எபிரெயர்
Chapter 1
1. பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம் பற்றின தேவன், 2. இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார்; இவரைச் சர்வத்துக்கும் சுதந்தரவாளியாக நியமித்தார், இவரைக்கொண்டு உலகங்களையும் உண்டாக்கினார். 3. இவர் அவருடைய மகிமையின் பிரகாசமும், அவருடைய தன்மையின் சொரூபமுமாயிருந்து, சர்வத்தையும் தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினாலே தாங்குகிறவராய், தம்மாலேதாமே நம்முடைய பாவங்களை நீக்கும் சுத்திகரிப்பை உண்டுபண்ணி, உன்னதத்திலுள்ள மகத்துவமானவருடைய வலதுபாரிசத்திலே உட்கார்ந்தார். 4. இவர் தேவதூதரைப்பார்க்கிலும் எவ்வளவு விசேஷித்த நாமத்தைச் சுதந்தரித்துக்கொண்டாரோ, அவ்வளவு அதிகமாய் அவர்களிலும் மேன்மையுள்ளவரானார். 5. எப்படியெனில், நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜெநிப்பித்தேன் என்றும்; நான் அவருக்குப் பிதாவாயிருப்பேன், அவர் எனக்குக் குமாரனாயிருப்பார் என்றும், அவர் தூதர்களில் யாருக்காவது எப்போதாகிலும் சொன்னதுண்டா? 6. மேலும், தமது முதற்பேறானவரை உலகத்தில் பிரவேசிக்கச்செய்தபோது: தேவதூதர் யாவரும் அவரைத் தொழுதுகொள்ளக்கடவர்கள் என்றார். 7. தேவதூதரைக்குறித்தோ: தம்முடைய தூதர்களைக் காற்றுகளாகவும், தம்முடைய ஊழியக்காரரை அக்கினிஜுவாலைகளாகவும் செய்கிறார் என்று சொல்லியிருக்கிறது. 8. குமாரனை நோக்கி: தேவனே, உம்முடைய சிங்காசனம் என்றென்றைக்குமுள்ளது, உம்முடைய ராஜ்யத்தின் செங்கோல் நீதியுள்ள செங்கோலாயிருக்கிறது. 9. நீர் நீதியை விரும்பி, அக்கிரமத்தை வெறுத்திருக்கிறீர்; ஆதலால், தேவனே, உம்முடைய தேவன் உமது தோழரைப்பார்க்கிலும் உம்மை ஆனந்த தைலத்தினால் அபிஷேகம்பண்ணினார் என்றும்; 10. கர்த்தாவே, நீர் ஆதியிலே பூமியை அஸ்திபாரப்படுத்தினீர்; வானங்கள் உம்முடைய கரத்தின் கிரியைகளாயிருக்கிறது; 11. அவைகள் அழிந்துபோம்; நீரோ நிலைத்திருப்பீர்; அவைகளெல்லாம் வஸ்திரம்போலப் பழைமையாய்ப்போம்; 12. ஒரு சால்வையைப்போல அவைகளைச் சுருட்டுவீர், அப்பொழுது மாறிப்போம்; நீரோ மாறாதவராயிருக்கிறீர், உம்முடைய ஆண்டுகள் முடிந்துபோவதில்லை என்றும் சொல்லியிருக்கிறது. 13. மேலும், நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப் போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்று தூதர்களில் யாருக்காவது எப்போதாகிலும் அவர் சொன்னதுண்டா? 14. இரட்சிப்பைச் சுதந்தரிக்கப்போகிறவர்களினிமித்தமாக ஊழியஞ்செய்யும்படிக்கு அவர்களெல்லாரும் அனுப்பப்படும் பணிவிடை ஆவிகளாயிருக்கிறார்களல்லவா?
Chapter 2
1. ஆகையால், நாம் கேட்டவைகளை விட்டு விலகாதபடிக்கு, அவைகளை மிகுந்த ஜாக்கிரதையாய்க் கவனிக்கவேண்டும். 2. ஏனெனில், தேவதூதர் மூலமாய்ச் சொல்லப்பட்ட வசனத்திற்கு விரோதமான எந்தச் செய்கைக்கும் கீழ்ப்படியாமைக்கும் நீதியான தண்டனை வரத்தக்கதாக அவர்களுடைய வசனம் உறுதிப்படுத்தப்பட்டிருக்க, 3. முதலாவது கர்த்தர் மூலமாய் அறிவிக்கப்பட்டு, பின்பு அவரிடத்தில் கேட்டவர்களாலே நமக்கு உறுதியாக்கப்பட்டதும், 4. அடையாளங்களினாலும் அற்புதங்களினாலும் பலவிதமான பலத்த செய்கைகளினாலும், தம்முடைய சித்தத்தின்படி பகிர்ந்துகொடுத்த பரிசுத்த ஆவியின் வரங்களினாலும், தேவன் தாமே சாட்சிகொடுத்ததுமாயிருக்கிற இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக்குறித்து நாம் கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவோம். 5. இனிவரும் உலகத்தைக்குறித்துப் பேசுகிறோமே, அதை அவர் தூதர்களுக்குக் கீழ்ப்படுத்தவில்லை. 6. ஒரு இடத்திலே ஒருவன் சாட்சியாக: மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், மனுஷனுடைய குமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம்? 7. அவனை தேவதூதரிலும் சற்றுச் சிறியவனாக்கினீர்; மகிமையினாலும் கனத்தினாலும் அவனுக்கு முடிசூட்டி, உம்முடைய கரத்தின் கிரியைகளின்மேல் அவனை அதிகாரியாக வைத்து, சகலத்தையும் அவனுடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினீர் என்று சொன்னான். 8. சகலத்தையும் அவனுக்குக் கீழ்ப்படுத்தினார் என்கிற விஷயத்தில், அவர் அவனுக்குக் கீழ்ப்படுத்தாத பொருள் ஒன்றுமில்லை; அப்படியிருந்தும், இன்னும் அவனுக்குச் சகலமும் கீழ்ப்பட்டிருக்கக் காணோம். 9. என்றாலும், தேவனுடைய கிருபையினால் ஒவ்வொருவருக்காகவும், மரணத்தை ருசிபார்க்கும்படிக்கு தேவதூதரிலும் சற்றுச் சிறியவராக்கப்பட்டிருந்த இயேசு மரணத்தை உத்தரித்ததினிமித்தம் மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூட்டப்பட்டதைக் காண்கிறோம். 10. ஏனென்றால் தமக்காகவும் தம்மாலேயும் சகலத்தையும் உண்டாக்கினவர், அநேகம் பிள்ளைகளை மகிமையில் கொண்டுவந்து சேர்க்கையில் அவர்களுடைய இரட்சிப்பின் அதிபதியை உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துகிறது அவருக்கேற்றதாயிருந்தது. 11. எப்படியெனில், பரிசுத்தஞ்செய்கிறவரும் பரிசுத்தஞ்செய்யப்படுகிறவர்களுமாகிய யாவரும் ஒருவராலே உண்டாயிருக்கிறார்கள்; இதினிமித்தம் அவர்களைச் சகோதரரென்று சொல்ல அவர் வெட்கப்படாமல்: 12. உம்முடைய நாமத்தை என் சகோதரருக்கு அறிவித்து, சபை நடுவில் உம்மைத் துதித்துப் பாடுவேன் என்றும்; 13. நான் அவரிடத்தில் நம்பிக்கையாயிருப்பேன் என்றும்; இதோ, நானும், தேவன் எனக்குக் கொடுத்த பிள்ளைகளும் என்றும் சொல்லியிருக்கிறார். 14. ஆதலால், பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்; மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும், 15. ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலைபண்ணும்படிக்கும் அப்படியானார். 16. ஆதலால், அவர் தேவதூதருக்கு உதவியாகக் கைகொடாமல், ஆபிரகாமின் சந்ததிக்கு உதவியாகக் கைகொடுத்தார். 17. அன்றியும், அவர் ஜனத்தின் பாவங்களை நிவிர்த்தி செய்வதற்கேதுவாக, தேவகாரியங்களைக்குறித்து இரக்கமும் உண்மையுமுள்ள பிரதான ஆசாரியராயிருக்கும்படிக்கு எவ்விதத்திலும் தம்முடைய சகோதரருக்கு ஒப்பாகவேண்டியதாயிருந்தது. 18. ஆதலால், அவர்தாமே சோதிக்கப்பட்டுப் பாடுபட்டதினாலே, அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார்.
Chapter 3
1. இப்படியிருக்க, பரம அழைப்புக்குப் பங்குள்ளவர்களாகிய பரிசுத்த சகோதரரே, நாம் அறிக்கைபண்ணுகிற அப்போஸ்தலரும் பிரதான ஆசாரியருமாயிருக்கிற கிறிஸ்து இயேசுவைக் கவனித்துப்பாருங்கள்; 2. மோசே தேவனுடைய வீட்டில் எங்கும் உண்மையுள்ளவனாயிருந்ததுபோல, இவரும் தம்மை ஏற்படுத்தினவருக்கு உண்மையுள்ளவராயிருக்கிறார். 3. வீட்டை உண்டுபண்ணினவன் வீட்டைப்பார்க்கிலும் அதிக கனத்திற்குரியவனாயிருக்கிறான்; அதுபோல மோசேயைப்பார்க்கிலும் இவர் அதிக மகிமைக்குப் பாத்திரராயிருக்கிறார். 4. ஏனெனில், எந்த வீடும் ஒருவனால் உண்டாக்கப்படும்; எல்லாவற்றையும் உண்டுபண்ணினவர் தேவன். 5. சொல்லப்படப்போகிற காரியங்களுக்குச் சாட்சியாக, மோசே பணிவிடைக்காரனாய், அவருடைய வீட்டில் எங்கும் உண்மையுள்ளவனாயிருந்தான். 6. கிறிஸ்துவோ அவருடைய வீட்டிற்கு மேற்பட்டவரான குமாரனாக உண்மையுள்ளவராயிருக்கிறார்; நம்பிக்கையினாலே உண்டாகும் தைரியத்தையும் மேன்மைபாராட்டலையும் முடிவுபரியந்தம் உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருப்போமாகில், நாமே அவருடைய வீடாயிருப்போம். 7. ஆகையால், பரிசுத்தஆவியானவர் சொல்லுகிறபடியே: இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில், 8. வனாந்தரத்திலே கோபமூட்டினபோதும், சோதனைநாளிலும் நடந்ததுபோல, உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள். 9. அங்கே உங்கள் பிதாக்கள் என்னைச் சோதித்து, என்னைப் பரீட்சைபார்த்து, நாற்பது வருஷகாலம் என் கிரியைகளைக் கண்டார்கள். 10. ஆதலால், நான் அந்தச் சந்ததியை அரோசித்து, அவர்கள் எப்பொழுதும் வழுவிப்போகிற இருதயமுள்ள ஜனமென்றும், என்னுடைய வழிகளை அறியாதவர்களென்றும் சொல்லி; 11. என்னுடைய இளைப்பாறுதலில் அவர்கள் பிரவேசிப்பதில்லையென்று என்னுடைய கோபத்திலே ஆணையிட்டேன் என்றார். 12. சகோதரரே, ஜீவனுள்ள தேவனைவிட்டு விலகுவதற்கேதுவான அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம் உங்களில் ஒருவனுக்குள்ளும் இராதபடிக்கு நீங்கள் எச்சரிக்கையாயிருங்கள். 13. உங்களில் ஒருவனாகிலும் பாவத்தின் வஞ்சனையினாலே கடினப்பட்டுப் போகாதபடிக்கு, இன்று என்னப்படுமளவும் நாடோறும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லுங்கள். 14. நாம் ஆரம்பத்திலே கொண்ட நம்பிக்கையை முடிவுபரியந்தம் உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருப்போமாகில், கிறிஸ்துவினிடத்தில் பங்குள்ளவர்களாயிருப்போம். 15. இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில், கோபமூட்டுதலில் நடந்ததுபோல உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள் என்று சொல்லியிருக்கிறதே. 16. கேட்டவர்களில் கோபமூட்டினவர்கள் யார்? மோசேயினால் எகிப்திலிருந்து புறப்பட்ட யாவரும் அப்படிச் செய்தார்களல்லவா? 17. மேலும், அவர் நாற்பது வருஷமாய் யாரை அரோசித்தார்? பாவஞ்செய்தவர்களையல்லவா? அவர்களுடைய சவங்கள் வனாந்தரத்தில் விழுந்துபோயிற்றே. 18. பின்னும், என்னுடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதில்லையென்று அவர் யாரைக்குறித்து ஆணையிட்டார்? கீழ்ப்படியாதவர்களைக்குறித்தல்லவா? 19. ஆதலால், அவிசுவாசத்தினாலே அவர்கள் அதில் பிரவேசிக்கக்கூடாமற்போனார்களென்று பார்க்கிறோம்.
Chapter 4
1. ஆனபடியினாலே, அவருடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதற்கேதுவான வாக்குத்தத்தம் நமக்குண்டாயிருக்க, உங்களில் ஒருவனும் அதை அடையாமல் பின்வாங்கிப்போனவனாகக் காணப்படாதபடிக்குப் பயந்திருக்கக்கடவோம். 2. ஏனெனில், சுவிசேஷம் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டதுபோல நமக்கும் அறிவிக்கப்பட்டது; கேட்டவர்கள் விசுவாசமில்லாமல் கேட்டபடியினால், அவர்கள் கேட்ட வசனம் அவர்களுக்குப் பிரயோஜனப்படவில்லை. 3. விசுவாசித்தவர்களாகிய நாமோ அந்த இளைப்பாறுதலில் பிரவேசிக்கிறோம்; அவருடைய கிரியைகள் உலகத்தோற்றமுதல் முடிந்திருந்தும்: இவர்கள் என்னுடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதில்லையென்று என்னுடைய கோபத்திலே ஆணையிட்டேன் என்றார். 4. மேலும், தேவன் தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்து ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்தார் என்று ஏழாம் நாளைக்குறித்து ஓரிடத்தில் சொல்லியிருக்கிறார். 5. அன்றியும், அவர்கள் என்னுடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதில்லை என்றும் அந்த இடத்திலேதானே சொல்லியிருக்கிறார். 6. ஆகையால், சிலர் அதில் பிரவேசிப்பது இன்னும் வரப்போகிற காரியமாயிருக்கிறபடியினாலும், சுவிசேஷத்தை முதலாவது கேட்டவர்கள் கீழ்ப்படியாமையினாலே அதில் பிரவேசியாமற்போனபடியினாலும், 7. இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில் உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள் என்று வெகுகாலத்திற்குப்பின்பு தாவீதின் சங்கீதத்திலே சொல்லியிருக்கிறபடி, இன்று என்று சொல்வதினாலே பின்னும் ஒருநாளைக் குறித்திருக்கிறார். 8. யோசுவா அவர்களை இளைப்பாறுதலுக்குட்படுத்தியிருந்தால், பின்பு அவர் வேறொரு நாளைக்குறித்துச் சொல்லியிருக்கமாட்டாரே. 9. ஆகையால், தேவனுடைய ஜனங்களுக்கு இளைப்பாறுகிற காலம் இனி வருகிறதாயிருக்கிறது. 10. ஏனெனில், அவருடைய இளைப்பாறுதலில் பிரவேசித்தவன், தேவன் தம்முடைய கிரியைகளை முடித்து ஓய்ந்ததுபோல, தானும் தன் கிரியைகளை முடித்து ஓய்ந்திருப்பான். 11. ஆகையால், அந்தத் திருஷ்டாந்தத்தின்படி, ஒருவனாகிலும் கீழ்ப்படியாமையினாலே விழுந்துபோகாதபடிக்கு, நாம் இந்த இளைப்பாறுதலில் பிரவேசிக்க ஜாக்கிரதையாயிருக்கக்கடவோம். 12. தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது. 13. அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை; சகலமும் அவருடைய கண்களுக்குமுன்பாக நிர்வாணமாயும் வெளியரங்கமாயுமிருக்கிறது, அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்கவேண்டும். 14. வானங்களின் வழியாய்ப் பரலோகத்திற்குப்போன தேவகுமாரனாகிய இயேசு என்னும் மகா பிரதான ஆசாரியர் நமக்கு இருக்கிறபடியினால், நாம் பண்ணின அறிக்கையை உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருக்கக்கடவோம். 15. நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார். 16. ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங் கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்.
Chapter 5
1. அன்றியும், மனுஷரில் தெரிந்துகொள்ளப்பட்ட எந்தப் பிரதான ஆசாரியனும் பாவங்களுக்காகக் காணிக்கைகளையும் பலிகளையும் செலுத்தும்படி, மனுஷருக்காகத் தேவகாரியங்களைப்பற்றி நியமிக்கப்படுகிறான். 2. தானும் பலவீனமுள்ளவனானபடியினாலே, அறியாதவர்களுக்கும் நெறிதப்பிப்போனவர்களுக்கும் இரங்கத்தக்கவனாயிருக்கிறான். 3. அதினிமித்தம் அவன் ஜனங்களுடைய பாவங்களுக்காகப் பலியிடவேண்டியதுபோல, தன்னுடைய பாவங்களுக்காகவும் பலியிடவேண்டியதாயிருக்கிறது. 4. மேலும், ஆரோனைப்போலத் தேவனால் அழைக்கப்பட்டாலொழிய, ஒருவனும் இந்தக் கனமான ஊழியத்துக்குத் தானாய் ஏற்படுகிறதில்லை. 5. அந்தப்படியே கிறிஸ்துவும் பிரதான ஆசாரியராகிறதற்குத் தம்மைத்தாமே உயர்த்தவில்லை; நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜெநிப்பித்தேன் என்று அவரோடே சொன்னவரே அவரை உயர்த்தினார். 6. அப்படியே வேறொரு இடத்திலும்: நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராயிருக்கிறீர் என்று சொல்லியிருக்கிறார். 7. அவர் மாம்சத்திலிருந்த நாட்களில், தம்மை மரணத்தினின்று இரட்சிக்க வல்லமையுள்ளவரை நோக்கி, பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம்பண்ணி, வேண்டுதல்செய்து, தமக்கு உண்டான பயபக்தியினிமித்தம் கேட்கப்பட்டு, 8. அவர் குமாரனாயிருந்தும் பட்டபாடுகளினாலே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டு, 9. தாம் பூரணரானபின்பு, தமக்குக் கீழ்ப்படிகிற யாவரும் நித்திய இரட்சிப்பை அடைவதற்குக் காரணராகி, 10. மெல்கிசேதேக்கின் முறைமையின்படியான பிரதான ஆசாரியர் என்று தேவனாலே நாமம் தரிக்கப்பட்டார். 11. இந்த மெல்கிசேதேக்கைப்பற்றி நாம் விஸ்தாரமாய்ப் பேசலாம்; நீங்கள் கேள்வியில் மந்தமுள்ளவர்களானபடியால், அதை விளங்கப்பண்ணுகிறது அரிதாயிருக்கும். 12. காலத்தைப் பார்த்தால், போதகராயிருக்கவேண்டிய உங்களுக்குத் தேவனுடைய வாக்கியங்களின் மூல உபதேசங்களை மறுபடியும் உபதேசிக்கவேண்டியதாயிருக்கிறது; நீங்கள் பலமான ஆகாரத்தையல்ல, பாலை உண்ணத்தக்கவர்களானீர்கள். 13. பாலுண்கிறவன் குழந்தையாயிருக்கிறபடியினாலே நீதியின் வசனத்தில் பழக்கமில்லாதவனாயிருக்கிறான். 14. பலமான ஆகாரமானது நன்மை தீமையின்னதென்று பயிற்சியினால் பகுத்தறியத்தக்கதாக முயற்சிசெய்யும் ஞானேந்திரியங்களையுடையவர்களாகிய பூரண வயதுள்ளவர்களுக்கே தகும்.
Chapter 6
1. ஆகையால், கிறிஸ்துவைப்பற்றிச் சொல்லிய மூல உபதேச வசனங்களை நாம் விட்டு, செத்த கிரியைகளுக்கு நீங்கலாகும் மனந்திரும்புதல், தேவன்பேரில் வைக்கும் விசுவாசம், 2. ஸ்நானங்களுக்கடுத்த உபதேசம், கைகளை வைக்குதல், மரித்தோரின் உயிர்த்தெழுதல், நித்திய நியாயத்தீர்ப்பு என்பவைகளாகிய அஸ்திபாரத்தை மறுபடியும் போடாமல், பூரணராகும்படி கடந்துபோவோமாக. 3. தேவனுக்குச் சித்தமானால் இப்படியே செய்வோம். 4. ஏனெனில், ஒருதரம் பிரகாசிப்பிக்கப்பட்டும், பரமஈவை ருசிபார்த்தும், பரிசுத்த ஆவியைப் பெற்றும், 5. தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும், 6. மறுதலித்துப்போனவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறபடியால், மனந்திரும்புதற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாதகாரியம். 7. எப்படியெனில், தன்மேல் அடிக்கடி பெய்கிற மழையைக் குடித்து, தன்னிடத்தில் பயிரிடுகிறவர்களுக்கேற்ற பயிரை முளைப்பிக்கும் நிலமானது தேவனால் ஆசீர்வாதம் பெறும். 8. முள்செடிகளையும் முள்பூண்டுகளையும் முளைப்பிக்கிற நிலமோ தகாததாயும் சபிக்கப்படுகிறதற்கேற்றதாயுமிருக்கிறது; சுட்டெரிக்கப்படுவதே அதின் முடிவு. 9. பிரியமானவர்களே, நாங்கள் இப்படிச் சொன்னாலும், நன்மையானவைகளும் இரட்சிப்புக்குரியவைகளுமான காரியங்கள் உங்களிடத்தில் உண்டாயிருக்கிறதென்று நம்பியிருக்கிறோம். 10. ஏனென்றால், உங்கள் கிரியையையும், நீங்கள் பரிசுத்தவான்களுக்கு ஊழியஞ்செய்ததினாலும் செய்து வருகிறதினாலும் தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்குத் தேவன் அநீதியுள்ளவரல்லவே. 11. நீங்கள் அசதியாயிராமல், வாக்குத்தத்தமான ஆசீர்வாதங்களை விசுவாசத்தினாலும் நீடிய பொறுமையினாலும் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களைப் பின்பற்றுகிறவர்களாயிருந்து, 12. உங்களுக்கு நம்பிக்கையின் பூரண நிச்சயமுண்டாகும்படி நீங்கள் யாவரும் முடிவுபரியந்தம் அப்படியே ஜாக்கிரதையைக் காண்பிக்கவேண்டுமென்று ஆசையாயிருக்கிறோம். 13. ஆபிரகாமுக்குத் தேவன் வாக்குத்தத்தம்பண்ணினபோது, ஆணையிடும்படி தம்மிலும் பெரியவர் ஒருவருமில்லாதபடியினாலே தமதுபேரிலே தானே ஆணையிட்டு: 14. நிச்சயமாக நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன்னைப் பெருகவே பெருகப்பண்ணுவேன் என்றார். 15. அந்தப்படியே, அவன் பொறுமையாய்க் காத்திருந்து, வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதைப் பெற்றான். 16. மனுஷர் தங்களிலும் பெரியவர்பேரில் ஆணையிடுவார்கள்; உறுதிபண்ணும்படிக்கு ஆணையிடுதலே சகல விவாதத்திற்கும் முடிவு. 17. அந்தப்படி, தேவனும் வாக்குத்தத்தம்பண்ணப்பட்டவைகளைச் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களுக்குத் தமது ஆலோசனையின் மாறாத நிச்சயத்தைப் பரிபூரணமாய்க் காண்பிக்கும்படி சித்தமுள்ளவராய், ஓர் ஆணையினாலே அதை ஸ்திரப்படுத்தினார். 18. நமக்கு முன் வைக்கப்பட்ட நம்பிக்கையைப் பற்றிக்கொள்ளும்படி அடைக்கலமாய் ஓடிவந்த நமக்கு இரண்டு மாறாத விசேஷங்களினால் நிறைந்த ஆறுதலுண்டாகும்படிக்கு எவ்வளவேனும் பொய்யுரையாத தேவன் அப்படிச் செய்தார். 19. அந்த நம்பிக்கை நமக்கு நிலையும் உறுதியும் திரைக்குள்ளாகப் போகிறதுமான ஆத்தும நங்கூரமாயிருக்கிறது. 20. நமக்கு முன்னோடினவராகிய இயேசு மெல்கிசேதேக்கின் முறைமையின்படி நித்திய பிரதான ஆசாரியராய் நமக்காக அந்தத் திரைக்குள் பிரவேசித்திருக்கிறார்.
Chapter 7
1. இந்த மெல்கிசேதேக்கு சாலேமின் ராஜாவும், உன்னதமான தேவனுடைய ஆசாரியனுமாயிருந்தான்; ராஜாக்களை முறியடித்துவந்த ஆபிரகாமுக்கு இவன் எதிர்கொண்டுபோய், அவனை ஆசீர்வதித்தான். 2. இவனுக்கு ஆபிரகாம் எல்லாவற்றிலும் தசமபாகம் கொடுத்தான்; இவனுடைய முதற்பேராகிய மெல்கிசேதேக்கு என்பதற்கு நீதியின் ராஜா என்றும், பின்பு சாலேமின் ராஜா என்பதற்குச் சமாதானத்தின் ராஜா என்றும் அருத்தமாம். 3. இவன் தகப்பனும் தாயும் வம்சவரலாறும் இல்லாதவன்; இவன் நாட்களின் துவக்கமும் ஜீவனின் முடிவுமுடையவனாயிராமல், தேவனுடைய குமாரனுக்கு ஒப்பானவனாய் என்றென்றைக்கும் ஆசாரியனாக நிலைத்திருக்கிறான். 4. இவன் எவ்வளவு பெரியவனாயிருக்கிறான் பாருங்கள்; கோத்திரத்தலைவனாகிய ஆபிரகாம் முதலாய் கொள்ளையிடப்பட்ட பொருள்களில் இவனுக்குத் தசமபாகம் கொடுத்தான். 5. லேவியின் புத்திரரில் ஆசாரியத்துவத்தை அடைகிறவர்களும், ஆபிரகாமின் அரையிலிருந்துவந்த தங்கள் சகோதரரான ஜனங்களின் கையிலே நியாயப்பிரமாணத்தின்படி தசமபாகம் வாங்குகிறதற்குக் கட்டளைபெற்றிருக்கிறார்கள். 6. ஆகிலும், அவர்களுடைய வம்சவரிசையில் வராதவனாகிய இவன் ஆபிரகாமின் கையில் தசமபாகம் வாங்கி, வாக்குத்தத்தங்களைப் பெற்றவனை ஆசீர்வதித்தான். 7. சிறியவன் பெரியவனாலே ஆசீர்வதிக்கப்படுவான், அதற்குச் சந்தேகமில்லை. 8. அன்றியும், இங்கே, மரிக்கிற மனுஷர்கள் தசமபாகம் வாங்குகிறார்கள்; அங்கேயோ, பிழைத்திருக்கிறான் என்று சாட்சிபெற்றவன் வாங்கினான். 9. அன்றியும், மெல்கிசேதேக்கு ஆபிரகாமுக்கு எதிர்கொண்டுபோனபோது, லேவியானவன் தன் தகப்பனுடைய அரையிலிருந்தபடியால், 10. தசமபாகம் வாங்குகிற அவனும் ஆபிரகாமின் மூலமாய்த் தசமபாகம் கொடுத்தான் என்று சொல்லலாம். 11. அல்லாமலும், இஸ்ரவேல் ஜனங்கள் லேவிகோத்திர ஆசாரிய முறைமைக்குட்பட்டிருந்தல்லவோ நியாயப்பிரமாணத்தைப் பெற்றார்கள்; அந்த ஆசாரிய முறைமையினாலே பூரணப்படுதல் உண்டாயிருக்குமானால், ஆரோனுடைய முறைமையின்படி அழைக்கப்படாமல், மெல்கிசேதேக்கினுடைய முறைமையின்படி அழைக்கப்பட்ட வேறொரு ஆசாரியர் எழும்பவேண்டுவதென்ன? 12. ஆசாரியத்துவம் மாற்றப்பட்டிருக்குமேயானால், நியாயப்பிரமாணமும் மாற்றப்படவேண்டியதாகும். 13. இவைகள் எவரைக்குறித்துச் சொல்லப்பட்டிருக்கிறதோ, அவர் வேறொரு கோத்திரத்துக்குள்ளானவராயிருக்கிறாரே; அந்தக் கோத்திரத்தில் ஒருவனாகிலும் பலிபீடத்து ஊழியம் செய்ததில்லையே. 14. நம்முடைய கர்த்தர் யூதாகோத்திரத்தில் தோன்றினாரென்பது பிரசித்தமாயிருக்கிறது; அந்தக் கோத்திரத்தாரைக்குறித்து மோசே ஆசாரியத்துவத்தைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லையே. 15. அல்லாமலும், மெல்கிசேதேக்குக்கு ஒப்பாய் வேறொரு ஆசாரியர் எழும்புகிறார் என்று சொல்லியிருப்பதினால், மேற்சொல்லியது மிகவும் பிரசித்தமாய் விளங்குகிறது. 16. அவர் மாம்ச சம்பந்தமான கட்டளையாகிய நியாயப்பிரமாணத்தின்படி ஆசாரியராகாமல், 17. நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராயிருக்கிறீர் என்று சொல்லிய சாட்சிக்குத்தக்கதாக அழியாத ஜீவனுக்குரிய வல்லமையின்படியே ஆசாரியரானார். 18. முந்தின கட்டளை பெலவீனமுள்ளதும் பயனற்றதுமாயிருந்ததினிமித்தம் மாற்றப்பட்டது. 19. நியாயப்பிரமாணமானது ஒன்றையும் பூரணப்படுத்தவில்லை, அதிக நன்மையான நம்பிக்கையை வருவிப்பதோ பூரணப்படுத்துகிறது; அந்த நம்பிக்கையினாலே தேவனிடத்தில் சேருகிறோம். 20. அன்றியும், அவர்கள் ஆணையில்லாமல் ஆசாரியராக்கப்படுகிறார்கள்; இவரோ: நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராயிருக்கிறீர் என்று கர்த்தர் ஆணையிட்டார், மனம் மாறாமலுமிருப்பார் என்று தம்முடனே சொன்னவராலே ஆணையோடே ஆசாரியரானார். 21. ஆனதால், இயேசுவானவர் ஆணையின்படியே ஆசாரியராக்கப்பட்டது எவ்வளவு விசேஷித்த காரியமோ, 22. அவ்வளவு விசேஷித்த உடன்படிக்கைக்குப் பிணையாளியானார். 23. அன்றியும், அவர்கள் மரணத்தினிமித்தம் நிலைத்திருக்கக்கூடாதவர்களானபடியால், ஆசாரியராக்கப்படுகிறவர்கள் அநேகராயிருக்கிறார்கள். 24. இவரோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறபடியினாலே, மாறிப்போகாத ஆசாரியத்துவமுள்ளவராயிருக்கிறார். 25. மேலும், தமது மூலமாய்த் தேவனிடத்தில் சேருகிறவர்களுக்காக வேண்டுதல்செய்யும்படிக்கு அவர் எப்பொழுதும் உயிரோடிருக்கிறவராகையால் அவர்களை முற்றுமுடிய இரட்சிக்க வல்லவராயுமிருக்கிறார். 26. பரிசுத்தரும், குற்றமற்றவரும், மாசில்லாதவரும், பாவிகளுக்கு விலகினவரும், வானங்களிலும் உயர்ந்தவருமாயிருக்கிற இவ்விதமான பிரதான ஆசாரியரே நமக்கு ஏற்றவராயிருக்கிறார். 27. அவர் பிரதான ஆசாரியர்களைப்போல முன்பு சொந்தப் பாவங்களுக்காகவும், பின்பு ஜனங்களுடைய பாவங்களுக்காகவும் நாடோறும் பலியிடவேண்டுவதில்லை; ஏனெனில் தம்மைத்தாமே பலியிட்டதினாலே இதை ஒரேதரம் செய்துமுடித்தார். 28. நியாயப்பிரமாணமானது பெலவீனமுள்ள மனுஷர்களைப் பிரதான ஆசாரியராக ஏற்படுத்துகிறது; நியாயப்பிரமாணத்திற்குப்பின்பு உண்டான ஆணையோடே விளங்கிய வசனமோ என்றென்றைக்கும் பூரணரான குமாரனை ஏற்படுத்துகிறது.
Chapter 8
1. மேற்சொல்லியவைகளின் முக்கியமான பொருளென்னவெனில்; பரலோகத்திலுள்ள மகத்துவ ஆசனத்தின் வலதுபாரிசத்திலே உட்கார்ந்திருக்கிறவருமாய், 2. பரிசுத்த ஸ்தலத்திலும், மனுஷரால் அல்ல, கர்த்தரால் ஸ்தாபிக்கப்பட்ட மெய்யான கூடாரத்திலும் ஆசாரிய ஊழியஞ் செய்கிறவருமாயிருக்கிற பிரதான ஆசாரியர் நமக்கு உண்டு. 3. ஒவ்வொரு பிரதான ஆசாரியனும் காணிக்கைகளையும் பலிகளையும் செலுத்தும்படி நியமிக்கப்படுகிறான்; ஆதலால் செலுத்தும்படிக்கு ஏதோ ஒன்று இவருக்கும் அவசியம் வேண்டியதாயிருக்கிறது. 4. பூமியிலே அவர் இருப்பாரானால் ஆசாரியராயிருக்கமாட்டார்; ஏனெனில், நியாயப்பிரமாணத்தின்படி காணிக்கைகளைச் செலுத்துகிற ஆசாரியர்கள் இருக்கிறார்களே; 5. இவர்கள் செய்யும் ஆராதனை பரலோகத்திலுள்ளவைகளின் சாயலுக்கும் நிழலுக்கும் ஒத்திருக்கிறது; அப்படியே, மோசே கூடாரத்தை உண்டுபண்ணப் போகையில்: மலையிலே உனக்குக் காண்பிக்கப்பட்ட மாதிரியின்படியே நீ எல்லாவற்றையும் செய்ய எச்சரிக்கையாயிரு என்று தேவன் அவனுக்குக் கட்டளையிட்டார். 6. இவரோ விசேஷித்த வாக்குத்தத்தங்களின்பேரில் ஸ்தாபிக்கப்பட்ட விசேஷித்த உடன்படிக்கைக்கு எப்படி மத்தியஸ்தராயிருக்கிறாரோ, அப்படியே முக்கியமான ஆசாரிய ஊழியத்தையும் பெற்றிருக்கிறார். 7. அந்த முதலாம் உடன்படிக்கை பிழையில்லாதிருந்ததானால், இரண்டாம் உடன்படிக்கைக்கு இடம் தேடவேண்டுவதில்லையே. 8. அவர்களைக் குற்றப்படுத்தி, அவர்களை நோக்கி: இதோ, கர்த்தர் சொல்லுகிறதென்னவெனில்: இஸ்ரவேல் குடும்பத்தோடும் யூதா குடும்பத்தோடும் நான் புது உடன்படிக்கையை ஏற்படுத்துங்காலம் வருகிறது. 9. அவர்களுடைய பிதாக்களை எகிப்துதேசத்திலிருந்து கொண்டுவரும்படிக்கு நான் அவர்களுடைய கையைப் பிடித்தநாளிலே அவர்களோடு பண்ணின உடன்படிக்கையைப்போல இது இருப்பதில்லை; அந்த உடன்படிக்கையிலே அவர்கள் நிலைநிற்கவில்லையே, நானும் அவர்களைப் புறக்கணித்தேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். 10. அந்த நாட்களுக்குப்பின்பு நான் இஸ்ரவேல் குடும்பத்தாரோடே பண்ணும் உடன்படிக்கையாவது: என்னுடைய பிரமாணங்களை அவர்களுடைய மனதிலே வைத்து, அவர்களுடைய இருதயங்களில் அவைகளை எழுதுவேன்; நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள். 11. அப்பொழுது சிறியவன் முதற்கொண்டு பெரியவன்வரைக்கும் எல்லாரும் என்னை அறிவார்கள்; ஆகையால், கர்த்தரை அறிந்துகொள் என்று ஒருவன் தன் அயலானுக்கும், ஒருவன் தன் சகோதரனுக்கும் போதிக்கவேண்டுவதில்லை. 12. ஏனெனில் நான் அவர்கள் அநியாயங்களைக் கிருபையாய் மன்னித்து, அவர்கள் பாவங்களையும் அக்கிரமங்களையும் இனி நினையாமலிருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். 13. புது உடன்படிக்கை என்று அவர் சொல்லுகிறதினாலே முந்தினதைப் பழமையாக்கினார்; பழமையானதும் நாள்பட்டதுமாயிருக்கிறது உருவழிந்துபோகக் காலம் சமீபித்திருக்கிறது.
Chapter 9
1. அன்றியும், முதலாம் உடன்படிக்கையானது ஆராதனைக்கேற்ற முறைமைகளும் பூமிக்குரிய பரிசுத்த ஸ்தலமும் உடையதாயிருந்தது. 2. எப்படியெனில், ஒரு கூடாரம் உண்டாக்கப்பட்டிருந்தது; அதின் முந்தின பாகத்தில் குத்துவிளக்கும், மேஜையும், தேவசமுகத்தப்பங்களும் இருந்தன; அது பரிசுத்த ஸ்தலமென்னப்படும். 3. இரண்டாந் திரைக்குள்ளே மகா பரிசுத்த ஸ்தலமென்னப்பட்ட கூடாரம் இருந்தது. 4. அதிலே பொன்னாற்செய்த தூபகலசமும், முழுவதும் பொற்றகடு பொதிந்திருக்கப்பட்ட உடன்படிக்கைப் பெட்டியும் இருந்தன; அந்தப் பெட்டியிலே மன்னா வைக்கப்பட்ட பொற்பாத்திரமும், ஆரோனுடைய தளிர்த்த கோலும், உடன்படிக்கையின் கற்பலகைகளும் இருந்தன. 5. அதற்கு மேலே மகிமையுள்ள கேருபீன்கள் வைக்கப்பட்டுக் கிருபாசனத்தை நிழலிட்டிருந்தன; இவைகளைக்குறித்து விவரமாய்ப்பேச இப்பொழுது சமயமில்லை. 6. இவைகள் இவ்விதமாய் ஆயத்தமாக்கப்பட்டிருக்க, ஆசாரியர்கள் ஆராதனை முறைமைகளை நிறைவேற்றும்படிக்கு முதலாங்கூடாரத்திலே நித்தமும் பிரவேசிப்பார்கள். 7. இரண்டாங்கூடாரத்திலே பிரதான ஆசாரியன்மாத்திரம் வருஷத்திற்கு ஒருதரம் இரத்தத்தோடே பிரவேசித்து, அந்த இரத்தத்தைத் தனக்காகவும் ஜனங்களுடைய தப்பிதங்களுக்காகவும் செலுத்துவான். 8. அதினாலே, முதலாங்கூடாரம் நிற்குமளவும் பரிசுத்த ஸ்தலத்திற்குப்போகிற மார்க்கம் இன்னும் வெளிப்படவில்லையென்று பரிசுத்த ஆவியானவர் தெரியப்படுத்தியிருக்கிறார். 9. அந்தக் கூடாரம் இக்காலத்திற்கு உதவுகிற ஒப்பனையாயிருக்கிறது; அதற்கேற்றபடியே செலுத்தப்பட்டுவருகிற காணிக்கைகளும் பலிகளும் ஆராதனை செய்கிறவனுடைய மனச்சாட்சியைப் பூரணப்படுத்தக்கூடாதவைகளாம். 10. இவைகள் சீர்திருத்தல் உண்டாகும் காலம்வரைக்கும் நடந்தேறும்படி கட்டளையிடப்பட்ட போஜனபானங்களும், பலவித ஸ்நானங்களும், சரீரத்திற்கேற்ற சடங்குகளுமேயல்லாமல் வேறல்ல. 11. கிறிஸ்துவானவர் வரப்போகிற நன்மைகளுக்குரிய பிரதான ஆசாரியராய் வெளிப்பட்டு, கையினால் செய்யப்பட்டதாகிய இந்தச் சிருஷ்டிசம்பந்தமான கூடாரத்தின் வழியாக அல்ல, பெரிதும் உத்தமமுமான கூடாரத்தின் வழியாகவும், 12. வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரேதரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து, நித்திய மீட்பை உண்டுபண்ணினார். 13. அதெப்படியெனில், காளை வெள்ளாட்டுக்கடா இவைகளின் இரத்தமும், தீட்டுப்பட்டவர்கள்மேல் தெளிக்கப்பட்ட கடாரியின் சாம்பலும், சரீரசுத்தியுண்டாகும்படி பரிசுத்தப்படுத்துமானால், 14. நித்திய ஆவியினாலே தம்மைத்தாமே பழுதற்ற பலியாகத் தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு உங்கள் மனச்சாட்சியைச் செத்தக்கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்! 15. ஆகையால் முதலாம் உடன்படிக்கையின் காலத்திலே நடந்த அக்கிரமங்களை நிவிர்த்திசெய்யும்பொருட்டு அவர் மரணமடைந்து, அழைக்கப்பட்டவர்கள் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட நித்திய சுதந்தரத்தை அடைந்துகொள்வதற்காக, புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராயிருக்கிறார். 16. ஏனென்றால், எங்கே மரணசாசனமுண்டோ, அங்கே அந்தச் சாசனத்தை எழுதினவனுடைய மரணமும் உண்டாகவேண்டும். 17. எப்படியெனில், மரணமுண்டான பின்பே மரணசாசனம் உறுதிப்படும்; அதை எழுதினவன் உயிரோடிருக்கையில் அதற்குப் பெலனில்லையே. 18. அந்தப்படி, முதலாம் உடன்படிக்கையும் இரத்தமில்லாமல் பிரதிஷ்டை பண்ணப்படவில்லை. 19. எப்படியெனில், மோசே, நியாயப்பிரமாணத்தின்படி, சகல ஜனங்களுக்கும் எல்லாக் கட்டளைகளையும் சொன்னபின்பு, இளங்காளை வெள்ளாட்டுக்கடா இவைகளின் இரத்தத்தைத் தண்ணீரோடும், சிவப்பான ஆட்டுமயிரோடும், ஈசோப்போடுங்கூட எடுத்து, புஸ்தகத்தின்மேலும் ஜனங்களெல்லார்மேலும் தெளித்து: 20. தேவன் உங்களுக்குக் கட்டளையிட்ட உடன்படிக்கையின் இரத்தம் இதுவே என்று சொன்னான். 21. இவ்விதமாக, கூடாரத்தின்மேலும் ஆராதனைக்குரிய சகல பணிமுட்டுகளின்மேலும் இரத்தத்தைத் தெளித்தான். 22. நியாயப்பிரமாணத்தின்படி கொஞ்சங்குறைய எல்லாம் இரத்தத்தினாலே சுத்திகரிக்கப்படும்; இரத்தஞ்சிந்துதலில்லாமல் மன்னிப்பு உண்டாகாது. 23. ஆதலால், பரலோகத்திலுள்ளவைகளுக்குச் சாயலானவைகள் இப்படிப்பட்ட பலிகளினாலே சுத்திகரிக்கப்பட வேண்டியதாயிருந்தது; பரலோகத்திலுள்ளவைகளோ இவைகளிலும் விசேஷித்த பலிகளாலே சுத்திகரிக்கப்படவேண்டியதாமே. 24. அந்தப்படி, மெய்யான பரிசுத்த ஸ்தலத்துக்கு அடையாளமான கையினால் செய்யப்பட்டதாயிருக்கிற பரிசுத்த ஸ்தலத்திலே கிறிஸ்துவானவர் பிரவேசியாமல், பரலோகத்திலேதானே இப்பொழுது நமக்காகத் தேவனுடைய சமுகத்தில் பிரத்தியட்சமாகும்படி பிரவேசித்திருக்கிறார். 25. பிரதான ஆசாரியன் அந்நிய இரத்தத்தோடே வருஷந்தோறும் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசிக்கிறதுபோல, அவர் அநேகந்தரம் தம்மைப் பலியிடும்படிக்குப் பிரவேசிக்கவில்லை. 26. அப்படியிருந்ததானால், உலகமுண்டானது முதற்கொண்டு அவர் அநேகந்தரம் பாடுபடவேண்டியதாயிருக்குமே; அப்படியல்ல, அவர் தம்மைத்தாமே பலியிடுகிறதினாலே பாவங்களை நீக்கும்பொருட்டாக இந்தக் கடைசிக்காலத்தில் ஒரேதரம் வெளிப்பட்டார். 27. அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே, 28. கிறிஸ்துவும் அநேகருடைய பாவங்களைச் சுமந்து தீர்க்கும்படிக்கு ஒரேதரம் பலியிடப்பட்டு, தமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறவர்களுக்கு இரட்சிப்பை அருளும்படி இரண்டாந்தரம் பாவமில்லாமல் தரிசனமாவார்.
Chapter 10
1. இப்படியிருக்க, நியாயப்பிரமாணமானது வரப்போகிற நன்மைகளின் பொருளாயிராமல், அவைகளின் நிழலாய்மாத்திரம் இருக்கிறபடியால், வருஷந்தோறும் இடைவிடாமல் செலுத்தப்பட்டுவருகிற ஒரேவிதமான பலிகளினாலே அவைகளைச் செலுத்த வருகிறவர்களை ஒருக்காலும் பூரணப்படுத்தமாட்டாது. 2. பூரணப்படுத்துமானால், ஆராதனை செய்கிறவர்கள் ஒருதரம் சுத்தமாக்கப்பட்டபின்பு, இன்னும் பாவங்களுண்டென்று உணர்த்தும் மனச்சாட்சி அவர்களுக்கு இல்லாதிருப்பதினால், அந்தப் பலிகளைச் செலுத்துகிறது நிறுத்தப்படுமல்லவா? 3. அப்படி நிறுத்தப்படாதபடியால், பாவங்கள் உண்டென்று அவைகளினாலே வருஷந்தோறும் நினைவுகூருதல் உண்டாயிருக்கிறது. 4. அல்லாமலும், காளை வெள்ளாட்டுக்கடா இவைகளுடைய இரத்தம் பாவங்களை நிவிர்த்திசெய்யமாட்டாதே. 5. ஆகையால் அவர் உலகத்தில் பிரவேசிக்கும்போது: பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை, ஒரு சரீரத்தை எனக்கு ஆயத்தம்பண்ணினீர்; 6. சர்வாங்க தகனபலிகளும், பாவநிவாரணபலிகளும் உமக்குப் பிரியமானதல்ல என்றீர். 7. அப்பொழுது நான்: தேவனே, உம்முடைய சித்தத்தின்படி செய்ய, இதோ, வருகிறேன், புஸ்தகச்சுருளில் என்னைக்குறித்து எழுதியிருக்கிறது என்று சொன்னேன் என்றார். 8. நியாயப்பிரமாணத்தின்படி செலுத்தப்பட்டுவருகிற பலிகளைக்குறித்து மேற்சொல்லியபடி: பலியையும், காணிக்கையையும், சர்வாங்க தகனபலிகளையும், பாவநிவாரணபலிகளையும் நீர் விரும்பவில்லை, அவைகள் உமக்குப் பிரியமானதல்ல என்று சொன்னபின்பு: 9. தேவனே, உம்முடைய சித்தத்தின்படி செய்ய, இதோ, வருகிறேன் என்று சொன்னார். இரண்டாவதை நிலைநிறுத்துவதற்கு முதலாவதை நீக்கிப்போடுகிறார். 10. இயேசுகிறிஸ்துவினுடைய சரீரம் ஒரேதரம் பலியிடப்பட்டதினாலே, அந்தச் சித்தத்தின்படி நாம் பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறோம். 11. அன்றியும், எந்த ஆசாரியனும் நாடோறும் ஆராதனை செய்கிறவனாயும், பாவங்களை ஒருக்காலும் நிவிர்த்திசெய்யக்கூடாத ஒரேவித பலிகளை அநேகந்தரம் செலுத்திவருகிறவனாயும் நிற்பான். 12. இவரோ, பாவங்களுக்காக ஒரே பலியைச் செலுத்தி, என்றென்றைக்கும் தேவனுடைய வலதுபாரிசத்தில் உட்கார்ந்து, 13. இனித் தம்முடைய சத்துருக்களைத் தமது பாதபடியாக்கிப் போடும்வரைக்கும் காத்துக்கொண்டிருக்கிறார். 14. ஏனெனில் பரிசுத்தமாக்கப்படுகிறவர்களை ஒரே பலியினாலே இவர் என்றென்றைக்கும் பூரணப்படுத்தியிருக்கிறார். 15. இதைக்குறித்துப் பரிசுத்த ஆவியானவரும் நமக்குச் சாட்சிசொல்லுகிறார்; எப்படியெனில்: 16. அந்த நாட்களுக்குப்பின்பு நான் அவர்களோடே பண்ணும் உடன்படிக்கையாவது: நான் என்னுடைய பிரமாணங்களை அவர்களுடைய இருதயங்களில் வைத்து, அவைகளை அவர்களுடைய மனதில் எழுதுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறாரென்பதை உரைத்தபின்பு, 17. அவர்களுடைய பாவங்களையும் அவர்களுடைய அக்கிரமங்களையும் நான் இனி நினைப்பதில்லை என்பதைச் சொல்லுகிறார். 18. இவைகள் மன்னிக்கப்பட்டதுண்டானால், இனிப் பாவத்தினிமித்தம் பலி செலுத்தப்படுவதில்லையே. 19. ஆகையால், சகோதரரே, நாம் பரிசுத்தஸ்தலத்தில் பிரவேசிப்பதற்கு இயேசுவானவர் தமது மாம்சமாகிய திரையின் வழியாய்ப் புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை நமக்கு உண்டுபண்ணினபடியால், 20. அந்த மார்க்கத்தின்வழியாய்ப் பிரவேசிப்பதற்கு அவருடைய இரத்தத்தினாலே நமக்குத் தைரியம் உண்டாயிருக்கிறபடியினாலும், 21. தேவனுடைய வீட்டின்மேல் அதிகாரியான மகா ஆசாரியர் நமக்கு ஒருவர் இருக்கிறபடியினாலும், 22. துர்மனச்சாட்சி நீங்கத் தெளிக்கப்பட்ட இருதயமுள்ளவர்களாயும், சுத்த ஜலத்தால் கழுவப்பட்ட சரீரமுள்ளவர்களாயும், உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் சேரக்கடவோம். 23. அல்லாமலும், நம்முடைய நம்பிக்கையை அறிக்கையிடுகிறதில் அசைவில்லாமல் உறுதியாயிருக்கக்கடவோம்; வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவராயிருக்கிறாரே. 24. மேலும், அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனித்து; 25. சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம்; நாளானது சமீபித்துவருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்திசொல்லவேண்டும். 26. சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ்செய்கிறவர்களாயிருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொருபலி இனியிராமல், 27. நியாயத்தீர்ப்பு வருமென்று பயத்தோடே எதிர்பார்க்குதலும், விரோதிகளைப் பட்சிக்கும் கோபாக்கினையுமே இருக்கும். 28. மோசேயினுடைய பிரமாணத்தைத் தள்ளுகிறவன் இரக்கம்பெறாமல் இரண்டு மூன்று சாட்சிகளின் வாக்கினாலே சாகிறானே; 29. தேவனுடைய குமாரனைக் காலின்கீழ் மிதித்து, தன்னைப் பரிசுத்தஞ்செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமென்றெண்ணி, கிருபையின் ஆவியை நிந்திக்கிறவன் எவ்வளவு கொடிதான ஆக்கினைக்குப் பாத்திரவானாயிருப்பான் என்பதை யோசித்துப்பாருங்கள். 30. பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றும், கர்த்தர் தம்முடைய ஜனங்களை நியாயந்தீர்ப்பார் என்றும் சொன்னவர் இன்னாரென்று அறிவோம். 31. ஜீவனுள்ள தேவனுடைய கைகளில் விழுகிறது பயங்கரமாயிருக்குமே. 32. முந்தின நாட்களை நினைத்துக்கொள்ளுங்கள்; நீங்கள் பிரகாசமாக்கப்பட்டிருந்த அந்த நாட்களில் உபத்திரவங்களாகிய மிகுந்த போராட்டத்தைச் சகித்தீர்களே. 33. நிந்தைகளாலும் உபத்திரவங்களாலும் நீங்கள் வேடிக்கையாக்கப்பட்டதுமல்லாமல், அப்படி நடத்தப்பட்டவர்களுக்குப் பங்காளிகளுமானீர்கள். 34. நான் கட்டப்பட்டிருக்கையில் நீங்கள் என்னைக்குறித்துப் பரிதபித்ததுமன்றி, பரலோகத்தில் அதிக மேன்மையும் நிலையுள்ளதுமான சுதந்தரம் உங்களுக்கு உண்டென்று அறிந்து, உங்கள் ஆஸ்திகளையும் சந்தோஷமாய்க் கொள்ளையிடக்கொடுத்தீர்கள். 35. ஆகையால், மிகுந்த பலனுக்கேதுவான உங்கள் தைரியத்தை விட்டுவிடாதிருங்கள். 36. நீங்கள் தேவனுடைய சித்தத்தின்படி செய்து, வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதைப் பெறும்படிக்குப் பொறுமை உங்களுக்கு வேண்டியதாயிருக்கிறது. 37. வருகிறவர் இன்னுங் கொஞ்சக்காலத்தில் வருவார், தாமதம்பண்ணார். 38. விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான், பின்வாங்கிப்போவானானால் அவன்மேல் என் ஆத்துமா பிரியமாயிராது என்கிறார். 39. நாமோ கெட்டுப்போகப் பின்வாங்குகிறவர்களாயிராமல், ஆத்துமா ஈடேற விசுவாசிக்கிறவர்களாயிருக்கிறோம்.
Chapter 11
1. விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது. 2. அதினாலே முன்னோர்கள் நற்சாட்சிபெற்றார்கள். 3. விசுவாசத்தினாலே நாம் உலகங்கள் தேவனுடைய வார்த்தையினால் உண்டாக்கப்பட்டதென்றும், இவ்விதமாய், காணப்படுகிறவைகள் தோன்றப்படுகிறவைகளால் உண்டாகவில்லையென்றும் அறிந்திருக்கிறோம். 4. விசுவாசத்தினாலே ஆபேல் காயீனுடைய பலியிலும் மேன்மையான பலியை தேவனுக்குச் செலுத்தினான்; அதினாலே அவன் நீதிமானென்று சாட்சி பெற்றான்; அவனுடைய காணிக்கைகளைக் குறித்துத் தேவனே சாட்சி கொடுத்தார்; அவன் மரித்தும் இன்னும் பேசுகிறான். 5. விசுவாசத்தினாலே ஏனோக்கு மரணத்தைக் காணாதபடிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டான்; தேவன் அவனை எடுத்துக்கொண்டபடியினாலே, அவன் காணப்படாமற்போனான்; அவன் தேவனுக்குப் பிரியமானவனென்று அவன் எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன்னமே சாட்சிபெற்றான். 6. விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும். 7. விசுவாசத்தினாலே நோவா தற்காலத்திலே காணாதவைகளைக்குறித்துத் தேவஎச்சரிப்புப் பெற்று, பயபக்தியுள்ளவனாகி, தன் குடும்பத்தை இரட்சிப்பதற்குப் பேழையை உண்டுபண்ணினான்; அதினாலே அவன் உலகம் ஆக்கினைக்குள்ளானதென்று தீர்த்து, விசுவாசத்தினாலுண்டாகும் நீதிக்குச் சுதந்தரவாளியானான். 8. விசுவாசத்தினாலே ஆபிரகாம் தான் சுதந்தரமாகப் பெறப்போகிற இடத்திற்குப் போகும்படி அழைக்கப்பட்டபோது, கீழ்ப்படிந்து, தான் போகும் இடம் இன்னதென்று அறியாமல் புறப்பட்டுப்போனான். 9. விசுவாசத்தினாலே அவன் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட தேசத்திலே பரதேசியைப்போலச் சஞ்சரித்து, அந்த வாக்குத்தத்தத்திற்கு உடன் சுதந்தரராகிய ஈசாக்கோடும் யாக்கோபோடும் கூடாரங்களிலே குடியிருந்தான்; 10. ஏனெனில், தேவன் தாமே கட்டி உண்டாக்கின அஸ்திபாரங்களுள்ள நகரத்துக்கு அவன் காத்திருந்தான். 11. விசுவாசத்தினாலே சாராளும் வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவரென்றெண்ணி, கர்ப்பந்தரிக்கப் பெலனடைந்து, வயதுசென்றவளாயிருந்தும் பிள்ளைபெற்றாள். 12. ஆனபடியால், சரீரஞ்செத்தவனென்று எண்ணத்தகும் ஒருவனாலே, வானத்திலுள்ள பெருக்கமான நட்சத்திரங்களைப்போலவும் கடற்கரையிலுள்ள எண்ணிறந்த மணலைப்போலவும், மிகுந்த ஜனங்கள் பிறந்தார்கள். 13. இவர்களெல்லாரும், வாக்குத்தத்தம்பண்ணப்பட்டவைகளை அடையாமல், தூரத்திலே அவைகளைக் கண்டு, நம்பி அணைத்துக்கொண்டு, பூமியின்மேல் தங்களை அந்நியரும் பரதேசிகளும் என்று அறிக்கையிட்டு, விசுவாசத்தோடே மரித்தார்கள். 14. இப்படி அறிக்கையிடுகிறவர்கள் சுயதேசத்தை நாடிப்போகிறோம் என்று தெரியப்படுத்துகிறார்கள். 15. தாங்கள் விட்டுவந்த தேசத்தை நினைத்தார்களானால், அதற்குத் திரும்பிப்போவதற்கு அவர்களுக்குச் சமயங்கிடைத்திருக்குமே. 16. அதையல்ல, அதிலும் மேன்மையான பரமதேசத்தையே விரும்பினார்கள்; ஆகையால் தேவன் அவர்களுடைய தேவனென்னப்பட வெட்கப்படுகிறதில்லை; அவர்களுக்கு ஒரு நகரத்தை ஆயத்தம்பண்ணினாரே. 17. மேலும் விசுவாசத்தினாலே ஆபிரகாம் தான் சோதிக்கப்பட்டபோது ஈசாக்கைப் பலியாக ஒப்புக்கொடுத்தான். 18. ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும் என்று அவனோடே சொல்லப்பட்டிருந்ததே; இப்படிப்பட்ட வாக்குத்தத்தங்களைப் பெற்றவன், மரித்தோரிலிருந்தும் எழுப்பத் தேவன் வல்லவராயிருக்கிறாரென்றெண்ணி, 19. தனக்கு ஒரேபேறானவனையே பலியாக ஒப்புக்கொடுத்தான்; மரித்தோரிலிருந்து அவனை பாவனையாகத் திரும்பவும் பெற்றுக்கொண்டான். 20. விசுவாசத்தினாலே ஈசாக்கு வருங்காரியங்களைக்குறித்து யாக்கோபையும் ஏசாவையும் ஆசீர்வதித்தான். 21. விசுவாசத்தினாலே யாக்கோபு தன் மரணகாலத்தில் யோசேப்பினுடைய குமாரர் இருவரையும் ஆசீர்வதித்து, தன் கோலின் முனையிலே சாய்ந்து தொழுதுகொண்டான். 22. விசுவாசத்தினாலே யோசேப்பு இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்தைவிட்டுப் புறப்படுவார்களென்பதைப்பற்றித் தன் அந்தியகாலத்தில் பேசி, தன் எலும்புகளைக்குறித்துக் கட்டளைகொடுத்தான். 23. மோசே பிறந்தபோது அவனுடைய தாய்தகப்பன்மார் அவனை அழகுள்ள பிள்ளையென்று கண்டு, விசுவாசத்தினாலே, ராஜாவினுடைய கட்டளைக்குப் பயப்படாமல் அவனை மூன்றுமாதம் ஒளித்துவைத்தார்கள். 24. விசுவாசத்தினாலே மோசே தான் பெரியவனானபோது பார்வோனுடைய குமாரத்தியின் மகன் என்னப்படுவதை வெறுத்து, 25. அநித்தியமான பாவசந்தோஷங்களை அநுபவிப்பதைப்பார்க்கிலும் தேவனுடைய ஜனங்களோடே துன்பத்தை அநுபவிப்பதையே தெரிந்துகொண்டு, 26. இனிவரும் பலன்மேல் நோக்கமாயிருந்து, எகிப்திலுள்ள பொக்கிஷங்களிலும் கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தையை அதிக பாக்கியமென்று எண்ணினான். 27. விசுவாசத்தினாலே அவன் அதரிசனமானவரைத் தரிசிக்கிறதுபோல உறுதியாயிருந்து, ராஜாவின் கோபத்துக்குப் பயப்படாமல் எகிப்தைவிட்டுப் போனான். 28. விசுவாசத்தினாலே, முதற்பேறானவைகளைச் சங்கரிக்கிறவன் இஸ்ரவேலரைத் தொடாதபடிக்கு, அவன் பஸ்காவையும் இரத்தம் பூசுதலாகிய நியமத்தையும் ஆசரித்தான். 29. விசுவாசத்தினாலே அவர்கள் சிவந்த சமுத்திரத்தை உலர்ந்த தரையைக் கடந்துபோவதுபோலக் கடந்துபோனார்கள்; எகிப்தியர் அப்படிச் செய்யத்துணிந்து அமிழ்ந்துபோனார்கள். 30. விசுவாசத்தினாலே எரிகோ பட்டணத்தின் மதில்கள் ஏழுநாள் சுற்றிவரப்பட்டு விழுந்தது. 31. விசுவாசத்தினாலே ராகாப் என்னும் வேசி வேவுகாரரைச் சமாதானத்தோடே ஏற்றுக்கொண்டு, கீழ்ப்படியாதவர்களோடேகூடச் சேதமாகாதிருந்தாள். 32. பின்னும் நான் என்ன சொல்லுவேன்? கிதியோன், பாராக், சிம்சோன், யெப்தா, தாவீது, சாமுவேல் என்பவர்களையும், தீர்க்கதரிசிகளையுங்குறித்து நான் விவரஞ்சொல்லவேண்டுமானால் காலம் போதாது. 33. விசுவாசத்தினாலே அவர்கள் ராஜ்யங்களை ஜெயித்தார்கள், நீதியை நடப்பித்தார்கள், வாக்குத்தத்தங்களைப் பெற்றார்கள், சிங்கங்களின் வாய்களை அடைத்தார்கள், 34. அக்கினியின் உக்கிரத்தை அவித்தார்கள், பட்டயக்கருக்குக்குத் தப்பினார்கள், பலவீனத்தில் பலன்கொண்டார்கள்; யுத்தத்தில் வல்லவர்களானார்கள், அந்நியருடைய சேனைகளை முறியடித்தார்கள். 35. ஸ்திரீகள் சாகக்கொடுத்த தங்களுடையவர்களை உயிரோடெழுந்திருக்கப் பெற்றார்கள்; வேறுசிலர் மேன்மையான உயிர்த்தெழுதலை அடையும்படிக்கு, விடுதலைபெறச் சம்மதியாமல், வாதிக்கப்பட்டார்கள்; 36. வேறு சிலர் நிந்தைகளையும் அடிகளையும் கட்டுகளையும் காவலையும் அநுபவித்தார்கள்; 37. கல்லெறியுண்டார்கள், வாளால் அறுப்புண்டார்கள், பரீட்சைபார்க்கப்பட்டார்கள், பட்டயத்தினாலே வெட்டப்பட்டு மரித்தார்கள், செம்மறியாட்டுத் தோல்களையும் வெள்ளாட்டுத் தோல்களையும் போர்த்துக்கொண்டு திரிந்து, குறைவையும் உபத்திரவத்தையும் துன்பத்தையும் அநுபவித்தார்கள்; 38. உலகம் அவர்களுக்குப் பாத்திரமாயிருக்கவில்லை; அவர்கள் வனாந்தரங்களிலேயும் மலைகளிலேயும் குகைகளிலேயும் பூமியின் வெடிப்புகளிலேயும் சிதறுண்டு அலைந்தார்கள். 39. இவர்களெல்லாரும் விசுவாசத்தினாலே நற்சாட்சிபெற்றும், வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதை அடையாமற்போனார்கள். 40. அவர்கள் நம்மையல்லாமல் பூரணராகாதபடிக்கு விசேஷித்த நன்மையானதொன்றைத் தேவன் நமக்கென்று முன்னதாக நியமித்திருந்தார்.
Chapter 12
1. ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கிநிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்; 2. அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார். 3. ஆகையால் நீங்கள் இளைப்புள்ளவர்களாய் உங்கள் ஆத்துமாக்களில் சோர்ந்துபோகாதபடிக்கு, தமக்கு விரோதமாய்ப் பாவிகளால் செய்யப்பட்ட இவ்விதமான விபரீதங்களைச் சகித்த அவரையே நினைத்துக்கொள்ளுங்கள். 4. பாவத்திற்கு விரோதமாய்ப் போராடுகிறதில் இரத்தஞ்சிந்தப்படத்தக்கதாக நீங்கள் இன்னும் எதிர்த்துநிற்கவில்லையே. 5. அன்றியும்: என் மகனே, கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவரால் கடிந்துகொள்ளப்படும்போது சோர்ந்துபோகாதே. 6. கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் சிட்சித்து, தாம் சேர்த்துக்கொள்ளுகிற எந்த மகனையும் தண்டிக்கிறார் என்று பிள்ளைகளுக்குச் சொல்லுகிறதுபோல உங்களுக்குச் சொல்லியிருக்கிற புத்திமதியை மறந்தீர்கள். 7. நீங்கள் சிட்சையைச் சகிக்கிறவர்களாயிருந்தால் தேவன் உங்களைப் புத்திரராக எண்ணி நடத்துகிறார்; தகப்பன் சிட்சியாத புத்திரனுண்டோ? 8. எல்லாருக்கும் கிடைக்கும் சிட்சை உங்களுக்குக் கிடையாதிருந்தால் நீங்கள் புத்திரராயிராமல் வேசிப்பிள்ளைகளாயிருப்பீர்களே. 9. அன்றியும், நம்முடைய சரீரத்தின் தகப்பன்மார்கள் நம்மைச் சிட்சிக்கும்போது, அவர்களுக்கு நாம் அஞ்சி நடந்திருக்க, நாம் பிழைக்கத்தக்கதாக ஆவிகளின் பிதாவுக்கு வெகு அதிகமாய் அடங்கி நடக்கவேண்டுமல்லவா? 10. அவர்கள் தங்களுக்கு நலமென்று தோன்றினபடி கொஞ்சக்காலம் சிட்சித்தார்கள்; இவரோ தம்முடைய பரிசுத்தத்துக்கு நாம் பங்குள்ளவர்களாகும்பொருட்டு நம்முடைய பிரயோஜனத்துக்காகவே நம்மைச் சிட்சிக்கிறார். 11. எந்தச் சிட்சையும் தற்காலத்தில் சந்தோஷமாய்க் காணாமல் துக்கமாய்க் காணும்; ஆகிலும் பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனைத் தரும். 12. ஆகையினால், நெகிழ்ந்த கைகளையும் தளர்ந்த முழங்கால்களையும் நீங்கள் திரும்ப நிமிர்த்தி, 13. முடமாயிருக்கிறது பிசகிப்போகாமல் சொஸ்தமாகும்படிக்கு, உங்கள் பாதங்களுக்கு வழிகளைச் செவ்வைப்படுத்துங்கள். 14. யாவரோடும் சமாதானமாயிருக்கவும், பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கவும் நாடுங்கள்; பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே. 15. ஒருவனும் தேவனுடைய கிருபையை இழந்துபோகாதபடிக்கும் யாதொரு கசப்பான வேர் முளைத்தெழும்பிக் கலக்கமுண்டாக்குகிறதினால் அநேகர் தீட்டுப்படாதபடிக்கும், 16. ஒருவனும் வேசிக்கள்ளனாகவும், ஒருவேளைப் போஜனத்துக்காகத் தன் சேஷ்டபுத்திரபாகத்தை விற்றுப்போட்ட ஏசாவைப்போலச் சீர்கெட்டவனாகவும் இராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள். 17. ஏனென்றால், பிற்பாடு அவன் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக்கொள்ள விரும்பியும் ஆகாதவனென்று தள்ளப்பட்டதை அறிவீர்கள்; அவன் கண்ணீர்விட்டு, கவலையோடே தேடியும் மனம் மாறுதலைக் காணாமற்போனான். 18. அன்றியும், தொடக்கூடியதும், அக்கினி பற்றியெரிகிறதுமான மலையினிடத்திற்கும், மந்தாரம் இருள் பெருங்காற்று ஆகிய இவைகளினிடத்திற்கும், 19. எக்காளமுழக்கத்தினிடத்திற்கும், வார்த்தைகளுடைய சத்தத்தினிடத்திற்கும், நீங்கள் வந்து சேரவில்லை; அந்தச் சத்தத்தைக் கேட்டவர்கள் பின்னும் தங்களுக்கு வார்த்தை சொல்லப்படாதபடிக்கு வேண்டிக்கொண்டார்கள். 20. ஏனெனில் ஒரு மிருகமாகிலும் மலையைத் தொட்டால், அது கல்லெறியுண்டு, அல்லது அம்பினால் எய்யுண்டு சாகவேண்டுமென்று சொல்லப்பட்ட கட்டளையைச் சகிக்கமாட்டாதிருந்தார்கள். 21. மோசேயும்: நான் மிகவும் பயந்து நடுங்குகிறேன் என்று சொல்லத்தக்கதாக அந்தக் காட்சி அவ்வளவு பயங்கரமாயிருந்தது. 22. நீங்களோ சீயோன் மலையினிடத்திற்கும், ஜீவனுள்ள தேவனுடைய நகரமாகிய பரம எருசலேமினிடத்திற்கும், ஆயிரம் பதினாயிரமான தேவதூதர்களினிடத்திற்கும், 23. பரலோகத்தில் பேரெழுதியிருக்கிற முதற்பேறானவர்களின் சர்வசங்கமாகிய சபையினிடத்திற்கும், யாவருக்கும் நியாயாதிபதியாகிய தேவனிடத்திற்கும், பூரணராக்கப்பட்ட நீதிமான்களுடைய ஆவிகளினிடத்திற்கும், 24. புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராகிய இயேசுவினிடத்திற்கும், ஆபேலினுடைய இரத்தம் பேசினதைப்பார்க்கிலும் நன்மையானவைகளைப் பேசுகிற இரத்தமாகிய தெளிக்கப்படும் இரத்தத்தினிடத்திற்கும் வந்து சேர்ந்தீர்கள். 25. பேசுகிறவருக்கு நீங்கள் செவிகொடுக்கமாட்டோமென்று விலகாதபடி எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில், பூமியிலே பேசினவருக்குச் செவிகொடுக்கமாட்டோமென்று விலகினவர்கள் தப்பிப்போகாமலிருக்க, பரலோகத்திலிருந்து பேசுகிறவரை நாம் விட்டுவிலகினால் எப்படித் தப்பிப்போவோம்? 26. அவருடைய சத்தம் அப்பொழுது பூமியை அசையப்பண்ணிற்று; இன்னும் ஒருதரம் நான் பூமியை மாத்திரமல்ல, வானத்தையும் அசையப்பண்ணுவேன் என்று இப்பொழுது வாக்குத்தத்தஞ் செய்திருக்கிறார். 27. இன்னும் ஒருதரம் என்கிற சொல்லானது அசையாதவைகள் நிலைத்திருக்கத்தக்கதாக, அசைவுள்ளவைகள் உண்டாக்கப்பட்டவைகள்போல மாறிப்போம் என்பதைக் குறிக்கிறது. 28. ஆதலால், அசைவில்லாத ராஜ்யத்தைப் பெறுகிறவர்களாகிய நாம் பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்யும்படி கிருபையைப் பற்றிக்கொள்ளக்கடவோம். 29. நம்முடைய தேவன் பட்சிக்கிற அக்கினியாயிருக்கிறாரே.
Chapter 13
1. சகோதர சிநேகம் நிலைத்திருக்கக்கடவது. 2. அந்நியரை உபசரிக்க மறவாதிருங்கள்; அதினாலே சிலர் அறியாமல் தேவதூதரையும் உபசரித்ததுண்டு. 3. கட்டப்பட்டிருக்கிறவர்களோடே நீங்களும் கட்டப்பட்டவர்கள்போல அவர்களை நினைத்துக்கொள்ளுங்கள்; நீங்களும் சரீரத்தோடிருக்கிறவர்களென்று அறிந்து, தீங்கநுபவிக்கிறவர்களை நினைத்துக்கொள்ளுங்கள். 4. விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளதாயும், விவாகமஞ்சம் அசுசிப்படாததாயுமிருப்பதாக; வேசிக்கள்ளரையும் விபசாரக்காரரையும் தேவன் நியாயந்தீர்ப்பார். 5. நீங்கள் பண ஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே. 6. அதினாலே நாம் தைரியங்கொண்டு: கர்த்தர் எனக்குச் சகாயர், நான் பயப்படேன், மனுஷன் எனக்கு என்னசெய்வான் என்று சொல்லலாமே. 7. தேவவசனத்தை உங்களுக்குப் போதித்து உங்களை நடத்தினவர்களை நீங்கள் நினைத்து, அவர்களுடைய நடக்கையின் முடிவை நன்றாய்ச் சிந்தித்து, அவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள். 8. இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். 9. பலவிதமான அந்நிய போதனைகளால் அலைப்புண்டு திரியாதிருங்கள். போஜனபதார்த்தங்களினாலல்ல, கிருபையினாலே இருதயம் ஸ்திரப்படுகிறது நல்லது; போஜனபதார்த்தங்களில் முயற்சிசெய்கிறவர்கள் பலனடையவில்லையே. 10. நமக்கு ஒரு பலிபீடமுண்டு, அதற்குரியவைகளைப் புசிக்கிறதற்குக் கூடாரத்தில் ஆராதனை செய்கிறவர்களுக்கு அதிகாரமில்லை. 11. ஏனென்றால், எந்த மிருகங்களுடைய இரத்தம் பாவங்களினிமித்தமாகப் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரதான ஆசாரியனாலே கொண்டுவரப்படுகிறதோ, அந்த மிருகங்களின் உடல்கள் பாளயத்துக்குப் புறம்பே சுட்டெரிக்கப்படும். 12. அந்தப்படியே, இயேசுவும் தம்முடைய சொந்த இரத்தத்தினாலே ஜனத்தைப் பரிசுத்தஞ்செய்யும்படியாக நகரவாசலுக்குப் புறம்பே பாடுபட்டார். 13. ஆகையால், நாம் அவருடைய நிந்தையைச் சுமந்து, பாளயத்துக்குப் புறம்பே அவரிடத்திற்குப் புறப்பட்டுப்போகக்கடவோம். 14. நிலையான நகரம் நமக்கு இங்கே இல்லை; வரப்போகிறதையே நாடித் தேடுகிறோம். 15. ஆகையால், அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை அவர்மூலமாய் எப்போதும் தேவனுக்குச் செலுத்தக்கடவோம். 16. அன்றியும் நன்மைசெய்யவும், தானதர்மம்பண்ணவும் மறவாதிருங்கள்; இப்படிப்பட்ட பலிகளின்மேல் தேவன் பிரியமாயிருக்கிறார். 17. உங்களை நடத்துகிறவர்கள், உங்கள் ஆத்துமாக்களுக்காக உத்தரவாதம்பண்ணுகிறவர்களாய் விழித்திருக்கிறவர்களானபடியால், அவர்கள் துக்கத்தோடே அல்ல, சந்தோஷத்தோடே அதைச் செய்யும்படி, அவர்களுக்குக் கீழ்ப்படிந்து அடங்குங்கள்; அவர்கள் துக்கத்தோடே அப்படிச் செய்தால் அது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கமாட்டாதே. 18. எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்; நாங்கள் நல்மனச்சாட்சியுள்ளவர்களாய் எல்லாவற்றிலும் யோக்கியமாய் நடக்க விரும்புகிறோமென்று நிச்சயித்திருக்கிறோம். 19. நான் அதிசீக்கிரமாய் உங்களிடத்தில் வரும்படிக்கு நீங்கள் இப்படி வேண்டிக்கொள்ளும்படி அதிகமாய்க் கேட்டுக்கொள்ளுகிறேன். 20. நித்திய உடன்படிக்கையின் இரத்தத்தினாலே ஆடுகளுடைய பெரிய மேய்ப்பரான நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து ஏறிவரப்பண்ணின சமாதானத்தின் தேவன், 21. இயேசுகிறிஸ்துவைக்கொண்டு தமக்குமுன்பாகப் பிரியமானதை உங்களில் நடப்பித்து, நீங்கள் தம்முடைய சித்தத்தின்படிசெய்ய உங்களைச் சகலவித நற்கிரியையிலும் சீர்பொருந்தினவர்களாக்குவாராக; அவருக்கு என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென். 22. சகோதரரே, நான் சுருக்கமாய் உங்களுக்கு எழுதின இந்தப் புத்திமதியான வார்த்தைகளை நீங்கள் பொறுமையாய் ஏற்றுக்கொள்ளும்படி வேண்டிக்கொள்ளுகிறேன். 23. சகோதரனாகிய தீமோத்தேயு விடுதலையாக்கப்பட்டானென்று அறிவீர்களாக; அவன் சீக்கிரமாய் வந்தால், அவனோடேகூட நான் வந்து, உங்களைக் காண்பேன். 24. உங்களை நடத்துகிறவர்களையும், பரிசுத்தவான்கள் யாவரையும் வாழ்த்துங்கள். இத்தாலியா தேசத்தார் யாவரும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள். 25. கிருபையானது உங்களனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.
(April28th2012)
|