Home Churches About
 

லூக்கா

Chapter 1

1. மகா கனம்பொருந்திய தெயோப்பிலுவே, நாங்கள் முழுநிச்சயமாய் நம்புகிற சங்கதிகளை,
2. ஆரம்பமுதல் கண்ணாரக்கண்டு வசனத்தைப் போதித்தவர்கள் எங்களுக்கு ஒப்புவித்தபடியே அவைகளைக்குறித்துச் சரித்திரம் எழுத அநேகம்பேர் ஏற்பட்டபடியினால்,
3. ஆதிமுதல் எல்லாவற்றையும் திட்டமாய் விசாரித்தறிந்த நானும் உமக்கு உபதேசிக்கப்பட்ட விசேஷங்களின் நிச்சயத்தை நீர் அறியவேண்டுமென்று,
4. அவைகளை ஒழுங்காய் உமக்கு எழுதுவது எனக்கு நலமாய்த் தோன்றிற்று.
5. யூதேயாதேசத்தின் ராஜாவாகிய ஏரோதின் நாட்களில், அபியா என்னும் ஆசாரிய வகுப்பில் சகரியா என்னும் பேர்கொண்ட ஆசாரியன் ஒருவன் இருந்தான். அவன் மனைவி ஆரோனுடைய குமாரத்திகளில் ஒருத்தி, அவள் பேர் எலிசபெத்து.
6. அவர்கள் இருவரும் கர்த்தரிட்ட சகல கற்பனைகளின்படியேயும் நியமங்களின்படியேயும் குற்றமற்றவர்களாய் நடந்து, தேவனுக்கு முன்பாக நீதியுள்ளவர்களாயிருந்தார்கள்.
7. எலிசபெத்து மலடியாயிருந்தபடியினால், அவர்களுக்குப் பிள்ளையில்லாதிருந்தது; இருவரும் வயதுசென்றவர்களாயும் இருந்தார்கள்.
8. அப்படியிருக்க, அவன் தன் ஆசாரிய வகுப்பின் முறைப்படி தேவசந்நிதியிலே ஆசாரிய ஊழியம் செய்துவருகிற காலத்தில்,
9. ஆசாரிய ஊழிய முறைமையின்படி அவன் தேவாலயத்துக்குள் பிரவேசித்துத் தூபங்காட்டுகிறதற்குச் சீட்டைப் பெற்றான்.
10. தூபங்காட்டுகிற வேளையிலே ஜனங்களெல்லாரும் கூட்டமாய் வெளியே ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்கள்.
11. அப்பொழுது கர்த்தருடைய தூதன் ஒருவன் தூபபீடத்தின் வலதுபக்கத்திலே நின்று அவனுக்குத் தரிசனமானான்.
12. சகரியா அவனைக்கண்டு கலங்கி, பயமடைந்தான்.
13. தூதன் அவனை நோக்கி: சகரியாவே, பயப்படாதே, உன் வேண்டுதல் கேட்கப்பட்டது; உன் மனைவியாகிய எலிசபெத்து உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள், அவனுக்கு யோவான் என்று பேரிடுவாயாக.
14. உனக்குச் சந்தோஷமும் மகிழ்ச்சியும் உண்டாகும், அவன் பிறப்பினிமித்தம் அநேகர் சந்தோஷப்படுவார்கள்.
15. அவன் கர்த்தருக்கு முன்பாகப் பெரியவனாயிருப்பான், திராட்சரசமும் மதுவும் குடியான், தன் தாயின் வயிற்றிலிருக்கும்போதே பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருப்பான்.
16. அவன் இஸ்ரவேல் சந்ததியாரில் அநேகரை அவர்கள் தேவனாகிய கர்த்தரிடத்திற்குத் திருப்புவான்.
17. பிதாக்களுடைய இருதயங்களைப் பிள்ளைகளிடத்திற்கும், கீழ்ப்படியாதவர்களை நீதிமான்களுடைய ஞானத்திற்கும் திருப்பி, உத்தமமான ஜனத்தைக் கர்த்தருக்கு ஆயத்தப்படுத்தும்படியாக, அவன் எலியாவின் ஆவியும் பலமும் உடையவனாய் அவருக்கு முன்னே நடப்பான் என்றான்.
18. அப்பொழுது சகரியா தேவதூதனை நோக்கி: இதை நான் எதினால் அறிவேன்; நான் கிழவனாயிருக்கிறேன், என் மனைவியும் வயதுசென்றவளாயிருக்கிறாளே என்றான்.
19. தேவதூதன் அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் தேவசந்நிதானத்தில் நிற்கிற காபிரியேல் என்பவன்; உன்னுடனே பேசவும், உனக்கு இந்த நற்செய்தியை அறிவிக்கவும் அனுப்பப்பட்டு வந்தேன்;
20. இதோ, தகுந்தகாலத்திலே நிறைவேறப்போகிற என் வார்த்தைகளை நீ விசுவாசியாதபடியினால் இவைகள் சம்பவிக்கும் நாள்மட்டும் நீ பேசக்கூடாமல் ஊமையாயிருப்பாய் என்றான்.
21. ஜனங்கள் சகரியாவுக்குக் காத்திருந்து, அவன் தேவாலயத்தில் தாமதித்ததினால் ஆச்சரியப்பட்டார்கள்.
22. அவன் வெளியே வந்தபோது அவர்களிடத்தில் பேசக்கூடாமலிருந்தான்; அதினாலே தேவாலயத்தில் ஒரு தரிசனத்தைக் கண்டானென்று அறிந்தார்கள். அவனும் அவர்களுக்குச் சைகை காட்டி ஊமையாயிருந்தான்.
23. அவனுடைய ஊழியத்தின் நாட்கள் நிறைவேறினவுடனே தன் வீட்டுக்குப்போனான்.
24. அந்நாட்களுக்குப்பின்பு, அவன் மனைவியாகிய எலிசபெத்து கர்ப்பவதியாகி: ஜனங்களுக்குள்ளே எனக்கு உண்டாயிருந்த நிந்தையை நீக்கும்படியாகக் கர்த்தர் இந்த நாட்களில் என்மேல் கடாட்சம் வைத்து,
25. எனக்கு இப்படிச் செய்தருளினார் என்று சொல்லி, ஐந்து மாதம் வெளிப்படாதிருந்தாள்.
26. ஆறாம் மாதத்திலே காபிரியேல் என்னும் தூதன், கலிலேயாவிலுள்ள நாசரேத்தென்னும் ஊரில்,
27. தாவீதின் வம்சத்தானாகிய யோசேப்பு என்கிற நாமமுள்ள புருஷனுக்கு நியமிக்கப்பட்டிருந்த ஒரு கன்னிகையினிடத்திற்கு தேவனாலே அனுப்பப்பட்டான்; அந்தக் கன்னிகையின் பேர் மரியாள்.
28. அவள் இருந்த வீட்டில் தேவதூதன் பிரவேசித்து: கிருபை பெற்றவளே, வாழ்க, கர்த்தர் உன்னுடனே இருக்கிறார், ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள் என்றான்.
29. அவளோ அவனைக் கண்டு, அவன் வார்த்தையினால் கலங்கி, இந்த வாழ்த்துதல் எப்படிப்பட்டதோ என்று சிந்தித்துக்கொண்டிருந்தாள்.
30. தேவதூதன் அவளை நோக்கி: மரியாளே, பயப்படாதே; நீ தேவனிடத்தில் கிருபைபெற்றாய்.
31. இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக.
32. அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்; கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார்.
33. அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றைக்கும் அரசாளுவார்; அவருடைய ராஜ்யத்துக்கு முடிவிராது என்றான்.
34. அதற்கு மரியாள் தேவதூதனை நோக்கி: இது எப்படியாகும்? புருஷனை அறியேனே என்றாள்.
35. தேவதூதன் அவளுக்குப் பிரதியுத்தரமாக: பரிசுத்தஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும்.
36. இதோ, உனக்கு இனத்தாளாயிருக்கிற எலிசபெத்தும் தன் முதிர்வயதிலே ஒரு புத்திரனைக் கர்ப்பந்தரித்திருக்கிறாள்; மலடியென்னப்பட்ட அவளுக்கு இது ஆறாம் மாதம்.
37. தேவனாலே கூடாதகாரியம் ஒன்றுமில்லை என்றான்.
38. அதற்கு மரியாள்: இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது என்றாள். அப்பொழுது தேவதூதன் அவளிடத்திலிருந்து போய்விட்டான்.
39. அந்நாட்களில் மரியாள் எழுந்து, மலைநாட்டிலே யூதாவிலுள்ள ஒரு பட்டணத்திற்குத் தீவிரமாய்ப் போய்,
40. சகரியாவின் வீட்டுக்குள் பிரவேசித்து, எலிசபெத்தை வாழ்த்தினாள்.
41. எலிசபெத்து மரியாளுடைய வாழ்த்துதலைக் கேட்டபொழுது, அவளுடைய வயிற்றிலிருந்த பிள்ளை துள்ளிற்று; எலிசபெத்து பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு,
42. உரத்த சத்தமாய்: ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள், உன் கர்ப்பத்தின் கனியும் ஆசீர்வதிக்கப்பட்டது.
43. என் ஆண்டவருடைய தாயார் என்னிடத்தில் வந்தது எனக்கு எதினால் கிடைத்தது.
44. இதோ, நீ வாழ்த்தின சத்தம் என் காதில் விழுந்தவுடனே, என் வயிற்றிலுள்ள பிள்ளை களிப்பாய்த் துள்ளிற்று.
45. விசுவாசித்தவளே பாக்கியவதி, கர்த்தராலே அவளுக்குச் சொல்லப்பட்டவைகள் நிறைவேறும் என்றாள்.
46. அப்பொழுது மரியாள்: என் ஆத்துமா கர்த்தரை மகிமைப்படுத்துகிறது.
47. என் ஆவி என் இரட்சகராகிய தேவனில் களிகூருகிறது.
48. அவர் தம்முடைய அடிமையின் தாழ்மையை நோக்கிப்பார்த்தார்; இதோ, இதுமுதல் எல்லாச் சந்ததிகளும் என்னைப் பாக்கியவதி என்பார்கள்.
49. வல்லமையுடையவர் மகிமையானவைகளை எனக்குச் செய்தார்; அவருடைய நாமம் பரிசுத்தமுள்ளது.
50. அவருடைய இரக்கம் அவருக்குப் பயந்திருக்கிறவர்களுக்குத் தலைமுறை தலைமுறைக்குமுள்ளது.
51. தம்முடைய புயத்தினாலே பராக்கிரமஞ்செய்தார்; இருதயசிந்தையில் அகந்தையுள்ளவர்களைச் சிதறடித்தார்.
52. பலவான்களை ஆசனங்களிலிருந்து தள்ளி, தாழ்மையானவர்களை உயர்த்தினார்.
53. பசியுள்ளவர்களை நன்மைகளினால் நிரப்பி, ஐசுவரியமுள்ளவர்களை வெறுமையாய் அனுப்பிவிட்டார்.
54. நம்முடைய பிதாக்களுக்கு அவர் சொன்னபடியே, ஆபிரகாமுக்கும் அவன் சந்ததிக்கும் என்றென்றைக்கும் இரக்கஞ்செய்ய நினைத்து,
55. தம்முடைய தாசனாகிய இஸ்ரவேலை ஆதரித்தார் என்றாள்.
56. மரியாள் ஏறக்குறைய மூன்றுமாதம் அவளுடனே இருந்து, தன் வீட்டுக்குத் திரும்பிப்போனாள்.
57. எலிசபெத்துக்குப் பிரசவகாலம் நிறைவேறினபோது அவள் ஒரு புத்திரனைப் பெற்றாள்.
58. கர்த்தர் அவளிடத்தில் தம்முடைய இரக்கத்தை விளங்கப்பண்ணினாரென்று அவளுடைய அயலகத்தாரும் பந்துஜனங்களும் கேள்விப்பட்டு, அவளுடனேகூடச் சந்தோஷப்பட்டார்கள்.
59. எட்டாம்நாளிலே பிள்ளைக்கு விருத்தசேதனம் பண்ணும்படிக்கு அவர்கள் வந்து, அதின் தகப்பனுடைய நாமத்தின்படி அதற்குச் சகரியா என்று பேரிடப்போனார்கள்.
60. அப்பொழுது அதின் தாய்: அப்படியல்ல, அதற்கு யோவான் என்று பேரிடவேண்டும் என்றாள்.
61. அதற்கு அவர்கள்: உன் உறவின் முறையாரில் இந்தப் பேருள்ளவன் ஒருவனும் இல்லையே என்று சொல்லி,
62. அதின் தகப்பனை நோக்கி: இதற்கு என்ன பேரிட மனதாயிருக்கிறீர் என்று சைகையினால் கேட்டார்கள்.
63. அவன் எழுத்துப் பலகையைக் கேட்டு வாங்கி, இவன் பேர் யோவான் என்று எழுதினான்; எல்லாரும் ஆச்சரியப்பட்டார்கள்.
64. உடனே அவனுடைய வாய் திறக்கப்பட்டு, அவனுடைய நாவும் கட்டவிழ்க்கப்பட்டு, தேவனை ஸ்தோத்திரித்துப் பேசினான்.
65. அதினால் அவர்களைச்சுற்றி வாசமாயிருந்த யாவருக்கும் பயமுண்டாயிற்று. மேலும் யூதேயாவின் மலைநாடெங்கும் இந்த வர்த்தமானங்களெல்லாம் சொல்லிக்கொள்ளப்பட்டது.
66. அவைகளைக் கேள்விப்பட்டவர்களெல்லாரும் தங்கள் மனதிலே அவைகளை வைத்துக்கொண்டு, இந்தப் பிள்ளை எப்படிப்பட்டதாயிருக்குமோ என்றார்கள். கர்த்தருடைய கரம் அந்தப் பிள்ளையோடே இருந்தது.
67. அவனுடைய தகப்பனாகிய சகரியா பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு, தீர்க்கதரிசனமாக:
68. இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக.
69. அவர் நம்முடைய பிதாக்களுக்கு வாக்குத்தத்தம்பண்ணின இரக்கத்தைச் செய்வதற்கும்;
70. தம்முடைய பரிசுத்த உடன்படிக்கையை நினைத்தருளி:
71. உங்கள் சத்துருக்களின் கைகளினின்று நீங்கள் விடுதலையாக்கப்பட்டு, உயிரோடிருக்கும் நாளெல்லாம் பயமில்லாமல் எனக்கு முன்பாகப் பரிசுத்தத்தோடும் நீதியோடும் எனக்கு ஊழியஞ்செய்யக் கட்டளையிடுவேன் என்று,
72. அவர் நம்முடைய பிதாவாகிய ஆபிரகாமுக்கு இட்ட ஆணையை நிறைவேற்றுவதற்கும்;
73. ஆதிமுதற்கொண்டிருந்த தம்முடைய பரிசுத்த தீர்க்கதரிசிகளின் வாக்கினால் தாம் சொன்னபடியே,
74. தமது ஜனத்தைச் சந்தித்து மீட்டுக்கொண்டு, நம்முடைய சத்துருக்களினின்றும், நம்மைப் பகைக்கிற யாவருடைய கைகளினின்றும், நம்மை இரட்சிக்கும்படிக்கு,
75. தம்முடைய தாசனாகிய தாவீதின் வம்சத்திலே நமக்கு இரட்சணியக் கொம்பை ஏற்படுத்தினார்.
76. நீயோ பாலகனே, உன்னதமானவருடைய தீர்க்கதரிசி என்னப்படுவாய்; நீ கர்த்தருக்கு வழிகளை ஆயத்தம்பண்ணவும்,
77. நமது தேவனுடைய உருக்கமான இரக்கத்தினாலே அவருடைய ஜனத்துக்குப் பாவமன்னிப்பாகிய இரட்சிப்பைத் தெரியப்படுத்தவும், அவருக்கு முன்னாக நடந்துபோவாய்.
78. அந்தகாரத்திலும் மரண இருளிலும் உட்கார்ந்திருக்கிறவர்களுக்கு வெளிச்சம் தரவும்,
79. நம்முடைய கால்களைச் சமாதானத்தின் வழியிலே நடத்தவும், அவ்விரக்கத்தினாலே உன்னதத்திலிருந்து தோன்றிய அருணோதயம் நம்மைச் சந்தித்திருக்கிறது என்றான்.
80. அந்தப் பிள்ளை வளர்ந்து, ஆவியிலே பலங்கொண்டு, இஸ்ரவேலுக்குத் தன்னைக் காண்பிக்கும் நாள்வரைக்கும் வனாந்தரங்களிலே இருந்தான்.

Chapter 2

1. அந்நாட்களில் உலகமெங்கும் குடிமதிப்பு எழுதப்படவேண்டுமென்று அகுஸ்துராயனால் கட்டளை பிறந்தது.
2. சீரியாநாட்டிலே சிரேனியு என்பவன் தேசாதிபதியாயிருந்தபோது இந்த முதலாம் குடிமதிப்பு உண்டாயிற்று.
3. அந்தப்படி குடிமதிப்பெழுதப்படும்படிக்கு எல்லாரும் தங்கள் தங்கள் ஊர்களுக்குப் போனார்கள்.
4. அப்பொழுது யோசேப்பும், தான் தாவீதின் வம்சத்தானும் குடும்பத்தானுமாயிருந்தபடியினாலே, தனக்கு மனைவியாக நியமிக்கப்பட்டுக் கர்ப்பவதியான மரியாளுடனே குடிமதிப்பெழுதப்படும்படி,
5. கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத்தூரிலிருந்து யூதேயா நாட்டிலுள்ள பெத்லெகேம் என்னும் தாவீதின் ஊருக்குப் போனான்.
6. அவ்விடத்திலே அவர்கள் இருக்கையில், அவளுக்குப் பிரசவகாலம் நேரிட்டது.
7. அவள் தன் முதற்பேறான குமாரனைப்பெற்று, சத்திரத்திலே அவர்களுக்கு இடமில்லாதிருந்தபடியினால், பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தினாள்.
8. அப்பொழுது அந்த நாட்டிலே மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, இராத்திரியிலே தங்கள் மந்தையைக் காத்துக்கொண்டிருந்தார்கள்.
9. அவ்வேளையில் கர்த்தருடைய தூதன் அவர்களிடத்தில் வந்து நின்றான், கர்த்தருடைய மகிமை அவர்களைச் சுற்றிலும் பிரகாசித்தது; அவர்கள் மிகவும் பயந்தார்கள்.
10. தேவதூதன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்.
11. இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்.
12. பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தியிருக்கக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம் என்றான்.
13. அந்தக்ஷணமே பரமசேனையின் திரள் அந்தத் தூதனுடனே தோன்றி:
14. உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி, தேவனைத் துதித்தார்கள்.
15. தேவதூதர்கள் அவர்களை விட்டுப் பரலோகத்துக்குப் போனபின்பு, மேய்ப்பர்கள் ஒருவரையொருவர் நோக்கி: நாம் பெத்லெகேம் ஊருக்குப் போய், நடந்ததாகக் கர்த்தரால் நமக்கு அறிவிக்கப்பட்ட இந்தக் காரியத்தைப் பார்ப்போம் வாருங்கள் என்று சொல்லி,
16. தீவிரமாய் வந்து, மரியாளையும், யோசேப்பையும், முன்னணையிலே கிடத்தியிருக்கிற பிள்ளையையும் கண்டார்கள்.
17. கண்டு, அந்தப் பிள்ளையைக் குறித்துத் தங்களுக்குச் சொல்லப்பட்ட சங்கதியைப் பிரசித்தம்பண்ணினார்கள்.
18. மேய்ப்பராலே தங்களுக்குச் சொல்லப்பட்டதைக் கேட்ட யாவரும் அவைகளைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.
19. மரியாளோ அந்தச் சங்கதிகளையெல்லாம் தன் இருதயத்திலே வைத்து, சிந்தனைபண்ணினாள்.
20. மேய்ப்பர்களும் தங்களுக்குச் சொல்லப்பட்டதின்படியே கேட்டு கண்ட எல்லாவற்றிற்காகவும் தேவனை மகிமைப்படுத்தி, துதித்துக்கொண்டு திரும்பிப்போனார்கள்.
21. பிள்ளைக்கு விருத்தசேதனம் பண்ணவேண்டிய எட்டாம் நாளிலே, அது கர்ப்பத்திலே உற்பவிக்கிறதற்கு முன்னே தேவதூதனால் சொல்லப்பட்டபடியே, அதற்கு இயேசு என்று பேரிட்டார்கள்.
22. மோசேயின் நியாயப்பிரமாணத்தின்படியே அவர்களுடைய சுத்திகரிப்பின் நாட்கள் நிறைவேறினபோது,
23. முதற்பேறான எந்த ஆண்பிள்ளையும் கர்த்தருக்குப் பரிசுத்தமானதென்னப்படும் என்று கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடி அவரைக் கர்த்தருக்கென்று ஒப்புக்கொடுக்கவும்,
24. கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தில் சொல்லியிருக்கிறபடி, ஒரு ஜோடு காட்டுப்புறாவையாவது இரண்டு புறாக்குஞ்சுகளையாவது பலியாகச் செலுத்தவும், அவரை எருசலேமுக்குக் கொண்டுபோனார்கள்.
25. அப்பொழுது சிமியோன் என்னும் பேர்கொண்ட ஒரு மனுஷன் எருசலேமில் இருந்தான்; அவன் நீதியும் தேவபக்தியும் உள்ளவனாயும், இஸ்ரவேலின் ஆறுதல்வரக் காத்திருக்கிறவனாயும் இருந்தான்; அவன்மேல் பரிசுத்தஆவி இருந்தார்.
26. கர்த்தருடைய கிறிஸ்துவை நீ காணுமுன்னே மரணமடையமாட்டாய் என்று பரிசுத்த ஆவியினாலே அவனுக்கு அறிவிக்கப்பட்டுமிருந்தது.
27. அவன் ஆவியின் ஏவுதலினால் தேவாலயத்திலே வந்திருந்தான். இயேசு என்னும் பிள்ளைக்காக நியாயப்பிரமாண முறைமையின்படி செய்வதற்குத் தாய் தகப்பன்மார் அவரை உள்ளே கொண்டுவருகையில்,
28. அவன் அவரைத் தன் கைகளில் ஏந்திக்கொண்டு, தேவனை ஸ்தோத்திரித்து:
29. ஆண்டவரே, உமது வார்த்தையின்படி உமது அடியேனை இப்பொழுது சமாதானத்தோடே போகவிடுகிறீர்;
30. புறஜாதிகளுக்குப் பிரகாசிக்கிற ஒளியாகவும், உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு மகிமையாகவும்,
31. தேவரீர் சகல ஜனங்களுக்கும் முன்பாக ஆயத்தம்பண்ணின
32. உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டது என்றான்.
33. அவரைக்குறித்துச் சொல்லப்பட்டவைகளுக்காக யோசேப்பும் அவருடைய தாயாரும் ஆச்சரியப்பட்டார்கள்.
34. பின்னும் சிமியோன் அவர்களை ஆசீர்வதித்து, அவருடைய தாயாகிய மரியாளை நோக்கி: இதோ, அநேகருடைய இருதய சிந்தனைகள் வெளிப்படத்தக்கதாக, இஸ்ரவேலில் அநேகர் விழுகிறதற்கும் எழுந்திருக்கிறதற்கும், விரோதமாகப் பேசப்படும் அடையாளமாவதற்கும், இவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
35. உன் ஆத்துமாவையும் ஒரு பட்டயம் உருவிப்போகும் என்றான்.
36. ஆசேருடைய கோத்திரத்தாளும், பானுவேலின் குமாரத்தியுமாகிய அன்னாள் என்னும் ஒரு தீர்க்கதரிசி இருந்தாள்; அவள் கன்னிப்பிராயத்தில் விவாகமானதுமுதல் ஏழுவருஷம் புருஷனுடனே வாழ்ந்தவளும், அதிக வயதுசென்றவளுமாயிருந்தாள்.
37. ஏறக்குறைய எண்பத்துநாலு வயதுள்ள அந்த விதவை தேவாலயத்தை விட்டு நீங்காமல், இரவும் பகலும் உபவாசித்து, ஜெபம்பண்ணி, ஆராதனை செய்துகொண்டிருந்தாள்.
38. அவளும் அந்நேரத்திலே வந்து நின்று, கர்த்தரைப் புகழ்ந்து, எருசலேமிலே மீட்புண்டாகக் காத்திருந்த யாவருக்கும் அவரைக்குறித்துப் பேசினாள்.
39. கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தின்படி சகலத்தையும் அவர்கள் செய்து முடித்தபின்பு, கலிலேயாநாட்டிலுள்ள தங்கள் ஊராகிய நாசரேத்துக்குத் திரும்பிப்போனார்கள்.
40. பிள்ளை வளர்ந்து, ஆவியிலே பெலன்கொண்டு, ஞானத்தினால் நிறைந்தது. தேவனுடைய கிருபையும் அவர்மேல் இருந்தது.
41. அவருடைய தாய் தகப்பன்மார் வருஷந்தோறும் பஸ்கா பண்டிகையில் எருசலேமுக்குப் போவார்கள்.
42. அவருக்குப் பன்னிரண்டு வயதானபோது, அவர்கள் அந்தப் பண்டிகை முறைமையின்படி எருசலேமுக்குப்போய்,
43. பண்டிகைநாட்கள் முடிந்து, திரும்பிவருகிறபோது, பிள்ளையாகிய இயேசு எருசலேமிலே இருந்துவிட்டார்; இது அவருடைய தாயாருக்கும் யோசேப்புக்கும் தெரியாதிருந்தது.
44. அவர் பிரயாணக்காரரின் கூட்டத்திலே இருப்பாரென்று அவர்கள் நினைத்து, ஒருநாள் பிரயாணம் வந்து, உறவின் முறையாரிடத்திலும் அறிமுகமானவர்களிடத்திலும் அவரைத் தேடினார்கள்.
45. காணாததினாலே அவரைத் தேடிக்கொண்டே எருசலேமுக்குத் திரும்பிப் போனார்கள்.
46. மூன்றுநாளைக்குப் பின்பு, அவர் தேவாலயத்தில் போதகர் நடுவில் உட்கார்ந்திருக்கவும், அவர்கள் பேசுகிறதைக் கேட்கவும், அவர்களை வினாவவும் கண்டார்கள்.
47. அவர் பேசக்கேட்ட யாவரும் அவருடைய புத்தியையும் அவர் சொன்ன மாறுத்தரங்களையுங்குறித்துப் பிரமித்தார்கள்.
48. தாய் தகப்பன்மாரும் அவரைக் கண்டு ஆச்சரியப்பட்டார்கள். அப்பொழுது அவருடைய தாயார் அவரை நோக்கி: மகனே! ஏன் எங்களுக்கு இப்படிச் செய்தாய்? இதோ, உன் தகப்பனும் நானும் விசாரத்தோடே உன்னைத் தேடினோமே என்றாள்.
49. அதற்கு அவர்: நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? என் பிதாவுக்கடுத்தவைகளில் நான் இருக்கவேண்டியதென்று அறியீர்களா என்றார்.
50. தங்களுக்கு அவர் சொன்ன வார்த்தையை அவர்கள் உணர்ந்துகொள்ளவில்லை.
51. பின்பு அவர் அவர்களுடனே கூடப்போய், நாசரேத்தூரில் சேர்ந்து, அவர்களுக்குக் கீழ்ப்படிந்திருந்தார். அவருடைய தாயார் இந்தச் சங்கதிகளையெல்லாம் தன் இருதயத்திலே வைத்துக்கொண்டாள்.
52. இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும், தேவகிருபையிலும், மனுஷர் தயவிலும் அதிகமதிகமாய் விருத்தியடைந்தார்.

Chapter 3

1. திபேரியுராயன் ராஜ்யபாரம் பண்ணின பதினைந்தாம் வருஷத்திலே, பொந்தியுபிலாத்து யூதேயாவுக்குத் தேசாதிபதியாயும், ஏரோது காற்பங்கு தேசமாகிய கலிலேயாவுக்கு அதிபதியாயும், அவன் சகோதரனாகிய பிலிப்பு காற்பங்கு தேசமாகிய இத்துரேயாவுக்கும் திராகொனித்தி நாட்டிற்கும் அதிபதியாயும், லிசானியா காற்பங்கு தேசமாகிய அபிலேனேக்கு அதிபதியாயும்,
2. அன்னாவும் காய்பாவும் பிரதான ஆசாரியராயும் இருந்தகாலத்தில் வனாந்தரத்திலே சகரியாவின் குமாரனாகிய யோவானுக்குத் தேவனுடைய வார்த்தை உண்டாயிற்று.
3. அப்பொழுது: கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவருக்குப் பாதைகளைச் செவ்வைபண்ணுங்கள் என்றும்,
4. பள்ளங்களெல்லாம் நிரப்பப்படும், சகல மலைகளும் குன்றுகளும் தாழ்த்தப்படும், கோணலானவைகள் செவ்வையாகும், கரடானவைகள் சமமாகும் என்றும்,
5. மாம்சமான யாவரும் தேவனுடைய இரட்சிப்பைக் காண்பார்கள் என்றும், வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டாகும் என்று ஏசாயா தீர்க்கதரிசியின் ஆகமத்தில் எழுதியிருக்கிறபிரகாரம்,
6. அவன் யோர்தான் நதிக்கு அருகான தேசமெங்கும் போய், பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானத்தைக்குறித்துப் பிரசங்கித்தான்.
7. அவன், தன்னிடத்தில் ஞானஸ்நானம் பெறும்படிக்குப் புறப்பட்டுவந்த திரளான ஜனங்களை நோக்கி: விரியன்பாம்புக் குட்டிகளே! வருங்கோபத்துக்குத் தப்பித்துக்கொள்ள உங்களுக்கு வகைகாட்டினவன் யார்?
8. மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள்; ஆபிரகாம் எங்களுக்குத் தகப்பன் என்று உங்களுக்குள்ளே சொல்லத்தொடங்காதிருங்கள்; தேவன் இந்தக் கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவராயிருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
9. இப்பொழுதே கோடரியானது மரங்களின் வேர் அருகே வைத்திருக்கிறது; ஆகையால் நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும் என்றான்.
10. அப்பொழுது ஜனங்கள் அவனை நோக்கி: அப்படியானால் நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று கேட்டார்கள்.
11. அவர்களுக்கு அவன் பிரதியுத்தரமாக: இரண்டு அங்கிகளையுடையவன் இல்லாதவனுக்குக் கொடுக்கக்கடவன்; ஆகாரத்தை உடையவனும் அப்படியே செய்யக்கடவன் என்றான்.
12. ஆயக்காரரும் ஞானஸ்நானம் பெறவந்து, அவனை நோக்கி: போதகரே, நாங்கள் என்னசெய்யவேண்டும் என்று கேட்டார்கள்.
13. அதற்கு அவன்: உங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறதற்கு அதிகமாய் ஒன்றும் வாங்காதிருங்கள் என்றான்.
14. போர்ச்சேவகரும் அவனை நோக்கி: நாங்கள் என்னசெய்யவேண்டும் என்று கேட்டார்கள். அதற்கு அவன்: நீங்கள் ஒருவருக்கும் இடுக்கண்செய்யாமலும் பொய்யாய்க் குற்றஞ்சாட்டாமலும், உங்கள் சம்பளமே போதுமென்றும் இருங்கள் என்றான்.
15. யோவானைக்குறித்து: இவன்தான் கிறிஸ்துவோ என்று ஜனங்களெல்லாரும் எண்ணங்கொண்டு, தங்கள் இருதயங்களில் யோசனையாயிருக்கையில்,
16. யோவான் எல்லாருக்கும் பிரதியுத்தரமாக: நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானங் கொடுக்கிறேன், என்னிலும் வல்லவர் ஒருவர் வருகிறார், அவருடைய பாதரட்சைகளின் வாரை அவிழ்க்கிறதற்கும் நான் பாத்திரன் அல்ல, அவர் பரிசுத்தஆவியினாலும் அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானங் கொடுப்பார்.
17. தூற்றுக்கூடை அவர் கையில் இருக்கிறது, அவர் தமது களத்தை நன்றாய் விளக்கி, கோதுமையைத் தமது களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அவியாத அக்கினியினால் சுட்டெரிப்பார் என்றான்.
18. வேறு அநேக புத்திமதிகளையும் அவன் ஜனங்களுக்குச் சொல்லிப் பிரசங்கித்தான்.
19. காற்பங்கு தேசாதிபதியாகிய ஏரோது தன் சகோதரனான பிலிப்புவின் மனைவி ஏரோதியாளினிமித்தமாகவும், தான் செய்த மற்றப் பொல்லாங்குகளினிமித்தமாகவும், யோவானாலே கடிந்துகொள்ளப்பட்டபோது,
20. தான் செய்த மற்றெல்லாப் பொல்லாங்குகளும் தவிர, யோவானையும் காவலில் அடைத்துவைத்தான்.
21. ஜனங்களெல்லாரும் ஞானஸ்நானம் பெற்றபோது, இயேசுவும் ஞானஸ்நானம் பெற்று, ஜெபம்பண்ணுகையில், வானம் திறக்கப்பட்டது;
22. பரிசுத்த ஆவியானவர் ரூபங்கொண்டு புறாவைப்போல அவர்மேல் இறங்கினார். வானத்திலிருந்து ஒரு சத்தமும் உண்டாகி: நீர் என்னுடைய நேசகுமாரன், உம்மில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது.
23. அப்பொழுது இயேசு ஏறக்குறைய முப்பது வயதுள்ளவரானார். அவர் யோசேப்பின் குமாரனென்று எண்ணப்பட்டார். அந்த யோசேப்பு ஏலியின் குமாரன்;
24. ஏலி மாத்தாத்தின் குமாரன்; மாத்தாத் லேவியின் குமாரன்; லேவி மெல்கியின் குமாரன்; மெல்கி யன்னாவின் குமாரன்; யன்னா யோசேப்பின் குமாரன்;
25. யோசேப்பு மத்தத்தியாவின் குமாரன்; மத்தத்தியா ஆமோசின் குமாரன்; ஆமோஸ் நாகூமின் குமாரன்; நாகூம் எஸ்லியின் குமாரன்; எஸ்லி நங்காயின் குமாரன்.
26. நங்காய் மாகாத்தின் குமாரன்; மாகாத் மத்தத்தியாவின் குமாரன்; மத்தத்தியா சேமேயின் குமாரன்; சேமேய் யோசேப்பின் குமாரன்; யோசேப்பு யூதாவின் குமாரன்; யூதா யோவன்னாவின் குமாரன்.
27. யோவன்னா ரேசாவின் குமாரன்; ரேசா சொரொபாபேலின் குமாரன்; சொரொபாபேல் சலாத்தியேலின் குமாரன்; சலாத்தியேல் நேரியின் குமாரன்.
28. நேரி மெல்கியின் குமாரன்; மெல்கி அத்தியின் குமாரன்; அத்தி கோசாமின் குமாரன்; கோசாம் எல்மோதாமின் குமாரன்; எல்மோதாம் ஏரின் குமாரன்; ஏர் யோசேயின் குமாரன்.
29. யோசே எலியேசரின் குமாரன்; எலியேசர் யோரீமின் குமாரன்; யோரீம் மாத்தாத்தின் குமாரன்; மாத்தாத் லேவியின் குமாரன்.
30. லேவி சிமியோனின் குமாரன்; சிமியோன் யூதாவின் குமாரன்; யூதா யோசேப்பின் குமாரன்; யோசேப்பு யோனானின் குமாரன்; யோனான் எலியாக்கீமின் குமாரன்.
31. எலியாக்கீம் மெலெயாவின் குமாரன்; மெலெயா மயினானின் குமாரன்; மயினான் மாத்தாத்தாவின் குமாரன்; மாத்தாத்தா நாத்தானின் குமாரன்; நாத்தான் தாவீதின் குமாரன்.
32. தாவீது ஈசாயின் குமாரன்; ஈசாய் ஓபேதின் குமாரன்; ஓபேத் போவாசின் குமாரன்; போவாஸ் சல்மோனின் குமாரன்; சல்மோன் நகசோனின் குமாரன்.
33. நகசோன் அம்மினதாபின் குமாரன்; அம்மினதாப் ஆராமின் குமாரன்; ஆராம் எஸ்ரோமின் குமாரன்; எஸ்ரோம் பாரேசின் குமாரன்; பாரேஸ் யூதாவின் குமாரன்; யூதா யாக்கோபின் குமாரன்.
34. யாக்கோபு ஈசாக்கின் குமாரன்; ஈசாக்கு ஆபிரகாமின் குமாரன்; ஆபிரகாம் தேராவின் குமாரன்; தேரா நாகோரின் குமாரன்.
35. நாகோர் சேரூக்கின் குமாரன்; சேரூக் ரெகூவின் குமாரன்; ரெகூ பேலேக்கின் குமாரன்; பேலேக் ஏபேரின் குமாரன்; ஏபேர் சாலாவின் குமாரன்.
36. சாலா காயினானின் குமாரன்; காயினான் அர்ப்பகசாத்தின் குமாரன்; அர்ப்பகசாத் சேமின் குமாரன்; சேம் நோவாவின் குமாரன்; நோவா லாமேக்கின் குமாரன்.
37. லாமேக்கு மெத்தூசலாவின் குமாரன்; மெத்தூசலா ஏனோக்கின் குமாரன்; ஏனோக்கு யாரேதின் குமாரன்; யாரேத் மகலாலெயேலின் குமாரன்; மகலாலெயேல் கேனானின் குமாரன்; கேனான் ஏனோசின் குமாரன்.
38. ஏனோஸ் சேத்தின் குமாரன்; சேத் ஆதாமின் குமாரன்; ஆதாம் தேவனால் உண்டானவன்.

Chapter 4

1. இயேசு பரிசுத்த ஆவியினாலே நிறைந்தவராய் யோர்தானை விட்டுத் திரும்பி, ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டுபோகப்பட்டு,
2. நாற்பதுநாள் பிசாசினால் சோதிக்கப்பட்டார். அந்த நாட்களில் அவர் ஒன்றும் புசியாதிருந்தார்; அந்த நாட்கள் முடிந்தபின்பு அவருக்குப் பசியுண்டாயிற்று.
3. அப்பொழுது பிசாசு அவரை நோக்கி: நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல் அப்பமாகும்படி சொல்லும் என்றான்.
4. அவர் பிரதியுத்தரமாக: மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார்.
5. பின்பு பிசாசு அவரை உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் ஒரு நிமிஷத்திலே அவருக்குக் காண்பித்து:
6. இவைகள் எல்லாவற்றின்மேலுமுள்ள அதிகாரத்தையும் இவைகளின் மகிமையையும் உமக்குத் தருவேன், இவைகள் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது; எனக்கு இஷ்டமானவனுக்கு இவைகளைக் கொடுக்கிறேன்.
7. நீர் என்னைப் பணிந்துகொண்டால் எல்லாம் உம்முடையதாகும் என்று சொன்னான்.
8. இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: எனக்குப் பின்னாகப்போ சாத்தானே, உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனைசெய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்.
9. அப்பொழுது அவன் அவரை எருசலேமுக்குக் கொண்டுபோய், தேவாலயத்து உப்பரிகையின்மேல் அவரை நிறுத்தி: நீர் தேவனுடைய குமாரனேயானால், இங்கேயிருந்து தாழக்குதியும்.
10. ஏனெனில், உம்மைக் காக்கும்படிக்குத் தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக் கட்டளையிடுவார் என்றும்,
11. உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டுபோவார்கள் என்றும், எழுதியிருக்கிறது என்று சொன்னான்.
12. அதற்கு இயேசு: உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக என்று சொல்லியிருக்கிறதே என்றார்.
13. பிசாசானவன் சோதனையெல்லாம் முடித்தபின்பு, சிலகாலம் அவரை விட்டு விலகிப்போனான்.
14. பின்பு இயேசு ஆவியானவருடைய பலத்தினாலே கலிலேயாவுக்குத் திரும்பிப் போனார். அவருடைய கீர்த்தி சுற்றிலும் இருக்கிற தேசமெங்கும் பரம்பிற்று.
15. அவர்களுடைய ஜெபஆலயங்களில் அவர் உபதேசித்து, எல்லாராலும் புகழப்பட்டார்.
16. தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு அவர் வந்து, தம்முடைய வழக்கத்தின்படியே ஓய்வுநாளில் ஜெபஆலயத்திலே பிரவேசித்து, வாசிக்க எழுந்து நின்றார்.
17. அப்பொழுது ஏசாயா தீர்க்கதரிசியின் புஸ்தகம் அவரிடத்தில் கொடுக்கப்பட்டது. அவர் புஸ்தகத்தை விரித்தபோது:
18. கர்த்தருடைய ஆவியானவர் என்மேலிருக்கிறார்; தரித்திரருக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி என்னை அபிஷேகம் பண்ணினார்; இருதயம் நருங்குண்டவர்களைக் குணமாக்கவும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், குருடருக்குப் பார்வையையும் பிரசித்தப்படுத்தவும், நொறுங்குண்டவர்களை விடுதலையாக்கவும்,
19. கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தைப் பிரசித்தப்படுத்தவும், என்னை அனுப்பினார், என்று எழுதியிருக்கிற இடத்தை அவர் கண்டு,
20. வாசித்து, புஸ்தகத்தைச் சுருட்டி, பணிவிடைக்காரனிடத்தில் கொடுத்து, உட்கார்ந்தார். ஜெபஆலயத்திலுள்ள எல்லாருடைய கண்களும் அவர்மேல் நோக்கமாயிருந்தது.
21. அப்பொழுது அவர் அவர்களோடே பேசத்தொடங்கி: உங்கள் காதுகள் கேட்க இந்த வேதவாக்கியம் இன்றையத்தினம் நிறைவேறிற்று என்றார்.
22. எல்லாரும் அவருக்கு நற்சாட்சி கொடுத்து, அவருடைய வாயிலிருந்து புறப்பட்ட கிருபையுள்ள வார்த்தைகளைக் குறித்து ஆச்சரியப்பட்டு: இவன் யோசேப்பின் குமாரன் அல்லவா என்றார்கள்.
23. அவர் அவர்களை நோக்கி: வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள் என்கிற பழமொழியைச் சொல்லி, நாங்கள் கேள்விப்பட்டபடி கப்பர்நகூமூரில் உன்னால் செய்யப்பட்ட கிரியைகள் எவைகளோ அவைகளை உன் ஊராகிய இவ்விடத்திலும் செய் என்று நீங்கள் என்னுடன் சொல்லுவீர்கள் என்பது நிச்சயம்.
24. ஆனாலும் தீர்க்கதரிசி ஒருவனும் தன் ஊரிலே அங்கீகரிக்கப்படமாட்டான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
25. அன்றியும் எலியாவின் நாட்களிலே மூன்று வருஷமும் ஆறுமாதமும் வானம் அடைபட்டு, தேசமெங்கும் மிகுந்த பஞ்சம் உண்டாயிருந்தபோது, இஸ்ரவேலருக்குள் அநேகம் விதவைகள் இருந்தார்கள்.
26. ஆயினும் எலியா சீதோன் நாட்டிலுள்ள சரெப்தா (சாறிபாத்) ஊரிலிருந்த ஒரு விதவையினிடத்திற்கு அனுப்பப்பட்டானேயல்லாமல் மற்றொருத்தியினிடத்திற்கும் அனுப்பப்படவில்லை.
27. அல்லாமலும் எலிசா தீர்க்கதரிசியின் காலத்திலே இஸ்ரவேலருக்குள்ளே அநேகம் குஷ்டரோகிகள் இருந்தார்கள்; ஆயினும் சீரியா தேசத்தானாகிய நாகமானேயல்லாமல் அவர்களில் வேறொருவனும் சுத்தமாக்கப்படவில்லை என்று சத்தியத்தின்படியே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
28. ஜெபஆலயத்திலிருந்த எல்லாரும், இவைகளைக் கேட்டபொழுது, கோபமூண்டு,
29. எழுந்திருந்து, அவரை ஊருக்குப் புறம்பே தள்ளி, தங்கள் ஊர் கட்டப்பட்டிருந்த செங்குத்தான மலையின் சிகரத்திலிருந்து அவரைத் தலைகீழாய்த் தள்ளிவிடும்படிக்கு அவ்விடத்திற்குக் கொண்டுபோனார்கள்.
30. அவரோ அவர்கள் நடுவினின்று கடந்துபோய்விட்டார்.
31. பின்பு அவர் கலிலேயாவிலுள்ள கப்பர்நகூம் பட்டணத்துக்கு வந்து, ஓய்வுநாட்களில் ஜனங்களுக்குப் போதகம் பண்ணினார்.
32. அவருடைய வசனம் அதிகாரமுள்ளதாயிருந்தபடியால் அவருடைய போதகத்தைக்குறித்து அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள்.
33. ஜெபஆலயத்திலே அசுத்த ஆவி பிடித்திருந்த ஒரு மனுஷன் இருந்தான்.
34. அவன்: ஐயோ! நசரேயனாகிய இயேசுவே, எங்களுக்கும் உமக்கும் என்ன? எங்களைக் கெடுக்கவா வந்தீர்? உம்மை இன்னார் என்று அறிவேன்; நீர் தேவனுடைய பரிசுத்தர் என்று உரத்தசத்தமிட்டான்.
35. அதற்கு இயேசு: நீ பேசாமல் இவனை விட்டுப் புறப்பட்டுப் போ என்று அதை அதட்டினார்; அப்பொழுது பிசாசு அவனை ஜனங்களின் நடுவே விழத்தள்ளி, அவனுக்கு ஒரு சேதமுஞ்செய்யாமல், அவனை விட்டுப் போய்விட்டது.
36. எல்லாரும் ஆச்சரியப்பட்டு: இது என்ன வார்த்தையோ! அதிகாரத்தோடும் வல்லமையோடும் அசுத்த ஆவிகளுக்கும் கட்டளையிடுகிறார், அவைகள் புறப்பட்டுப்போகிறதே என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள்.
37. அவருடைய கீர்த்தி சுற்றிலுமிருந்த நாடுகளிலுள்ள இடங்களிலெல்லாம் பிரசித்தமாயிற்று.
38. பின்பு அவர் ஜெபஆலயத்தை விட்டுப் புறப்பட்டு, சீமோன் வீட்டில் பிரவேசித்தார், சீமோனுடைய மாமி கடும் ஜுரமாய்க் கிடந்தாள். அவளுக்காக அவரை வேண்டிக்கொண்டார்கள்.
39. அவர் அவளிடத்தில் குனிந்துநின்று, ஜுரம் நீங்கும்படி கட்டளையிட்டார், அது அவளை விட்டு நீங்கிற்று; உடனே அவள் எழுந்திருந்து அவர்களுக்குப் பணிவிடை செய்தாள்.
40. சூரியன் அஸ்தமித்தபோது, ஜனங்களெல்லாரும் தங்களுக்குள்ளே பலபல வியாதிகளால் வருத்தப்பட்டவர்களை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவர்மேலும் அவர் தம்முடைய கைகளை வைத்து, அவர்களைச் சொஸ்தமாக்கினார்.
41. பிசாசுகளும்: நீர் தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று சத்தமிட்டு, அநேகரைவிட்டுப் புறப்பட்டது. அவரைக் கிறிஸ்து என்று பிசாசுகள் அறிந்திருந்தபடியால் அவர் அவைகளைப் பேசவொட்டாமல் அதட்டினார்.
42. உதயமானபோது, அவர் புறப்பட்டு, வனாந்தரமான ஓரிடத்திற்குப் போனார். திரளான ஜனங்கள் அவரைத் தேடி, அவரிடத்தில் வந்து, தங்களை விட்டுப் போகாதபடிக்கு அவரை நிறுத்திக்கொண்டார்கள்.
43. அவரோ அவர்களை நோக்கி: நான் மற்ற ஊர்களிலும் தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கிக்கவேண்டும், இதற்காகவே அனுப்பப்பட்டேன் என்றார்.
44. அந்தப்படியே கலிலேயா நாட்டிலுள்ள ஜெபஆலயங்களில் பிரசங்கம் பண்ணிக்கொண்டுவந்தார்.

Chapter 5

1. பின்பு அவர் கெனேசரேத்துக் கடலருகே நின்றபோது, திரளான ஜனங்கள் தேவவசனத்தைக் கேட்கும்படி அவரிடத்தில் நெருங்கினார்கள்.
2. அப்பொழுது கடற்கரையிலே நின்ற இரண்டு படவுகளைக் கண்டார். மீன்பிடிக்கிறவர்கள் அவைகளை விட்டிறங்கி, வலைகளை அலைசிக்கொண்டிருந்தார்கள்.
3. அப்பொழுது அந்தப் படவுகளில் ஒன்றில் ஏறினார், அது சீமோனுடையதாயிருந்தது; அதைக் கரையிலிருந்து சற்றே தள்ளும்படி அவனைக் கேட்டுக்கொண்டு, அந்தப் படவில் உட்கார்ந்து, ஜனங்களுக்குப் போதகம்பண்ணினார்.
4. அவர் போதகம்பண்ணி முடித்த பின்பு சீமோனை நோக்கி: ஆழத்திலே தள்ளிக்கொண்டுபோய், மீன்பிடிக்கும்படி உங்கள் வலைகளைப் போடுங்கள் என்றார்.
5. அதற்குச் சீமோன்: ஐயரே, இராமுழுவதும் நாங்கள் பிரயாசப்பட்டும் ஒன்றும் அகப்படவில்லை; ஆகிலும் உம்முடைய வார்த்தையின்படியே வலையைப் போடுகிறேன் என்றான்.
6. அந்தப்படியே அவர்கள் செய்து, தங்கள் வலை கிழிந்துபோகத்தக்கதாக மிகுதியான மீன்களைப் பிடித்தார்கள்.
7. அப்பொழுது மற்றப் படவிலிருந்த கூட்டாளிகள் வந்து தங்களுக்கு உதவிசெய்யும்படிக்குச் சைகைகாட்டினார்கள்; அவர்கள் வந்து, இரண்டு படவுகளும் அமிழத்தக்கதாக நிரப்பினார்கள்.
8. சீமோன் பேதுரு அதைக் கண்டு, இயேசுவின் பாதத்தில் விழுந்து: ஆண்டவரே, நான் பாவியான மனுஷன், நீர் என்னைவிட்டுப் போகவேண்டும் என்றான்.
9. அவர்கள் திரளான மீன்களைப் பிடித்ததினிமித்தம், அவனுக்கும் அவனோடுகூட இருந்த யாவருக்கும் பிரமிப்புண்டானபடியினால் அப்படிச் சொன்னான்.
10. சீமோனுக்குக் கூட்டாளிகளான செபெதேயுவின் குமாரராகிய யாக்கோபும் யோவானும் அந்தப்படியே பிரமித்தார்கள். அப்பொழுது இயேசு சீமோனை நோக்கி: பயப்படாதே, இதுமுதல் நீ மனுஷரைப் பிடிக்கிறவனாயிருப்பாய் என்றார்.
11. அவர்கள் படவுகளைக் கரையிலே கொண்டுபோய் நிறுத்தி, எல்லாவற்றையும் விட்டு, அவருக்குப் பின்சென்றார்கள்.
12. பின்பு அவர் ஒரு பட்டணத்தில் இருக்கையில், குஷ்டரோகம் நிறைந்த ஒரு மனுஷன் இயேசுவைக் கண்டு, முகங்குப்புற விழுந்து: ஆண்டவரே, உமக்குச் சித்தமானால், என்னைச் சுத்தமாக்க உம்மாலே ஆகும் என்று அவரை வேண்டிக்கொண்டான்.
13. அவர் தமது கையை நீட்டி, அவனைத் தொட்டு: எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார்; உடனே குஷ்டரோகம் அவனை விட்டு நீங்கிற்று.
14. அவர் அவனை நோக்கி: நீ இதை ஒருவருக்கும் சொல்லாமல், போய், உன்னை ஆசாரியனுக்குக் காண்பித்து, நீ சுத்தமானதினிமித்தம், மோசே கட்டளையிட்டபடியே, அவர்களுக்குச் சாட்சியாகப் பலி செலுத்து என்று கட்டளையிட்டார்.
15. அப்படியிருந்தும் அவருடைய கீர்த்தி அதிகமாகப் பரம்பிற்று. திரளான ஜனங்கள் அவருடைய உபதேசத்தைக் கேட்பதற்கும் அவராலே தங்கள் பிணிகள் நீங்கிச் சவுக்கியமடைவதற்கும் கூடிவந்தார்கள்.
16. அவரோ வனாந்தரத்தில் தனித்துப் போய், ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்.
17. பின்பு ஒருநாள் அவர் உபதேசித்துக்கொண்டிருக்கிறபோது, கலிலேயா யூதேயா நாடுகளிலுள்ள சகல கிராமங்களிலும், எருசலேம் நகரத்திலுமிருந்து வந்த பரிசேயரும் நியாயசாஸ்திரிகளும் உட்கார்ந்திருந்தார்கள்; அப்பொழுது பிணியாளிகளைக் குணமாக்கத்தக்கதாகக் கர்த்தருடைய வல்லமை விளங்கிற்று.
18. அப்பொழுது சில மனுஷர் திமிர்வாதக்காரன் ஒருவனைப் படுக்கையோடே எடுத்துக்கொண்டுவந்து, அவனை உள்ளே கொண்டுபோகவும் அவர் முன்பாக வைக்கவும் வகைதேடினார்கள்.
19. ஜனக்கூட்டம் மிகுதியாயிருந்தபடியால் அவனை உள்ளே கொண்டுபோகிறதற்கு வகைகாணாமல், வீட்டின்மேல் ஏறி, தட்டோடுகள் வழியாய் ஜனங்களின் மத்தியில் இயேசுவுக்கு முன்பாக அவனைப் படுக்கையோடே இறக்கினார்கள்.
20. அவர்களுடைய விசுவாசத்தை அவர் கண்டு, திமிர்வாதக்காரனை நோக்கி: மனுஷனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார்.
21. அப்பொழுது வேதபாரகரும் பரிசேயரும் யோசனைபண்ணி, தேவதூஷணம் சொல்லுகிற இவன் யார்? தேவன் ஒருவரேயன்றிப் பாவங்களை மன்னிக்கத்தக்கவர் யார் என்றார்கள்.
22. இயேசு அவர்கள் சிந்தனைகளை அறிந்து, அவர்களை நோக்கி: உங்கள் இருதயங்களில் நீங்கள் சிந்திக்கிறதென்ன?
23. உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்று சொல்வதோ, எழுந்து நடவென்று சொல்வதோ, எது எளிது?
24. பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டென்பதை நீங்கள் அறியவேண்டும் என்று சொல்லி, திமிர்வாதக்காரனை நோக்கி: நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டுக்குப் போ என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
25. உடனே அவன் அவர்களுக்கு முன்பாக எழுந்து, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு, தேவனை மகிமைப்படுத்தி, தன் வீட்டுக்குப் போனான்.
26. அதினாலே எல்லாரும் ஆச்சரியப்பட்டு, தேவனை மகிமைப்படுத்தினார்கள்; அல்லாமலும், அவர்கள் பயம் நிறைந்தவர்களாகி, அதிசயமான காரியங்களை இன்று கண்டோம் என்றார்கள்.
27. இவைகளுக்குப் பின்பு, அவர் புறப்பட்டு, ஆயத்துறையில் உட்கார்ந்திருந்த லேவி என்னும் பேருடைய ஒரு ஆயக்காரனைக் கண்டு: எனக்குப் பின்சென்று வா என்றார்.
28. அவன் எல்லாவற்றையும் விட்டு, எழுந்து, அவருக்குப் பின்சென்றான்.
29. அந்த லேவி என்பவன் தன் வீட்டிலே அவருக்குப் பெரிய விருந்துபண்ணினான். அநேக ஆயக்காரரும் மற்றவர்களும் அவர்களோடேகூடப் பந்தியிருந்தார்கள்.
30. வேதபாரகரும் பரிசேயரும் அவருடைய சீஷருக்கு விரோதமாக முறுமுறுத்து: நீங்கள் ஆயக்காரரோடும் பாவிகளோடும் போஜனபானம்பண்ணுகிறதென்னவென்று கேட்டார்கள்.
31. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை.
32. நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்கவந்தேன் என்றார்.
33. பின்பு அவர்கள் அவரை நோக்கி: யோவானுடைய சீஷர் அநேகந்தரம் உபவாசித்து ஜெபம்பண்ணிக்கொண்டு வருகிறார்கள், பரிசேயருடைய சீஷரும் அப்படியே செய்கிறார்கள், உம்முடைய சீஷர் போஜனபானம்பண்ணுகிறார்களே, அதெப்படியென்று கேட்டார்கள்.
34. அதற்கு அவர்: மணவாளன் தங்களோடிருக்கையில் மணவாளனுடைய தோழர்களை நீங்கள் உபவாசிக்கச் செய்யக்கூடுமா?
35. மணவாளன் அவர்களை விட்டு எடுபடும் நாட்கள் வரும், அந்த நாட்களிலே உபவாசிப்பார்கள் என்றார்.
36. அவர்களுக்கு ஒரு உவமையையும் சொன்னார்: ஒருவனும் புதிய வஸ்திரத்துண்டைப் பழைய வஸ்திரத்தின்மேல் போட்டு இணைக்கமாட்டான், இணைத்தால் புதியது பழையதைக் கிழிக்கும்; புதிய வஸ்திரத்துண்டு பழைய வஸ்திரத்துக்கு ஒவ்வாது.
37. ஒருவனும் புது திராட்சரசத்தைப் பழந்துருத்திகளில் வார்த்துவைக்கமாட்டான்; வார்த்துவைத்தால் புதுரசம் துருத்திகளைக் கிழித்துப்போடும், இரசமும் சிந்திப்போம், துருத்திகளும் கெட்டுப்போம்.
38. புது ரசத்தைப் புது துருத்திகளில் வார்த்துவைக்கவேண்டும், அப்பொழுது இரண்டும் பத்திரப்பட்டிருக்கும்.
39. அன்றியும் ஒருவனும் பழைய ரசத்தைக் குடித்தவுடனே புது ரசத்தை விரும்பமாட்டான், பழைய ரசமே நல்லதென்று சொல்லுவான் என்றார்.

Chapter 6

1. பஸ்காபண்டிகையின் இரண்டாம் நாளைக்குப் பின்வந்த முதலாம் ஓய்வுநாளிலே, அவர் பயிர்வழியே நடந்துபோகையில், அவருடைய சீஷர்கள் கதிர்களைக் கொய்து, கைகளினால் நிமிட்டித் தின்றார்கள்.
2. பரிசேயரில் சிலர் அவர்களை நோக்கி: ஓய்வுநாளில் செய்யத்தகாததை நீங்கள் ஏன் செய்கிறீர்கள் என்று கேட்டார்கள்.
3. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: தாவீதும் அவனோடிருந்தவர்களும் பசியாயிருந்தபோது செய்ததை நீங்கள் வாசிக்கவில்லையா? அவன் தேவனுடைய வீட்டில் பிரவேசித்து, ஆசாரியர் மாத்திரமே தவிர வேறொருவரும் புசிக்கத்தகாத தேவசமுகத்து அப்பங்களைக் கேட்டு வாங்கி,
4. தான் புசித்ததுமன்றி, தன்னுடனே கூட இருந்தவர்களுக்கும் கொடுத்தானே என்று சொன்னார்.
5. மேலும் மனுஷகுமாரன் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறார் என்றார்.
6. வேறொரு ஓய்வுநாளிலே, அவர் ஜெபஆலயத்தில் பிரவேசித்து உபதேசித்தார். அங்கே சூம்பின வலதுகையையுடைய ஒரு மனுஷன் இருந்தான்.
7. அப்பொழுது வேதபாரகரும் பரிசேயரும் அவரிடத்தில் குற்றம் பிடிக்கும்படி, ஓய்வுநாளில் சொஸ்தமாக்குவாரோ என்று அவர்மேல் நோக்கமாயிருந்தார்கள்.
8. அவர்களுடைய சிந்தனைகளை அவர் அறிந்து, சூம்பின கையையுடைய மனுஷனை நோக்கி: நீ எழுந்து, நடுவே நில் என்றார். அவன் எழுந்து நின்றான்.
9. அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: நான் உங்களிடத்தில் ஒன்று கேட்கிறேன்; ஓய்வுநாட்களில் நன்மை செய்வதோ, தீமை செய்வதோ, ஜீவனைக் காப்பதோ, அழிப்பதோ, எது நியாயம் என்று கேட்டு,
10. அவர்களெல்லாரையும் சுற்றிப் பார்த்து, அந்த மனுஷனை நோக்கி: உன் கையை நீட்டு என்றார். அப்படியே அவன் தன் கையை நீட்டினான், உடனே அவன் கை மறுகையைப்போலச் சொஸ்தமாயிற்று.
11. அவர்களோ மூர்க்கவெறிகொண்டு, இயேசுவை என்ன செய்யலாமென்று ஒருவரோடொருவர் ஆலோசித்தார்கள்.
12. அந்நாட்களிலே, அவர் ஜெபம்பண்ணும்படி ஒரு மலையின்மேல் ஏறி, இராமுழுவதும் தேவனை நோக்கி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்.
13. பொழுது விடிந்தபோது, அவர் தம்முடைய சீஷர்களை வரவழைத்து, அவர்களில் பன்னிரண்டுபேரைத் தெரிந்துகொண்டு, அவர்களுக்கு அப்போஸ்தலர் என்று பேரிட்டார்.
14. அவர்கள் யாரெனில், பேதுரு என்று தாம் பேரிட்ட சீமோன், அவன் சகோதரனாகிய அந்திரேயா, யாக்கோபு, யோவான், பிலிப்பு, பற்தொலொமேயு,
15. மத்தேயு, தோமா, அல்பேயுவின் குமாரனாகிய யாக்கோபு, செலோத்தே என்னப்பட்ட சீமோன்,
16. யாக்கோபின் சகோதரனாகிய யூதா, துரோகியான யூதாஸ்காரியோத்து என்பவர்களே.
17. பின்பு அவர் அவர்களுடனேகூட இறங்கி, சமனான ஒரு இடத்திலே நின்றார். அங்கே அவருடைய சீஷரில் அநேகம்பேரும் அவருடைய உபதேசத்தைக் கேட்கும்படிக்கும், தங்கள் வியாதிகளினின்று குணமாக்கப்படும்படிக்கும், யூதேயாதேசத்துத் திசைகள் யாவற்றிலிருந்தும், எருசலேம் நகரத்திலிருந்தும், தீரு சீதோன் பட்டணங்கள் இருக்கிற கடலோரத்திலிருந்தும் வந்தவர்களாகிய திரளான ஜனங்களும் இருந்தார்கள்.
18. அசுத்த ஆவிகளால் வாதிக்கப்பட்டவர்களும் வந்து, ஆரோக்கியமடைந்தார்கள்.
19. அவரிடத்திலிருந்து வல்லமை புறப்பட்டு எல்லாரையும் குணமாக்கினபடியினாலே, ஜனங்கள் யாவரும் அவரைத் தொடும்படிக்கு வகைதேடினார்கள்.
20. அப்பொழுது அவர் தம்முடைய சீஷர்களை நோக்கிப்பார்த்து: தரித்திரராகிய நீங்கள் பாக்கியவான்கள்; தேவனுடைய ராஜ்யம் உங்களுடையது.
21. இப்பொழுது பசியாயிருக்கிற நீங்கள் பாக்கியவான்கள்; திருப்தியடைவீர்கள். இப்பொழுது அழுகிற நீங்கள் பாக்கியவான்கள்; இனி நகைப்பீர்கள்.
22. மனுஷகுமாரன் நிமித்தமாக ஜனங்கள் உங்களைப் பகைத்து, உங்களைப் புறம்பாக்கி, உங்களை நிந்தித்து, உங்கள் நாமத்தைப் பொல்லாததென்று தள்ளிவிடும்போது நீங்கள் பாக்கியவான்களாயிருப்பீர்கள்.
23. அந்நாளிலே நீங்கள் சந்தோஷப்பட்டுக் களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்; அவர்களுடைய பிதாக்கள் தீர்க்கதரிசிகளுக்கும் அப்படியே செய்தார்கள்.
24. ஐசுவரியவான்களாகிய உங்களுக்கு ஐயோ; உங்கள் ஆறுதலை நீங்கள் அடைந்து தீர்ந்தது.
25. திருப்தியுள்ளவர்களாயிருக்கிற உங்களுக்கு ஐயோ; பசியாயிருப்பீர்கள். இப்பொழுது நகைக்கிற உங்களுக்கு ஐயோ; இனி துக்கப்பட்டு அழுவீர்கள்.
26. எல்லா மனுஷரும் உங்களைக் குறித்துப் புகழ்ச்சியாய்ப் பேசும்போது உங்களுக்கு ஐயோ; அவர்கள் பிதாக்கள் கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கும் அப்படியே செய்தார்கள்.
27. எனக்குச் செவிகொடுக்கிற உங்களுக்கு நான் சொல்லுகிறேன்: உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மைசெய்யுங்கள்.
28. உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காக ஜெபம் பண்ணுங்கள்.
29. உன்னை ஒரு கன்னத்தில் அறைகிறவனுக்கு மறு கன்னத்தையும் கொடு; உன் அங்கியை எடுத்துக்கொள்ளுகிறவனுக்கு உன் வஸ்திரத்தையும் எடுத்துக்கொள்ளத் தடைபண்ணாதே.
30. உன்னிடத்தில் கேட்கிற எவனுக்கும் கொடு; உன்னுடையதை எடுத்துக் கொள்ளுகிறவனிடத்தில் அதைத் திரும்பக் கேளாதே.
31. மனுஷர் உங்களுக்கு எப்படிச் செய்ய வேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அப்படியே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்.
32. உங்களைச் சிநேகிக்கிறவர்களையே நீங்கள் சிநேகித்தால், உங்களுக்குப் பலன் என்ன? பாவிகளும் தங்களைச் சிநேகிக்கிறவர்களைச் சிநேகிக்கிறார்களே.
33. உங்களுக்கு நன்மைசெய்கிறவர்களுக்கே நீங்கள் நன்மைசெய்தால், உங்களுக்குப் பலன் என்ன? பாவிகளும் அப்படிச் செய்கிறார்களே.
34. திரும்பக் கொடுப்பார்களென்று நம்பி நீங்கள் கடன்கொடுத்தால் உங்களுக்குப் பலன் என்ன? திரும்பத் தங்களுக்குக் கொடுக்கப்படும்படியாகப் பாவிகளும் பாவிகளுக்குக் கடன்கொடுக்கிறார்களே.
35. உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள், நன்மைசெய்யுங்கள், கைம்மாறு கருதாமல் கடன் கொடுங்கள்; அப்பொழுது உங்கள் பலன் மிகுதியாயிருக்கும், உன்னதமானவருக்கு நீங்கள் பிள்ளைகளாயிருப்பீர்கள்; அவர் நன்றியறியாதவர்களுக்கும் துரோகிகளுக்கும் நன்மை செய்கிறாரே.
36. ஆகையால் உங்கள் பிதா இரக்கமுள்ளவராயிருக்கிறதுபோல, நீங்களும் இரக்கமுள்ளவர்களாயிருங்கள்.
37. மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்; அப்பொழுது நீங்களும் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதிருப்பீர்கள்; மற்றவர்களை ஆக்கினைக்குள்ளாகும்படி தீர்க்காதிருங்கள், அப்பொழுது நீங்களும் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதிருப்பீர்கள்; விடுதலைபண்ணுங்கள், அப்பொழுது நீங்களும் விடுதலைபண்ணப்படுவீர்கள்.
38. கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து, உங்கள் மடியிலே போடுவார்கள்; நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும் என்றார்.
39. பின்னும் அவர் ஒரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: குருடனுக்குக் குருடன் வழிகாட்டக்கூடுமோ? இருவரும் பள்ளத்தில் விழுவார்கள் அல்லவா?
40. சீஷன் தன் குருவுக்கு மேற்பட்டவனல்ல, தேறினவன் எவனும் தன் குருவைப்போலிருப்பான்.
41. நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன?
42. அல்லது நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரனை நோக்கி: சகோதரனே, நான் உன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போடட்டும் என்று நீ சொல்வதெப்படி? மாயக்காரனே! முன்பு உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப்போடு, பின்பு உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகைபார்ப்பாய்.
43. நல்ல மரமானது கெட்ட கனி கொடாது, கெட்ட மரமானது நல்ல கனி கொடாது.
44. அந்தந்த மரம் அதனதன் கனியினால் அறியப்படும்; முட்செடிகளில் அத்திப்பழங்களைப் பறிக்கிறதுமில்லை, நெருஞ்சிச்செடியில் திராட்சப்பழங்களைப் பறிக்கிறதுமில்லை.
45. நல்ல மனுஷன் தன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லதை எடுத்துக் காட்டுகிறான்; பொல்லாத மனுஷன் தன் இருதயமாகிய பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாததை எடுத்துக்காட்டுகிறான்; இருதயத்தின் நிறைவினால் அவனவன் வாய் பேசும்.
46. என்னை ஆண்டவரே! ஆண்டவரே! என்று நீங்கள் சொல்லியும், நான் சொல்லுகிறபடி நீங்கள் செய்யாமற்போகிறதென்ன?
47. என்னிடத்தில் வந்து, என் வார்த்தைகளைக் கேட்டு, அவைகளின்படி செய்கிறவன் யாருக்கு ஒப்பாயிருக்கிறானென்று உங்களுக்குக் காண்பிப்பேன்.
48. ஆழமாய்த் தோண்டி, கற்பாறையின்மேல் அஸ்திபாரம் போட்டு, வீடுகட்டுகிற மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறான்; பெருவெள்ளம் வந்து, நீரோட்டம் அந்த வீட்டின்மேல் மோதியும், அதை அசைக்கக் கூடாமற்போயிற்று; ஏனென்றால் அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது.
49. என் வார்த்தைகளைக் கேட்டும் அவைகளின்படி செய்யாதவனோ அஸ்திபாரமில்லாமல் மண்ணின்மேல் வீடுகட்டினவனுக்கு ஒப்பாயிருக்கிறான்; நீரோட்டம் அதின்மேல் மோதினவுடனே அது விழுந்தது; விழுந்து முழுவதும் அழிந்தது என்றார்.

Chapter 7

1. அவர் தம்முடைய வார்த்தைகளையெல்லாம் ஜனங்களுடைய காதுகள் கேட்கும்படி சொல்லி முடித்தபின்பு, கப்பர்நகூமுக்குப் போனார்.
2. அங்கே நூற்றுக்கு அதிபதியாகிய ஒருவனுக்குப் பிரியமான வேலைக்காரன் வியாதிப்பட்டு மரண அவஸ்தையாயிருந்தான்.
3. அவன் இயேசுவைக்குறித்துக் கேள்விப்பட்டபோது, அவர் வந்து தன் வேலைக்காரனைக் குணமாக்கவேண்டுமென்று, அவரை வேண்டிக்கொள்ளும்படி யூதருடைய மூப்பரை அவரிடத்தில் அனுப்பினான்.
4. அவர்கள் இயேசுவினிடத்தில் வந்து, அவரைக் கருத்தாய் வேண்டிக்கொண்டு: நீர் இந்தத் தயவுசெய்கிறதற்கு அவன் பாத்திரனாயிருக்கிறான்.
5. அவன் நம்முடைய ஜனத்தை நேசிக்கிறான், நமக்கு ஒரு ஜெபஆலயத்தையும் கட்டினான் என்றார்கள்.
6. அப்பொழுது இயேசு அவர்களுடனே கூடப்போனார். வீட்டுக்குச் சமீபமானபோது, நூற்றுக்கு அதிபதி தன் சிநேகிதரை நோக்கி: நீங்கள் அவரிடத்தில் போய், ஆண்டவரே! நீர் வருத்தப்படவேண்டாம்; நீர் என் வீட்டு வாசலுக்குள் பிரவேசிக்க நான் பாத்திரன் அல்ல;
7. நான் உம்மிடத்தில் வரவும் என்னைப் பாத்திரனாக எண்ணவில்லை; ஒரு வார்த்தைமாத்திரம் சொல்லும், அப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்தமாவான்.
8. நான் அதிகாரத்துக்குக் கீழ்ப்பட்டவனாயிருந்தும், எனக்குக் கீழ்ப்பட்டிருக்கிற சேவகருமுண்டு; நான் ஒருவனைப் போவென்றால் போகிறான், மற்றொருவனை வாவென்றால் வருகிறான்; என் வேலைக்காரனை, இதைச் செய்யென்றால் செய்கிறான் என்று நான் சொன்னதாகச் சொல்லுங்கள் என்று அவர்களை அனுப்பினான்.
9. இயேசு இவைகளைக் கேட்டு அவனைக் குறித்து ஆச்சரியப்பட்டு, திரும்பி, தமக்குப் பின்செல்லுகிற திரளான ஜனங்களை நோக்கி: இஸ்ரவேலருக்குள்ளும் நான் இப்படிப்பட்ட விசுவாசத்தைக் காணவில்லை என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
10. அனுப்பப்பட்டவர்கள் வீட்டுக்குத் திரும்பிவந்தபோது, வியாதியாய்க் கிடந்த வேலைக்காரன் சுகமடைந்திருக்கிறதைக் கண்டார்கள்.
11. மறுநாளிலே அவர் நாயீன் என்னும் ஊருக்குப் போனார்; அவருடைய சீஷர் அநேகரும் திரளான ஜனங்களும் அவருடனேகூடப் போனார்கள்.
12. அவர் ஊரின் வாசலுக்குச் சமீபித்தபோது, மரித்துப்போன ஒருவனை அடக்கம்பண்ணும்படி கொண்டுவந்தார்கள்; அவன் தன் தாய்க்கு ஒரே மகனாயிருந்தான். அவளோ கைம்பெண்ணாயிருந்தாள்; ஊராரில் வெகு ஜனங்கள் அவளுடனேகூட வந்தார்கள்.
13. கர்த்தர் அவளைப் பார்த்து, அவள்மேல் மனதுருகி: அழாதே என்று சொல்லி,
14. கிட்டவந்து, பாடையைத் தொட்டார்; அதைச் சுமந்தவர்கள் நின்றார்கள்; அப்பொழுது அவர்: வாலிபனே, எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
15. மரித்தவன் எழுந்து உட்கார்ந்து, பேசத்தொடங்கினான். அவனை அவன் தாயினிடத்தில் ஒப்புவித்தார்.
16. எல்லாரும் பயமடைந்து: மகா தீர்க்கதரிசியானவர் நமக்குள்ளே தோன்றியிருக்கிறார் என்றும், தேவன் தமது ஜனங்களைச் சந்தித்தார் என்றும் சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினார்கள்.
17. இந்தச் செய்தி யூதேயா தேசமுழுவதிலும் சுற்றியிருக்கிற திசைகள் யாவற்றிலும் பிரசித்தமாயிற்று.
18. இவைகளையெல்லாம் யோவானுடைய சீஷர்கள் அவனுக்கு அறிவித்தார்கள். அப்பொழுது யோவான் தன் சீஷரில் இரண்டுபேரை அழைத்து,
19. நீங்கள் இயேசுவினிடத்திற்குப் போய்: வருகிறவர் நீர்தானா? அல்லது வேறொருவர் வரக் காத்திருக்கவேண்டுமா? என்று கேளுங்கள் என்று சொல்லி அனுப்பினான்.
20. அந்தப்படி அவர்கள் அவரிடத்தில் வந்து: வருகிறவர் நீர்தானா? அல்லது வேறொருவர் வரக் காத்திருக்கவேண்டுமா? என்று கேட்கும்படி யோவான்ஸ்நானன் எங்களை உம்மிடத்திற்கு அனுப்பினார் என்றார்கள்.
21. அந்தச் சமயத்திலே நோய்களையும் கொடிய வியாதிகளையும் பொல்லாத ஆவிகளையும் கொண்டிருந்த அநேகரை அவர் குணமாக்கி, அநேகங் குருடருக்குப் பார்வையளித்தார்.
22. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் போய், கண்டவைகளையும் கேட்டவைகளையும் யோவானுக்கு அறிவியுங்கள்; குருடர் பார்வையடைகிறார்கள், சப்பாணிகள் நடக்கிறார்கள், குஷ்டரோகிகள் சுத்தமாகிறார்கள், செவிடர் கேட்கிறார்கள், மரித்தோர் எழுந்திருக்கிறார்கள், தரித்திரருக்குச் சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுகிறது.
23. என்னிடத்தில் இடறலடையாதிருக்கிறவன் எவனோ அவன் பாக்கியவான் என்றார்.
24. யோவானுடைய தூதர்கள் போனபின்பு அவர் யோவானைக்குறித்து ஜனங்களுக்குச் சொன்னது என்னவென்றால்: எதைப்பார்க்க வனாந்தரத்திற்குப் போனீர்கள்? காற்றினால் அசையும் நாணலையோ?
25. அல்லவென்றால், எதைப்பார்க்கப் போனீர்கள்? மெல்லிய வஸ்திரந்தரித்த மனுஷனையோ? அலங்கார வஸ்திரந்தரித்துச் செல்வமாய் வாழ்கிறவர்கள் அரசர் மாளிகைகளிலே இருக்கிறார்கள்.
26. அல்லவென்றால், எதைப்பார்க்கப் போனீர்கள்? தீர்க்கதரிசியையோ? ஆம், தீர்க்கதரிசியைப் பார்க்கிலும் மேன்மையுள்ளவனையே என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
27. இதோ, நான் என் தூதனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன்; அவன் உமக்கு முன்னே போய், உமது வழியை ஆயத்தம்பண்ணுவான் என்று எழுதிய வாக்கியத்தால் குறிக்கப்பட்டவன் இவன்தான்.
28. ஸ்திரீகளிடத்திலே பிறந்தவர்களில் யோவான்ஸ்நானனைப்பார்க்கிலும் பெரிய தீர்க்கதரிசி ஒருவனுமில்லை; ஆகிலும், தேவனுடைய ராஜ்யத்தில் சிறியவனாயிருக்கிறவன் அவனிலும் பெரியவனாயிருக்கிறானென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
29. யோவானுடைய உபதேசத்தைக் கேட்ட ஆயக்காரர் முதலான சகல ஜனங்களும் அவனாலே ஞானஸ்நானம் பெற்று, தேவன் நீதிபரர் என்று அறிக்கையிட்டார்கள்.
30. பரிசேயரும் நியாயசாஸ்திரிகளுமோ அவனாலே ஞானஸ்நானம் பெறாமல் தங்களுக்குக் கேடுண்டாகத் தேவனுடைய ஆலோசனையைத் தள்ளிவிட்டார்கள்.
31. பின்னும் கர்த்தர் சொன்னது: இந்தச் சந்ததியை யாருக்கு ஒப்பிடுவேன்? இவர்கள் யாருக்கு ஒப்பாயிருக்கிறார்கள்?
32. சந்தை வெளியில் உட்கார்ந்து, ஒருவரையொருவர் பார்த்து: உங்களுக்காகக் குழல் ஊதினோம், நீங்கள் கூத்தாடவில்லை; உங்களுக்காகப் புலம்பினோம், நீங்கள் அழவில்லை என்று குறை சொல்லுகிற பிள்ளைகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள்.
33. எப்படியெனில், யோவான்ஸ்நானன் அப்பம் புசியாதவனும் திராட்சரசம் குடியாதவனுமாய் வந்தான்; அதற்கு நீங்கள்: அவன் பிசாசு பிடித்திருக்கிறவன் என்கிறீர்கள்.
34. மனுஷகுமாரன் போஜனபானம் பண்ணுகிறவராய் வந்தார்; அதற்கு நீங்கள்: இதோ, போஜனப்பிரியனும் மதுபானப்பிரியனுமான மனுஷன், ஆயக்காரருக்கும் பாவிகளுக்கும் சிநேகிதன் என்கிறீர்கள்.
35. ஆனாலும் ஞானமானது அதன் பிள்ளைகளெல்லாராலும் நீதியுள்ளதென்று ஒப்புக்கொள்ளப்படும் என்றார்.
36. பரிசேயரில் ஒருவன் தன்னுடனே போஜனம்பண்ணவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டான்; அவர் அந்தப் பரிசேயனுடைய வீட்டில் பிரவேசித்துப் பந்தியிருந்தார்.
37. அப்பொழுது அந்த ஊரிலிருந்த பாவியாகிய ஒரு ஸ்திரீ அவர் பரிசேயன் வீட்டிலே பந்தியிருக்கிறதை அறிந்து, ஒரு பரணியில் பரிமளதைலம் கொண்டுவந்து,
38. அவருடைய பாதங்களின் அருகே பின்னாக நின்று அழுதுகொண்டு, அவருடைய பாதங்களைத் தன் கண்ணீரினால் நனைத்து, தன் தலைமயிரினால் துடைத்து, அவருடைய பாதங்களை முத்தஞ்செய்து, பரிமளதைலத்தைப் பூசினாள்.
39. அவரை அழைத்த பரிசேயன் அதைக் கண்டபோது, இவர் தீர்க்கதரிசியாயிருந்தால் தம்மைத் தொடுகிற ஸ்திரீ இன்னாளென்றும் இப்படிப்பட்டவளென்றும் அறிந்திருப்பார்; இவள் பாவியாயிருக்கிறாளே என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான்.
40. இயேசு அவனை நோக்கி: சீமோனே, உனக்கு நான் ஒரு காரியம் சொல்லவேண்டும் என்றார். அதற்கு அவன்: போதகரே, சொல்லும் என்றான்.
41. அப்பொழுது அவர்: ஒருவனிடத்தில் இரண்டுபேர் கடன்பட்டிருந்தார்கள்; ஒருவன் ஐந்நூறு வெள்ளிக்காசும், மற்றவன் ஐம்பது வெள்ளிக்காசும் கொடுக்கவேண்டியதாயிருந்தது.
42. கொடுக்க அவர்களுக்கு நிர்வாகமில்லாதபோது, இருவருக்கும் கடனை மன்னித்துவிட்டான். இப்படியிருக்க, அவர்களில் எவன் அவனிடத்தில் அதிக அன்பாயிருப்பான்? அதைச் சொல் என்றார்.
43. சீமோன் பிரதியுத்தரமாக: எவனுக்கு அதிகமாய் மன்னித்துவிட்டானோ அவனே அதிக அன்பாயிருப்பான் என்று நினைக்கிறேன் என்றான்; அதற்கு அவர்: சரியாய் நிதானித்தாய் என்று சொல்லி,
44. ஸ்திரீயினிடமாய்த் திரும்பி, சீமோனை நோக்கி: இந்த ஸ்திரீயைப் பார்க்கிறாயே; நான் உன் வீட்டில் பிரவேசித்தேன், நீ என் கால்களுக்குத் தண்ணீர் தரவில்லை, இவளோ, கண்ணீரினால் என் கால்களை நனைத்து, தன் தலைமயிரினால் அவைகளைத் துடைத்தாள்.
45. நீ என்னை முத்தஞ்செய்யவில்லை, இவளோ, நான் உட்பிரவேசித்தது முதல், என் பாதங்களை ஓயாமல் முத்தஞ்செய்தாள்.
46. நீ என் தலையில் எண்ணெய் பூசவில்லை, இவளோ, என் பாதங்களில் பரிமளதைலம் பூசினாள்.
47. ஆதலால் நான் உனக்குச் சொல்லுகிறேன்: இவள் செய்த அநேக பாவங்கள் மன்னிக்கப்பட்டது; இவள் மிகவும் அன்புகூர்ந்தாளே. எவனுக்குக் கொஞ்சம் மன்னிக்கப்படுகிறதோ, அவன் கொஞ்சமாய் அன்புகூருவான் என்று சொல்லி;
48. அவளை நோக்கி: உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்றார்.
49. அப்பொழுது கூடப் பந்தியிருந்தவர்கள்: பாவங்களை மன்னிக்கிற இவன் யார் என்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள்.
50. அவர் ஸ்திரீயை நோக்கி: உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, சமாதானத்தோடே போ என்றார்.

Chapter 8

1. பின்பு, அவர் பட்டணங்கள்தோறும் கிராமங்கள்தோறும் பிரயாணம்பண்ணி, தேவனுடைய ராஜ்யத்திற்குரிய நற்செய்தியைக் கூறிப் பிரசங்கித்துவந்தார். பன்னிருவரும் அவருடனேகூட இருந்தார்கள்.
2. அவர் பொல்லாத ஆவிகளையும் வியாதிகளையும் நீக்கிக் குணமாக்கின சில ஸ்திரீகளும், ஏழு பிசாசுகள் நீங்கின மகதலேனாள் என்னப்பட்ட மரியாளும்,
3. ஏரோதின் காரியக்காரனான கூசாவின் மனைவியாகிய யோவன்னாளும், சூசன்னாளும், தங்கள் ஆஸ்திகளால் அவருக்கு ஊழியஞ்செய்துகொண்டுவந்த மற்ற அநேகம் ஸ்திரீகளும் அவருடனே இருந்தார்கள்.
4. சகல பட்டணங்களிலுமிருந்து திரளான ஜனங்கள் அவரிடத்தில் வந்து கூடினபோது, அவர் உவமையாகச் சொன்னது:
5. விதைக்கிறவன் ஒருவன் விதையை விதைக்கப் புறப்பட்டான்; அவன் விதைக்கையில் சில விதை வழியருகே விழுந்து மிதியுண்டது, ஆகாயத்துப் பறவைகள் வந்து அதைப் பட்சித்துப்போட்டது.
6. சில விதை கற்பாறையின்மேல் விழுந்தது; அது முளைத்தபின் அதற்கு ஈரமில்லாததினால் உலர்ந்துபோயிற்று.
7. சில விதை முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் கூட வளர்ந்து, அதை நெருக்கிப்போட்டது.
8. சில விதை நல்ல நிலத்தில் விழுந்தது, அது முளைத்து, ஒன்று நூறாகப் பலன் கொடுத்தது என்றார். இவைகளைச் சொல்லி, கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்று சத்தமிட்டுக் கூறினார்.
9. அப்பொழுது அவருடைய சீஷர்கள், இந்த உவமையின் கருத்து என்னவென்று அவரிடத்தில் கேட்டார்கள்.
10. அதற்கு அவர்: தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது; மற்றவர்களுக்கோ, அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும், கேட்டும் உணராதவர்களாகவும் இருக்கத்தக்கதாக, அவைகள் உவமைகளாகச் சொல்லப்படுகிறது.
11. அந்த உவமையின் கருத்தாவது: விதை தேவனுடைய வசனம்.
12. வழியருகே விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்கிறவர்களாயிருக்கிறார்கள்; அவர்கள் விசுவாசித்து இரட்சிக்கப்படாதபடிக்குப் பிசாசானவன் வந்து, அவ்வசனத்தை அவர்கள் இருதயத்திலிருந்து எடுத்துப்போடுகிறான்.
13. கற்பாறையின்மேல் விதைக்கப்பட்டவர்கள் கேட்கும்போது சந்தோஷத்துடனே வசனத்தை ஏற்றுக்கொள்ளுகிறார்கள்; ஆயினும் தங்களுக்குள்ளே வேர்கொள்ளாதபடியினாலே, கொஞ்சக்காலமாத்திரம் விசுவாசித்து, சோதனை காலத்தில் பின்வாங்கிப்போகிறார்கள்.
14. முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்கிறவர்களாயிருக்கிறார்கள்; கேட்டவுடனே போய், பிரபஞ்சத்திற்குரிய கவலைகளினாலும் ஐசுவரியத்தினாலும் சிற்றின்பங்களினாலும் நெருக்கப்பட்டு, பலன்கொடாதிருக்கிறார்கள்.
15. நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்டு, அதை உண்மையும் நன்மையுமான இருதயத்திலே காத்துப் பொறுமையுடனே பலன்கொடுக்கிறவர்களாயிருக்கிறார்கள்.
16. ஒருவனும் விளக்கைக் கொளுத்தி, அதை ஒரு பாத்திரத்தினாலே மூடவுமாட்டான், கட்டிலின்கீழே வைக்கவுமாட்டான்; உள்ளே பிரவேசிக்கிறவர்கள் அதின் வெளிச்சத்தைக் காணும்படிக்கு அதை விளக்குத்தண்டின்மேல் வைப்பான்.
17. வெளியரங்கமாகாத இரகசியமுமில்லை, அறியப்பட்டு வெளிக்குவராத மறைபொருளுமில்லை.
18. ஆதலால் நீங்கள் கேட்கிற விதத்தைக்குறித்துக் கவனியுங்கள்; உள்ளவனெவனோ அவனுக்குக் கொடுக்கப்படும்; இல்லாதவனெவனோ அவன் தனக்குண்டென்று நினைக்கிறதும் அவனிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளப்படும் என்றார்.
19. அப்பொழுது அவருடைய தாயாரும் சகோதரரும் அவரிடத்தில் வந்தார்கள்; ஜனக்கூட்டத்தினாலே அவரண்டையில் அவர்கள் சேரக்கூடாதிருந்தது.
20. அப்பொழுது: உம்முடைய தாயாரும் உம்முடைய சகோதரரும் உம்மைப் பார்க்கவேண்டுமென்று வெளியே நிற்கிறார்கள் என்று அவருக்கு அறிவித்தார்கள்.
21. அதற்கு அவர்: தேவனுடைய வசனத்தைக் கேட்டு, அதின்படி செய்கிறவர்களே எனக்குத் தாயும் எனக்குச் சகோதரருமாயிருக்கிறார்கள் என்றார்.
22. பின்பு ஒருநாள் அவர் தமது சீஷரோடுங்கூடப் படவில் ஏறி: கடலின் அக்கரைக்குப் போவோம் வாருங்கள் என்றார்; அப்படியே புறப்பட்டுப்போனார்கள்.
23. படவு ஓடுகையில் அவர் நித்திரையாயிருந்தார். அப்பொழுது கடலிலே சுழல்காற்றுண்டானதால், அவர்கள் மோசமடையத்தக்கதாய்ப் படவு ஜலத்தினால் நிறைந்தது.
24. அவர்கள் அவரிடத்தில் வந்து, ஐயரே, ஐயரே, மடிந்துபோகிறோம் என்று அவரை எழுப்பினார்கள்; அவர் எழுந்து, காற்றையும் ஜலத்தின் கொந்தளிப்பையும் அதட்டினார்; உடனே அவைகள் நின்றுபோய், அமைதலுண்டாயிற்று.
25. அவர் அவர்களை நோக்கி: உங்கள் விசுவாசம் எங்கே என்றார். அவர்கள் பயந்து ஆச்சரியப்பட்டு: இவர் யாரோ, காற்றுக்கும் ஜலத்துக்கும் கட்டளையிடுகிறார், அவைகளும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.
26. பின்பு கலிலேயாவுக்கு எதிரான கதரேனருடைய நாட்டில் சேர்ந்தார்கள்.
27. அவர் கரையிலிறங்கினபோது, நெடுநாளாய்ப் பிசாசுகள் பிடித்தவனும், வஸ்திரந்தரியாதவனும், வீட்டில் தங்காமல் பிரேதக் கல்லறைகளிலே தங்கினவனுமாயிருந்த அந்தப் பட்டணத்து மனுஷன் ஒருவன் அவருக்கு எதிராக வந்தான்.
28. அவன் இயேசுவைக் கண்டபோது கூக்குரலிட்டு, அவருக்கு முன்பாக விழுந்து: இயேசுவே, உன்னதமான தேவனுடைய குமாரனே, எனக்கும் உமக்கும் என்ன? என்னை வேதனைப்படுத்தாதபடிக்கு உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன் என்று மகா சத்தத்தோடே சொன்னான்.
29. அந்த அசுத்தஆவி அவனை விட்டுப் போகும்படி இயேசு கட்டளையிட்டபடியினாலே அப்படிச் சொன்னான். அந்த அசுத்தஆவி வெகுகாலமாய் அவனைப் பிடித்திருந்தது; அவன் சங்கிலிகளினாலும் விலங்குகளினாலும் கட்டுண்டு காவல்பண்ணப்பட்டிருந்தும் கட்டுகளை முறித்துப்போட்டுப் பிசாசினால் வனாந்தரங்களுக்குத் துரத்தப்பட்டிருந்தான்.
30. இயேசு அவனை நோக்கி: உன் பேர் என்னவென்று கேட்டார்; அதற்கு அவன்: லேகியோன் என்றான்; அநேகம் பிசாசுகள் அவனுக்குள் புகுந்திருந்தபடியால் அந்தப் பேரைச் சொன்னான்.
31. தங்களைப் பாதாளத்திலே போகக் கட்டளையிடாதபடிக்கு அவைகள் அவரை வேண்டிக்கொண்டன.
32. அவ்விடத்தில் அநேகம் பன்றிகள் கூட்டமாய் மலையிலே மேய்ந்துகொண்டிருந்தது. அந்தப் பன்றிகளுக்குள் போகும்படி தங்களுக்கு உத்தரவு கொடுக்கவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டன; அவைகளுக்கு உத்தரவுகொடுத்தார்.
33. அப்படியே பிசாசுகள் அந்த மனுஷனைவிட்டு நீங்கி, பன்றிகளுக்குள் புகுந்தன; அப்பொழுது அந்தப் பன்றிக்கூட்டம் உயர்ந்த மேட்டிலிருந்து கடலிலே பாய்ந்து, அமிழ்ந்து, மாண்டது.
34. அவைகளை மேய்த்தவர்கள் சம்பவித்ததைக் கண்டு, ஓடிப்போய், பட்டணத்திலும் சுற்றுப்புறங்களிலும் அறிவித்தார்கள்.
35. அப்பொழுது, சம்பவித்ததைப் பார்க்கும்படி ஜனங்கள் புறப்பட்டு, இயேசுவினிடத்தில் வந்து, பிசாசுகள் விட்டுப்போன மனுஷன் வஸ்திரந்தரித்து இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து புத்திதெளிந்திருக்கிறதைக் கண்டு, பயந்தார்கள்.
36. பிசாசுகள் பிடித்திருந்தவன் சொஸ்தமாக்கப்பட்டதைக் கண்டவர்களும் அதை அவர்களுக்கு அறிவித்தார்கள்.
37. அப்பொழுது கதரேனருடைய சுற்றுப்புறத்திலுள்ள திரளான ஜனங்கள் எல்லாரும் மிகவும் பயமடைந்தபடியினாலே, தங்களை விட்டுப் போகும்படி அவரை வேண்டிக்கொண்டார்கள். அந்தப்படி அவர் படவில் ஏறி, திரும்பிப்போனார்.
38. பிசாசுகள் நீங்கின மனுஷன் அவரோடேகூட இருக்கும்படி உத்தரவு கேட்டான்.
39. இயேசு அவனை நோக்கி: நீ உன் வீட்டுக்குத் திரும்பிப்போய், தேவன் உனக்குச் செய்தவைகளையெல்லாம் அறிவி என்று சொல்லி, அவனை அனுப்பிவிட்டார். அந்தப்படி அவன் போய், இயேசு தனக்குச் செய்தவைகளையெல்லாம் பட்டணத்தில் எங்கும் பிரசித்தப்படுத்தினான்.
40. இயேசு திரும்பிவந்தபோது ஜனங்களெல்லாரும் அவருக்காகக் காத்திருந்தபடியால் அவரைச் சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டார்கள்.
41. அப்பொழுது ஜெபஆலயத்தலைவனாகிய யவீரு என்னும் பேருள்ள ஒருவன் வந்து, இயேசுவின் பாதத்தில் விழுந்து, பன்னிரண்டு வயதுள்ள தன்னுடைய ஒரே குமாரத்தி மரண அவஸ்தையாயிருந்தபடியால்,
42. தன் வீட்டிற்கு வரும்படி அவரை வேண்டிக்கொண்டான். அவர் போகையில் திரளான ஜனங்கள் அவரை நெருக்கினார்கள்.
43. அப்பொழுது பன்னிரண்டு வருஷமாய்ப் பெரும்பாடுள்ளவளாயிருந்து, தன் ஆஸ்திகளையெல்லாம் வைத்தியர்களுக்குச் செலவழித்தும், ஒருவனாலும் சொஸ்தமாக்கப்படாதிருந்த ஒரு ஸ்திரீ,
44. அவருக்குப் பின்னாக வந்து, அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டாள்; உடனே அவளுடைய பெரும்பாடு நின்றுபோயிற்று.
45. அப்பொழுது இயேசு: என்னைத் தொட்டது யார் என்று கேட்டார். எங்களுக்குத் தெரியாதென்று எல்லாரும் சொன்னபோது, பேதுருவும் அவனுடனே கூட இருந்தவர்களும்: ஐயரே, திரளான ஜனங்கள் உம்மைச் சூழ்ந்து நெருக்கிக் கொண்டிருக்கிறார்களே, என்னைத் தொட்டது யார் என்று எப்படிக் கேட்கிறீர் என்றார்கள்.
46. அதற்கு இயேசு: என்னிலிருந்து வல்லமை புறப்பட்டதை அறிந்திருக்கிறேன்; ஆதலால் ஒருவர் என்னைத் தொட்டதுண்டு என்றார்.
47. அப்பொழுது அந்த ஸ்திரீ தான் மறைந்திருக்கவில்லையென்று கண்டு, நடுங்கிவந்து, அவர் முன்பாக விழுந்து, தான் அவரைத் தொட்ட காரணத்தையும் உடனே தான் சொஸ்தமானதையும் எல்லா ஜனங்களுக்கும் முன்பாக அவருக்கு அறிவித்தாள்.
48. அவர் அவளைப் பார்த்து: மகளே, திடன்கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, சமாதானத்தோடே போ என்றார்.
49. அவர் இப்படிப் பேசிக்கொண்டிருக்கையில், ஜெபஆலயத்தலைவனுடைய வீட்டிலிருந்து ஒருவன் வந்து, அவனை நோக்கி: உம்முடைய குமாரத்தி மரித்துப்போனாள், போதகரை வருத்தப்படுத்த வேண்டாம் என்றான்.
50. இயேசு அதைக் கேட்டு: பயப்படாதே; விசுவாசமுள்ளவனாயிரு, அப்பொழுது அவள் இரட்சிக்கப்படுவாள் என்றார்.
51. அவர் வீட்டில் வந்தபோது, பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் பெண்ணின் தகப்பனையும் தாயையும் தவிர வேறொருவரையும் உள்ளே வரவொட்டாமல்,
52. எல்லாரும் அழுது அவளைக்குறித்துத் துக்கங்கொண்டாடுகிறதைக் கண்டு: அழாதேயுங்கள், அவள் மரித்துப்போகவில்லை, நித்திரையாயிருக்கிறாள் என்றார்.
53. அவள் மரித்துப்போனாளென்று அவர்கள் அறிந்ததினால், அவரைப் பார்த்து நகைத்தார்கள்.
54. எல்லாரையும் அவர் வெளியே போகப்பண்ணி, அவளுடைய கையைப் பிடித்து: பிள்ளையே எழுந்திரு என்றார்.
55. அப்பொழுது அவள் உயிர் திரும்ப வந்தது; உடனே அவள் எழுந்திருந்தாள்; அவளுக்கு ஆகாரங்கொடுக்கக் கட்டளையிட்டார்.
56. அவள் தாய்தகப்பன்மார் ஆச்சரியப்பட்டார்கள். அப்பொழுது நடந்ததை ஒருவருக்கும் சொல்லாமலிருக்கும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டார்.

Chapter 9

1. அவர் தம்முடைய பன்னிரண்டு சீஷரையும் வரவழைத்து, சகல பிசாசுகளையும் துரத்தவும், வியாதியுள்ளவர்களைக் குணமாக்கவும் அவர்களுக்கு வல்லமையும் அதிகாரமும் கொடுத்து,
2. தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கிக்கவும், பிணியாளிகளைச் சொஸ்தமாக்கவும் அவர்களை அனுப்பினார்.
3. அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: வழிக்குத் தடியையாவது பையையாவது அப்பத்தையாவது காசையாவது எடுத்துக்கொண்டு போகவேண்டாம்; இரண்டு அங்கிகளைக் கொண்டுபோகவும் வேண்டாம்.
4. எந்த வீட்டிலே பிரவேசிக்கிறீர்களோ, அங்கே தங்கி, அங்கிருந்து புறப்படுங்கள்.
5. உங்களை ஏற்றுக்கொள்ளாதவர்கள் எவர்களோ அவர்களுடைய ஊரைவிட்டு நீங்கள் புறப்படும்போது, அவர்களுக்குச் சாட்சியாக உங்கள் கால்களில் படிந்த தூசியை உதறிப்போடுங்கள் என்றார்.
6. அவர்கள் புறப்பட்டுப்போய், கிராமங்கள்தோறும் திரிந்து, எங்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, பிணியாளிகளைக் குணமாக்கினார்கள்.
7. அப்பொழுது காற்பங்கு தேசாதிபதியாகிய ஏரோது அவரால் செய்யப்பட்ட யாவையும் கேள்விப்பட்டதுமன்றி; சிலர் யோவான் மரித்தோரிலிருந்து எழுந்தான் என்றும்,
8. சிலர் எலியா தோன்றினான் என்றும், வேறு சிலர் பூர்வகாலத்துத் தீர்க்கதரிசிகளில் ஒருவன் உயிர்த்தெழுந்தான் என்றும் சொல்லிக்கொண்டபடியால், கலக்கமடைந்து:
9. யோவானை நான் சிரச்சேதம்பண்ணினேன், இவன் இப்படிப்பட்டவைகளைச் செய்கிறான் என்று கேள்விப்படுகிறேனே! இவன் யார்? என்று ஏரோது சொல்லி, அவரைப் பார்க்க விரும்பினான்.
10. அப்போஸ்தலர் திரும்பிவந்து, தாங்கள் செய்த யாவையும் அவருக்கு விவரித்துச் சொன்னார்கள். அப்பொழுது அவர் அவர்களைக் கூட்டிக்கொண்டு, தனித்திருக்கும்படி பெத்சாயிதா என்னும் பட்டணத்தைச் சேர்ந்த வனாந்தரமான ஒரு இடத்துக்குப் போனார்.
11. ஜனங்கள் அதை அறிந்து, அவர் பின்னே போனார்கள்; அவர்களை அவர் ஏற்றுக்கொண்டு, தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்து அவர்களுடனே பேசி, சொஸ்தமடையவேண்டுமென்றிருந்தவர்களைச் சொஸ்தப்படுத்தினார்.
12. சாயங்காலமாகிறபோது, பன்னிருவரும் சேர்ந்துவந்து, அவரை நோக்கி: நாம் இருக்கிற இடம் வனாந்தரமாயிருக்கிறது, சுற்றியிருக்கிற ஊர்களிலும் கிராமங்களிலும் ஜனங்கள் போய்த் தங்கி, போஜனபதார்த்தங்களைச் சம்பாதித்துக்கொள்ளும்படி அவர்களை அனுப்பிவிடவேண்டும் என்றார்கள்.
13. அவர் அவர்களை நோக்கி: நீங்களே அவர்களுக்குப் போஜனங்கொடுங்கள் என்றார். அதற்கு அவர்கள்: எங்களிடத்தில் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களுமாத்திரமுண்டு, இந்த ஜனங்களெல்லாருக்கும் போஜனங் கொடுக்கவேண்டியதானால், நாங்கள் போய் வாங்கிக்கொண்டு வரவேண்டுமே என்றார்கள்.
14. ஏறக்குறைய ஐயாயிரம் புருஷர் இருந்தார்கள். அவர்களைப் பந்திக்கு ஐம்பது ஐம்பதுபேராக உட்காரும்படி சொல்லுங்கள் என்று தம்முடைய சீஷர்களுக்குச் சொன்னார்.
15. அவர்கள் அந்தப்படியே எல்லாரையும் உட்காரும்படி செய்தார்கள்.
16. அப்பொழுது அவர் அந்த ஐந்து அப்பங்களையும் அந்த இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்துபார்த்து, அவைகளை ஆசீர்வதித்து, பிட்டு, ஜனங்கள்முன் வைக்கும்படி சீஷர்களிடத்தில் கொடுத்தார்.
17. எல்லாரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள். மீதியான துணிக்கைகள் பன்னிரண்டு கூடைநிறைய எடுக்கப்பட்டது.
18. பின்பு அவர் தமது சீஷரோடேகூடத் தனித்து ஜெபம்பண்ணிக்கொண்டிருக்கையில், அவர்களை நோக்கி: ஜனங்கள் என்னை யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார்.
19. அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான்ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும், வேறு சிலர் பூர்வகாலத்துத் தீர்க்கதரிசிகளில் ஒருவர் உயிர்த்தெழுந்தார் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள்.
20. அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார்; பேதுரு பிரதியுத்தரமாக: நீர் தேவனுடைய கிறிஸ்து என்றான்.
21. அப்பொழுது அவர்கள் அதை ஒருவருக்கும் சொல்லாதபடிக்கு உறுதியாய்க் கட்டளையிட்டார்.
22. மேலும் மனுஷகுமாரன் பல பாடுகள்படவும், மூப்பராலும் பிரதான ஆசாரியராலும் வேதபாரகராலும் ஆகாதவனென்று தள்ளப்படவும், கொல்லப்படவும், மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்திருக்கவும் வேண்டும் என்று சொன்னார்.
23. பின்பு அவர் எல்லாரையும் நோக்கி: ஒருவன் என் பின்னே வர விரும்பினால் அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை அநுதினமும் எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன்.
24. தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதை இரட்சித்துக்கொள்ளுவான்.
25. மனுஷன் உலகமுழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன்னைத் தான் கெடுத்து நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?
26. என்னைக்குறித்தும் என் வார்த்தைகளைக்குறித்தும் எவன் வெட்கப்படுகிறானோ, அவனைக்குறித்து மனுஷகுமாரனும் தம்முடைய மகிமையோடும் பிதாவின் மகிமையோடும் பரிசுத்த தூதர்களின் மகிமையோடும் வரும்போது வெட்கப்படுவார்.
27. இங்கே நிற்கிறவர்களில் சிலர் தேவனுடைய ராஜ்யத்தைக் காணுமுன், மரணத்தை ருசிபார்ப்பதில்லையென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
28. இந்த வார்த்தைகளை அவர் சொல்லி ஏறக்குறைய எட்டுநாளானபின்பு, அவர் பேதுருவையும் யோவானையும் யாக்கோபையும் கூட்டிக்கொண்டு, ஜெபம்பண்ணுகிறதற்கு ஒரு மலையின்மேல் ஏறினார்.
29. அவர் ஜெபம்பண்ணுகையில், அவருடைய முகரூபம் மாறிற்று, அவருடைய வஸ்திரம் வெண்மையாகிப் பிரகாசித்தது.
30. அன்றியும் மோசே எலியா என்னும் இரண்டுபேரும் மகிமையோடே காணப்பட்டு, அவருடனே சம்பாஷணைபண்ணி,
31. அவர் எருசலேமிலே நிறைவேற்றப்போகிற அவருடைய மரணத்தைக்குறித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள்.
32. பேதுருவும் அவனோடிருந்தவர்களும் நித்திரைமயக்கமாயிருந்தார்கள். ஆகிலும் அவர்கள் விழித்து அவருடைய மகிமையையும் அவரோடே நின்ற அவ்விரண்டுபேரையும் கண்டார்கள்.
33. அவ்விருவரும் அவரைவிட்டுப் பிரிந்துபோகையில், பேதுரு இயேசுவை நோக்கி: ஐயரே, நாம் இங்கே இருக்கிறது நல்லது, உமக்கு ஒரு கூடாரமும், மோசேக்கு ஒரு கூடாரமும், எலியாவுக்கு ஒரு கூடாரமுமாக, மூன்று கூடாரங்களைப் போடுவோம் என்று, தான் சொல்லுகிறது இன்னதென்று அறியாமல் சொன்னான்.
34. இப்படி அவன் பேசுகையில், ஒரு மேகம் வந்து அவர்கள்மேல் நிழலிட்டது; அவர்கள் அந்த மேகத்துக்குள் பிரவேசிக்கையில் சீஷர்கள் பயந்தார்கள்.
35. அப்பொழுது: இவர் என்னுடைய நேசகுமாரன், இவருக்குச் செவிகொடுங்கள் என்று மேகத்திலிருந்து ஒரு சத்தமுண்டாயிற்று.
36. அந்தச் சத்தம் உண்டாகையில் இயேசு ஒருவரே காணப்பட்டார். தாங்கள் கண்டவைகளில் ஒன்றையும் அவர்கள் அந்நாட்களில் ஒருவருக்கும் சொல்லாமல் அடக்கிவைத்திருந்தார்கள்.
37. மறுநாளில் அவர்கள் மலையிலிருந்திறங்கினபோது, திரளான ஜனங்கள் அவருக்கு எதிர்கொண்டுவந்தார்கள்.
38. அவர்களில் ஒருவன் சத்தமிட்டு: போதகரே, என் மகனைக் கடாட்சித்தருள வேண்டுமென்று உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன், அவன் எனக்கு ஒரே பிள்ளையாயிருக்கிறான்.
39. ஒரு ஆவி அவனைப் பிடிக்கிறது, அப்பொழுது அலறுகிறான், அது அவனை நுரைதள்ள அலைக்கழித்து, அவனைக் கசக்கினபின்பும், அவனை விட்டு நீங்குவது அரிதாயிருக்கிறது.
40. அதைத் துரத்திவிடும்படி உம்முடைய சீஷரை வேண்டிக்கொண்டேன், அவர்களால் கூடாமற்போயிற்று என்றான்.
41. இயேசு பிரதியுத்தரமாக: விசுவாசமில்லாத மாறுபாடான சந்ததியே, எதுவரைக்கும் நான் உங்களோடிருந்து, உங்களிடத்தில் பொறுமையாயிருப்பேன்? உன் மகனை இங்கே கொண்டுவா என்றார்.
42. அவன் சமீபித்துவருகையில், பிசாசு அவனைக் கீழே தள்ளி, அலைக்கழித்தது. இயேசு அந்த அசுத்தஆவியை அதட்டி, இளைஞனைக் குணமாக்கி, அவன் தகப்பனிடத்தில் அவனை ஒப்புக்கொடுத்தார்.
43. அப்பொழுது எல்லாரும் தேவனுடைய மகத்துவத்தைக் குறித்துப் பிரமித்தார்கள். இயேசு செய்த யாவையுங்குறித்து அனைவரும் ஆச்சரியப்படுகையில் அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி:
44. நீங்கள் இந்த வார்த்தைகளைக் கவனமாய்க் கேளுங்கள்; மனுஷகுமாரன் மனுஷர் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படப்போகிறார் என்றார்.
45. அவர்கள் அந்த வார்த்தையின் கருத்தை அறிந்துகொள்ளவில்லை; அது அவர்களுக்குத் தோன்றாமல் மறைபொருளாயிருந்தது; அந்த வார்த்தையைக்குறித்து அவரிடத்தில் விசாரிக்கவும் பயந்தார்கள்.
46. பின்பு தங்களில் எவன் பெரியவனாயிருப்பானென்கிற வாக்குவாதம் அவர்களுக்குள் உண்டாயிற்று.
47. இயேசு அவர்கள் இருதயத்தின் யோசனையை அறிந்து, ஒரு சிறுபிள்ளையை எடுத்து, அதைத் தமதருகே நிறுத்தி,
48. அவர்களை நோக்கி: இந்தச் சிறுபிள்ளையை என் நாமத்தினிமித்தம் ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான்; உங்களெல்லாருக்குள்ளும் எவன் சிறியவனாயிருக்கிறானோ அவனே பெரியவனாயிருப்பான் என்றார்.
49. அப்பொழுது யோவான் அவரை நோக்கி: ஐயரே, ஒருவன் உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துகிறதை நாங்கள் கண்டு, அவன் எங்களுடனேகூட உம்மைப் பின்பற்றாதவனானபடியால், அவனைத் தடுத்தோம் என்றான்.
50. அதற்கு இயேசு: தடுக்கவேண்டாம்; நமக்கு விரோதியாயிராதவன் நமது பட்சத்திலிருக்கிறான் என்றார்.
51. பின்பு, அவர் எடுத்துக்கொள்ளப்படும் நாட்கள் சமீபித்தபோது, அவர் எருசலேமுக்குப் போகத் தமது முகத்தைத்திருப்பி,
52. தமக்கு முன்னாகத் தூதர்களை அனுப்பினார். அவர்கள் போய், அவருக்கு இடத்தை ஆயத்தம்பண்ணும்படி சமாரியருடைய ஒரு கிராமத்திலே பிரவேசித்தார்கள்.
53. அவர் எருசலேமுக்குப் போக நோக்கமாயிருந்தபடியினால் அவ்வூரார் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.
54. அவருடைய சீஷராகிய யாக்கோபும் யோவானும் அதைக் கண்டபோது: ஆண்டவரே, எலியா செய்ததுபோல, வானத்திலிருந்து அக்கினி இறங்கி இவர்களை அழிக்கும்படி நாங்கள் கட்டளையிட உமக்குச் சித்தமா என்று கேட்டார்கள்.
55. அவர் திரும்பிப்பார்த்து: நீங்கள் இன்ன ஆவியுள்ளவர்களென்பதை அறியீர்கள் என்று அதட்டி,
56. மனுஷகுமாரன் மனுஷருடைய ஜீவனை அழிக்கிறதற்கு அல்ல, இரட்சிக்கிறதற்கே வந்தார் என்றார். அதன்பின்பு அவர்கள் வேறொரு கிராமத்துக்குப் போனார்கள்.
57. அவர்கள் வழியிலே போகையில் ஒருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் எங்கே போனாலும் உம்மைப் பின்பற்றி வருவேன் என்றான்.
58. அதற்கு இயேசு: நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மனுஷகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை என்றார்.
59. வேறொருவனை அவர் நோக்கி: என்னைப் பின்பற்றிவா என்றார். அதற்கு அவன்: ஆண்டவரே, முன்பு நான் போய் என் தகப்பனை அடக்கம்பண்ண எனக்கு உத்தரவு கொடுக்கவேண்டும் என்றான்.
60. அதற்கு இயேசு: மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம்பண்ணட்டும்; நீ போய், தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கி என்றார்.
61. பின்பு வேறொருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, உம்மைப் பின்பற்றுவேன், ஆனாலும் முன்பு நான் போய் வீட்டிலிருக்கிறவர்களிடத்தில் அனுப்புவித்துக்கொண்டுவரும்படி எனக்கு உத்தரவு கொடுக்கவேண்டும் என்றான்.
62. அதற்கு இயேசு: கலப்பையின்மேல் தன் கையை வைத்துப் பின்னிட்டுப்பார்க்கிற எவனும் தேவனுடைய ராஜ்யத்துக்குத் தகுதியுள்ளவன் அல்ல என்றார்.

Chapter 10

1. இவைகளுக்குப்பின்பு கர்த்தர் வேறே எழுபதுபேரை நியமித்து, தாம் போகும் சகல பட்டணங்களுக்கும் இடங்களுக்கும் அவர்களைத் தமக்கு முன்னே இரண்டிரண்டு பேராக அனுப்பினார்.
2. அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்; ஆகையால் அறுப்புக்கு எஜமான் தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள்.
3. புறப்பட்டுப்போங்கள்; ஆட்டுக்குட்டிகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறதுபோல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன்.
4. பணப்பையையும் சாமான் பையையும் பாதரட்சைகளையும் கொண்டுபோகவேண்டாம்; வழியிலே ஒருவரையும் வினவவும் வேண்டாம்.
5. ஒரு வீட்டில் பிரவேசிக்கிறபோது: இந்த வீட்டுக்குச் சமாதானம் உண்டாவதாகவென்று முதலாவது சொல்லுங்கள்.
6. சமாதான பாத்திரன் அங்கே இருந்தால், நீங்கள் கூறின சமாதானம் அவனிடத்தில் தங்கும், இல்லாதிருந்தால் அது உங்களிடத்திற்குத் திரும்பிவரும்.
7. அந்த வீட்டிலேதானே நீங்கள் தங்கியிருந்து, அவர்கள் கொடுக்கிறவைகளைப் புசித்துக் குடியுங்கள்; வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான். வீட்டுக்கு வீடு போகாதிருங்கள்.
8. ஒரு பட்டணத்தில் நீங்கள் பிரவேசிக்கிறபொழுது, ஜனங்கள் உங்களை ஏற்றுக்கொண்டால் அவர்கள் உங்கள்முன் வைக்கிறவைகளை நீங்கள் புசித்து,
9. அவ்விடத்திலுள்ள பிணியாளிகளைச் சொஸ்தமாக்கி: தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குச் சமீபமாய் வந்திருக்கிறது என்று அவர்களுக்குச் சொல்லுங்கள்.
10. யாதொரு பட்டணத்தில் நீங்கள் பிரவேசிக்கிறபொழுது, ஜனங்கள் உங்களை ஏற்றுக்கொள்ளாவிட்டால் அதின் வீதிகளிலே நீங்கள் போய்:
11. எங்களில் ஒட்டின உங்கள் பட்டணத்தின் தூசியையும் உங்களுக்கு விரோதமாய்த் துடைத்துப்போடுகிறோம்; ஆயினும் தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குச் சமீபமாய் வந்திருக்கிறதென்பதை அறிந்துகொள்வீர்களாக என்று சொல்லுங்கள்.
12. அந்தப் பட்டணத்திற்கு நேரிடுவதைப்பார்க்கிலும் அந்த நாளிலே சோதோம் நாட்டிற்கு நேரிடுவது இலகுவாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
13. கோராசீன் பட்டணமே, உனக்கு ஐயோ, பெத்சாயிதா பட்டணமே, உனக்கு ஐயோ, உங்களில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் தீருவிலும் சீதோனிலும் செய்யப்பட்டிருந்ததானால், அப்பொழுதே இரட்டுடுத்தி, சாம்பலில் உட்கார்ந்து, மனந்திரும்பியிருப்பார்கள்.
14. நியாயத்தீர்ப்புநாளில் உங்களுக்கு நேரிடுவதைப்பார்க்கிலும், தீருவுக்கும் சீதோனுக்கும் நேரிடுவது இலகுவாயிருக்கும்.
15. வானபரியந்தம் உயர்த்தப்பட்ட கப்பர்நகூமே, நீ பாதாளபரியந்தம் தாழ்த்தப்படுவாய் என்று சொல்லி,
16. சீஷரை நோக்கி: உங்களுக்குச் செவிகொடுக்கிறவன் எனக்குச் செவிகொடுக்கிறான், உங்களை அசட்டைபண்ணுகிறவன் என்னை அசட்டைபண்ணுகிறான், என்னை அசட்டைபண்ணுகிறவன் என்னை அனுப்பினவரை அசட்டைபண்ணுகிறான் என்றார்.
17. பின்பு அந்த எழுபதுபேரும் சந்தோஷத்தோடே திரும்பிவந்து: ஆண்டவரே, உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளும் எங்களுக்குக் கீழ்ப்படிகிறது என்றார்கள்.
18. அவர்களை அவர் நோக்கி: சாத்தான் மின்னலைப்போல வானத்திலிருந்து விழுகிறதைக் கண்டேன்.
19. இதோ, சர்ப்பங்களையும் தேள்களையும் மிதிக்கவும், சத்துருவினுடைய சகல வல்லமையையும் மேற்கொள்ளவும் உங்களுக்கு அதிகாரங்கொடுக்கிறேன்; ஒன்றும் உங்களைச் சேதப்படுத்தமாட்டாது.
20. ஆகிலும், ஆவிகள் உங்களுக்குக் கீழ்ப்படிகிறதற்காக நீங்கள் சந்தோஷப்படாமல், உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப்படுங்கள் என்றார்.
21. அந்த வேளையில் இயேசு ஆவியிலே களிகூர்ந்து: பிதாவே! வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை நீர் ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்; ஆம், பிதாவே! இப்படிச் செய்வது உம்முடைய திருவுளத்துக்குப் பிரியமாயிருந்தது.
22. சகலமும் என் பிதாவினால் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது; பிதா தவிர வேறொருவனும் குமாரன் இன்னாரென்று அறியான், குமாரனும், குமாரன் அவரை எவனுக்கு வெளிப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ அவனுந்தவிர, வேறொருவனும் பிதா இன்னாரென்று அறியான் என்றார்.
23. பின்பு தமது சீஷரிடத்தில் திரும்பி, தனித்து அவர்களை நோக்கி: நீங்கள் காண்கிறவைகளைக் காணுங் கண்கள் பாக்கியமுள்ளவைகள்.
24. அநேக தீர்க்கதரிசிகளும் ராஜாக்களும் நீங்கள் காண்கிறவைகளைக் காணவும், நீங்கள் கேட்கிறவைகளைக் கேட்கவும் விரும்பியும், காணாமலும் கேளாமலும் போனார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
25. அப்பொழுது நியாயசாஸ்திரி ஒருவன் எழுந்திருந்து, அவரைச் சோதிக்கும்படி: போதகரே, நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான்.
26. அதற்கு அவர்: நியாயப்பிரமாணத்தில் என்ன எழுதியிருக்கிறது? நீ வாசித்திருக்கிறது என்ன என்றார்.
27. அவன் பிரதியுத்தரமாக: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழுப் பலத்தோடும் உன் முழுச்சிந்தையோடும் அன்புகூர்ந்து, உன்னிடத்தில் அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்று எழுதியிருக்கிறது என்றான்.
28. அவர் அவனை நோக்கி: நிதானமாய் உத்தரவு சொன்னாய்; அப்படியே செய், அப்பொழுது பிழைப்பாய் என்றார்.
29. அவன் தன்னை நீதிமான் என்று காண்பிக்க மனதாய் இயேசுவை நோக்கி: எனக்குப் பிறன் யார் என்று கேட்டான்.
30. இயேசு பிரதியுத்தரமாக: ஒரு மனுஷன் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகையில் கள்ளர் கையில் அகப்பட்டான்; அவர்கள் அவன் வஸ்திரங்களை உரிந்துகொண்டு, அவனைக் காயப்படுத்தி, குற்றுயிராக விட்டுப் போனார்கள்.
31. அப்பொழுது தற்செயலாய் ஒரு ஆசாரியன் அந்த வழியே வந்து, அவனைக் கண்டு, பக்கமாய் விலகிப்போனான்.
32. அந்தப்படியே ஒரு லேவியனும் அந்த இடத்துக்கு வந்து, அவனைக் கண்டு, பக்கமாய் விலகிப்போனான்.
33. பின்பு சமாரியன் ஒருவன் பிரயாணமாய் வருகையில், அவனைக் கண்டு, மனதுருகி,
34. கிட்ட வந்து, அவனுடைய காயங்களில் எண்ணெயும் திராட்சரசமும் வார்த்து, காயங்களைக் கட்டி, அவனைத் தன் சுயவாகனத்தின்மேல் ஏற்றி, சத்திரத்துக்குக் கொண்டுபோய், அவனைப் பராமரித்தான்.
35. மறுநாளிலே தான் புறப்படும்போது இரண்டு பணத்தை எடுத்து, சத்திரத்தான் கையில் கொடுத்து: நீ இவனை விசாரித்துக்கொள், அதிகமாய் ஏதாகிலும் இவனுக்காகச் செலவழித்தால், நான் திரும்பிவரும்போது அதை உனக்குத் தருவேன் என்றான்.
36. இப்படியிருக்க, கள்ளர்கையில் அகப்பட்டவனுக்கு இந்த மூன்றுபேரில் எவன் பிறனாயிருந்தான்? உனக்கு எப்படித் தோன்றுகிறது என்றார்.
37. அதற்கு அவன்: அவனுக்கு இரக்கஞ்செய்தவனே என்றான். அப்பொழுது இயேசு அவனை நோக்கி: நீயும் போய் அந்தப்படியே செய் என்றார்.
38. பின்பு, அவர்கள் பிரயாணமாய்ப் போகையில், அவர் ஒரு கிராமத்தில் பிரவேசித்தார். அங்கே மார்த்தாள் என்னும் பேர்கொண்ட ஒரு ஸ்திரீ அவரைத் தன் வீட்டிலே ஏற்றுக்கொண்டாள்.
39. அவளுக்கு மரியாள் என்னப்பட்ட ஒரு சகோதரி இருந்தாள்; அவள் இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து, அவருடைய வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்தாள்.
40. மார்த்தாளோ பற்பல வேலைகளைச் செய்வதில் மிகவும் வருத்தமடைந்து, அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, நான் தனியே வேலைசெய்யும்படி என் சகோதரி என்னை விட்டுவந்திருக்கிறதைக் குறித்து உமக்குக் கவையில்லையா? எனக்கு உதவிசெய்யும்படி அவளுக்குச் சொல்லும் என்றாள்.
41. இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: மார்த்தாளே, மார்த்தாளே, நீ அநேக காரியங்களைக்குறித்துக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய்.
42. தேவையானது ஒன்றே, மரியாள் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள் என்றார்.

Chapter 11

1. அவர் ஒரு இடத்தில் ஜெபம்பண்ணி முடித்தபின்பு, அவருடைய சீஷரில் ஒருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, யோவான் தன் சீஷருக்கு ஜெபம்பண்ணப் போதித்ததுபோல, நீரும் எங்களுக்குப் போதிக்கவேண்டும் என்றான்.
2. அதற்கு அவர்: நீங்கள் ஜெபம்பண்ணும்போது: பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக; உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக;
3. எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை அன்றன்றும் எங்களுக்குத் தாரும்;
4. எங்கள் பாவங்களை எங்களுக்கு மன்னியும்; நாங்களும் எங்களிடத்தில் கடன்பட்ட எவனுக்கும் மன்னிக்கிறோமே; எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக் கொள்ளும், என்று சொல்லுங்கள் என்றார்.
5. பின்னும் அவர் அவர்களை நோக்கி: உங்களில் ஒருவன் தனக்குச் சிநேகிதனாயிருக்கிறவனிடத்தில் பாதிராத்திரியிலே போய்: சிநேகிதனே,
6. என் சிநேகிதன் ஒருவன் வழிப்பிரயாணமாய் என்னிடத்தில் வந்திருக்கிறான், அவன்முன் வைக்கிறதற்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை, நீ மூன்று அப்பங்களை எனக்குக் கடனாகத் தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டான்.
7. வீட்டுக்குள் இருக்கிறவன் பிரதியுத்தரமாக: என்னைத் தொந்தரவு செய்யாதே, கதவு பூட்டியாயிற்று, என் பிள்ளைகள் என்னோடேகூடப் படுத்திருக்கிறார்கள், நான் எழுந்திருந்து, உனக்குத் தரக்கூடாது என்று சொன்னான்.
8. பின்பு, தனக்கு அவன் சிநேகிதனாயிருக்கிறதினிமித்தம் எழுந்து அவனுக்குக் கொடாவிட்டாலும், தன்னிடத்தில் அவன் வருந்திக் கேட்கிறதினிமித்தமாவது எழுந்திருந்து, அவனுக்குத் தேவையானதைக் கொடுப்பான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
9. மேலும் நான் உங்களுக்குச் சொல்லுகிறதாவது: கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்.
10. ஏனென்றால், கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும்.
11. உங்களில் தகப்பனாயிருக்கிற ஒருவனிடத்தில் மகன் அப்பங்கேட்டால், அவனுக்குக் கல்லைக் கொடுப்பானா? மீனைக் கேட்டால் மீனுக்குப் பதிலாய்ப் பாம்பைக் கொடுப்பானா?
12. அல்லது முட்டையைக் கேட்டால், அவனுக்குத் தேளைக் கொடுப்பானா?
13. பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரமபிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா என்றார்.
14. பின்பு அவர் ஊமையாயிருந்த ஒரு பிசாசைத் துரத்தினார். பிசாசு புறப்பட்டுப்போனபின்பு ஊமையன் பேசினான்; ஜனங்கள் ஆச்சரியப்பட்டார்கள்.
15. அவர்களில் சிலர்: இவன் பிசாசுகளின் தலைவனாகிய பெயெல்செபூலைக்கொண்டு பிசாசுகளைத் துரத்துகிறான் என்றார்கள்.
16. வேறு சிலர் அவரைச் சோதிக்கும்படி வானத்திலிருந்து ஒரு அடையாளத்தைக் காட்டவேண்டுமென்று அவரிடத்தில் கேட்டார்கள்.
17. அவர்களுடைய சிந்தனைகளை அவர் அறிந்து, அவர்களை நோக்கி: தனக்குத் தானே விரோதமாய்ப் பிரிந்திருக்கிற எந்த ராஜ்யமும் பாழாய்ப்போம்; தனக்குத்தானே விரோதமாய்ப் பிரிந்திருக்கிற எந்த வீடும் விழுந்துபோம்.
18. சாத்தானும் தனக்குத்தானே விரோதமாய்ப் பிரிந்திருந்தால் அவன் ராஜ்யம் எப்படி நிலைநிற்கும்? இப்படியிருக்க, பெயெல்செபூலைக்கொண்டு நான் பிசாசுகளைத் துரத்துகிறேன் என்கிறீர்களே.
19. நான் பெயெல்செபூலினாலே பிசாசுகளைத் துரத்தினால், உங்கள் பிள்ளைகள் அவைகளை யாராலே துரத்துகிறார்கள்? ஆகையால், அவர்களே உங்களை நியாயந்தீர்க்கிறவர்களாயிருப்பார்கள்.
20. நான் தேவனுடைய விரலினாலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கிறதே.
21. ஆயுதந்தரித்த பலவான் தன் அரமனையைக் காக்கிறபோது, அவனுடைய பொருள் பத்திரப்பட்டிருக்கும்.
22. அவனிலும் அதிக பலவான் வந்து, அவனை மேற்கொள்வானேயாகில், அவன் நம்பியிருந்த சகல ஆயுதவர்க்கத்தையும் பறித்துக்கொண்டு, அவனுடைய கொள்ளைப்பொருளைப் பங்கிடுவான்.
23. என்னோடே இராதவன் எனக்கு விரோதியாயிருக்கிறான், என்னோடே சேர்க்காதவன் சிதறடிக்கிறான்.
24. அசுத்தஆவி ஒரு மனுஷனை விட்டுப் புறப்படும்போது, வறண்ட இடங்களில் அலைந்து, இளைப்பாறுதல் தேடியும் கண்டடையாமல்: நான் விட்டுவந்த என் வீட்டுக்குத் திரும்பிப்போவேன் என்று சொல்லி,
25. அதில் வரும்போது, அது பெருக்கி ஜோடிக்கப்பட்டிருக்கக் கண்டு,
26. திரும்பிப்போய், தன்னிலும் பொல்லாத வேறு ஏழு ஆவிகளைக் கூட்டிக்கொண்டுவந்து, உட்புகுந்து, அங்கே குடியிருக்கும்; அப்பொழுது அந்த மனுஷனுடைய முன்னிலைமையிலும் அவன் பின்னிலைமை அதிக கேடுள்ளதாயிருக்கும் என்றார்.
27. அவர் இவைகளைச் சொல்லுகையில், ஜனக்கூட்டத்திலிருந்த ஒரு ஸ்திரீ அவரை நோக்கி: உம்மைச் சுமந்த கர்ப்பமும் நீர் பாலுண்ட முலைகளும் பாக்கியமுள்ளவைகளென்று சத்தமிட்டுச் சொன்னாள்.
28. அதற்கு அவர்: அப்படியானாலும், தேவனுடைய வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்துக்கொள்ளுகிறவர்களே அதிக பாக்கியவான்கள் என்றார்.
29. ஜனங்கள் திரளாய்க் கூடிவந்திருக்கிறபொழுது அவர்: இந்தச் சந்ததியார் பொல்லாதவர்களாயிருக்கிறார்கள், அடையாளத்தைத் தேடுகிறார்கள்; ஆனாலும் யோனா தீர்க்கதரிசியின் அடையாளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை.
30. யோனா நினிவே பட்டணத்தாருக்கு அடையாளமாயிருந்ததுபோல, மனுஷகுமாரனும் இந்தச் சந்ததிக்கு அடையாளமாயிருப்பார்.
31. தென்தேசத்து ராஜஸ்திரீ சாலொமோனுடைய ஞானத்தைக் கேட்கப் பூமியின் எல்லைகளிலிருந்து வந்தாள்; இதோ, சாலொமோனிலும் பெரியவர் இங்கே இருக்கிறார்; ஆதலால் நியாயத்தீர்ப்பு நாளிலே அந்த ராஜஸ்திரீ இந்தச் சந்ததியாரோடெழுந்து நின்று, இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவாள்.
32. யோனாவின் பிரசங்கத்தைக் கேட்டு நினிவே பட்டணத்தார் மனந்திரும்பினார்கள்; இதோ, யோனாவிலும் பெரியவர் இங்கே இருக்கிறார்; ஆதலால் நியாயத்தீர்ப்புநாளிலே நினிவே பட்டணத்தார் இந்தச் சந்ததியாரோடெழுந்து நின்று, இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவார்கள்.
33. ஒருவனும் விளக்கைக் கொளுத்தி, மறைவிடத்திலாவது, மரக்காலின் கீழேயாவது வைக்காமல், உள்ளே வருகிறவர்கள் வெளிச்சம் காணும்படி, அதை விளக்குத்தண்டின்மேல் வைப்பான்.
34. கண்ணானது சரீரத்தின் விளக்காயிருக்கிறது; உன் கண் தெளிவாயிருந்தால், உன் சரீரமுழுவதும் வெளிச்சமாயிருக்கும்; உன் கண் கெட்டதாயிருந்தால் உன் சரீரம் முழுவதும் இருளாயிருக்கும்.
35. ஆகையால் உன்னிலுள்ள வெளிச்சம் இருளாகாதபடிக்கு எச்சரிக்கையாயிரு.
36. உன் சரீரம் ஒருபுறத்திலும் இருளடைந்திராமல் முழுவதும் வெளிச்சமாயிருந்தால், ஒரு விளக்கு தன் பிரகாசத்தினாலே உனக்கு வெளிச்சம் கொடுக்கிறதுபோல உன் சரீரமுழுவதும் வெளிச்சமாயிருக்கும் என்றார்.
37. அவர் இப்படிப் பேசிக்கொண்டிருக்கையில், பரிசேயன் ஒருவன் தன்னுடனேகூட அவர் பகற்போஜனம் பண்ணவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டான்; அவர் போய்ப் பந்தியிருந்தார்.
38. அவர் போஜனம்பண்ணுகிறதற்குமுன் கைகழுவாமலிருந்ததைப் பரிசேயன் கண்டு, ஆச்சரியப்பட்டான்.
39. கர்த்தர் அவனை நோக்கி: பரிசேயராகிய நீங்கள் போஜனபான பாத்திரங்களின் வெளிப்புறத்தைச் சுத்தமாக்குகிறீர்கள், உங்கள் உள்ளமோ கொள்ளையினாலும் பொல்லாப்பினாலும் நிறைந்திருக்கிறது.
40. மதிகேடரே, வெளிப்புறத்தை உண்டாக்கினவர் உட்புறத்தையும் உண்டாக்கவில்லையோ?
41. உங்களுக்கு உண்டானவைகளில் பிச்சை கொடுங்கள், அப்பொழுது சகலமும் உங்களுக்குச் சுத்தமாயிருக்கும்.
42. பரிசேயரே, உங்களுக்கு ஐயோ, நீங்கள் ஒற்தலாம் மருக்கொழுந்து முதலிய சகலவித பூண்டுகளிலும் தசமபாகம் கொடுத்து, நியாயத்தையும் தேவ அன்பையும் விட்டுவிடுகிறீர்கள்; இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விடாதிருக்கவேண்டுமே.
43. பரிசேயரே, உங்களுக்கு ஐயோ, ஜெப ஆலயங்களில் முதன்மையான ஆசனங்களையும், சந்தைகளில் வந்தனங்களையும் விரும்புகிறீர்கள்.
44. மாயக்காரராகிய வேதபாரகரே, பரிசேயரே, உங்களுக்கு ஐயோ, மறைந்திருக்கிற பிரேதக்குழிகளைப்போலிருக்கிறீர்கள், அவைகள்மேல் நடக்கிற மனுஷருக்கு அவைகள் தெரியாதிருக்கிறது என்றார்.
45. அப்பொழுது நியாயசாஸ்திரிகளில் ஒருவன் அவரை நோக்கி: போதகரே, நீர் இப்படிச் சொல்லுகிறதினால் எங்களையும் நிந்திக்கிறீரே என்றான்.
46. அதற்கு அவர்: நியாயசாஸ்திரிகளே, உங்களுக்கு ஐயோ, சுமக்க அரிதான சுமைகளை மனுஷர்மேல் சுமத்துகிறீர்கள்; நீங்களோ உங்கள் விரல்களில் ஒன்றினாலும் அந்தச் சுமைகளைத் தொடவும்மாட்டீர்கள்.
47. உங்களுக்கு ஐயோ, உங்கள் பிதாக்கள் கொலைசெய்த தீர்க்கதரிசிகளுக்குக் கல்லறைகளைக் கட்டுகிறீர்கள்.
48. ஆகையால் உங்கள் பிதாக்களுடைய கிரியைகளுக்கு நீங்களும் உடன்பட்டவர்களென்று சாட்சியிடுகிறீர்கள்; எப்படியென்றால், உங்கள் பிதாக்கள் அவர்களைக் கொலைசெய்தார்கள், நீங்களோ அவர்களுக்குக் கல்லறைகளைக் கட்டுகிறீர்கள்.
49. ஆதலால் தேவஞானமானது: நான் தீர்க்கதரிசிகளையும் அப்போஸ்தலர்களையும் அவர்களிடத்தில் அனுப்புவேன்; அவர்களில் சிலரைக் கொலைசெய்து, சிலரைத் துன்பப்படுத்துவார்கள்;
50. ஆபேலின் இரத்தம்முதல் பலிபீடத்துக்கும் தேவாலயத்துக்கும் நடுவே கொலையுண்ட சகரியாவின் இரத்தம்வரைக்கும், உலகத்தோற்றமுதற்கொண்டு சிந்தப்பட்ட சகல தீர்க்கதரிசிகளுடைய இரத்தப்பழியும் இந்தச் சந்ததியினிடத்தில் கேட்கப்படத்தக்கதாக அப்படிச் செய்வார்கள் என்று சொல்லுகிறது.
51. நிச்சயமாகவே இந்தச் சந்ததியினிடத்தில் அது கேட்கப்படும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
52. நியாயசாஸ்திரிகளே, உங்களுக்கு ஐயோ, அறிவாகிய திறவுகோலை எடுத்துக் கொண்டீர்கள், நீங்களும் உட்பிரவேசிக்கிறதில்லை, உட்பிரவேசிக்கிறவர்களையும் தடைபண்ணுகிறீர்கள் என்றார்.
53. இவைகளை அவர்களுக்கு அவர் சொல்லுகையில், வேதபாரகரும் பரிசேயரும் அவர்மேல் குற்றஞ்சாட்டும் பொருட்டு, அவர் வாய்மொழியில் ஏதாகிலும் பிழை கண்டுபிடிக்கவேண்டும் என்று உபாயம்பண்ணி அவரை மிகவும் நெருக்கவும்,
54. அநேக காரியங்களைக்குறித்துப் பேசும்படி அவரை ஏவவும் தொடங்கினார்கள்.

Chapter 12

1. அத்தருணத்திலே அநேகமாயிரம் ஜனங்கள் ஒருவரையொருவர் மிதிக்கத்தக்கதாகக் கூடிவந்திருக்கையில், அவர் முதலாவது தம்முடைய சீஷரை நோக்கி: நீங்கள் மாயமாகிய பரிசேயருடைய புளித்தமாவைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்.
2. வெளியாக்கப்படாத மறைபொருளுமில்லை, அறியப்படாத இரகசியமுமில்லை.
3. ஆதலால், நீங்கள் இருளிலே பேசினது எதுவோ, அது வெளிச்சத்திலே கேட்கப்படும்; நீங்கள் அறைகளில் காதிலே சொன்னது எதுவோ, அது வீடுகளின்மேல் கூறப்படும்.
4. என் சிநேகிதராகிய உங்களுக்கு நான் சொல்லுகிறேன்: சரீரத்தைக் கொலைசெய்து, அதன்பின்பு அதிகமாக ஒன்றும் செய்யத் திராணியில்லாதவர்களுக்குப் பயப்படாதிருங்கள்.
5. நீங்கள் இன்னாருக்குப் பயப்படவேண்டுமென்று உங்களுக்குக் காண்பிக்கிறேன்: கொலைசெய்தபின்பு நரகத்திலே தள்ள வல்லமையுள்ளவருக்குப் பயப்படுங்கள்; ஆம், அவருக்கே பயப்படுங்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
6. இரண்டு காசுக்கு ஐந்து அடைக்கலான் குருவிகளை விற்கிறார்களல்லவா? அவைகளில் ஒன்றாகிலும் தேவனால் மறக்கப் படுகிறதில்லை.
7. உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது, ஆகையால் பயப்படாதிருங்கள், அநேகம் அடைக்கலான் குருவிகளைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்.
8. அன்றியும் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: மனுஷர் முன்பாக என்னை அறிக்கைபண்ணுகிறவன் எவனோ, அவனை மனுஷகுமாரனும் தேவதூதர் முன்பாக அறிக்கைபண்ணுவார்.
9. மனுஷர் முன்பாக என்னை மறுதலிக்கிறவன் தேவதூதர் முன்பாக மறுதலிக்கப்படுவான்.
10. எவனாகிலும் மனுஷகுமாரனுக்கு விரோதமான விசேஷத்தைச் சொன்னால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்; பரிசுத்த ஆவிக்கு விரோதமாய்த் தூஷணஞ் சொல்லுகிறவனுக்கோ மன்னிக்கப்படுவதில்லை.
11. அன்றியும், ஜெப ஆலயத்தலைவர்களுக்கும் துரைத்தனத்தார்களுக்கும் அதிகாரமுள்ளவர்களுக்கும் முன்பாக உங்களைக் கொண்டுபோய் விடும்போது: எப்படி, என்னத்தை மாறுத்தரமாகச் சொல்லுவோம் என்றும், எதைப் பேசுவோம் என்றும் கவலைப்படாதிருங்கள்.
12. நீங்கள் பேசவேண்டியவைகளைப் பரிசுத்த ஆவியானவர் அந்நேரத்திலே உங்களுக்குப் போதிப்பார் என்றார்.
13. அப்பொழுது ஜனக்கூட்டத்தில் ஒருவன் அவரை நோக்கி: போதகரே, ஆஸ்தியைப் பாகம்பிரித்து என் வீதத்தை எனக்குத் தரும்படி என் சகோதரனுக்குக் கட்டளையிடவேண்டும் என்று கேட்டுக்கொண்டான்.
14. அதற்கு அவர்: மனுஷனே, என்னை உங்களுக்கு நியாயாதிபதியாகவும் பங்கிடுகிறவனாகவும் வைத்தவன் யார் என்றார்.
15. பின்பு அவர் அவர்களை நோக்கி: பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல என்றார்.
16. அல்லாமலும், ஒரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: ஐசுவரியமுள்ள ஒருவனுடைய நிலம் நன்றாய் விளைந்தது.
17. அப்பொழுது அவன்: நான் என்ன செய்வேன்? என் தானியங்களைச் சேர்த்து வைக்கிறதற்கு இடமில்லையே;
18. நான் ஒன்று செய்வேன், என் களஞ்சியங்களை இடித்து, பெரிதாகக் கட்டி, எனக்கு விளைந்த தானியத்தையும் என் பொருள்களையும் அங்கே சேர்த்துவைத்து,
19. பின்பு: ஆத்துமாவே, உனக்காக அநேக வருஷங்களுக்கு அநேகம் பொருள்கள் சேர்த்து வைக்கப்பட்டிருக்கிறது; நீ இளைப்பாறி, புசித்துக் குடித்து, பூரிப்பாயிரு என்று என் ஆத்துமாவோடே சொல்லுவேன் என்று தனக்குள்ளே சிந்தித்துச் சொல்லிக்கொண்டான்.
20. தேவனோ அவனை நோக்கி: மதிகேடனே, உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக் கொள்ளப்படும், அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருடையதாகும் என்றார்.
21. தேவனிடத்தில் ஐசுவரியவானாயிராமல், தனக்காகவே பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கிறவன் இப்படியே இருக்கிறான் என்றார்.
22. பின்னும் அவர் தம்முடைய சீஷரை நோக்கி: இப்படியிருக்கிறபடியினால், என்னத்தை உண்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும், என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
23. ஆகாரத்தைப்பார்க்கிலும் ஜீவனும், உடையைப்பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகளாயிருக்கிறது.
24. காகங்களைக் கவனித்துப்பாருங்கள், அவைகள் விதைக்கிறதுமில்லை அறுக்கிறதுமில்லை, அவைகளுக்குப் பண்டசாலையுமில்லை, களஞ்சியமுமில்லை, இல்லாவிட்டாலும் அவைகளையும் தேவன் பிழைப்பூட்டுகிறார்; பறவைகளைப்பார்க்கிலும் நீங்கள் எவ்வளவோ விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்.
25. கவலைப்படுகிறதினால் உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்.
26. மிகவும் அற்பமான காரியமுதலாய் உங்களால் செய்யக்கூடாதிருக்க, மற்றவைகளுக்காக நீங்கள் கவலைப்படுகிறதென்ன?
27. காட்டுப்புஷ்பங்கள் எப்படி வளருகிறதென்று கவனித்துப்பாருங்கள்; அவைகள் உழைக்கிறதுமில்லை, நூற்கிறதுமில்லை, என்றாலும் சாலொமோன் முதலாய்த் தன் சர்வ மகிமையிலும் அவைகளில் ஒன்றைப்போலாகிலும் உடுத்தியிருந்ததில்லை என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
28. இப்படியிருக்க, அற்பவிசுவாசிகளே, இன்றைக்குக் காட்டிலிருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படுகிற புல்லுக்குத் தேவன் இவ்விதமாக உடுத்துவித்தால், உங்களுக்கு உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா?
29. ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று, நீங்கள் கேளாமலும் சந்தேகப்படாமலும் இருங்கள்.
30. இவைகளையெல்லாம் உலகத்தார் நாடித் தேடுகிறார்கள்; இவைகள் உங்களுக்கு வேண்டியவைகளென்று உங்கள் பிதாவானவர் அறிந்திருக்கிறார்.
31. தேவனுடைய ராஜ்யத்தையே தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்.
32. பயப்படாதே சிறுமந்தையே, உங்களுக்கு ராஜ்யத்தைக் கொடுக்க உங்கள் பிதா பிரியமாயிருக்கிறார்.
33. உங்களுக்கு உள்ளவைகளை விற்றுப் பிச்சைகொடுங்கள், பழமையாய்ப் போகாத பணப்பைகளையும் குறையாத பொக்கிஷத்தையும் பரலோகத்திலே உங்களுக்குச் சம்பாதித்து வையுங்கள், அங்கே திருடன் அணுகுகிறதுமில்லை, பூச்சி கெடுக்கிறதுமில்லை.
34. உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்.
35. உங்கள் அரைகள் கட்டப்பட்டதாகவும், உங்கள் விளக்குகள் எரிகிறதாகவும்,
36. தங்கள் எஜமான் கலியாணத்திலிருந்து வந்து தட்டும்போது, உடனே அவருக்குத் திறக்கும்படி எப்பொழுது வருவார் என்று காத்திருக்கிற மனுஷருக்கு ஒப்பாகவும் இருங்கள்.
37. எஜமான் வரும்போது, விழித்திருக்கிறவர்களாகக் காணப்படுகிற ஊழியக்காரரே பாக்கியவான்கள். அவர் அரைகட்டிக்கொண்டு, அவர்களைப் பந்தியிருக்கச்செய்து, சமீபமாய் வந்து, அவர்களுக்கு ஊழியஞ்செய்வார் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
38. அவர் இரண்டாம் ஜாமத்திலாவது மூன்றாம் ஜாமத்திலாவது வந்து, அவர்கள் அப்படியே இருக்கக்கண்டால், அவ்வூழியக்காரர் பாக்கியவான்கள்.
39. திருடன் இன்னநேரத்தில் வருவான் என்று வீட்டெஜமானுக்குத் தெரிந்திருந்தால், அவன் விழித்திருந்து, தன் வீட்டைக் கன்னமிடவொட்டான் என்று அறிந்திருக்கிறீர்கள்.
40. அந்தப்படியே நீங்கள் நினையாத நேரத்தில் மனுஷகுமாரன் வருவார், ஆகையால் நீங்களும் ஆயத்தமாயிருங்கள் என்றார்.
41. அப்பொழுது பேதுரு அவரை நோக்கி: ஆண்டவரே, இந்த உவமையை எங்களுக்குமாத்திரம் சொல்லுகிறீரோ, எல்லாருக்கும் சொல்லுகிறீரோ என்று கேட்டான்.
42. அதற்குக் கர்த்தர்: பணிவிடைக்காரருக்குத் தகுதியான காலத்திலே படிகொடுக்கும்படி எஜமான் அவர்கள்மேல் அதிகாரியாக வைக்கத்தக்க உண்மையும் விவேகமுமுள்ள விசாரணைக்காரன் யாவன்?
43. எஜமான் வரும்போது அப்படியே செய்கிறவனாய்க் காணப்படுகிற ஊழியக்காரன் பாக்கியவான்.
44. தனக்குள்ளதெல்லாவற்றின்மேலும் அவனை விசாரணைக்காரனாக வைப்பான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
45. அந்த ஊழியக்காரனோ, என் எஜமான் வர நாள் செல்லும் என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டு, வேலைக்காரரையும் வேலைக்காரிகளையும் அடிக்கவும், புசித்துக் குடித்து வெறிக்கவும் தலைப்பட்டால்,
46. அவன் நினையாத நாளிலும், அறியாத நேரத்திலும், அந்த ஊழியக்காரனுடைய எஜமான் வந்து, அவனைக் கடினமாய்த் தண்டித்து, உண்மையில்லாதவர்களோடே அவனுக்குப் பங்கை நியமிப்பான்.
47. தன் எஜமானுடைய சித்தத்தை அறிந்தும் ஆயத்தமாயிராமலும், அவனுடைய சித்தத்தின்படி செய்யாமலும் இருந்த ஊழியக்காரன் அநேக அடிகள் அடிக்கப்படுவான்.
48. அறியாதவனாயிருந்து, அடிகளுக்கு ஏதுவானவைகளைச் செய்தவனோ, சில அடிகள் அடிக்கப்படுவான். எவனிடத்தில் அதிகங் கொடுக்கப்படுகிறதோ அவனிடத்தில் அதிகங் கேட்கப்படும்; மனுஷர் எவனிடத்தில் அதிகமாய் ஒப்புவிக்கிறார்களோ அவனிடத்தில் அதிகமாய்க் கேட்பார்கள்.
49. பூமியின்மேல் அக்கினியைப் போடவந்தேன், அது இப்பொழுதே பற்றி எரிய வேண்டுமென்று விரும்புகிறேன்.
50. ஆகிலும் நான் முழுகவேண்டிய ஒரு ஸ்நானமுண்டு, அது முடியுமளவும் எவ்வளவோ நெருக்கப்படுகிறேன்.
51. நான் பூமியிலே சமாதானத்தை உண்டாக்கவந்தேன் என்று நினைக்கிறீர்களோ? சமாதானத்தையல்ல, பிரிவினையையே உண்டாக்கவந்தேன் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
52. எப்படியெனில், இதுமுதல் ஒரே வீட்டிலே ஐந்துபேர் பிரிந்திருப்பார்கள், இரண்டுபேருக்கு விரோதமாய் மூன்றுபேரும், மூன்றுபேருக்கு விரோதமாய் இரண்டுபேரும் பிரிந்திருப்பார்கள்.
53. தகப்பன் மகனுக்கும் மகன் தகப்பனுக்கும், தாய் மகளுக்கும் மகள் தாய்க்கும், மாமி மருமகளுக்கும் மருமகள் மாமிக்கும் விரோதமாய்ப் பிரிந்திருப்பார்கள் என்றார்.
54. பின்பு அவர் ஜனங்களை நோக்கி: மேற்கே மேகம் எழும்புகிறதை நீங்கள் காணும்போது, மழை வருமென்று சொல்லுகிறீர்கள்; அந்தப்படியுமாகும்.
55. தென்றல் அடிக்கிறதை நீங்கள் காணும்போது உஷ்ணம் உண்டாகுமென்று சொல்லுகிறீர்கள், அந்தப்படியுமாகும்.
56. மாயக்காரரே, பூமியின் தோற்றத்தையும் வானத்தின் தோற்றத்தையும் நிதானிக்க உங்களுக்குத் தெரியுமே, இந்தக் காலத்தையோ நிதானியாமற்போகிறதென்ன?
57. நியாயம் இன்னதென்று நீங்களே தீர்மானியாமலிருக்கிறதென்ன?
58. உனக்கு எதிராளியானவன் உன்னை அதிகாரியினிடத்திற்குக் கொண்டுபோகிறபோது, வழியிலேதானே அவனிடத்திலிருந்து விடுதலையாகும்படி பிரயாசப்படு, இல்லாவிட்டால், அவன் உன்னை நியாயாதிபதிக்கு முன்பாகக் கொண்டுபோவான், நியாயாதிபதி உன்னைச் சேவகனிடத்தில் ஒப்புக்கொடுப்பான், சேவகன் உன்னைச் சிறைச்சாலையில் போடுவான்.
59. நீ கடைசிக்காசைக் கொடுத்துத் தீர்க்குமட்டும், அவ்விடத்திலிருந்து புறப்படமாட்டாய் என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.

Chapter 13

1. பிலாத்து சில கலிலேயருடைய இரத்தத்தை அவர்களுடைய பலிகளோடே கலந்திருந்தான்; அந்த வேளையிலே அங்கே இருந்தவர்களில் சிலர் அந்தச் செய்தியை அவருக்கு அறிவித்தார்கள்.
2. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: அந்தக் கலிலேயருக்கு அப்படிப்பட்டவைகள் சம்பவித்ததினாலே, மற்ற எல்லாக் கலிலேயரைப் பார்க்கிலும் அவர்கள் பாவிகளாயிருந்தார்களென்று நினைக்கிறீர்களோ?
3. அப்படியல்லவென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; நீங்கள் மனந்திரும்பாமற்போனால் எல்லாரும் அப்படியே கெட்டுப்போவீர்கள்.
4. சீலோவாமிலே கோபுரம் விழுந்து பதினெட்டுப்பேரைக் கொன்றதே; எருசலேமில் குடியிருக்கிற மனுஷரெல்லாரிலும் அவர்கள் குற்றவாளிகளாயிருந்தார்களென்று நினைக்கிறீர்களோ?
5. அப்படியல்லவென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; நீங்கள் மனந்திரும்பாமற்போனால் எல்லாரும் அப்படியே கெட்டுப்போவீர்கள் என்றார்.
6. அப்பொழுது அவர் ஒரு உவமையையும் சொன்னார்: ஒருவன் தன் திராட்சத்தோட்டத்தில் ஒரு அத்திமரத்தை நட்டிருந்தான்; அவன் வந்து அதிலே கனியைத் தேடினபோது ஒன்றுங் காணவில்லை.
7. அப்பொழுது அவன் தோட்டக்காரனை நோக்கி: இதோ, மூன்று வருஷமாய் இந்த அத்திமரத்திலே கனியைத் தேடி வருகிறேன்; ஒன்றையுங் காணவில்லை, இதை வெட்டிப்போடு, இது நிலத்தையும் ஏன் கெடுக்கிறது என்றான்.
8. அதற்கு அவன்: ஐயா, இது இந்த வருஷமும் இருக்கட்டும்; நான் இதைச் சுற்றிலுங் கொத்தி, எருப்போடுவேன்,
9. கனிகொடுத்தால் சரி, கொடாவிட்டால், இனிமேல் இதை வெட்டிப்போடலாம் என்று சொன்னான் என்றார்.
10. ஒரு ஓய்வுநாளில் அவர் ஜெபஆலயத்தில் போதகம்பண்ணிக்கொண்டிருந்தார்.
11. அப்பொழுது பதினெட்டு வருஷமாய்ப் பலவீனப்படுத்தும் ஆவியைக் கொண்ட ஒரு ஸ்திரீ அங்கேயிருந்தாள். அவள் எவ்வளவும் நிமிரக்கூடாத கூனியாயிருந்தாள்.
12. இயேசு அவளைக் கண்டு, தம்மிடத்தில் அழைத்து: ஸ்திரீயே, உன் பலவீனத்தினின்று விடுதலையாக்கப்பட்டாய் என்று சொல்லி,
13. அவள்மேல் தமது கைகளை வைத்தார்; உடனே அவள் நிமிர்ந்து, தேவனை மகிமைப்படுத்தினாள்.
14. இயேசு ஓய்வுநாளிலே சொஸ்தமாக்கினபடியால், ஜெப ஆலயத்தலைவன் கோபமடைந்து, ஜனங்களை நோக்கி: வேலைசெய்கிறதற்கு ஆறுநாள் உண்டே, அந்த நாட்களிலே நீங்கள் வந்து சொஸ்தமாக்கிக்கொள்ளுங்கள், ஓய்வுநாளிலே அப்படிச் செய்யலாகாது என்றான்.
15. கர்த்தர் அவனுக்குப் பிரதியுத்தரமாக: மாயக்காரனே, உங்களில் எவனும் ஓய்வுநாளில் தன் எருதையாவது தன் கழுதையையாவது தொழுவத்திலிருந்து அவிழ்த்துக்கொண்டுபோய், அதற்குத் தண்ணீர் காட்டுகிறதில்லையா?
16. இதோ, சாத்தான் பதினெட்டு வருஷமாய்க் கட்டியிருந்த ஆபிரகாமின் குமாரத்தியாகிய இவளை ஓய்வுநாளில் இந்தக் கட்டிலிருந்து அவிழ்த்துவிடவேண்டியதில்லையா என்றார்.
17. அவர் அப்படிச் சொன்னபோது, அவரை விரோதித்திருந்த அனைவரும் வெட்கப்பட்டார்கள். ஜனங்களெல்லாரும் அவரால் செய்யப்பட்ட சகல மகிமையான செய்கைகளைக்குறித்தும் சந்தோஷப்பட்டார்கள்.
18. அவர் அவர்களை நோக்கி: தேவனுடைய ராஜ்யம் எதற்கொப்பாயிருக்கிறது; அதை எதற்கு ஒப்பிடுவேன்?
19. அது ஒரு கடுகுவிதைக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு மனுஷன் எடுத்துத் தன் தோட்டத்திலே போட்டான்; அது வளர்ந்து, பெரிய மரமாயிற்று; ஆகாயத்துப் பறவைகள் வந்து, அதின் கிளைகளில் அடைந்தது என்றார்.
20. மேலும் அவர்: தேவனுடைய ராஜ்யத்தை நான் எதற்கு ஒப்பிடுவேன்?
21. அது புளித்தமாவுக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு ஸ்திரீ எடுத்து முழுவதும் புளிக்கும்வரைக்கும் மூன்றுபடிமாவிலே அடக்கிவைத்தாள் என்றார்.
22. அவர் எருசலேமுக்குப் பிரயாணமாய்ப் போகும்போது, பட்டணங்கள்தோறும் கிராமங்கள்தோறும் உபதேசம் பண்ணிக்கொண்டு போனார்.
23. அப்பொழுது ஒருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, இரட்சிக்கப்படுகிறவர்கள் சிலபேர்தானோ என்று கேட்டான்; அதற்கு அவர்:
24. இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள், அநேகர் உட்பிரவேசிக்க வகைதேடினாலும் அவர்களாலே கூடாமற்போகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
25. வீட்டெஜமான் எழுந்து, கதவைப் பூட்டினபின்பு, நீங்கள் வெளியே நின்று: ஆண்டவரே, ஆண்டவரே, எங்களுக்குத் திறக்கவேண்டுமென்று சொல்லிக் கதவைத் தட்டும்போது, அவர் பிரதியுத்தரமாக: நீங்கள் எவ்விடத்தாரோ, உங்களை அறியேன் என்று உங்களுக்குச் சொல்லுவார்.
26. அப்பொழுது நீங்கள்: உம்முடைய சமுகத்தில் போஜனபானம்பண்ணினோமே, நீர் எங்கள் வீதிகளில் போதகம்பண்ணினீரே என்று சொல்லுவீர்கள்.
27. ஆனாலும் அவர்: நீங்கள் எவ்விடத்தாரோ, உங்களை அறியேன், அக்கிரமக்காரராகிய நீங்களெல்லாரும் என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று சொல்லுவார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
28. நீங்கள் ஆபிரகாமையும் ஈசாக்கையும் யாக்கோபையும் சகல தீர்க்கதரிசிகளையும் தேவனுடைய ராஜ்யத்திலிருக்கிறவர்களாகவும், உங்களையோ புறம்பே தள்ளப்பட்டவர்களாகவும் காணும்போது உங்களுக்கு அழுகையும் பற்கடிப்பும் அங்கே உண்டாயிருக்கும்.
29. கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலும் இருந்து ஜனங்கள் வந்து, தேவனுடைய ராஜ்யத்தில் பந்தியிருப்பார்கள்.
30. அப்பொழுது முந்தினோர் பிந்தினோராவார்கள், பிந்தினோர் முந்தினோராவார்கள் என்றார்.
31. அந்த நாளிலே சில பரிசேயர் அவரிடத்தில் வந்து: நீர் இவ்விடத்தை விட்டுப் போய்விடும்; ஏரோது உம்மைக் கொலைசெய்ய மனதாய் இருக்கிறான் என்றார்கள்.
32. அதற்கு அவர்: நான் இன்றைக்கும் நாளைக்கும் பிசாசுகளைத் துரத்தி, வியாதியுள்ளவர்களைச் சொஸ்தமாக்கி, மூன்றாம் நாளில் நிறைவடைவேன்.
33. இன்றைக்கும் நாளைக்கும் மறுநாளைக்கும் நான் நடமாடவேண்டும்; எருசலேமுக்குப் புறம்பே ஒரு தீர்க்கதரிசியும் மடிந்துபோகிறதில்லையென்று நான் சொன்னதாக நீங்கள் போய் அந்த நரிக்குச் சொல்லுங்கள்.
34. எருசலேமே, எருசலேமே, தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்து, உன்னிடத்தில் அனுப்பப்பட்டவர்களைக் கல்லெறிகிறவளே! கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின் கீழே கூட்டிச் சேர்த்துக் கொள்ளும் வண்ணமாக நான் எத்தனைதரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச் சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன்; உங்களுக்கோ மனதில்லாமற்போயிற்று.
35. இதோ, உங்கள் வீடு உங்களுக்குப் பாழாக்கிவிடப்படும்; கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர் என்று நீங்கள் சொல்லுங்காலம் வருமளவும் என்னைக் காணாதிருப்பீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

Chapter 14

1. ஒரு ஓய்வுநாளிலே பரிசேயரில் தலைவனாகிய ஒருவனுடைய வீட்டிலே அவர் போஜனம் பண்ணும்படிக்குப் போயிருந்தார்.
2. அப்பொழுது நீர்க்கோவை வியாதியுள்ள ஒரு மனுஷன் அவருக்கு முன்பாக இருந்தான். என்ன செய்வாரோவென்று ஜனங்கள் அவர்மேல் நோக்கமாயிருந்தார்கள்.
3. இயேசு நியாயசாஸ்திரிகளையும் பரிசேயரையும் பார்த்து: ஓய்வு நாளிலே சொஸ்தமாக்குகிறது நியாயமா என்று கேட்டார்.
4. அதற்கு அவர்கள் பேசாமலிருந்தார்கள். அப்பொழுது அவர் அவனை அழைத்து, சொஸ்தமாக்கி, அனுப்பிவிட்டு,
5. அவர்களை நோக்கி: உங்களில் ஒருவனுடைய கழுதையாவது எருதாவது ஓய்வுநாளில் துரவிலே விழுந்தால், அவன் அதை உடனே தூக்கிவிடானோ என்றார்.
6. அதற்கு உத்தரவுசொல்ல அவர்களால் கூடாமற்போயிற்று.
7. விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் பந்தியில் முதன்மையான இடங்களைத் தெரிந்துகொண்டதை அவர் பார்த்து, அவர்களுக்கு ஒரு உவமையைச் சொன்னார்:
8. ஒருவனால் கலியாணத்துக்கு நீ அழைக்கப்பட்டிருக்கும்போது, பந்தியில் முதன்மையான இடத்தில் உட்காராதே; உன்னிலும் கனமுள்ளவன் ஒருவேளை அவனால் அழைக்கப்பட்டிருப்பான்.
9. அப்பொழுது உன்னையும் அவனையும் அழைத்தவன் உன்னிடத்தில் வந்து: இவருக்கு இடங்கொடு என்பான்; அப்பொழுது நீ வெட்கத்தோடே தாழ்ந்த இடத்திற்குப் போகவேண்டியதாயிருக்கும்.
10. நீ அழைக்கப்பட்டிருக்கும்போது, போய், தாழ்ந்த இடத்தில் உட்காரு; அப்பொழுது உன்னை அழைத்தவன் வந்து: சிநேகிதனே, உயர்ந்த இடத்தில் வாரும் என்று சொல்லும்போது, உன்னுடனேகூடப் பந்தியிருக்கிறவர்களுக்கு முன்பாக உனக்குக் கனமுண்டாகும்.
11. தன்னைத்தான் உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத்தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார்.
12. அன்றியும் அவர் தம்மை விருந்துக்கு அழைத்தவனை நோக்கி: நீ பகல்விருந்தாவது இராவிருந்தாவது பண்ணும்போது, உன் சிநேகிதரையாகிலும் உன் சகோதரரையாகிலும், உன் பந்து ஜனங்களையாகிலும், ஐசுவரியமுள்ள அயலகத்தாரையாகிலும் அழைக்கவேண்டாம்; அழைத்தால் அவர்களும் உன்னை அழைப்பார்கள், அப்பொழுது உனக்குப் பதிலுக்குப் பதில் செய்ததாகும்.
13. நீ விருந்துபண்ணும்போது ஏழைகளையும் ஊனரையும் சப்பாணிகளையும் குருடரையும் அழைப்பாயாக.
14. அப்பொழுது நீ பாக்கியவானாயிருப்பாய்; அவர்கள் உனக்குப் பதில் செய்யமாட்டார்கள்; நீதிமான்களின் உயிர்த்தெழுதலில் உனக்குப் பதில் செய்யப்படும் என்றார்.
15. அவரோடேகூடப் பந்தியிருந்தவர்களில் ஒருவன் இவைகளைக் கேட்டபொழுது, அவரை நோக்கி: தேவனுடைய ராஜ்யத்தில் போஜனம்பண்ணுகிறவன் பாக்கியவான் என்றான்.
16. அதற்கு அவர்: ஒரு மனுஷன் பெரியவிருந்தை ஆயத்தம்பண்ணி, அநேகரை அழைப்பித்தான்.
17. விருந்து வேளையில் தன் ஊழியக்காரனை நோக்கி: நீ அழைக்கப்பட்டவர்களிடத்தில் போய், எல்லாம் ஆயத்தமாயிருக்கிறது, வாருங்கள், என்று சொல்லென்று அவனை அனுப்பினான்.
18. அவர்களெல்லாரும் போக்குச்சொல்லத் தொடங்கினார்கள். ஒருவன்: ஒரு வயலைக்கொண்டேன், நான் அகத்தியமாய்ப்போய், அதைப் பார்க்கவேண்டும், என்னை மன்னிக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான்.
19. வேறொருவன்: ஐந்தேர்மாடு கொண்டேன், அதைச் சோதித்துப் பார்க்கப் போகிறேன், என்னை மன்னிக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான்.
20. வேறொருவன்: பெண்ணை விவாகம்பண்ணினேன், அதினால் நான் வரக்கூடாது என்றான்.
21. அந்த ஊழியக்காரன் வந்து, இவைகளைத் தன் எஜமானுக்கு அறிவித்தான். அப்பொழுது வீட்டெஜமான் கோபமடைந்து, தன் ஊழியக்காரனை நோக்கி: நீ பட்டணத்தின் தெருக்களிலும் வீதிகளிலும் சீக்கிரமாய்ப் போய், ஏழைகளையும் ஊனரையும் சப்பாணிகளையும் குருடரையும் இங்கே கூட்டிக்கொண்டுவா என்றான்.
22. ஊழியக்காரன் அப்படியே செய்து: ஆண்டவரே, நீர் கட்டளையிட்டபடி செய்தாயிற்று, இன்னும் இடம் இருக்கிறது என்றான்.
23. அப்பொழுது எஜமான் ஊழியக்காரனை நோக்கி: நீ பெருவழிகளிலும் வேலிகளருகிலும் போய், என் வீடு நிறையும்படியாக ஜனங்களை உள்ளே வரும்படி வருந்திக் கூட்டிக்கொண்டுவா;
24. அழைக்கப்பட்டிருந்த அந்த மனுஷரில் ஒருவனாகிலும் என் விருந்தை ருசிபார்ப்பதில்லை யென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றான் என்று சொன்னார்.
25. பின்பு அநேக ஜனங்கள் அவரோடேகூடப் பிரயாணமாய்ப் போகையில், அவர்களிடமாய் அவர் திரும்பிப்பார்த்து:
26. யாதொருவன் என்னிடத்தில் வந்து, தன் தகப்பனையும் தாயையும் மனைவியையும் பிள்ளைகளையும் சகோதரரையும் சகோதரிகளையும், தன் ஜீவனையும் வெறுக்காவிட்டால் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.
27. தன் சிலுவையைச் சுமந்துகொண்டு எனக்குப் பின்செல்லாதவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.
28. உங்களில் ஒருவன் ஒரு கோபுரத்தைக் கட்ட மனதாயிருந்து,
29. அஸ்திபாரம் போட்டபின்பு முடிக்கத் திராணியில்லாமற்போனால், பார்க்கிறவர்களெல்லாரும்:
30. இந்த மனுஷன் கட்டத்தொடங்கி, முடிக்கத் திராணியில்லாமற்போனான் என்று சொல்லித் தன்னைப் பரியாசம்பண்ணாதபடிக்கு, அதைக் கட்டித் தீர்க்கிறதற்குத் தனக்கு நிர்வாகமுண்டோ இல்லையோ என்று முன்பு அவன் உட்கார்ந்து செல்லுஞ்செலவைக் கணக்குப் பாராமலிருப்பானோ?
31. அன்றியும் ஒரு ராஜா மற்றொரு ராஜாவோடே யுத்தஞ்செய்யப் போகிறபோது, தன்மேல் இருபதினாயிரம் சேவகரோடே வருகிற அவனைத் தான் பதினாயிரம் சேவகரைக்கொண்டு எதிர்க்கக் கூடுமோ கூடாதோ என்று முன்பு உட்கார்ந்து ஆலோசனைபண்ணாமலிருப்பானோ?
32. கூடாதென்று கண்டால், மற்றவன் இன்னும் தூரத்திலிருக்கும்போதே, ஸ்தானாபதிகளை அனுப்பி, சமாதானத்துக்கானவைகளைக் கேட்டுக்கொள்வானே.
33. அப்படியே உங்களில் எவனாகிலும் தனக்கு உண்டானவைகளையெல்லாம் வெறுத்துவிடாவிட்டால் அவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.
34. உப்பு நல்லதுதான், உப்பு சாரமற்றுப்போனால் எதினால் சாரமாக்கப்படும்?
35. அது நிலத்துக்காகிலும் எருவுக்காகிலும் உதவாது, அதை வெளியே கொட்டிப் போடுவார்கள். கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றார்.

Chapter 15

1. சகல ஆயக்காரரும் பாவிகளும் அவருடைய வசனங்களைக் கேட்கும்படி அவரிடத்தில் வந்து சேர்ந்தார்கள்.
2. அப்பொழுது பரிசேயரும் வேதபாரகரும் முறுமுறுத்து: இவர் பாவிகளை ஏற்றுக்கொண்டு அவர்களோடே சாப்பிடுகிறார் என்றார்கள்.
3. அவர்களுக்கு அவர் சொன்ன உவமையாவது:
4. உங்களில் ஒரு மனுஷன் நூறு ஆடுகளை உடையவனாயிருந்து, அவைகளில் ஒன்று காணாமற்போனால், தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் வனாந்தரத்திலே விட்டு, காணாமற்போன ஆட்டைக் கண்டுபிடிக்குமளவும் தேடித்திரியானோ?
5. கண்டுபிடித்தபின்பு, அவன் சந்தோஷத்தோடே அதைத் தன் தோள்களின்மேல் போட்டுக்கொண்டு,
6. வீட்டுக்கு வந்து, சிநேகிதரையும் அயலகத்தாரையும் கூட வரவழைத்து: காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்தேன் என்னோடுகூடச் சந்தோஷப்படுங்கள் என்பான் அல்லவா?
7. அதுபோல, மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைக்குறித்துச் சந்தோஷம் உண்டாகிறதைப்பார்க்கிலும் மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
8. அன்றியும், ஒரு ஸ்திரீ பத்து வெள்ளிக்காசை உடையவளாயிருந்து, அதில் ஒரு வெள்ளிக்காசு காணாமற்போனால், விளக்கைக் கொளுத்தி, வீட்டைப் பெருக்கி, அதைக் கண்டுபிடிக்கிறவரைக்கும் ஜாக்கிரதையாய்த் தேடாமலிருப்பாளோ?
9. கண்டுபிடித்தபின்பு, தன் சிநேகிதிகளையும் அயல் வீட்டுக்காரிகளையும் கூட வரவழைத்து: காணாமற்போன வெள்ளிக்காசைக் கண்டுபிடித்தேன், என்னோடுகூடச் சந்தோஷப்படுங்கள் என்பாள் அல்லவா?
10. அதுபோல மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் தேவனுடைய தூதர்களுக்கு முன்பாகச் சந்தோஷமுண்டாயிருக்கிறது என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
11. பின்னும் அவர் சொன்னது: ஒரு மனுஷனுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள்.
12. அவர்களில் இளையவன் தகப்பனை நோக்கி: தகப்பனே, ஆஸ்தியில் எனக்கு வரும் பங்கை எனக்குத் தரவேண்டும் என்றான். அந்தப்படி அவன் அவர்களுக்குத் தன் ஆஸ்தியைப் பங்கிட்டுக்கொடுத்தான்.
13. சில நாளைக்குப்பின்பு, இளையமகன் எல்லாவற்றையும் சேர்த்துக்கொண்டு, தூரதேசத்துக்குப் புறப்பட்டுப்போய், அங்கே துன்மார்க்கமாய் ஜீவனம்பண்ணி, தன் ஆஸ்தியை அழித்துப்போட்டான்.
14. எல்லாவற்றையும் அவன் செலவழித்தபின்பு, அந்தத் தேசத்திலே கொடிய பஞ்சமுண்டாயிற்று. அப்பொழுது அவன் குறைவுபடத்தொடங்கி,
15. அந்தத் தேசத்துக் குடிகளில் ஒருவனிடத்தில் போய் ஒட்டிக்கொண்டான். அந்தக் குடியானவன் அவனைத் தன் வயல்களில் பன்றிகளை மேய்க்கும்படி அனுப்பினான்.
16. அப்பொழுது பன்றிகள் தின்கிற தவிட்டினாலே தன் வயிற்றை நிரப்ப ஆசையாயிருந்தான், ஒருவனும் அதை அவனுக்குக் கொடுக்கவில்லை.
17. அவனுக்குப் புத்தி தெளிந்தபோது, அவன்: என் தகப்பனுடைய கூலிக்காரர் எத்தனையோ பேருக்குப் பூர்த்தியான சாப்பாடு இருக்கிறது, நானோ பசியினால் சாகிறேன்.
18. நான் எழுந்து, என் தகப்பனிடத்திற்குப் போய்: தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும் உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன்.
19. இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரனல்ல, உம்முடைய கூலிக்காரரில் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும் என்பேன் என்று சொல்லி;
20. எழுந்து புறப்பட்டு, தன் தகப்பனிடத்தில் வந்தான். அவன் தூரத்தில் வரும்போதே, அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு, மனதுருகி, ஓடி, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தான்.
21. குமாரன் தகப்பனை நோக்கி: தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும், உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன், இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரன் அல்ல என்று சொன்னான்.
22. அப்பொழுது தகப்பன் தன் ஊழியக்காரரை நோக்கி: நீங்கள் உயர்ந்த வஸ்திரத்தைக் கொண்டுவந்து, இவனுக்கு உடுத்தி, இவன் கைக்கு மோதிரத்தையும் கால்களுக்குப் பாதரட்சைகளையும் போடுங்கள்.
23. கொழுத்த கன்றைக் கொண்டுவந்து அடியுங்கள். நாம் புசித்து, சந்தோஷமாயிருப்போம்.
24. என் குமாரனாகிய இவன் மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான் என்றான். அப்படியே அவர்கள் சந்தோஷப்படத் தொடங்கினார்கள்.
25. அவனுடைய மூத்தகுமாரன் வயலிலிருந்தான். அவன் திரும்பி வீட்டுக்குச் சமீபமாய் வருகிறபோது, கீதவாத்தியத்தையும் நடனக்களிப்பையும் கேட்டு;
26. ஊழியக்காரரில் ஒருவனை அழைத்து: இதென்ன என்று விசாரித்தான்.
27. அதற்கு அவன்: உம்முடைய சகோதரன் வந்தார், அவர் மறுபடியும் சுகத்துடனே உம்முடைய தகப்பனிடத்தில் வந்து சேர்ந்தபடியினாலே அவருக்காகக் கொழுத்த கன்றை அடிப்பித்தார் என்றான்.
28. அப்பொழுது அவன் கோபமடைந்து, உள்ளே போக மனதில்லாதிருந்தான். தகப்பனோ வெளியே வந்து, அவனை வருந்தியழைத்தான்.
29. அவன் தகப்பனுக்குப் பிரதியுத்தரமாக: இதோ, இத்தனை வருஷகாலமாய் நான் உமக்கு ஊழியஞ்செய்து, ஒருக்காலும் உம்முடைய கற்பனையை மீறாதிருந்தும், என் சிநேகிதரோடே நான் சந்தோஷமாயிருக்கும்படி நீர் ஒருக்காலும் எனக்கு ஒரு ஆட்டுக்குட்டியையாவது கொடுக்கவில்லை.
30. வேசிகளிடத்தில் உம்முடைய ஆஸ்தியை அழித்துப்போட்ட உம்முடைய குமாரனாகிய இவன் வந்தவுடனே கொழுத்த கன்றை இவனுக்காக அடிப்பித்தீரே என்றான்.
31. அதற்குத் தகப்பன்: மகனே, நீ எப்போதும் என்னோடிருக்கிறாய், எனக்குள்ளதெல்லாம் உன்னுடையதாயிருக்கிறது.
32. உன் சகோதரனாகிய இவனோ மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான்; ஆனபடியினாலே, நாம் சந்தோஷப்பட்டு மகிழ்ச்சியாயிருக்கவேண்டுமே என்று சொன்னான் என்றார்.

Chapter 16

1. பின்னும் அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி: ஐசுவரியவானாகிய ஒரு மனுஷனுக்கு ஒரு உக்கிராணக்காரன் இருந்தான்; அவன் தன் எஜமானுடைய ஆஸ்திகளை அழித்துப்போடுகிறதாக எஜமானுக்கு அறிவிக்கப்பட்டது.
2. அப்பொழுது எஜமான் அவனை வரவழைத்து: உன்னைக்குறித்து நான் இப்படிக் கேள்விப்படுகிறதென்ன? உன் உக்கிராணக் கணக்கை யொப்புவி, இனி நீ உக்கிராணக்காரனாயிருக்கக்கூடாது என்றான்.
3. அப்பொழுது உக்கிராணக்காரன்: நான் என்ன செய்வேன், என் எஜமான் உக்கிராண விசாரிப்பிலிருந்து என்னைத் தள்ளிப்போடுகிறானே; கொத்துகிறதற்கு எனக்குப் பெலனில்லை, இரக்கவும் வெட்கப்படுகிறேன்.
4. உக்கிராண விசாரிப்பைவிட்டு நான் தள்ளப்படும்போது, என்னைத் தங்கள் வீடுகளில் ஏற்றுக்கொள்வார் உண்டாகும்படி செய்யவேண்டியது இன்னதென்று எனக்குத் தெரியவந்தது, என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டு;
5. தன் எஜமானிடத்தில் கடன்பட்டவர்களை ஒவ்வொருவனாக வரவழைத்து: முதலாவது வந்தவனை நோக்கி: நீ என் எஜமானிடத்தில் பட்ட கடன் எவ்வளவு என்றான்.
6. அவன்: நூறுகுடம் எண்ணெய் என்றான். அப்பொழுது உக்கிராணக்காரன் அவனை நோக்கி: நீ உன் சீட்டை வாங்கி, உட்கார்ந்து, ஐம்பது என்று சீக்கிரமாய் எழுது என்றான்.
7. பின்பு அவன் வேறொருவனை நோக்கி: நீ பட்ட கடன் எவ்வளவு என்றான். அவன்: நூறு கலம் கோதுமை என்றான். அப்பொழுது அவன்: நீ உன் சீட்டை வாங்கி, எண்பது என்று எழுது என்றான்.
8. அநீதியுள்ள உக்கிராணக்காரன் புத்தியாய்ச் செய்தான் என்று எஜமான் கண்டு, அவனை மெச்சிக்கொண்டான். இவ்விதமாய் ஒளியின் பிள்ளைகளைப்பார்க்கிலும் இந்தப் பிரபஞ்சத்தின் பிள்ளைகள் தங்கள் சந்ததியில் அதிக புத்திமான்களாயிருக்கிறார்கள்.
9. நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் மாளும்போது உங்களை நித்தியமான வீடுகளிலே ஏற்றுக் கொள்வாருண்டாகும்படி, அநீதியான உலகப்பொருளால் உங்களுக்குச் சிநேகிதரைச் சம்பாதியுங்கள்.
10. கொஞ்சத்திலே உண்மையுள்ளவன் அநேகத்திலும் உண்மையுள்ளவனாயிருக்கிறான், கொஞ்சத்திலே அநீதியுள்ளவன் அநேகத்திலும் அநீதியுள்ளவனாயிருக்கிறான்.
11. அநீதியான உலகப்பொருளைப்பற்றி நீங்கள் உண்மையாயிராவிட்டால், யார் உங்களை நம்பி உங்களிடத்தில் மெய்யான பொருளை ஒப்புவிப்பார்கள்?
12. வேறொருவனுடைய காரியத்தில் நீங்கள் உண்மையுள்ளவர்களாயிராவிட்டால், உங்களுக்கு யாதொன்றைச் சொந்தமாகக் கொடுப்பவர் யார்?
13. எந்த ஊழியக்காரனும் இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ்செய்யக்கூடாது; ஒருவனைப் பகைத்து மற்றவனைச் சிநேகிப்பான், அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு மற்றவனை அசட்டைபண்ணுவான். தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களாலே கூடாது என்றார்.
14. இவைகளையெல்லாம் பொருளாசைக்காரராகிய பரிசேயரும் கேட்டு, அவரைப் பரியாசம்பண்ணினார்கள்.
15. அவர் அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷர்முன்பாக உங்களை நீதிமான்களாகக் காட்டுகிறீர்கள், தேவனோ உங்கள் இருதயங்களை அறிந்திருக்கிறார்; மனுஷருக்குள்ளே மேன்மையாக எண்ணப்படுகிறது தேவனுக்கு முன்பாக அருவருப்பாயிருக்கிறது.
16. நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசன வாக்கியங்களும் யோவான்வரைக்கும் வழங்கிவந்தது; அதுமுதல் தேவனுடைய ராஜ்யம் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டுவருகிறது, யாவரும் பலவந்தமாய் அதில் பிரவேசிக்கிறார்கள்.
17. வேதத்தில் ஒரு எழுத்தின் உறுப்பு அவமாய்ப் போவதைப்பார்க்கிலும், வானமும் பூமியும் ஒழிந்துபோவது எளிதாயிருக்கும்.
18. தன் மனைவியைத் தள்ளிவிட்டு, வேறொருத்தியை விவாகம்பண்ணுகிறவன் விபசாரஞ்செய்கிறான், புருஷனாலே தள்ளப்பட்டவளை விவாகம்பண்ணுகிறவனும் விபசாரஞ்செய்கிறான்.
19. ஐசுவரியமுள்ள ஒரு மனுஷன் இருந்தான்; அவன் இரத்தாம்பரமும் விலையேறப்பெற்ற வஸ்திரமும் தரித்து, அநுதினமும் சம்பிரமமாய் வாழ்ந்துகொண்டிருந்தான்.
20. லாசரு என்னும் பேர்கொண்ட ஒரு தரித்திரனும் இருந்தான்; அவன் பருக்கள் நிறைந்தவனாய், அந்த ஐசுவரியவானுடைய வாசலருகே கிடந்து,
21. அவனுடைய மேஜையிலிருந்து விழுந் துணிக்கைகளாலே தன் பசியை ஆற்ற ஆசையாயிருந்தான்; நாய்கள் வந்து அவன் பருக்களை நக்கிற்று.
22. பின்பு அந்தத் தரித்திரன் மரித்து, தேவதூதரால் ஆபிரகாமுடைய மடியிலே கொண்டுபோய் விடப்பட்டான்; ஐசுவரியவானும் மரித்து அடக்கம்பண்ணப்பட்டான்.
23. பாதாளத்திலே அவன் வேதனைப்படுகிறபோது, தன் கண்களை ஏறெடுத்து, தூரத்திலே ஆபிரகாமையும் அவன் மடியிலே லாசருவையும் கண்டான்.
24. அப்பொழுது அவன்: தகப்பனாகிய ஆபிரகாமே, நீர் எனக்கு இரங்கி, லாசரு தன் விரலின் நுனியைத் தண்ணீரில் தோய்த்து, என் நாவைக் குளிரப்பண்ணும்படி அவனை அனுப்பவேண்டும்; இந்த அக்கினிஜுவாலையில் வேதனைப்படுகிறேனே என்று கூப்பிட்டான்.
25. அதற்கு ஆபிரகாம்: மகனே, நீ பூமியிலே உயிரோடிருக்குங் காலத்தில் உன் நன்மைகளை அனுபவித்தாய், லாசருவும் அப்படியே தீமைகளை அநுபவித்தான், அதை நினைத்துக்கொள்; இப்பொழுது அவன் தேற்றப்படுகிறான், நீயோ வேதனைப்படுகிறாய்.
26. அதுவுமல்லாமல், இவ்விடத்திலிருந்து உங்களிடத்திற்குக் கடந்துபோகவும், அவ்விடத்திலிருந்து எங்களிடத்திற்குக் கடந்துவரவும் மனதுள்ளவர்களுக்குக் கூடாதபடிக்கு, எங்களுக்கும் உங்களுக்கும் நடுவே பெரும்பிளப்பு உண்டாக்கப்பட்டிருக்கிறது என்றான்.
27. அப்பொழுது அவன்: அப்படியானால், தகப்பனே, எனக்கு ஐந்துபேர் சகோதரருண்டு, அவர்களும் வேதனையுள்ள இந்த இடத்துக்கு வராதபடி, அவன் போய் அவர்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும் பொருட்டு,
28. நீர் அவனை என் தகப்பன் வீட்டுக்கு அனுப்பும்படி உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான்.
29. ஆபிரகாம் அவனை நோக்கி: அவர்களுக்கு மோசேயும் தீர்க்கதரிசிகளும் உண்டு, அவர்களுக்கு அவர்கள் செவிகொடுக்கட்டும் என்றான்.
30. அதற்கு அவன்: அப்படியல்ல, தகப்பனாகிய ஆபிரகாமே, மரித்தோரிலிருந்து ஒருவன் அவர்களிடத்திற்குப் போனால் மனந்திரும்புவார்கள் என்றான்.
31. அதற்கு அவன்: அவர்கள் மோசேக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் செவிகொடாவிட்டால், மரித்தோரிலிருந்து ஒருவன் எழுந்துபோனாலும், நம்பமாட்டார்கள் என்று சொன்னான் என்றார்.

Chapter 17

1. பின்பு அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி: இடறல்கள் வராமல்போவது கூடாதகாரியம், ஆகிலும் அவைகள் எவனால் வருகிறதோ, அவனுக்கு ஐயோ!
2. அவன் இந்தச் சிறுவரில் ஒருவனுக்கு இடறலுண்டாக்குகிறதைப் பார்க்கிலும், அவனுடைய கழுத்தில் ஏந்திரக்கல் கட்டப்பட்டு, அவன் சமுத்திரத்தில் தள்ளுண்டுபோவது அவனுக்கு நலமாயிருக்கும்.
3. உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள். உன் சகோதரன் உனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்தால், அவனைக் கடிந்துகொள்; அவன் மனஸ்தாபப்பட்டால், அவனுக்கு மன்னிப்பாயாக.
4. அவன் ஒருநாளில் ஏழுதரம் உனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து, ஏழுதரமும் உன்னிடத்தில் வந்து: நான் மனஸ்தாபப்படுகிறேன் என்று சொன்னால், அவனுக்கு மன்னிப்பாயாக என்றார்.
5. அப்பொழுது அப்போஸ்தலர் கர்த்தரை நோக்கி: எங்கள் விசுவாசத்தை வர்த்திக்கப்பண்ணவேண்டும் என்றார்கள்.
6. அதற்குக் கர்த்தர்: கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு உண்டாயிருந்தால், நீங்கள் இந்தக் காட்டத்திமரத்தை நோக்கி: நீ வேரோடே பிடுங்குண்டு கடலிலே நடப்படுவாயாக என்று சொல்ல, அது உங்களுக்குக் கீழ்ப்படியும்.
7. உங்களில் ஒருவனுடைய ஊழியக்காரன் உழுது அல்லது மந்தைமேய்த்து வயலிலிருந்து வரும்போது, எஜமான் அவனை நோக்கி: நீ முன்பு போய்ச் சாப்பிட்டுவா என்று அவனுக்குச் சொல்வானோ?
8. நீ எனக்குச் சாப்பாடு ஆயத்தம்பண்ணி, அரைகட்டிக்கொண்டு, நான் போஜனபானம்பண்ணுமளவும் எனக்கு ஊழியஞ்செய், அதற்குப்பின் நீ புசித்துக்குடிக்கலாம் என்று அவனுக்குச் சொல்லுவானல்லவா?
9. தான் கட்டளையிட்டவைகளை அந்த வேலைக்காரன் செய்ததற்காக அவனுக்கு உபசாரஞ்செய்வானோ? அப்படிச் செய்யமாட்டானே.
10. அப்படியே நீங்களும் உங்களுக்குக் கட்டளையிடப்பட்ட யாவற்றையும் செய்த பின்பு: நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர், செய்யவேண்டிய கடமையைமாத்திரம் செய்தோம் என்று சொல்லுங்கள் என்றார்.
11. பின்பு அவர் எருசலேமுக்குப் பிரயாணம்பண்ணுகையில், அவர் சமாரியா கலிலேயா என்னும் நாடுகளின் வழியாக நடந்துபோனார்.
12. அவர் ஒரு கிராமத்தில் பிரவேசித்தபோது, குஷ்டரோகமுள்ள மனுஷர் பத்துப்பேர் அவருக்கு எதிராக வந்து, தூரத்திலே நின்று:
13. இயேசு ஐயரே, எங்களுக்கு இரங்கும் என்று சத்தமிட்டார்கள்.
14. அவர்களை அவர் பார்த்து: நீங்கள் போய், ஆசாரியர்களுக்கு உங்களைக் காண்பியுங்கள் என்றார். அந்தப்படி அவர்கள் போகையில் சுத்தமானார்கள்.
15. அவர்களில் ஒருவன் தான் ஆரோக்கியமானதைக் கண்டு, திரும்பிவந்து, உரத்த சத்தத்தோடே தேவனை மகிமைப்படுத்தி,
16. அவருடைய பாதத்தருகே முகங்குப்புற விழுந்து, அவருக்கு ஸ்தோத்திரஞ்செலுத்தினான்; அவன் சமாரியனாயிருந்தான்.
17. அப்பொழுது இயேசு: சுத்தமானவர்கள் பத்துப்பேர் அல்லவா, மற்ற ஒன்பதுபேர் எங்கே?
18. தேவனை மகிமைப்படுத்துகிறதற்கு, இந்த அந்நியனே ஒழிய மற்றொருவனும் திரும்பிவரக்காணோமே என்று சொல்லி,
19. அவனை நோக்கி: நீ எழுந்துபோ, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார்.
20. தேவனுடைய ராஜ்யம் எப்பொழுது வருமென்று, பரிசேயர் அவரிடத்தில் கேட்டபொழுது, அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: தேவனுடைய ராஜ்யம் பிரத்தியட்சமாய் வராது.
21. இதோ, இங்கே என்றும், அதோ, அங்கே என்றும் சொல்லப்படுகிறதற்கும் ஏதுவிராது; இதோ, தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறதே என்றார்.
22. பின்பு அவர் சீஷர்களை நோக்கி: மனுஷகுமாரனுடைய நாட்களிலொன்றைக் காணவேண்டுமென்று நீங்கள் ஆசைப்படுங்காலம் வரும்; ஆனாலும் அதைக் காணமாட்டீர்கள்.
23. இதோ, இங்கே என்றும், அதோ, அங்கே என்றும், சிலர் உங்களிடத்தில் சொல்லுவார்கள்; நீங்களோ போகாமலும் பின்தொடராமலும் இருங்கள்.
24. மின்னல் வானத்தின் ஒரு திசையில் தோன்றி மறுதிசைவரைக்கும் பிரகாசிக்கிறதுபோல மனுஷகுமாரனும் தம்முடைய நாளிலே தோன்றுவார்.
25. அதற்கு முன்பு அவர் அநேகம் பாடுபட்டு, இந்தச் சந்ததியினால் ஆகாதவனென்று தள்ளப்படவேண்டியதாயிருக்கிறது.
26. நோவாவின் நாட்களில் நடந்ததுபோல மனுஷகுமாரனுடைய நாட்களிலும் நடக்கும்.
27. நோவா பேழைக்குள் பிரவேசித்த நாள்வரைக்கும் ஜனங்கள் புசித்துக் குடித்தார்கள், பெண்கொண்டு கொடுத்தார்கள்; ஜலப்பிரளயம் வந்து எல்லாரையும் அழித்துப்போட்டது.
28. லோத்தினுடைய நாட்களில் நடந்ததுபோலவும் நடக்கும்; ஜனங்கள் புசித்தார்கள், குடித்தார்கள், கொண்டார்கள், விற்றார்கள், நட்டார்கள், கட்டினார்கள்.
29. லோத்து சோதோமை விட்டுப் புறப்பட்ட நாளிலே வானத்திலிருந்து அக்கினியும் கந்தகமும் வருஷித்து, எல்லாரையும் அழித்துப்போட்டது.
30. மனுஷகுமாரன் வெளிப்படும் நாளிலும் அப்படியே நடக்கும்.
31. அந்த நாளிலே வீட்டின்மேலிருப்பவன் வீட்டிலுள்ள தன் பண்டங்களை எடுத்துக்கொண்டுபோக இறங்காமல் இருக்கக்கடவன்; அப்படியே வயலிலிருக்கிறவன் பின்னிட்டுத் திரும்பாமலும் இருக்கக்கடவன்.
32. லோத்தின் மனைவியை நினைத்துக் கொள்ளுங்கள்.
33. தன் ஜீவனை இரட்சிக்க வகைதேடுகிறவன் அதை இழந்து போவான்; இழந்துபோகிறவன் அதை உயிர்ப்பித்துக் கொள்ளுவான்.
34. அந்த இராத்திரியில் ஒரே படுக்கையில் படுத்திருக்கிற இரண்டுபேரில் ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், மற்றவன் கைவிடப்படுவான்.
35. திரிகை திரிக்கிற இரண்டு ஸ்திரீகளில் ஒருத்தி ஏற்றுக்கொள்ளப்படுவாள், மற்றவள் கைவிடப்படுவாள்.
36. வயலிலிருக்கிற இரண்டுபேரில் ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், மற்றவன் கைவிடப்படுவான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
37. அவர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: எங்கே, ஆண்டவரே, என்றார்கள். அதற்கு அவர்: பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் வந்து கூடும் என்றார்.

Chapter 18

1. சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டும் என்பதைக் குறித்து அவர்களுக்கு அவர் ஒரு உவமையைச் சொன்னார்.
2. ஒரு பட்டணத்திலே ஒரு நியாயாதிபதி இருந்தான்; அவன் தேவனுக்குப் பயப்படாதவனும் மனுஷரை மதியாதவனுமாயிருந்தான்.
3. அந்தப் பட்டணத்திலே ஒரு விதவையும் இருந்தாள்; அவள் அவனிடத்தில் போய்: எனக்கும் என் எதிராளிக்கும் இருக்கிற காரியத்தில் எனக்கு நியாயஞ்செய்யவேண்டும் என்று விண்ணப்பம்பண்ணினாள்.
4. வெகுநாள்வரைக்கும் அவனுக்கு மனதில்லாதிருந்தது. பின்பு அவன்: நான் தேவனுக்குப் பயப்படாமலும் மனுஷரை மதியாமலும் இருந்தும்,
5. இந்த விதவை என்னை எப்பொழுதும் தொந்தரவு செய்கிறபடியினால், இவள் அடிக்கடி வந்து என்னை அலட்டாதபடி இவளுக்கு நியாயஞ்செய்யவேண்டும் என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான் என்றார்.
6. பின்னும் கர்த்தர் அவர்களை நோக்கி: அநீதியுள்ள அந்த நியாயாதிபதி சொன்னதைச் சிந்தித்துப்பாருங்கள்.
7. அந்தப்படியே தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து அவர்களுக்கு நியாயஞ்செய்யாமலிருப்பாரோ?
8. சீக்கிரத்திலே அவர்களுக்கு நியாயஞ்செய்வார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆகிலும் மனுஷகுமாரன் வரும்போது பூமியிலே விசுவாசத்தைக் காண்பாரோ என்றார்.
9. அன்றியும், தங்களை நீதிமான்களென்று நம்பி, மற்றவர்களை அற்பமாயெண்ணின சிலரைக்குறித்து, அவர் ஒரு உவமையைச் சொன்னார்.
10. இரண்டு மனுஷர் ஜெபம்பண்ணும்படி தேவாலயத்துக்குப் போனார்கள்; ஒருவன் பரிசேயன், மற்றவன் ஆயக்காரன்.
11. பரிசேயன் நின்று: தேவனே! நான் பறிகாரர், அநியாயக்காரர், விபசாரக்காரர் ஆகிய மற்ற மனுஷரைப்போலவும், இந்த ஆயக்காரனைப்போலவும் இராததனால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்.
12. வாரத்தில் இரண்டுதரம் உபவாசிக்கிறேன்; என் சம்பாத்தியத்திலெல்லாம் தசமபாகம் செலுத்தி வருகிறேன் என்று, தனக்குள்ளே ஜெபம்பண்ணினான்.
13. ஆயக்காரன் தூரத்திலே நின்று, தன் கண்களையும் வானத்துக்கு ஏறெடுக்கத் துணியாமல், தன் மார்பிலே அடித்துக்கொண்டு: தேவனே! பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்றான்.
14. அவனல்ல, இவனே நீதிமானாக்கப்பட்டவனாய்த் தன் வீட்டுக்குத் திரும்பிப்போனான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஏனெனில் தன்னை உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார்.
15. பின்பு குழந்தைகளையும் அவர் தொடும்படிக்கு அவர்களை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். சீஷர்கள் அதைக் கண்டு, கொண்டுவந்தவர்களை அதட்டினார்கள்.
16. இயேசுவோ அவர்களைக் கொண்டுவரும்படி கட்டளையிட்டு: சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள், அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்; தேவனுடைய ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது.
17. எவனாகிலும் சிறு பிள்ளையைப்போல் தேவனுடைய ராஜ்யத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டால், அதில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
18. அப்பொழுது தலைவன் ஒருவன் அவரை நோக்கி: நல்ல போதகரே, நித்தியஜீவனைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான்.
19. அதற்கு இயேசு: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே.
20. விபசாரஞ் செய்யாதிருப்பாயாக, கொலை செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம் பண்ணுவாயாக என்கிற கற்பனைகளை நீ அறிந்திருக்கிறாயே என்றார்.
21. அதற்கு அவன்: இவைகளையெல்லாம் என் சிறு வயதுமுதல் கைக்கொண்டிருக்கிறேன் என்றான்.
22. இயேசு அதைக் கேட்டு: இன்னும் உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு; உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்றுத் தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு என்னைப் பின்பற்றிவா என்றார்.
23. அவன் அதிக ஐசுவரியமுள்ளவனானபடியினால், இதைக் கேட்டபொழுது, மிகுந்த துக்கமடைந்தான்.
24. அவன் மிகுந்த துக்கமடைந்ததை இயேசு கண்டு: ஐசுவரியமுள்ளவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது எவ்வளவு அரிதாயிருக்கிறது.
25. ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப்பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும் என்றார்.
26. அதைக் கேட்டவர்கள்: அப்படியானால் யார் இரட்சிக்கப்படக்கூடும் என்றார்கள்.
27. அதற்கு அவர்: மனுஷரால் கூடாதவைகள் தேவனால் கூடும் என்றார்.
28. அப்பொழுது பேதுரு அவரை நோக்கி: இதோ, நாங்கள் எல்லாவற்றையும் விட்டு, உம்மைப் பின்பற்றினோமே என்றான்.
29. அதற்கு அவர்: தேவனுடைய ராஜ்யத்தினிமித்தம் வீட்டையாவது, பெற்றாரையாவது, சகோதரரையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது விட்டுவிட்ட எவனும்,
30. இம்மையிலே அதிகமானவைகளையும், மறுமையிலே நித்திய ஜீவனையும் அடையாமற்போவதில்லையென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
31. பின்பு அவர் பன்னிருவரையும் தம்மிடத்தில் அழைத்து: இதோ, எருசலேமுக்குப் போகிறோம், மனுஷகுமாரனைக் குறித்துத் தீர்க்கதரிசிகளால் எழுதப்பட்டவைகளெல்லாம் நிறைவேறும்.
32. எப்படியெனில், அவர் புறஜாதியாரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டு, பரியாசமும் நிந்தையும் அடைந்து, துப்பப்படுவார்.
33. அவரை வாரினால் அடித்து, கொலை செய்வார்கள்; மூன்றாம் நாளிலே அவர் உயிரோடே எழுந்திருப்பார் என்றார்.
34. இவைகளில் ஒன்றையும் அவர்கள் உணரவில்லை; அவைகளின் பொருள் அவர்களுக்கு மறைவாயிருந்தது, அவர் சொன்னவைகளை அவர்கள் அறிந்துகொள்ளவில்லை.
35. பின்பு அவர் எரிகோவுக்குச் சமீபமாய் வரும்போது, ஒரு குருடன் வழியருகே உட்கார்ந்து பிச்சை கேட்டுக்கொண்டிருந்தான்.
36. ஜனங்கள் நடக்கிற சத்தத்தை அவன் கேட்டு, இதென்ன என்று விசாரித்தான்.
37. நசரேயனாகிய இயேசு போகிறார் என்று அவனுக்கு அறிவித்தார்கள். அப்பொழுது அவன்: இயேசுவே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று கூப்பிட்டான்.
38. முன் நடப்பவர்கள் அவன் பேசாமலிருக்கும்படி அவனை அதட்டினார்கள். அவனோ: தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று மிகவும் அதிகமாய்க் கூப்பிட்டான்.
39. இயேசு நின்று, அவனைத் தம்மிடத்தில் கொண்டுவரும்படி சொன்னார்.
40. அவன் கிட்டவந்தபோது, அவர் அவனை நோக்கி:
41. நான் உனக்கு என்ன செய்யவேண்டும் என்றிருக்கிறாய் என்று கேட்டார். அதற்கு அவன்: ஆண்டவரே, நான் பார்வையடையவேண்டும் என்றான்.
42. இயேசு அவனை நோக்கி: நீ பார்வையடைவாயாக, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார்.
43. உடனே அவன் பார்வையடைந்து, தேவனை மகிமைப்படுத்திக்கொண்டே, அவருக்குப் பின்சென்றான். ஜனங்களெல்லாரும் அதைக் கண்டு, தேவனைப் புகழ்ந்தார்கள்.

Chapter 19

1. அவர் எரிகோவில் பிரவேசித்து, அதின் வழியாக நடந்துபோகையில்,
2. ஆயக்காரருக்குத் தலைவனும் ஐசுவரியவானுமாயிருந்த சகேயு என்னப்பட்ட ஒரு மனுஷன்,
3. இயேசு எப்படிப்பட்டவரோ என்று அவரைப் பார்க்க வகைதேடினான். அவன் குள்ளனானபடியால், ஜனக்கூட்டத்தில் அவரைக் காணக்கூடாமல்,
4. அவர் போகும் வழியில் முன்னாக ஓடி, அவரைப் பார்க்கும்படி ஒரு காட்டத்தி மரத்தில் ஏறினான்.
5. இயேசு அந்த இடத்தில் வந்தபோது, அண்ணாந்து பார்த்து, அவனைக் கண்டு: சகேயுவே, நீ சீக்கிரமாய் இறங்கிவா, இன்றைக்கு நான் உன் வீட்டிலே தங்கவேண்டும் என்றார்.
6. அவன் சீக்கிரமாய் இறங்கி, சந்தோஷத்தோடே அவரை அழைத்துக்கொண்டுபோனான்.
7. அதைக் கண்ட யாவரும்: இவர் பாவியான மனுஷனிடத்தில் தங்கும்படி போனார் என்று முறுமுறுத்தார்கள்.
8. சகேயு நின்று, கர்த்தரை நோக்கி: ஆண்டவரே, என் ஆஸ்திகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கிறேன், நான் ஒருவனிடத்தில் எதையாகிலும் அநியாயமாய் வாங்கினதுண்டானால், நாலத்தனையாகத் திரும்பச் செலுத்துகிறேன் என்றான்.
9. இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு இந்த வீட்டுக்கு இரட்சிப்பு வந்தது; இவனும் ஆபிரகாமுக்குக் குமாரனாயிருக்கிறானே.
10. இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றார்.
11. அவர்கள் இவைகளைக் கேட்டுக் கொண்டிருக்கையில், அவர் எருசலேமுக்குச் சமீபித்திருந்தபடியினாலும், தேவனுடைய ராஜ்யம் சீக்கிரமாய் வெளிப்படுமென்று அவர்கள் நினைத்தபடியினாலும், அவர் ஒரு உவமையைச் சொன்னார்:
12. பிரபுவாகிய ஒருவன் ஒரு ராஜ்யத்தைப் பெற்றுக்கொண்டு திரும்பிவரும்படி தூரதேசத்துக்குப் போகப் புறப்பட்டான்.
13. புறப்படும்போது, அவன் தன் ஊழியக்காரரில் பத்துப்பேரை அழைத்து, அவர்களிடத்தில் பத்துராத்தல் திரவியங்கொடுத்து: நான் திரும்பிவருமளவும் இதைக்கொண்டு வியாபாரம்பண்ணுங்கள் என்று சொன்னான்.
14. அவனுடைய ஊரார் அவனைப் பகைத்து, இவன் எங்கள்மேல் ராஜாவாயிருக்கிறது எங்களுக்கு மனதில்லையென்று சொல்லும்படி அவன் பின்னே ஸ்தானாபதிகளை அனுப்பினார்கள்.
15. அவன் ராஜ்யத்தைப் பெற்றுக்கொண்டு திரும்பிவந்தபோது, தன்னிடத்தில் திரவியம் வாங்கியிருந்த அந்த ஊழியக்காரரில் அவனவன் வியாபாரம்பண்ணிச் சம்பாதித்தது இவ்வளவென்று அறியும்படி, அவர்களைத் தன்னிடத்தில் அழைத்துவரச் சொன்னான்.
16. அப்பொழுது முந்தினவன் வந்து: ஆண்டவனே, உம்முடைய ராத்தலினால் பத்துராத்தல் ஆதாயம் கிடைத்தது என்றான்.
17. எஜமான் அவனை நோக்கி: நல்லது உத்தம ஊழியக்காரனே, நீ கொஞ்சத்தில் உண்மையுள்ளவனாயிருந்தபடியால் பத்துப் பட்டணங்களுக்கு அதிகாரியாயிரு என்றான்.
18. அப்படியே இரண்டாம் ஊழியக்காரன் வந்து: ஆண்டவனே, உம்முடைய ராத்தலினால் ஐந்துராத்தல் ஆதாயம் கிடைத்தது என்றான்.
19. அவனையும் அவன் நோக்கி: நீயும் ஐந்து பட்டணங்களுக்கு அதிகாரியாயிரு என்றான்.
20. பின்பு வேறொருவன் வந்து: ஆண்டவனே, இதோ, உம்முடைய ராத்தல், இதை ஒரு சீலையிலே வைத்திருந்தேன்.
21. நீர் வைக்காததை எடுக்கிறவரும், விதைக்காததை அறுக்கிறவருமான கடினமுள்ள மனுஷனென்று அறிந்து, உமக்குப் பயந்திருந்தேன் என்றான்.
22. அதற்கு அவன்: பொல்லாத ஊழியக்காரனே, உன் வாய்ச்சொல்லைக்கொண்டே உன்னை நியாயந்தீர்க்கிறேன். நான் வைக்காததை எடுக்கிறவனும், விதைக்காததை அறுக்கிறவனுமான கடினமுள்ள மனுஷனென்று அறிந்தாயே,
23. பின்னை ஏன் நீ என் திரவியத்தைக் காசுக்கடையிலே வைக்கவில்லை; வைத்திருந்தால் நான் வரும்போது, அதை வட்டியோடே வரப்பற்றிக் கொள்வேனே என்று சொல்லி;
24. சமீபமாய் நிற்கிறவர்களை நோக்கி: அந்த ராத்தலை அவன் கையிலிருந்தெடுத்து, பத்துராத்தல் உள்ளவனுக்குக் கொடுங்கள் என்றான்.
25. அதற்கு அவர்கள்: ஆண்டவனே, அவனுக்குப் பத்துராத்தல் இருக்கிறதே என்றார்கள்.
26. அதற்கு அவன்: உள்ளவன் எவனுக்குங் கொடுக்கப்படும், இல்லாதவனிடத்தில் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
27. அன்றியும் தங்கள்மேல் நான் ராஜாவாகிறதற்கு மனதில்லாதிருந்தவர்களாகிய என்னுடைய சத்துருக்களை இங்கே கொண்டுவந்து, எனக்கு முன்பாக வெட்டிப்போடுங்கள் என்று சொன்னான் என்றார்.
28. இவைகளை அவர் சொன்னபின்பு எருசலேமுக்குப் புறப்பட்டு, முந்திநடந்துபோனார்.
29. அவர் ஒலிவமலையென்னப்பட்ட மலையின் அருகான பெத்பகே பெத்தானியா என்னும் ஊர்களுக்குச் சமீபித்தபோது, தம்முடைய சீஷரில் இரண்டுபேரை நோக்கி:
30. உங்களுக்கு எதிரே இருக்கிற கிராமத்துக்குப் போங்கள், அதிலே பிரவேசிக்கும்போது மனுஷரிலொருவனும் ஒருக்காலும் ஏறியிராத கழுதைக்குட்டியைக் கட்டியிருக்கக் காண்பீர்கள்; அதை அவிழ்த்துக்கொண்டு வாருங்கள்.
31. அதை ஏன் அவிழ்க்கிறீர்களென்று யாராவது உங்களிடத்தில் கேட்டால், அது ஆண்டவருக்கு வேண்டுமென்று சொல்லுங்கள் என்றார்.
32. அனுப்பப்பட்டவர்கள் போய், தங்களுக்கு அவர் சொன்னபடியே கண்டார்கள்.
33. கழுதைக்குட்டியை அவர்கள் அவிழ்க்கும்போது, அதற்கு உடையவர்கள்: குட்டியை ஏன் அவிழ்க்கிறீர்கள் என்று கேட்டார்கள்.
34. அதற்கு அவர்கள்: அது ஆண்டவருக்கு வேண்டுமென்று சொல்லி,
35. அதை இயேசுவினிடத்தில் கொண்டுவந்து, தங்கள் வஸ்திரங்களை அதின்மேல் போட்டு, இயேசுவை அதின்மேல் ஏற்றினார்கள்.
36. அவர் போகையில், அவர்கள் தங்கள் வஸ்திரங்களை வழியிலே விரித்தார்கள்.
37. அவர் ஒலிவமலையின் அடிவாரத்துக்குச் சமீபமாய் வருகையில் திரளான கூட்டமாகிய சீஷரெல்லாரும் தாங்கள் கண்ட சகல அற்புதங்களையுங்குறித்துச் சந்தோஷப்பட்டு,
38. கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற ராஜா ஸ்தோத்திரிக்கப்பட்டவர், பரலோகத்திலே சமாதானமும் உன்னதத்திலே மகிமையும் உண்டாவதாக என்று மிகுந்த சத்தத்தோடே தேவனைப் புகழ்ந்தார்கள்.
39. அப்பொழுது கூட்டத்திலிருந்த பரிசேயரில் சிலர் அவரை நோக்கி: போதகரே, உம்முடைய சீஷரை அதட்டும் என்றார்கள்.
40. அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: இவர்கள் பேசாமலிருந்தால் கல்லுகளே கூப்பிடும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
41. அவர் சமீபமாய் வந்தபோது நகரத்தைப்பார்த்து, அதற்காகக் கண்ணீர் விட்டழுது,
42. உனக்குக் கிடைத்த இந்த நாளிலாகிலும் உன் சமாதானத்துக்கு ஏற்றவைகளை நீ அறிந்திருந்தாயானால் நலமாயிருக்கும், இப்பொழுதோ அவைகள் உன் கண்களுக்கு மறைவாயிருக்கிறது.
43. உன்னைச் சந்திக்குங்காலத்தை நீ அறியாமற்போனபடியால், உன் சத்துருக்கள் உன்னைச் சூழ மதில்போட்டு, உன்னை வளைந்துகொண்டு, எப்பக்கத்திலும் உன்னை நெருக்கி,
44. உன்னையும் உன்னிலுள்ள உன் பிள்ளைகளையும் தரையாக்கிப்போட்டு, உன்னிடத்தில் ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்குச் செய்யும் நாட்கள் உனக்கு வரும் என்றார்.
45. பின்பு அவர் தேவாலயத்தில் பிரவேசித்து, அதிலே விற்கிறவர்களையும் கொள்ளுகிறவர்களையும் புறம்பே துரத்தத்தொடங்கி:
46. என்னுடைய வீடு ஜெபவீடாயிருக்கிறதென்று எழுதியிருக்கிறது, நீங்களோ அதைக் கள்ளர்குகையாக்கினீர்கள் என்றார்.
47. அவர் நாடோறும் தேவாலயத்தில் உபதேசம் பண்ணிக்கொண்டிருந்தார். பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் ஜனத்தின் மூப்பரும் அவரைக் கொலைசெய்ய வகைதேடியும்,
48. ஜனங்களெல்லாரும் அவருக்குச் செவிகொடுத்து அவரை அண்டிக்கொண்டிருந்தபடியால், அதை இன்னபடி செய்யலாமென்று வகைகாணாதிருந்தார்கள்.

Chapter 20

1. அந்நாட்களில் ஒன்றில், அவர் தேவாலயத்திலே ஜனங்களுக்கு உபதேசித்து, சுவிசேஷத்தைப் பிரசங்கித்தபோது, பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் மூப்பரும் அவரிடத்தில் கூடிவந்து:
2. நீர் எந்த அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறீர்? இந்த அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யார்? அதை எங்களுக்குச் சொல்லும் என்றார்கள்.
3. அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: நானும் உங்களிடத்தில் ஒரு காரியத்தைக் கேட்கிறேன், அதை எனக்குச் சொல்லுங்கள்.
4. யோவான் கொடுத்த ஸ்நானம் தேவனால் உண்டாயிற்றோ? மனுஷரால் உண்டாயிற்றோ? என்று கேட்டார்.
5. அவர்கள் தங்களுக்குள்ளே யோசனைபண்ணி: தேவனால் உண்டாயிற்று என்று சொல்வோமானால், பின்னை ஏன் அவனை விசுவாசிக்கவில்லை என்று கேட்பார்.
6. மனுஷரால் உண்டாயிற்று என்று சொல்வோமானால், ஜனங்களெல்லாரும் யோவானைத் தீர்க்கதரிசியென்று எண்ணுகிறபடியினால் நம்மேல் கல்லெறிவார்கள் என்று சொல்லி:
7. அது யாரால் உண்டாயிற்றோ, எங்களுக்குத் தெரியாது என்று பிரதியுத்தரம் சொன்னார்கள்.
8. அப்பொழுது இயேசு: நானும் இன்ன அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறேனென்று உங்களுக்குச் சொல்லேன் என்றார்.
9. பின்பு அவர் ஜனங்களுக்குச் சொல்லத்தொடங்கின உவமையாவது: ஒரு மனுஷன் ஒரு திராட்சத்தோட்டத்தை உண்டாக்கி, அதைத் தோட்டக்காரருக்குக் குத்தகையாக விட்டு, நெடுநாளாகப் புறத்தேசத்துக்குப் போயிருந்தான்.
10. அந்தத் தோட்டக்காரர் திராட்சத்தோட்டத்தின் கனிகளில் தன் பாகத்தைக் கொடுத்தனுப்பும்படி, பருவகாலத்திலே அவர்களிடத்தில் ஒரு ஊழியக்காரனை அனுப்பினான். அந்தத் தோட்டக்காரர் அவனை அடித்து, வெறுமையாக அனுப்பிவிட்டார்கள்.
11. பின்பு அவன் வேறொரு ஊழியக்காரனை அனுப்பினான்; அவனையும் அவர்கள் அடித்து, அவமானப்படுத்தி, வெறுமையாக அனுப்பிவிட்டார்கள்.
12. அவன் மூன்றாந்தரமும் ஒரு ஊழியக்காரனை அனுப்பினான்; அவனையும் அவர்கள் காயப்படுத்தி, துரத்திவிட்டார்கள்.
13. அப்பொழுது திராட்சத்தோட்டத்தின் எஜமான்: நான் என்ன செய்யலாம், எனக்குப் பிரியமான குமாரனை அனுப்பினால், அவனையாகிலும் கண்டு அஞ்சுவார்கள் என்று எண்ணி, அவனை அனுப்பினான்.
14. தோட்டக்காரர் அவனைக் கண்டபோது: இவன் சுதந்தரவாளி, சுதந்தரம் நம்முடையதாகும்படிக்கு இவனைக் கொல்லுவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டு,
15. அவனைத் திராட்சத்தோட்டத்திற்குப் புறம்பே தள்ளி, கொன்றுபோட்டார்கள். இப்படியிருக்க, திராட்சத்தோட்டத்தின் எஜமான் அவர்களை என்னசெய்வான்?
16. அவன் வந்து அந்தத் தோட்டக்காரரைச் சங்கரித்து, திராட்சத்தோட்டத்தை வேறு தோட்டக்காரரிடத்தில் கொடுப்பான் அல்லவா என்றார். அவர்கள் அதைக்கேட்டு, அப்படியாகாதிருப்பதாக என்றார்கள்.
17. அப்பொழுது அவர் அவர்களைப் பார்த்து: வீடு கட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே, மூலைக்குத் தலைக்கல்லாயிற்று என்று எழுதியிருக்கிற வேதவாக்கியத்தின் கருத்தென்ன?
18. அந்தக் கல்லின்மேல் விழுகிறவன் எவனோ அவன் நொறுங்கிப்போவான், அது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும் என்றார்.
19. பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் தங்களைக்குறித்து இந்த உவமையைச் சொன்னாரென்று அறிந்து, அந்நேரத்திலே அவரைப் பிடிக்க வகைதேடியும் ஜனங்களுக்குப் பயந்திருந்தார்கள்.
20. அவர்கள் சமயம்பார்த்து, தேசாதிபதியின் ஆளுகைக்கும் அதிகாரத்துக்கும் அவரை ஒப்புக்கொடுக்கும்படி அவருடைய பேச்சிலே குற்றங்கண்டுபிடிக்கலாமென்று, தங்களை உண்மையுள்ளவர்களாய்க் காண்பிக்கிற வேவுகாரரை அவரிடத்தில் அனுப்பினார்கள்.
21. அவர்கள் வந்து: போதகரே, நீர் நிதானமாய்ப் பேசி உபதேசிக்கிறீரென்றும், முகதாட்சணியமில்லாமல் தேவனுடைய மார்க்கத்தைச் சத்தியமாய்ப் போதிக்கிறீரென்றும் அறிந்திருக்கிறோம்.
22. இராயனுக்கு வரிகொடுக்கிறது நியாயமோ அல்லவோ, எங்களுக்குச் சொல்லும் என்று கேட்டார்கள்.
23. அவர்களுடைய தந்திரத்தை அவர் அறிந்து, நீங்கள் என்னை ஏன் சோதிக்கிறீர்கள்?
24. ஒரு பணத்தை எனக்குக் காண்பியுங்கள். இதிலிருக்கிற சொரூபமும் மேலெழுத்தும் யாருடையது என்று கேட்டார். அதற்கு அவர்கள்: இராயனுடையது என்றார்கள்.
25. அதற்கு அவர்: அப்படியானால், இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதைத் தேவனுக்கும் செலுத்துங்கள் என்றார்.
26. அவர்கள் அவரை ஜனங்களுக்கு முன்பாகப் பேச்சிலே குற்றம்பிடிக்கக்கூடாமல், அவர் சொன்ன உத்தரவைக்குறித்து ஆச்சரியப்பட்டு, மவுனமாயிருந்தார்கள்.
27. உயிர்த்தெழுதல் இல்லையென்று சாதிக்கிற சதுசேயரில் சிலர் அவரிடத்தில் வந்து:
28. போதகரே, ஒருவன் மனைவியையுடையவனாயிருந்து பிள்ளையில்லாமல் இறந்துபோனால், அவனுடைய சகோதரன் அவன் மனைவியை விவாகம்பண்ணி, தன் சகோதரனுக்குச் சந்தானமுண்டாக்கவேண்டும் என்று மோசே எங்களுக்கு எழுதிவைத்திருக்கிறாரே.
29. சகோதரர் ஏழுபேரிருந்தார்கள், அவர்களில் மூத்தவன் ஒரு பெண்ணை விவாகம்பண்ணி, பிள்ளையில்லாமல் இறந்துபோனான்.
30. பின்பு இரண்டாஞ்சகோதரன் அவளை விவாகம்பண்ணி, அவனும் பிள்ளையில்லாமல் இறந்துபோனான்.
31. மூன்றாஞ்சகோதரனும் அவளை விவாகம்பண்ணினான். அப்படியே ஏழுபேரும் அவளை விவாகம்பண்ணி, பிள்ளையில்லாமல் இறந்துபோனார்கள்.
32. எல்லாருக்கும் பின்பு அந்த ஸ்திரீயும் இறந்துபோனாள்.
33. இவ்விதமாய் ஏழுபேரும் அவளை விவாகம்பண்ணியிருக்க, உயிர்த்தெழுதலில் அவர்களில் எவனுக்கு அவள் மனைவியாயிருப்பாள் என்று கேட்டார்கள்.
34. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: இந்தப் பிரபஞ்சத்தின் பிள்ளைகள் பெண்கொண்டும் பெண்கொடுத்தும் வருகிறார்கள்.
35. மறுமையையும் மரித்தோரிலிருந்தெழுந்திருக்குதலையும் அடையப் பாத்திரராக எண்ணப்படுகிறவர்களோ பெண்கொள்வதுமில்லை பெண் கொடுப்பதுமில்லை.
36. அவர்கள் இனி மரிக்கவுமாட்டார்கள்; அவர்கள் உயிர்த்தெழுதலின் பிள்ளைகளானபடியால் தேவதூதருக்கு ஒப்பானவர்களுமாய், தேவனுக்குப் பிள்ளைகளுமாயிருப்பார்கள்.
37. அன்றியும் மரித்தோர் எழுந்திருப்பார்களென்பதை மோசேயும் முட்செடியைப்பற்றிய வாசகத்தில் காண்பித்திருக்கிறார். எப்படியெனில், கர்த்தரை ஆபிரகாமின் தேவனென்றும் ஈசாக்கின் தேவனென்றும் யாக்கோபின் தேவனென்றும் சொல்லியிருக்கிறார்.
38. அவர் மரித்தோரின் தேவனாயிராமல், ஜீவனுள்ளோரின் தேவனாயிருக்கிறார்; எல்லாரும் அவருக்குப் பிழைத்திருக்கிறார்களே என்றார்.
39. அப்பொழுது வேதபாரகரில் சிலர் அதைக் கேட்டு: போதகரே, நன்றாய்ச் சொன்னீர் என்றார்கள்.
40. அதன்பின்பு அவர்கள் அவரிடத்தில் வேறொன்றுங்கேட்கத் துணியவில்லை.
41. அவர் அவர்களை நோக்கி: கிறிஸ்து தாவீதின் குமாரனென்று எப்படிச் சொல்லுகிறார்கள்?
42. நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப் போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்று,
43. கர்த்தர் என் ஆண்டவருடனே சொன்னார் என்று தாவீது தானே சங்கீத புஸ்தகத்தில் சொல்லுகிறானே.
44. தாவீது அவரை ஆண்டவரென்று சொல்லியிருக்க, அவனுக்கு அவர் குமாரனாயிருப்பது எப்படி என்றார்.
45. பின்பு ஜனங்களெல்லாரும் கேட்கையில் அவர் தம்முடைய சீஷரை நோக்கி:
46. நீண்ட அங்கிகளைத் தரித்துக்கொண்டு திரியவும், சந்தை வெளிகளில் வந்தனங்களை அடையவும், ஜெபஆலயங்களில் முதன்மையான ஆசனங்களில் உட்காரவும், விருந்துகளில் முதன்மையான இடங்களில் இருக்கவும் விரும்பி,
47. விதவைகளின் வீடுகளைப் பட்சித்து, பார்வைக்கு நீண்ட ஜெபம்பண்ணுகிற வேதபாரகரைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள், அவர்கள் அதிக ஆக்கினையை அடைவார்கள் என்றார்.

Chapter 21

1. அவர் கண்ணேறிட்டுப் பார்த்தபோது, ஐசுவரியவான்கள் காணிக்கைப் பெட்டியிலே தங்கள் காணிக்கைகளைப் போடுகிறதைக் கண்டார்.
2. ஒரு ஏழை விதவை அதிலே இரண்டு காசைப் போடுகிறதையும் கண்டு:
3. இந்த ஏழை விதவை மற்றெல்லாரைப் பார்க்கிலும் அதிகமாகப் போட்டாள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
4. அவர்களெல்லாரும் தங்கள் பரிபூரணத்திலிருந்தெடுத்துத் தேவனுக்கென்று காணிக்கை போட்டார்கள்; இவளோ தன் வறுமையிலிருந்து தன் ஜீவனத்துக்கு உண்டாயிருந்ததெல்லாம் போட்டுவிட்டாள் என்றார்.
5. பின்பு, சிறந்த கற்களினாலும் காணிக்கைகளினாலும் தேவாலயம் அலங்கரிக்கப்பட்டிருக்கிறதைக்குறித்துச் சிலர் சொன்னபோது,
6. அவர்: நீங்கள் பார்க்கிற இவைகளில் ஒரு கல் மற்றொரு கல்லின்மேலிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்படும் நாட்கள் வரும் என்றார்.
7. அவர்கள் அவரை நோக்கி: போதகரே, இவைகள் எப்பொழுது சம்பவிக்கும், இவைகள் சம்பவிக்கும் காலத்துக்கு அடையாளம் என்ன என்று கேட்டார்கள்.
8. அதற்கு அவர்: நீங்கள் வஞ்சிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் அநேகர் வந்து என் நாமத்தைத் தரித்துக்கொண்டு: நான்தான் கிறிஸ்து என்றும், காலம் சமீபித்தது என்றும் சொல்லுவார்கள்; அவர்களைப் பின்பற்றாதிருங்கள்.
9. யுத்தங்களையும் கலகங்களையுங்குறித்து நீங்கள் கேள்விப்படும்போது, பயப்படாதிருங்கள்; இவைகள் முன்னதாகச் சம்பவிக்கவேண்டியதே; ஆனாலும் முடிவு உடனே வராது என்றார்.
10. அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்.
11. பல இடங்களில் மகா பூமியதிர்ச்சிகளும், பஞ்சங்களும், கொள்ளைநோய்களும் உண்டாகும்; வானத்திலிருந்து பயங்கரமான தோற்றங்களும் பெரிய அடையாளங்களும் உண்டாகும்.
12. இவைகளெல்லாம் நடப்பதற்கு முன்னே என் நாமத்தினிமித்தம், அவர்கள் உங்களைப் பிடித்து, ஜெப ஆலயங்களுக்கும் சிறைச்சாலைகளுக்கும் ஒப்புக்கொடுத்து, ராஜாக்கள் முன்பாகவும் அதிபதிகள் முன்பாகவும் உங்களை இழுத்துத் துன்பப்படுத்துவார்கள்.
13. ஆனாலும் அது உங்களுக்குச் சாட்சியாவதற்கு ஏதுவாயிருக்கும்.
14. ஆகையால் என்ன உத்தரவு சொல்லுவோமென்று கவலைப்படாதிருக்கும்படி உங்கள் மனதிலே நிர்ணயம்பண்ணிக்கொள்ளுங்கள்.
15. உங்களை விரோதிக்கிறவர்கள் ஒருவரும் எதிர்பேசவும் எதிர்நிற்கவும் கூடாத வாக்கையும் ஞானத்தையும் நான் உங்களுக்குக் கொடுப்பேன்.
16. பெற்றாராலும், சகோதரராலும், பந்துஜனங்களாலும், சிநேகிதராலும் காட்டிக்கொடுக்கப்படுவீர்கள்; உங்களில் சிலரைக் கொலைசெய்வார்கள்.
17. என் நாமத்தினிமித்தம் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள்.
18. ஆனாலும் உங்கள் தலைமயிரில் ஒன்றாகிலும் அழியாது.
19. உங்கள் பொறுமையினால் உங்கள் ஆத்துமாக்களைக் காத்துக்கொள்ளுங்கள்.
20. எருசலேம் சேனைகளால் சூழப்பட்டிருப்பதை நீங்கள் காணும்போது, அதின் அழிவு சமீபமாயிற்றென்று அறியுங்கள்.
21. அப்பொழுது யூதேயாவிலிருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகவும், எருசலேமிலிருக்கிறவர்கள் வெளியே புறப்படவும், நாட்டுப்புறங்களிலிருக்கிறவர்கள் நகரத்தில் பிரவேசியாமலிருக்கவும் கடவர்கள்.
22. எழுதியிருக்கிற யாவும் நிறைவேறும்படி நீதியைச் சரிக்கட்டும் நாட்கள் அவைகளே.
23. அந்நாட்களில் கர்ப்பவதிகளுக்கும் பால்கொடுக்கிறவர்களுக்கும் ஐயோ, பூமியின்மேல் மிகுந்த இடுக்கணும் இந்த ஜனத்தின்மேல் கோபாக்கினையும் உண்டாகும்.
24. பட்டயக்கருக்கினாலே விழுவார்கள், சகல புறஜாதிகளுக்குள்ளும் சிறைப்பட்டுப்போவார்கள்; புறஜாதியாரின் காலம் நிறைவேறும்வரைக்கும் எருசலேம் புறஜாதியாரால் மிதிக்கப்படும்.
25. சூரியனிலும் சந்திரனிலும் நட்சத்திரங்களிலும் அடையாளங்கள் தோன்றும்; பூமியின்மேலுள்ள ஜனங்களுக்குத் தத்தளிப்பும் இடுக்கணும் உண்டாகும்; சமுத்திரமும் அலைகளும் முழக்கமாயிருக்கும்.
26. வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும்; ஆதலால் பூமியின்மேல் வரும் ஆபத்துகளுக்குப் பயந்து எதிர்பார்த்திருக்கிறதினால் மனுஷருடைய இருதயம் சோர்ந்துபோம்.
27. அப்பொழுது மனுஷகுமாரன் மிகுந்த வல்லமையோடும் மகிமையோடும் மேகத்தின்மேல் வருகிறதைக் காண்பார்கள்.
28. இவைகள் சம்பவிக்கத் தொடங்கும்போது, உங்கள் மீட்பு சமீபமாயிருப்பதால், நீங்கள் நிமிர்ந்து பார்த்து, உங்கள் தலைகளை உயர்த்துங்கள் என்றார்.
29. அன்றியும் அவர்களுக்கு ஒரு உவமையைச் சொன்னார்: அத்திமரத்தையும் மற்றெல்லா மரங்களையும் பாருங்கள்.
30. அவைகள் துளிர்க்கிறதை நீங்கள் காணும்போது வசந்தகாலம் சமீபமாயிற்றென்று அறிகிறீர்கள்.
31. அப்படியே இவைகள் சம்பவிக்கிறதை நீங்கள் காணும்போது, தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்றென்று அறியுங்கள்.
32. இவையெல்லாம் சம்பவிக்கும் முன் இந்தச் சந்ததி ஒழிந்துபோகாதென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
33. வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை.
34. உங்கள் இருதயங்கள் பெருந்திண்டியினாலும் வெறியினாலும் லவுகீக கவலைகளினாலும் பாரமடையாதபடிக்கும், நீங்கள் நினையாத நேரத்தில் அந்த நாள் உங்கள்மேல் வராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள்.
35. பூமியிலெங்கும் குடியிருக்கிற அனைவர்மேலும் அது ஒரு கண்ணியைப்போல வரும்.
36. ஆகையால் இனிச் சம்பவிக்கப்போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி, மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப் பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு, எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருங்கள் என்றார்.
37. அவர் பகற்காலங்களில் தேவாலயத்திலே உபதேசம்பண்ணிக்கொண்டிருந்து, இராக்காலங்களில் வெளியே போய், ஒலிவமலை என்னப்பட்ட மலையிலே தங்கிவந்தார்.
38. ஜனங்களெல்லாரும் அவருடைய உபதேசத்தைக் கேட்கும்படி அதிகாலமே தேவாலயத்தில் அவரிடத்திற்கு வருவார்கள்.

Chapter 22

1. பஸ்கா என்னப்பட்ட புளிப்பில்லாத அப்பப்பண்டிகை சமீபமாயிற்று.
2. அப்பொழுது பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் அவரைக் கொலைசெய்யும்படி யோசித்து, ஜனங்களுக்குப் பயப்பட்டபடியினால், எவ்விதமாய் அப்படிச் செய்யலாமென்று வகைதேடினார்கள்.
3. அப்பொழுது பன்னிருவரில் ஒருவனாகிய ஸ்காரியோத்தென்னும் மறுபேர்கொண்ட யூதாசுக்குள் சாத்தான் புகுந்தான்.
4. அவன் பிரதான ஆசாரியர்களிடத்திலும் சேனைத்தலைவர்களிடத்திலும் போய், அவரைக் காட்டிக்கொடுக்கும் வகையைக் குறித்து அவர்களோடே ஆலோசனை பண்ணினான்.
5. அவர்கள் சந்தோஷப்பட்டு, அவனுக்குப் பணங்கொடுக்க உடன்பட்டார்கள்.
6. அதற்கு அவன் சம்மதித்து, ஜனக்கூட்டமில்லாத வேளையில் அவரை அவர்களுக்குக் காட்டிக்கொடுக்கும்படி சமயந்தேடினான்.
7. பஸ்காவைப் பலியிடவேண்டிய புளிப்பில்லாத அப்பப்பண்டிகை நாள் வந்தது.
8. அப்பொழுது அவர் பேதுருவையும் யோவானையும் அழைத்து: நாம் பஸ்காவைப் புசிக்கும்படிக்கு நீங்கள் போய், அதை நமக்கு ஆயத்தம்பண்ணுங்கள் என்றார்.
9. அதற்கு அவர்கள்: நாங்கள் அதை எங்கே ஆயத்தம்பண்ணும்படி சித்தமாயிருக்கிறீர் என்று கேட்டார்கள்.
10. அதற்கு அவர்: நீங்கள் நகரத்தில் பிரவேசிக்கும்போது, தண்ணீர்க்குடம் சுமந்துவருகிற ஒரு மனுஷன் உங்களுக்கு எதிர்ப்படுவான்; நீங்கள் அவனுக்குப் பின்சென்று, அவன் போகும் வீட்டிற்குள் நீங்களும் போய்,
11. அந்த வீட்டெஜமானை நோக்கி: நான் என் சீஷரோடுகூடப் பஸ்காவைப் புசிக்கிறதற்குத் தகுதியான இடம் எங்கே என்று போதகர் உம்மிடத்தில் கேட்கச் சொன்னார் என்று சொல்லுங்கள்.
12. அவன் கம்பளமுதலானவைகள் விரித்திருக்கிற மேல்வீட்டிலுள்ள ஒரு பெரிய அறையை உங்களுக்குக் காண்பிப்பான்; அங்கே ஆயத்தம்பண்ணுங்கள் என்று சொல்லி அனுப்பினார்.
13. அவர்கள் போய், தங்களிடத்தில் அவர் சொன்னபடியே கண்டு, பஸ்காவை ஆயத்தம்பண்ணினார்கள்.
14. வேளைவந்தபோது, அவரும் அவருடனேகூடப் பன்னிரண்டு அப்போஸ்தலரும் பந்தியிருந்தார்கள்.
15. அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: நான் பாடுபடுகிறதற்கு முன்னே உங்களுடனேகூட இந்தப் பஸ்காவைப் புசிக்க மிகவும் ஆசையாயிருந்தேன்.
16. தேவனுடைய ராஜ்யத்திலே இது நிறைவேறுமளவும் நான் இனி இதைப் புசிப்பதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொல்லி,
17. அவர் பாத்திரத்தை எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி: நீங்கள் இதை வாங்கி, உங்களுக்குள்ளே பங்கிட்டுக் கொள்ளுங்கள்;
18. தேவனுடைய ராஜ்யம் வருமளவும் நான் திராட்சப்பழரசத்தைப் பானம்பண்ணுவதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
19. பின்பு அவர் அப்பத்தை எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து: இது உங்களுக்காகக் கொடுக்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது; என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார்.
20. போஜனம்பண்ணினபின்பு அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் கொடுத்து: இந்தப் பாத்திரம் உங்களுக்காகச் சிந்தப்படுகிற என்னுடைய இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது என்றார்.
21. பின்பு: இதோ, என்னைக் காட்டிக்கொடுக்கிறவனுடைய கை என்னுடனேகூடப் பந்தியிலிருக்கிறது.
22. தீர்மானிக்கப்பட்டபடியே மனுஷகுமாரன் போகிறார், ஆனாலும் அவரைக் காட்டிக்கொடுக்கிற மனுஷனுக்கு ஐயோ என்றார்.
23. அப்பொழுது அவர்கள் நம்மில் யார் அப்படிச் செய்வான் என்று தங்களுக்குள்ளே விசாரிக்கத் தொடங்கினார்கள்.
24. அன்றியும் தங்களில் எவன் பெரியவனாயிருப்பான் என்று அவர்களுக்குள்ளே வாக்குவாதம் உண்டாயிற்று.
25. அவர் அவர்களை நோக்கி: புறஜாதியாரின் ராஜாக்கள் அவர்களை ஆளுகிறார்கள்; அவர்கள்மேல் அதிகாரம் செலுத்துகிறவர்களும் உபகாரிகள் என்னப்படுகிறார்கள்.
26. உங்களுக்குள்ளே அப்படியிருக்கக்கூடாது; உங்களில் பெரியவன் சிறியவனைப்போலவும், தலைவன் பணிவிடைக்காரனைப்போலவும் இருக்கக்கடவன்.
27. பந்தியிருக்கிறவனோ, பணிவிடைசெய்கிறவனோ, எவன் பெரியவன்? பந்தியிருக்கிறவன் அல்லவா? அப்படியிருந்தும், நான் உங்கள் நடுவிலே பணிவிடைக்காரனைப்போல் இருக்கிறேன்.
28. மேலும் எனக்கு நேரிட்ட சோதனைகளில் என்னோடேகூட நிலைத்திருந்தவர்கள் நீங்களே.
29. ஆகையால், என் பிதா எனக்கு ஒரு ராஜ்யத்தை ஏற்படுத்தினதுபோல, நானும் உங்களுக்கு ஏற்படுத்துகிறேன்.
30. நீங்கள் என் ராஜ்யத்திலே என் பந்தியில் போஜனபானம்பண்ணி, இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்க்கிறவர்களாய்ச் சிங்காசனங்களின்மேல் உட்காருவீர்கள் என்றார்.
31. பின்னும் கர்த்தர்: சீமோனே, சீமோனே, இதோ, கோதுமையைச் சுளகினால் புடைக்கிறதுபோலச் சாத்தான் உங்களைப் புடைக்கிறதற்கு உத்தரவு கேட்டுக்கொண்டான்.
32. நானோ உன் விசுவாசம் ஒழிந்துபோகாதபடிக்கு உனக்காக வேண்டிக்கொண்டேன்; நீ குணப்பட்டபின்பு உன் சகோதரரை ஸ்திரப்படுத்து என்றார்.
33. அதற்கு அவன்: ஆண்டவரே, காவலிலும் சாவிலும் உம்மைப் பின்பற்றிவர, ஆயத்தமாயிருக்கிறேன் என்றான்.
34. அவர் அவனை நோக்கி: பேதுருவே, இன்றைக்குச் சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை அறிந்திருக்கிறதை மூன்றுதரம் மறுதலிப்பாய் என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
35. பின்னும் அவர் அவர்களை நோக்கி: நான் உங்களைப் பணப்பையும் சாமான்பையும் பாதரட்சைகளும் இல்லாமல் அனுப்பினபோது, ஏதாகிலும் உங்களுக்குக் குறைவாயிருந்ததா என்றார். அவர்கள், ஒன்றும் குறைவாயிருந்ததில்லை என்றார்கள்.
36. அதற்கு அவர்: இப்பொழுதோ பணப்பையும் சாமான்பையும் உடையவன் அவைகளை எடுத்துக்கொள்ளக்கடவன்; பட்டயம் இல்லாதவன் தன் வஸ்திரத்தை விற்று ஒன்றைக் கொள்ளக்கடவன்.
37. அக்கிரமக்காரரில் ஒருவனாக எண்ணப்பட்டார் என்று எழுதியிருக்கிற வாக்கியம் என்னிடத்தில் நிறைவேறவேண்டியதென்று உங்களுக்குச் சொல்லுகிறேன். என்னைப்பற்றிய காரியங்கள் முடிவு பெறுங்காலம் வந்திருக்கிறது என்றார்.
38. அதற்கு அவர்கள்: ஆண்டவரே, இதோ, இங்கே இரண்டு பட்டயம் இருக்கிறது என்றார்கள். அவர்: போதும் என்றார்.
39. பின்பு அவர் புறப்பட்டு, வழக்கத்தின்படியே ஒலிவமலைக்குப் போனார், அவருடைய சீஷரும் அவரோடேகூடப் போனார்கள்.
40. அவ்விடத்தில் சேர்ந்தபொழுது அவர் அவர்களை நோக்கி: நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு ஜெபம்பண்ணுங்கள் என்று சொல்லி,
41. அவர்களை விட்டுக் கல்லெறிதூரம் அப்புறம்போய், முழங்கால்படியிட்டு:
42. பிதாவே, உமக்குச் சித்தமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படி செய்யும்; ஆயினும் என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார்.
43. அப்பொழுது வானத்திலிருந்து ஒரு தூதன் தோன்றி, அவரைப் பலப்படுத்தினான்.
44. அவர் மிகவும் வியாகுலப்பட்டு, அதிக ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார். அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையிலே விழுந்தது.
45. அவர் ஜெபம்பண்ணி முடித்து, எழுந்திருந்து, தம்முடைய சீஷரிடத்தில் வந்து, அவர்கள் துக்கத்தினாலே நித்திரை பண்ணுகிறதைக் கண்டு:
46. நீங்கள் நித்திரைபண்ணுகிறதென்ன? சோதனைக்குட்படாதபடிக்கு, எழுந்திருந்து ஜெபம்பண்ணுங்கள் என்றார்.
47. அவர் அப்படிப் பேசுகையில் ஜனங்கள் கூட்டமாய் வந்தார்கள். அவர்களுக்கு முன்னே பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ் என்பவனும் வந்து, இயேசுவை முத்தஞ்செய்யும்படி அவரிடத்தில் சேர்ந்தான்.
48. இயேசு அவனை நோக்கி: யூதாசே, முத்தத்தினாலேயா மனுஷகுமாரனைக் காட்டிக்கொடுக்கிறாய் என்றார்.
49. அவரைச் சூழநின்றவர்கள் நடக்கப்போகிறதைக் கண்டு: ஆண்டவரே, பட்டயத்தினாலே வெட்டுவோமா என்றார்கள்.
50. அந்தப்படியே அவர்களில் ஒருவன் பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனை வலதுகாதற வெட்டினான்.
51. அப்பொழுது இயேசு: இம்மட்டில் நிறுத்துங்கள் என்று சொல்லி, அவனுடைய காதைத்தொட்டு, அவனைச் சொஸ்தப்படுத்தினார்.
52. பின்பு இயேசு தமக்கு விரோதமாய் வந்த பிரதான ஆசாரியர்களையும் தேவாலயத்துச் சேனைத்தலைவர்களையும் மூப்பர்களையும் நோக்கி: ஒரு கள்ளனைப் பிடிக்கப் புறப்பட்டு வருகிறதுபோல, நீங்கள் பட்டயங்களையும் தடிகளையும் எடுத்துப் புறப்பட்டு வந்தீர்களே.
53. நான் தினந்தோறும் தேவாலயத்தில் உங்களுடனேகூட இருக்கையில் நீங்கள் என்னைப் பிடிக்கக் கைநீட்டவில்லை; இதுவோ உங்களுடைய வேளையும் அந்தகாரத்தின் அதிகாரமுமாயிருக்கிறது என்றார்.
54. அவர்கள் அவரைப் பிடித்தபின்பு, பிரதான ஆசாரியனுடைய வீட்டில் கொண்டுபோய் விட்டார்கள். பேதுருவும் தூரத்திலே பின்சென்றான்.
55. அவர்கள் முற்றத்தின் நடுவிலே நெருப்பை மூட்டி, அதைச் சுற்றி உட்கார்ந்தபோது, பேதுருவும் அவர்கள் நடுவிலே உட்கார்ந்தான்.
56. அப்பொழுது ஒரு வேலைக்காரி அவனை நெருப்பண்டையிலே உட்கார்ந்திருக்கக்கண்டு, அவனை உற்றுப்பார்த்து: இவனும் அவனோடிருந்தான் என்றாள்.
57. அதற்கு அவன்: ஸ்திரீயே, அவனை அறியேன் என்று மறுதலித்தான்.
58. சற்றுநேரத்துக்குப்பின்பு வேறொருவன் அவனைக் கண்டு: நீயும் அவர்களில் ஒருவன் என்றான். அதற்குப் பேதுரு: மனுஷனே, நான் அல்ல என்றான்.
59. ஏறக்குறைய ஒருமணி நேரத்துக்குப்பின்பு வேறொருவன் அவனைப் பார்த்து: மெய்யாகவே இவனும் அவனோடிருந்தான், இவன் கலிலேயன்தான் என்று சாதித்தான்.
60. அதற்குப் பேதுரு: மனுஷனே, நீ சொல்லுகிறதை அறியேன் என்றான். அவன் இப்படிச் சொன்னவுடனே சேவல் கூவிற்று.
61. அப்பொழுது கர்த்தர் திரும்பி, பேதுருவை நோக்கிப் பார்த்தார். சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை மூன்றுதரம் மறுதலிப்பாய் என்று கர்த்தர் தன்னிடத்தில் சொன்ன வசனத்தை உடனே பேதுரு நினைவுகூர்ந்து,
62. வெளியே போய், மனங்கசந்து அழுதான்.
63. இயேசுவைப் பிடித்துக்கொண்ட மனுஷர் அவரைப் பரியாசம்பண்ணி, அடித்து,
64. அவருடைய கண்களைக் கட்டி, அவருடைய முகத்தில் அறைந்து: உன்னை அடித்தவன் யார், அதை ஞானதிருஷ்டியினால் சொல் என்று அவரைக் கேட்டதுமன்றி,
65. மற்றும் அநேக தூஷணவார்த்தைகளையும் அவருக்கு விரோதமாகச் சொன்னார்கள்.
66. விடியற்காலமானபோது ஜனத்தின் மூப்பரும் பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் கூடிவந்து, தங்கள் ஆலோசனைச் சங்கத்தில் அவரைக் கொண்டுவந்து நிறுத்தி:
67. நீ கிறிஸ்துவா? அதை எங்களுக்குச் சொல் என்றார்கள். அதற்கு அவர்: நான் உங்களுக்குச் சொன்னாலும் நம்பமாட்டீர்கள்.
68. நான் உங்களிடத்தில் வினாவினாலும் எனக்கு மாறுத்தரம் சொல்லமாட்டீர்கள், என்னை விடுதலைபண்ணவுமாட்டீர்கள்.
69. இதுமுதல் மனுஷகுமாரன் சர்வவல்லமையுள்ள தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருப்பார் என்றார்.
70. அதற்கு அவர்களெல்லாரும்: அப்படியானால், நீ தேவனுடைய குமாரனா என்று கேட்டார்கள். அதற்கு அவர்: நீங்கள் சொல்லுகிறபடியே நான் அவர்தான் என்றார்.
71. அப்பொழுது அவர்கள்: இனி வேறு சாட்சி நமக்கு வேண்டுவதென்ன? நாமே இவனுடைய வாயினாலே கேட்டோமே என்றார்கள்.

Chapter 23

1. அவர்களுடைய கூட்டத்தாரெல்லாரும் எழுந்திருந்து, அவரைப் பிலாத்துவினிடத்திற்குக் கொண்டுபோய்:
2. இவன் தன்னைக் கிறிஸ்து என்னப்பட்ட ராஜாவென்றும், ராயருக்கு வரிகொடுக்க வேண்டுவதில்லையென்றும் சொல்லி, ஜனங்களைக் கலகப்படுத்தக் கண்டோம் என்று அவர்மேல் குற்றஞ்சாட்டத் தொடங்கினார்கள்.
3. பிலாத்து அவரை நோக்கி: நீ யூதருடைய ராஜாவா என்று கேட்டான். அவர் அவனுக்குப் பிரதியுத்தரமாக: நீர் சொல்லுகிறபடிதான் என்றார்.
4. அப்பொழுது பிலாத்து பிரதான ஆசாரியர்களையும் ஜனங்களையும் நோக்கி: இந்த மனுஷனிடத்தில் நான் ஒரு குற்றத்தையும் காணவில்லை என்றான்.
5. அதற்கு அவர்கள்: இவன் கலிலேயா நாடுதொடங்கி இவ்விடம்வரைக்கும் யூதேயாதேசமெங்கும் உபதேசம்பண்ணி, ஜனங்களைக் கலகப்படுத்துகிறான் என்று வைராக்கியத்தோடே சொன்னார்கள்.
6. கலிலேயா என்பதைப் பிலாத்து கேட்டபொழுது, இந்த மனுஷன் கலிலேயனா என்று விசாரித்து,
7. அவர் ஏரோதின் அதிகாரத்துக்குள்ளானவர் என்றறிந்து, அந்நாட்களில் எருசலேமிலே வந்திருந்த ஏரோதுவினிடத்திற்கு அவரை அனுப்பினான்.
8. ஏரோது இயேசுவைக்குறித்து அநேக காரியங்களைக் கேள்விப்பட்டிருந்ததினாலும், அவரால் செய்யப்படும் அடையாளத்தைப் பார்க்கவேண்டுமென்று விரும்பியிருந்ததினாலும், அவரைக் காணும்படி வெகுநாளாய் ஆசைகொண்டிருந்தான். அந்தப்படி அவரைக் கண்டபோது, மிகவும் சந்தோஷப்பட்டு,
9. அநேக காரியங்களைக்குறித்து அவரிடத்தில் வினாவினான். அவர் மறுமொழியாக அவனுக்கு ஒன்றும் சொல்லவில்லை.
10. பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் அவர்மேல் பிடிவாதமாய்க் குற்றஞ்சாட்டிக்கொண்டே நின்றார்கள்.
11. அப்பொழுது ஏரோது தன் போர்ச்சேவகரோடுகூட அவரை நிந்தித்துப் பரியாசம்பண்ணி, மினுக்கான வஸ்திரத்தை அவருக்கு உடுத்தி, அவரைத் திரும்பப் பிலாத்துவினிடத்திற்கு அனுப்பினான்.
12. முன்னே ஒருவருக்கொருவர் பகைவராயிருந்த பிலாத்துவும் ஏரோதும் அன்றையத்தினம் சிநேகிதரானார்கள்.
13. பிலாத்து பிரதான ஆசாரியர்களையும் அதிகாரிகளையும் ஜனங்களையும் கூடிவரச்செய்து,
14. அவர்களை நோக்கி: ஜனங்களைக் கலகத்துக்குத் தூண்டிவிடுகிறவனாக இந்த மனுஷனை என்னிடத்தில் கொண்டுவந்தீர்கள்; நான் உங்களுக்கு முன்பாக விசாரித்தபோது, இவன்மேல் நீங்கள் சாட்டுகிற குற்றங்களில் ஒன்றையும் நான் இவனிடத்தில் காணவில்லை.
15. உங்களை ஏரோதினிடத்திற்கும் அனுப்பினேன்; அவரும் இவனிடத்தில் குற்றம் காணவில்லை; மரணத்துக்கேதுவாக இவன் ஒன்றும் செய்யவில்லையே.
16. ஆனபடியால் இவனைத் தண்டித்து, விடுதலையாக்குவேன் என்றான்.
17. பண்டிகைதோறும் அவர்களுக்கு ஒருவனை அவன் விடுதலையாக்குவது அவசியமாயிருந்தபடியால் அப்படிச் சொன்னான்.
18. ஜனங்களெல்லாரும் அதைக் கேட்டு: இவனை அகற்றும், பரபாசை எங்களுக்கு விடுதலையாக்கும் என்று சத்தமிட்டுக் கேட்டார்கள்.
19. அந்தப் பரபாசென்பவன் நகரத்தில் நடந்த ஒரு கலகத்தினிமித்தமும் கொலைபாதகத்தினிமித்தமும் காவலிலே வைக்கப்பட்டிருந்தான்.
20. பிலாத்து இயேசுவை விடுதலையாக்க மனதாய், மறுபடியும் அவர்களிடத்தில் பேசினான்.
21. அவர்களோ: அவனைச் சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும் என்று கூக்குரலிட்டார்கள்.
22. அவன் மூன்றாந்தரம் அவர்களை நோக்கி: ஏன், இவன் என்ன பொல்லாப்புச் செய்தான்? மரணத்துக்கு ஏதுவான குற்றம் ஒன்றும் இவனிடத்தில் நான் காணவில்லையே; ஆகையால் நான் இவனைத் தண்டித்து, விடுதலையாக்குவேன் என்றான்.
23. அப்படியிருந்தும் அவரைச் சிலுவையில் அறையவேண்டுமென்று அவர்கள் உரத்த சத்தத்தோடு கேட்டுக்கொண்டேயிருந்தார்கள். அவர்களும் பிரதான ஆசாரியரும் இட்ட சத்தம் மேற்கொண்டது.
24. அப்பொழுது அவர்கள் கேட்டுக்கொண்டபடியே ஆகட்டும் என்று பிலாத்து தீர்ப்புசெய்து,
25. கலகத்தினிமித்தமும் கொலைபாதகத்தினிமித்தமும் காவலில் போடப்பட்டிருந்தவனை அவர்கள் கேட்டுக்கொண்டபடியே விடுதலையாக்கி, இயேசுவையோ அவர்கள் இஷ்டத்துக்கு ஒப்புக்கொடுத்தான்.
26. அவர்கள் இயேசுவைக் கொண்டுபோகிறபோது, நாட்டிலிருந்து வருகிற சிரேனே ஊரானாகிய சீமோன் என்கிற ஒருவனைப் பிடித்து, சிலுவையை அவர்பின்னே சுமந்துகொண்டுவரும்படி அதை அவன்மேல் வைத்தார்கள்.
27. திரள்கூட்டமான ஜனங்களும் அவருக்காகப் புலம்பி அழுகிற ஸ்திரீகளும் அவருக்குப் பின்சென்றார்கள்.
28. இயேசு அவர்கள் முகமாய்த் திரும்பி: எருசலேமின் குமாரத்திகளே, நீங்கள் எனக்காக அழாமல், உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள்.
29. இதோ, மலடிகள் பாக்கியவதிகளென்றும், பிள்ளைபெறாத கர்ப்பங்களும் பால்கொடாத முலைகளும் பாக்கியமுள்ளவைகளென்றும் சொல்லப்படும் நாட்கள் வரும்.
30. அப்பொழுது மலைகளை நோக்கி: எங்கள்மேல் விழுங்களென்றும், குன்றுகளை நோக்கி: எங்களை மறைத்துக்கொள்ளுங்களென்றும் சொல்லத்தொடங்குவார்கள்.
31. பச்சைமரத்துக்கு இவைகளைச் செய்தால், பட்டமரத்துக்கு என்ன செய்யமாட்டார்கள் என்றார்.
32. குற்றவாளிகளாகிய வேறே இரண்டுபேரும் அவரோடேகூடக் கொலைசெய்யப்படுவதற்குக் கொண்டுபோகப்பட்டார்கள்.
33. கபாலஸ்தலம் என்று சொல்லப்பட்ட இடத்தில் அவர்கள் சேர்ந்தபொழுது, அங்கே அவரையும், அவருடைய வலதுபக்கத்தில் ஒரு குற்றவாளியையும், அவருடைய இடதுபக்கத்தில் ஒரு குற்றவாளியையும் சிலுவைகளில் அறைந்தார்கள்.
34. அப்பொழுது இயேசு: பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார். அவருடைய வஸ்திரங்களை அவர்கள் பங்கிட்டுச் சீட்டுப்போட்டார்கள்.
35. ஜனங்கள் நின்று பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர்களுடனேகூட அதிகாரிகளும் அவரை இகழ்ந்து: இவன் மற்றவர்களை இரட்சித்தான், இவன் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட கிறிஸ்துவானால், தன்னைத்தானே இரட்சித்துக்கொள்ளட்டும் என்றார்கள்.
36. போர்ச்சேவகரும் அவரிடத்தில் சேர்ந்து, அவருக்குக் காடியைக் கொடுத்து:
37. நீ யூதரின் ராஜாவானால், உன்னை இரட்சித்துக்கொள் என்று அவரைப் பரியாசம்பண்ணினார்கள்.
38. இவன் யூதருடைய ராஜா என்று, கிரேக்கு லத்தீன் எபிரெயு எழுத்துக்களில் எழுதி, அவருக்கு மேலாக வைக்கப்பட்டது.
39. அன்றியும் சிலுவையில் அறையப்பட்டிருந்த குற்றவாளிகளில் ஒருவன்: நீ கிறிஸ்துவானால் உன்னையும் எங்களையும் இரட்சித்துக்கொள் என்று அவரை இகழ்ந்தான்.
40. மற்றவன் அவனை நோக்கி: நீ இந்த ஆக்கினைக்குட்பட்டவனாயிருந்தும் தேவனுக்குப் பயப்படுகிறதில்லையா?
41. நாமோ நியாயப்படி தண்டிக்கப்படுகிறோம்; நாம் நடப்பித்தவைகளுக்குத்தக்க பலனை அடைகிறோம்; இவரோ தகாததொன்றையும் நடப்பிக்கவில்லையே என்று அவனைக் கடிந்துகொண்டு,
42. இயேசுவை நோக்கி: ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் என்றான்.
43. இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
44. அப்பொழுது ஏறக்குறைய ஆறாம்மணி நேரமாயிருந்தது; ஒன்பதாம்மணி நேரம்வரைக்கும் பூமியெங்கும் அந்தகாரமுண்டாயிற்று.
45. சூரியன் இருளடைந்தது, தேவாலயத்தின் திரைச்சீலை நடுவில் இரண்டாகக் கிழிந்தது.
46. இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச் சொன்னார்; இப்படிச் சொல்லி, ஜீவனை விட்டார்.
47. நூற்றுக்கு அதிபதி சம்பவித்ததைக்கண்டு: மெய்யாகவே இந்த மனுஷன் நீதிபரனாயிருந்தான் என்று சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினான்.
48. இந்தக் காட்சியைப் பார்க்கும்படி கூடிவந்திருந்த ஜனங்களெல்லாரும் சம்பவித்தவைகளைப் பார்த்தபொழுது, தங்கள் மார்பில் அடித்துக்கொண்டு திரும்பிப்போனார்கள்.
49. அவருக்கு அறிமுகமானவர்களெல்லாரும், கலிலேயாவிலிருந்து அவருக்குப் பின்சென்று வந்த ஸ்திரீகளும் தூரத்திலே நின்று இவைகளைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
50. யோசேப்பு என்னும் பேர்கொண்ட ஒரு ஆலோசனைக்காரன் இருந்தான்; அவன் உத்தமனும் நீதிமானுமாயிருந்தான்.
51. அவன் யூதருடைய பட்டணங்களிலொன்றாகிய அரிமத்தியாவிலிருந்து வந்தவனும், தேவனுடைய ராஜ்யத்துக்குக் காத்திருந்தவனும், யூதர்களுடைய ஆலோசனைக்கும் செய்கைக்கும் சம்மதியாதவனுமாயிருந்தான்.
52. அவன் பிலாத்துவினிடத்தில் போய், இயேசுவின் சரீரத்தைக் கேட்டு,
53. அதை இறக்கி, மெல்லிய துப்பட்டியிலே சுற்றி, கன்மலையில் வெட்டப்பட்டதுமாய் ஒருக்காலும் ஒருவனும் வைக்கப்படாததுமாயிருந்த ஒரு கல்லறையிலே வைத்தான்.
54. அந்த நாள் ஆயத்தநாளாயிருந்தது; ஓய்வுநாளும் ஆரம்பமாயிற்று.
55. கலிலேயாவிலிருந்து அவருடனேகூட வந்திருந்த ஸ்திரீகளும் பின்சென்று, கல்லறையையும் அவருடைய சரீரம் வைக்கப்பட்ட விதத்தையும் பார்த்து,
56. திரும்பிப்போய், கந்தவர்க்கங்களையும் பரிமளதைலங்களையும் ஆயத்தம்பண்ணி, கற்பனையின்படியே ஓய்வுநாளில் ஓய்ந்திருந்தார்கள்.

Chapter 24

1. வாரத்தின் முதலாம்நாள் அதிகாலையிலே தாங்கள் ஆயத்தம்பண்ணின கந்தவர்க்கங்களை அவர்கள் எடுத்துக்கொண்டு வேறு சில ஸ்திரீகளோடுங்கூடக் கல்லறையினிடத்தில் வந்தார்கள்.
2. கல்லறையை அடைத்திருந்த கல் புரட்டித் தள்ளப்பட்டிருக்கிறதைக்கண்டு,
3. உள்ளே பிரவேசித்து, கர்த்தராகிய இயேசுவின் சரீரத்தைக் காணாமல்,
4. அதைக்குறித்து மிகுந்த கலக்கமடைந்திருக்கையில், பிரகாசமுள்ள வஸ்திரந்தரித்த இரண்டுபேர் அவர்கள் அருகே நின்றார்கள்.
5. அந்த ஸ்திரீகள் பயப்பட்டுத் தலைகவிழ்ந்து தரையை நோக்கி நிற்கையில், அந்த இரண்டுபேரும் அவர்களை நோக்கி: உயிரோடிருக்கிறவரை நீங்கள் மரித்தோரிடத்தில் தேடுகிறதென்ன?
6. அவர் இங்கே இல்லை, அவர் உயிர்த்தெழுந்தார்.
7. மனுஷகுமாரன் பாவிகளான மனுஷர் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படவும், சிலுவையில் அறையப்படவும், மூன்றாம் நாளில் எழுந்திருக்கவும் வேண்டுமென்பதாக அவர் கலிலேயாவிலிருந்த காலத்தில் உங்களுக்குச் சொன்னதை நினைவுகூருங்கள் என்றார்கள்.
8. அப்பொழுது அவர்கள் அவருடைய வார்த்தைகளை நினைவுகூர்ந்து,
9. கல்லறையை விட்டுத் திரும்பிப்போய், இந்தச் சங்கதிகளெல்லாவற்றையும் பதினொருவருக்கும் மற்றெல்லாருக்கும் அறிவித்தார்கள்.
10. இவைகளை அப்போஸ்தலருக்குச் சொன்னவர்கள் மகதலேனா மரியாளும், யோவன்னாளும், யாக்கோபின் தாயாகிய மரியாளும், இவர்களுடனேகூட இருந்த மற்ற ஸ்திரீகளுமே.
11. இவர்களுடைய வார்த்தைகள் அவர்களுக்கு வீண்பேச்சாகத் தோன்றினதினால், அவர்கள் இவர்களை நம்பவில்லை.
12. பேதுருவோ எழுந்திருந்து, கல்லறையினிடத்திற்கு ஓடி, அதற்குள்ளே குனிந்துபார்க்கையில், சீலைகளைத் தனிப்பட வைத்திருக்கக்கண்டு, சம்பவித்ததைக் குறித்துத் தன்னில் ஆச்சரியப்பட்டுக்கொண்டுபோனான்.
13. அன்றையத்தினமே அவர்களில் இரண்டுபேர் எருசலேமுக்கு ஏழு அல்லது எட்டுமைல் தூரமான எம்மாவு என்னும் கிராமத்துக்குப் போனார்கள்.
14. போகையில் இந்த வர்த்தமானங்கள் யாவையுங்குறித்து அவர்கள் ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள்.
15. இப்படி அவர்கள் பேசி, சம்பாஷித்துக்கொண்டிருக்கையில், இயேசு தாமே சேர்ந்து அவர்களுடனேகூட நடந்துபோனார்.
16. ஆனாலும் அவரை அறியாதபடிக்கு அவர்களுடைய கண்கள் மறைக்கப்பட்டிருந்தது.
17. அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: நீங்கள் துக்கமுகமுள்ளவர்களாய் வழிநடந்து, ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்ளுகிற காரியங்கள் என்னவென்று கேட்டார்.
18. அவர்களில் ஒருவனாகிய கிலெயோப்பா என்பவன் பிரதியுத்தரமாக: இந்நாட்களில் எருசலேமிலே நடந்தவைகளை அறியாதபடிக்கு நீர் அந்நியராயிருக்கிறீரோ என்றான்.
19. அவர்: எவைகள் என்றார். அதற்கு அவர்கள்: நசரேயனாகிய இயேசுவைக் குறித்தவைகளே; அவர் தேவனுக்கு முன்பாகவும் ஜனங்களெல்லாருக்கு முன்பாகவும் செய்கையிலும் வாக்கிலும் வல்லமையுள்ள தீர்க்கதரிசியாயிருந்தார்.
20. நம்முடைய பிரதான ஆசாரியரும் அதிகாரிகளும் அவரை மரண ஆக்கினைக்குட்படுத்தி, சிலுவையில் அறைந்தார்கள்.
21. அவரே இஸ்ரவேலை மீட்டிரட்சிப்பவர் என்று நாங்கள் நம்பியிருந்தோம். இவைகள் சம்பவித்து இன்று மூன்று நாளாகிறது.
22. ஆனாலும் எங்கள் கூட்டத்தைச் சேர்ந்த சில ஸ்திரீகள் அதிகாலமே கல்லறையினிடத்திற்குப்போய்,
23. அவருடைய சரீரத்தைக் காணாமல், திரும்பிவந்து, அவர் உயிரோடிருக்கிறார் என்று சொன்ன தேவதூதரைத் தரிசித்தோம் என்று சொல்லி, எங்களைப் பிரமிக்கப்பண்ணினார்கள்.
24. அப்பொழுது எங்களிலே சிலர் கல்லறையினிடத்திற்குப் போய், ஸ்திரீகள் சொன்னபடியே கண்டார்கள்; அவரையோ காணவில்லை என்றார்கள்.
25. அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: தீர்க்கதரிசிகள் சொன்ன யாவையும் விசுவாசிக்கிறதற்குப் புத்தியில்லாத மந்த இருதயமுள்ளவர்களே,
26. கிறிஸ்து இவ்விதமாகப் பாடுபடவும், தமது மகிமையில் பிரவேசிக்கவும் வேண்டியதில்லையா என்று சொல்லி,
27. மோசே முதலிய சகல தீர்க்கதரிசிகளும் எழுதின வேதவாக்கியங்களெல்லாவற்றிலும் தம்மைக்குறித்துச் சொல்லியவைகளை அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தார்.
28. அத்தருணத்தில் தாங்கள் போகிற கிராமத்துக்குச் சமீபமானார்கள். அப்பொழுது அவர் அப்புறம் போகிறவர் போலக் காண்பித்தார்.
29. அவர்கள் அவரை நோக்கி: நீர் எங்களுடனே தங்கியிரும், சாயங்காலமாயிற்று, பொழுதும் போயிற்று, என்று அவரை வருந்திக் கேட்டுக்கொண்டார்கள். அப்பொழுது அவர் அவர்களுடனே தங்கும்படி உள்ளே போனார்.
30. அவர்களோடே அவர் பந்தியிருக்கையில், அவர் அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து, அதைப்பிட்டு, அவர்களுக்குக் கொடுத்தார்.
31. அப்பொழுது அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டு, அவரை அறிந்தார்கள். உடனே அவர் அவர்களுக்கு மறைந்துபோனார்.
32. அப்பொழுது அவர்கள் ஒருவரையொருவர் நோக்கி: வழியிலே அவர் நம்முடனே பேசி, வேதவாக்கியங்களை நமக்கு விளங்கக்காட்டினபொழுது, நம்முடைய இருதயம் நமக்குள்ளே கொழுந்துவிட்டு எரியவில்லையா என்று சொல்லிக்கொண்டு,
33. அந்நேரமே எழுந்திருந்து, எருசலேமுக்குத் திரும்பிப்போய், பதினொருவரும் அவர்களோடிருந்தவர்களும் கூடியிருக்கக்கண்டு:
34. கர்த்தர் மெய்யாகவே உயிர்த்தெழுந்து சீமோனுக்குத் தரிசனமானார் என்று அவர்கள் சொல்லக் கேட்டு,
35. வழியில் நடந்தவைகளையும், அவர் அப்பத்தைப் பிட்கையில் தாங்கள் அவரை அறிந்துகொண்டதையும் விவரித்துச் சொன்னார்கள்.
36. இவைகளைக்குறித்து அவர்கள் பேசிக்கொண்டிருக்கையில், இயேசு தாமே அவர்கள் நடுவிலே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்.
37. அவர்கள் கலங்கி, பயந்து, ஒரு ஆவியைக் காண்கிறதாக நினைத்தார்கள்.
38. அவர் அவர்களை நோக்கி: நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்; உங்கள் இருதயங்களில் சந்தேகங்கள் எழும்புகிறதென்ன?
39. நான்தான் என்று அறியும்படி, என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள், என்னைத் தொட்டுப்பாருங்கள்; நீங்கள் காண்கிறபடி, எனக்கு மாம்சமும் எலும்புகளும் உண்டாயிருக்கிறதுபோல ஒரு ஆவிக்கு இராதே என்று சொல்லி,
40. தம்முடைய கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார்.
41. ஆனாலும் சந்தோஷத்தினால் அவர்கள் இன்னும் விசுவாசியாமல் ஆச்சரியப்படுகையில்: புசிக்கிறதற்கு ஏதாகிலும் இங்கே உண்டா என்று அவர்களிடத்தில் கேட்டார்.
42. அப்பொழுது பொரித்த மீன்கண்டத்தையும் தேன்கூட்டுத் துணிக்கையையும் அவருக்குக் கொடுத்தார்கள்.
43. அவைகளை அவர் வாங்கி அவர்களுக்கு முன்பாகப் புசித்து,
44. அவர்களை நோக்கி: மோசேயின் நியாயப்பிரமாணத்திலும் தீர்க்கதரிசிகளின் ஆகமங்களிலும் சங்கீதங்களிலும் என்னைக்குறித்து எழுதியிருக்கிறவைகளெல்லாம் நிறைவேறவேண்டியதென்று, நான் உங்களோடிருந்தபோது உங்களுக்குச் சொல்லிக்கொண்டுவந்த விசேஷங்கள் இவைகளே என்றார்.
45. அப்பொழுது வேதவாக்கியங்களை அறிந்துகொள்ளும்படி அவர்களுடைய மனதை அவர் திறந்து அவர்களை நோக்கி:
46. எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து பாடுபடவும், மூன்றாம் நாளில் மரித்தோரிலிருந்தெழுந்திருக்கவும் வேண்டியதாயிருந்தது;
47. அன்றியும் மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும் எருசலேம் தொடங்கிச் சகல தேசத்தாருக்கும் அவருடைய நாமத்தினாலே பிரசங்கிக்கப்படவும் வேண்டியது.
48. நீங்கள் இவைகளுக்குச் சாட்சிகளாயிருக்கிறீர்கள்.
49. என் பிதா வாக்குத்தத்தம்பண்ணினதை, இதோ, நான் உங்களுக்கு அனுப்புகிறேன். நீங்களோ உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும்வரைக்கும் எருசலேம் நகரத்தில் இருங்கள் என்றார்.
50. பின்பு அவர் பெத்தானியாவரைக்கும் அவர்களை அழைத்துக்கொண்டுபோய், தம்முடைய கைகளை உயர்த்தி, அவர்களை ஆசீர்வதித்தார்.
51. அவர்களை ஆசீர்வதிக்கையில், அவர்களை விட்டுப் பிரிந்து, பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டார்.
52. அவர்கள் அவரைப் பணிந்துகொண்டு, மிகுந்த சந்தோஷத்தோடே எருசலேமுக்குத் திரும்பிவந்து,
53. நாடோறும் தேவாலயத்திலே தேவனைப் புகழ்ந்து துதித்துக்கொண்டிருந்தார்கள். ஆமென்.


Free counters!   Site Meter(April28th2012)