் தகனபலிகள் எப்போதும் எனக்கு முன்பாக இருக்கிறது. 9. உன் வீட்டிலிருந்து காளைகளையும், உன் தொழுவங்களிலிருந்து ஆட்டுக்கடாக்களையும் நான் வாங்கிக்கொள்வதில்லை. 10. சகல காட்டுஜீவன்களும், பர்வதங்களில் ஆயிரமாயிரமாய்த் திரிகிற மிருகங்களும் என்னுடையவைகள். 11. மலைகளிலுள்ள பறவைகளையெல்லாம் அறிவேன்; வெளியில் நடமாடுகிறவைகளெல்லாம் என்னுடையவைகள். 12. நான் பசியாயிருந்தால் உனக்குச் சொல்லேன்; பூமியும் அதின் நிறைவும் என்னுடையவைகளே. 13. நான் எருதுகளின் மாம்சம் புசித்து, ஆட்டுக்கடாக்களின் இரத்தம் குடிப்பேனோ? 14. நீ தேவனுக்கு ஸ்தோத்திரபலியிட்டு, உன்னதமானவருக்கு உன் பொருத்தனைகளைச் செலுத்தி; 15. ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய். 16. தேவன் துன்மார்க்கனை நோக்கி: நீ என் பிரமாணங்களை எடுத்துரைக்கவும், என் உடன்படிக்கையை உன் வாயினால் சொல்லவும், உனக்கு என்ன நியாயமுண்டு. 17. சிட்சையை நீ பகைத்து, என் வார்த்தைகளை உனக்குப் பின்னாக எறிந்துபோடுகிறாய். 18. நீ திருடனைக் காணும்போது அவனோடு ஒருமித்துப்போகிறாய்; விபசாரரோடும் உனக்குப் பங்குண்டு. 19. உன் வாயைப் பொல்லாப்புக்குத் திறக்கிறாய், உன் நாவு சற்பனையைப் பிணைக்கிறது. 20. நீ உட்கார்ந்து உன் சகோதரனுக்கு விரோதமாய்ப் பேசி, உன் தாயின் மகனுக்கு அவதூறு உண்டாக்குகிறாய். 21. இவைகளை நீ செய்யும்போது நான் மவுனமாயிருந்தேன், உன்னைப்போல் நானும் இருப்பேன் என்று நினைவு கொண்டாய்; ஆனாலும் நான் உன்னைக் கடிந்துகொண்டு, அவைகளை உன் கண்களுக்கு முன்பாக ஒவ்வொன்றாக நிறுத்துவேன். 22. தேவனை மறக்கிறவர்களே, இதைச் சிந்தித்துக்கொள்ளுங்கள்; இல்லாவிட்டால் நான் உங்களைப் பீறிப்போடுவேன், ஒருவரும் உங்களை விடுவிப்பதில்லை. 23. ஸ்தோத்திர பலியிடுகிறவன் என்னை மகிமைப்படுத்துகிறான்; தன் வழியைச் செவ்வைப்படுத்துகிறவனுக்கு தேவனுடைய இரட்சிப்பை வெளிப்படுத்துவேன் என்று சொல்லுகிறார்.
Chapter 51
1. தேவனே, உமது கிருபையின்படி எனக்கு இரங்கும், உமது மிகுந்த இரக்கங்களின்படி என் மீறுதல்கள் நீங்க என்னைச் சுத்திகரியும். 2. என் அக்கிரமம் நீங்க என்னை முற்றிலும் கழுவி, என் பாவமற என்னைச் சுத்திகரியும். 3. என் மீறுதல்களை நான் அறிந்திருக்கிறேன்; என் பாவம் எப்பொழுதும் எனக்கு முன்பாக நிற்கிறது. 4. தேவரீர் ஒருவருக்கே விரோதமாக நான் பாவஞ்செய்து, உமது கண்களுக்கு முன்பாகப் பொல்லாங்கானதை நடப்பித்தேன்; நீர் பேசும்போது உம்முடைய நீதி விளங்கவும், நீர் நியாயந்தீர்க்கும்போது உம்முடைய பரிசுத்தம் விளங்கவும் இதை அறிக்கையிடுகிறேன். 5. இதோ, நான் துர்க்குணத்தில் உருவானேன்; என் தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பந்தரித்தாள். 6. இதோ, உள்ளத்தில் உண்மையிருக்க விரும்புகிறீர்; அந்தக்கரணத்தில் ஞானத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர். 7. நீர் என்னை ஈசோப்பினால் சுத்திகரியும், அப்பொழுது நான் சுத்தமாவேன்; என்னைக் கழுவியருளும், அப்பொழுது நான் உறைந்த மழையிலும் வெண்மையாவேன். 8. நான் சந்தோஷமும் மகிழ்ச்சியும் கேட்கும்படி செய்யும், அப்பொழுது நீர் நொறுக்கின எலும்புகள் களிகூரும். 9. என் பாவங்களைப் பாராதபடிக்கு நீர் உமது முகத்தை மறைத்து, என் அக்கிரமங்களையெல்லாம் நீக்கியருளும். 10. தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும். 11. உமது சமுகத்தை விட்டு என்னைத் தள்ளாமலும், உமது பரிசுத்த ஆவியை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளாமலும் இரும். 12. உமது இரட்சணியத்தின் சந்தோஷத்தைத் திரும்பவும் எனக்குத் தந்து, உற்சாகமான ஆவி என்னைத் தாங்கும்படி செய்யும். 13. அப்பொழுது பாதகருக்கு உமது வழிகளை உபதேசிப்பேன்; பாவிகள் உம்மிடத்தில் மனந்திரும்புவார்கள். 14. தேவனே, என்னை இரட்சிக்குந் தேவனே, இரத்தப்பழிகளுக்கு என்னை நீங்கலாக்கிவிடும்; அப்பொழுது என் நாவு உம்முடைய நீதியைக் கெம்பீரமாய்ப்பாடும். 15. ஆண்டவரே, என் உதடுகளைத் திறந்தருளும்; அப்பொழுது என் வாய் உம்முடைய புகழை அறிவிக்கும். 16. பலியை நீர் விரும்புகிறதில்லை, விரும்பினால் செலுத்துவேன்; தகனபலியும் உமக்குப் பிரியமானதல்ல. 17. தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர். 18. சீயோனுக்கு உமது பிரியத்தின்படி நன்மைசெய்யும்; எருசலேமின் மதில்களைக் கட்டுவீராக. 19. அப்பொழுது தகனபலியும் சர்வாங்க தகனபலியுமாகிய நீதியின் பலிகளில் பிரியப்படுவீர்; அப்பொழுது உமது பீடத்தின்மேல் காளைகளைப் பலியிடுவார்கள்.
Chapter 52
1. பலவானே, பொல்லாப்பில் ஏன் பெருமைபாராட்டுகிறாய்? தேவனுடைய கிருபை எந்நாளுமுள்ளது. 2. நீ கேடுகளைச் செய்ய எத்தனம்பண்ணுகிறாய், கபடுசெய்யும் உன் நாவு தீட்டப்பட்ட சவரகன் கத்தியைப்போல் இருக்கிறது. 3. நன்மையைப்பார்க்கிலும் தீமையையும், யதார்த்தம் பேசுகிறதைப்பார்க்கிலும் பொய்யையும் விரும்புகிறாய். (சேலா.) 4. கபடமுள்ள நாவே, சங்கரிக்கும் சகல வார்த்தைகளையும் நீ விரும்புகிறாய். 5. தேவன் உன்னை என்றென்றைக்கும் இராதபடி அழித்துப்போடுவார்; அவர் உன்னைப் பிடித்து, உன் வாசஸ்தலத்திலிருந்து பிடுங்கி, நீ ஜீவனுள்ளோர் தேசத்தில் இராதபடிக்கு உன்னை நிர்மூலமாக்குவார். (சேலா.) 6. நீதிமான்கள் அதைக் கண்டு பயந்து, அவனைப்பார்த்து நகைத்து: 7. இதோ, தேவனைத் தன் பெலனாக எண்ணாமல், தன் செல்வப்பெருக்கத்தை நம்பி, தன் தீவினையில் பலத்துக்கொண்ட மனுஷன் இவன்தான் என்பார்கள். 8. நானோ தேவனுடைய ஆலயத்தில் பச்சையான ஒலிவமரத்தைப்போலிருக்கிறேன், தேவனுடைய கிருபையை என்றென்றைக்கும் நம்பியிருக்கிறேன். 9. நீரே இதைச் செய்தீர் என்று உம்மை என்றென்றைக்கும் துதித்து, உமது நாமத்திற்குக் காத்திருப்பேன்; உம்முடைய பரிசுத்தவான்களுக்கு முன்பாக அது நலமாயிருக்கிறது.
Chapter 53
1. தேவன் இல்லை என்று மதிகேடன் தன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான்; அவர்கள் தங்களைக் கெடுத்து, அருவருப்பான அக்கிரமங்களைச் செய்துவருகிறார்கள்; நன்மைசெய்கிறவன் ஒருவனும் இல்லை. 2. தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று பார்க்க, தேவன் பரலோகத்திலிருந்து மனுபுத்திரரைக் கண்ணோக்கினார். 3. அவர்கள் எல்லாரும் வழிவிலகி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்; நன்மைசெய்கிறவன் இல்லை, ஒருவனாகிலும் இல்லை. 4. அக்கிரமக்காரருக்கு அறிவு இல்லையா? அப்பத்தைப் பட்சிக்கிறதுபோல் என் ஜனத்தைப் பட்சிக்கிறார்களே; அவர்கள் தேவனைத் தொழுதுகொள்ளுகிறதில்லை. 5. உனக்கு விரோதமாய்ப் பாளயமிறங்கினவனுடைய எலும்புகளைத் தேவன் சிதறப்பண்ணினபடியால், பயமில்லாத இடத்தில் மிகவும் பயந்தார்கள்; தேவன் அவர்களை வெறுத்தபடியினால் நீ அவர்களை வெட்கப்படுத்தினாய். 6. சீயோனிலிருந்து இஸ்ரவேலுக்கு இரட்சிப்பு வருவதாக; தேவன் தம்முடைய ஜனத்தின் சிறையிருப்பைத் திருப்பும்போது, யாக்கோபுக்குக் களிப்பும் இஸ்ரவேலுக்கு மகிழ்ச்சியும் உண்டாகும்.
Chapter 54
1. தேவனே, உமது நாமத்தினிமித்தம் என்னை இரட்சித்து, உமது வல்லமையினால் எனக்கு நியாயஞ்செய்யும். 2. தேவனே, என் விண்ணப்பத்தைக்கேட்டு, என் வாயின் வார்த்தைகளுக்குச் செவிகொடும். 3. அந்நியர் எனக்கு விரோதமாய் எழும்புகிறார்கள்; கொடியர் என் பிராணனை வாங்கத் தேடுகிறார்கள்; தேவனைத் தங்களுக்கு முன்பாக நிறுத்தி நோக்கார்கள். (சேலா.) 4. இதோ, தேவன் எனக்குச் சகாயர்; ஆண்டவர் என் ஆத்துமாவை ஆதரிக்கிறவர்களோடே இருக்கிறார். 5. அவர் என் சத்துருக்களுக்குத் தீமைக்குத் தீமையைச் சரிக்கட்டுவார், உமது சத்தியத்தினிமித்தம் அவர்களை நிர்மூலமாக்கும். 6. உற்சாகத்துடன் நான் உமக்குப் பலியிடுவேன்; கர்த்தாவே, உமது நாமத்தைத் துதிப்பேன், அது நலமானது. 7. அவர் எல்லா நெருக்கத்தையும் நீக்கி, என்னை விடுவித்தார்; என் கண் என் சத்துருக்களில் நீதி சரிக்கட்டுதலைக் கண்டது.
Chapter 55
1. தேவனே, என் ஜெபத்தைக் கேட்டருளும்; என் விண்ணப்பத்திற்கு மறைந்திராதேயும். 2. எனக்குச் செவிகொடுத்து, உத்தரவு அருளிச்செய்யும்; சத்துருவினுடைய கூக்குரலினிமித்தமும், துன்மார்க்கர் செய்யும் இடுக்கத்தினிமித்தமும் என் தியானத்தில் முறையிடுகிறேன். 3. அவர்கள் என்மேல் பழிசாட்டி, குரோதங்கொண்டு, என்னைப் பகைக்கிறார்கள். 4. என் இருதயம் எனக்குள் வியாகுலப்படுகிறது; மரணத்திகில் என்மேல் விழுந்தது. 5. பயமும் நடுக்கமும் என்னைப் பிடித்தது; அருக்களிப்பு என்னை மூடிற்று. 6. அப்பொழுது நான்: ஆ, எனக்குப் புறாவைப்போல் சிறகுகள் இருந்தால், நான் பறந்துபோய் இளைப்பாறுவேன். 7. நான் தூரத்தில் அலைந்து திரிந்து வனாந்தரத்தில் தங்கியிருப்பேன். (சேலா.) 8. பெருங்காற்றுக்கும் புசலுக்கும் தப்பத் தீவிரித்துக்கொள்ளுவேன் என்றேன். 9. ஆண்டவரே, அவர்களை அழித்து, அவர்கள் பாஷையைப் பிரிந்துபோகப்பண்ணும்; கொடுமையையும் சண்டையையும் நகரத்திலே கண்டேன்; 10. அவைகள் இரவும் பகலும் அதின் மதில்கள்மேல் சுற்றித்திரிகிறது; அக்கிரமமும் வாதையும் அதின் நடுவில் இருக்கிறது; 11. கேடுபாடுகள் அதின் நடுவில் இருக்கிறது; கொடுமையும் கபடும் அதின் வீதியை விட்டு விலகிப்போகிறதில்லை. 12. என்னை நிந்தித்தவன் சத்துரு அல்ல, அப்படியிருந்தால் சகிப்பேன்; எனக்கு விரோதமாய்ப் பெருமைபாராட்டினவன் என் பகைஞன் அல்ல, அப்படியிருந்தால் அவனுக்கு மறைந்திருப்பேன். 13. எனக்குச் சமமான மனுஷனும், என் வழிகாட்டியும், என் தோழனுமாகிய நீயே அவன். 14. நாம் ஒருமித்து, இன்பமான ஆலோசனைபண்ணி, கூட்டத்தோடே தேவாலயத்துக்குப் போனோம். 15. மரணம் அவர்களைத் தொடர்ந்து பிடிப்பதாக; அவர்கள் உயிரோடே பாதாளத்தில் இறங்குவார்களாக; அவர்கள் வாசஸ்தலங்களிலும் அவர்கள் உள்ளத்திலும் பொல்லாங்கு இருக்கிறது. 16. நானோ தேவனை நோக்கிக் கூப்பிடுவேன்; கர்த்தர் என்னை இரட்சிப்பார். 17. அந்திசந்தி மத்தியான வேளைகளிலும் நான் தியானம்பண்ணி முறையிடுவேன்; அவர் என் சத்தத்தைக் கேட்பார். 18. திரளான கூட்டமாய்க் கூடி என்னோடு எதிர்த்தார்கள்; அவரோ எனக்கு நேரிட்ட போரை நீக்கி, என் ஆத்துமாவைச் சமாதானத்துடன் மீட்டுவிட்டார். 19. ஆதிமுதலாய் வீற்றிருக்கிற தேவன் கேட்டு, அவர்களுக்குப் பதிலளிப்பார்; அவர்களுக்கு மாறுதல்கள் நேரிடாததினால், அவர்கள் தேவனுக்குப் பயப்படாமற்போகிறார்கள். (சேலா.) 20. அவன் தன்னோடே சமாதானமாயிருந்தவர்களுக்கு விரோதமாய் தன் கையை நீட்டி, தன் உடன்படிக்கையை மீறி நடந்தான். 21. அவன் வாயின் சொற்கள் வெண்ணெயைப்போல மெதுவானவைகள், அவன் இருதயமோ யுத்தம்; அவன் வார்த்தைகள் எண்ணெயிலும் மிருதுவானவைகள், ஆனாலும் அவைகள் உருவின பட்டயங்கள். 22. கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்; நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார். 23. தேவனே, நீர் அவர்களை அழிவின் குழியில் இறங்கப்பண்ணுவீர்; இரத்தப்பிரியரும் சூதுள்ள மனுஷரும் தங்கள் ஆயுளின் நாட்களில் பாதிவரையிலாகிலும் பிழைத்திருக்கமாட்டார்கள்; நானோ உம்மை நம்பியிருக்கிறேன்.
Chapter 56
1. தேவனே, எனக்கு இரங்கும்; மனுஷன் என்னை விழுங்கப்பார்க்கிறான்; நாள்தோறும் போர்செய்து, என்னை ஒடுக்குகிறான். 2. என் சத்துருக்கள் நாள்தோறும் என்னை விழுங்கப்பார்க்கிறார்கள்; உன்னதமானவரே, எனக்கு விரோதமாய் அகங்கரித்துப் போர்செய்கிறவர்கள் அநேகர். 3. நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன். 4. தேவனை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன்; தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படேன்; மாம்சமானவன் எனக்கு என்ன செய்வான்? 5. நித்தமும் என் வார்த்தைகளைப் புரட்டுகிறார்கள்; எனக்குத் தீங்குசெய்வதே அவர்கள் முழு எண்ணமாயிருக்கிறது. 6. அவர்கள் ஏகமாய்க் கூடி, பதிவிருக்கிறார்கள்; என் பிராணனை வாங்க விரும்பி, என் காலடிகளைத் தொடர்ந்துவருகிறார்கள். 7. அவர்கள் தங்கள் அக்கிரமத்தினால் தப்புவார்களோ? தேவனே, கோபங்கொண்டு ஜனங்களைக் கீழே தள்ளும். 8. என் அலைச்சல்களைத் தேவரீர் எண்ணியிருக்கிறீர்; என் கண்ணீரை உம்முடைய துருத்தியில் வையும்; அவைகள் உம்முடைய கணக்கில் அல்லவோ இருக்கிறது? 9. நான் உம்மை நோக்கிக் கூப்பிடும் நாளில் என் சத்துருக்கள் பின்னிட்டுத் திரும்புவார்கள்; தேவன் என் பட்சத்தில் இருக்கிறார் என்பதை அறிவேன். 10. தேவனை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன்; கர்த்தரை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன். 11. தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படேன்; மனுஷன் எனக்கு என்னசெய்வான்? 12. தேவனே, நான் உமக்குப் பண்ணின பொருத்தனைகள் என்மேல் இருக்கிறது; உமக்கு ஸ்தோத்திரங்களைச் செலுத்துவேன். 13. நான் தேவனுக்கு முன்பாக ஜீவனுள்ளோருடைய வெளிச்சத்திலே நடக்கும்படி, நீர் என் ஆத்துமாவை மரணத்துக்கும் என் கால்களை இடறலுக்கும் தப்புவியாதிருப்பீரோ?
Chapter 57
1. எனக்கு இரங்கும், தேவனே, எனக்கு இரங்கும்; உம்மை என் ஆத்துமா அண்டிக்கொள்ளுகிறது; விக்கினங்கள் கடந்துபோகுமட்டும் உமது செட்டைகளின் நிழலிலே வந்து அடைவேன். 2. எனக்காக யாவையும் செய்து முடிக்கப்போகிற தேவனாகிய உன்னதமான தேவனை நோக்கிக் கூப்பிடுவேன். 3. என்னை விழுங்கப்பார்க்கிறவன் என்னை நிந்திக்கையில், அவர் பரலோகத்திலிருந்து ஒத்தாசை அனுப்பி, என்னை இரட்சிப்பார்: (சேலா.) தேவன் தமது கிருபையையும் தமது சத்தியத்தையும் அனுப்புவார். 4. என் ஆத்துமா சிங்கங்களின் நடுவிலிருக்கிறது; தீயை இறைக்கிற மனுபுத்திரருக்குள்ளே கிடக்கிறேன்; அவர்கள் பற்கள் ஈட்டிகளும் அம்புகளும், அவர்கள் நாவு கருக்கான பட்டயமுமாயிருக்கிறது. 5. தேவனே, வானங்களுக்கு மேலாக உயர்ந்தருளும்; உமது மகிமை பூமியனைத்தின்மேலும் உயர்ந்திருப்பதாக. 6. என் கால்களுக்குக் கண்ணியை வைத்திருக்கிறார்கள்; என் ஆத்துமா தொய்ந்துபோயிற்று; எனக்கு முன்பாகக் குழியை வெட்டி, அதின் நடுவிலே விழுந்தார்கள். (சேலா.) 7. என் இருதயம் ஆயத்தமாயிருக்கிறது, தேவனே, என் இருதயம் ஆயத்தமாயிருக்கிறது; நான் பாடிக் கீர்த்தனம்பண்ணுவேன். 8. என் மகிமையே, விழி; வீணையே, சுரமண்டலமே, விழியுங்கள்; அதிகாலையில் விழித்துக்கொள்வேன். 9. ஆண்டவரே, ஜனங்களுக்குள்ளே உம்மைத் துதிப்பேன்; ஜாதிகளுக்குள்ளே உம்மைக் கீர்த்தனம்பண்ணுவேன். 10. உமது கிருபை வானபரியந்தமும், உமது சத்தியம் மேகமண்டலங்கள்பரியந்தமும் எட்டுகிறது. 11. தேவனே, வானங்களுக்குமேலாக உயர்ந்தருளும்; உமது மகிமை பூமியனைத்தின்மேலும் உயர்ந்திருப்பதாக.
Chapter 58
1. மவுனமாயிருக்கிறவர்களே, நீங்கள் மெய்யாய் நீதியைப் பேசுவீர்களோ? மனுபுத்திரரே, நியாயமாய்த் தீர்ப்புசெய்வீர்களோ? 2. மனதார நியாயக்கேடு செய்கிறீர்கள்; பூமியிலே உங்கள் கைகளின் கொடுமையை நிறுத்துக் கொடுக்கிறீர்கள். 3. துன்மார்க்கர் கர்ப்பத்தில் உற்பவித்ததுமுதல் பேதலிக்கிறார்கள்; தாயின் வயிற்றிலிருந்து பிறந்ததுமுதல் பொய் சொல்லி வழிதப்பிப் போகிறார்கள். 4. சர்ப்பத்தின் விஷத்திற்கு ஒப்பான விஷம் அவர்களில் இருக்கிறது. 5. பாம்பாட்டிகள் விநோதமாய் ஊதினாலும் அவர்கள் ஊதும் சத்தத்திற்குச் செவிகொடாதபடிக்குத் தன் காதை அடைக்கிற செவிட்டு விரியனைப்போல் இருக்கிறார்கள். 6. தேவனே, அவர்கள் வாயிலுள்ள பற்களைத் தகர்த்துப்போடும்; கர்த்தாவே, பாலசிங்கங்களின் கடைவாய்ப்பற்களை நொறுக்கிப்போடும். 7. கடந்தோடுகிற தண்ணீரைப்போல் அவர்கள் கழிந்துபோகட்டும்; அவன் தன் அம்புகளைத் தொடுக்கும்போது அவைகள் சின்னபின்னமாய்ப் போகக்கடவது. 8. கரைந்துபோகிற நத்தையைப்போல் ஒழிந்துபோவார்களாக; ஸ்திரீயின் முதிராப் பிண்டத்தைப்போல் சூரியனைக் காணாதிருப்பார்களாக. 9. முள் நெருப்பினால் உங்கள் பானைகளில் சூடேறுமுன்னே பச்சையானதையும் எரிந்துபோனதையும் அவர் சுழல்காற்றினால் அடித்துக்கொண்டுபோவார். 10. பழிவாங்குதலை நீதிமான் காணும்போது மகிழுவான்; அவன் தன் பாதங்களைத் துன்மார்க்கனுடைய இரத்தத்திலே கழுவுவான். 11. அப்பொழுது, மெய்யாய் நீதிமானுக்குப் பலன் உண்டென்றும், மெய்யாய் பூமியிலே நியாயஞ்செய்கிற தேவன் உண்டென்றும் மனுஷன் சொல்லுவான்.
Chapter 59
1. என் தேவனே, என் சத்துருக்களுக்கு என்னைத் தப்புவியும்; என்மேல் எழும்புகிறவர்களுக்கு என்னை விலக்கி உயர்ந்த அடைக்கலத்திலே வையும். 2. அக்கிரமக்காரருக்கு என்னைத் தப்புவித்து, இரத்தப்பிரியரான மனுஷருக்கு என்னை விலக்கி இரட்சியும். 3. இதோ, என் பிராணனுக்குப் பதிவிருக்கிறார்கள்; கர்த்தாவே, என்னிடத்தில் மீறுதலும் பாவமும் இல்லாதிருந்தும், பலவான்கள் எனக்கு விரோதமாய்க் கூட்டங்கூடுகிறார்கள். 4. என்னிடத்தில் அக்கிரமம் இல்லாதிருந்தும், ஓடித்திரிந்து யுத்தத்துக்கு ஆயத்தமாகிறார்கள்; எனக்குத் துணைசெய்ய விழித்து என்னை நோக்கிப்பாரும். 5. சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, இஸ்ரவேலின் தேவனே, நீர் சகல ஜாதிகளையும் விசாரிக்க விழித்தெழும்பும்; வஞ்சகமாய்த் துரோகஞ்செய்கிற ஒருவருக்கும் தயை செய்யாதேயும். (சேலா.) 6. அவர்கள் சாயங்காலத்தில் திரும்பிவந்து, நாய்களைப்போல ஊளையிட்டு, ஊரைச்சுற்றித் திரிகிறார்கள். 7. இதோ, தங்கள் வார்த்தைகளைக் கக்குகிறார்கள்; அவர்கள் உதடுகளில் பட்டயங்கள் இருக்கிறது, கேட்கிறவன் யார் என்கிறார்கள். 8. ஆனாலும் கர்த்தாவே, நீர் அவர்களைப் பார்த்து நகைப்பீர்; புறஜாதிகள் யாவரையும் இகழுவீர். 9. அவன் வல்லமையை நான் கண்டு, உமக்குக் காத்திருப்பேன்; தேவனே எனக்கு உயர்ந்த அடைக்கலம். 10. என் தேவன் தம்முடைய கிருபையினால் என்னைச் சந்திப்பார்; தேவன் என் சத்துருக்களுக்குவரும் நீதிசரிக்கட்டுதலை நான் காணும்படி செய்வார். 11. அவர்களைக் கொன்றுபோடாதேயும், என் ஜனங்கள் மறந்துபோவார்களே; எங்கள் கேடகமாகிய ஆண்டவரே, உமது வல்லமையினால் அவர்களைச் சிதறடித்து, அவர்களைத் தாழ்த்திப்போடும். 12. அவர்கள் உதடுகளின் பேச்சு அவர்கள் வாயின் பாவமாயிருக்கிறது; அவர்கள் இட்ட சாபமும் சொல்லிய பொய்யும் ஆகிய இவைகளினிமித்தம் தங்கள் பெருமையில் அகப்படுவார்களாக. 13. தேவன் பூமியின் எல்லைவரைக்கும் யாக்கோபிலே அரசாளுகிறவர் என்று அவர்கள் அறியும்பொருட்டு, அவர்களை உம்முடைய உக்கிரத்திலே நிர்மூலமாக்கும்; இனி இராதபடிக்கு அவர்களை நிர்மூலமாக்கும். (சேலா.) 14. அவர்கள் சாயங்காலத்தில் திரும்பிவந்து, நாய்களைப்போல ஊளையிட்டு, ஊரைச்சுற்றித் திரிகிறார்கள். 15. அவர்கள் உணவுக்காக அலைந்து திரிந்து திருப்தியடையாமல், முறுமுறுத்துக்கொண்டிருப்பார்கள். 16. நானோ உம்முடைய வல்லமையைப் பாடி, காலையிலே உம்முடைய கிருபையை மகிழ்ச்சியோடு புகழுவேன்; எனக்கு நெருக்கமுண்டான நாளிலே நீர் எனக்குத் தஞ்சமும் உயர்ந்த அடைக்கலமுமானீர். 17. என் பெலனே, உம்மைக் கீர்த்தனம்பண்ணுவேன்; தேவன் எனக்கு உயர்ந்த அடைக்கலமும், கிருபையுள்ள என் தேவனுமாயிருக்கிறார்.
Chapter 60
1. தேவனே, நீர் எங்களைக் கைவிட்டீர், எங்களைச் சிதறடித்தீர், எங்கள்மேல் கோபமாயிருந்தீர்; மறுபடியும் எங்களிடமாய்த் திரும்பியருளும். 2. பூமியை அதிரப்பண்ணி, அதை வெடிப்பாக்கினீர்; அதின் வெடிப்புகளைப் பொருந்தப்பண்ணும்; அது அசைகின்றது. 3. உம்முடைய ஜனங்களுக்குக் கடினமான காரியத்தைக் காண்பித்தீர்; தத்தளிப்பின் மதுபானத்தை எங்களுக்குக் குடிக்கக் கொடுத்தீர். 4. சத்தியத்தினிமித்தம் ஏற்றும்படியாக, உமக்குப் பயந்து நடக்கிறவர்களுக்கு ஒரு கொடியைக் கொடுத்தீர். (சேலா.) 5. உமது பிரியர் விடுவிக்கப்படும்படி, உமது வலதுகரத்தினால் இரட்சித்து, எனக்குச் செவிகொடுத்தருளும். 6. தேவன் தமது பரிசுத்தத்தைக்கொண்டு விளம்பினார், ஆகையால் களிகூருவேன்; சீகேமைப் பங்கிட்டு, சுக்கோத்தின் பள்ளத்தாக்கை அளந்துகொள்ளுவேன். 7. கீலேயாத் என்னுடையது, மனாசேயும் என்னுடையது, எப்பிராயீம் என் தலையின் பெலன், யூதா என் நியாயப்பிரமாணிகன். 8. மோவாப் என் பாதபாத்திரம், ஏதோமின்மேல் என் பாதரட்சையை எறிந்துபோடுவேன்; பெலிஸ்தியாவே, என்னிமித்தம் ஆர்ப்பரித்துக்கொள். 9. அரணான பட்டணத்திற்குள் என்னை நடத்திக்கொண்டுபோகிறவர் யார்? ஏதோம்மட்டும் எனக்கு வழிகாட்டுகிறவர் யார்? 10. எங்கள் சேனைகளோடே புறப்படாமலிருந்த தேவரீர் அல்லவோ? எங்களைத் தள்ளிவிட்டிருந்த தேவரீர் அல்லவோ? 11. இக்கட்டில் எங்களுக்கு உதவிசெய்யும்; மனுஷனுடைய உதவி விருதா. 12. தேவனாலே பராக்கிரமம் செய்வோம்; அவரே எங்கள் சத்துருக்களை மிதித்துப்போடுவார்.
Chapter 61
1. தேவனே, என் கூப்பிடுதலைக் கேட்டு, என் விண்ணப்பத்தைக் கவனியும். 2. என் இருதயம் தொய்யும்போது பூமியின் கடையாந்தரத்திலிருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்; எனக்கு எட்டாத உயரமான கன்மலையில் என்னைக் கொண்டுபோய்விடும். 3. நீர் எனக்கு அடைக்கலமும், சத்துருவுக்கு எதிரே பெலத்த துருகமுமாயிருந்தீர். 4. நான் உம்முடைய கூடாரத்தில் சதாகாலமும் தங்குவேன்; உமது செட்டைகளின் மறைவிலே வந்து அடைவேன். (சேலா.) 5. தேவனே, நீர் என் பொருத்தனைகளைக் கேட்டீர்; உமது நாமத்திற்குப் பயப்படுகிறவர்களின் சுதந்தரத்தை எனக்குத் தந்தீர். 6. ராஜாவின் நாட்களோடே நாட்களைக் கூட்டுவீர்; அவர் வருஷங்கள் தலைமுறை தலைமுறையாக இருக்கும். 7. அவர் தேவனுக்கு முன்பாக என்றென்றைக்கும் நிலைத்திருப்பார்; தயையும் உண்மையும் அவரைக் காக்கக் கட்டளையிடும். 8. இப்படியே தினமும் என் பொருத்தனைகளை நான் செலுத்தும்படியாக, உமது நாமத்தை என்றைக்கும் கீர்த்தனம்பண்ணுவேன்.
Chapter 62
1. தேவனையே நோக்கி என் ஆத்துமா அமர்ந்திருக்கிறது; அவரால் என் இரட்சிப்பு வரும். 2. அவரே என் கன்மலையும், என் இரட்சிப்பும், என் உயர்ந்த அடைக்கலமுமானவர்; நான் அதிகமாய் அசைக்கப்படுவதில்லை. 3. நீங்கள் எதுவரைக்கும் ஒரு மனுஷனுக்குத் தீங்குசெய்ய நினைப்பீர்கள், நீங்கள் அனைவரும் சங்கரிக்கப்படுவீர்கள், சாய்ந்தமதிலுக்கும் இடிந்தசுவருக்கும் ஒப்பாவீர்கள். 4. அவனுடைய மேன்மையிலிருந்து அவனைத் தள்ளும்படிக்கே அவர்கள் ஆலோசனைபண்ணி, அபத்தம்பேச விரும்புகிறார்கள்; தங்கள் வாயினால் ஆசீர்வதித்து, தங்கள் உள்ளத்தில் சபிக்கிறார்கள். (சேலா.) 5. என் ஆத்துமாவே, தேவனையே நோக்கி அமர்ந்திரு; நான் நம்புகிறது அவராலே வரும். 6. அவரே என் கன்மலையும், என் இரட்சிப்பும், என் உயர்ந்த அடைக்கலமுமானவர்; நான் அசைக்கப்படுவதில்லை. 7. என் இரட்சிப்பும், என் மகிமையும் தேவனிடத்தில் இருக்கிறது; பெலனான என் கன்மலையும் என் அடைக்கலமும் தேவனுக்குள் இருக்கிறது. 8. ஜனங்களே, எக்காலத்திலும் அவரை நம்புங்கள்; அவர் சமுகத்தில் உங்கள் இருதயத்தை ஊற்றிவிடுங்கள்; தேவன் நமக்கு அடைக்கலமாயிருக்கிறார். (சேலா.) 9. கீழ்மக்கள் மாயையும், மேன்மக்கள் பொய்யுமாமே; தராசிலே வைக்கப்பட்டால் அவர்களெல்லாரும் மாயையிலும் லேசானவர்கள். 10. கொடுமையை நம்பாதிருங்கள்; கொள்ளையினால் பெருமைபாராட்டாதிருங்கள்; ஐசுவரியம் விருத்தியானால் இருதயத்தை அதின்மேல் வைக்காதேயுங்கள். 11. தேவன் ஒருதரம் விளம்பினார், இரண்டுதரம் கேட்டிருக்கிறேன்; வல்லமை தேவனுடையது என்பதே. 12. கிருபையும் உம்முடையது, ஆண்டவரே! தேவரீர் அவனவன் செய்கைக்குத் தக்கதாகப் பலனளிக்கிறீர்.
Chapter 63
1. தேவனே, நீர் என்னுடைய தேவன்; அதிகாலமே உம்மைத் தேடுகிறேன்; வறண்டதும் விடாய்த்ததும் தண்ணீரற்றதுமான நிலத்திலே என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது, என் மாம்சமானது உம்மை வாஞ்சிக்கிறது. 2. இப்படியே பரிசுத்த ஸ்தலத்தில் உம்மைப்பார்க்க ஆசையாயிருந்து, உமது வல்லமையையும் உமது மகிமையையும் கண்டேன். 3. ஜீவனைப்பார்க்கிலும் உமது கிருபை நல்லது; என் உதடுகள் உம்மைத் துதிக்கும். 4. என் ஜீவனுள்ளமட்டும் நான் உம்மைத் துதித்து, உமது நாமத்தைச் சொல்லிக் கையெடுப்பேன். 5. நிணத்தையும் கொழுப்பையும் உண்டதுபோல என் ஆத்துமா திருப்தியாகும்; என் வாய் ஆனந்தக்களிப்புள்ள உதடுகளால் உம்மைப் போற்றும். 6. என் படுக்கையின்மேல் நான் உம்மை நினைக்கும்போது, இராச்சாமங்களில் உம்மைத் தியானிக்கிறேன். 7. நீர் எனக்குத் துணையாயிருந்ததினால், உமது செட்டைகளின் நிழலிலே களிகூருகிறேன். 8. என் ஆத்துமா உம்மைத் தொடர்ந்து பற்றிக்கொண்டிருக்கிறது; உமது வலதுகரம் என்னைத் தாங்குகிறது. 9. என் பிராணனை அழிக்கத் தேடுகிறவர்களோ, பூமியின் தாழ்விடங்களில் இறங்குவார்கள். 10. அவர்கள் பட்டயத்தால் விழுவார்கள்; நரிகளுக்கு இரையாவார்கள். 11. ராஜாவோ தேவனில் களிகூருவார்; அவர்பேரில் சத்தியம்பண்ணுகிறவர்கள் யாவரும் மேன்மைபாராட்டுவார்கள்; பொய் பேசுகிறவர்களின் வாய் அடைக்கப்படும்.
Chapter 64
1. தேவனே, என் விண்ணப்பத்தில் என் சத்தத்தைக் கேட்டருளும்; சத்துருவால் வரும் பயத்தை நீக்கி, என் பிராணனைக் காத்தருளும். 2. துன்மார்க்கர் செய்யும் இரகசிய ஆலோசனைக்கும், அக்கிரமக்காரருடைய கலகத்துக்கும் என்னை விலக்கி மறைத்தருளும். 3. அவர்கள் தங்கள் நாவைப் பட்டயத்தைப்போல் கூர்மையாக்கி, 4. மறைவுகளில் உத்தமன்மேல் எய்யும்பொருட்டுக் கசப்பான வார்த்தைகளாகிய தங்கள் அம்புகளை நாணேற்றுகிறார்கள்; சற்றும் பயமின்றிச் சடிதியில் அவன்மேல் எய்கிறார்கள். 5. அவர்கள் பொல்லாத காரியத்தில் தங்களை உறுதிப்படுத்திக்கொண்டு, மறைவான கண்ணிகளை வைக்க ஆலோசனைபண்ணி, அவைகளைக் காண்பவன் யார் என்கிறார்கள். 6. அவர்கள் நியாயக்கேடுகளை ஆய்ந்துதேடி, தந்திரமான யோசனை நிறைவேறும்படி பிரயத்தனம்பண்ணுகிறார்கள்; அவர்களில் ஒவ்வொருவனுடைய உட்கருத்தும் இருதயமும் ஆழமாயிருக்கிறது. 7. ஆனாலும் தேவன் அவர்கள்மேல் அம்புகளை எய்வார், சடிதியாய் அவர்கள் காயப்படுவார்கள். 8. அவர்கள் தள்ளப்பட்டு, கீழேவிழும்படி அவர்கள் நாவுகளே அவர்களைக் கெடுக்கும்; அவர்களைக் காண்கிற யாவரும் ஓடிப்போவார்கள். 9. எல்லா மனுஷரும் பயந்து, தேவனுடைய செயலை அறிவித்து, அவர் கிரியையை உணர்ந்துகொள்வார்கள். 10. நீதிமான் கர்த்தருக்குள் மகிழ்ந்து, அவரை நம்புவான்; செம்மையான இருதயமுள்ளவர்கள் யாவரும் மேன்மைபாராட்டுவார்கள்.
Chapter 65
1. தேவனே, சீயோனில் உமக்காகத் துதியானது அமைந்து காத்திருக்கிறது; பொருத்தனை உமக்குச் செலுத்தப்படும். 2. ஜெபத்தைக் கேட்கிறவரே, மாம்சமான யாவரும் உம்மிடத்தில் வருவார்கள். 3. அக்கிரம விஷயங்கள் என்மேல் மிஞ்சி வல்லமைகொண்டது; தேவரீரோ எங்கள் மீறுதல்களை நிவிர்த்தியாக்குகிறீர். 4. உம்முடைய பிராகாரங்களில் வாசமாயிருக்கும்படி நீர் தெரிந்துகொண்டு சேர்த்துக்கொள்ளுகிறவன் பாக்கியவான்; உம்முடைய பரிசுத்த ஆலயமாகிய உமது வீட்டின் நன்மையால் திருப்தியாவோம். 5. பூமியின் கடையாந்தரங்களிலும் தூரமான சமுத்திரங்களிலுமுள்ளவர்கள் எல்லாரும் நம்பும் நம்பிக்கையாயிருக்கிற எங்கள் இரட்சிப்பின் தேவனே, நீர் பயங்கரமான காரியங்களைச் செய்கிறதினால் எங்களுக்கு நீதியுள்ள உத்தரவு அருளுகிறீர். 6. வல்லமையை இடைகட்டிக்கொண்டு, உம்முடைய பலத்தினால் பர்வதங்களை உறுதிப்படுத்தி, 7. சமுத்திரங்களின் மும்முரத்தையும் அவைகளுடைய அலைகளின் இரைச்சலையும், ஜனங்களின் அமளியையும் அமர்த்துகிறீர். 8. கடையாந்தர இடங்களில் குடியிருக்கிறவர்களும் உம்முடைய அடையாளங்களினிமித்தம் பயப்படுகிறார்கள்; காலையையும் மாலையையும் களிகூரப்பண்ணுகிறீர். 9. தேவரீர் பூமியை விசாரித்து அதற்கு நீர்ப்பாய்ச்சுகிறீர்; தண்ணீர் நிறைந்த தேவநதியினால் அதை மிகவும் செழிப்பாக்குகிறீர்; இப்படி நீர் அதைத் திருத்தி, அவர்களுக்குத் தானியத்தை விளைவிக்கிறீர். 10. அதின் வரப்புகள் தணியத்தக்கதாய் அதின் படைச்சால்களுக்குத் தண்ணீர் இறைத்து, அதை மழைகளால் கரையப்பண்ணி, அதின் பயிரை ஆசீர்வதிக்கிறீர். 11. வருஷத்தை உம்முடைய நன்மையால் முடிசூட்டுகிறீர்; உமது பாதைகள் நெய்யாய்ப் பொழிகிறது. 12. வனாந்தர தாபரங்களிலும் பொழிகிறது; மேடுகள் சுற்றிலும் பூரிப்பாயிருக்கிறது. 13. மேய்ச்சலுள்ள வெளிகளில் ஆடுகள் நிறைந்திருக்கிறது; பள்ளத்தாக்குகள் தானியத்தால் மூடியிருக்கிறது; அவைகள் கெம்பீரித்துப் பாடுகிறது.
Chapter 66
1. பூமியின் குடிகளே, நீங்கள் எல்லாரும் தேவனுக்கு முன்பாகக் கெம்பீரமாய்ப் பாடுங்கள். 2. அவர் நாமத்தின் மகத்துவத்தைக் கீர்த்தனம்பண்ணி, அவருடைய துதியின் மகிமையைக் கொண்டாடுங்கள். 3. தேவனை நோக்கி: உமது கிரியைகளில் எவ்வளவு பயங்கரமாயிருக்கிறீர்; உமது மகத்துவமான வல்லமையினிமித்தம் உம்முடைய சத்துருக்கள் உமக்கு இச்சகம்பேசி அடங்குவார்கள். 4. பூமியின்மீதெங்கும் உம்மைப் பணிந்துகொண்டு உம்மைத் துதித்துப் பாடுவார்கள்; அவர்கள் உம்முடைய நாமத்தைத் துதித்துப் பாடுவார்கள் என்று சொல்லுங்கள். (சேலா.) 5. தேவனுடைய செய்கைகளை வந்து பாருங்கள்; அவர் மனுபுத்திரரிடத்தில் நடப்பிக்குங் கிரியையில் பயங்கரமானவர். 6. கடலை உலர்ந்த தரையாக மாற்றினார்; ஆற்றைக் கால்நடையாய்க் கடந்தார்கள்; அங்கே அவரில் களிகூர்ந்தோம். 7. அவர் தம்முடைய வல்லமையினால் என்றென்றைக்கும் அரசாளுகிறார்; அவருடைய கண்கள் ஜாதிகள்மேல் நோக்கமாயிருக்கிறது; துரோகிகள் தங்களை உயர்த்தாதிருப்பார்களாக. (சேலா.) 8. ஜனங்களே, நம்முடைய தேவனை ஸ்தோத்திரித்து, அவரைத் துதிக்குஞ்சத்தத்தைக் கேட்கப்பண்ணுங்கள். 9. அவர் நம்முடைய கால்களைத் தள்ளாடவொட்டாமல், நம்முடைய ஆத்துமாவை உயிரோடே வைக்கிறார். 10. தேவனே, எங்களைச் சோதித்தீர்; வெள்ளியைப் புடமிடுகிறதுபோல எங்களைப் புடமிட்டீர். 11. எங்களை வலையில் அகப்படுத்தி, எங்கள் இடுப்புகளின்மேல் வருத்தமான பாரத்தை ஏற்றினீர். 12. மனுஷரை எங்கள் தலையின்மேல் ஏறிப்போகப்பண்ணினீர்; தீயையும் தண்ணீரையும் கடந்துவந்தோம்; செழிப்பான இடத்தில் எங்களைக் கொண்டுவந்து விட்டீர். 13. சர்வாங்க தகனபலிகளோடே உமது ஆலயத்திற்குள் பிரவேசிப்பேன்; 14. என் இக்கட்டில் நான் என் உதடுகளைத் திறந்து, என் வாயினால் சொல்லிய என் பொருத்தனைகளை உமக்குச் செலுத்துவேன். 15. ஆட்டுக்கடாக்களின் நிணப்புகையுடனே கொழுமையானவைகளை உமக்குத் தகனபலியாக இடுவேன்; காளைகளையும் செம்மறியாட்டுக் கடாக்களையும் உமக்குப் பலியிடுவேன். (சேலா.) 16. தேவனுக்குப் பயந்தவர்களே, நீங்கள் எல்லாரும் வந்து கேளுங்கள்; அவர் என் ஆத்துமாவுக்குச் செய்ததைச் சொல்லுவேன். 17. அவரை நோக்கி என் வாயினால் கூப்பிட்டேன், என் நாவினால் அவர் புகழப்பட்டார். 18. என் இருதயத்தில் அக்கிரமசிந்தை கொண்டிருந்தேனானால், ஆண்டவர் எனக்குச் செவிகொடார். 19. மெய்யாய் தேவன் எனக்குச் செவிகொடுத்தார், என் ஜெபத்தின் சத்தத்தைக் கேட்டார். 20. என் ஜெபத்தைத் தள்ளாமலும், தமது கிருபையை என்னைவிட்டு விலக்காமலும் இருந்த தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக.
Chapter 67
1. தேவனே, பூமியில் உம்முடைய வழியும், எல்லா ஜாதிகளுக்குள்ளும் உம்முடைய இரட்சணியமும் விளங்கும்படியாய், 2. தேவரீர் எங்களுக்கு இரங்கி, எங்களை ஆசீர்வதித்து, உம்முடைய முகத்தை எங்கள்மேல் பிரகாசிக்கப்பண்ணும். (சேலா.) 3. தேவனே, ஜனங்கள் உம்மைத் துதிப்பார்களாக; சகல ஜனங்களும் உம்மைத் துதிப்பார்களாக. 4. தேவரீர் ஜனங்களை நிதானமாய் நியாயந்தீர்த்து, பூமியிலுள்ள ஜாதிகளை நடத்துவீர்; ஆதலால் ஜாதிகள் சந்தோஷித்து, கெம்பீரத்தோடே மகிழக்கடவர்கள். (சேலா.) 5. தேவனே, ஜனங்கள் உம்மைத் துதிப்பார்களாக; சகல ஜனங்களும் உம்மைத் துதிப்பார்களாக. 6. பூமி தன் பலனைத் தரும், தேவனாகிய எங்கள் தேவனே எங்களை ஆசீர்வதிப்பார். 7. தேவன் எங்களை ஆசீர்வதிப்பார்; பூமியின் எல்லைகளெல்லாம் அவருக்குப் பயந்திருக்கும்.
Chapter 68
1. தேவன் எழுந்தருளுவார், அவருடைய சத்துருக்கள் சிதறுண்டு, அவரைப் பகைக்கிறவர்கள் அவருக்கு முன்பாக ஓடிப்போவார்கள். 2. புகை பறக்கடிக்கப்படுவதுபோல அவர்களைப் பறக்கடிப்பீர்; மெழுகு அக்கினிக்குமுன் உருகுவதுபோல துன்மார்க்கர் தேவனுக்குமுன் அழிவார்கள். 3. நீதிமான்களோ தேவனுக்குமுன்பாக மகிழ்ந்து களிகூர்ந்து, ஆனந்த சந்தோஷமடைவார்கள். 4. தேவனைப் பாடி, அவருடைய நாமத்தைக் கீர்த்தனம்பண்ணுங்கள்; வனாந்தரங்களில் ஏறிவருகிறவருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள்; அவருடைய நாமம் யேகோவா, அவருக்கு முன்பாகக் களிகூருங்கள். 5. தம்முடைய பரிசுத்த வாசஸ்தலத்திலிருக்கிற தேவன், திக்கற்ற பிள்ளைகளுக்குத் தகப்பனும், விதவைகளுக்கு நியாயம் விசாரிக்கிறவருமாயிருக்கிறார். 6. தேவன் தனிமையானவர்களுக்கு வீடுவாசல் ஏற்படுத்தி, கட்டுண்டவர்களை விடுதலையாக்குகிறார்; துரோகிகளோ வறண்ட பூமியில் தங்குவார்கள். 7. தேவனே, நீர் உம்முடைய ஜனங்களுக்கு முன்னே சென்று, அவாந்தரவெளியிலே நடந்துவருகையில், (சேலா.) 8. பூமி அதிர்ந்தது; தேவனாகிய உமக்கு முன்பாக வானமும் பொழிந்தது; இஸ்ரவேலின் தேவனாயிருக்கிற தேவனுக்கு முன்பாகவே இந்தச் சீனாய் மலையும் அசைந்தது. 9. தேவனே, சம்பூரண மழையைப் பெய்யப்பண்ணினீர்; இளைத்துப்போன உமது சுதந்தரத்தைத் திடப்படுத்தினீர். 10. உம்முடைய மந்தை அதிலே தங்கியிருந்தது; தேவனே, உம்முடைய தயையினாலே ஏழைகளைப் பராமரிக்கிறீர். 11. ஆண்டவர் வசனம் தந்தார்; அதைப் பிரசித்தப்படுத்துகிறவர்களின் கூட்டம் மிகுதி. 12. சேனைகளின் ராஜாக்கள் தத்தளித்து ஓடினார்கள்; வீட்டிலிருந்த ஸ்திரீயானவள் கொள்ளைப்பொருளைப் பங்கிட்டாள். 13. நீங்கள் அடுப்பினடியில் கிடந்தவர்களாயிருந்தாலும், வெள்ளியால் அலங்கரிக்கப்பட்ட புறாச்சிறகுகள்போலவும், பசும்பொன் நிறமாகிய அதின் இறகுகளின் சாயலாகவும் இருப்பீர்கள். 14. சர்வவல்லவர் அதில் ராஜாக்களைச் சிதறடித்தபோது, அது சல்மோன் மலையின் உறைந்த மழைபோல் வெண்மையாயிற்று. 15. தேவபர்வதம் பாசான் பர்வதம்போலிருக்கிறது; பாசான் பர்வதம் உயர்ந்த சிகரங்களுள்ளது. 16. உயர்ந்த சிகரமுள்ள பர்வதங்களே, ஏன் துள்ளுகிறீர்கள்; இந்தப் பர்வதத்தில் வாசமாயிருக்க தேவன் விரும்பினார்; ஆம், கர்த்தர் இதிலே என்றென்றைக்கும் வாசமாயிருப்பார். 17. தேவனுடைய இரதங்கள் பதினாயிரங்களும், ஆயிரமாயிரங்களுமாயிருக்கிறது; ஆண்டவர் பரிசுத்த ஸ்தலமான சீனாயிலிருந்தவண்ணமாய் அவைகளுக்குள் இருக்கிறார். 18. தேவரீர் உன்னதத்திற்கு ஏறி, சிறைப்பட்டவர்களைச் சிறையாக்கிக் கொண்டுபோனீர்; தேவனாகிய கர்த்தர் மனுஷருக்குள் வாசம்பண்ணும் பொருட்டு, துரோகிகளாகிய மனுஷர்களுக்காகவும் வரங்களைப் பெற்றுக்கொண்டீர். 19. எந்நாளும் ஆண்டவருக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக; நம்மேல் பாரஞ்சுமத்தினாலும் நம்மை இரட்சிக்கிற தேவன் அவரே. (சேலா.) 20. நம்முடைய தேவன் இரட்சிப்பை அருளும் தேவனாயிருக்கிறார்; ஆண்டவராகிய கர்த்தரால் மரணத்திற்கு நீங்கும் வழிகளுண்டு. 21. மெய்யாகவே தேவன் தம்முடைய சத்துருக்களின் சிரசையும், தன் அக்கிரமங்களில் துணிந்து நடக்கிறவனுடைய மயிருள்ள உச்சந்தலையையும் உடைப்பார். 22. உன் கால்கள் சத்துருக்களின் இரத்தத்தில் பதியும்படியாகவும், உன் நாய்களின் நாவு அதை நக்கும்படியாகவும், 23. என்னுடைய ஜனத்தைப் பாசானிலிருந்து திரும்ப அழைத்துவருவேன்; அதைச் சமுத்திர ஆழங்களிலிருந்தும் திரும்ப அழைத்துவருவேன் என்று ஆண்டவர் சொன்னார். 24. தேவனே, உம்முடைய நடைகளைக் கண்டார்கள்; என் தேவனும் என் ராஜாவும் பரிசுத்த ஸ்தலத்திலே நடந்துவருகிற நடைகளையே கண்டார்கள். 25. முன்னாகப் பாடுகிறவர்களும், பின்னாக வீணைகளை வாசிக்கிறவர்களும், சுற்றிலும் தம்புரு வாசிக்கிற கன்னிகைகளும் நடந்தார்கள். 26. இஸ்ரவேலின் ஊற்றிலிருந்து தோன்றினவர்களே, சபைகளின் நடுவே ஆண்டவராகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள். 27. அங்கே அவர்களை ஆளுகிற சின்ன பென்யமீனும், யூதாவின் பிரபுக்களும், அவர்கள் கூட்டமும், செபுலோனின் பிரபுக்களும், நப்தலியின் பிரபுக்களும் உண்டு. 28. உன் தேவன் உனக்குப் பலத்தைக் கட்டளையிட்டார்; தேவனே, நீர் எங்கள்நிமித்தம் உண்டுபண்ணினதைத் திடப்படுத்தும். 29. எருசலேமிலுள்ள உம்முடைய ஆலயத்தினிமித்தம், ராஜாக்கள் உமக்குக் காணிக்கைகளைக் கொண்டுவருவார்கள். 30. நாணலிலுள்ள மிருககூட்டத்தையும், ஜனங்களாகிய கன்றுகளோடுகூட ரிஷப கூட்டத்தையும் அதட்டும்; ஒவ்வொருவனும் வெள்ளிப்பணங்களைக் கொண்டுவந்து பணிந்துகொள்ளுவான்; யுத்தங்களில் பிரியப்படுகிற ஜனங்களைச் சிதறடிப்பார். 31. பிரபுக்கள் எகிப்திலிருந்து வருவார்கள்; எத்தியோப்பியா தேவனை நோக்கி கையெடுக்கத் தீவிரிக்கும். 32. பூமியின் ராஜ்யங்களே, தேவனைப் பாடி, ஆண்டவரைக் கீர்த்தனம் பண்ணுங்கள். (சேலா.) 33. ஆதிமுதலாயிருக்கிற வானாதி வானங்களின்மேல் எழுந்தருளியிருக்கிறவரைப் பாடுங்கள்; இதோ, தமது சத்தத்தைப் பலத்த சத்தமாய் முழங்கப்பண்ணுகிறார். 34. தேவனுடைய வல்லமையைப் பிரசித்தப்படுத்துங்கள்; அவருடைய மகிமை இஸ்ரவேலின்மேலும், அவருடைய வல்லமை மேகமண்டலங்களிலும் உள்ளது. 35. தேவனே, உமது பரிசுத்த ஸ்தலங்களிலிருந்து பயங்கரமாய் விளங்குகிறீர்; இஸ்ரவேலின் தேவன் தம்முடைய ஜனங்களுக்குப் பெலனையும் சத்துவத்தையும் அருளுகிறவர்; தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக.
Chapter 69
1. தேவனே, என்னை இரட்சியும்; வெள்ளங்கள் என் ஆத்துமாமட்டும் பெருகிவருகிறது. 2. ஆழமான உளையில் அமிழ்ந்திருக்கிறேன், நிற்க நிலையில்லை, நிலையாத ஜலத்தில் ஆழ்ந்திருக்கிறேன்; வெள்ளங்கள் என்மேல் புரண்டுபோகிறது. 3. நான் கூப்பிடுகிறதினால் இளைத்தேன்; என் தொண்டை வறண்டுபோயிற்று; என் தேவனுக்கு நான் காத்திருக்கையால், என் கண்கள் பூத்துப்போயிற்று. 4. நிமித்தமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என் தலைமயிரிலும் அதிகமாயிருக்கிறார்கள்; வீணாக எனக்குச் சத்துருக்களாகி என்னைச் சங்கரிக்கவேண்டுமென்றிருக்கிறவர்கள் பலத்திருக்கிறார்கள்; நான் எடுத்துக்கொள்ளாததை நான் கொடுக்க வேண்டியதாயிற்று. 5. தேவனே, நீர் என் புத்தியீனத்தை அறிந்திருக்கிறீர்; என் குற்றங்கள் உமக்கு மறைந்திருக்கவில்லை. 6. சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவரே, உமக்காகக் காத்திருக்கிறவர்கள் என்னிமித்தம் வெட்கப்பட்டுப்போகாதிருப்பார்களாக; இஸ்ரவேலின் தேவனே, உம்மைத் தேடுகிறவர்கள் என்னிமித்தம் நாணமடையாதிருப்பார்களாக. 7. உமதுநிமித்தம் நிந்தையைச் சகித்தேன்; இலச்சை என் முகத்தை மூடிற்று. 8. என் சகோதரருக்கு வேற்று மனுஷனும், என் தாயின் பிள்ளைகளுக்கு அந்நியனுமானேன். 9. உம்முடைய வீட்டைக்குறித்து உண்டான பக்திவைராக்கியம் என்னைப் பட்சித்தது; உம்மை நிந்திக்கிறவர்களுடைய நிந்தனைகள் என்மேல் விழுந்தது. 10. என் ஆத்துமா வாடும்படி உபவாசித்து அழுதேன்; அதுவும் எனக்கு நிந்தையாய் முடிந்தது. 11. இரட்டை என் உடுப்பாக்கினேன்; அப்பொழுதும் அவர்களுக்குப் பழமொழியானேன். 12. வாசலில் உட்கார்ந்திருக்கிறவர்கள் எனக்கு விரோதமாய்ப் பேசுகிறார்கள்; மதுபானம்பண்ணுகிறவர்களின் பாடலானேன். 13. ஆனாலும் கர்த்தாவே, அநுக்கிரககாலத்திலே உம்மை நோக்கி விண்ணப்பஞ் செய்கிறேன்; தேவனே, உமது மிகுந்த கிருபையினாலும் உமது இரட்சிப்பின் சத்தியத்தினாலும் எனக்குச் செவிகொடுத்தருளும். 14. நான் அமிழ்ந்திப்போகாதபடிக்குச் சேற்றினின்று என்னைத் தூக்கிவிடும்; என்னைப் பகைக்கிறவர்களினின்றும் நிலையாத ஜலத்தினின்றும் நான் நீங்கும்படி செய்யும். 15. ஜலப்பிரவாகங்கள் என்மேல் புரளாமலும், ஆழம் என்னை விழுங்காமலும், பாதாளம் என்மேல் தன் வாயை அடைத்துக்கொள்ளாமலும் இருப்பதாக. 16. கர்த்தாவே, என் விண்ணப்பத்தைக் கேட்டருளும், உம்முடைய தயை நலமாயிருக்கிறது; உமது உருக்கமான இரக்கங்களின்படி என்னைக் கடாட்சித்தருளும். 17. உமது முகத்தை உமது அடியேனுக்கு மறையாதேயும்; நான் வியாகுலப்படுகிறேன், எனக்குத் தீவிரமாய்ச் செவிகொடுத்தருளும். 18. நீர் என் ஆத்துமாவினிடத்தில் வந்து அதை விடுதலைபண்ணும்; என் சத்துருக்களினிமித்தம் என்னை மீட்டுவிடும். 19. தேவரீர் என் நிந்தையையும் என் வெட்கத்தையும் என் அவமானத்தையும் அறிந்திருக்கிறீர்; என் சத்துருக்கள் எல்லாரும் உமக்கு முன்பாக இருக்கிறார்கள். 20. நிந்தை என் இருதயத்தைப் பிளந்தது; நான் மிகவும் வேதனைப்படுகிறேன்; எனக்காக பரிதபிக்கிறவனுண்டோ என்று காத்திருந்தேன், ஒருவனும் இல்லை; தேற்றுகிறவர்களுக்குக் காத்திருந்தேன், ஒருவனையும் காணேன். 21. என் ஆகாரத்தில் கசப்புக் கலந்து கொடுத்தார்கள், என் தாகத்துக்குக் காடியைக் குடிக்கக்கொடுத்தார்கள். 22. அவர்களுடைய பந்தி அவர்களுக்குக் கண்ணியும், அவர்களுடைய செல்வம் அவர்களுக்கு வலையுமாயிருக்கக்கடவது. 23. அவர்களுடைய கண்கள் காணாதபடி அந்தகாரப்படக்கடவது; அவர்கள் இடுப்புகளை எப்போதும் தள்ளாடப்பண்ணும். 24. உம்முடைய உக்கிரத்தை அவர்கள்மேல் ஊற்றும்; உம்முடைய கோபாக்கினி அவர்களைத் தொடர்ந்து பிடிப்பதாக. 25. அவர்கள் வாசஸ்தலம் பாழாகக்கடவது; அவர்களுடைய கூடாரங்களில் குடியில்லாமற்போவதாக. 26. தேவரீர் அடித்தவனை அவர்கள் துன்பப்படுத்தி, நீர் காயப்படுத்தினவர்களை நோகப் பேசுகிறார்களே. 27. அக்கிரமத்தின்மேல் அக்கிரமத்தை அவர்கள்மேல் சுமத்தும், அவர்கள் உமது நீதிக்கு வந்தெட்டாதிருப்பார்களாக. 28. ஜீவபுஸ்தகத்திலிருந்து அவர்கள்பேர் கிறுக்கப்பட்டுப்போவதாக; நீதிமான்கள் பேரோடே அவர்கள் பேர் எழுதப்படாதிருப்பதாக. 29. நானோ சிறுமையும் துயரமுமுள்ளவன்; தேவனே, உம்முடைய இரட்சிப்பு எனக்கு உயர்ந்த அடைக்கலமாவதாக. 30. தேவனுடைய நாமத்தைப் பாட்டினால் துதித்து, அவரை ஸ்தோத்திரத்தினால் மகிமைப்படுத்துவேன். 31. கொம்பும் விரிகுளம்புமுள்ள காளையெருதைப்பார்க்கிலும், இதுவே கர்த்தருக்குப் பிரியமாயிருக்கும். 32. சாந்தகுணமுள்ளவர்கள் இதைக் கண்டு சந்தோஷப்படுவார்கள்; தேவனைத் தேடுகிறவர்களே, உங்கள் இருதயம் வாழும். 33. கர்த்தர் எளியவர்களின் விண்ணப்பத்தைக் கேட்கிறார், கட்டுண்ட தம்முடையவர்களை அவர் புறக்கணியார். 34. வானமும் பூமியும் சமுத்திரங்களும் அவைகளில் சஞ்சரிக்கிற யாவும் அவரைத் துதிக்கக்கடவது. 35. தேவன் சீயோனை இரட்சித்து, யூதாவின் பட்டணங்களைக் கட்டுவார்; அப்பொழுது அங்கே குடியிருந்து அதைச் சுதந்தரித்துக்கொள்வார்கள். 36. அவருடைய ஊழியக்காரரின் சந்ததியார் அதைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்; அவருடைய நாமத்தை நேசிக்கிறவர்கள் அதில் வாசமாயிருப்பார்கள்.
Chapter 70
1. தேவனே, என்னை விடுவியும், கர்த்தாவே, எனக்குச் சகாயஞ்செய்யத் தீவிரியும். 2. என் பிராணனை வாங்கத்தேடுகிறவர்கள் வெட்கி நாணுவார்களாக; எனக்குத் தீங்குவரும்படி விரும்புகிறவர்கள் பின்னிட்டுத் திரும்பி இலச்சையடைவார்களாக. 3. ஆ ஆ, ஆ ஆ, என்பவர்கள் தாங்கள் அடையும் வெட்கத்தினால் பின்னிட்டுப்போவார்களாக. 4. உம்மைத் தேடுகிற யாவரும் உம்மில் மகிழ்ந்து சந்தோஷப்படுவார்களாக; உமது இரட்சிப்பில் பிரியப்படுகிறவர்கள் தேவனுக்கு மகிமையுண்டாவதாக என்று எப்பொழுதும் சொல்வார்களாக. 5. நானோ சிறுமையும் எளிமையுமானவன்; தேவனே, என்னிடத்தில் தீவிரமாய் வாரும்: நீரே என் துணையும் என்னை விடுவிக்கிறவருமானவர், கர்த்தாவே, தாமதியாதேயும்.
Chapter 71
1. கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிறேன்; நான் ஒருபோதும் வெட்கம் அடையாதபடி செய்யும். 2. உமது நீதியினிமித்தம் என்னை விடுவித்து, என்னைக் காத்தருளும்; உமது செவியை எனக்குச் சாய்த்து, என்னை இரட்சியும். 3. நான் எப்பொழுதும் வந்தடையத்தக்கக் கன்மலையாயிரும்; என்னை இரட்சிப்பதற்குக் கட்டளையிட்டீரே; நீரே என் கன்மலையும் என் கோட்டையுமாய் இருக்கிறீர். 4. என் தேவனே, துன்மார்க்கனுடைய கைக்கும், நியாயக்கேடும் கொடுமையுமுள்ளவனுடைய கைக்கும் என்னைத் தப்புவியும். 5. கர்த்தராகிய ஆண்டவரே, நீரே என் நோக்கமும், என் சிறுவயதுதொடங்கி என் நம்பிக்கையுமாயிருக்கிறீர். 6. நான் கர்ப்பத்தில் உற்பவித்ததுமுதல் உம்மால் ஆதரிக்கப்பட்டேன்; என் தாயின் வயிற்றிலிருந்து என்னை எடுத்தவர் நீரே; உம்மையே நான் எப்பொழுதும் துதிப்பேன். 7. அநேகருக்கு நான் ஒரு புதுமைப்போலானேன்; நீரோ எனக்குப் பலத்த அடைக்கலமாயிருக்கிறீர். 8. என் வாய் உமது துதியினாலும், நாள்தோறும் உமது மகத்துவத்தினாலும் நிறைந்திருப்பதாக. 9. முதிர்ந்தவயதில் என்னைத் தள்ளிவிடாமலும், என் பெலன் ஒடுங்கும்போது என்னைக் கைவிடாமலும் இரும். 10. என் சத்துருக்கள் எனக்கு விரோதமாய்ப் பேசி, என் ஆத்துமாவுக்குக் காத்திருக்கிறவர்கள் ஏகமாய் ஆலோசனைபண்ணி: 11. தேவன் அவனைக் கைவிட்டார், அவனைத் தொடர்ந்துபிடியுங்கள்; அவனை விடுவிப்பார் இல்லை என்கிறார்கள். 12. தேவனே, எனக்குத் தூரமாயிராதேயும்; என் தேவனே, எனக்குச் சகாயம்பண்ணத் தீவிரியும். 13. என் ஆத்துமாவை விரோதிக்கிறவர்கள் வெட்கி அழியவும், எனக்குப் பொல்லாப்புத் தேடுகிறவர்கள் நிந்தையாலும் இலச்சையாலும் மூடப்படவுங்கடவர்கள். 14. நானோ எப்பொழுதும் நம்பிக்கைகொண்டிருந்து, மேன்மேலும் உம்மைத் துதிப்பேன். 15. என் வாய் நாள்தோறும் உமது நீதியையும் உமது இரட்சிப்பையும் சொல்லும்; அவைகளின் தொகையை நான் அறியேன். 16. கர்த்தராகிய ஆண்டவருடைய வல்லமையை முன்னிட்டு நடப்பேன்; உம்முடைய நீதியைப்பற்றியே மேன்மைபாராட்டுவேன். 17. தேவனே, என் சிறுவயதுமுதல் எனக்குப் போதித்துவந்தீர்; இதுவரைக்கும் உம்முடைய அதிசயங்களை அறிவித்துவந்தேன். 18. இப்பொழுதும் தேவனே, இந்தச் சந்ததிக்கு உமது வல்லமையையும், வரப்போகிற யாவருக்கும் உமது பராக்கிரமத்தையும் நான் அறிவிக்குமளவும், முதிர்வயதும் நரைமயிருமுள்ளவனாகும்வரைக்கும் என்னைக் கைவிடீராக. 19. தேவனே, உம்முடைய நீதி உன்னதமானது, பெரிதானவைகளை நீர் செய்தீர்; தேவனே, உமக்கு நிகரானவர் யார்? 20. அநேக இக்கட்டுகளையும் ஆபத்துகளையும் காணும்படி செய்த என்னை நீர் திரும்பவும் உயிர்ப்பித்து, திரும்பவும் என்னைப் பூமியின் பாதாளங்களிலிருந்து ஏறப்பண்ணுவீர். 21. என் மேன்மையைப் பெருகப்பண்ணி, என்னை மறுபடியும் தேற்றுவீர். 22. என் தேவனே, நான் வீணையைக்கொண்டு உம்மையும் உம்முடைய சத்தியத்தையும் துதிப்பேன்; இஸ்ரவேலின் பரிசுத்தரே, சுரமண்டலத்தைக்கொண்டு உம்மைப் பாடுவேன். 23. நான் பாடும்போது என் உதடுகளும், நீர் மீட்டுக்கொண்ட என் ஆத்துமாவும் கெம்பீரித்து மகிழும். 24. எனக்குப் பொல்லாப்பைத் தேடுகிறவர்கள் வெட்கி இலச்சையடைந்தபடியால், நாள்தோறும் என் நாவு உமது நீதியைக் கொண்டாடும்.
Chapter 72
1. தேவனே, ராஜாவுக்கு உம்முடைய நியாயத்தீர்ப்புகளையும், ராஜாவின் குமாரனுக்கு உம்முடைய நீதியையும் கொடுத்தருளும். 2. அவர் உம்முடைய ஜனங்களை நீதியோடும், உம்முடைய ஏழைகளை நியாயத்தோடும் விசாரிப்பார். 3. பர்வதங்கள் ஜனத்திற்குச் சமாதானத்தைத் தரும், மேடுகள் நீதியின் விளைவோடிருக்கும். 4. ஜனத்தில் சிறுமைப்படுகிறவர்களை அவர் நியாயம் விசாரித்து, ஏழையின் பிள்ளைகளை இரட்சித்து, இடுக்கண் செய்கிறவனை நொறுக்குவார். 5. சூரியனும் சந்திரனுமுள்ளமட்டும், அவர்கள் உமக்குத் தலைமுறை தலைமுறையாகப் பயந்திருப்பார்கள். 6. புல்லறுப்புண்ட வெளியின்மேல் பெய்யும் மழையைப்போலவும், பூமியை நனைக்கும் தூறலைப்போலவும் இறங்குவார். 7. அவருடைய நாட்களில் நீதிமான் செழிப்பான்; சந்திரனுள்ளவரைக்கும் மிகுந்த சமாதானம் இருக்கும். 8. ஒரு சமுத்திரந்தொடங்கி மறுசமுத்திரம்வரைக்கும், நதிதொடங்கி பூமியின் எல்லைகள்வரைக்கும் அவர் அரசாளுவார். 9. வனாந்தரத்தார் அவருக்கு முன்பாகக் குனிந்து வணங்குவார்கள்; அவருடைய சத்துருக்கள் மண்ணை நக்குவார்கள். 10. தர்ஷீசின் ராஜாக்களும் தீவுகளின் ராஜாக்களும் காணிக்கைகளைக் கொண்டுவருவார்கள்; ஷேபாவிலும் சேபாவிலுமுள்ள ராஜாக்கள் வெகுமானங்களைக் கொண்டுவருவார்கள். 11. சகல ராஜாக்களும் அவரைப் பணிந்துகொள்வார்கள்; சகல ஜாதிகளும் அவரைச் சேவிப்பார்கள். 12. கூப்பிடுகிற எளியவனையும், உதவியற்ற சிறுமையானவனையும் அவர் விடுவிப்பார். 13. பலவீனனுக்கும் எளியவனுக்கும் அவர் இரங்கி, எளியவர்களின் ஆத்துமாக்களை இரட்சிப்பார். 14. அவர்கள் ஆத்துமாக்களை வஞ்சகத்திற்கும் கொடுமைக்கும் தப்புவிப்பார்; அவர்களுடைய இரத்தம் அவருடைய பார்வைக்கு அருமையாயிருக்கும். 15. அவர் பிழைத்திருப்பார், ஷேபாவின் பொன் அவருக்குக் கொடுக்கப்படும்; அவர்நிமித்தம் இடைவிடாமல் ஜெபம்பண்ணப்படும், எந்நாளும் ஸ்தோத்திரிக்கப்படுவார். 16. பூமியிலே மலைகளின் உச்சிகளில் ஒரு பிடி தானியம் விதைக்கப்பட்டிருக்கும்; அதின் விளைவு லீபனோனைப்போல அசையும்; பூமியின் புல்லைப்போல நகரத்தார் செழித்தோங்குவார்கள். 17. அவருடைய நாமம் என்றென்றைக்கும் இருக்கும்; சூரியனுள்ளமட்டும் அவருடைய நாமம் சந்தான பரம்பரையாய் நிலைக்கும்; மனுஷர் அவருக்குள் ஆசீர்வதிக்கப்படுவார்கள், எல்லா ஜாதிகளும் அவரைப் பாக்கியமுடையவர் என்று வாழ்த்துவார்கள். 18. இஸ்ரவேலின் தேவனாயிருக்கிற கர்த்தராகிய தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக; அவரே அதிசயங்களைச் செய்கிறவர். 19. அவருடைய மகிமைபொருந்திய நாமத்துக்கு என்றென்றைக்கும் ஸ்தோத்திரமுண்டாவதாக; பூமி முழுவதும் அவருடைய மகிமையால் நிறைந்திருப்பதாக. ஆமென், ஆமென். 20. ஈசாயின் புத்திரனாகிய தாவீதின் விண்ணப்பங்கள் முடிந்தது.
Chapter 73
1. சுத்த இருதயமுள்ளவர்களாகிய இஸ்ரவேலருக்கு தேவன் நல்லவராகவே இருக்கிறார். 2. ஆனாலும் என் கால்கள் தள்ளாடுதலுக்கும், என் அடிகள் சறுக்குதலுக்கும் சற்றே தப்பிற்று. 3. துன்மார்க்கரின் வாழ்வை நான் காண்கையில், வீம்புக்காரராகிய அவர்கள்மேல் பொறாமைகொண்டேன். 4. மரணபரியந்தம் அவர்களுக்கு இடுக்கண்களில்லை; அவர்களுடைய பெலன் உறுதியாயிருக்கிறது. 5. நரர் படும் வருத்தத்தில் அகப்படார்கள்; மனுஷர் அடையும் உபாதியை அடையார்கள். 6. ஆகையால் பெருமை சரப்பணியைப்போல் அவர்களைச் சுற்றிக்கொள்ளும், கொடுமை ஆடையைப்போல் அவர்களை மூடிக்கொள்ளும். 7. அவர்கள் கண்கள் கொழுப்பினால் எடுப்பாய்ப் பார்க்கிறது; அவர்கள் இருதயம் விரும்புவதிலும் அதிகமாய் நடந்தேறுகிறது. 8. அவர்கள் சீர்கெட்டுப்போய், அகந்தையாய்க் கொடுமைபேசுகிறார்கள்; இறுமாப்பாய்ப் பேசுகிறார்கள். 9. தங்கள் வாய் வானமட்டும் எட்டப்பேசுகிறார்கள்; அவர்கள் நாவு பூமியெங்கும் உலாவுகிறது. 10. ஆகையால் அவருடைய ஜனங்கள் இந்த வழியாகவே திரும்புகிறார்கள்; தண்ணீர்கள் அவர்களுக்குப் பரிபூரணமாய்ச் சுரந்துவரும். 11. தேவனுக்கு அது எப்படித் தெரியும்? உன்னதமானவருக்கு அதைப்பற்றி அறிவு உண்டோ? என்று சொல்லுகிறார்கள். 12. இதோ, இவர்கள் துன்மார்க்கர்; இவர்கள் என்றும் சுகஜீவிகளாயிருந்து, ஆஸ்தியைப் பெருகப்பண்ணுகிறார்கள். 13. நான் விருதாவாகவே என் இருதயத்தைச் சுத்தம்பண்ணி, குற்றமில்லாமையிலே என் கைகளைக் கழுவினேன். 14. நாள்தோறும் நான் வாதிக்கப்பட்டும், காலைதோறும் தண்டிக்கப்பட்டும் இருக்கிறேன். 15. இவ்விதமாய்ப் பேசுவேன் என்று நான் சொன்னேனானால், இதோ, உம்முடைய பிள்ளைகளின் சந்ததிக்குத் துரோகியாவேன். 16. இதை அறியும்படிக்கு யோசித்துப்பார்த்தேன்; நான் தேவனுடைய பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசித்து, 17. அவர்கள் முடிவைக் கவனித்து உணருமளவும், அது என் பார்வைக்கு விசனமாயிருந்தது. 18. நிச்சயமாகவே நீர் அவர்களைச் சறுக்கலான இடங்களில் நிறுத்தி, பாழான இடங்களில் விழப்பண்ணுகிறீர். 19. அவர்கள் ஒரு நிமிஷத்தில் எவ்வளவு பாழாய்ப்போகிறார்கள்! பயங்கரங்களால் அழிந்து நிர்மூலமாகிறார்கள். 20. நித்திரை தெளிந்தவுடனே சொப்பனம் ஒழிவதுபோல், ஆண்டவரே, நீர் விழிக்கும்போது, அவர்கள் வேஷத்தை இகழுவீர். 21. இப்படியாக என் மனம் கசந்தது, என் உள்ளிந்திரியங்களிலே குத்துண்டேன். 22. நான் காரியம் அறியாத மூடனானேன்; உமக்கு முன்பாக மிருகம்போலிருந்தேன். 23. ஆனாலும் நான் எப்பொழுதும் உம்மோடிருக்கிறேன்; என் வலதுகையைப் பிடித்துத் தாங்குகிறீர். 24. உம்முடைய ஆலோசனையின்படி நீர் என்னை நடத்தி, முடிவிலே என்னை மகிமையில் ஏற்றுக்கொள்வீர். 25. பரலோகத்தில் உம்மையல்லாமல் எனக்கு யார் உண்டு? பூலோகத்தில் உம்மைத் தவிர எனக்கு வேறே விருப்பமில்லை. 26. என் மாம்சமும் என் இருதயமும் மாண்டுபோகிறது; தேவன் என்றென்றைக்கும் என் இருதயத்தின் கன்மலையும் என் பங்குமாயிருக்கிறார். 27. இதோ, உம்மைவிட்டுத் தூரமாய்ப்போகிறவர்கள் நாசமடைவார்கள்; உம்மைவிட்டுச் சோரம்போகிற அனைவரையும் சங்கரிப்பீர். 28. எனக்கோ, தேவனை அண்டிக்கொண்டிருப்பதே நலம்; நான் உமது கிரியைகளையெல்லாம் சொல்லிவரும்படி கர்த்தராகிய ஆண்டவர்மேல் என் நம்பிக்கையை வைத்திருக்கிறேன்.
Chapter 74
1. தேவனே, நீர் எங்களை என்றென்றைக்கும் ஏன் தள்ளிவிடுகிறீர்? உமது மேய்ச்சலின் ஆடுகள்மேல் உமது கோபம் ஏன் புகைகிறது? 2. நீர் பூர்வகாலத்தில் சம்பாதித்த உமது சபையையும், நீர் மீட்டுக்கொண்ட உமது சுதந்தரமான கோத்திரத்தையும், நீர் வாசமாயிருந்த சீயோன் பர்வதத்தையும் நினைத்தருளும். 3. நெடுங்காலமாகப் பாழாய்க்கிடக்கிற ஸ்தலங்களில் உம்முடைய பாதங்களை எழுந்தருளப்பண்ணும்; பரிசுத்த ஸ்தலத்திலே சத்துரு அனைத்தையும் கெடுத்துப்போட்டான். 4. உம்முடைய சத்துருக்கள் உம்முடைய ஆலயங்களுக்குள்ளே கெர்ச்சித்து, தங்கள் கொடிகளை அடையாளங்களாக நாட்டுகிறார்கள். 5. கோடரிகளை ஓங்கிச் சோலையிலே மரங்களை வெட்டுகிறவன் பேர்பெற்றவனானான். 6. இப்பொழுதோ அவர்கள் அதின் சித்திரவேலைகள் முழுவதையும் வாச்சிகளாலும் சம்மட்டிகளாலும் தகர்த்துப் போடுகிறார்கள். 7. உமது பரிசுத்த ஸ்தலத்தை அக்கினிக்கு இரையாக்கி, உமது நாமத்தின் வாசஸ்தலத்தைத் தரைமட்டும் இடித்து, அசுத்தப்படுத்தினார்கள். 8. அவர்களை ஏகமாய் நிர்த்தூளியாக்குவோம் என்று தங்கள் இருதயத்தில் சொல்லி, தேசத்திலுள்ள ஆலயங்களையெல்லாம் சுட்டெரித்துப்போட்டார்கள். 9. எங்களுக்கு இருந்த அடையாளங்களைக் காணோம்; தீர்க்கதரிசியும் இல்லை; இது எதுவரைக்கும் என்று அறிகிறவனும் எங்களிடத்தில் இல்லை. 10. தேவனே, எதுவரைக்கும் சத்துரு நிந்திப்பான்? பகைவன் உமது நாமத்தை எப்பொழுதும் தூஷிப்பானோ? 11. உமது வலதுகரத்தை ஏன் முடக்கிக்கொள்ளுகிறீர்; அதை உமது மடியிலிருந்து எடுத்து ஓங்கி நிர்மூலமாக்கும். 12. பூமியின் நடுவில் இரட்சிப்புகளைச் செய்துவருகிற தேவன் பூர்வகாலமுதல் என்னுடைய ராஜா. 13. தேவரீர் உமது வல்லமையினால் சமுத்திரத்தை இரண்டாகப் பிளந்து, ஜலத்திலுள்ள வலுசர்ப்பங்களின் தலைகளை உடைத்தீர். 14. தேவரீர் முதலைகளின் தலைகளை நருக்கிப்போட்டு, அதை வனாந்தரத்து ஜனங்களுக்கு உணவாகக் கொடுத்தீர். 15. ஊற்றையும் ஆற்றையும் பிளந்துவிட்டீர்; மகா நதிகளையும் வற்றிப்போகப்பண்ணினீர். 16. பகலும் உம்முடையது, இரவும் உம்முடையது; தேவரீர் ஒளியையும் சூரியனையும் படைத்தீர். 17. பூமியின் எல்லைகளையெல்லாம் திட்டம்பண்ணினீர்; கோடைகாலத்தையும் மாரிகாலத்தையும் உண்டாக்கினீர். 18. கர்த்தாவே, சத்துரு உம்மை நிந்தித்ததையும், மதியீன ஜனங்கள் உமது நாமத்தைத் தூஷித்ததையும் நினைத்துக்கொள்ளும். 19. உமது காட்டுப்புறாவின் ஆத்துமாவைத் துஷ்டருடைய கூட்டத்திற்கு ஒப்புக்கொடாதேயும்; உமது ஏழைகளின் கூட்டத்தை என்றைக்கும் மறவாதேயும். 20. உம்முடைய உடன்படிக்கையை நினைத்தருளும்; பூமியின் இருளான இடங்கள் கொடுமையுள்ள குடியிருப்புகளால் நிறைந்திருக்கிறதே. 21. துன்பப்பட்டவன் வெட்கத்தோடே திரும்பவிடாதிரும்; சிறுமையும் எளிமையுமானவன் உமது நாமத்தைத் துதிக்கும்படி செய்யும். 22. தேவனே, எழுந்தருளும், உமக்காக நீரே வழக்காடும்; மதியீனனாலே நாடோறும் உமக்கு வரும் நிந்தையை நினைத்துக்கொள்ளும். 23. உம்முடைய சத்துருக்களின் ஆரவாரத்தை மறவாதேயும்; உமக்கு விரோதமாய் எழும்புகிறவர்களின் அமளி எப்பொழுதும் அதிகரிக்கிறது.
Chapter 75
1. உம்மைத் துதிக்கிறோம், தேவனே, உம்மைத் துதிக்கிறோம்; உமது நாமம் சமீபமாயிருக்கிறதென்று உமது அதிசயமான கிரியைகள் அறிவிக்கிறது. 2. நியமிக்கப்பட்ட காலத்திலே, யதார்த்தமாய் நியாயந்தீர்ப்பேன். 3. பூமியானது அதின் எல்லாக் குடிகளோடும் கரைந்துபோகிறது; அதின் தூண்களை நான் நிலைநிறுத்துகிறேன். (சேலா.) 4. வீம்புக்காரரை நோக்கி, வீம்பு பேசாதேயுங்கள் என்றும்; துன்மார்க்கரை நோக்கி, கொம்பை உயர்த்தாதிருங்கள் என்றும் சொன்னேன். 5. உங்கள் கொம்பை உயரமாய் உயர்த்தாதிருங்கள்; இறுமாப்புள்ள கழுத்துடையவர்களாய்ப் பேசாதிருங்கள். 6. கிழக்கிலும் மேற்கிலும் வனாந்தரதிசையிலுமிருந்து ஜெயம் வராது. 7. தேவனே நியாயாதிபதி; ஒருவனைத் தாழ்த்தி, ஒருவனை உயர்த்துகிறார். 8. கலங்கிப் பொங்குகிற மதுபானத்தினால் நிறைந்த பாத்திரம் கர்த்தருடைய கையிலிருக்கிறது, அதிலிருந்து வார்க்கிறார்; பூமியிலுள்ள துன்மார்க்கர் யாவரும் அதின் வண்டல்களை உறிஞ்சிக் குடிப்பார்கள். 9. நானோ என்றென்றைக்கும் இதை அறிவித்து, யாக்கோபின் தேவனைக் கீர்த்தனம்பண்ணுவேன். 10. துன்மார்க்கருடைய கொம்புகளையெல்லாம் வெட்டிப்போடுவேன்; நீதிமானுடைய கொம்புகளோ உயர்த்தப்படும்.
Chapter 76
1. யூதாவில் தேவன் அறியப்பட்டவர்; இஸ்ரவேலில் அவருடைய நாமம் பெரியது. 2. சாலேமில் அவருடைய கூடாரமும், சீயோனில் அவருடைய வாசஸ்தலமும் இருக்கிறது. 3. அங்கேயிருந்து வில்லின் அம்புகளையும், கேடகத்தையும், பட்டயத்தையும், யுத்தத்தையும் முறித்தார். (சேலா.) 4. மகத்துவமுள்ளவரே, கொள்ளையுள்ள பர்வதங்களைப்பார்க்கிலும் நீர் பிரகாசமுள்ளவர். 5. தைரிய நெஞ்சுள்ளவர்கள் கொள்ளையிடப்பட்டு, நித்திரையடைந்து அசர்ந்தார்கள்; வல்லமையுள்ள எல்லா மனுஷருடைய கைகளும் அவர்களுக்கு உதவாமற்போயிற்று. 6. யாக்கோபின் தேவனே, உம்முடைய கண்டிதத்தினால் இரதங்களும் குதிரைகளும் உறங்கி விழுந்தது. 7. நீர், நீரே, பயங்கரமானவர்; உமது கோபம் மூளும்போது உமக்கு முன்பாக நிற்பவன் யார்? 8. நியாயம் விசாரிக்கவும் பூமியில் சிறுமைப்பட்டவர்கள் யாவரையும் இரட்சிக்கவும், தேவரீர் எழுந்தருளினபோது, 9. வானத்திலிருந்து நியாயத்தீர்ப்புக் கேட்கப்பண்ணினீர்; பூமி பயந்து அமர்ந்தது. (சேலா.) 10. மனுஷனுடைய கோபம் உமது மகிமையை விளங்கப்பண்ணும்; மிஞ்சுங்கோபத்தை நீர் அடக்குவீர். 11. பொருத்தனைபண்ணி அதை உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு நிறைவேற்றுங்கள்; அவரைச் சூழ்ந்திருக்கிற அனைவரும் பயங்கரமானவருக்குக் காணிக்கைகளைக் கொண்டுவரக்கடவர்கள். 12. பிரபுக்களின் ஆவியை அடக்குவார்; பூமியின் ராஜாக்களுக்கு அவர் பயங்கரமானவர்.
Chapter 77
1. நான் தேவனை நோக்கி என் சத்தத்தை உயர்த்திக் கெஞ்சினேன், என் சத்தத்தை தேவனிடத்தில் உயர்த்தினேன், அவர் எனக்குச் செவிகொடுத்தார். 2. என் ஆபத்துநாளில் ஆண்டவரைத் தேடினேன்; இரவிலும் என் கை தளராமல் விரிக்கப்பட்டிருந்தது; என் ஆத்துமா ஆறுதலடையாமற்போயிற்று. 3. நான் தேவனை நினைத்தபோது அலறினேன்; நான் தியானிக்கும்போது என் ஆவி தொய்ந்துபோயிற்று. (சேலா.) 4. நான் தூங்காதபடி என் கண்ணிமைகளைப் பிடித்திருக்கிறீர்; நான் பேசமாட்டாதபடி சஞ்சலப்படுகிறேன். 5. பூர்வநாட்களையும், ஆதிகாலத்து வருஷங்களையும் சிந்திக்கிறேன். 6. இராக்காலத்தில் என் சங்கீதத்தை நான் நினைத்து, என் இருதயத்தோடே சம்பாஷித்துக்கொள்ளுகிறேன்; என் ஆவி ஆராய்ச்சிசெய்தது. 7. ஆண்டவர் நித்தியகாலமாய்த் தள்ளிவிடுவாரோ? இனி ஒருபோதும் தயைசெய்யாதிருப்பாரோ? 8. அவருடைய கிருபை முற்றிலும் அற்றுப்போயிற்றோ? வாக்குத்தத்தமானது தலைமுறை தலைமுறைக்கும் ஒழிந்துபோயிற்றோ? 9. தேவன் இரக்கஞ்செய்ய மறந்தாரோ? கோபத்தினாலே தமது உருக்கமான இரக்கங்களை அடைத்துக்கொண்டாரோ? என்றேன். (சேலா.) 10. அப்பொழுது நான்: இது என் பலவீனம்; ஆனாலும் உன்னதமானவருடைய வலதுகரத்திலுள்ள வருஷங்களை நினைவுகூருவேன். 11. கர்த்தருடைய செயல்களை நினைவுகூருவேன், உம்முடைய பூர்வகாலத்து அதிசயங்களையே நினைவுகூருவேன்; 12. உம்முடைய கிரியைகளையெல்லாம் தியானித்து, உம்முடைய செயல்களை யோசிப்பேன் என்றேன். 13. தேவனே, உமது வழி பரிசுத்த ஸ்தலத்திலுள்ளது; நம்முடைய தேவனைப்போலப் பெரிய தேவன் யார்? 14. அதிசயங்களைச் செய்கிற தேவன் நீரே; ஜனங்களுக்குள்ளே உம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணினீர். 15. யாக்கோபு யோசேப்பு என்பவர்களின் புத்திரராகிய உம்முடைய ஜனங்களை, உமது புயத்தினாலே மீட்டுக்கொண்டீர். (சேலா.) 16. ஜலங்கள் உம்மைக் கண்டது; தேவனே, ஜலங்கள் உம்மைக் கண்டு தத்தளித்தது; ஆழங்களும் கலங்கினது. 17. மேகங்கள் ஜலங்களைப் பொழிந்தது; ஆகாயமண்டலங்கள் முழக்கமிட்டது; உம்முடைய அம்புகளும் தெறிப்புண்டு பறந்தது. 18. உம்முடைய குமுறலின் சத்தம் சுழல்காற்றில் முழங்கினது; மின்னல்கள் பூச்சக்கரத்தைப் பிரகாசிப்பித்தது; பூமி குலுங்கி அதிர்ந்தது. 19. உமது வழி கடலிலும், உமது பாதைகள் திரண்ட தண்ணீர்களிலும் இருந்தது; உமது காலடிகள் தெரியப்படாமற்போயிற்று. 20. மோசே ஆரோன் என்பவர்களின் கையால், உமது ஜனங்களை ஒரு ஆட்டுமந்தையைப்போல வழிநடத்தினீர்.
Chapter 78
1. என் ஜனங்களே, என் உபதேசத்தைக் கேளுங்கள்; என் வாயின் வசனங்களுக்கு உங்கள் செவிகளைச் சாயுங்கள். 2. என் வாயை உவமைகளால் திறப்பேன்; பூர்வகாலத்து மறைபொருள்களை வெளிப்படுத்துவேன். 3. அவைகளை நாங்கள் கேள்விப்பட்டு அறிந்தோம்; எங்கள் பிதாக்கள் அவைகளை எங்களுக்குத் தெரிவித்தார்கள். 4. பின்வரும் சந்ததியான பிள்ளைகளுக்கு நாங்கள் அவைகளை மறைக்காமல், கர்த்தரின் துதிகளையும் அவருடைய பலத்தையும், அவர் செய்த அவருடைய அதிசயங்களையும் விவரிப்போம். 5. அவர் யாக்கோபிலே சாட்சியை ஏற்படுத்தி, இஸ்ரவேலிலே வேதத்தை ஸ்தாபித்து, அவைகளைத் தங்கள் பிள்ளைகளுக்கு அறிவிக்கும்படி நம்முடைய பிதாக்களுக்குக் கட்டளையிட்டார். 6. இனிப் பிறக்கும் பிள்ளைகளாகிய பின்சந்ததியார் அதை அறிந்துகொண்டு, அவர்கள் எழும்பித் தங்கள் பிள்ளைகளுக்கு அவைகளைச் சொல்லும்படிக்கும்; 7. தேவன்மேல் அவர்கள் தங்கள் நம்பிக்கையை வைத்து, தேவனுடைய செயல்களை மறவாமல், அவர் கற்பனைகளைக் கைக்கொள்ளும்படிக்கும்; 8. இருதயத்தைச் செவ்வைப்படுத்தாமலும், தேவனை உறுதியாய்ப் பற்றிக்கொள்ளாமலும் இருந்த முரட்டாட்டமும் கலகமுமுள்ள சந்ததியாகிய தங்கள் பிதாக்களுக்கு அவர்கள் ஒப்பாகாதபடிக்கும், இவைகளைக் கட்டளையிட்டார். 9. ஆயுதமணிந்த வில்வீரரான எப்பிராயீம் புத்திரர் யுத்தநாளிலே முதுகுகாட்டினார்கள். 10. அவர்கள் தேவனுடைய உடன்படிக்கையைக் கைக்கொள்ளாமலும், அவருடைய கட்டளைகளின்படி நடக்கச் சம்மதியாமலும், 11. அவருடைய செயல்களையும், அவர் தங்களுக்குக் காண்பித்த அதிசயங்களையும் மறந்தார்கள். 12. அவர்களுடைய பிதாக்களுக்குமுன்பாக, எகிப்துதேசத்துச் சோவான் வெளியிலே, அவர் அதிசயமானவைகளைச் செய்தார். 13. கடலைப் பிளந்து, அவர்களைக் கடக்கப்பண்ணி, ஜலத்தைக் குவியலாக நிற்கும்படி செய்தார். 14. பகலிலே மேகத்தினாலும், இராமுழுதும் அக்கினி வெளிச்சத்தினாலும் அவர்களை வழிநடத்தினார். 15. வனாந்தரத்திலே கன்மலைகளைப் பிளந்து, மகா ஆழங்களிலிருந்து தண்ணீரை அவர்களுக்குக் குடிக்கக்கொடுத்தார். 16. கன்மலையிலிருந்து நீரோட்டங்களைப் புறப்படப்பண்ணி, தண்ணீரை நதிபோல ஓடிவரும்படி செய்தார். 17. என்றாலும், அவர்கள் பின்னும் அவருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்து, வறண்ட வெளியிலே உன்னதமானவருக்குக் கோபம் மூட்டினார்கள். 18. தங்கள் இச்சைக்கேற்ற போஜனத்தைக் கேட்டு, தங்கள் இருதயத்தில் தேவனைப் பரீட்சைபார்த்தார்கள். 19. அவர்கள் தேவனுக்கு விரோதமாய்ப் பேசி: தேவன் வனாந்தரத்திலே போஜனபந்தியை ஆயத்தப்படுத்தக்கூடுமோ? 20. இதோ அவர் கன்மலையை அடித்ததினால் தண்ணீர் புறப்பட்டு, நதிகளாய்ப் புரண்டுவந்தது; அவர் அப்பத்தையும் கொடுக்கக்கூடுமோ? தம்முடைய ஜனத்திற்கு மாம்சத்தையும் ஆயத்தப்படுத்துவாரோ? என்றார்கள். 21. ஆகையால் கர்த்தர் அதைக் கேட்டுக் கோபங்கொண்டார்; அவர்கள் தேவனை விசுவாசியாமலும், அவருடைய இரட்சிப்பை நம்பாமலும் போனதினால், 22. யாக்கோபுக்கு விரோதமாய் அக்கினி பற்றியெரிந்தது; இஸ்ரவேலுக்கு விரோதமாய்க் கோபம் மூண்டது. 23. அவர் உயரத்திலுள்ள மேகங்களுக்குக் கட்டளையிட்டு, வானத்தின் கதவுகளைத் திறந்து, 24. மன்னாவை அவர்களுக்கு ஆகாரமாக வருஷிக்கப்பண்ணி, வானத்தின் தானியத்தை அவர்களுக்குக் கொடுத்தார். 25. தூதர்களின் அப்பத்தை மனுஷன் சாப்பிட்டான்; அவர்களுக்கு ஆகாரத்தைப் பூரணமாய் அனுப்பினார். 26. ஆகாசத்திலே கீழ்க்காற்றை வரப்பண்ணி, தம்முடைய வல்லமையினால் தென்றலையும் வீசச்செய்து, 27. மாம்சத்தைத் தூளத்தனையாயும், சிறகுள்ள பறவைகளைக் கடற்கரை மணலத்தனையாயும் வருஷிக்கப்பண்ணி, 28. அவைகளை அவர்கள் பாளயத்தின் நடுவிலும், அவர்கள் கூடாரங்களைச் சுற்றிலும் இறங்கப்பண்ணினார். 29. அவர்கள் புசித்துத் திருப்தியடைந்தார்கள்; அவர்கள் இச்சித்ததை அவர்களுக்குக் கொடுத்தார். 30. அவர்கள் தங்கள் இச்சையை வெறுக்கவில்லை; அவர்களுடைய போஜனம் அவர்கள் வாயில் இருக்கும்போதே, 31. தேவகோபம் அவர்கள்மேல் எழும்பி, அவர்களில் கொழுத்தவர்களைச் சங்கரித்து, இஸ்ரவேலில் விசேஷித்தவர்களை மடியப்பண்ணிற்று. 32. இவையெல்லாம் நடந்தும், அவர் செய்த அதிசயங்களை அவர்கள் நம்பாமல், பின்னும் பாவஞ்செய்தார்கள். 33. ஆதலால் அவர்கள் நாட்களை விருதாவிலும், அவர்கள் வருஷங்களைப் பயங்கரத்திலும் கழியப்பண்ணினார். 34. அவர்களை அவர் கொல்லும்போது அவரைக்குறித்து விசாரித்து, அவர்கள் திரும்பிவந்து தேவனை அதிகாலமே தேடி; 35. தேவன் தங்கள் கன்மலையென்றும், உன்னதமான தேவன் தங்கள் மீட்பர் என்றும், நினைவுகூர்ந்தார்கள். 36. ஆனாலும் அவர்கள் தங்கள் வாயினால் அவருக்கு இச்சகம்பேசி, தங்கள் நாவினால் அவரிடத்தில் பொய்சொன்னார்கள். 37. அவர்கள் இருதயம் அவரிடத்தில் நிலைவரப்படவில்லை; அவருடைய உடன்படிக்கையில் அவர்கள் உண்மையாயிருக்கவில்லை. 38. அவரோ அவர்களை அழிக்காமல், இரக்கமுள்ளவராய் அவர்கள் அக்கிரமத்தை மன்னித்தார்; அவர் தமது உக்கிரம் முழுவதையும் எழுப்பாமல், அநேகந்தரம் தமது கோபத்தை விலக்கிவிட்டார். 39. அவர்கள் மாம்சமென்றும், திரும்பிவராமல் அகலுகிற காற்றென்றும் நினைவுகூர்ந்தார். 40. எத்தனைதரமோ வனாந்தரத்திலே அவருக்குக் கோபம் மூட்டி, அவாந்தரவெளியிலே அவரை விசனப்படுத்தினார்கள். 41. அவர்கள் திரும்பி தேவனைப் பரீட்சைபார்த்து, இஸ்ரவேலின் பரிசுத்தரை மட்டுப்படுத்தினார்கள். 42. அவருடைய கரத்தையும், அவர் தங்களைச் சத்துருவுக்கு விலக்கி மீட்ட நாளையும் நினையாமற்போனார்கள். 43. அவர் எகிப்திலே தம்முடைய அடையாளங்களையும், சோவான் வெளியிலே தம்முடைய அற்புதங்களையும் செய்தார். 44. அவர்களுடைய நதிகளை இரத்தமாக மாற்றி, அவர்களுடைய ஆறுகளிலுள்ள ஜலத்தைக் குடிக்கக்கூடாதபடி செய்தார். 45. அவர்களை அழிக்கும்படி வண்டு ஜாதிகளையும், அவர்களைக் கெடுக்கும்படி தவளைகளையும் அவர்களுக்குள்ளே அனுப்பினார். 46. அவர்களுடைய விளைச்சலைப் புழுக்களுக்கும், அவர்களுடைய பிரயாசத்தின் பலனை வெட்டுக்கிளிகளுக்கும் கொடுத்தார். 47. கல்மழையினால் அவர்களுடைய திராட்சச்செடிகளையும், ஆலாங்கட்டியினால் அவர்களுடைய அத்திமரங்களையும் அழித்து, 48. அவர்களுடைய மிருகஜீவன்களைக் கல்மழைக்கும், அவர்களுடைய ஆடுமாடுகளை இடிகளுக்கும் ஒப்புக்கொடுத்தார். 49. தமது உக்கிரமான கோபத்தையும், மூர்க்கத்தையும், சினத்தையும், உபத்திரவத்தையும், தீங்குசெய்யும் தூதர்களையும் அவர்களுக்குள்ளே அனுப்பினார். 50. அவர் தம்முடைய கோபத்துக்கு வழிதிறந்து, அவர்கள் ஆத்துமாவை மரணத்துக்கு விலக்கிக் காவாமல், அவர்கள் ஜீவனைக் கொள்ளைநோய்க்கு ஒப்புக்கொடுத்தார். 51. எகிப்திலே தலைச்சன்கள் அனைத்தையும், காமின் கூடாரங்களிலே அவர்களுடைய பெலனில் முதற்பலனான யாவரையும் அழித்து; 52. தம்முடைய ஜனங்களை ஆடுகளைப்போல் புறப்படப்பண்ணி, அவர்களை வனாந்தரத்திலே மந்தையைப்போல் கூட்டிக்கொண்டுபோய்; 53. அவர்கள் பயப்படாதபடிக்கு அவர்களைப் பத்திரமாய் வழிநடத்தினார்; அவர்கள் சத்துருக்களைக் கடல் மூடிப்போட்டது. 54. அவர்களைத் தமது பரிசுத்த ஸ்தலத்தின் எல்லைவரைக்கும், தமது வலதுகரம் சம்பாதித்த இந்தப் பர்வதமட்டுக்கும் அழைத்துக்கொண்டுவந்து, 55. அவர்கள் முகத்திற்கு முன்பாக ஜாதிகளைத் துரத்திவிட்டு, தேசத்தை நூல்போட்டுப் பங்கிட்டு, அவர்களுடைய கூடாரங்களில் இஸ்ரவேலின் கோத்திரங்களைக் குடியேற்றினார். 56. ஆனாலும் அவர்கள் உன்னதமான தேவனைப் பரீட்சைபார்த்து, அவருக்குக் கோபம் மூட்டி, அவருடைய சாட்சிகளைக் கைக்கொள்ளாமற்போய், 57. தங்கள் பிதாக்களைப்போல வழிவிலகி, துரோகம்பண்ணி, மோசம்போக்கும் வில்லைப்போல் துவண்டு, 58. தங்கள் மேடைகளினால் அவருக்குக் கோபம் மூட்டி, தங்கள் விக்கிரகங்களினால் எரிச்சல் உண்டாக்கினார்கள். 59. தேவன் அதைக் கேட்டு உக்கிரமாகி, இஸ்ரவேலை மிகவும் வெறுத்து, 60. தாம் மனுஷருக்குள்ளே போட்ட கூடாரமாகிய சீலோவிலுள்ள வாசஸ்தலத்தை விட்டுவிலகி, 61. தமது பலத்தைச் சிறையிருப்புக்கும், தமது மகிமையைச் சத்துருவின் கைக்கும் ஒப்புக்கொடுத்து, 62. தமது ஜனத்தைப் பட்டயத்துக்கு இரையாக்கி, தமது சுதந்தரத்தின்மேல் கோபங்கொண்டார். 63. அவர்கள் வாலிபரை அக்கினி பட்சித்தது, அவர்கள் கன்னியாஸ்திரீகள் வாழ்க்கைப்படாதிருந்தார்கள். 64. அவர்களுடைய ஆசாரியர்கள் பட்டயத்தால் விழுந்தார்கள், அவர்களுடைய விதவைகள் அழவில்லை. 65. அப்பொழுது ஆண்டவர் நித்திரை தெளிந்தவனைப்போலவும், திராட்சரசத்தால் கெம்பீரிக்கிற பராக்கிரமசாலியைப்போலவும் விழித்து, 66. தம்முடைய சத்துருக்களைப் பின்புறமாக அடித்து, அவர்களுக்கு நித்திய நிந்தையை வரப்பண்ணினார். 67. அவர் யோசேப்பின் கூடாரத்தைப் புறக்கணித்தார்; எப்பிராயீம் கோத்திரத்தை அவர் தெரிந்துகொள்ளாமல், 68. யூதா கோத்திரத்தையும் தமக்குப் பிரியமான சீயோன் பர்வதத்தையும் தெரிந்துகொண்டார். 69. தம்முடைய பரிசுத்த ஸ்தலத்தை மலைகளைப்போலவும், என்றைக்கும் நிற்கும்படி தாம் அஸ்திபாரப்படுத்தின பூமியைப்போலவும் கட்டினார். 70. தம்முடைய தாசனாகிய தாவீதைத் தெரிந்துகொண்டு, ஆட்டுத்தொழுவங்களிலிருந்து அவனை எடுத்தார். 71. கறவலாடுகளின் பின்னாகத் திரிந்த அவனை, தம்முடைய ஜனமாகிய யாக்கோபையும் தம்முடைய சுதந்தரமாகிய இஸ்ரவேலையும் மேய்ப்பதற்காக, அழைத்துக்கொண்டுவந்தார். 72. இவன் அவர்களைத் தன் இருதயத்தின் உண்மையின்படியே மேய்த்து, தன் கைகளின் திறமையினால் அவர்களை நடத்தினான்.
Chapter 79
1. தேவனே, புறஜாதியார் உமது சுதந்தரத்தில் வந்து, உமது பரிசுத்த ஆலயத்தைத் தீட்டுப்படுத்தி, எருசலேமை மண்மேடுகளாக்கினார்கள். 2. உமது ஊழியக்காரரின் பிரேதங்களை ஆகாயத்துப் பறவைகளுக்கும், உமது பரிசுத்தவான்களின் மாம்சத்தைப் பூமியின் மிருகங்களுக்கும் இரையாகக் கொடுத்தார்கள். 3. எருசலேமைச் சுற்றிலும் அவர்களுடைய இரத்தத்தை தண்ணீரைப்போலச் சிந்தினார்கள்; அவர்களை அடக்கம்பண்ணுவாருமில்லை. 4. எங்கள் அயலாருக்கு நிந்தையும், எங்கள் சுற்றுப்புறத்தாருக்குப் பரியாசமும் சக்கந்தமுமானோம். 5. எதுவரைக்கும் கர்த்தாவே! நீர் என்றைக்கும் கோபமாயிருப்பீரோ? உம்முடைய எரிச்சல் அக்கினியைப்போல் எரியுமோ? 6. உம்மை அறியாத ஜாதிகள்மேலும், உமது நாமத்தைத் தொழுதுகொள்ளாத ராஜ்யங்கள்மேலும், உம்முடைய உக்கிரத்தை ஊற்றிவிடும். 7. அவர்கள் யாக்கோபைப் பட்சித்து, அவன் குடியிருப்பைப் பாழாக்கினார்களே. 8. பூர்வகாலத்து அக்கிரமங்களை எங்களுக்கு விரோதமாக நினையாதேயும்; உம்முடைய இரக்கங்கள் சீக்கிரமாய் எங்களுக்கு நேரிடுவதாக; நாங்கள் மிகவும் தாழ்த்தப்பட்டுப்போனோம். 9. எங்களை இரட்சிக்கும் தேவனே, நீர் உமது நாமத்தின் மகிமையினிமித்தம் எங்களுக்கு உதவிசெய்து, உமது நாமத்தினிமித்தம் எங்களை விடுவித்து, எங்கள் பாவங்களை நிவிர்த்தியாக்கும். 10. அவர்களுடைய தேவன் எங்கே என்று புறஜாதிகள் சொல்வானேன்? உமது ஊழியக்காரருடைய சிந்துண்ட இரத்தத்தின் பழிவாங்குதல் ஜாதிகளுக்குள்ளே எங்கள் கண்களுக்கு முன்பாக விளங்கும்படி செய்யும். 11. கட்டுண்டவனுடைய பெருமூச்சு உமக்கு முன்பாக வரட்டும்; கொலைக்கு நியமிக்கப்பட்டவர்களை உமது புயபலத்தினால் உயிரோடே காத்தருளும். 12. ஆண்டவரே, எங்கள் அயலார் உம்மை நிந்தித்த நிந்தையை, ஏழத்தனையாக அவர்கள் மடியிலே திரும்பப்பண்ணும். 13. அப்பொழுது, உம்முடைய ஜனங்களும் உம்முடைய மேய்ச்சலின் ஆடுகளுமாகிய நாங்கள் உம்மை என்றென்றைக்கும் புகழுவோம்; தலைமுறை தலைமுறையாக உமது துதியைச் சொல்லிவருவோம்.
Chapter 80
1. இஸ்ரவேலின் மேய்ப்பரே, யோசேப்பை ஆட்டுமந்தையைப்போல் நடத்துகிறவரே, செவிகொடும்; கேருபீன்கள் மத்தியில் வாசம்பண்ணுகிறவரே, பிரகாசியும். 2. எப்பிராயீம் பென்யமீன் மனாசே என்பவர்களுக்கு முன்பாக, நீர் உமது வல்லமையை எழுப்பி, எங்களை இரட்சிக்க வந்தருளும். 3. தேவனே, எங்களைத் திருப்பிக்கொண்டுவாரும், உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணும், அப்பொழுது இரட்சிக்கப்படுவோம். 4. சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, உமது ஜனத்தின் விண்ணப்பத்துக்கு விரோதமாய் நீர் எதுவரைக்கும் கோபங்கொள்வீர். 5. கண்ணீராகிய அப்பத்தை அவர்களுக்கு போஜனமாகவும், மிகுதியான கண்ணீரையே அவர்களுக்குப் பானமாகவும் கொடுத்தீர். 6. எங்கள் அயலாருக்கு எங்களை வழக்காக வைக்கிறீர்; எங்கள் சத்துருக்கள் எங்களைப் பரியாசம்பண்ணுகிறார்கள். 7. சேனைகளின் தேவனே, எங்களைத் திருப்பிக்கொண்டுவாரும், உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணும், அப்பொழுது இரட்சிக்கப்படுவோம். 8. நீர் எகிப்திலிருந்து ஒரு திராட்சக்கொடியைக் கொண்டுவந்து, ஜாதிகளைத் துரத்திவிட்டு, அதை நாட்டினீர். 9. அதற்கு இடத்தை ஆயத்தப்படுத்தினீர்; அது வேரூன்றி, தேசமெங்கும் படர்ந்தது. 10. அதின் நிழலால் மலைகளும் அதின் கிளைகளால் திவ்வியமான கேதுருக்களும் மூடப்பட்டது. 11. அது தன் கொடிகளைச் சமுத்திரமட்டாகவும், தன் கிளைகளை நதிமட்டாகவும் படரவிட்டது. 12. இப்பொழுதோ வழிநடக்கிற யாவரும் அதைப் பறிக்கும்படியாக, அதின் அடைப்புகளை ஏன் தகர்த்துப்போட்டீர்? 13. காட்டுப்பன்றி அதை உழுதுபோடுகிறது, வெளியின் மிருகங்கள் அதை மேய்ந்துபோடுகிறது. 14. சேனைகளின் தேவனே, திரும்பிவாரும், வானத்திலிருந்து கண்ணோக்கிப்பார்த்து, இந்தத் திராட்சச்செடியை விசாரித்தருளும்; 15. உம்முடைய வலதுகரம் நாட்டின கொடியையும், உமக்கு நீர் திடப்படுத்தின கிளையையும் கடாட்சித்தருளும். 16. அது அக்கினியால் சுடப்பட்டும் வெட்டுண்டும் போயிற்று; உம்முடைய முகத்தின் பயமுறுத்தலால் அழிந்துபோகிறார்கள். 17. உமது கரம் உமது வலதுபாரிசத்துப் புருஷன்மீதிலும், உமக்கு நீர் திடப்படுத்தின மனுஷகுமாரன்மீதிலும் இருப்பதாக. 18. அப்பொழுது உம்மைவிட்டுப் பின்வாங்கமாட்டோம்; எங்களை உயிர்ப்பியும், அப்பொழுது உமது நாமத்தைத் தொழுதுகொள்ளுவோம். 19. சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, எங்களைத் திருப்பிக்கொண்டு வாரும்; உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணும், அப்பொழுது இரட்சிக்கப்படுவோம்.
Chapter 81
1. நம்முடைய பெலனாகிய தேவனைக் கெம்பீரமாய்ப் பாடி, யாக்கோபின் தேவனைக்குறித்து ஆர்ப்பரியுங்கள். 2. தம்புரு வாசித்து, வீணையையும் இனிய ஓசையான சுரமண்டலத்தையும் எடுத்து, சங்கீதம் பாடுங்கள். 3. மாதப்பிறப்பிலும், நியமித்தகாலத்திலும், நம்முடைய பண்டிகைநாட்களிலும், எக்காளம் ஊதுங்கள். 4. இது இஸ்ரவேலுக்குப் பிரமாணமும், யாக்கோபின் தேவன் விதித்த நியாயமுமாயிருக்கிறது. 5. நாம் அறியாத பாஷையைக் கேட்ட எகிப்துதேசத்தைவிட்டுப் புறப்படுகையில், இதை யோசேப்பிலே சாட்சியாக ஏற்படுத்தினார். 6. அவன் தோளைச் சுமைக்கு விலக்கினேன்; அவன் கைகள் கூடைக்கு நீங்கலாக்கப்பட்டது. 7. நெருக்கத்திலே நீ கூப்பிட்டாய், நான் உன்னைத் தப்புவித்தேன்; இடிமுழக்கம் உண்டாகும் மறைவிடத்திலிருந்து உனக்கு உத்தரவு அருளினேன்; மேரிபாவின் தண்ணீர்களிடத்தில் உன்னைச் சோதித்து அறிந்தேன். (சேலா.) 8. என் ஜனமே கேள், உனக்குச் சாட்சியிட்டுச் சொல்லுவேன்; இஸ்ரவேலே, நீ எனக்குச் செவிகொடுத்தால் நலமாயிருக்கும். 9. உனக்குள் வேறு தேவன் உண்டாயிருக்கவேண்டாம்; அந்நிய தேவனை நீ நமஸ்கரிக்கவும் வேண்டாம். 10. உன்னை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் நானே; உன் வாயை விரிவாய்த் திற, நான் அதை நிரப்புவேன். 11. என் ஜனமோ என் சத்தத்துக்குச் செவிகொடுக்கவில்லை; இஸ்ரவேல் என்னை விரும்பவில்லை. 12. ஆகையால் அவர்களை அவர்கள் இருதயத்தின் கடினத்திற்கு விட்டுவிட்டேன்; தங்கள் யோசனைகளின்படியே நடந்தார்கள். 13. ஆ, என் ஜனம் எனக்குச் செவிகொடுத்து, இஸ்ரவேல் என் வழிகளில் நடந்தால் நலமாயிருக்கும்! 14. நான் சீக்கிரத்தில் அவர்கள் எதிராளிகளைத் தாழ்த்தி, என் கையை அவர்கள் சத்துருக்களுக்கு விரோதமாகத் திருப்புவேன். 15. அப்பொழுது கர்த்தரைப் பகைக்கிறவர்கள் அவருக்கு இச்சகம் பேசி அடங்குவார்கள்; அவர்களுடைய காலம் என்றென்றைக்கும் இருக்கும். 16. உச்சிதமான கோதுமையினால் அவர்களைப் போஷிப்பார்; கன்மலையின் தேனினால் உன்னைத் திருப்தியாக்குவேன்.
Chapter 82
1. தேவசபையிலே தேவன் எழுந்தருளியிருக்கிறார்; தேவர்களின் நடுவிலே அவர் நியாயம் விசாரிக்கிறார். 2. எதுவரைக்கும் நீங்கள் அநியாயத்தீர்ப்புச்செய்து, துன்மார்க்கருக்கு முகதாட்சிணியம் பண்ணுவீர்கள். (சேலா.) 3. ஏழைக்கும் திக்கற்ற பிள்ளைக்கும் நியாயஞ்செய்து, சிறுமைப்பட்டவனுக்கும் திக்கற்றவனுக்கும் நீதி செய்யுங்கள். 4. பலவீனனையும் எளியவனையும் விடுவித்து, துன்மார்க்கரின் கைக்கு அவர்களைத் தப்புவியுங்கள். 5. அறியாமலும் உணராமலும் இருக்கிறார்கள், அந்தகாரத்திலே நடக்கிறார்கள்; தேசத்தின் அஸ்திபாரங்களெல்லாம் அசைகிறது. 6. நீங்கள் தேவர்கள் என்றும், நீங்களெல்லாரும் உன்னதமானவரின் மக்கள் என்றும் நான் சொல்லியிருந்தேன். 7. ஆனாலும் நீங்கள் மனுஷரைப்போலச் செத்து, லோகப்பிரபுக்களில் ஒருவனைப்போல விழுந்துபோவீர்கள். 8. தேவனே, எழுந்தருளும், பூமிக்கு நியாயத்தீர்ப்புச் செய்யும்; நீரே சகல ஜாதிகளையும் சுதந்தரமாகக் கொண்டிருப்பவர்.
Chapter 83
1. தேவனே, மவுனமாயிராதேயும், பேசாமலிராதேயும்; தேவனே, சும்மாயிராதேயும். 2. இதோ, உம்முடைய சத்துருக்கள் கொந்தளித்து, உம்முடைய பகைஞர் தலையெடுக்கிறார்கள். 3. உமது ஜனத்துக்கு விரோதமாக உபாய தந்திரங்களை யோசித்து, உமது மறைவிலிருக்கிறவர்களுக்கு விரோதமாக ஆலோசனைபண்ணுகிறார்கள். 4. அவர்கள் இனி ஒரு ஜாதியாராயிராமலும், இஸ்ரவேலின் பேர் இனி நினைக்கப்படாமலும் போவதற்காக, அவர்களை அதம்பண்ணுவோம் வாருங்கள் என்கிறார்கள். 5. இப்படி, ஏதோமின் கூடாரத்தாரும், இஸ்மவேலரும், மோவாபியரும், ஆகாரியரும், 6. கேபாலரும், அம்மோனியரும், அமலேக்கியரும், தீருவின் குடிகளோடு கூடிய பெலிஸ்தரும், 7. ஏகமனநிர்ணயமாய் ஆலோசனைசெய்து, உமக்கு விரோதமாய் ஒப்பந்தம்பண்ணிக்கொண்டிருக்கிறார்கள். 8. அசீரியரும் அவர்களோடேகூடக் கலந்து, லோத்தின் புத்திரருக்குப் புயபலமானார்கள். (சேலா.) 9. மீதியானியருக்குச் செய்ததுபோலவும், கீசோன் என்னும் ஆற்றண்டை எந்தோரிலே அழிக்கப்பட்டு, 10. நிலத்துக்கு எருவாய்ப்போன சிசெரா, யாபீன் என்பவர்களுக்குச் செய்ததுபோலவும், அவர்களுக்குச் செய்யும். 11. அவர்களையும் அவர்கள் அதிபதிகளையும் ஓரேபுக்கும் சேபுக்கும், அவர்கள் பிரபுக்களையெல்லாம் சேபாவுக்கும் சல்முனாவுக்கும் சமமாக்கும். 12. தேவனுடைய வாசஸ்தலங்களை எங்களுக்குச் சுதந்தரமாக நாங்கள் கட்டிக்கொள்வோம் என்று சொல்லுகிறார்களே. 13. என் தேவனே, அவர்களைச் சுழல்காற்றின் புழுதிக்கும், காற்றுமுகத்தில் பறக்கும் துரும்புக்கும் சமமாக்கும். 14. நெருப்பு காட்டைக் கொளுத்துவதுபோலவும், அக்கினிஜுவாலைகள் மலைகளை எரிப்பதுபோலவும், 15. நீர் உமது புசலினாலே அவர்களைத் தொடர்ந்து, உமது பெருங்காற்றினாலே அவர்களைக் கலங்கப்பண்ணும். 16. கர்த்தாவே, அவர்கள் உமது நாமத்தைத் தேடும்படிக்கு, அவர்கள் முகங்களை அவமானத்தாலே மூடும். 17. யேகோவா என்னும் நாமத்தையுடைய தேவரீர் ஒருவரே பூமியனைத்தின்மேலும் உன்னதமானவர் என்று மனுஷர் உணரும்படி, 18. அவர்கள் என்றைக்கும் வெட்கிக்கலங்கி, நாணமடைந்து அழிந்துபோவார்களாக.
Chapter 84
1. சேனைகளின் கர்த்தாவே, உமது வாசஸ்தலங்கள் எவ்வளவு இன்பமானவைகள்! 2. என் ஆத்துமா கர்த்தருடைய ஆலயப்பிராகாரங்களின்மேல் வாஞ்சையும் தவனமுமாயிருக்கிறது; என் இருதயமும் என் மாம்சமும் ஜீவனுள்ள தேவனை நோக்கிக் கெம்பீர சத்தமிடுகிறது. 3. என் ராஜாவும் என் தேவனுமாகிய சேனைகளின் கர்த்தாவே, உம்முடைய பீடங்களண்டையில் அடைக்கலான் குருவிக்கு வீடும், தகைவிலான் குருவிக்குத் தன் குஞ்சுகளை வைக்கும் கூடும் கிடைத்ததே. 4. உம்முடைய வீட்டில் வாசமாயிருக்கிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் எப்பொழுதும் உம்மைத் துதித்துக்கொண்டிருப்பார்கள். (சேலா.) 5. உம்மிலே பெலன்கொள்ளுகிற மனுஷனும், தங்கள் இருதயங்களில் செவ்வையான வழிகளைக் கொண்டிருக்கிறவர்களும் பாக்கியவான்கள். 6. அழுகையின் பள்ளத்தாக்கை உருவ நடந்து அதை நீரூற்றாக்கிக் கொள்ளுகிறார்கள்; மழையும் குளங்களை நிரப்பும். 7. அவர்கள் பலத்தின்மேல் பலம் அடைந்து, சீயோனிலே தேவசந்நிதியில் வந்து காணப்படுவார்கள். 8. சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, என் விண்ணப்பத்தை கேளும்; யாக்கோபின் தேவனே, செவிகொடும். (சேலா.) 9. எங்கள் கேடகமாகிய தேவனே, கண்ணோக்கமாயிரும்; நீர் அபிஷேகம்பண்ணினவரின் முகத்தைப் பாரும். 10. ஆயிரம் நாளைப்பார்க்கிலும் உமது பிராகாரங்களில் செல்லும் ஒரே நாள் நல்லது; ஆகாமியக் கூடாரங்களில் வாசமாயிருப்பதைப்பார்க்கிலும் என் தேவனுடைய ஆலயத்தின் வாசற்படியில் காத்திருப்பதையே தெரிந்துகொள்ளுவேன். 11. தேவனாகிய கர்த்தர் சூரியனும் கேடகமுமானவர்; கர்த்தர் கிருபையையும் மகிமையையும் அருளுவார்; உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்காதிரார். 12. சேனைகளின் கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிற மனுஷன் பாக்கியவான்.
Chapter 85
1. கர்த்தாவே, உமது தேசத்தின்மேல் பிரியம் வைத்து, யாக்கோபின் சிறையிருப்பைத் திருப்பினீர். 2. உமது ஜனத்தின் அக்கிரமத்தை மன்னித்து, அவர்கள் பாவத்தையெல்லாம் மூடினீர். (சேலா.) 3. உமது உக்கிரத்தையெல்லாம் அடக்கிக்கொண்டு, உமது கோபத்தின் எரிச்சலைவிட்டுத் திரும்பினீர். 4. எங்கள் இரட்சிப்பின் தேவனே, நீர் எங்களைத் திருப்பிக்கொண்டுவாரும், எங்கள்மேலுள்ள உமது கோபத்தை ஆறப்பண்ணும். 5. என்றைக்கும் எங்கள்மேல் கோபமாயிருப்பீரோ? தலைமுறை தலைமுறையாக உமது கோபத்தை நீடித்திருக்கப்பண்ணுவீரோ? 6. உமது ஜனங்கள் உம்மில் மகிழ்ந்திருக்கும்படி நீர் எங்களைத் திரும்ப உயிர்ப்பிக்கமாட்டீரோ? 7. கர்த்தாவே, உமது கிருபையை எங்களுக்குக் காண்பித்து, உமது இரட்சிப்பை எங்களுக்கு அருளிச்செய்யும். 8. கர்த்தராகிய தேவன் விளம்புவதைக் கேட்பேன்; அவர் தம்முடைய ஜனங்களுக்கும் தம்முடைய பரிசுத்தவான்களுக்கும் சமாதானம் கூறுவார்; அவர்களோ மதிகேட்டுக்குத் திரும்பாதிருப்பார்களாக. 9. நம்முடைய தேசத்தில் மகிமை வாசமாயிருக்கும்படி, அவருடைய இரட்சிப்பு அவருக்குப் பயந்தவர்களுக்குச் சமீபமாயிருக்கிறது. 10. கிருபையும் சத்தியமும் ஒன்றையொன்று சந்திக்கும், நீதியும் சமாதானமும் ஒன்றையொன்று முத்தஞ்செய்யும். 11. சத்தியம் பூமியிலிருந்து முளைக்கும், நீதி வானத்திலிருந்து தாழப்பார்க்கும். 12. கர்த்தர் நன்மையானதைத் தருவார்; நம்முடைய தேசமும் தன் பலனைக் கொடுக்கும். 13. நீதி அவருக்கு முன்னாகச் சென்று, அவருடைய அடிச்சுவடுகளின் வழியிலே நம்மை நிறுத்தும்.
Chapter 86
1. கர்த்தாவே, உமது செவியைச் சாய்த்து, என் விண்ணப்பத்தைக் கேட்டருளும்; நான் சிறுமையும் எளிமையுமானவன். 2. என் ஆத்துமாவைக் காத்தருளும், நான் பக்தியுள்ளவன்; என் தேவனே, உம்மை நம்பியிருக்கிற உமது அடியேனை நீர் இரட்சியும். 3. ஆண்டவரே, எனக்கு இரங்கும், நாடோறும் உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன். 4. உமது அடியேனுடைய ஆத்துமாவை மகிழ்ச்சியாக்கும்; ஆண்டவரே, உம்மிடத்தில் என் ஆத்துமாவை உயர்த்துகிறேன். 5. ஆண்டவரே, நீர் நல்லவரும், மன்னிக்கிறவரும், உம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவர்மேலும் கிருபை மிகுந்தவருமாயிருக்கிறீர். 6. கர்த்தாவே, என் ஜெபத்திற்குச் செவிகொடுத்து, என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கவனியும். 7. நான் துயரப்படுகிற நாளில் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்; நீர் என்னைக் கேட்டருளுவீர். 8. ஆண்டவரே, தேவர்களுக்குள்ளே உமக்கு நிகருமில்லை; உம்முடைய கிரியைகளுக்கு ஒப்புமில்லை. 9. ஆண்டவரே, நீர் உண்டாக்கின எல்லா ஜாதிகளும் வந்து, உமக்கு முன்பாகப் பணிந்து, உமது நாமத்தை மகிமைப்படுத்துவார்கள். 10. தேவரீர் மகத்துவமுள்ளவரும் அதிசயங்களைச் செய்கிறவருமாயிருக்கிறீர்; நீர் ஒருவரே தேவன். 11. கர்த்தாவே, உமது வழியை எனக்குப் போதியும், நான் உமது சத்தியத்திலே நடப்பேன்; நான் உமது நாமத்திற்குப் பயந்திருக்கும்படி என் இருதயத்தை ஒருமுகப்படுத்தும். 12. என் தேவனாகிய ஆண்டவரே உம்மை என் முழு இருதயத்தோடும் துதித்து, உமது நாமத்தை என்றென்றைக்கும் மகிமைப்படுத்துவேன். 13. நீர் எனக்குப் பாராட்டின உமது கிருபை பெரியது; என் ஆத்துமாவைத் தாழ்ந்த பாதாளத்திற்குத் தப்புவித்தீர். 14. தேவனே, அகங்காரிகள் எனக்கு விரோதமாய் எழும்புகிறார்கள், கொடுமைக்காரராகிய கூட்டத்தார் என் பிராணனை வாங்கத் தேடுகிறார்கள், உம்மைத் தங்களுக்கு முன்பாக நிறுத்தி நோக்காதிருக்கிறார்கள். 15. ஆனாலும் ஆண்டவரே, நீர் மனவுருக்கமும், இரக்கமும், நீடிய பொறுமையும், பூரண கிருபையும், சத்தியமுமுள்ள தேவன். 16. என்மேல் நோக்கமாகி, எனக்கு இரங்கும்; உமது வல்லமையை உமது அடியானுக்கு அருளி, உமது அடியாளின் குமாரனை இரட்சியும். 17. கர்த்தாவே, நீர் எனக்குத் துணைசெய்து என்னைத் தேற்றுகிறதை என் பகைஞர் கண்டு வெட்கப்படும்படிக்கு, எனக்கு அநுகூலமாக ஒரு அடையாளத்தைக் காண்பித்தருளும்.
Chapter 87
1. அவர் அஸ்திபாரம் பரிசுத்த பர்வதங்களில் இருக்கிறது. 2. கர்த்தர் யாக்கோபின் வாசஸ்தலங்களெல்லாவற்றைப்பார்க்கிலும் சீயோனின் வாசல்களில் பிரியமாயிருக்கிறார். 3. தேவனுடைய நகரமே! உன்னைக் குறித்து மகிமையான விசேஷங்கள் வசனிக்கப்படும். (சேலா.) 4. என்னை அறிந்தவர்களுக்குள்ளே ராகாபையும் பாபிலோனையும் குறித்துப் பேசுவேன்; இதோ, பெலிஸ்தியரிலும், தீரியரிலும், எத்தியோப்பியரிலுங்கூட, இன்னான் அங்கே பிறந்தான் என்றும்; 5. சீயோனைக்குறித்து, இன்னான் இன்னான் அதிலே பிறந்தானென்றும் சொல்லப்படும்; உன்னதமானவர்தாமே அதை ஸ்திரப்படுத்துவார். 6. கர்த்தர் ஜனங்களைப் பேரெழுதும்போது, இன்னான் அதிலே பிறந்தான் என்று அவர்களைத் தொகையிடுவார். (சேலா.) 7. எங்கள் ஊற்றுகளெல்லாம் உன்னில் இருக்கிறது என்று பாடுவாரும் ஆடுவாரும் ஏகமாய்ச் சொல்லுவார்கள்.
Chapter 88
1. என் இரட்சிப்பின் தேவனாகிய கர்த்தாவே, இரவும் பகலும் உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன். 2. என் விண்ணப்பம் உமது சமுகத்தில் வருவதாக; என் கூப்பிடுதலுக்கு உமது செவியைச் சாய்த்தருளும். 3. என் ஆத்துமா துக்கத்தால் நிறைந்திருக்கிறது; என் ஜீவன் பாதாளத்திற்குச் சமீபமாய் வந்திருக்கிறது. 4. நான் குழியில் இறங்குகிறவர்களோடு எண்ணப்பட்டு, பெலனற்ற மனுஷனைப்போலானேன். 5. மரித்தவர்களில் ஒருவனைப்போல் நெகிழப்பட்டிருக்கிறேன்; நீர் இனி ஒருபோதும் நினையாதபடி, உமது கையால் அறுப்புண்டுபோய்ப் பிரேதக்குழிகளிலே கிடக்கிறவர்களைப்போலானேன். 6. என்னைப் பாதாளக்குழியிலும் இருளிலும் ஆழங்களிலும் வைத்தீர். 7. உம்முடைய கோபம் என்னை இருத்துகிறது; உம்முடைய அலைகள் எல்லாவற்றினாலும் என்னை வருத்தப்படுத்துகிறீர். (சேலா.) 8. எனக்கு அறிமுகமானவர்களை எனக்குத் தூரமாக விலக்கி, அவர்களுக்கு என்னை அருவருப்பாக்கினீர்; நான் வெளியே புறப்படக்கூடாதபடி அடைபட்டிருக்கிறேன். 9. துக்கத்தினால் என் கண் தொய்ந்துபோயிற்று; கர்த்தாவே, அநுதினமும் நான் உம்மை நோக்கிக் கூப்பிட்டு, உமக்கு நேராக என் கைகளை விரிக்கிறேன். 10. மரித்தவர்களுக்கு அதிசயங்களைச் செய்வீரோ? செத்துப்போன வீரர் எழுந்து உம்மைத் துதிப்பார்களோ? (சேலா.) 11. பிரேதக்குழியில் உமது கிருபையும், அழிவில் உமது உண்மையும் விவரிக்கப்படுமோ? 12. இருளில் உமது அதிசயங்களும், மறதியின் பூமியில் உமது நீதியும் அறியப்படுமோ? 13. நானோ கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; காலையிலே என் விண்ணப்பம் உமக்கு முன்பாக வரும். 14. கர்த்தாவே, ஏன் என் ஆத்துமாவைத் தள்ளிவிடுகிறீர்? ஏன் உமது முகத்தை எனக்கு மறைக்கிறீர்? 15. சிறுவயதுமுதல் நான் சிறுமைப்பட்டவனும் மாண்டுபோகிறவனுமாயிருக்கிறேன்; உம்மால் வரும் திகில்கள் என்மேல் சுமந்திருக்கிறது, நான் மனங்கலங்குகிறேன். 16. உம்முடைய எரிச்சல்கள் என்மேல் புரண்டுபோகிறது; உம்முடைய பயங்கரங்கள் என்னை அதம்பண்ணுகிறது. 17. அவைகள் நாடோறும் தண்ணீரைப்போல் என்னைச் சூழ்ந்து, ஏகமாய் என்னை வளைந்துகொள்ளுகிறது. 18. சிநேகிதனையும் தோழனையும் எனக்குத் தூரமாக விலக்கினீர்; எனக்கு அறிமுகமானவர்கள் மறைந்துபோனார்கள்.
Chapter 89
1. கர்த்தரின் கிருபைகளை என்றென்றைக்கும் பாடுவேன்; உமது உண்மையைத் தலைமுறை தலைமுறையாக என் வாயினால் அறிவிப்பேன். 2. கிருபை என்றென்றைக்கும் ஸ்திரப்பட்டிருக்கும்; உமது உண்மையை வானங்களிலே ஸ்தாபிப்பீர் என்றேன். 3. என்னால் தெரிந்துகொள்ளப்பட்டவனோடே உடன்படிக்கைபண்ணி, என் தாசனாகிய தாவீதை நோக்கி: 4. என்றென்றைக்கும் உன் சந்ததியை நிலைப்படுத்தி, தலைமுறை தலைமுறையாக உன் சிங்காசனத்தை ஸ்தாபிப்பேன் என்று ஆணையிட்டேன் என்றீர். (சேலா.) 5. கர்த்தாவே, வானங்கள் உம்முடைய அதிசயங்களைத் துதிக்கும், பரிசுத்தவான்களின் சபையிலே உம்முடைய உண்மையும் விளங்கும். 6. ஆகாயமண்டலத்தில் கர்த்தருக்கு நிகரானவர் யார்? பலவான்களின் புத்திரரில் கர்த்தருக்கு ஒப்பானவர் யார்? 7. தேவன் பரிசுத்தவான்களுடைய ஆலோசனைச் சபையில் மிகவும் பயப்படத்தக்கவர், தம்மைச் சூழ்ந்திருக்கிற அனைவராலும் அஞ்சப்படத்தக்கவர். 8. சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, உம்மைப்போல் வல்லமையுள்ள கர்த்தர் யார்? உம்முடைய உண்மை உம்மைச் சூழ்ந்திருக்கிறது. 9. தேவரீர் சமுத்திரத்தின் பெருமையை ஆளுகிறவர்; அதின் அலைகள் எழும்பும்போது அவைகளை அடங்கப்பண்ணுகிறீர். 10. நீர் ராகாபை வெட்டுண்ட ஒருவனைப்போல் நொறுக்கினீர்; உமது வல்லமையான புயத்தினால் உம்முடைய சத்துருக்களைச் சிதறடித்தீர். 11. வானங்கள் உம்முடையது, பூமியும் உம்முடையது, பூலோகத்தையும் அதிலுள்ள யாவையும் நீரே அஸ்திபாரப்படுத்தினீர். 12. வடக்கையும் தெற்கையும் நீர் உண்டாக்கினீர்; தாபோரும் எர்மோனும் உம்முடைய நாமம் விளங்கக் கெம்பீரிக்கும். 13. உமக்கு வல்லமையுள்ள புயமிருக்கிறது; உம்முடைய கரம் பராக்கிரமமுள்ளது; உம்முடைய வலதுகரம் உன்னதமானது. 14. நீதியும் நியாயமும் உம்முடைய சிங்காசனத்தின் ஆதாரம்; கிருபையும் சத்தியமும் உமக்கு முன்பாக நடக்கும். 15. கெம்பீரசத்தத்தை அறியும் ஜனங்கள் பாக்கியமுள்ளவர்கள்; கர்த்தாவே, அவர்கள் உம்முடைய முகத்தின் வெளிச்சத்தில் நடப்பார்கள். 16. அவர்கள் உம்முடைய நாமத்தில் நாடோறும் களிகூர்ந்து, உம்முடைய நீதியால் உயர்ந்திருப்பார்கள். 17. நீரே அவர்கள் பலத்தின் மகிமையாயிருக்கிறீர்; உம்முடைய தயவினால் எங்கள் கொம்பு உயரும். 18. கர்த்தரால் எங்கள் கேடகமும், இஸ்ரவேலின் பரிசுத்தரால் எங்களுடைய ராஜாவும் உண்டு. 19. அப்பொழுது நீர் உம்முடைய பக்தனுக்குத் தரிசனமாகி: சகாயஞ்செய்யத்தக்க சக்தியை ஒரு சவுரியவான்மேல் வைத்து, ஜனத்தில் தெரிந்துகொள்ளப்பட்டவனை உயர்த்தினேன். 20. என் தாசனாகிய தாவீதைக் கண்டுபிடித்தேன்; என் பரிசுத்த தைலத்தினால் அவனை அபிஷேகம்பண்ணினேன். 21. என் கை அவனோடே உறுதியாயிருக்கும்; என் புயம் அவனைப் பலப்படுத்தும். 22. சத்துரு அவனை நெருக்குவதில்லை; நியாயக்கேட்டின் மகன் அவனை ஒடுக்குவதில்லை. 23. அவன் சத்துருக்களை அவனுக்குமுன்பாக மடங்கடித்து, அவனைப் பகைக்கிறவர்களை வெட்டுவேன். 24. என் உண்மையும் என் கிருபையும் அவனோடிருக்கும்; என் நாமத்தினால் அவன் கொம்பு உயரும். 25. அவன் கையைச் சமுத்திரத்தின்மேலும், அவன் வலதுகரத்தை ஆறுகள்மேலும் ஆளும்படி வைப்பேன். 26. அவன் என்னை நோக்கி: நீர் என் பிதா, என் தேவன், என் இரட்சிப்பின் கன்மலையென்று சொல்லுவான். 27. நான் அவனை எனக்கு முதற்பேறானவனும், பூமியின் ராஜாக்களைப்பார்க்கிலும் மகா உயர்ந்தவனுமாக்குவேன். 28. என் கிருபையை என்றென்றைக்கும் அவனுக்காகக் காப்பேன்; என் உடன்படிக்கை அவனுக்காக உறுதிப்படுத்தப்படும். 29. அவன் சந்ததி என்றென்றைக்கும் நிலைத்திருக்கவும், அவன் ராஜாசனம் வானங்களுள்ளமட்டும் நிலைநிற்கவும் செய்வேன். 30. அவன் பிள்ளைகள் என் நியாயங்களின்படி நடவாமல், என் வேதத்தை விட்டு விலகி; 31. என் கட்டளைகளைக் கைக்கொள்ளாமல், என் நியமங்களை மீறிநடந்தால்; 32. அவர்கள் மீறுதலை மிலாற்றினாலும், அவர்கள் அக்கிரமத்தை வாதைகளினாலும் தண்டிப்பேன். 33. ஆனாலும் என் கிருபையை அவனை விட்டு விலக்காமலும், என் உண்மையில் பிசகாமலும் இருப்பேன். 34. என் உடன்படிக்கையை மீறாமலும், என் உதடுகள் விளம்பினதை மாற்றாமலும் இருப்பேன். 35. ஒருவிசை என் பரிசுத்தத்தின்பேரில் ஆணையிட்டேன், தாவீதுக்கு நான் பொய்சொல்லேன். 36. அவன் சந்ததி என்றென்றைக்கும் இருக்கும்; அவன் சிங்காசனம் சூரியனைப்போல எனக்கு முன்பாக நிலைநிற்கும். 37. சந்திரனைப்போல அது என்றென்றைக்கும் உறுதியாயும், ஆகாயமண்டலத்துச் சாட்சியைப்போல் உண்மையாயும் இருக்கும் என்று விளம்பினீர். (சேலா.) 38. ஆனாலும் நீர் எங்களை வெறுத்துத் தள்ளிவிட்டீர், நீர் அபிஷேகம்பண்ணுவித்தவன்மேல் உக்கிரமானீர். 39. உமது அடியானுடன் நீர் பண்ணின உடன்படிக்கையை ஒழித்துவிட்டு, அவன் கிரீடத்தைத் தரையிலே தள்ளி அவமானப்படுத்தினீர். 40. அவன் மதில்களையெல்லாம் தகர்த்துப்போட்டு, அவன் அரணான ஸ்தலங்களைப் பாழாக்கினீர். 41. வழிநடக்கிற யாவரும் அவனைக் கொள்ளையிடுகிறார்கள்; தன் அயலாருக்கு நிந்தையானான். 42. அவன் சத்துருக்களின் வலதுகையை நீர் உயர்த்தி, அவன் விரோதிகள் யாவரும் சந்தோஷிக்கும்படி செய்தீர். 43. அவன் பட்டயத்தின் கருக்கை மழுக்கிப்போட்டு, அவனை யுத்தத்தில் நிற்காதபடி செய்தீர். 44. அவன் மகிமையை அற்றுப்போகப்பண்ணி, அவன் சிங்காசனத்தைத் தரையிலே தள்ளினீர். 45. அவன் வாலிபநாட்களைக் குறுக்கி, அவனை வெட்கத்தால் மூடினீர். (சேலா.) 46. எதுவரைக்கும், கர்த்தாவே! நீர் என்றைக்கும் மறைந்திருப்பீரோ? உமது கோபம் அக்கினியைப்போல எரியுமோ? 47. என் ஜீவன் எவ்வளவு நிலையற்றது என்பதை நினைத்தருளும்; மனுபுத்திரர் யாவரையும் வீணாகச் சிருஷ்டிக்க வேண்டியதென்ன? 48. மரணத்தைக் காணாமல் உயிரோடிருப்பவன் யார்? தன் ஆத்துமாவைப் பாதாள வல்லடிக்கு விலக்கிவிடுகிறவன் யார்? (சேலா.) 49. ஆண்டவரே, நீர் தாவீதுக்கு உம்முடைய உண்மையைக்கொண்டு சத்தியம்பண்ணின உமது பூர்வ கிருபைகள் எங்கே? 50. ஆண்டவரே, உம்முடைய சத்துருக்கள் உம்முடைய ஊழியக்காரரையும், நீர் அபிஷேகம்பண்ணினவனின் காலடிகளையும் நிந்திக்கிறபடியினால், 51. கர்த்தாவே, உமது அடியார் சுமக்கும் நிந்தையையும், வலுமையான ஜனங்களெல்லாராலும் நான் என் மடியில் சுமக்கும் என் நிந்தையையும் நினைத்தருளும். 52. கர்த்தருக்கு என்றென்றைக்கும் ஸ்தோத்திரமுண்டாவதாக. ஆமென், ஆமென்.
Chapter 90
1. ஆண்டவரே, தேவரீர் தலைமுறை தலைமுறையாக எங்களுக்கு அடைக்கலமானவர். 2. பர்வதங்கள் தோன்றுமுன்னும், நீர் பூமியையும் உலகத்தையும் உருவாக்குமுன்னும், நீரே அநாதியாய் என்றென்றைக்கும் தேவனாயிருக்கிறீர். 3. நீர் மனுஷரை நிர்த்தூளியாக்கி, மனுபுத்திரரே, திரும்புங்கள் என்கிறீர். 4. உமது பார்வைக்கு ஆயிரம் வருஷம் நேற்றுக்கழிந்த நாள்போலவும் இராச்சாமம்போலவும் இருக்கிறது. 5. அவர்களை வெள்ளம்போல் வாரிக்கொண்டுபோகிறீர்; நித்திரைக்கு ஒத்திருக்கிறார்கள்; காலையிலே முளைக்கிற புல்லுக்கு ஒப்பாயிருக்கிறார்கள். 6. அது காலையிலே முளைத்துப் பூத்து, மாலையிலே அறுப்புண்டு உலர்ந்துபோம். 7. நாங்கள் உமது கோபத்தினால் அழிந்து, உமது உக்கிரத்தினால் கலங்கிப்போகிறோம். 8. எங்கள் அக்கிரமங்களை உமக்கு முன்பாகவும், எங்கள் அந்தரங்க பாவங்களை உமது முகத்தின் வெளிச்சத்திலும் நிறுத்தினீர். 9. எங்கள் நாட்களெல்லாம் உமது கோபத்தால் போய்விட்டது; ஒரு கதையைப்போல் எங்கள் வருஷங்களைக் கழித்துப்போட்டோம். 10. எங்கள் ஆயுசுநாட்கள் எழுபது வருஷம், பெலத்தின் மிகுதியால் எண்பது வருஷமாயிருந்தாலும், அதின் மேன்மையானது வருத்தமும் சஞ்சலமுமே; அது சீக்கிரமாய்க் கடந்துபோகிறது, நாங்களும் பறந்துபோகிறோம். 11. உமது கோபத்தின் வல்லமையையும், உமக்குப் பயப்படத்தக்கவிதமாய் உமது உக்கிரத்தையும் அறிந்துகொள்ளுகிறவன் யார்? 12. நாங்கள் ஞான இருதயமுள்ளவர்களாகும்படி, எங்கள் நாட்களை எண்ணும் அறிவை எங்களுக்குப் போதித்தருளும். 13. கர்த்தாவே, திரும்பிவாரும், எதுவரைக்கும் கோபமாயிருப்பீர்? உமது அடியாருக்காகப் பரிதபியும். 14. நாங்கள் எங்கள் வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து மகிழும்படி, காலையிலே எங்களை உமது கிருபையால் திருப்தியாக்கும். 15. தேவரீர் எங்களைச் சிறுமைப்படுத்தின நாட்களுக்கும், நாங்கள் துன்பத்தைக் கண்ட வருஷங்களுக்கும் சரியாய் எங்களை மகிழ்ச்சியாக்கும். 16. உமது கிரியை உமது ஊழியக்காரருக்கும், உமது மகிமை அவர்கள் பிள்ளைகளுக்கும் விளங்குவதாக. 17. எங்கள் தேவனாகிய ஆண்டவரின் பிரியம் எங்கள்மேல் இருப்பதாக; எங்கள் கைகளின் கிரியையை எங்களிடத்தில் உறுதிப்படுத்தும்; ஆம், எங்கள் கைகளின் கிரியையை எங்களிடத்தில் உறுதிப்படுத்தியருளும்.
Chapter 91
1. உன்னதமானவரின் மறைவிலிருக்கிறவன் சர்வவல்லவருடைய நிழலில் தங்குவான். 2. நான் கர்த்தரை நோக்கி: நீர் என் அடைக்கலம், என் கோட்டை, என் தேவன், நான் நம்பியிருக்கிறவர் என்று சொல்லுவேன். 3. அவர் உன்னை வேடனுடைய கண்ணிக்கும், பாழாக்கும் கொள்ளைநோய்க்கும் தப்புவிப்பார். 4. அவர் தமது சிறகுகளாலே உன்னை மூடுவார்; அவர் செட்டைகளின் கீழே அடைக்கலம் புகுவாய்; அவருடைய சத்தியம் உனக்குப் பரிசையும் கேடகமுமாகும். 5. இரவில் உண்டாகும் பயங்கரத்துக்கும், பகலில் பறக்கும் அம்புக்கும், 6. இருளில் நடமாடும் கொள்ளைநோய்க்கும், மத்தியானத்தில் பாழாக்கும் சங்காரத்துக்கும் பயப்படாதிருப்பாய். 7. உன் பக்கத்தில் ஆயிரம்பேரும், உன் வலதுபுறத்தில் பதினாயிரம்பேரும் விழுந்தாலும், அது உன்னை அணுகாது. 8. உன் கண்களால் மாத்திரம் நீ அதைப் பார்த்து, துன்மார்க்கருக்கு வரும் பலனைக் காண்பாய். 9. எனக்கு அடைக்கலமாயிருக்கிற உன்னதமான கர்த்தரை உனக்குத் தாபரமாகக்கொண்டாய். 10. ஆகையால் பொல்லாப்பு உனக்கு நேரிடாது, வாதை உன் கூடாரத்தை அணுகாது. 11. உன் வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி, உனக்காகத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார். 12. உன் பாதம் கல்லில் இடறாதபடிக்கு அவர்கள் உன்னைத் தங்கள் கைகளில் ஏந்திக்கொண்டுபோவார்கள். 13. சிங்கத்தின்மேலும் விரியன் பாம்பின்மேலும் நீ நடந்து, பாலசிங்கத்தையும் வலுசர்ப்பத்தையும் மிதித்துப்போடுவாய். 14. அவன் என்னிடத்தில் வாஞ்சையாயிருக்கிறபடியால் அவனை விடுவிப்பேன்; என் நாமத்தை அவன் அறிந்திருக்கிறபடியால் அவனை உயர்ந்த அடைக்கலத்திலே வைப்பேன். 15. அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான், நான் அவனுக்கு மறுஉத்தரவு அருளிச்செய்வேன்; ஆபத்தில் நானே அவனோடிருந்து, அவனைத் தப்புவித்து, அவனைக் கனப்படுத்துவேன். 16. நீடித்த நாட்களால் அவனைத் திருப்தியாக்கி, என் இரட்சிப்பை அவனுக்குக் காண்பிப்பேன்.
Chapter 92
1. கர்த்தரைத் துதிப்பதும், உன்னதமானவரே, உமது நாமத்தைக் கீர்த்தனம்பண்ணுவதும், 2. பத்துநரம்பு வீணையினாலும், தம்புருவினாலும், தியானத்தோடு வாசிக்கும் சுரமண்டலத்தினாலும், 3. காலையிலே உமது கிருபையையும், இரவிலே உமது சத்தியத்தையும் அறிவிப்பதும் நலமாயிருக்கும். 4. கர்த்தாவே, உமது செய்கைகளால் என்னை மகிழ்ச்சியாக்கினீர், உமது கரத்தின் கிரியைகளினிமித்தம் ஆனந்தசத்தமிடுவேன். 5. கர்த்தாவே, உமது கிரியைகள் எவ்வளவு மகத்துவமானவைகள்! உமது யோசனைகள் மகா ஆழமானவைகள். 6. மிருககுணமுள்ள மனுஷன் அதை அறியான்; மூடன் அதை உணரான். 7. துன்மார்க்கர் புல்லைப்போலே தழைத்து, அக்கிரமக்காரர் யாவரும் செழிக்கும்போது, அது அவர்கள் என்றென்றைக்கும் அழிந்துபோவதற்கே ஏதுவாகும். 8. கர்த்தாவே, நீர் என்றென்றைக்கும் உன்னதமானவராயிருக்கிறீர். 9. கர்த்தாவே, உமது சத்துருக்கள் அழிவார்கள்; உமது சத்துருக்கள் அழிந்தேபோவார்கள்; சகல அக்கிரமக்காரரும் சிதறுண்டுபோவார்கள். 10. என் கொம்பைக் காண்டாமிருகத்தின் கொம்பைப்போல உயர்த்துவீர்; புது எண்ணெயால் அபிஷேகம்பண்ணப்படுகிறேன். 11. என் சத்துருக்களுக்கு நேரிடுவதை என் கண் காணும்; எனக்கு விரோதமாய் எழும்புகிற துன்மார்க்கருக்கு நேரிடுவதை என் காது கேட்கும். 12. நீதிமான் பனையைப்போல் செழித்து, லீபனோனிலுள்ள கேதுருவைப்போல் வளருவான். 13. கர்த்தருடைய ஆலயத்திலே நாட்டப்பட்டவர்கள் எங்கள் தேவனுடைய பிராகாரங்களில் செழித்திருப்பார்கள். 14. கர்த்தர் உத்தமரென்றும், என் கன்மலையாகிய அவரிடத்தில் அநீதியில்லையென்றும், விளங்கப்பண்ணும்படி, 15. அவர்கள் முதிர்வயதிலும் கனி தந்து, புஷ்டியும் பசுமையுமாயிருப்பார்கள்.
Chapter 93
1. கர்த்தர் ராஜரிகம்பண்ணுகிறார், மகத்துவத்தை அணிந்துகொண்டிருக்கிறார்; கர்த்தர் பராக்கிரமத்தை அணிந்து, அவர் அதைக் கச்சையாகக் கட்டிக்கொண்டிருக்கிறார்; ஆதலால் பூச்சக்கரம் அசையாதபடி நிலைபெற்றிருக்கிறது. 2. உமது சிங்காசனம் பூர்வமுதல் உறுதியானது; நீர் அநாதியாயிருக்கிறீர். 3. கர்த்தாவே, நதிகள் எழும்பின; நதிகள் இரைச்சலிட்டு எழும்பின; நதிகள் அலைதிரண்டு எழும்பின. 4. திரளான தண்ணீர்களின் இரைச்சலைப்பார்க்கிலும், சமுத்திரத்தின் வலுமையான அலைகளைப்பார்க்கிலும், கர்த்தர் உன்னதத்திலே வல்லமையுள்ளவர். 5. உமது சாட்சிகள் மிகவும் உண்மையுள்ளவைகள்; கர்த்தாவே, பரிசுத்தமானது நித்தியநாளாக உமது ஆலயத்தின் அலங்காரமாயிருக்கிறது.
Chapter 94
1. நீதியைச் சரிக்கட்டுகிற தேவனாகிய கர்த்தாவே, நீதியைச் சரிக்கட்டுகிற தேவனே, பிரகாசியும். 2. பூமியின் நியாயாதிபதியே, நீர் எழுந்து, பெருமைக்காரருக்குப் பதிலளியும். 3. கர்த்தாவே, துன்மார்க்கர் எதுவரைக்கும் மகிழ்ந்து, துன்மார்க்கர் எதுவரைக்கும் களிகூர்ந்திருப்பார்கள்? 4. எதுவரைக்கும் அக்கிரமக்காரர் யாவரும் வாயாடி, கடினமாய்ப் பேசி, பெருமைபாராட்டுவார்கள்? 5. கர்த்தாவே, அவர்கள் உமது ஜனத்தை நொறுக்கி, உமது சுதந்தரத்தை ஒடுக்குகிறார்கள். 6. விதவையையும் பரதேசியையும் கொன்று, திக்கற்ற பிள்ளைகளைக் கொலைசெய்து: 7. கர்த்தர் பாரார், யாக்கோபின் தேவன் கவனியார் என்று சொல்லுகிறார்கள். 8. ஜனத்தில் மிருககுணமுள்ளவர்களே, உணர்வடையுங்கள்; மூடரே, எப்பொழுது புத்திமான்களாவீர்கள்? 9. காதை உண்டாக்கினவர் கேளாரோ? கண்ணை உருவாக்கினவர் காணாரோ? 10. ஜாதிகளை தண்டிக்கிறவர் கடிந்துகொள்ளாரோ? மனுஷனுக்கு அறிவைப் போதிக்கிறவர் அறியாரோ? 11. மனுஷனுடைய யோசனைகள் வீணென்று கர்த்தர் அறிந்திருக்கிறார். 12. கர்த்தாவே, துன்மார்க்கனுக்குக் குழிவெட்டப்படும்வரைக்கும், நீர் தீங்குநாட்களில் அமர்ந்திருக்கப்பண்ணி, 13. சிட்சித்து, உம்முடைய வேதத்தைக்கொண்டு போதிக்கிற மனுஷன் பாக்கியவான். 14. கர்த்தர் தம்முடைய ஜனத்தை நெகிழவிடாமலும், தம்முடைய சுதந்தரத்தைக் கைவிடாமலும் இருப்பார். 15. நியாயம் நீதியினிடமாகத் திரும்பும்; செம்மையான இருதயத்தார் யாவரும் அதைப் பின்பற்றுவார்கள். 16. துன்மார்க்கருக்கு விரோதமாய் என் பட்சத்தில் எழும்புகிறவன் யார்? அக்கிரமக்காரருக்கு விரோதமாய் என் பட்சத்தில் நிற்பவன் யார்? 17. கர்த்தர் எனக்குத் துணையாயிராவிட்டால், என் ஆத்துமா சீக்கிரமாய் மவுனத்தில் வாசம்பண்ணியிருக்கும். 18. என் கால் சறுக்குகிறது என்று நான் சொல்லும்போது, கர்த்தாவே, உமது கிருபை என்னைத் தாங்குகிறது. 19. என் உள்ளத்தில் விசாரங்கள் பெருகுகையில், உம்முடைய ஆறுதல்கள் என் ஆத்துமாவைத் தேற்றுகிறது. 20. தீமையைக் கட்டளையினால் பிறப்பிக்கிற கொடுங்கோலாசனம் உமக்கு இசைந்திருக்குமோ? 21. அவர்கள் நீதிமானுடைய ஆத்துமாவுக்கு விரோதமாய்க் கூட்டங்கூடி, குற்றமில்லாத இரத்தத்தைக் குற்றப்படுத்துகிறார்கள். 22. கர்த்தரோ எனக்கு அடைக்கலமும், என் தேவன் நான் நம்பியிருக்கிற கன்மலையுமாயிருக்கிறார். 23. அவர்களுடைய அக்கிரமத்தை அவர்கள்மேல் திருப்பி, அவர்களுடைய பொல்லாப்பினிமித்தம் அவர்களைச் சங்கரிப்பார்; நம்முடைய தேவனாகிய கர்த்தரே அவர்களைச் சங்கரிப்பார்.
Chapter 95
1. கர்த்தரைக் கெம்பீரமாய்ப் பாடி, நம்முடைய இரட்சணியக் கன்மலையைச் சங்கீர்த்தனம் பண்ணக்கடவோம் வாருங்கள். 2. துதித்தலுடனே அவர் சந்நிதிக்கு முன்பாக வந்து, சங்கீதங்களால் அவரை ஆர்ப்பரித்துப் பாடக்கடவோம். 3. கர்த்தரே மகா தேவனும், எல்லா தேவர்களுக்கும் மகாராஜனுமாயிருக்கிறார். 4. பூமியின் ஆழங்கள் அவர் கையில் இருக்கிறது; பர்வதங்களின் உயரங்களும் அவருடையவைகள். 5. சமுத்திரம் அவருடையது, அவரே அதை உண்டாக்கினார்; வெட்டாந்தரையையும் அவருடைய கரம் உருவாக்கிற்று. 6. நம்மை உண்டாக்கின கர்த்தருக்கு முன்பாக நாம் பணிந்து குனிந்து முழங்காற்படியிடக்கடவோம் வாருங்கள். 7. அவர் நம்முடைய தேவன்; நாம் அவர் மேய்ச்சலின் ஜனங்களும், அவர் கைக்குள்ளான ஆடுகளுமாமே. 8. இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில், வனாந்தரத்தில் கோபம் மூட்டினபோதும் சோதனைநாளிலும் நடந்ததுபோல, உங்கள் இருதயத்தைக் கடினப்படுத்தாதேயுங்கள். 9. அங்கே உங்கள் பிதாக்கள் என்னைச் சோதித்து, என்னைப் பரீட்சைபார்த்து, என் கிரியையையும் கண்டார்கள். 10. நாற்பது வருஷமாய் நான் அந்தச் சந்ததியை அரோசித்து, அவர்கள் வழுவிப்போகிற இருதயமுள்ள ஜனமென்றும், என்னுடைய வழிகளை அறியாதவர்களென்றும் சொல்லி, 11. என்னுடைய இளைப்பாறுதலில் அவர்கள் பிரவேசிப்பதில்லையென்று, என்னுடைய கோபத்திலே ஆணையிட்டேன்.
Chapter 96
1. கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; பூமியின் குடிகளே, எல்லாரும் கர்த்தரைப் பாடுங்கள். 2. கர்த்தரைப் பாடி, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரித்து, நாளுக்குநாள் அவருடைய இரட்சிப்பைச் சுவிசேஷமாய் அறிவியுங்கள். 3. ஜாதிகளுக்குள் அவருடைய மகிமையையும், சகல ஜனங்களுக்குள்ளும் அவருடைய அதிசயங்களையும் விவரித்துச் சொல்லுங்கள். 4. கர்த்தர் பெரியவரும், மிகவும் ஸ்தோத்திரிக்கப்படத்தக்கவருமாயிருக்கிறார்; எல்லா தேவர்களிலும் பயப்படத்தக்கவர் அவரே. 5. சகல ஜனங்களுடைய தேவர்களும் விக்கிரகங்கள்தானே; கர்த்தரோ வானங்களை உண்டாக்கினவர். 6. மகிமையும் கனமும் அவர் சமுகத்தில் இருக்கிறது, வல்லமையும் மகத்துவமும் அவர் பரிசுத்த ஸ்தலத்திலுள்ளது. 7. ஜனங்களின் வம்சங்களே, கர்த்தருக்கு மகிமையையும் வல்லமையையும் செலுத்துங்கள், கர்த்தருக்கே அதைச் செலுத்துங்கள். 8. கர்த்தருக்கு அவருடைய நாமத்திற்குரிய மகிமையைச் செலுத்தி, காணிக்கைகளைக் கொண்டுவந்து, அவருடைய பிராகாரங்களில் பிரவேசியுங்கள். 9. பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள்; பூலோகத்தாரே, நீங்கள் யாவரும் அவருக்கு முன்பாக நடுங்குங்கள். 10. கர்த்தர் ராஜரிகம்பண்ணுகிறார், ஆகையால் பூச்சக்கரம் அசையாதபடி உறுதிப்பட்டிருக்கும்; அவர் ஜனங்களை நிதானமாய் நியாயந்தீர்ப்பார் என்று ஜாதிகளுக்குள்ளே சொல்லுங்கள். 11. வானங்கள் மகிழ்ந்து, பூமி பூரிப்பாகி, சமுத்திரமும் அதின் நிறைவும் முழங்குவதாக. 12. நாடும் அதிலுள்ள யாவும் களிகூருவதாக; அப்பொழுது கர்த்தருக்கு முன்பாக காட்டுவிருட்சங்களெல்லாம் கெம்பீரிக்கும். 13. அவர் வருகிறார், அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார்; அவர் பூலோகத்தை நீதியோடும், ஜனங்களைச் சத்தியத்தோடும் நியாயந்தீர்ப்பார்.
Chapter 97
1. கர்த்தர் ராஜரிகம்பண்ணுகிறார்; பூமி பூரிப்பாகி, திரளான தீவுகள் மகிழக்கடவது. 2. மேகமும் மந்தாரமும் அவரைச் சூழ்ந்திருக்கிறது; நீதியும் நியாயமும் அவருடைய சிங்காசனத்தின் ஆதாரம். 3. அக்கினி அவருக்கு முன்சென்று, சுற்றிலும் இருக்கிற அவருடைய சத்துருக்களைச் சுட்டெரிக்கிறது. 4. அவருடைய மின்னல்கள் பூச்சக்கரத்தைப் பிரகாசிப்பித்தது; பூமி அதைக் கண்டு அதிர்ந்தது. 5. கர்த்தரின் பிரசன்னத்தினால் பர்வதங்கள் மெழுகுபோல உருகிற்று, சர்வ பூமியினுடைய ஆண்டவரின் பிரசன்னத்தினாலேயே உருகிப்போயிற்று. 6. வானங்கள் அவருடைய நீதியை வெளிப்படுத்துகிறது; சகல ஜனங்களும் அவருடைய மகிமையைக் காண்கிறார்கள். 7. சொரூபங்களை வணங்கி, விக்கிரகங்களைப்பற்றிப் பெருமைபாராட்டுகிற யாவரும் வெட்கப்பட்டுப் போவார்களாக; தேவர்களே, நீங்களெல்லாரும் அவரைத் தொழுதுகொள்ளுங்கள். 8. சீயோன் கேட்டு மகிழ்ந்தது; கர்த்தாவே, உம்முடைய நியாயத்தீர்ப்புகளினிமித்தம் யூதாவின் குமாரத்திகள் களிகூர்ந்தார்கள். 9. கர்த்தாவே, பூமி முழுவதுக்கும் நீர் உன்னதமானவர்; எல்லா தேவர்களிலும் நீரே மிகவும் உயர்ந்தவர். 10. கர்த்தரில் அன்புகூருகிறவர்களே, தீமையை வெறுத்துவிடுங்கள்; அவர் தம்முடைய பரிசுத்தவான்களின் ஆத்துமாக்களைக் காப்பாற்றி, துன்மார்க்கரின் கைக்கு அவர்களைத் தப்புவிக்கிறார். 11. நீதிமானுக்காக வெளிச்சமும், செம்மையான இருதயத்தாருக்காக மகிழ்ச்சியும் விதைக்கப்பட்டிருக்கிறது. 12. நீதிமான்களே, கர்த்தருக்குள் மகிழ்ந்து, அவருடைய பரிசுத்தத்தின் நினைவுகூருதலைக் கொண்டாடுங்கள்.
Chapter 98
1. கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; அவர் அதிசயங்களைச் செய்திருக்கிறார்; அவருடைய வலதுகரமும், அவருடைய பரிசுத்த புயமும், இரட்சிப்பை உண்டாக்கினது. 2. கர்த்தர் தமது இரட்சிப்பைப் பிரஸ்தாபமாக்கி, தமது நீதியை ஜாதிகளுடைய கண்களுக்கு முன்பாக விளங்கப்பண்ணினார். 3. அவர் இஸ்ரவேல் குடும்பத்துக்காகத் தமது கிருபையையும் உண்மையையும் நினைவுகூர்ந்தார்; பூமியின் எல்லைகளெல்லாம் நமது தேவனுடைய இரட்சிப்பைக் கண்டது. 4. பூமியின் குடிகளே, நீங்களெல்லாரும் கர்த்தரை நோக்கி ஆனந்தமாய் ஆர்ப்பரியுங்கள்; முழக்கமிட்டுக் கெம்பீரமாய்ப் பாடுங்கள். 5. சுரமண்டலத்தால் கர்த்தரைக் கீர்த்தனம்பண்ணுங்கள், சுரமண்டலத்தாலும் கீதசத்தத்தாலும் அவரைக் கீர்த்தனம்பண்ணுங்கள். 6. கர்த்தராகிய ராஜாவின் சமுகத்தில் பூரிகைகளாலும் எக்காள சத்தத்தாலும் ஆனந்தமாய் ஆர்ப்பரியுங்கள். 7. சமுத்திரமும் அதின் நிறைவும், பூச்சக்கரமும் அதின் குடிகளும் முழங்குவதாக. 8. கர்த்தருக்கு முன்பாக ஆறுகள் கைகொட்டி, பர்வதங்கள் ஏகமாய்க் கெம்பீரித்துப் பாடக்கடவது. 9. அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார்; பூலோகத்தை நீதியோடும் ஜனங்களை நிதானத்தோடும் நியாயந்தீர்ப்பார்.
Chapter 99
1. கர்த்தர் ராஜரிகம்பண்ணுகிறார், ஜனங்கள் தத்தளிப்பார்களாக; அவர் கேருபீன்களின் மத்தியில் வீற்றிருக்கிறார், பூமி அசைவதாக. 2. கர்த்தர் சீயோனில் பெரியவர், அவர் எல்லா ஜனங்கள்மேலும் உயர்ந்தவர். 3. மகத்துவமும் பயங்கரமுமான உமது நாமத்தை அவர்கள் துதிப்பார்களாக; அது பரிசுத்தமுள்ளது. 4. ராஜாவின் வல்லமை நீதியில் பிரியப்படுகிறது, தேவரீர் நியாயத்தை நிலைநிறுத்துகிறீர்; நீர் யாக்கோபில் நியாயமும் நீதியும் செய்கிறீர். 5. நம்முடைய தேவனாகிய கர்த்தரை உயர்த்தி, அவர் பாதபடியிலே பணியுங்கள்; அவர் பரிசுத்தமுள்ளவர். 6. அவருடைய ஆசாரியரில் மோசேயும் ஆரோனும், அவர் நாமத்தைப்பற்றிக் கூப்பிடுகிறவர்களில் சாமுவேலும், கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள்; அவர் அவர்களுக்கு மறுஉத்தரவு அருளினார். 7. மேகஸ்தம்பத்திலிருந்து அவர்களோடே பேசினார்; அவர்கள் அவருடைய சாட்சிப்பிரமாணங்களையும் அவர் தங்களுக்குக் கொடுத்த கட்டளையையும் கைக்கொண்டார்கள். 8. எங்கள் தேவனாகிய கர்த்தாவே, நீர் அவர்களுக்கு உத்தரவு அருளினீர்; நீர் அவர்கள் கிரியைகளினிமித்தம் நீதி சரிக்கட்டினபோதிலும், அவர்களுக்கு மன்னிக்கிற தேவனாயிருந்தீர். 9. நம்முடைய தேவனாகிய கர்த்தரை உயர்த்தி, அவருடைய பரிசுத்த பர்வதத்திற்கு நேராகப் பணியுங்கள்; நம்முடைய தேவனாகிய கர்த்தர் பரிசுத்தமுள்ளவர்.
Chapter 100
1. பூமியின் குடிகளே, எல்லாரும் கர்த்தரைக் கெம்பீரமாய்ப் பாடுங்கள். 2. மகிழ்ச்சியோடே கர்த்தருக்கு ஆராதனைசெய்து, ஆனந்தசத்தத்தோடே அவர் சந்நிதிமுன் வாருங்கள். 3. கர்த்தரே தேவனென்று அறியுங்கள்; நாம் அல்ல, அவரே நம்மை உண்டாக்கினார்; நாம் அவர் ஜனங்களும், அவர் மேய்ச்சலின் ஆடுகளுமாயிருக்கிறோம். 4. அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள். 5. கர்த்தர் நல்லவர், அவருடைய கிருபை என்றென்றைக்கும், அவருடைய உண்மை தலைமுறை தலைமுறைக்கும் உள்ளது.
Chapter 101
1. இரக்கத்தையும் நியாயத்தையும் குறித்துப் பாடுவேன்; கர்த்தாவே, உம்மைக் கீர்த்தனம்பண்ணுவேன். 2. உத்தமமான வழியிலே விவேகமாய் நடப்பேன்; எப்பொழுது என்னிடத்தில் வருவீர்! என் வீட்டிலே உத்தம இருதயத்தோடு நடந்துகொள்ளுவேன். 3. தீங்கான காரியத்தை என் கண்முன் வைக்கமாட்டேன்; வழி விலகுகிறவர்களின் செய்கையை வெறுக்கிறேன்; அது என்னைப் பற்றாது. 4. மாறுபாடான இருதயம் என்னைவிட்டு அகலவேண்டும்; பொல்லாதவனை அறியமாட்டேன். 5. பிறனை இரகசியமாய் அவதூறுபண்ணுகிறவனைச் சங்கரிப்பேன்; மேட்டிமைக் கண்ணனையும் பெருநெஞ்சுள்ளவனையும் பொறுக்கமாட்டேன். 6. தேசத்தில் உண்மையானவர்கள் என்னோடே வாசம்பண்ணும்படி என் கண்கள் அவர்கள்மேல் நோக்கமாயிருக்கும்; உத்தமமான வழியில் நடக்கிறவன் என்னைச் சேவிப்பான். 7. கபடுசெய்கிறவன் என் வீட்டுக்குள் இருப்பதில்லை; பொய்சொல்லுகிறவன் என் கண்முன் நிலைப்பதில்லை. 8. அக்கிரமக்காரர் ஒருவரும் கர்த்தருடைய நகரத்தில் இராதபடி வேர் அறுப்புண்டுபோக, தேசத்திலுள்ள அக்கிரமக்காரர் யாவரையும் அதிகாலமே சங்கரிப்பேன்.
Chapter 102
1. கர்த்தாவே, என் விண்ணப்பத்தைக் கேளும்; என் கூப்பிடுதல் உம்மிடத்தில் சேர்வதாக. 2. என் ஆபத்துநாளிலே உமது முகத்தை எனக்கு மறையாதேயும்; உமது செவியை என்னிடத்தில் சாயும்; நான் கூப்பிடுகிற நாளிலே எனக்குத் தீவிரமாய் உத்தரவு அருளிச்செய்யும். 3. என் நாட்கள் புகையைப்போல் ஒழிந்தது; என் எலும்புகள் ஒரு கொள்ளியைப்போல் எரியுண்டது. 4. என் இருதயம் புல்லைப்போல் வெட்டுண்டு உலர்ந்தது; என் போஜனத்தைப் புசிக்க மறந்தேன். 5. என் பெருமூச்சின் சத்தத்தினால், என் எலும்புகள் என் மாம்சத்தோடு ஒட்டிக்கொள்ளுகிறது. 6. வனாந்தர நாரைக்கு ஒப்பானேன்; பாழான இடங்களில் தங்கும் ஆந்தையைப்போலானேன். 7. நான் நித்திரையில்லாமல் வீட்டின்மேல் தனித்திருக்கும் குருவியைப்போல் இருக்கிறேன். 8. நாடோறும் என் சத்துருக்கள் என்னை நிந்திக்கிறார்கள்; என்மேல் மூர்க்கவெறிகொண்டவர்கள் எனக்கு விரோதமாய்ச் சாபம் இடுகிறார்கள். 9. நீர் என்னை உயரத் தூக்கி, தாழத்தள்ளினீர், உமது சினத்திற்கும் கடுங்கோபத்திற்கும் உள்ளானேன். 10. ஆதலால் நான் சாம்பலை அப்பமாகப் புசித்து, என் பானங்களைக் கண்ணீரோடே கலக்கிறேன். 11. என் நாட்கள் சாய்ந்துபோகிற நிழலைப்போலிருக்கிறது; புல்லைப்போல் உலர்ந்துபோகிறேன். 12. கர்த்தராகிய நீரோ என்றென்றைக்கும் இருக்கிறீர்; உம்முடைய பேர் பிரஸ்தாபம் தலைமுறை தலைமுறையாக நிற்கும். 13. தேவரீர் எழுந்தருளி சீயோனுக்கு இரங்குவீர்; அதற்குத் தயைசெய்யுங்காலமும், அதற்காகக் குறித்தநேரமும் வந்தது. 14. உம்முடைய ஊழியக்காரர் அதின் கல்லுகள்மேல் வாஞ்சைவைத்து, அதின் மண்ணுக்குப் பரிதபிக்கிறார்கள். 15. கர்த்தர் சீயோனைக் கட்டி, தமது மகிமையில் வெளிப்படுவார். 16. திக்கற்றவர்களுடைய ஜெபத்தை அலட்சியம்பண்ணாமல், அவர்கள் விண்ணப்பத்தை அங்கீகரிப்பார். 17. அப்பொழுது ஜாதிகள் கர்த்தருடைய நாமத்துக்கும், பூமியிலுள்ள ராஜாக்களெல்லாரும் உம்முடைய மகிமைக்கும் பயப்படுவார்கள். 18. பின்சந்ததிக்காக இது எழுதப்படும்; சிருஷ்டிக்கப்படும் ஜனம் கர்த்தரைத் துதிக்கும். 19. கர்த்தர் கட்டுண்டவர்களின் பெருமூச்சைக் கேட்கவும், கொலைக்கு நியமிக்கப்பட்டவர்களை விடுதலையாக்கவும், 20. தம்முடைய உயர்ந்த பரிசுத்த ஸ்தலத்திலிருந்து பார்த்து, வானங்களிலிருந்து பூமியின்மேல் கண்ணோக்கமானார். 21. கர்த்தருக்கு ஆராதனைசெய்ய, ஜனங்களும் ராஜ்யங்களும் ஏகமாய்க் கூடிக்கொள்ளுகையில், 22. சீயோனில் கர்த்தருடைய நாமத்தையும், எருசலேமில் அவருடைய துதியையும் பிரஸ்தாபப்படுத்துவார்கள். 23. வழியிலே என் பெலனை அவர் ஒடுக்கி, என் நாட்களைக் குறுகப்பண்ணினார். 24. அப்பொழுது நான்: என் தேவனே, பாதி வயதில் என்னை எடுத்துக்கொள்ளாதேயும்; உம்முடைய வருஷங்கள் தலைமுறை தலைமுறையாக இருக்கும். 25. நீர் ஆதியிலே பூமியை அஸ்திபாரப்படுத்தினீர்; வானங்கள் உம்முடைய கரத்தின் கிரியையாயிருக்கிறது. 26. அவைகள் அழிந்துபோம், நீரோ நிலைத்திருப்பீர்; அவைகளெல்லாம் வஸ்திரம்போல் பழமையாய்ப்போம்; அவைகளை ஒரு சால்வையைப்போல் மாற்றுவீர், அப்பொழுது மாறிப்போம். 27. நீரோ மாறாதவராயிருக்கிறீர்; உமது ஆண்டுகள் முடிந்துபோவதில்லை. 28. உமது அடியாரின் பிள்ளைகள் தாபரித்திருப்பார்கள்; அவர்கள் சந்ததி உமக்கு முன்பாக நிலைபெற்றிருக்கும் என்று சொன்னேன்.
Chapter 103
1. என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; என் முழு உள்ளமே, அவருடைய பரிசுத்த நாமத்தை ஸ்தோத்திரி. 2. என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே. 3. அவர் உன் அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து, உன் நோய்களையெல்லாம் குணமாக்கி, 4. உன் பிராணனை அழிவுக்கு விலக்கி மீட்டு, உன்னைக் கிருபையினாலும் இரக்கங்களினாலும் முடிசூட்டி, 5. நன்மையினால் உன் வாயைத் திருப்தியாக்குகிறார்; கழுகுக்குச் சமானமாய் உன் வயது திரும்ப வால வயதுபோலாகிறது. 6. ஒடுக்கப்படுகிற யாவருக்கும், கர்த்தர் நீதியையும் நியாயத்தையும் செய்கிறார். 7. அவர் தமது வழிகளை மோசேக்கும், தமது கிரியைகளை இஸ்ரவேல் புத்திரருக்கும் தெரியப்பண்ணினார். 8. கர்த்தர் உருக்கமும், இரக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர். 9. அவர் எப்பொழுதும் கடிந்துகொள்ளார்; என்றைக்கும் கோபங்கொண்டிரார். 10. அவர் நம்முடைய பாவங்களுக்குத்தக்கதாக நமக்குச் செய்யாமலும், நம்முடைய அக்கிரமங்களுக்குத் தக்கதாக நமக்குச் சரிக்கட்டாமலும் இருக்கிறார். 11. பூமிக்கு வானம் எவ்வளவு உயரமாயிருக்கிறதோ, அவருக்குப் பயப்படுகிறவர்கள்மேல் அவருடைய கிருபையும் அவ்வளவு பெரிதாயிருக்கிறது. 12. மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மை விட்டு விலக்கினார். 13. தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல, கர்த்தர் தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்குகிறார். 14. நம்முடைய உருவம் இன்னதென்று அவர் அறிவார்; நாம் மண்ணென்று நினைவுகூருகிறார். 15. மனுஷனுடைய நாட்கள் புல்லுக்கு ஒப்பாயிருக்கிறது; வெளியின் புஷ்பத்தைப்போல் பூக்கிறான். 16. காற்று அதின்மேல் வீசினவுடனே அது இல்லாமற்போயிற்று; அது இருந்த இடமும் இனி அதை அறியாது. 17. கர்த்தருடைய கிருபையோ அவருக்குப் பயந்தவர்கள்மேலும், அவருடைய நீதி அவர்கள் பிள்ளைகளுடைய பிள்ளைகள்மேலும் அநாதியாய் என்றென்றைக்கும் உள்ளது. 18. அவருடைய உடன்படிக்கையைக் கைக்கொண்டு, அவருடைய கட்டளைகளின்படி செய்ய நினைக்கிறவர்கள் மேலேயே உள்ளது. 19. கர்த்தர் வானங்களில் தமது சிங்காசனத்தை ஸ்தாபித்திருக்கிறார்; அவருடைய ராஜரிகம் சர்வத்தையும் ஆளுகிறது. 20. கர்த்தருடைய வார்த்தையைக்கேட்டு, அவருடைய வசனத்தின்படி செய்கிற பலத்த சவுரியவான்களாகிய அவருடைய தூதர்களே, அவரை ஸ்தோத்திரியுங்கள். 21. கர்த்தருக்குப் பிரியமானதைச் செய்து, அவர் பணிவிடைக்காரராயிருக்கிற அவருடைய சர்வசேனைகளே, அவரை ஸ்தோத்திரியுங்கள். 22. கர்த்தர் ஆளுகிற எவ்விடங்களிலுமுள்ள அவருடைய சகல கிரியைகளே, அவரை ஸ்தோத்திரியுங்கள்; என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி.
Chapter 104
1. என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; என் தேவனாகிய கர்த்தாவே, நீர் மிகவும் பெரியவராயிருக்கிறீர்; மகிமையையும் மகத்துவத்தையும் அணிந்துகொண்டிருக்கிறீர். 2. ஒளியை வஸ்திரமாகத் தரித்து, வானங்களைத் திரையைப்போல் விரித்திருக்கிறீர். 3. தமது மேல்வீடுகளைத் தண்ணீர்களால் மச்சுப்பாவி, மேகங்களைத் தமது இரதமாக்கி, காற்றினுடைய செட்டைகளின்மேல் செல்லுகிறார். 4. தம்முடைய தூதர்களைக் காற்றுகளாகவும், தம்முடைய ஊழியக்காரரை அக்கினிஜுவாலைகளாகவும் செய்கிறார். 5. பூமி ஒருபோதும் நிலைபேராதபடி அதின் ஆதாரங்கள்மேல் அதை ஸ்தாபித்தார். 6. அதை வஸ்திரத்தினால் மூடுவதுபோல ஆழத்தினால் மூடினீர்; பர்வதங்களின்மேல் தண்ணீர்கள் நின்றது. 7. அவைகள் உமது கண்டிதத்தால் விலகியோடி, உமது குமுறலின் சத்தத்தால் விரைந்துபோயிற்று. 8. அவைகள் மலைகளில் ஏறி, பள்ளத்தாக்குகளில் இறங்கி, நீர் அவைகளுக்கு ஏற்படுத்தின இடத்தில் சென்றது. 9. அவைகள் திரும்பவும் வந்து பூமியை மூடிக்கொள்ளாதபடி கடவாதிருக்கும் எல்லையை அவைகளுக்கு ஏற்படுத்தினீர். 10. அவர் பள்ளத்தாக்குகளில் நீரூற்றுகளை வரவிடுகிறார்; அவைகள் மலைகள் நடுவே ஓடுகிறது. 11. அவைகள் வெளியின் ஜீவன்களுக்கெல்லாம் தண்ணீர் கொடுக்கும்; அங்கே காட்டுக்கழுதைகள் தங்கள் தாகத்தைத் தீர்த்துக்கொள்ளும். 12. அவைகளின் ஓரமாய் ஆகாயத்துப் பறவைகள் சஞ்சரித்து, கிளைகள்மேலிருந்து பாடும். 13. தம்முடைய மேல்வீடுகளிலிருந்து பர்வதங்களுக்குத் தண்ணீர் இறைக்கிறார்; உமது கிரியைகளின் பலனாலே பூமி திருப்தியாயிருக்கிறது. 14. பூமியிலிருந்து ஆகாரம் உண்டாகும்படி, அவர் மிருகங்களுக்குப் புல்லையும், மனுஷருக்கு உபயோகமான பயிர்வகைகளையும் முளைப்பிக்கிறார். 15. மனுஷனுடைய இருதயத்தை மகிழ்ச்சியாக்கும் திராட்சரசத்தையும், அவனுக்கு முகக்களையை உண்டுபண்ணும் எண்ணெயையும், மனுஷனுடைய இருதயத்தை ஆதரிக்கும் ஆகாரத்தையும் விளைவிக்கிறார். 16. கர்த்தருடைய விருட்சங்களும், அவர் நாட்டின லீபனோனின் கேதுருக்களும் சாரத்தினால் நிறைந்திருக்கும். 17. அங்கே குருவிகள் கூடுகட்டும்; தேவதாருவிருட்சங்கள் கொக்குகளின் குடியிருப்பு. 18. உயர்ந்த பர்வதங்கள் வரையாடுகளுக்கும், கன்மலைகள் குழிமுசல்களுக்கும் அடைக்கலம். 19. சந்திரனைக் காலக்குறிப்புகளுக்காகப் படைத்தார்; சூரியன் தன் அஸ்தமனத்தை அறியும். 20. நீர் இருளைக் கட்டளையிடுகிறீர், இராக்காலமாகும்; அதிலே சகல காட்டு ஜீவன்களும் நடமாடும். 21. பாலசிங்கங்கள் இரைக்காக கெர்ச்சித்து, தேவனால் தங்களுக்கு ஆகாரம் கிடைக்கும்படித் தேடும். 22. சூரியன் உதிக்கையில் அவைகள் ஒதுங்கி, தங்கள் தாபரங்களில் படுத்துக்கொள்ளும். 23. அப்பொழுது மனுஷன் சாயங்காலமட்டும் தன் வேலைக்கும், தன் பண்ணைக்கும் புறப்படுகிறான். 24. கர்த்தாவே, உமது கிரியைகள் எவ்வளவு திரளாயிருக்கிறது! அவைகளையெல்லாம் ஞானமாய்ப் படைத்தீர்; பூமி உம்முடைய பொருள்களினால் நிறைந்திருக்கிறது. 25. பெரிதும் விஸ்தாரமுமான இந்தச் சமுத்திரமும் அப்படியே நிறைந்திருக்கிறது; அதிலே சஞ்சரிக்கும் சிறியவைகளும் பெரியவைகளுமான எண்ணிறந்த ஜீவன்கள் உண்டு. 26. அதிலே கப்பல்கள் ஓடும்; அதிலே விளையாடும்படி நீர் உண்டாக்கின திமிங்கிலங்களும் உண்டு. 27. ஏற்றவேளையில் ஆகாரத்தைத் தருவீர் என்று அவைகளெல்லாம் உம்மை நோக்கிக் காத்திருக்கும். 28. நீர் கொடுக்க, அவைகள் வாங்கிக்கொள்ளும்; நீர் உம்முடைய கையைத்திறக்க, அவைகள் நன்மையால் திருப்தியாகும். 29. நீர் உமது முகத்தை மறைக்க, திகைக்கும்; நீர் அவைகளின் சுவாசத்தை வாங்கிக்கொள்ள, அவைகள் மாண்டு, தங்கள் மண்ணுக்குத் திரும்பும். 30. நீர் உம்முடைய ஆவியை அனுப்பும்போது, அவைகள் சிருஷ்டிக்கப்படும்; நீர் பூமியின் ரூபத்தையும் புதிதாக்குகிறீர். 31. கர்த்தருடைய மகிமை என்றென்றைக்கும் விளங்கும்; கர்த்தர் தம்முடைய கிரியைகளிலே மகிழுவார். 32. அவர் பூமியை நோக்கிப்பார்க்க, அது அதிரும்; அவர் பர்வதங்களைத் தொட, அவைகள் புகையும். 33. நான் உயிரோடிருக்குமட்டும் என் கர்த்தரைப் பாடுவேன்; நான் உள்ளளவும் என் தேவனைக் கீர்த்தனம்பண்ணுவேன். 34. நான் அவரைத் தியானிக்கும் தியானம் இனிதாயிருக்கும்; நான் கர்த்தருக்குள் மகிழுவேன். 35. பாவிகள் பூமியிலிருந்து நிர்மூலமாகி, துன்மார்க்கர் இனி இராமற்போவார்கள். என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி, அல்லேலூயா.
Chapter 105
1. கர்த்தரைத் துதித்து, அவருடைய நாமத்தைப் பிரஸ்தாபமாக்குங்கள், அவருடைய செய்கைகளை ஜனங்களுக்குள்ளே பிரசித்தப்படுத்துங்கள். 2. அவரைப் பாடி, அவரைக் கீர்த்தனம்பண்ணுங்கள்; அவருடைய அதிசயங்களையெல்லாம் தியானித்துப் பேசுங்கள். 3. அவருடைய பரிசுத்த நாமத்தைக் குறித்து மேன்மைபாராட்டுங்கள்; கர்த்தரைத் தேடுகிறவர்களின் இருதயம் மகிழ்வதாக. 4. கர்த்தரையும் அவர் வல்லமையையும் நாடுங்கள்; அவர் சமுகத்தை நித்தமும் தேடுங்கள். 5. அவருடைய தாசனாகிய ஆபிரகாமின் சந்ததியே! அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களாகிய யாக்கோபின் புத்திரரே! 6. அவர் செய்த அதிசயங்களையும், அவருடைய அற்புதங்களையும், அவர் வாக்கின் நியாயத்தீர்ப்புகளையும் நினைவுகூருங்கள். 7. அவரே நம்முடைய தேவனாகிய கர்த்தர், அவருடைய நியாயத்தீர்ப்புகள் பூமியெங்கும் விளங்கும். 8. ஆயிரந்தலைமுறைக்கென்று அவர் கட்டளையிட்ட வாக்கையும், ஆபிரகாமோடே அவர் பண்ணின உடன்படிக்கையையும், 9. அவர் ஈசாக்குக்கு இட்ட ஆணையையும் என்றென்றைக்கும் நினைத்திருக்கிறார். 10. அதை யாக்கோபுக்குப் பிரமாணமாகவும், இஸ்ரவேலுக்கு நித்திய உடன்படிக்கையாகவும் உறுதிப்படுத்தி: 11. உங்கள் சுதந்தரபாகமான கானான் தேசத்தை உனக்குத் தருவேன் என்றார். 12. அக்காலத்தில் அவர்கள் கொஞ்சத் தொகைக்குட்பட்ட சொற்ப ஜனங்களும் பரதேசிகளுமாயிருந்தார்கள். 13. அவர்கள் ஒரு ஜனத்தைவிட்டு மறு ஜனத்தண்டைக்கும், ஒரு ராஜ்யத்தைவிட்டு மறு தேசத்தாரண்டைக்கும் போனார்கள். 14. அவர்களை ஒடுக்கும்படி ஒருவருக்கும் இடங்கொடாமல், அவர்கள் நிமித்தம் ராஜாக்களைக் கடிந்து கொண்டு: 15. நான் அபிஷேகம்பண்ணினவர்களை நீங்கள் தொடாமலும், என்னுடைய தீர்க்கதரிசிகளுக்குத் தீங்கு செய்யாமலும் இருங்கள் என்றார். 16. அவர் தேசத்திலே பஞ்சத்தை வருவித்து, ஆகாரமென்னும் ஆதரவுகோலை முற்றிலும் முறித்தார். 17. அவர்களுக்கு முன்னாலே ஒரு புருஷனை அனுப்பினார்; யோசேப்பு சிறையாக விற்கப்பட்டான். 18. அவன் கால்களை விலங்குபோட்டு ஒடுக்கினார்கள்; அவன் பிராணன் இரும்பில் அடைபட்டிருந்தது. 19. கர்த்தர் சொன்ன வார்த்தை நிறைவேறுமளவும் அவருடைய வசனம் அவனைப் புடமிட்டது. 20. ராஜா ஆள் அனுப்பி, அவனைக் கட்டவிழ்க்கச்சொன்னான்; ஜனங்களின் அதிபதி அவனை விடுதலைபண்ணினான். 21. தன் பிரபுக்களை அவன் மனதின்படி கட்டவும், தன் மூப்பர்களை ஞானிகளாக்கவும், 22. அவனைத் தன் வீட்டுக்கு ஆண்டவனும், தன் ஆஸ்திக்கெல்லாம் அதிபதியுமாக்கினான். 23. அப்பொழுது இஸ்ரவேல் எகிப்திற்கு வந்தான்; யாக்கோபு காமின் தேசத்திலே பரதேசியாயிருந்தான். 24. அவர் தம்முடைய ஜனங்களை மிகவும் பலுகப்பண்ணி, அவர்களுடைய சத்துருக்களைப்பார்க்கிலும் அவர்களைப் பலவான்களாக்கினார். 25. தம்முடைய ஜனங்களைப் பகைக்கவும், தம்முடைய ஊழியக்காரரை வஞ்சனையாய் நடத்தவும், அவர்களுடைய இருதயத்தை மாற்றினார். 26. தம்முடைய தாசனாகிய மோசேயையும் தாம் தெரிந்துகொண்ட ஆரோனையும் அனுப்பினார். 27. இவர்கள் அவர்களுக்குள் அவருடைய அடையாளங்களையும், காமின் தேசத்திலே அற்புதங்களையும் செய்தார்கள். 28. அவர் இருளை அனுப்பி, அந்தகாரத்தை உண்டாக்கினார்; அவருடைய வார்த்தைகளை எதிர்ப்பாரில்லை. 29. அவர்களுடைய தண்ணீர்களை இரத்தமாக மாற்றி, அவர்களுடைய மச்சங்களைச் சாகப்பண்ணினார். 30. அவர்களுடைய தேசம் தவளைகளைத் திரளாய்ப் பிறப்பித்தது; அவர்களுடைய ராஜாக்களின் அறைவீடுகளிலும் அவைகள் வந்தது. 31. அவர் கட்டளையிட, அவர்களுடைய எல்லைகளிலெங்கும் வண்டுகளும் பேன்களும் வந்தது. 32. அவர்களுடைய மழைகளைக் கல்மழையாக்கி, அவர்களுடைய தேசத்திலே ஜுவாலிக்கிற அக்கினியை வரப்பண்ணினார். 33. அவர்களுடைய திராட்சச் செடிகளையும் அத்திமரங்களையும் அழித்து, அவர்களுடைய எல்லைகளிலுள்ள மரங்களையும் முறித்தார். 34. அவர் கட்டளையிட, எண்ணிமுடியாத வெட்டுக்கிளிகளும் பச்சைப்புழுக்களும் வந்து, 35. அவர்களுடைய தேசத்திலுள்ள சகல பூண்டுகளையும் அரித்து, அவர்களுடைய நிலத்தின் கனியைத் தின்றுபோட்டது. 36. அவர்களுடைய தேசத்திலே தலைச்சன்கள் அனைத்தையும், அவர்களுடைய பெலனில் முதற்பெலனான யாவரையும் சங்கரித்தார். 37. அப்பொழுது அவர்களை வெள்ளியோடும் பொன்னோடும் புறப்படப்பண்ணினார்; அவர்கள் கோத்திரங்களில் பலவீனப்பட்டவன் ஒருவனும் இருந்ததில்லை. 38. எகிப்தியர் அவர்களுக்குப் பயந்ததினால், அவர்கள் புறப்பட்டபோது மகிழ்ந்தார்கள். 39. அவர் மேகத்தை மறைவுக்காக விரித்து, இரவை வெளிச்சமாக்குகிறதற்காக அக்கினியையும் தந்தார். 40. கேட்டார்கள், அவர் காடைகளை வரப்பண்ணினார்; வான அப்பத்தினாலும் அவர்களைத் திருப்தியாக்கினார். 41. கன்மலையைத் திறந்தார், தண்ணீர்கள் புறப்பட்டு, வறண்ட வெளிகளில் ஆறாய் ஓடிற்று. 42. அவர் தம்முடைய பரிசுத்த வாக்குத்தத்தத்தையும், தம்முடைய தாசனாகிய ஆபிரகாமையும் நினைத்து, 43. தம்முடைய ஜனத்தைக் களிப்போடும், தாம் தெரிந்துகொண்டவர்களைக் கெம்பீர சத்தத்தோடும் புறப்படப்பண்ணி, 44. தமது கட்டளைகளைக் காத்து நடக்கும்படிக்கும், தமது நியாயப்பிரமாணங்களைக் கைக்கொள்ளும்படிக்கும், 45. அவர்களுக்குப் புறஜாதிகளுடைய தேசங்களைக் கொடுத்தார்; அந்நிய ஜனங்களுடைய பிரயாசத்தின் பலனைச் சுதந்தரித்துக்கொண்டார்கள். அல்லேலூயா.
Chapter 106
1. அல்லேலூயா, கர்த்தரைத் துதியுங்கள்; அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது. 2. கர்த்தருடைய வல்லமையான செய்கைகளைச் சொல்லி, அவருடைய துதியையெல்லாம் பிரஸ்தாபப்படுத்தத்தக்கவன் யார்? 3. நியாயத்தைக் கைக்கொள்ளுகிறவர்களும், எக்காலத்திலும் நீதியைச்செய்கிறவர்களும் பாக்கியவான்கள். 4. கர்த்தாவே, நீர் தெரிந்துகொண்டவர்களின் நன்மையை நான் கண்டு, உம்முடைய ஜாதியின் மகிழ்ச்சியால் மகிழ்ந்து, உம்முடைய சுதந்தரத்தோடே மேன்மைபாராட்டும்படிக்கு, 5. உம்முடைய ஜனங்களுக்கு நீர் பாராட்டும் கிருபையின்படி என்னை நினைத்து, உம்முடைய இரட்சிப்பினால் என்னைச் சந்தித்தருளும். 6. எங்கள் பிதாக்களோடுங்கூட நாங்களும் பாவஞ்செய்து, அக்கிரமம் நடப்பித்து, ஆகாமியம்பண்ணினோம். 7. எங்கள் பிதாக்கள் எகிப்திலே உம்முடைய அதிசயங்களை உணராமலும், உம்முடைய கிருபைகளின் திரட்சியை நினையாமலும் போய், சிவந்த சமுத்திர ஓரத்திலே கலகம்பண்ணினார்கள். 8. ஆனாலும் அவர் தமது வல்லமையை வெளிப்படுத்தும்படி, தம்முடைய நாமத்தினிமித்தம் அவர்களை இரட்சித்தார். 9. அவர் சிவந்த சமுத்திரத்தை அதட்டினார், அது வற்றிப்போயிற்று; வெட்டாந்தரையில் நடக்கிறதுபோல அவர்களை ஆழங்களில் நடந்துபோகப்பண்ணினார். 10. பகைஞன் கைக்கு அவர்களை விலக்கி இரட்சித்து, சத்துருவின் கைக்கு அவர்களை விலக்கி மீட்டார். 11. அவர்கள் சத்துருக்களைத் தண்ணீர்கள் மூடிக்கொண்டது; அவர்களில் ஒருவனும் மீந்திருக்கவில்லை. 12. அப்பொழுது அவர்கள் அவருடைய வார்த்தைகளை விசுவாசித்து, அவருடைய துதியைப் பாடினார்கள். 13. ஆனாலும் சீக்கிரமாய் அவருடைய கிரியைகளை மறந்தார்கள்; அவருடைய ஆலோசனைக்கு அவர்கள் காத்திராமல், 14. வனாந்தரத்திலே இச்சையுள்ளவர்களாகி, அவாந்தரவெளியிலே தேவனைப் பரீட்சைபார்த்தார்கள். 15. அப்பொழுது அவர்கள் கேட்டதை அவர்களுக்குக் கொடுத்தார், அவர்கள் ஆத்துமாக்களிலோ இளைப்பை அனுப்பினார். 16. பாளயத்தில் அவர்கள் மோசேயின்மேலும், கர்த்தருடைய பரிசுத்தனாகிய ஆரோனின்மேலும் பொறாமைகொண்டார்கள். 17. பூமி பிளந்து தாத்தானை விழுங்கி, அபிராமின் கூட்டத்தை மூடிப்போட்டது. 18. அவர்கள் கூட்டத்தில் அக்கினி பற்றியெரிந்தது; அக்கினிஜுவாலை துன்மார்க்கரை எரித்துப்போட்டது. 19. அவர்கள் ஓரேபிலே ஒரு கன்றுக்குட்டியையுண்டாக்கி, வார்ப்பிக்கப்பட்ட விக்கிரகத்தை நமஸ்கரித்தார்கள். 20. தங்கள் மகிமையைப் புல்லைத் தின்கிற மாட்டின் சாயலாக மாற்றினார்கள். 21. எகிப்திலே பெரிய கிரியைகளையும், காமின் தேசத்திலே அதிசயங்களையும், சிவந்த சமுத்திரத்தண்டையிலே பயங்கரமானவைகளையும் செய்தவராகிய, 22. தங்கள் இரட்சகரான தேவனை மறந்தார்கள். 23. ஆகையால், அவர்களை நாசம்பண்ணுவேன் என்றார்; அப்பொழுது அவரால் தெரிந்துகொள்ளப்பட்ட மோசே, அவர்களை அவர் அழிக்காதபடிக்கு, அவருடைய உக்கிரத்தை ஆற்றும்பொருட்டு, அவருக்கு முன்பாகத் திறப்பின் வாயிலே நின்றான். 24. அவருடைய வார்த்தையை விசுவாசியாமல், இச்சிக்கப்படத்தக்க தேசத்தை அசட்டைபண்ணினார்கள். 25. கர்த்தருடைய சத்தத்திற்குச் செவிகொடாமல், தங்கள் கூடாரங்களில் முறுமுறுத்தார்கள். 26. அப்பொழுது அவர்கள் வனாந்தரத்திலே மடியவும், அவர்கள் சந்ததி ஜாதிகளுக்குள்ளே அழியவும், 27. அவர்கள் பற்பல தேசங்களிலே சிதறடிக்கப்படவும், அவர்களுக்கு விரோதமாகத் தம்முடைய கையை எடுத்தார். 28. அவர்கள் பாகால்பேயோரைப் பற்றிக்கொண்டு, ஜீவனில்லாதவைகளுக்கு இட்ட பலிகளைப் புசித்து, 29. தங்கள் கிரியைகளினால் அவருக்குக் கோபம் மூட்டினார்கள்; ஆகையால் வாதை அவர்களுக்குள் புகுந்தது. 30. அப்பொழுது பினெகாஸ் எழுந்து நின்று நியாயஞ்செய்தான்; அதினால் வாதை நிறுத்தப்பட்டது. 31. அது தலைமுறை தலைமுறையாக என்றைக்கும் அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது. 32. மேரிபாவின் தண்ணீர்களிடத்திலும் அவருக்குக் கடுங்கோபம் மூட்டினார்கள்; அவர்கள் நிமித்தம் மோசேக்கும் பொல்லாப்பு வந்தது. 33. அவர்கள் அவன் ஆவியை விசனப்படுத்தினதினாலே, தன் உதடுகளினால் பதறிப்பேசினான். 34. கர்த்தர் தங்களுக்குச் சொன்னபடி, அவர்கள் அந்த ஜனங்களை அழிக்கவில்லை. 35. ஜாதிகளுடனே கலந்து, அவர்கள் கிரியைகளைக் கற்று; 36. அவர்களுடைய விக்கிரகங்களைச் சேவித்தார்கள்; அவைகள் அவர்களுக்குக் கண்ணியாயிற்று. 37. அவர்கள் தங்கள் குமாரரையும் தங்கள் குமாரத்திகளையும் பிசாசுகளுக்குப் பலியிட்டார்கள். 38. அவர்கள் கானான்தேசத்து விக்கிரகங்களுக்குப் பலியிட்டு, தங்கள் குமாரர் குமாரத்திகளுடைய குற்றமில்லாத இரத்தத்தைச் சிந்தினார்கள்; தேசம் இரத்தத்தால் தீட்டுப்பட்டது. 39. அவர்கள் தங்கள் கிரியைகளினால் அசுத்தமாகி, தங்கள் செய்கைகளினால் சோரம்போனார்கள். 40. அதினால் கர்த்தருடைய கோபம் தமது ஜனத்தின்மேல் மூண்டது; அவர் தமது சுதந்தரத்தை அருவருத்தார். 41. அவர்களை ஜாதிகளுடைய கையில் ஒப்புக்கொடுத்தார்; அவர்களுடைய பகைஞர் அவர்களை ஆண்டார்கள். 42. அவர்களுடைய சத்துருக்கள் அவர்களை ஒடுக்கினார்கள்; அவர்களுடைய கையின்கீழ்த் தாழ்த்தப்பட்டார்கள். 43. அநேகந்தரம் அவர்களை விடுவித்தார்; அவர்களோ தங்கள் யோசனையினால் அவருக்கு விரோதமாய்க் கலகம்பண்ணி, தங்களுடைய அக்கிரமத்தினால் சிறுமைப்படுத்தப்பட்டார்கள். 44. அவர்கள் கூப்பிடுதலை அவர் கேட்கும்போதோ, அவர்களுக்கு உண்டான இடுக்கத்தை அவர் கண்ணோக்கி, 45. அவர்களுக்காகத் தமது உடன்படிக்கையை நினைத்து, தமது மிகுந்த கிருபையின்படி மனஸ்தாபப்பட்டு, 46. அவர்களைச் சிறைபிடித்த யாவரும் அவர்களுக்கு இரங்கும்படி செய்தார். 47. எங்கள் தேவனாகிய கர்த்தாவே, நாங்கள் உமது பரிசுத்த நாமத்தைப்போற்றி, உம்மைத் துதிக்கிறதில் மேன்மைபாராட்டும்படி எங்களை இரட்சித்து, எங்களை ஜாதிகளிலிருந்து சேர்த்தருளும். 48. இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அநாதியாய் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்படத்தக்கவர். ஜனங்களெல்லாரும்: ஆமென், அல்லேலூயா, என்பார்களாக.
Chapter 107
1. கர்த்தரைத் துதியுங்கள்; அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது. 2. கர்த்தரால் சத்துருவின் கைக்கு நீங்கலாக்கி மீட்கப்பட்டு, 3. கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலுமுள்ள பல தேசங்களிலுமிருந்து சேர்க்கப்பட்டவர்கள், அப்படிச் சொல்லக்கடவர்கள். 4. அவர்கள் தாபரிக்கும் ஊரைக் காணாமல், வனாந்தரத்திலே அவாந்தரவழியாய், 5. பசியாகவும், தாகமாகவும், ஆத்துமா தொய்ந்ததாகவும் அலைந்து திரிந்தார்கள். 6. தங்கள் ஆபத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள், அவர்கள் இக்கட்டுகளிலிருந்து அவர்களை விடுவித்தார். 7. தாபரிக்கும் ஊருக்குப்போய்ச்சேர, அவர்களைச் செவ்வையான வழியிலே நடத்தினார். 8. தவனமுள்ள ஆத்துமாவைக் கர்த்தர் திருப்தியாக்கி, பசியுள்ள ஆத்துமாவை நன்மையினால் நிரப்புகிறாரென்று, 9. அவருடைய கிருபையினிமித்தமும், மனுபுத்திரருக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் அவரைத் துதிப்பார்களாக. 10. தேவனுடைய வார்த்தைகளுக்கு விரோதமாய்க் கலகம்பண்ணி, உன்னதமானவருடைய ஆலோசனையை அசட்டைபண்ணினவர்கள், 11. அந்தகாரத்திலும் மரண இருளிலும் வைக்கப்பட்டிருந்து, ஒடுக்கத்திலும் இரும்பிலும் கட்டுண்டு கிடந்தார்கள். 12. அவர்களுடைய இருதயத்தை அவர் வருத்தத்தால் தாழ்த்தினார்; சகாயரில்லாமல் விழுந்துபோனார்கள். 13. தங்கள் ஆபத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள்; அவர்கள் இக்கட்டுகளிலிருந்து அவர்களை நீங்கலாக்கி இரட்சித்தார். 14. அந்தகாரத்திலும் மரண இருளிலுமிருந்து அவர்களை வெளிப்படப்பண்ணி, அவர்கள் கட்டுகளை அறுத்தார். 15. கர்த்தர் வெண்கலக் கதவுகளை உடைத்து, இருப்புத் தாழ்ப்பாள்களை முறித்தாரென்று, 16. அவருடைய கிருபையினிமித்தமும், மனுபுத்திரருக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் அவரைத் துதிப்பார்களாக. 17. நிர்மூடர் தங்கள் பாதகமார்க்கத்தாலும் தங்கள் அக்கிரமங்களாலும் நோய்கொண்டு ஒடுங்கிப்போகிறார்கள். 18. அவர்கள் ஆத்துமா சகல போஜனத்தையும் அரோசிக்கிறது, அவர்கள் மரணவாசல்கள் பரியந்தம் சமீபிக்கிறார்கள். 19. தங்கள் ஆபத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிறார்கள்; அவர்கள் இக்கட்டுகளுக்கு அவர்களை நீங்கலாக்கி இரட்சிக்கிறார். 20. அவர் தமது வசனத்தை அனுப்பி அவர்களைக் குணமாக்கி, அவர்களை அழிவுக்குத் தப்புவிக்கிறார். 21. அவர்கள் கர்த்தரை அவருடைய கிருபையினிமித்தமும், மனுபுத்திரருக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் துதித்து, 22. ஸ்தோத்திரபலிகளைச் செலுத்தி, அவருடைய கிரியைகளை ஆனந்தசத்தத்தோடே விவரிப்பார்களாக. 23. கப்பலேறி, கடல்யாத்திரைபண்ணி, திரளான தண்ணீர்களிலே தொழில் செய்கிறார்களே, 24. அவர்கள் கர்த்தருடைய கிரியைகளையும், ஆழத்திலே அவருடைய அதிசயங்களையும் காண்கிறார்கள். 25. அவர் கட்டளையிட பெருங்காற்று எழும்பி, அதின் அலைகளைக் கொந்தளிக்கப்பண்ணும். 26. அவர்கள் ஆகாயத்தில் ஏறி, ஆழங்களில் இறங்குகிறார்கள், அவர்கள் ஆத்துமா கிலேசத்தினால் கரைந்துபோகிறது. 27. வெறித்தவனைப்போல் அலைந்து தடுமாறுகிறார்கள்; அவர்களுடைய ஞானமெல்லாம் முழுகிப்போகிறது. 28. அப்பொழுது தங்கள் ஆபத்திலே அவர்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிறார்கள், அவர்கள் இக்கட்டுகளுக்கு அவர்களை நீங்கலாக்கி விடுவிக்கிறார். 29. கொந்தளிப்பை அமர்த்துகிறார், அதின் அலைகள் அடங்குகின்றது. 30. அமைதலுண்டானதினிமித்தம் அவர்கள் சந்தோஷப்படுகிறார்கள்; தாங்கள் நாடின துறைமுகத்தில் அவர்களைக் கொண்டுவந்து சேர்க்கிறார். 31. அவர்கள் கர்த்தரை அவருடைய கிருபையினிமித்தமும், மனுபுத்திரருக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் துதித்து, 32. ஜனங்களின் சபையிலே அவரை உயர்த்தி, மூப்பர்களின் சங்கத்திலே அவரைப் போற்றுவார்களாக. 33. அவர் ஆறுகளை அவாந்தரவெளியாகவும், நீரூற்றுகளை வறண்ட ஸ்தலமாகவும், 34. குடிகளுடைய பொல்லாப்பினிமித்தம் செழிப்பான தேசத்தை உவர் நிலமாகவும் மாற்றுகிறார். 35. அவர் அவாந்தரவெளியைத் தண்ணீர்த் தடாகமாகவும், வறண்ட நிலத்தை நீரூற்றுகளாகவும் மாற்றி, 36. பசித்தவர்களை அங்கே குடியேற்றுகிறார்; அங்கே அவர்கள் குடியிருக்கும் நகரத்தைக் கட்டி, 37. வயல்களை உண்டாக்கி விதைத்து, திராட்சத்தோட்டங்களை நாட்டுகிறார்கள், அவைகள் வரத்துள்ள பலனைத் தரும். 38. அவர்களை ஆசீர்வதிக்கிறார், மிகுதியும் பெருகுகிறார்கள்; அவர்களுடைய மிருகஜீவன்கள் குறையாதிருக்கப்பண்ணுகிறார். 39. பின்பு அவர்கள் இடுக்கத்தினாலும், ஆபத்தினாலும், துயரத்தினாலும் குறைவுபட்டுத் தாழ்வடைகிறார்கள். 40. அவர் பிரபுக்களின்மேல் இகழ்ச்சி வரப்பண்ணி, வழியில்லாத அவாந்தரவெளியிலே அவர்களைத் திரியச்செய்து, 41. எளியவனையோ சிறுமையினின்று எடுத்து, உயர்ந்த அடைக்கலத்திலே வைத்து, அவன் வம்சங்களை மந்தையைப்போலாக்குகிறார். 42. உத்தமர்கள் அதைக்கண்டு மகிழுவார்கள்; நியாயக்கேடெல்லாம் தன் வாயை மூடும். 43. எவன் ஞானமுள்ளவனோ அவன் இவைகளைக் கவனிக்கக்கடவன்; ஞானவான்கள் கர்த்தருடைய கிருபைகளை உணர்ந்துகொள்வார்கள்.
Chapter 108
1. தேவனே, என் இருதயம் ஆயத்தமாயிருக்கிறது; நான் பாடிக் கீர்த்தனம்பண்ணுவேன்; என் மகிமையும் பாடும். 2. வீணையே, சுரமண்டலமே, விழியுங்கள், நான் அதிகாலையில் விழிப்பேன். 3. கர்த்தாவே, ஜனங்களுக்குள்ளே உம்மைத்துதிப்பேன்; ஜாதிகளுக்குள்ளே உம்மைக் கீர்த்தனம்பண்ணுவேன். 4. உமது கிருபை வானங்களுக்கு மேலாகவும், உமது சத்தியம் மேகமண்டலங்கள் பரியந்தமும் எட்டுகிறது. 5. தேவனே, வானங்களுக்கு மேலாக உயர்ந்திரும்; உமது மகிமை பூமியனைத்தின்மேலும் உயர்ந்திருப்பதாக. 6. உமது பிரியர் விடுவிக்கப்படும்பொருட்டு, உமது வலதுகரத்தினால் இரட்சித்து, எங்கள் ஜெபத்தைக் கேட்டருளும். 7. தேவன் தமது பரிசுத்தத்தைக்கொண்டு விளம்பினார், ஆகையால் களிகூருவேன்; சீகேமைப் பங்கிட்டு, சுக்கோத்தின் பள்ளத்தாக்கை அளந்துகொள்ளுவேன். 8. கீலேயாத் என்னுடையது, மனாசேயும் என்னுடையது; எப்பிராயீம் என் தலையின் பெலன், யூதா என் நியாயப்பிரமாணிகன். 9. மோவாப் என் பாதபாத்திரம்; ஏதோமின்மேல் என் பாதரட்சையை எறிவேன்; பெலிஸ்தியாவின் மேல் ஆர்ப்பரிப்பேன். 10. அரணான பட்டணத்திற்குள் என்னை நடத்திக்கொண்டு போகிறவன் யார்? ஏதோம்மட்டும் எனக்கு வழிகாட்டுகிறவன் யார்? 11. எங்கள் சேனைகளோடே புறப்படாமலிருந்த தேவரீரல்லவா? எங்களைத் தள்ளிவிட்டிருந்த தேவரீரல்லவா? 12. இக்கட்டில் எங்களுக்கு உதவிசெய்யும்; மனுஷனுடைய உதவி விருதா. 13. தேவனாலே பராக்கிரமஞ்செய்வோம்; அவரே எங்கள் சத்துருக்களை மிதித்துப்போடுவார்.
Chapter 109
1. நான் துதிக்கும் தேவனே, மவுனமாயிராதேயும். 2. துன்மார்க்கனுடைய வாயும், கபட்டுவாயும், எனக்கு விரோதமாய்த் திறந்திருக்கிறது; கள்ளநாவினால் என்னோடே பேசுகிறார்கள். 3. பகையுண்டாக்கும் வார்த்தைகளால் என்னைச் சூழ்ந்துகொண்டு, முகாந்தரமில்லாமல் என்னோடே போர்செய்கிறார்கள். 4. என் சிநேகத்துக்குப் பதிலாக என்னை விரோதிக்கிறார்கள், நானோ ஜெபம்பண்ணிக்கொண்டிருக்கிறேன். 5. நன்மைக்குப் பதிலாக எனக்குத் தீமைசெய்கிறார்கள், என் சிநேகத்துக்குப் பதிலாக என்னைப் பகைக்கிறார்கள். 6. அவனுக்கு மேலாகத் துஷ்டனை ஏற்படுத்திவையும், சாத்தான் அவன் வலதுபக்கத்தில் நிற்பானாக. 7. அவன் நியாயம் விசாரிக்கப்படும்போது குற்றவாளியாகக்கடவன்; அவன் ஜெபம் பாவமாகக்கடவது. 8. அவன் நாட்கள் கொஞ்சமாகக்கடவது; அவன் உத்தியோகத்தை வேறொருவன் பெறக்கடவன். 9. அவன் பிள்ளைகள் திக்கற்றவர்களும், அவன் மனைவி விதவையுமாகக்கடவர்கள். 10. அவன் பிள்ளைகள் அலைந்து திரிந்து பிச்சையெடுத்து, தங்கள் பாழான வீடுகளிலிருந்து இரந்துண்ணக்கடவர்கள். 11. கடன் கொடுத்தவன் அவனுக்கு உள்ளதெல்லாவற்றையும் அபகரித்துக்கொள்வானாக; அவன் பிரயாசத்தின் பலனை அந்நியர் பறித்துக்கொள்ளக்கடவர்கள். 12. அவனுக்கு ஒருவரும் இரக்கங் காண்பியாமலும், அவனுடைய திக்கற்ற பிள்ளைகளுக்குத் தயவுசெய்யாமலும் போவார்களாக. 13. அவன் சந்ததியார் நிர்மூலமாகக்கடவர்கள்; இரண்டாந்தலைமுறையில் அவர்கள் பேர் அற்றுப்போவதாக. 14. அவன் பிதாக்களின் அக்கிரமம் கர்த்தருக்கு முன்பாக நினைக்கப்படக்கடவது, அவன் தாயின் பாவம் நீங்காமலிருப்பதாக. 15. அவைகள் நித்தமும் கர்த்தருக்கு முன்பாக இருக்கக்கடவது; அவர்கள் பேர் பூமியிலிராமல் நிர்மூலமாவதாக. 16. அவன் தயைசெய்ய நினையாமல், சிறுமையும் எளிமையுமானவனைத் துன்பப்படுத்தி, மனமுறிவுள்ளவனைக் கொலைசெய்யும்படி தேடினானே. 17. சாபத்தை விரும்பினான், அது அவனுக்கு வரும்; அவன் ஆசீர்வாதத்தை விரும்பாமற்போனான், அது அவனுக்குத் தூரமாய் விலகிப்போம். 18. சாபத்தை அவன் தனக்கு அங்கியாக உடுத்திக்கொண்டான்; அது அவன் உள்ளத்தில் தண்ணீரைப்போலவும், அவன் எலும்புகளில் எண்ணெயைப்போலவும் பாயும். 19. அது அவன் மூடிக்கொள்ளுகிற வஸ்திரமாகவும், நித்தமும் கட்டிக்கொள்ளுகிற கச்சையாகவும் இருப்பதாக. 20. இதுதான் என்னை விரோதிக்கிறவர்களுக்கும், என் ஆத்துமாவுக்கு விரோதமாய்த் தீங்கு பேசுகிறவர்களுக்கும் கர்த்தரால் வரும் பலன். 21. ஆண்டவராகிய கர்த்தாவே, நீர் உமது நாமத்தினிமித்தம் என்னை ஆதரித்து, உமது கிருபை நலமானதினால், என்னை விடுவித்தருளும். 22. நான் சிறுமையும் எளிமையுமானவன், என் இருதயம் எனக்குள் குத்துண்டிருக்கிறது. 23. சாயும் நிழலைப்போல் அகன்று போனேன்; வெட்டுக்கிளியைப்போல் பறக்கடிக்கப்படுகிறேன். 24. உபவாசத்தினால் என் முழங்கால்கள் தளர்ச்சியடைகிறது; என் மாம்சம் புஷ்டியற்று உலர்ந்து போகிறது. 25. நான் அவர்களுக்கு நிந்தையானேன்; அவர்கள் என்னைப் பார்த்து, தங்கள் தலையைத் துலுக்குகிறார்கள். 26. என் தேவனாகிய கர்த்தாவே எனக்குச் சகாயம்பண்ணும்; உமது கிருபையின்படி என்னை இரட்சியும். 27. இது உமது கரம் என்றும், கர்த்தாவே, தேவரீர் இதைச் செய்தீர் என்றும், அவர்கள் அறிவார்களாக. 28. அவர்கள் சபித்தாலும், நீர் ஆசீர்வதியும்; அவர்கள் எழும்பினாலும் வெட்கப்பட்டுப்போவார்களாக; உமது அடியானோ மகிழக்கடவன். 29. என் விரோதிகள் இலச்சையால் மூடப்பட்டு, தங்கள் வெட்கத்தைச் சால்வையைப்போல் தரித்துக்கொள்ளக்கடவர்கள். 30. கர்த்தரை நான் என் வாயினால் மிகவும் துதித்து, அநேகர் நடுவிலே அவரைப் புகழுவேன். 31. ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவர்களினின்று எளியவனுடைய ஆத்துமாவை இரட்சிக்கும்படி அவர் அவன் வலதுபாரிசத்தில் நிற்பார்.
Chapter 110
1. கர்த்தர் என் ஆண்டவரை நோக்கி: நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப் போடும்வரைக்கும், நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்றார். 2. கர்த்தர் சீயோனிலிருந்து உமது வல்லமையின் செங்கோலை அனுப்புவார்; நீர் உம்முடைய சத்துருக்களின் நடுவே ஆளுகைசெய்யும். 3. உமது பராக்கிரமத்தின் நாளிலே உம்முடைய ஜனங்கள் மனப்பூர்வமும் பரிசுத்த அலங்காரமுமுள்ளவர்களாயிருப்பார்கள்; விடியற்காலத்துக் கர்ப்பத்தில் பிறக்கும் பனிக்குச் சமானமாய் உம்முடைய யௌவன ஜனம் உமக்குப் பிறக்கும். 4. நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராயிருக்கிறீர் என்று கர்த்தர் ஆணையிட்டார்; மனம் மாறாமலுமிருப்பார். 5. உம்முடைய வலதுபாரிசத்திலிருக்கிற ஆண்டவர், தமது கோபத்தின் நாளிலே ராஜாக்களை வெட்டுவார். 6. அவர் ஜாதிகளுக்குள் நியாயந்தீர்ப்பார்; எல்லா இடங்களையும் பிரேதங்களால் நிரப்புவார்; விஸ்தாரமான தேசங்களின்மேல் தலைவர்களாயிருக்கிறவர்களை நொறுக்கிப்போடுவார். 7. வழியிலே அவர் நதியில் குடிப்பார்; ஆகையால் அவர் தமது தலையை எடுப்பார்.
Chapter 111
1. அல்லேலூயா, செம்மையானவர்களுடைய சங்கத்திலும் சபையிலும் கர்த்தரை முழு இருதயத்தோடும் துதிப்பேன். 2. கர்த்தரின் செய்கைகள் பெரியவைகளும், அவைகளில் பிரியப்படுகிற எல்லாராலும் ஆராயப்படுகிறவைகளுமாயிருக்கிறது. 3. அவருடைய செயல் மகிமையும் மகத்துவமுமுள்ளது, அவருடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும். 4. அவர் தம்முடைய அதிசயமான செய்கைகளை நினைவுகூரும்படி செய்தார், கர்த்தர் இரக்கமும் மனஉருக்கமுமுள்ளவர். 5. தமக்குப் பயந்தவர்களுக்கு ஆகாரம் கொடுத்தார்; தமது உடன்படிக்கையை என்றென்றைக்கும் நினைப்பார். 6. ஜாதிகளின் சுதந்தரத்தைத் தமது ஜனங்களுக்குக் கொடுத்ததினால், தமது கிரியைகளின் பெலத்தை அவர்களுக்குத் தெரியப்படுத்தினார். 7. அவருடைய கரத்தின் கிரியைகள் சத்தியமும் நியாயமுமானவைகள்; அவருடைய கட்டளைகளெல்லாம் உண்மையானவைகள். 8. அவைகள் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களுக்கும் உறுதியானவைகள், அவைகள் உண்மையும் செம்மையுமாய்ச் செய்யப்பட்டவைகள். 9. அவர் தமது ஜனத்திற்கு மீட்பை அனுப்பி, தமது உடன்படிக்கையை நித்திய உடன்படிக்கையாகக் கட்டளையிட்டார்; அவருடைய நாமம் பரிசுத்தமும் பயங்கரமுமானது. 10. கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; அவருடைய கற்பனைகளின்படி செய்கிற யாவருக்கும் நற்புத்தியுண்டு; அவர் புகழ்ச்சி என்றைக்கும் நிற்கும்.
Chapter 112
1. அல்லேலூயா, கர்த்தருக்குப் பயந்து, அவருடைய கட்டளைகளில் மிகவும் பிரியமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். 2. அவன் சந்ததி பூமியில் பலத்திருக்கும், செம்மையானவர்களின் வம்சம் ஆசீர்வதிக்கப்படும். 3. ஆஸ்தியும் ஐசுவரியமும் அவன் வீட்டிலிருக்கும்; அவனுடைய நீதி என்றைக்கும் நிற்கும். 4. செம்மையானவர்களுக்கு இருளிலே வெளிச்சம் உதிக்கும்; அவன் இரக்கமும் மனஉருக்கமும் நீதியுமுள்ளவன். 5. இரங்கிக் கடன்கொடுத்து, தன் காரியங்களை நியாயமானபடி நடப்பிக்கிற மனுஷன் பாக்கியவான். 6. அவன் என்றென்றைக்கும் அசைக்கப்படாதிருப்பான்; நீதிமான் நித்திய கீர்த்தியுள்ளவன். 7. துர்ச்செய்தியைக் கேட்கிறதினால் பயப்படான்; அவன் இருதயம் கர்த்தரை நம்பித் திடனாயிருக்கும். 8. அவன் இருதயம் உறுதியாயிருக்கும்; அவன் தன் சத்துருக்களில் சரிக்கட்டுதலைக் காணுமட்டும் பயப்படாதிருப்பான். 9. வாரியிறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும்; அவன் கொம்பு மகிமையாய் உயர்த்தப்படும். 10. துன்மார்க்கன் அதைக் கண்டு மனமடிவாகி, தன் பற்களைக் கடித்துக் கரைந்துபோவான்; துன்மார்க்கருடைய ஆசை அழியும்.
Chapter 113
1. அல்லேலூயா, கர்த்தருடைய ஊழியக்காரரே, துதியுங்கள்; கர்த்தருடைய நாமத்தைத் துதியுங்கள். 2. இதுமுதல் என்றென்றைக்கும் கர்த்தருடைய நாமம் ஸ்தோத்திரிக்கப்படக்கடவது. 3. சூரியன் உதிக்கும் திசைதொடங்கி அது அஸ்தமிக்கும் திசைமட்டும் கர்த்தருடைய நாமம் துதிக்கப்படுவதாக. 4. கர்த்தர் எல்லா ஜாதிகள்மேலும் உயர்ந்தவர்; அவருடைய மகிமை வானங்களுக்கு மேலானது. 5. உன்னதங்களில் வாசம்பண்ணுகிற நம்முடைய தேவனாகிய கர்த்தருக்குச் சமானமானவர் யார்? 6. அவர் வானத்திலும் பூமியிலுமுள்ளவைகளைப் பார்க்கும்படி தம்மைத் தாழ்த்துகிறார். 7. அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து தூக்கிவிடுகிறார்; எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார். 8. அவனைப் பிரபுக்களோடும், தமது ஜனத்தின் அதிபதிகளோடும் உட்காரப்பண்ணுகிறார். 9. மலடியைச் சந்தோஷமான பிள்ளைத்தாய்ச்சியாக்கி, வீட்டிலே குடியிருக்கப்பண்ணுகிறார். அல்லேலூயா.
Chapter 114
1. இஸ்ரவேல் எகிப்திலும், யாக்கோபின் குடும்பம் அந்நிய பாஷைக்காரரான ஜனத்திலுமிருந்து புறப்பட்டபோது, 2. யூதா அவருக்குப் பரிசுத்த ஸ்தானமும், இஸ்ரவேல் அவருக்கு ராஜ்யமுமாயிற்று. 3. கடல் கண்டு விலகி ஓடிற்று; யோர்தான் பின்னிட்டுத் திரும்பினது. 4. மலைகள் ஆட்டுக்கடாக்களைப்போலவும், குன்றுகள் ஆட்டுக்குட்டிகளைப்போலவும் துள்ளினது. 5. கடலே, நீ விலகியோடுகிறதற்கும்; யோர்தானே, நீ பின்னிட்டுத் திரும்புகிறதற்கும்; 6. மலைகளே, நீங்கள் ஆட்டுக்கடாக்களைப்போலவும்; குன்றுகளே, நீங்கள் ஆட்டுக்குட்டிகளைப்போலவும் துள்ளுகிறதற்கும், உங்களுக்கு என்ன வந்தது? 7. பூமியே, நீ ஆண்டவருக்கு முன்பாகவும், யாக்கோபுடைய தேவனுக்கு முன்பாகவும் அதிரு. 8. அவர் கன்மலையைத் தண்ணீர்த் தடாகமாகவும், கற்பாறையை நீரூற்றுகளாகவும் மாற்றுகிறார்.
Chapter 115
1. எங்களுக்கு அல்ல, கர்த்தாவே, எங்களுக்கு அல்ல, உமது கிருபையினிமித்தமும், உமது சத்தியத்தினிமித்தமும், உம்முடைய நாமத்திற்கே மகிமை வரப்பண்ணும். 2. அவர்களுடைய தேவன் இப்பொழுது எங்கே என்று புறஜாதிகள் சொல்வானேன்? 3. நம்முடைய தேவன் பரலோகத்தில் இருக்கிறார்; தமக்குச் சித்தமான யாவையும் செய்கிறார். 4. அவர்களுடைய விக்கிரகங்கள் வெள்ளியும் பொன்னும், மனுஷருடைய கைவேலையுமாயிருக்கிறது. 5. அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது; அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது. 6. அவைகளுக்குக் காதுகளிருந்தும் கேளாது; அவைகளுக்கு மூக்கிருந்தும் முகராது. 7. அவைகளுக்குக் கைகளிருந்தும் தொடாது; அவைகளுக்குக் கால்களிருந்தும் நடவாது; தங்கள் தொண்டையால் சத்தமிடவும் மாட்டாது. 8. அவைகளைப் பண்ணுகிறவர்களும், அவைகளை நம்புகிறவர்கள் யாவரும், அவைகளைப்போலவே இருக்கிறார்கள். 9. இஸ்ரவேலே, கர்த்தரை நம்பு; அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாயிருக்கிறார். 10. ஆரோன் குடும்பத்தாரே, கர்த்தரை நம்புங்கள்; அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாயிருக்கிறார். 11. கர்த்தருக்குப் பயப்படுகிறவர்களே, கர்த்தரை நம்புங்கள்; அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாயிருக்கிறார். 12. கர்த்தர் நம்மை நினைத்திருக்கிறார், அவர் ஆசீர்வதிப்பார்; இஸ்ரவேல் குடும்பத்தாரை ஆசீர்வதிப்பார், அவர் ஆரோன் குடும்பத்தாரை ஆசீர்வதிப்பார். 13. கர்த்தருக்குப் பயப்படுகிற பெரியோரையும் சிறியோரையும் ஆசீர்வதிப்பார். 14. கர்த்தர் உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் வர்த்திக்கப்பண்ணுவார். 15. வானத்தையும் பூமியையும் படைத்த கர்த்தராலே நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். 16. வானங்கள் கர்த்தருடையவைகள்; பூமியையோ மனுபுத்திரருக்குக் கொடுத்தார். 17. மரித்தவர்களும் மவுனத்தில் இறங்குகிற அனைவரும் கர்த்தரைத் துதியார்கள். 18. நாமோ, இதுமுதல் என்றென்றைக்கும் கர்த்தரை ஸ்தோத்திரிப்போம். அல்லேலூயா.
Chapter 116
1. கர்த்தர் என் சத்தத்தையும் என் விண்ணப்பத்தையும் கேட்டதினால், அவரில் அன்புகூருகிறேன். 2. அவர் தமது செவியை எனக்குச் சாய்த்தபடியால், நான் உயிரோடிருக்குமளவும் அவரைத் தொழுதுகொள்ளுவேன். 3. மரணக்கட்டுகள் என்னைச் சுற்றிக்கொண்டது, பாதாள இடுக்கண்கள் என்னைப் பிடித்தது; இக்கட்டையும் சஞ்சலத்தையும் அடைந்தேன். 4. அப்பொழுது நான் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டு: கர்த்தாவே, என் ஆத்துமாவை விடுவியும் என்று கெஞ்சினேன். 5. கர்த்தர் கிருபையும் நீதியுமுள்ளவர், நம்முடைய தேவன் மனஉருக்கமானவர். 6. கர்த்தர் கபடற்றவர்களைக் காக்கிறார்; நான் மெலிந்துபோனேன், அவர் என்னை இரட்சித்தார். 7. என் ஆத்துமாவே, கர்த்தர் உனக்கு நன்மை செய்தபடியால், நீ உன் இளைப்பாறுதலுக்குத் திரும்பு. 8. என் ஆத்துமாவை மரணத்துக்கும், என் கண்ணைக் கண்ணீருக்கும், என் காலை இடறுதலுக்கும் தப்புவித்தீர். 9. நான் கர்த்தருக்கு முன்பாக ஜீவனுள்ளோர் தேசத்திலே நடப்பேன். 10. விசுவாசித்தேன், ஆகையால் பேசுகிறேன்; நான் மிகுதியும் வருத்தப்பட்டேன். 11. எந்த மனுஷனும் பொய்யன் என்று என் மனக்கலக்கத்திலே சொன்னேன். 12. கர்த்தர் எனக்குச் செய்த எல்லா உபகாரங்களுக்காகவும், அவருக்கு என்னத்தைச் செலுத்துவேன். 13. இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுவேன். 14. நான் கர்த்தருக்குச் செய்த பொருத்தனைகளை அவருடைய ஜனங்களெல்லாருக்கு முன்பாகவும் செலுத்துவேன். 15. கர்த்தருடைய பரிசுத்தவான்களின் மரணம் அவர் பார்வைக்கு அருமையானது. 16. கர்த்தாவே, நான் உமது அடியேன்; நான் உமது அடியாளின் புத்திரனும், உமது ஊழியக்காரனுமாயிருக்கிறேன்; என் கட்டுகளை அவிழ்த்துவிட்டீர். 17. நான் உமக்கு ஸ்தோத்திரபலியைச் செலுத்தி, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுவேன். 18. நான் கர்த்தருக்குச் செய்த பொருத்தனைகளை அவருடைய ஜனங்களெல்லாருக்கு முன்பாகவும், 19. கர்த்தருடைய ஆலயத்தின் பிராகாரங்களிலும், எருசலேமே உன் நடுவிலும் நிறைவேற்றுவேன். அல்லேலூயா.
Chapter 117
1. ஜாதிகளே, எல்லாரும் கர்த்தரைத் துதியுங்கள்; ஜனங்களே, எல்லாரும் அவரைப் போற்றுங்கள். 2. அவர் நம்மேல் வைத்த கிருபை பெரியது; கர்த்தரின் உண்மை என்றென்றைக்குமுள்ளது. அல்லேலூயா.
Chapter 118
1. கர்த்தரைத் துதியுங்கள், அவர் நல்லவர்; அவர் கிருபை என்றுமுள்ளது. 2. அவர் கிருபை என்றுமுள்ளதென்று இஸ்ரவேல் சொல்வதாக. 3. அவர் கிருபை என்றுமுள்ளதென்று, ஆரோனின் குடும்பத்தார் சொல்வார்களாக. 4. அவர் கிருபை என்றுமுள்ளதென்று, கர்த்தருக்குப் பயப்படுகிறவர்கள் சொல்வார்களாக. 5. நெருக்கத்திலிருந்து கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன், கர்த்தர் என்னைக் கேட்டருளி விசாலத்திலே வைத்தார். 6. கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார், நான் பயப்படேன்; மனுஷன் எனக்கு என்னசெய்வான்? 7. எனக்கு அநுகூலம் பண்ணுகிறவர்கள் நடுவில் கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார்; என் சத்துருக்களில் சரிக்கட்டுதலைக் காண்பேன். 8. மனுஷனை நம்புவதைப்பார்க்கிலும், கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம். 9. பிரபுக்களை நம்புவதைப்பார்க்கிலும், கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம். 10. எல்லா ஜாதியாரும் என்னை வளைந்துகொள்ளுகிறார்கள்; கர்த்தருடைய நாமத்தினால் அவர்களைச் சங்கரிப்பேன். 11. என்னைச் சுற்றிலும் வளைந்துகொள்ளுகிறார்கள்; கர்த்தருடைய நாமத்தினால் அவர்களைச் சங்கரிப்பேன். 12. தேனீக்களைப்போல என்னை வளைந்துகொள்ளுகிறார்கள்; முள்ளில் பற்றின நெருப்பைப்போல அணைந்து போவார்கள்; கர்த்தருடைய நாமத்தினால் அவர்களைச் சங்கரிப்பேன். 13. நான் விழும்படி நீ என்னைத் தள்ளினாய்; கர்த்தரோ எனக்கு உதவிசெய்தார். 14. கர்த்தர் என் பெலனும், என் கீதமுமானவர்; அவர் எனக்கு இரட்சிப்புமானார். 15. நீதிமான்களுடைய கூடாரங்களில் இரட்சிப்பின் கெம்பீரசத்தம் உண்டு; கர்த்தரின் வலதுகரம் பராக்கிரமஞ்செய்யும். 16. கர்த்தரின் வலதுகரம் உயர்ந்திருக்கிறது; கர்த்தரின் வலதுகரம் பராக்கிரமஞ்செய்யும். 17. நான் சாவாமல், பிழைத்திருந்து, கர்த்தருடைய செய்கைகளை விவரிப்பேன். 18. கர்த்தர் என்னை வெகுவாய்த் தண்டித்தும், என்னைச் சாவுக்கு ஒப்புக்கொடுக்கவில்லை. 19. நீதியின் வாசல்களைத் திறவுங்கள்; நான் அவைகளுக்குள் பிரவேசித்துக் கர்த்தரைத் துதிப்பேன். 20. கர்த்தரின் வாசல் இதுவே; நீதிமான்கள் இதற்குள் பிரவேசிப்பார்கள். 21. நீர் எனக்குச் செவிகொடுத்து, எனக்கு இரட்சிப்பாயிருந்தபடியால், நான் உம்மைத் துதிப்பேன். 22. வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே, மூலைக்குத் தலைக்கல்லாயிற்று. 23. அது கர்த்தராலே ஆயிற்று, அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாயிருக்கிறது. 24. இது கர்த்தர் உண்டுபண்ணின நாள்; இதிலே களிகூர்ந்து மகிழக்கடவோம். 25. கர்த்தாவே, இரட்சியும்; கர்த்தாவே, காரியத்தை வாய்க்கப்பண்ணும். 26. கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்; கர்த்தருடைய ஆலயத்திலிருந்து உங்களை ஆசீர்வதிக்கிறோம். 27. கர்த்தர் நம்மைப் பிரகாசிப்பிக்கிற தேவனாயிருக்கிறார்; பண்டிகைப்பலியைக் கொண்டுபோய்ப் பலிபீடத்தின் கொம்புகளில் கயிறுகளால் கட்டுங்கள். 28. நீர் என் தேவன், நான் உம்மைத் துதிப்பேன்; நீர் என் தேவன், நான் உம்மை உயர்த்துவேன். 29. கர்த்தரைத் துதியுங்கள், அவர் நல்லவர்; அவர் கிருபை என்றுமுள்ளது.
Chapter 119
1. (ஆலேப்.) கர்த்தருடைய வேதத்தின்படி நடக்கிற உத்தம மார்க்கத்தார் பாக்கியவான்கள். 2. அவருடைய சாட்சிகளைக் கைக்கொண்டு, அவரை முழு இருதயத்தோடும் தேடுகிறவர்கள் பாக்கியவான்கள். 3. அவர்கள் அநியாயம் செய்வதில்லை; அவருடைய வழிகளில் நடக்கிறார்கள். 4. உமது கட்டளைகளை நாங்கள் கருத்தாய்க் கைக்கொள்ளும்படி நீர் கற்பித்தீர். 5. உமது பிரமாணங்களைக் கைக்கொள்ளும்படி, என் நடைகள் ஸ்திரப்பட்டால் நலமாயிருக்கும். 6. நான் உம்முடைய கற்பனைகளையெல்லாம் கண்ணோக்கும்போது, வெட்கப்பட்டுப்போவதில்லை. 7. உம்முடைய நீதிநியாயங்களை நான் கற்றுக்கொள்ளும்போது, செம்மையான இருதயத்தால் உம்மைத் துதிப்பேன். 8. உமது பிரமாணங்களைக் கைக்கொள்ளுவேன்; முற்றிலும் என்னைக் கைவிடாதேயும். 9. (பேத்.) வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம்பண்ணுவான்? உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக்கொள்ளுகிறதினால்தானே. 10. என் முழு இருதயத்தோடும் உம்மைத் தேடுகிறேன், என்னை உமது கற்பனைகளைவிட்டு வழிதப்பவிடாதேயும். 11. நான் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதபடிக்கு, உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன். 12. கர்த்தாவே, நீர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்; உம்முடைய பிரமாணங்களை எனக்குப் போதியும். 13. உம்முடைய வாக்கின் நியாயத்தீர்ப்புகளையெல்லாம் என் உதடுகளால் விவரித்திருக்கிறேன். 14. திரளான செல்வத்தில் களிகூருவதுபோல, நான் உமது சாட்சிகளின் வழியில் களிகூருகிறேன். 15. உமது கட்டளைகளைத் தியானித்து, உமது வழிகளைக் கண்ணோக்குகிறேன். 16. உமது பிரமாணங்களில் மனமகிழ்ச்சியாயிருக்கிறேன்; உமது வசனத்தை மறவேன். 17. (கிமெல்.) உமது அடியேனுக்கு அனுகூலமாயிரும்; அப்பொழுது நான் பிழைத்து, உமது வசனத்தைக் கைக்கொள்ளுவேன். 18. உமது வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படிக்கு, என் கண்களைத் திறந்தருளும். 19. பூமியிலே நான் பரதேசி; உமது கற்பனைகளை எனக்கு மறையாதேயும். 20. உமது நியாயங்கள்மேல் என் ஆத்துமா எக்காலமும் வைத்திருக்கிற வாஞ்சையினால் தொய்ந்துபோகிறது. 21. உமது கற்பனைகளை விட்டு வழிவிலகின சபிக்கப்பட்ட அகங்காரிகளை நீர் கடிந்துகொள்ளுகிறீர். 22. நிந்தையையும் அவமானத்தையும் என்னை விட்டகற்றும்; நான் உம்முடைய சாட்சிகளைக் கைக்கொள்ளுகிறேன். 23. பிரபுக்களும் உட்கார்ந்து எனக்கு விரோதமாய்ப் பேசிக்கொள்ளுகிறார்கள்; உமது அடியேனோ, உமது பிரமாணங்களைத் தியானிக்கிறேன். 24. உம்முடைய சாட்சிகள் எனக்கு இன்பமும், என் ஆலோசனைக்காரருமாயிருக்கிறது. 25. (டாலெத்.) என் ஆத்துமா மண்ணோடு ஒட்டிக்கொண்டிருக்கிறது; உமது வசனத்தின்படி என்னை உயிர்ப்பியும். 26. என் வழிகளை நான் உமக்கு விவரித்துக் காட்டினபோது எனக்குச் செவிகொடுத்தீர்; உமது பிரமாணங்களை எனக்குப் போதியும். 27. உமது கட்டளைகளின் வழியை எனக்கு உணர்த்தியருளும்; அப்பொழுது உமது அதிசயங்களைத் தியானிப்பேன். 28. சஞ்சலத்தால் என் ஆத்துமா கரைந்துபோகிறது; உமது வசனத்தின்படி என்னை எடுத்து நிறுத்தும். 29. பொய்வழியை என்னைவிட்டு விலக்கி, உம்முடைய வேதத்தை எனக்கு அருள்செய்யும். 30. மெய்வழியை நான் தெரிந்துகொண்டு, உம்முடைய நியாயங்களை எனக்கு முன்பாக நிறுத்தினேன். 31. உமது சாட்சிகள்மேல் பற்றுதலாயிருக்கிறேன்; கர்த்தாவே, என்னை வெட்கத்திற்குட்படப்பண்ணாதேயும். 32. நீர் என் இருதயத்தை விசாலமாக்கும்போது, நான் உமது கற்பனைகளின் வழியாக ஓடுவேன். 33. (எ.) கர்த்தாவே, உமது பிரமாணங்களின் வழியை எனக்குப் போதியும்; முடிவுபரியந்தம் நான் அதைக் காத்துக்கொள்ளுவேன். 34. எனக்கு உணர்வைத் தாரும்; அப்பொழுது நான் உமது வேதத்தைப் பற்றிக்கொண்டு, என் முழு இருதயத்தோடும் அதைக் கைக்கொள்ளுவேன். 35. உமது கற்பனைகளின் பாதையில் என்னை நடத்தும்; நான் அதில் பிரியமாயிருக்கிறேன். 36. என் இருதயம் பொருளாசையைச் சாராமல், உமது சாட்சிகளைச் சாரும்படி செய்யும். 37. மாயையைப் பாராதபடி நீர் என் கண்களை விலக்கி, உமது வழிகளில் என்னை உயிர்ப்பியும். 38. உமக்குப் பயப்படுகிறதற்கு ஏற்ற உமது வாக்கை உமது அடியேனுக்கு உறுதிப்படுத்தும். 39. நான் அஞ்சுகிற நிந்தையை விலக்கியருளும்; உம்முடைய நியாயத்தீர்ப்புகள் நல்லவைகள். 40. இதோ, உம்முடைய கட்டளைகள்மேல் வாஞ்சையாயிருக்கிறேன்; உமது நீதியால் என்னை உயிர்ப்பியும். 41. (வௌ.) கர்த்தாவே, உம்முடைய வாக்கின்படி, உமது தயவும் உமது இரட்சிப்பும் எனக்கு வருவதாக. 42. அப்பொழுது என்னை நிந்திக்கிறவனுக்கு உத்தரவு சொல்லுவேன்; உம்முடைய வசனத்தை நம்பியிருக்கிறேன். 43. சத்திய வசனம் முற்றிலும் என் வாயினின்று நீங்கவிடாதேயும்; உம்முடைய நியாயத்தீர்ப்புகளுக்குக் காத்திருக்கிறேன். 44. நான் எப்பொழுதும் என்றைக்கும் உமது வேதத்தைக் காத்துக்கொள்ளுவேன். 45. நான் உம்முடைய கட்டளைகளை ஆராய்கிறபடியால், விசாலத்திலே நடப்பேன். 46. நான் உம்முடைய சாட்சிகளைக்குறித்து, ராஜாக்களுக்கு முன்பாகவும் வெட்கப்படாமல் பேசுவேன். 47. நான் பிரியப்படுகிற உமது கற்பனைகளின்பேரில் மனமகிழ்ச்சியாயிருப்பேன். 48. நான் பிரியப்படுகிற உமது கற்பனைகளுக்குக் கையெடுப்பேன், உமது பிரமாணங்களைத் தியானிப்பேன். 49. (சாயீன்.) நீர் என்னை நம்பப்பண்ணின வசனத்தை உமது அடியேனுக்காக நினைத்தருளும். 50. அதுவே என் சிறுமையில் எனக்கு ஆறுதல், உம்முடைய வாக்கு என்னை உயிர்ப்பித்தது. 51. அகந்தைக்காரர் என்னை மிகவும் பரியாசம்பண்ணியும், நான் உமது வேதத்தைவிட்டு விலகினதில்லை. 52. கர்த்தாவே, ஆதிமுதலான உமது நியாயத்தீர்ப்புகளை நான் நினைத்து என்னைத் தேற்றுகிறேன். 53. உமது வேதத்தை விட்டு விலகுகிற துன்மார்க்கர்நிமித்தம் நடுக்கம் என்னைப் பிடித்தது. 54. நான் பரதேசியாய்த் தங்கும் வீட்டிலே உமது பிரமாணங்கள் எனக்குக் கீதங்களாயின. 55. கர்த்தாவே, இராக்காலத்தில் உமது நாமத்தை நினைத்து, உமது வேதத்தைக் கைக்கொள்ளுகிறேன். 56. நான் உமது கட்டளைகளைக் கைக்கொண்டபடியினால், இது எனக்குக் கிடைத்தது. 57. (கேத்.) கர்த்தாவே, நீரே என் பங்கு; நான் உமது வசனங்களைக் கைக்கொள்ளுவேன் என்றேன். 58. முழு இருதயத்தோடும் உம்முடைய தயவுக்காகக் கெஞ்சுகிறேன்; உமது வாக்கின்படி எனக்கு இரங்கும். 59. என் வழிகளைச் சிந்தித்துக்கொண்டு, என் கால்களை உம்முடைய சாட்சிகளுக்கு நேராகத் திருப்பினேன். 60. உமது கற்பனைகளைக் கைக்கொள்ளும்படி, நான் தாமதியாமல் தீவிரித்தேன். 61. துன்மார்க்கரின் கூட்டங்கள் என்னைக் கொள்ளையிட்டும், உம்முடைய வேதத்தை நான் மறக்கவில்லை. 62. உமது நீதியான நியாயத்தீர்ப்புகளினிமித்தம், உம்மைத் துதிக்கும்படி பாதிராத்திரியில் எழுந்திருப்பேன். 63. உமக்குப் பயந்து, உமது கட்டளைகளைக் கைக்கொள்ளுகிற அனைவருக்கும் நான் தோழன். 64. கர்த்தாவே, பூமி உமது கிருபையினால் நிறைந்திருக்கிறது; உமது பிரமாணங்களை எனக்குப் போதியும். 65. (தேத்.) கர்த்தாவே, உமது வசனத்தின்படி உமது அடியேனை நன்றாய் நடத்தினீர். 66. உத்தம நிதானிப்பையும் அறிவையும் எனக்குப் போதித்தருளும், உம்முடைய கற்பனைகளின்பேரில் விசுவாசமாயிருக்கிறேன். 67. நான் உபத்திரவப்படுவதற்கு முன் வழிதப்பி நடந்தேன்; இப்பொழுதோ உம்முடைய வார்த்தையைக் காத்து நடக்கிறேன். 68. தேவரீர் நல்லவரும், நன்மை செய்கிறவருமாயிருக்கிறீர்; உமது பிரமாணங்களை எனக்குப் போதியும். 69. அகங்காரிகள் எனக்கு விரோதமாய்ப் பொய்களைப் பிணைக்கிறார்கள்; நானோ, முழு இருதயத்தோடும் உம்முடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுவேன். 70. அவர்கள் இருதயம் நிணந்துன்னிக் கொழுத்திருக்கிறது; நானோ, உம்முடைய வேதத்தில் மனமகிழ்ச்சியாயிருக்கிறேன். 71. நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது; அதினால் உமது பிரமாணங்களைக் கற்றுக்கொள்ளுகிறேன். 72. அநேகமாயிரம் பொன் வெள்ளியைப்பார்க்கிலும், நீர் விளம்பின வேதமே எனக்கு நலம். 73. (யோட்.) உம்முடைய கரங்கள் என்னை உண்டாக்கி, என்னை உருவாக்கிற்று; உம்முடைய கற்பனைகளைக் கற்றுக்கொள்ள என்னை உணர்வுள்ளவனாக்கும். 74. நான் உம்முடைய வசனத்திற்குக் காத்திருக்கிறபடியால், உமக்குப் பயந்தவர்கள் என்னைக் கண்டு சந்தோஷப்படுவார்கள். 75. கர்த்தாவே, உமது நியாயத்தீர்ப்புகள் நீதியுள்ளதென்றும், உண்மையின்படி என்னை உபத்திரவப்படுத்தினீரென்றும் அறிவேன். 76. நீர் உமது அடியேனுக்குக் கொடுத்த உமது வாக்கின்படி, உமது கிருபை என்னைத் தேற்றுவதாக. 77. நான் பிழைத்திருக்கும்படிக்கு உமது இரக்கங்கள் எனக்குக் கிடைப்பதாக; உம்முடைய வேதம் என் மனமகிழ்ச்சி. 78. அகங்காரிகள் என்னைப் பொய்களினால் கெடுக்கப் பார்த்தபடியால் வெட்கப்பட்டுப்போவார்களாக; நானோ உமது கட்டளைகளைத் தியானிப்பேன். 79. உமக்குப் பயந்து, உமது சாட்சிகளை அறிந்திருக்கிறவர்கள் என்னண்டைக்குத் திரும்புவார்களாக. 80. நான் வெட்கப்பட்டுப் போகாதபடிக்கு, என் இருதயம் உமது பிரமாணங்களில் உத்தமமாயிருக்கக்கடவது. 81. (கப்.) உம்முடைய இரட்சிப்புக்கு என் ஆத்துமா தவிக்கிறது; உம்முடைய வசனத்துக்குக் காத்திருக்கிறேன். 82. எப்பொழுது என்னைத் தேற்றுவீர் என்று, உம்முடைய வாக்கின்மேல் நோக்கமாய் என் கண்கள் பூத்துப்போகிறது. 83. புகையிலுள்ள துருத்தியைப்போலானேன்; உமது பிரமாணங்களையோ மறவேன். 84. உமது அடியேனுடைய நாட்கள் எம்மாத்திரம்? என்னைத் துன்பப்படுத்துகிறவர்களுக்கு நீர் எப்பொழுது நியாயத்தீர்ப்புச் செய்வீர்? 85. உம்முடைய வேதத்துக்கு விரோதமாய் அகங்காரிகள் எனக்குக் குழிகளை வெட்டினார்கள். 86. உம்முடைய கற்பனைகளெல்லாம் உண்மையாயிருக்கிறது; அநியாயமாய் என்னைத் துன்பப்படுத்துகிறார்கள்; நீர் எனக்குச் சகாயம்பண்ணும். 87. அவர்கள் என்னைப் பூமியிலிராமல் நீக்கிவிடச் சற்றே தப்பிற்று; ஆனாலும் நான் உமது கட்டளைகளை விட்டுவிடவில்லை. 88. உமது கிருபையின்படியே என்னை உயிர்ப்பியும்; அப்பொழுது நான் உம்முடைய வாக்கின் சாட்சியைக் காத்து நடப்பேன். 89. (லாமேட்.) கர்த்தாவே, உமது வசனம் என்றென்றைக்கும் வானங்களில் நிலைத்திருக்கிறது. 90. உம்முடைய உண்மை தலைமுறை தலைமுறையாக இருக்கும்; பூமியை உறுதிப்படுத்தினீர், அது நிலைத்திருக்கிறது.
91 உம்முடைய பிரமாணங்களை நிறைவேற்றும்படி அவைகள் இந்நாள்வரைக்கும் நிற்கிறது; சமஸ்தமும் உம்மைச் சேவிக்கும். 92 உமது வேதம் என் மனமகிழ்ச்சியாயிராதிருந்தால், என் துக்கத்திலே அழிந்துபோயிருப்பேன். 93 நான் ஒருபோதும் உம்முடைய கட்டளைகளை மறக்கமாட்டேன்; அவைகளால் நீர் என்னை உயிர்ப்பித்தீர். 94 நான் உம்முடையவன், என்னை இரட்சியும்; உம்முடைய கட்டளைகளை ஆராய்கிறேன். 95 துன்மார்க்கர் என்னை அழிக்கக் காத்திருக்கிறார்கள்; நான் உமது சாட்சிகளைச் சிந்தித்துக்கொண்டிருக்கிறேன். 96 சகல சம்பூரணத்திற்கும் எல்லையைக் கண்டேன்; உம்முடைய கற்பனையோ மகா விஸ்தாரம். 97 (மேம்.) உமது வேதத்தில் நான் எவ்வளவு பிரியமாயிருக்கிறேன்! நாள்முழுதும் அது என் தியானம். 98 நீர் உம்முடைய கற்பனைகளைக் கொண்டு என்னை என் சத்துருக்களிலும் அதிக ஞானமுள்ளவனாக்குகிறீர்; அவைகள் என்றைக்கும் என்னுடனே இருக்கிறது. 99 உம்முடைய சாட்சிகள் என் தியானமாயிருக்கிறபடியால், எனக்குப் போதித்தவர்களெல்லாரிலும் அறிவுள்ளவனாயிருக்கிறேன். 100 உம்முடைய கட்டளைகளை நான் கைக்கொண்டிருக்கிறபடியால், முதியோர்களைப்பார்க்கிலும் ஞானமுள்ளவனாயிருக்கிறேன். 101 உம்முடைய வசனத்தை நான் காத்து நடக்கும்படிக்கு, சகல பொல்லாத வழிகளுக்கும் என் கால்களை விலக்குகிறேன். 102 நீர் எனக்குப் போதித்திருக்கிறபடியால், நான் உம்முடைய நியாயங்களை விட்டு விலகேன். 103 உம்முடைய வார்த்தைகள் என் நாவுக்கு எவ்வளவு இனிமையானவைகள்; என் வாய்க்கு அவைகள் தேனிலும் மதுரமாயிருக்கும். 104 உமது கட்டளைகளால் உணர்வடைந்தேன், ஆதலால் எல்லாப் பொய்வழிகளையும் வெறுக்கிறேன். 105 (நூன்.) உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது. 106 உம்முடைய நீதிநியாயங்களைக் காத்து நடப்பேன் என்று ஆணையிட்டேன்; அதை நிறைவேற்றுவேன். 107 நான் மிகவும் உபத்திரவப்படுகிறேன்; கர்த்தாவே, உம்முடைய வசனத்தின்படியே என்னை உயிர்ப்பியும். 108 கர்த்தாவே, என் வாயின் உற்சாகபலிகளை நீர் அங்கீகரித்து, உமது நியாயங்களை எனக்குப் போதித்தருளும். 109 என் பிராணன் எப்பொழுதும் என் கையில் இருக்கிறது; ஆனாலும் உம்முடைய வேதத்தை மறவேன். 110 துன்மார்க்கர் எனக்குக் கண்ணிவைக்கிறார்கள்; ஆனாலும் நான் உம்முடைய கட்டளைகளை விட்டு வழி தவறேன். 111 உம்முடைய சாட்சிகளை நித்திய சுதந்தரமாக்கிக்கொண்டிருக்கிறேன், அவைகளே என் இருதயத்தின் மகிழ்ச்சி. 112 முடிவுபரியந்தம் இடைவிடாமல் உம்முடைய பிரமாணங்களின்படி செய்ய என் இருதயத்தைச் சாய்த்தேன். 113 (சாமெக்.) வீண் சிந்தனைகளை நான் வெறுத்து, உமது வேதத்தில் பிரியப்படுகிறேன். 114 என் மறைவிடமும் என் கேடகமும் நீரே; உம்முடைய வசனத்துக்குக் காத்திருக்கிறேன். 115 பொல்லாதவர்களே, என்னைவிட்டு அகன்றுபோங்கள்; என் தேவனுடைய கற்பனைகளை நான் கைக்கொள்ளுவேன். 116 நான் பிழைத்திருப்பதற்கு உமது வார்த்தையின்படி என்னை ஆதரித்தருளும்; என் நம்பிக்கை விருதாவாய்ப்போக என்னை வெட்கத்திற்கு உட்படுத்தாதேயும். 117 என்னை ஆதரித்தருளும்; அப்பொழுது நான் இரட்சிக்கப்பட்டு, எக்காலமும் உம்முடைய பிரமாணங்களின்பேரில் நோக்கமாயிருப்பேன். 118 உமது பிரமாணங்களைவிட்டு வழிவிலகுகிற யாவரையும் மிதித்துப்போடுகிறீர்; அவர்களுடைய உபாயம் வெறும் பொய்யே. 119 பூமியிலுள்ள துன்மார்க்கர் யாவரையும் களிம்பைப்போல அகற்றிவிடுகிறீர்; ஆகையால் உமது சாட்சிகளில் பிரியப்படுகிறேன். 120 உமக்குப் பயப்படும் பயத்தால் என் உடம்பு சிலிர்க்கிறது; உமது நியாயத்தீர்ப்புகளுக்குப் பயப்படுகிறேன். 121 (ஆயின்.) நியாயமும் நீதியும் செய்கிறேன்; என்னை ஒடுக்குகிறவர்களுக்கு என்னை ஒப்புக்கொடாதேயும். 122 உமது அடியேனுக்கு நன்மையாகத் துணைநில்லும்; அகங்காரிகள் என்னையொடுக்கவொட்டாதேயும். 123 உமது இரட்சிப்புக்கும் உமது நீதியின் வார்த்தைக்கும் காத்திருக்கிறதினால் என் கண்கள் பூத்துப்போகிறது. 124 உமது அடியேனை உமது கிருபையின்படியே நடத்தி, உமது பிரமாணங்களை எனக்குப் போதியும். 125 நான் உமது அடியேன்; உம்முடைய சாட்சிகளை நான் அறியும்படி என்னை உணர்வுள்ளவனாக்கும். 126 நீதியைச் செய்யக் கர்த்தருக்கு வேளைவந்தது; அவர்கள் உம்முடைய நியாயப்பிரமாணத்தை மீறினார்கள். 127 ஆதலால் நான் பொன்னிலும் பசும்பொன்னிலும் அதிகமாய் உமது கற்பனைகளில் பிரியப்படுகிறேன். 128 எல்லாவற்றைப்பற்றியும் நீர் அருளின எல்லாக் கட்டளைகளும் செம்மையென்று எண்ணி, சகல பொய்வழிகளையும் வெறுக்கிறேன். 129 (பே.) உம்முடைய சாட்சிகள் அதிசயமானவைகள்; ஆகையால் என் ஆத்துமா அவைகளைக் கைக்கொள்ளும். 130 உம்முடைய வசனத்தின் பிரசித்தம் வெளிச்சம் தந்து, பேதைகளை உணர்வுள்ளவர்களாக்கும். 131 உம்முடைய கற்பனைகளை நான் வாஞ்சிக்கிறபடியால், என் வாயை ஆவென்று திறந்து அவைகளுக்கு ஏங்குகிறேன். 132 உம்முடைய நாமத்தை நேசிக்கிறவர்களுக்கு வழங்கும் நியாயத்தின்படியே என்னை நோக்கிப்பார்த்து, எனக்கு இரங்கும். 133 உம்முடைய வார்த்தையிலே என் காலடிகளை நிலைப்படுத்தி, ஒரு அநியாயமும் என்னை ஆளவொட்டாதேயும். 134 மனுஷர் செய்யும் இடுக்கத்துக்கு என்னை விலக்கி விடுவித்தருளும்; அப்பொழுது நான் உம்முடைய கட்டளைகளைக் காத்துக்கொள்ளுவேன். 135 உமது அடியேன்மேல் உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணி, உமது பிரமாணங்களை எனக்குப் போதியும். 136 உம்முடைய வேதத்தை மனுஷர் காத்து நடவாதபடியால், என் கண்களிலிருந்து நீர்த்தாரைகள் ஓடுகிறது. 137 (த்சாடே.) கர்த்தாவே, நீர் நீதிபரர், உமது நியாயத்தீர்ப்புகள் செம்மையானவைகள். 138 நீர் கட்டளையிட்ட சாட்சிகள் நீதியும், மகா உண்மையுமானவைகள். 139 என் சத்துருக்கள் உம்முடைய வசனங்களை மறந்தபடியால், என் பக்திவைராக்கியம் என்னைப் பட்சிக்கிறது. 140 உமது வார்த்தை மிகவும் புடமிடப்பட்டது, உமது அடியேன் அதில் பிரியப்படுகிறேன். 141 நான் சிறியவனும் அசட்டை பண்ணப்பட்டவனுமாயிருக்கிறேன்; ஆனாலும் உமது கட்டளைகளை மறவேன். 142 உம்முடைய நீதி நித்திய நீதி, உம்முடைய வேதம் சத்தியம். 143 இக்கட்டும் நெருக்கமும் என்னைப் பிடித்தது; ஆனாலும் உம்முடைய கற்பனைகள் என் மனமகிழ்ச்சி. 144 உம்முடைய சாட்சிகளின் நீதி என்றைக்கும் நிற்கும்; என்னை உணர்வுள்ளவனாக்கும், அப்பொழுது நான் பிழைத்திருப்பேன். 145 (கோப்.) முழு இருதயத்தோடும் கூப்பிட்டேன், கர்த்தாவே, என் ஜெபத்தைக் கேளும்; உம்முடைய பிரமாணங்களைக் கைக்கொள்ளுவேன். 146 உம்மை நோக்கிக் கூப்பிட்டேன், என்னை இரட்சியும்; அப்பொழுது நான் உம்முடைய சாட்சிகளைக் காத்துக்கொள்ளுவேன். 147 அதிகாலையில் நான் எழுந்து சத்தமிட்டேன்; உம்முடைய வசனத்துக்குக் காத்திருக்கிறேன். 148 உமது வசனத்தைத் தியானிக்கும்படி, குறித்த ஜாமங்களுக்கு முன்னே என் கண்கள் விழித்துக்கொள்ளும். 149 உம்முடைய கிருபையின்படி என் சத்தத்தைக் கேளும்; கர்த்தாவே, உம்முடைய நியாயத்தின்படி என்னை உயிர்ப்பியும். 150 தீவினையைப் பின்பற்றுகிறவர்கள் சமீபிக்கிறார்கள்; அவர்கள் உம்முடைய வேதத்துக்குத் தூரமாயிருக்கிறார்கள். 151 கர்த்தாவே, நீர் சமீபமாயிருக்கிறீர்; உமது கற்பனைகளெல்லாம் உண்மை. 152 நீர் உம்முடைய சாட்சிகளை என்றென்றைக்கும் நிற்க ஸ்தாபித்தீர் என்பதை, அவைகளால் நான் நெடுநாளாய் அறிந்திருக்கிறேன். 153 (ரேஷ்.) என் உபத்திரவத்தைப் பார்த்து, என்னை விடுவியும்; உமது வேதத்தை மறவேன். 154 எனக்காக நீர் வழக்காடி என்னை மீட்டுக்கொள்ளும், உம்முடைய வார்த்தையின்படியே என்னை உயிர்ப்பியும். 155 இரட்சிப்பு துன்மார்க்கருக்குத் தூரமாயிருக்கிறது, அவர்கள் உமது பிரமாணங்களைத் தேடார்கள். 156 கர்த்தாவே, உம்முடைய இரக்கங்கள் மிகுதியாயிருக்கிறது; உமது நியாயங்களின்படி என்னை உயிர்ப்பியும். 157 என்னைத் துன்பப்படுத்துகிறவர்களும் என்னை விரோதிக்கிறவர்களும் அநேகர்; ஆனாலும் உம்முடைய சாட்சிகளை விட்டு விலகேன். 158 உமது வசனத்தைக் காத்துக்கொள்ளாத துரோகிகளை நான் கண்டபோது, எனக்கு அருவருப்பாயிருந்தது. 159 இதோ, உம்முடைய கட்டளைகளை நேசிக்கிறேன்; கர்த்தாவே, உமது கிருபையின்படி என்னை உயிர்ப்பியும். 160 உம்முடைய வசனம் சமூலமும் சத்தியம், உம்முடைய நீதி நியாயமெல்லாம் நித்தியம். 161 (ஷீன்.) பிரபுக்கள் காரணமில்லாமல் என்னைத் துன்பப்படுத்தினார்கள், ஆனாலும் என் இருதயம் உமது வசனத்திற்கே பயப்படுகிறது. 162 மிகுந்த கொள்ளையுடைமையைக் கண்டுபிடிக்கிறவன் மகிழுகிறதுபோல, நான் உமது வார்த்தையின்பேரில் மகிழுகிறேன். 163 பொய்யைப் பகைத்து அருவருக்கிறேன்; உம்முடைய வேதத்தையோ நேசிக்கிறேன். 164 உமது நீதிநியாயங்களினிமித்தம், ஒருநாளில் ஏழுதரம் உம்மைத் துதிக்கிறேன். 165 உம்முடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானமுண்டு; அவர்களுக்கு இடறலில்லை. 166 கர்த்தாவே, உம்முடைய இரட்சிப்புக்கு நான் காத்திருந்து, உம்முடைய கற்பனைகளின்படி செய்கிறேன். 167 என் ஆத்துமா உமது சாட்சிகளைக் காக்கும்; அவைகளை நான் மிகவும் நேசிக்கிறேன். 168 உமது கட்டளைகளையும் உமது சாட்சிகளையும் காத்து நடக்கிறேன்; என் வழிகளெல்லாம் உமக்கு முன்பாக இருக்கிறது. 169 (தௌ.) கர்த்தாவே, என் கூப்பிடுதல் உமது சந்நிதியில் வருவதாக; உமது வசனத்தின்படியே என்னை உணர்வுள்ளவனாக்கும். 170 என் விண்ணப்பம் உமது சந்நிதியில் வருவதாக; உமது வார்த்தையின்படி என்னை விடுவித்தருளும். 171 உம்முடைய பிரமாணங்களை நீர் எனக்குப் போதிக்கும்போது, என் உதடுகள் உமது துதியைப் பிரஸ்தாபப்படுத்தும். 172 உமது கற்பனைகளெல்லாம் நீதியுள்ளவைகள்; ஆதலால், என் நாவு உம்முடைய வசனத்தை விவரித்துச்சொல்லும். 173 நான் உம்முடைய கட்டளைகளைத் தெரிந்துகொண்டபடியால், உமது கரம் எனக்குத் துணையாயிருப்பதாக. 174 கர்த்தாவே, உம்முடைய இரட்சிப்பின்மேல் ஆவலாயிருக்கிறேன்; உம்முடைய வேதம் என் மனமகிழ்ச்சி. 175 என் ஆத்துமா பிழைத்திருந்து உம்மைத் துதிக்கக்கடவது; உமது நியாயத்தீர்ப்புகள் எனக்கு உதவியாயிருப்பதாக. 176 காணாமற்போன ஆட்டைப்போல வழிதப்பிப்போனேன்; உமது அடியேனைத் தேடுவீராக; உமது கற்பனைகளை நான் மறவேன்.
Chapter 120
1. என் நெருக்கத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன்; அவர் எனக்குச் செவிகொடுத்தார். 2. கர்த்தாவே, பொய் உதடுகளுக்கும் கபடநாவுக்கும் என் ஆத்துமாவைத் தப்புவியும். 3. கபடநாவே, உனக்கு என்ன கிடைக்கும்? உனக்கு என்ன செய்யப்படும்? 4. பலவானுடைய கூர்மையான அம்புகளும், சூரைச்செடிகளை எரிக்கும் தழலுமே கிடைக்கும். 5. ஐயோ! நான் மேசேக்கிலே சஞ்சரித்தது போதும், கேதாரின் கூடாரங்களண்டையிலே குடியிருந்ததும் போதும்! 6. சமாதானத்தைப் பகைக்கிறவர்களிடத்தில் என் ஆத்துமா குடியிருந்ததும் போதும்! 7. நான் சமாதானத்தை நாடுகிறேன்; அவர்களோ, நான் பேசும்போது யுத்தத்துக்கு எத்தனப்படுகிறார்கள்.
Chapter 121
1. எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன். 2. வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும். 3. உன் காலைத் தள்ளாடவொட்டார்; உன்னைக் காக்கிறவர் உறங்கார். 4. இதோ, இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குவதுமில்லை தூங்குகிறதுமில்லை. 5. கர்த்தர் உன்னைக் காக்கிறவர்; கர்த்தர் உன் வலதுபக்கத்திலே உனக்கு நிழலாயிருக்கிறார். 6. பகலிலே வெயிலாகிலும், இரவிலே நிலவாகிலும் உன்னைச் சேதப்படுத்துவதில்லை. 7. கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்; அவர் உன் ஆத்துமாவைக் காப்பார். 8. கர்த்தர் உன் போக்கையும் உன் வரத்தையும் இதுமுதற்கொண்டு என்றைக்குங் காப்பார்.
Chapter 122
1. கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவோம் வாருங்கள் என்று எனக்கு அவர்கள் சொன்னபோது மகிழ்ச்சியாயிருந்தேன். 2. எருசலேமே, உன் வாசல்களில் எங்கள் கால்கள் நிற்கலாயிற்று. 3. எருசலேம் இசைவிணைப்பான நகரமாய்க் கட்டப்பட்டிருக்கிறது. 4. அங்கே இஸ்ரவேலுக்குச் சாட்சியாகக் கர்த்தருடைய ஜனங்களாகிய கோத்திரங்கள் கர்த்தரின் நாமத்தை ஸ்தோத்திரிப்பதற்குப் போகும். 5. அங்கே தாவீதின் வம்சத்தாருடைய சிங்காசனங்களாகிய நியாயாசனங்கள் வைக்கப்பட்டிருக்கிறது. 6. எருசலேமின் சமாதானத்துக்காக வேண்டிக்கொள்ளுங்கள்; உன்னை நேசிக்கிறவர்கள் சுகித்திருப்பார்களாக. 7. உன் அலங்கத்திற்குள்ளே சமாதானமும், உன் அரமனைகளுக்குள்ளே சுகமும் இருப்பதாக. 8. என் சகோதரர் நிமித்தமும் என் சிநேகிதர் நிமித்தமும், உன்னில் சமாதானம் இருப்பதாக என்பேன். 9. எங்கள் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்தினிமித்தம் உனக்கு நன்மையுண்டாகத் தேடுவேன்.
Chapter 123
1. பரலோகத்தில் வாசமாயிருக்கிறவரே, உம்மிடத்திற்கு என் கண்களை ஏறெடுக்கிறேன். 2. இதோ, வேலைக்காரரின் கண்கள் தங்கள் எஜமான்களின் கையை நோக்கியிருக்குமாப்போலவும், வேலைக்காரியின் கண்கள் தன் எஜமாட்டியின் கையை நோக்கியிருக்குமாப்போலவும், எங்கள் தேவனாகிய கர்த்தர் எங்களுக்கு இரக்கஞ்செய்யும்வரைக்கும், எங்கள் கண்கள் அவரை நோக்கியிருக்கிறது. 3. எங்களுக்கு இரங்கும் கர்த்தாவே, எங்களுக்கு இரங்கும்; நிந்தனையினால் மிகவும் நிறைந்திருக்கிறோம். 4. சுகஜீவிகளுடைய நிந்தனையினாலும், அகங்காரிகளுடைய இகழ்ச்சியினாலும், எங்கள் ஆத்துமா மிகவும் நிறைந்திருக்கிறது.
Chapter 124
1. மனுஷர் நமக்கு விரோதமாய் எழும்பினபோது, கர்த்தர் நமது பக்கத்திலிராவிட்டால், 2. கர்த்தர் தாமே நமது பக்கத்திலிராவிட்டால், 3. அவர்கள் கோபம் நம்மேல் எரிகையில், நம்மை உயிரோடே விழுங்கியிருப்பார்கள். 4. அப்பொழுது தண்ணீர்கள் நம்மேல் பாய்ந்து, வெள்ளங்கள் நமது ஆத்துமாவின்மேல் பெருகி, 5. கொந்தளிக்கும் ஜலங்கள் நமது ஆத்துமாவின்மேல் புரண்டுபோயிருக்கும் என்று இஸ்ரவேல் இப்பொழுது சொல்வதாக. 6. நம்மை அவர்களுடைய பற்களுக்கு இரையாக ஒப்புக்கொடாதிருக்கிற கர்த்தருக்கு ஸ்தோத்திரம். 7. வேடருடைய கண்ணிக்குத் தப்பின குருவியைப்போல நம்முடைய ஆத்துமா தப்பிற்று, கண்ணி தெறித்தது, நாம் தப்பினோம். 8. நம்முடைய சகாயம் வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தருடைய நாமத்தில் உள்ளது.
Chapter 125
1. கர்த்தரை நம்புகிறவர்கள் என்றென்றைக்கும் அசையாமல் நிலைத்திருக்கும் சீயோன் பர்வதத்தைப்போல் இருப்பார்கள். 2. பர்வதங்கள் எருசலேமைச் சுற்றிலும் இருக்குமாப்போல், கர்த்தர் இதுமுதல் என்றென்றைக்கும் தம்முடைய ஜனத்தைச் சுற்றிலும் இருக்கிறார். 3. நீதிமான்கள் அநியாயத்திற்குத் தங்கள் கைகளை நீட்டாதபடிக்கு, ஆகாமியத்தின் கொடுங்கோல் நீதிமான்களுடைய சுதந்தரத்தின்மேல் நிலைத்திராது. 4. கர்த்தாவே, நல்லவர்களுக்கும் இருதயத்தில் செம்மையானவர்களுக்கும் நன்மைசெய்யும். 5. தங்கள் கோணலான வழிகளுக்குச் சாய்கிறவர்களைக் கர்த்தர் அக்கிரமக்காரரோடே போகப்பண்ணுவார். இஸ்ரவேலுக்கோ சமாதானம் உண்டு.
Chapter 126
1. சீயோனின் சிறையிருப்பைக் கர்த்தர் திருப்பும்போது, சொப்பனம் காண்கிறவர்கள்போல் இருந்தோம். 2. அப்பொழுது நம்முடைய வாய் நகைப்பினாலும், நம்முடைய நாவு ஆனந்தசத்தத்தினாலும் நிறைந்திருந்தது; அப்பொழுது: கர்த்தர் இவர்களுக்குப் பெரிய காரியங்களைச் செய்தார் என்று புறஜாதிகளுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள். 3. கர்த்தர் நமக்குப் பெரிய காரியங்களைச் செய்தார்; இதினிமித்தம் நாம் மகிழ்ந்திருக்கிறோம். 4. கர்த்தாவே, தெற்கத்தி வெள்ளங்களைத் திருப்புவதுபோல, எங்கள் சிறையிருப்பைத் திருப்பும். 5. கண்ணீரோடே விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள். 6. அள்ளித்தூவும் விதையைச் சுமக்கிறவன் அழுதுகொண்டு போகிறான்; ஆனாலும் தான் அறுத்த அரிகளைச் சுமந்துகொண்டு கெம்பீரத்தோடே திரும்பிவருவான்.
Chapter 127
1. கர்த்தர் வீட்டைக் கட்டாராகில், அதைக் கட்டுகிறவர்களின் பிரயாசம் விருதா; கர்த்தர் நகரத்தைக் காவாராகில் காவலாளர் விழித்திருக்கிறது விருதா. 2. நீங்கள் அதிகாலையில் எழுந்து, நேரப்பட வேலையிலே தரித்து, வருத்தத்தின் அப்பத்தைச் சாப்பிடுகிறதும் விருதா; அவரே தமக்குப் பிரியமானவனுக்கு நித்திரை அளிக்கிறார். 3. இதோ, பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம், கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன். 4. வாலவயதின் குமாரர் பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள். 5. அவைகளால் தன் அம்பறாத்தூணியை நிரப்பின புருஷன் பாக்கியவான்; அவர்கள் நாணமடையாமல் ஒலிமுகவாசலில் சத்துருக்களோடே பேசுவார்கள்.
Chapter 128
1. கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளில் நடக்கிறவன் எவனோ, அவன் பாக்கியவான். 2. உன் கைகளின் பிரயாசத்தை நீ சாப்பிடுவாய்; உனக்குப் பாக்கியமும் நன்மையும் உண்டாயிருக்கும். 3. உன் மனைவி உன் வீட்டோரங்களில் கனிதரும் திராட்சக்கொடியைப்போல் இருப்பாள்; உன் பிள்ளைகள் உன் பந்தியைச் சுற்றிலும் ஒலிவமரக் கன்றுகளைப்போல் இருப்பார்கள். 4. இதோ, கர்த்தருக்குப் பயப்படுகிற மனுஷன் இவ்விதமாய் ஆசீர்வதிக்கப்படுவான். 5. கர்த்தர் சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பார்; நீ ஜீவனுள்ள நாளெல்லாம் எருசலேமின் வாழ்வைக் காண்பாய். 6. நீ உன் பிள்ளைகளின் பிள்ளைகளையும், இஸ்ரவேலுக்கு உண்டாகும் சமாதானத்தையும் காண்பாய்.
Chapter 129
1. என் சிறுவயது தொடங்கி அநேகந்தரம் என்னை நெருக்கினார்கள். 2. என் சிறுவயது தொடங்கி அநேகந்தரம் என்னை நெருக்கியும், என்னை மேற்கொள்ளாமற்போனார்கள். 3. உழுகிறவர்கள் என் முதுகின்மேல் உழுது, தங்கள் படைச்சால்களை நீளமாக்கினார்கள். 4. கர்த்தரோ நீதியுள்ளவர்; துன்மார்க்கருடைய கயிறுகளை அவர் அறுத்தார் என்று, இஸ்ரவேல் இப்பொழுது சொல்வதாக. 5. சீயோனைப் பகைக்கிற அனைவரும் வெட்கிப் பின்னிட்டுத் திரும்பக்கடவர்கள். 6. வீட்டின்மேல் முளைக்கும் புல்லுக்கு அவர்கள் ஒப்பாவார்களாக; அது வளருமுன் உலர்ந்துபோம். 7. அறுக்கிறவன் அதினால் தன் கையையும், அரிகளைக் கட்டுகிறவன் தன் மடியையும் நிரப்புவதில்லை. 8. கர்த்தருடைய ஆசீர்வாதம் உங்களுக்கு உண்டாவதாக; கர்த்தரின் நாமத்தினால் உங்களை ஆசீர்வதிக்கிறோம் என்று வழிப்போக்கர் சொல்வதுமில்லை.
Chapter 130
1. கர்த்தாவே, ஆழங்களிலிருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன். 2. ஆண்டவரே, என் சத்தத்தைக் கேளும்; என் விண்ணப்பங்களின் சத்தத்திற்கு உமது செவிகள் கவனித்திருப்பதாக. 3. கர்த்தாவே, நீர் அக்கிரமங்களைக் கவனித்திருப்பீரானால், யார் நிலைநிற்பான், ஆண்டவரே. 4. உமக்குப் பயப்படும்படிக்கு உம்மிடத்தில் மன்னிப்பு உண்டு. 5. கர்த்தருக்குக் காத்திருக்கிறேன்; என் ஆத்துமா காத்திருக்கிறது; அவருடைய வார்த்தையை நம்பியிருக்கிறேன். 6. எப்பொழுது விடியும் என்று விடியற்காலத்துக்குக் காத்திருக்கிற ஜாமக்காரரைப்பார்க்கிலும் அதிகமாய் என் ஆத்துமா ஆண்டவருக்குக் காத்திருக்கிறது. 7. இஸ்ரவேல் கர்த்தரை நம்பியிருப்பதாக; கர்த்தரிடத்தில் கிருபையும், அவரிடத்தில் திரளான மீட்பும் உண்டு. 8. அவர் இஸ்ரவேலை அதின் சகல அக்கிரமங்களினின்றும் மீட்டுக்கொள்வார்.
Chapter 131
1. கர்த்தாவே, என் இருதயம் இறுமாப்புள்ளதல்ல, என் கண்கள் மேட்டிமையுள்ளவைகளுமல்ல; பெரிய காரியங்களிலும், எனக்கு மிஞ்சின கருமங்களிலும் நான் தலையிடுகிறதுமில்லை. 2. தாயின் பால்மறந்த குழந்தையைப்போல நான் என் ஆத்துமாவை அடக்கி அமரப்பண்ணினேன்; என் ஆத்துமா பால்மறந்த குழந்தையைப்போல் இருக்கிறது. 3. இதுமுதல் என்றென்றைக்கும் இஸ்ரவேல் கர்த்தரை நம்பியிருப்பதாக.
Chapter 132
1. கர்த்தாவே, தாவீதையும் அவனுடைய சகல உபத்திரவத்தையும் நினைத்தருளும். 2. அவன்: நான் கர்த்தருக்கு ஒரு இடத்தையும், யாக்கோபின் வல்லவருக்கு ஒரு வாசஸ்தலத்தையும் காணுமட்டும், 3. என் வீடாகிய கூடாரத்தில் பிரவேசிப்பதுமில்லை, என் படுக்கையாகிய கட்டிலின்மேல் ஏறுவதுமில்லை; 4. என் கண்களுக்கு நித்திரையையும், என் இமைகளுக்கு உறக்கத்தையும் வரவிடுவதுமில்லை என்று, 5. கர்த்தருக்கு ஆணையிட்டு, யாக்கோபின் வல்லவருக்குப் பொருத்தனை பண்ணினான். 6. இதோ, நாம் எப்பிராத்தாவிலே அதின் செய்தியைக் கேட்டு, வனத்தின் வெளிகளில் அதைக் கண்டோம். 7. அவருடைய வாசஸ்தலங்களுக்குள் பிரவேசித்து, அவர் பாதபடியில் பணிவோம். 8. கர்த்தாவே, உமது வல்லமை விளங்கும் பெட்டியுடன் நீர் உமது தாபர ஸ்தலத்திற்குள் எழுந்தருளும். 9. உம்முடைய ஆசாரியர்கள் நீதியைத் தரித்து, உம்முடைய பரிசுத்தவான்கள் கெம்பீரிப்பார்களாக. 10. நீர் அபிஷேகம்பண்ணுவித்தவனின் முகத்தை உமது தாசனாகிய தாவீதினிமித்தம் புறக்கணியாதிரும். 11. உன் கர்ப்பத்தின் கனியை உன் சிங்காசனத்தின்மேல் வைப்பேன் என்றும், 12. உன் குமாரர் என் உடன்படிக்கையையும், நான் போதிக்கும் என் சாட்சிகளையும் காத்து நடந்தால், அவர்கள் குமாரரும் என்றென்றைக்கும் உன் சிங்காசனத்தில் வீற்றிருப்பார்கள் என்றும், கர்த்தர் தாவீதுக்கு உண்மையாய் ஆணையிட்டார்; அவர் தவறமாட்டார். 13. கர்த்தர் சீயோனைத் தெரிந்துகொண்டு, அது தமக்கு வாசஸ்தலமாகும்படி விரும்பினார். 14. இது என்றென்றைக்கும் நான் தங்கும் இடம்; இதை நான் விரும்பினபடியால், இங்கே வாசம்பண்ணுவேன். 15. அதின் ஆகாரத்தை நான் ஆசீர்வதித்து வருவேன்; அதின் ஏழைகளை நான் அப்பத்தினால் திருப்தியாக்குவேன். 16. அதின் ஆசாரியர்களுக்கு இரட்சிப்பை உடுத்துவேன்; அதிலுள்ள பரிசுத்தவான்கள் மிகவும் கெம்பீரிப்பார்கள். 17. அங்கே தாவீதுக்காக ஒரு கொம்பை முளைக்கப்பண்ணுவேன்; நான் அபிஷேகம்பண்ணுவித்தவனுக்காக ஒரு விளக்கை ஆயத்தம்பண்ணினேன். 18. அவன் சத்துருக்களுக்கு வெட்கத்தை உடுத்துவேன்; அவன்மீதிலோ அவன் கிரீடம் பூக்கும் என்றார்.
Chapter 133
1. இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது? 2. அது ஆரோனுடைய சிரசின்மேல் ஊற்றப்பட்டு, அவனுடைய தாடியிலே வடிகிறதும், அவனுடைய அங்கிகளின்மேல் இறங்குகிறதுமான நல்ல தைலத்துக்கும், 3. எர்மோன்மேலும், சீயோன் பர்வதங்கள்மேலும் இறங்கும் பனிக்கும் ஒப்பாயிருக்கிறது; அங்கே கர்த்தர் என்றென்றைக்கும் ஆசீர்வாதத்தையும் ஜீவனையும் கட்டளையிடுகிறார்.
Chapter 134
1. இதோ, இராக்காலங்களில் கர்த்தருடைய ஆலயத்தில் நிற்கும் கர்த்தரின் ஊழியக்காரரே, நீங்களெல்லாரும் கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள். 2. உங்கள் கைகளைப் பரிசுத்த ஸ்தலத்திற்கு நேராக எடுத்து, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள். 3. வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தர் சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பாராக.
Chapter 135
1. அல்லேலூயா, கர்த்தருடைய நாமத்தைத் துதியுங்கள்; கர்த்தரின் ஊழியக்காரரே, துதியுங்கள். 2. கர்த்தருடைய வீட்டிலும், நமது தேவனுடைய ஆலயப்பிராகாரங்களிலும் நிற்கிறவர்களே, கர்த்தரைத் துதியுங்கள். 3. கர்த்தர் நல்லவர்; அவருடைய நாமத்தைக் கீர்த்தனம்பண்ணுங்கள்; அது இன்பமானது. 4. கர்த்தர் யாக்கோபைத் தமக்காகவும், இஸ்ரவேலைத் தமக்குச் சொந்தமாகவும் தெரிந்துகொண்டார். 5. கர்த்தர் பெரியவர் என்றும், நம்முடைய ஆண்டவர் எல்லா தேவர்களுக்கும் மேலானவர் என்றும் நான் அறிவேன். 6. வானத்திலும் பூமியிலும், சமுத்திரங்களிலும், எல்லா ஆழங்களிலும், கர்த்தர் தமக்குச் சித்தமானதையெல்லாம் செய்கிறார். 7. அவர் பூமியின் கடையாந்தரங்களிலிருந்து மேகங்களை எழும்பப்பண்ணி, மழையுடன் மின்னலையும் உண்டாக்கி, காற்றைத் தமது பண்டசாலைகளிலிருந்து புறப்படப்பண்ணுகிறார். 8. அவர் எகிப்திலே மனுஷருடைய தலைப்பிள்ளைகளையும் மிருகத்தின் தலையீற்றுகளையும் அடித்தார். 9. எகிப்துதேசமே, உன் நடுவில் பார்வோன்மேலும் அவனுடைய எல்லா ஊழியக்காரர்மேலும் அடையாளங்களையும் அற்புதங்களையும் அனுப்பினார். 10. அவர் அநேகம் ஜாதிகளை அடித்து, பலத்த ராஜாக்களைக் கொன்று; 11. எமோரியரின் ராஜாவாகிய சீகோனையும், பாசானின் ராஜாவாகிய ஓகையும், கானானின் சகல ராஜ்யங்களையும் அழித்து, 12. அவர்கள் தேசத்தைத் தம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்குச் சுதந்தரமாகக் கொடுத்தார். 13. கர்த்தாவே, உம்முடைய நாமம் என்றைக்குமுள்ளது; கர்த்தாவே, உம்முடைய பிரஸ்தாபம் தலைமுறை தலைமுறைக்கும் இருக்கும். 14. கர்த்தர் தம்முடைய ஜனத்தின் நியாயத்தை விசாரித்து, தம்முடைய ஊழியக்காரர்மேல் பரிதாபப்படுவார். 15. அஞ்ஞானிகளுடைய விக்கிரகங்கள் வெள்ளியும் பொன்னும், மனுஷருடைய கைவேலையுமாயிருக்கிறது. 16. அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது, அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது. 17. அவைகளுக்குக் காதுகளிருந்தும் கேளாது, அவைகளுடைய வாயிலே சுவாசமுமில்லை. 18. அவைகளைப் பண்ணுகிறவர்களும், அவைகளை நம்புகிறவர்கள் யாவரும், அவைகளைப்போல் இருக்கிறார்கள். 19. இஸ்ரவேல் குடும்பத்தாரே, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்; ஆரோன் குடும்பத்தாரே, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள். 20. லேவி குடும்பத்தாரே, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்; கர்த்தருக்குப் பயந்தவர்களே, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள். 21. எருசலேமில் வாசம்பண்ணுகிற கர்த்தருக்கு சீயோனிலிருந்து ஸ்தோத்திரமுண்டாவதாக. அல்லேலூயா.
Chapter 136
1. கர்த்தரைத் துதியுங்கள்; அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது. 2. தேவாதி தேவனைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது. 3. கர்த்தாதி கர்த்தரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது. 4. ஒருவராய்ப் பெரிய அதிசயங்களைச் செய்கிறவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது. 5. வானங்களை ஞானமாய் உண்டாக்கினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது. 6. தண்ணீர்களுக்கு மேலே பூமியைப் பரப்பினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது. 7. பெரிய சுடர்களை உண்டாக்கினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது; 8. பகலில் ஆளச் சூரியனைப் படைத்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது. 9. இரவில் ஆளச் சந்திரனையும் நட்சத்திரங்களையும் படைத்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது; 10. எகிப்தியருடைய தலைச்சன்களைச் சங்கரித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது. 11. அவர்கள் நடுவிலிருந்து இஸ்ரவேலைப் புறப்படப்பண்ணினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது. 12. பலத்த கையினாலும் ஓங்கிய புயத்தினாலும் அதைச் செய்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது. 13. சிவந்த சமுத்திரத்தை இரண்டாகப் பிரித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது. 14. அதின் நடுவே இஸ்ரவேலைக் கடந்துபோகப்பண்ணினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது. 15. பார்வோனையும் அவன் சேனைகளையும் சிவந்த சமுத்திரத்தில் கவிழ்த்துப்போட்டவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது. 16. தம்முடைய ஜனங்களை வனாந்தரத்தில் நடத்தினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது. 17. பெரிய ராஜாக்களைச் சங்கரித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது. 18. பிரபலமான ராஜாக்களை அழித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது. 19. எமோரியரின் ராஜாவாகிய சீகோனை அழித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது. 20. பாசானின் ராஜாவாகிய ஓகை அழித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது. 21. அவர்கள் தேசத்தைச் சுதந்தரமாகத் தந்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது. 22. அதைத் தம்முடைய தாசனாகிய இஸ்ரவேலுக்குச் சுதந்தரமாகவே தந்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது. 23. நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது. 24. நம்முடைய சத்துருக்களின் கையிலிருந்து நம்மை விடுதலைபண்ணினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது. 25. மாம்சதேகமுள்ள யாவுக்கும் ஆகாரங் கொடுக்கிறவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது. 26. பரலோகத்தின் தேவனைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
Chapter 137
1. பாபிலோன் ஆறுகள் அருகே நாங்கள் உட்கார்ந்து, அங்கே சீயோனை நினைத்து அழுதோம். 2. அதின் நடுவிலிருக்கும் அலரிச்செடிகளின்மேல் எங்கள் கின்னரங்களைத் தூக்கிவைத்தோம். 3. எங்களைச் சிறைபிடித்தவர்கள் அங்கே எங்கள் பாடல்களையும், எங்களைப் பாழாக்கினவர்கள் மங்கள கீதத்தையும் விரும்பி: சீயோனின் பாட்டுகளில் சிலதை எங்களுக்குப் பாடுங்கள் என்று சொன்னார்கள். 4. கர்த்தரின் பாட்டை அந்நியதேசத்தில் நாங்கள் பாடுவதெப்படி? 5. எருசலேமே, நான் உன்னை மறந்தால் என் வலதுகை தன் தொழிலை மறப்பதாக. 6. நான் உன்னை நினையாமலும், எருசலேமை என் முக்கியமான மகிழ்ச்சியிலும் அதிகமாக எண்ணாமலும்போனால், என் நாவு என் மேல்வாயோடு ஒட்டிக்கொள்வதாக. 7. கர்த்தாவே, எருசலேமின் நாளில் ஏதோமின் புத்திரரை நினையும்; அவர்கள்: அதை இடித்துப்போடுங்கள், அஸ்திபாரமட்டும் இடித்துப்போடுங்கள் என்று சொன்னார்களே. 8. பாபிலோன் குமாரத்தியே, பாழாய்ப்போகிறவளே, நீ எங்களுக்குச் செய்தபடி உனக்குப் பதில் செய்கிறவன் பாக்கியவான். 9. உன் குழந்தைகளைப் பிடித்து, கல்லின்மேல் மோதியடிக்கிறவன் பாக்கியவான்.
Chapter 138
1. உம்மை என் முழு இருதயத்தோடும் துதிப்பேன்; தேவர்களுக்கு முன்பாக உம்மைக் கீர்த்தனம்பண்ணுவேன். 2. உமது பரிசுத்த ஆலயத்திற்கு நேராக நான் பணிந்து, உமது கிருபையினிமித்தமும் உமது உண்மையினிமித்தமும் உமது நாமத்தைத் துதிப்பேன்; உமது சகல பிரஸ்தாபத்தைப்பார்க்கிலும் உமது வார்த்தையை நீர் மகிமைப்படுத்தியிருக்கிறீர். 3. நான் கூப்பிட்ட நாளிலே எனக்கு மறுஉத்தரவு அருளினீர்; என் ஆத்துமாவிலே பெலன்தந்து என்னைத் தைரியப்படுத்தினீர்; 4. கர்த்தாவே, பூமியின் ராஜாக்களெல்லாரும் உமது வாயின் வார்த்தைகளைக் கேட்கும்போது உம்மைத் துதிப்பார்கள். 5. கர்த்தரின் மகிமை பெரிதாயிருப்பதினால், அவர்கள் கர்த்தரின் வழிகளைப் பாடுவார்கள். 6. கர்த்தர் உயர்ந்தவராயிருந்தும், தாழ்மையுள்ளவனை நோக்கிப் பார்க்கிறார்; மேட்டிமையானவனையோ தூரத்திலிருந்து அறிகிறார். 7. நான் துன்பத்தின் நடுவில் நடந்தாலும் நீர் என்னை உயிர்ப்பிப்பீர்; என் சத்துருக்களின் கோபத்துக்கு விரோதமாக உமது கையை நீட்டுவீர்; உமது வலதுகரம் என்னை இரட்சிக்கும். 8. கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார்; கர்த்தாவே, உமது கிருபை என்றுமுள்ளது; உமது கரத்தின் கிரியைகளை நெகிழவிடாதிருப்பீராக.
Chapter 139
1. கர்த்தாவே, நீர் என்னை ஆராய்ந்து, அறிந்திருக்கிறீர். 2. என் உட்காருதலையும் என் எழுந்திருக்குதலையும் நீர் அறிந்திருக்கிறீர்; என் நினைவுகளைத் தூரத்திலிருந்து அறிகிறீர். 3. நான் நடந்தாலும் படுத்திருந்தாலும் என்னைச் சூழ்ந்திருக்கிறீர்; என் வழிகளெல்லாம் உமக்குத் தெரியும். 4. என் நாவில் சொல் பிறவாததற்குமுன்னே, இதோ, கர்த்தாவே, அதையெல்லாம் நீர் அறிந்திருக்கிறீர். 5. முற்புறத்திலும் பிற்புறத்திலும் நீர் என்னை நெருக்கி, உமது கரத்தை என்மேல் வைக்கிறீர். 6. இந்த அறிவு எனக்கு மிகுந்த ஆச்சரியமும், எனக்கு எட்டாத உயரமுமாயிருக்கிறது. 7. உம்முடைய ஆவிக்கு மறைவாக எங்கே போவேன்? உம்முடைய சமுகத்தைவிட்டு எங்கே ஓடுவேன்? 8. நான் வானத்திற்கு ஏறினாலும், நீர் அங்கே இருக்கிறீர்; நான் பாதாளத்தில் படுக்கை போட்டாலும், நீர் அங்கேயும் இருக்கிறீர். 9. நான் விடியற்காலத்துச் செட்டைகளை எடுத்து, சமுத்திரத்தின் கடையாந்தரங்களிலே போய்த் தங்கினாலும், 10. அங்கேயும் உமது கை என்னை நடத்தும், உமது வலதுகரம் என்னைப் பிடிக்கும். 11. இருள் என்னை மூடிக்கொள்ளுமென்றாலும், இரவும் என்னைச் சுற்றி வெளிச்சமாயிருக்கும். 12. உமக்கு மறைவாக இருளும் அந்தகாரப்படுத்தாது; இரவும் பகலைப்போல வெளிச்சமாயிருக்கும்; உமக்கு இருளும் வெளிச்சமும் சரி. 13. நீர் என் உள்ளிந்திரியங்களைக் கைக்கொண்டிருக்கிறீர்; என் தாயின் கர்ப்பத்தில் என்னைக் காப்பாற்றினீர். 14. நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால், உம்மைத் துதிப்பேன்; உமது கிரியைகள் அதிசயமானவைகள், அது என் ஆத்துமாவுக்கு நன்றாய்த் தெரியும். 15. நான் ஒளிப்பிடத்திலே உண்டாக்கப்பட்டு, பூமியின் தாழ்விடங்களிலே விசித்திர விநோதமாய் உருவாக்கப்பட்டபோது, என் எலும்புகள் உமக்கு மறைவாயிருக்கவில்லை. 16. என் கருவை உம்முடைய கண்கள் கண்டது; என் அவயவங்களில் ஒன்றாகிலும் இல்லாதபோதே அவைகள் அனைத்தும், அவைகள் உருவேற்படும் நாட்களும், உமது புஸ்தகத்தில் எழுதியிருந்தது. 17. தேவனே, உமது ஆலோசனைகள் எனக்கு எத்தனை அருமையானவைகள்; அவைகளின் தொகை எவ்வளவு அதிகம். 18. அவைகளை நான் எண்ணப்போனால், மணலைப்பார்க்கிலும் அதிகமாம்; நான் விழிக்கும்போது இன்னும் உம்மண்டையில் இருக்கிறேன். 19. தேவனே, நீர் துன்மார்க்கனை அழித்தீரானால் நலமாயிருக்கும்; இரத்தப்பிரியரே, நீங்கள் என்னைவிட்டு அகன்றுபோங்கள். 20. அவர்கள் உம்மைக் குறித்துத் துன்மார்க்கமாய்ப் பேசுகிறார்கள்; உம்முடைய சத்துருக்கள் உமது நாமத்தை வீணாய் வழங்குகிறார்கள். 21. கர்த்தாவே, உம்மைப் பகைக்கிறவர்களை நான் பகையாமலும், உமக்கு விரோதமாய் எழும்புகிறவர்களை அருவருக்காமலும் இருப்பேனோ? 22. முழுப்பகையாய் அவர்களைப் பகைக்கிறேன்; அவர்களை எனக்குப் பகைஞராக எண்ணுகிறேன். 23. தேவனே, என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளும்; என்னைச் சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும். 24. வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து, நித்திய வழியிலே என்னை நடத்தும்.
Chapter 140
1. கர்த்தாவே, பொல்லாத மனுஷனுக்கு என்னைத் தப்புவியும்; கொடுமையுள்ளவனுக்கு என்னை விலக்கி இரட்சியும். 2. அவர்கள் தங்கள் இருதயத்தில் பொல்லாப்புகளைச் சிந்தித்து, யுத்தஞ்செய்ய நாள்தோறும் கூட்டங்கூடுகிறார்கள். 3. சர்ப்பத்தைப்போல் தங்கள் நாவைக் கூர்மையாக்குகிறார்கள்; அவர்கள் உதடுகளின்கீழ் விரியன் பாம்பின்விஷம் இருக்கிறது. (சேலா.) 4. கர்த்தாவே, துன்மார்க்கனுடைய கைகளுக்கு என்னை நீங்கலாக்கி, கொடியவனுக்கு என்னை விலக்கி இரட்சியும்; அவர்கள் என் நடைகளைக் கவிழ்க்கப்பார்க்கிறார்கள். 5. அகங்காரிகள் எனக்குக் கண்ணியையும் கயிறுகளையும் மறைவாய் வைக்கிறார்கள்; வழியோரத்திலே வலையை விரித்து, எனக்குச் சுருக்குகளை வைக்கிறார்கள். (சேலா.) 6. நான் கர்த்தரை நோக்கி: நீர் என் தேவன் என்றேன்; கர்த்தாவே, என் விண்ணப்பங்களின் சத்தத்துக்குச் செவிகொடும். 7. ஆண்டவராகிய கர்த்தாவே, என் இரட்சிப்பின் பெலனே, யுத்தநாளில் என் தலையை மூடினீர். 8. கர்த்தாவே, துன்மார்க்கனுடைய ஆசைகள் சித்தியாதபடி செய்யும்; அவன் தன்னை உயர்த்தாதபடி அவனுடைய யோசனையை நடந்தேறவொட்டாதேயும். (சேலா.) 9. என்னை வளைந்துகொள்ளுகிறவர்களுடைய உதடுகளின் தீவினைகள் அவர்கள் தலைகளையே மூடுவதாக. 10. நெருப்புத்தழல் அவர்கள்மேல் விழுவதாக; அக்கினியிலும், அவர்கள் எழுந்திருக்கக்கூடாத படுகுழிகளிலும் தள்ளப்படுவார்களாக. 11. பொல்லாத நாவுள்ளவன் பூமியிலே நிலைப்பதில்லை; கொடுமையான மனுஷனை பறக்கடிக்கப் பொல்லாப்பு அவனை வேட்டையாடும். 12. சிறுமையானவனின் வழக்கையும், எளியவர்களின் நியாயத்தையும் கர்த்தர் விசாரிப்பாரென்று அறிவேன். 13. நீதிமான்கள் உமது நாமத்தைத் துதிப்பார்கள்; செம்மையானவர்கள் உமது சமுகத்தில் வாசம்பண்ணுவார்கள்.
Chapter 141
1. கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன், என்னிடத்திற்கு வரத்தீவிரியும்; நான் உம்மை நோக்கிக் கூப்பிடுகையில், என் சத்தத்திற்குச் செவிகொடும். 2. என் விண்ணப்பம் உமக்கு முன்பாகத் தூபமாகவும், என் கையெடுப்பு அந்திப்பலியாகவும் இருக்கக்கடவது. 3. கர்த்தாவே, என் வாய்க்குக் காவல் வையும்; என் உதடுகளின் வாசலைக் காத்துக்கொள்ளும். 4. அக்கிரமஞ்செய்கிற மனுஷரோடே ஆகாமியக் கிரியைகளை நடப்பிக்கும்படி என் இருதயத்தைத் துன்மார்க்கத்திற்கு இணங்கவொட்டாதேயும்; அவர்களுடைய ருசியுள்ள பதார்த்தங்களில் ஒன்றையும் நான் சாப்பிடாமல் இருப்பேனாக. 5. நீதிமான் என்னைத் தயவாய்க்குட்டி, என்னைக் கடிந்துகொள்ளட்டும்; அது என் தலைக்கு எண்ணெயைப்போலிருக்கும்; என் தலை அதை அல்லத்தட்டுவதில்லை; அவர்கள் இக்கட்டுகளில் நான் இன்னும் ஜெபம்பண்ணுவேன். 6. அவர்களுடைய நியாயாதிபதிகள் கன்மலைச் சார்புகளிலிருந்து தள்ளுண்டுபோகிறபோது, என் வார்த்தைகள் இன்பமானவைகளென்று கேட்பார்கள். 7. பூமியின்மேல் ஒருவன் மரத்தை வெட்டிப் பிளக்கிறதுபோல, எங்கள் எலும்புகள் பாதாளவாய்க்கு நேராய்ச் சிதறடிக்கப்பட்டிருக்கிறது. 8. ஆனாலும் ஆண்டவராகிய கர்த்தாவே, என் கண்கள் உம்மை நோக்கியிருக்கிறது; உம்மை நம்பியிருக்கிறேன்; என் ஆத்துமாவை வெறுமையாக விடாதேயும். 9. அவர்கள் எனக்கு வைத்த கண்ணியின் சிக்குகளுக்கும், அக்கிரமக்காரரின் சுருக்குகளுக்கும் என்னை விலக்கி இரட்சியும். 10. துன்மார்க்கர் தங்கள் வலைகளில் அகப்படுவார்களாக; நானோ அதற்குத் தப்பிக் கடந்துபோவேன்.
Chapter 142
1. கர்த்தரை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிடுகிறேன்; கர்த்தரை நோக்கிச் சத்தமிட்டுக் கெஞ்சுகிறேன். 2. அவருக்கு முன்பாக என் சஞ்சலத்தை ஊற்றுகிறேன்; அவருக்கு முன்பாக என் நெருக்கத்தை அறிக்கையிடுகிறேன். 3. என் ஆவி என்னில் தியங்கும்போது, நீர் என் பாதையை அறிந்திருக்கிறீர்; நான் நடக்கிற வழியில் மறைவாக எனக்குக் கண்ணிவைத்தார்கள். 4. வலதுபுறமாய்க் கண்ணோக்கிப்பாரும், என்னை அறிவார் ஒருவரும் இல்லை; எனக்கு அடைக்கலமில்லாமற்போயிற்று; என் ஆத்துமாவை விசாரிப்பார் ஒருவரும் இல்லை. 5. கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; நீரே என் அடைக்கலமும், ஜீவனுள்ளோர் தேசத்திலே என் பங்குமாயிருக்கிறீர் என்றேன். 6. என் கூக்குரலுக்குச் செவிகொடும், நான் மிகவும் தாழ்த்தப்பட்டேன்; என்னைப் பின்தொடருகிறவர்களுக்கு என்னைத் தப்புவியும், அவர்கள் என்னிலும் பலவான்களாயிருக்கிறார்கள். 7. உமது நாமத்தை நான் துதிக்கும்படி, என் ஆத்துமாவைக் காவலுக்கு நீங்கலாக்கிவிடும்; எனக்கு நீர் தயவுசெய்யும்போது நீதிமான்கள் என்னைச் சூழ்ந்துகொள்ளுவார்கள்.
Chapter 143
1. கர்த்தாவே, என் ஜெபத்தைக் கேளும், என் விண்ணப்பங்களுக்குச் செவிகொடும்; உமது உண்மையின்படியும் உமது நீதியின்படியும் எனக்கு உத்தரவு அருளிச்செய்யும். 2. ஜீவனுள்ள ஒருவனும் உமக்கு முன்பாக நீதிமான் அல்லாததினாலே, அடியேனை நியாயந்தீர்க்கப் பிரவேசியாதேயும். 3. சத்துரு என் ஆத்துமாவைத் தொடர்ந்து, என் பிராணனைத் தரையோடே நசுக்கி, வெகுகாலத்துக்குமுன் மரித்தவர்கள்போல் என்னை இருளில் இருக்கப்பண்ணுகிறான். 4. என் ஆவி என்னில் தியங்குகிறது; என் இருதயம் எனக்குள் சோர்ந்துபோகிறது. 5. பூர்வநாட்களை நினைக்கிறேன், உமது செய்கைகளையெல்லாம் தியானிக்கிறேன்; உமது கரத்தின் கிரியைகளை யோசிக்கிறேன். 6. என் கைகளை உமக்கு நேராக விரிக்கிறேன்; வறண்ட நிலத்தைப்போல் என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது. (சேலா.) 7. கர்த்தாவே, சீக்கிரமாய் எனக்குச் செவிகொடும், என் ஆவி தொய்ந்துபோகிறது; நான் குழியில் இறங்குகிறவர்களுக்கு ஒப்பாகாதபடிக்கு, உமது முகத்தை எனக்கு மறையாதேயும். 8. அதிகாலையில் உமது கிருபையைக் கேட்கப்பண்ணும், உம்மை நம்பியிருக்கிறேன், நான் நடக்கவேண்டிய வழியை எனக்குக் காண்பியும்; உம்மிடத்தில் என் ஆத்துமாவை உயர்த்துகிறேன். 9. கர்த்தாவே, என் சத்துருக்களுக்கு என்னைத் தப்புவியும்; உம்மைப் புகலிடமாகக் கொள்ளுகிறேன். 10. உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குப் போதித்தருளும், நீரே என் தேவன்; உம்முடைய நல்ல ஆவி என்னைச் செம்மையான வழியிலே நடத்துவாராக. 11. கர்த்தாவே, உம்முடைய நாமத்தினிமித்தம் என்னை உயிர்ப்பியும்; உம்முடைய நீதியின்படி என் ஆத்துமாவை இடுக்கத்திற்கு நீங்கலாக்கிவிடும். 12. உம்முடைய கிருபையின்படி என் சத்துருக்களை அழித்து, என் ஆத்துமாவை ஒடுக்குகிற யாவரையும் சங்காரம்பண்ணும்; நான் உமது அடியேன்.
Chapter 144
1. என் கைகளைப் போருக்கும் என் விரல்களை யுத்தத்திற்கும் படிப்பிக்கிற என் கன்மலையாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம். 2. அவர் என் தயாபரரும், என் கோட்டையும், என் உயர்ந்த அடைக்கலமும், என்னை விடுவிக்கிறவரும், என் கேடகமும், நான் நம்பினவரும், என் ஜனங்களை எனக்குக் கீழ்ப்படுத்துகிறவருமாயிருக்கிறார். 3. கர்த்தாவே, மனுஷனை நீர் கவனிக்கிறதற்கும், மனுபுத்திரனை நீர் எண்ணுகிறதற்கும், அவன் எம்மாத்திரம்? 4. மனுஷன் மாயைக்கு ஒப்பாயிருக்கிறான்; அவன் நாட்கள் கடந்துபோகிற நிழலுக்குச் சமானம். 5. கர்த்தாவே, நீர் உமது வானங்களைத் தாழ்த்தி இறங்கி, பர்வதங்கள் புகையும்படி அவைகளைத் தொடும். 6. மின்னல்களை வரவிட்டுச் சத்துருக்களைச் சிதறடியும், உமது அம்புகளை எய்து அவர்களைக் கலங்கடியும். 7. உயரத்திலிருந்து உமது கரத்தை நீட்டி, ஜலப்பிரவாகத்துக்கு என்னை விலக்கி இரட்சியும். 8. மாயையைப் பேசும் வாயும், கள்ளத்தனமான வலதுகையும் உடைய அந்நிய புத்திரரின் கைக்கு என்னை விலக்கித் தப்புவியும். 9. கர்த்தாவே, நான் உமக்குப் புதுப்பாட்டைப் பாடுவேன்; தம்புரினாலும் பத்துநரம்பு வீணையினாலும் உம்மைக் கீர்த்தனம்பண்ணுவேன். 10. நீரே ராஜாக்களுக்கு ஜெயத்தைத் தந்து, உமதடியானாகிய தாவீதைப் பொல்லாத பட்டயத்திற்குத் தப்புவிக்கிறவர். 11. மாயையைப் பேசும் வாயும், கள்ளத்தனமான வலதுகையும் உடைய அந்நிய புத்திரரின் கைக்கு என்னை விலக்கித் தப்புவியும். 12. அப்பொழுது எங்கள் குமாரர் இளமையில் ஓங்கிவளருகிற விருட்சக்கன்றுகளைப்போலவும், எங்கள் குமாரத்திகள் சித்திரந்தீர்ந்த அரமனை மூலைக்கற்களைப்போலவும் இருப்பார்கள். 13. எங்கள் களஞ்சியங்கள் சகலவித வஸ்துக்களையும் கொடுக்கத்தக்கதாய் நிரம்பியிருக்கும்; எங்கள் கிராமங்களில் எங்கள் ஆடுகள் ஆயிரம் பதினாயிரமாய்ப் பலுகும். 14. எங்கள் எருதுகள் பலத்தவைகளாயிருக்கும்; சத்துரு உட்புகுதலும் குடியோடிப்போகுதலும் இராது; எங்கள் வீதிகளில் கூக்குரலும் உண்டாகாது. 15. இவ்விதமான சீரைப்பெற்ற ஜனம் பாக்கியமுள்ளது; கர்த்தரைத் தெய்வமாகக் கொண்டிருக்கிற ஜனம் பாக்கியமுள்ளது.
Chapter 145
1. ராஜாவாகிய என் தேவனே, உம்மை உயர்த்தி, உம்முடைய நாமத்தை எப்பொழுதும் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிப்பேன். 2. நாடோறும் உம்மை ஸ்தோத்திரித்து, எப்பொழுதும் என்றென்றைக்கும் உம்முடைய நாமத்தைத் துதிப்பேன். 3. கர்த்தர் பெரியவரும் மிகவும் புகழப்படத்தக்கவருமாயிருக்கிறார்; அவருடைய மகத்துவம் ஆராய்ந்துமுடியாது. 4. தலைமுறை தலைமுறையாக உம்முடைய கிரியைகளின் புகழ்ச்சியைச் சொல்லி, உம்முடைய வல்லமையுள்ள செய்கைகளை அறிவிப்பார்கள். 5. உம்முடைய சிறந்த மகிமைப்பிரதாபத்தையும், உம்முடைய அதிசயமான கிரியைகளையுங்குறித்துப் பேசுவேன். 6. ஜனங்கள் உம்முடைய பயங்கரமான கிரியைகளின் வல்லமையைச் சொல்லுவார்கள்; உம்முடைய மகத்துவத்தை நான் விவரிப்பேன். 7. அவர்கள் உமது மிகுந்த தயவை நினைத்து வெளிப்படுத்தி, உமது நீதியைக் கெம்பீரித்துப் பாடுவார்கள். 8. கர்த்தர் இரக்கமும் மன உருக்கமும், நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையும் உள்ளவர். 9. கர்த்தர் எல்லார்மேலும் தயவுள்ளவர்; அவர் இரக்கங்கள் அவருடைய எல்லாக் கிரியைகளின்மேலுமுள்ளது. 10. கர்த்தாவே, உம்முடைய கிரியைகளெல்லாம் உம்மைத் துதிக்கும்; உம்முடைய பரிசுத்தவான்கள் உம்மை ஸ்தோத்திரிப்பார்கள். 11. மனுபுத்திரருக்கு உமது வல்லமையுள்ள செய்கைகளையும், உமது ராஜ்யத்தின் சிறந்த மகிமைப்பிரதாபத்தையும் தெரிவிக்கும்படிக்கு; 12. உமது ராஜ்யத்தின் மகிமையை அறிவித்து, உமது வல்லமையைக் குறித்துப் பேசுவார்கள். 13. உம்முடைய ராஜ்யம் சதாகாலங்களிலுமுள்ள ராஜ்யம், உம்முடைய ஆளுகை தலைமுறை தலைமுறையாகவும் உள்ளது. 14. கர்த்தர் விழுகிற யாவரையும் தாங்கி, மடங்கடிக்கப்பட்ட யாவரையும் தூக்கிவிடுகிறார். 15. எல்லா ஜீவன்களின் கண்களும் உம்மை நோக்கிக்கொண்டிருக்கிறது; ஏற்ற வேளையிலே நீர் அவைகளுக்கு ஆகாரங்கொடுக்கிறீர். 16. நீர் உமது கையைத் திறந்து, சகல பிராணிகளின் வாஞ்சையையும் திருப்தியாக்குகிறீர். 17. கர்த்தர் தமது வழிகளிலெல்லாம் நீதியுள்ளவரும், தமது கிரியைகளிலெல்லாம் கிருபையுள்ளவருமாயிருக்கிறார். 18. தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், கர்த்தர் சமீபமாயிருக்கிறார். 19. அவர் தமக்குப் பயந்தவர்களுடைய விருப்பத்தின்படி செய்து, அவர்கள் கூப்பிடுதலைக் கேட்டு, அவர்களை இரட்சிக்கிறார். 20. கர்த்தர் தம்மில் அன்புகூருகிற யாவரையும் காப்பாற்றி, துன்மார்க்கர் யாவரையும் அழிப்பார். 21. என் வாய் கர்த்தரின் துதியைச் சொல்வதாக; மாம்சதேகமுள்ள யாவும் அவருடைய பரிசுத்த நாமத்தை எப்பொழுதும் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கக்கடவது.
Chapter 146
1. அல்லேலூயா, என் ஆத்துமாவே, கர்த்தரைத் துதி. 2. நான் உயிரோடிருக்குமட்டும் கர்த்தரைத் துதிப்பேன்; நான் உள்ளளவும் என் தேவனைக் கீர்த்தனம்பண்ணுவேன். 3. பிரபுக்களையும், இரட்சிக்கத்திராணியில்லாத மனுபுத்திரனையும் நம்பாதேயுங்கள். 4. அவனுடைய ஆவி பிரியும், அவன் தன் மண்ணுக்குத் திரும்புவான்; அந்நாளிலே அவன் யோசனைகள் அழிந்துபோம். 5. யாக்கோபின் தேவனைத் தன் துணையாகக் கொண்டிருந்து, தன் தேவனாகிய கர்த்தர்மேல் நம்பிக்கையை வைக்கிறவன் பாக்கியவான். 6. அவர் வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள யாவையும் உண்டாக்கினவர்; அவர் என்றென்றைக்கும் உண்மையைக் காக்கிறவர். 7. அவர் ஒடுக்கப்பட்டவர்களுக்கு நியாயஞ்செய்கிறார்; பசியாயிருக்கிறவர்களுக்கு ஆகாரங் கொடுக்கிறார்; கட்டுண்டவர்களைக் கர்த்தர் விடுதலையாக்குகிறார். 8. குருடரின் கண்களைக் கர்த்தர் திறக்கிறார்; மடங்கடிக்கப்பட்டவர்களைக் கர்த்தர் தூக்கிவிடுகிறார்; நீதிமான்களைக் கர்த்தர் சிநேகிக்கிறார். 9. பரதேசிகளைக் கர்த்தர் காப்பாற்றுகிறார்; அவர் திக்கற்ற பிள்ளையையும் விதவையையும் ஆதரிக்கிறார்; துன்மார்க்கரின் வழியையோ கவிழ்த்துப்போடுகிறார். 10. கர்த்தர் சதாகாலங்களிலும் அரசாளுகிறார்; சீயோனே, உன் தேவன் தலைமுறை தலைமுறையாகவும் ராஜரிகம்பண்ணுகிறார். அல்லேலூயா.
Chapter 147
1. கர்த்தரைத் துதியுங்கள்; நம்முடைய தேவனைக் கீர்த்தனம்பண்ணுகிறது நல்லது, துதித்தலே இன்பமும் ஏற்றதுமாயிருக்கிறது. 2. கர்த்தர் எருசலேமைக் கட்டுகிறார்; துரத்துண்ட இஸ்ரவேலரைக் கூட்டிச் சேர்க்கிறார். 3. இருதயம் நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிறார், அவர்களுடைய காயங்களைக் கட்டுகிறார். 4. அவர் நட்சத்திரங்களின் இலக்கத்தை எண்ணி, அவைகளுக்கெல்லாம் பேரிட்டு அழைக்கிறார். 5. நம்முடைய ஆண்டவர் பெரியவரும் மகா பெலமுள்ளவருமாயிருக்கிறார்; அவருடைய அறிவு அளவில்லாதது. 6. கர்த்தர் சாந்தகுணமுள்ளவர்களை உயர்த்துகிறார்; துன்மார்க்கரைத் தரைமட்டும் தாழ்த்துகிறார். 7. கர்த்தரைத் துதியுடன் பாடிக் கொண்டாடுங்கள்; நம்முடைய தேவனைச் சுரமண்டலத்தால் கீர்த்தனம் பண்ணுங்கள். 8. அவர் வானத்தை மேகங்களால் மூடி, பூமிக்கு மழையை ஆயத்தப்படுத்தி, மலைகளில் புல்லை முளைப்பிக்கிறார். 9. அவர் மிருகஜீவன்களுக்கும் கூப்பிடுகிற காக்கைக் குஞ்சுகளுக்கும் ஆகாரங்கொடுக்கிறார். 10. அவர் குதிரையின் பலத்தில் விருப்பமாயிரார்; வீரனுடைய கால்களில் பிரியப்படார். 11. தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள்மேல் கர்த்தர் பிரியமாயிருக்கிறார். 12. எருசலேமே, கர்த்தரை ஸ்தோத்திரி; சீயோனே, உன் தேவனைத் துதி. 13. அவர் உன் வாசல்களின் தாழ்ப்பாள்களைப் பலப்படுத்தி, உன்னிடத்திலுள்ள உன் பிள்ளைகளை ஆசீர்வதிக்கிறார். 14. அவர் உன் எல்லைகளைச் சமாதானமுள்ளவைகளாக்கி, உச்சிதமான கோதுமையினால் உன்னைத் திருப்தியாக்குகிறார். 15. அவர் தமது வார்த்தையைப் பூமியிலே அனுப்புகிறார்; அவருடைய சொல் மகா தீவிரமாய்ச் செல்லுகிறது. 16. பஞ்சைப்போல் உறைந்த மழையைத் தருகிறார்; சாம்பலைப்போல உறைந்த பனியைத் தூவுகிறார். 17. அவர் தமது கல்மழையைத் துணிக்கைகளாக அனுப்புகிறார்; அவருடைய குளிருக்கு முன்பாக நிற்பவன் யார்? 18. அவர் தமது வார்த்தையை அனுப்பி, அவைகளை உருகப்பண்ணுகிறார்; தமது காற்றை வீசும்படி செய்ய, தண்ணீர்கள் ஓடும். 19. யாக்கோபுக்குத் தம்முடைய வசனங்களையும், இஸ்ரவேலுக்குத் தமது பிரமாணங்களையும் தமது நியாயங்களையும் அறிவிக்கிறார். 20. அவர் வேறே எந்த ஜாதிக்கும் இப்படிச் செய்ததில்லை; அவருடைய நியாயங்களை அறியாமற்போகிறார்கள். அல்லேலூயா.
Chapter 148
1. அல்லேலூயா, வானங்களில் உள்ளவைகளே, கர்த்தரைத் துதியுங்கள்; உன்னதங்களில் அவரைத் துதியுங்கள். 2. அவருடைய தூதர்களே, நீங்கள் யாவரும் அவரைத் துதியுங்கள்; அவருடைய சேனைகளே, நீங்கள் யாவரும் அவரைத் துதியுங்கள். 3. சூரிய சந்திரரே, அவரைத் துதியுங்கள்; பிரகாசமுள்ள சகல நட்சத்திரங்களே, அவரைத் துதியுங்கள். 4. வானாதி வானங்களே, அவரைத் துதியுங்கள்; ஆகாயமண்டலத்தின்மேலுள்ள தண்ணீர்களே, அவரைத் துதியுங்கள். 5. அவைகள் கர்த்தரின் நாமத்தைத் துதிக்கக்கடவது; அவர் கட்டளையிட அவைகள் சிருஷ்டிக்கப்பட்டது. 6. அவர் அவைகளை என்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நிலைக்கும்படி செய்தார்; மாறாத பிரமாணத்தை அவைகளுக்கு நியமித்தார். 7. பூமியிலுள்ளவைகளே, கர்த்தரைத் துதியுங்கள்; மகாமச்சங்களே, சகல ஆழங்களே, 8. அக்கினியே, கல்மழையே, உறைந்தமழையே, மூடுபனியே, அவர் சொற்படி செய்யும் பெருங்காற்றே, 9. மலைகளே, சகல மேடுகளே, கனிமரங்களே, சகல கேதுருக்களே, 10. காட்டுமிருகங்களே, சகல நாட்டு மிருகங்களே, ஊரும் பிராணிகளே, இறகுள்ள பறவைகளே, 11. பூமியின் ராஜாக்களே, சகல ஜனங்களே, பிரபுக்களே, பூமியிலுள்ள சகல நியாயாதிபதிகளே, 12. வாலிபரே, கன்னிகைகளே, முதிர்வயதுள்ளவர்களே, பிள்ளைகளே, கர்த்தரைத் துதியுங்கள். 13. அவர்கள் கர்த்தரின் நாமத்தைத் துதிக்கக்கடவர்கள்; அவருடைய நாமம் மாத்திரம் உயர்ந்தது; அவருடைய மகிமை பூமிக்கும் வானத்திற்கும் மேலானது. 14. அவர் தம்முடைய பரிசுத்தவான்கள் யாவருக்கும், தம்மைச் சேர்ந்த ஜனமாகிய இஸ்ரவேல் புத்திரருக்கும் கொண்டாட்டமாக, தம்முடைய ஜனத்திற்கு ஒரு கொம்பை உயர்த்தினார். அல்லேலூயா.
Chapter 149
1. அல்லேலூயா, கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; பரிசுத்தவான்களின் சபையிலே அவருடைய துதி விளங்குவதாக. 2. இஸ்ரவேல் தன்னை உண்டாக்கினவரில் மகிழவும், சீயோன் குமாரர் தங்கள் ராஜாவில் களிகூரவுங்கடவர்கள். 3. அவருடைய நாமத்தை நடனத்தோடே துதித்து, தம்புரினாலும் கின்னரத்தினாலும் அவரைக் கீர்த்தனம்பண்ணக்கடவர்கள். 4. கர்த்தர் தம்முடைய ஜனத்தின்மேல் பிரியம் வைக்கிறார்; சாந்தகுணமுள்ளவர்களை இரட்சிப்பினால் அலங்கரிப்பார். 5. பரிசுத்தவான்கள் மகிமையோடே களிகூர்ந்து, தங்கள் படுக்கைகளின்மேல் கெம்பீரிப்பார்கள். 6. ஜாதிகளிடத்தில் பழிவாங்கவும், ஜனங்களைத் தண்டிக்கவும், 7. அவர்களுடைய ராஜாக்களைச் சங்கிலிகளாலும், அவர்களுடைய மேன்மக்களை இருப்பு விலங்குகளாலும் கட்டவும், எழுதப்பட்ட நியாயத்தீர்ப்பை அவர்கள்பேரில் செலுத்தவும், 8. அவர்கள் வாயில் கர்த்தரை உயர்த்தும் துதியும், அவர்கள் கையில் இருபுறமும் கருக்குள்ள பட்டயமும் இருக்கும். 9. இந்தக் கனம் அவருடைய பரிசுத்தவான்கள் யாவருக்கும் உண்டாகும். அல்லேலூயா.
Chapter 150
1. அல்லேலூயா, தேவனை அவருடைய பரிசுத்த ஸ்தலத்தில் துதியுங்கள்; அவருடைய வல்லமை விளங்கும் ஆகாய விரிவைப்பார்த்து அவரைத் துதியுங்கள். 2. அவருடைய வல்லமையுள்ள கிரியைகளுக்காக அவரைத் துதியுங்கள்; மாட்சிமை பொருந்திய அவருடைய மகத்துவத்திற்காக அவரைத் துதியுங்கள். 3. எக்காள தொனியோடே அவரைத் துதியுங்கள்; வீணையோடும் சுரமண்டலத்தோடும் அவரைத் துதியுங்கள். 4. தம்புரோடும் நடனத்தோடும் அவரைத் துதியுங்கள்; யாழோடும் தீங்குழலோடும் அவரைத் துதியுங்கள். 5. ஓசையுள்ள கைத்தாளங்களோடும் அவரைத் துதியுங்கள்; பேரோசையுள்ள கைத்தாளங்களோடும் அவரைத் துதியுங்கள். 6. சுவாசமுள்ள யாவும் கர்த்தரைத் துதிப்பதாக. அல்லேலூயா.
(April28th2012)
|