உபாகமம்
Chapter 1
1. சேயீர் மலைவழியாய் ஓரேபுக்குப் பதினொருநாள் பிரயாண தூரத்திலுள்ள காதேஸ்பர்னேயாவிலிருந்து, 2. சூப்புக்கு எதிராகவும், பாரானுக்கும் தோப்பேலுக்கும் லாபானுக்கும் ஆஸரோத்துக்கும் திசாகாபுக்கும் நடுவாகவும் இருக்கிற யோர்தானுக்கு இக்கரையான வனாந்தரத்தின் சமனான வெளியிலே வந்தபோது, மோசே இஸ்ரவேலர் எல்லாரையும் நோக்கிச் சொன்ன வசனங்களாவன: 3. எஸ்போனில் குடியிருந்த எமோரியரின் ராஜாவாகிய சீகோனையும், எத்ரேயின் அருகே அஸ்தரோத்தில் குடியிருந்த பாசானின் ராஜாவாகிய ஓக் என்பவனையும், மோசே முறிய அடித்தபின்பு, 4. நாற்பதாம் வருஷம் பதினோராம் மாதம் முதல் தேதியிலே, மோசே இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்லும்படி தனக்குக் கர்த்தர் விதித்த யாவையும் அவர்களுக்குச் சொன்னான். 5. யோர்தானுக்கு இப்புறத்திலிருக்கிற மோவாபின் தேசத்தில் மோசே இந்த நியாயப்பிரமாணத்தை விவரித்துக் காண்பிக்கத் தொடங்கி, 6. ஓரேபிலே நம்முடைய தேவனாகிய கர்த்தர் நம்மோடே சொன்னது என்னவென்றால்: நீங்கள் இந்த மலையருகே தங்கியிருந்தது போதும். 7. நீங்கள் திரும்பிப் பிரயாணம் புறப்பட்டு, எமோரியரின் மலைநாட்டிற்கும், அதற்கு அடுத்த எல்லா சமனான வெளிகளிலும் குன்றுகளிலும் பள்ளத்தாக்குகளிலும், தென்திசையிலும் கடலோரத்திலும் இருக்கிற கானானியரின் தேசத்துக்கும், லீபனோனுக்கும், ஐப்பிராத்து நதி என்னும் பெரிய நதிவரைக்கும் போங்கள். 8. இதோ, இந்தத் தேசத்தை உங்களுக்கு முன்பாக வைத்தேன்; நீங்கள் போய், கர்த்தர் உங்கள் பிதாக்களாகிய ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் அவர்களுக்குப் பின்வரும் அவர்கள் சந்ததிக்கும் ஆணையிட்டுக் கொடுத்த அந்த தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள் என்றார். 9. அக்காலத்திலே நான் உங்களை நோக்கி: நான் ஒருவனாக உங்கள் பாரத்தைத் தாங்கக்கூடாது. 10. உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களைப் பெருகப்பண்ணினார்; இதோ, இந்நாளில் நீங்கள் வானத்து நட்சத்திரங்களைப்போலத் திரளாயிருக்கிறீர்கள். 11. நீங்கள் இப்பொழுது இருக்கிறதைப்பார்க்கிலும் ஆயிரமடங்கு அதிகமாகும்படி உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சொல்லியபடியே உங்களை ஆசீர்வதிப்பாராக. 12. உங்கள் வருத்தத்தையும் பிரயாசத்தையும் வழக்குகளையும் நான் ஒருவனாய்த் தாங்குவது எப்படி? 13. நான் உங்களுக்கு அதிபதிகளை ஏற்படுத்தும்பொருட்டு, உங்கள் கோத்திரங்களில் ஞானமும் விவேகமும் அறிவும் உள்ளவர்கள் என்று பேர்பெற்ற மனிதரைத் தெரிந்துகொள்ளுங்கள் என்று சொன்னேன். 14. நீங்கள் எனக்குப் பிரதியுத்தரமாக: நீர் செய்யச்சொன்ன காரியம் நல்லது என்றீர்கள். 15. ஆகையால் நான் ஞானமும் அறிவுமுள்ள மனிதராகிய உங்கள் கோத்திரங்களின் வம்சபதிகளைத் தெரிந்துகொண்டு, அவர்கள் உங்களுக்குத் தலைவராயிருக்கும்படி, ஆயிரம்பேருக்கு அதிபதிகளாகவும், நூறுபேருக்கு அதிபதிகளாகவும், ஐம்பதுபேருக்கு அதிபதிகளாகவும், பத்துப்பேருக்கு அதிபதிகளாகவும் உங்கள் கோத்திரங்களில் அதிகாரிகளாகவும் ஏற்படுத்திவைத்தேன். 16. அக்காலத்திலே உங்களுடைய நியாயாதிபதிகளை நான் நோக்கி: நீங்கள் உங்கள் சகோதரரின் வியாச்சியங்களைக் கேட்டு, இருபட்சத்தாராகிய உங்கள் சகோதரருக்கும், அவர்களிடத்தில் தங்கும் அந்நியனுக்கும், நீதியின்படி தீர்ப்புச்செய்யுங்கள். 17. நியாயத்திலே முகதாட்சிணியம் பாராமல் பெரியவனுக்குச் செவிகொடுப்பதுபோலச் சிறியவனுக்கும் செவிகொடுக்கக்கடவீர்கள்; மனிதன் முகத்திற்குப் பயப்படீர்களாக; நியாயத்தீர்ப்பு தேவனுடையது; உங்களுக்குக் கடினமாயிருக்கும் காரியத்தை என்னிடத்தில் கொண்டுவாருங்கள்; நான் அதைக் கேட்பேன் என்று சொல்லி, 18. நீங்கள் செய்யவேண்டிய காரியங்கள் யாவையும் அக்காலத்திலே கட்டளையிட்டேன். 19. நம்முடைய தேவனாகிய கர்த்தர் நமக்குக் கட்டளையிட்டபடியே, நாம் ஓரேபைவிட்டுப் பிரயாணம்பண்ணி, எமோரியரின் மலைநாட்டிற்கு நேராக நீங்கள் கண்ட அந்தப் பயங்கரமான பெரிய வனாந்தரவழி முழுவதும் நடந்துவந்து, காதேஸ்பர்னேயாவிலே சேர்ந்தோம். 20. அப்பொழுது நான் உங்களை நோக்கி: நம்முடைய தேவனாகிய கர்த்தர் நமக்குக் கொடுக்கும் எமோரியரின் மலைநாடுமட்டும் வந்து சேர்ந்தீர்கள். 21. இதோ, உன் தேவனாகிய கர்த்தர் அந்த தேசத்தை உனக்கு முன்பாக வைத்திருக்கிறார்; உன் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தர் உனக்குச் சொன்னபடியே, நீ போய் அதைச் சுதந்தரித்துக்கொள்; பயப்படாமலும் கலங்காமலும் இரு என்றேன். 22. அப்பொழுது நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வந்து: நமக்காக அந்த தேசத்தைச் சோதித்துப்பார்க்கவும், நாம் இன்னவழியாக அதில் சென்று, இன்னபட்டணங்களுக்குப் போகலாம் என்று நமக்கு மறுசெய்தி கொண்டுவரவும், நமக்கு முன்னாக மனிதரை அனுப்புவோம் என்றீர்கள். 23. அது எனக்கு நன்றாய்க் கண்டது; கோத்திரத்திற்கு ஒருவனாகப் பன்னிரண்டு மனிதரைத் தெரிந்தெடுத்து அனுப்பினேன். 24. அவர்கள் புறப்பட்டு, மலைகளில் ஏறி, எஸ்கோல் பள்ளத்தாக்குமட்டும் போய், அதை வேவுபார்த்து, 25. அத்தேசத்துக் கனிகளில் சிலவற்றைத் தங்கள் கையில் எடுத்துக்கொண்டு நம்மிடத்தில் வந்து, நம்முடைய தேவனாகிய கர்த்தர் நமக்குக் கொடுக்கும் தேசம் நல்ல தேசம் என்று நம்மிடத்தில் சொன்னார்கள். 26. அப்படியிருந்தும், நீங்கள் போகமாட்டோம் என்று உங்கள் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைக்கு விரோதமாக எதிர்த்து, 27. உங்கள் கூடாரங்களில் முறுமுறுத்து: கர்த்தர் நம்மை வெறுத்து, நம்மை அழிக்கும்பொருட்டாக நம்மை எமோரியரின் கையில் ஒப்புக்கொடுக்கும்படி, நம்மை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணினார். 28. நாம் எங்கே போகலாம்; அந்த ஜனங்கள் நம்மைப்பார்க்கிலும் பலவான்களும், நெடியவர்களும், அவர்கள் பட்டணங்கள் பெரியவைகளும், வானத்தையளாவும் மதிலுள்ளவைகளுமாய் இருக்கிறதென்றும், ஏனாக்கியரின் புத்திரரையும் அங்கே கண்டோம் என்றும் நம்முடைய சகோதரர் சொல்லி, நம்முடைய இருதயத்தைக் கலங்கப்பண்ணினார்கள் என்று சொன்னீர்கள். 29. அப்பொழுது நான் உங்களை நோக்கி: நீங்கள் கலங்காமலும் அவர்களுக்குப் பயப்படாமலும் இருங்கள். 30. உங்களுக்கு முன் செல்லும் உங்கள் தேவனாகிய கர்த்தர் தாமே எகிப்தில் உங்களோடிருந்து, உங்கள் கண்களுக்கு முன்பாகச் செய்ததெல்லாவற்றைப்போலவும், வனாந்தரத்தில் செய்துவந்ததுபோலவும், உங்களுக்காக யுத்தம்பண்ணுவார். 31. ஒரு மனிதன் தன் பிள்ளையைச் சுமந்துகொண்டு போவதுபோல, நீங்கள் இவ்விடத்திற்கு வருகிறவரைக்கும், நடந்துவந்த வழிகள் எல்லாவற்றிலும், உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களைச் சுமந்துகொண்டு வந்ததைக் கண்டீர்களே. 32. உங்கள் தேவனாகிய கர்த்தர் நீங்கள் பாளயமிறங்கத்தக்க இடத்தைப் பார்க்கவும், நீங்கள் போகவேண்டிய வழியை உங்களுக்குக் காட்டவும், 33. இரவில் அக்கினியிலும் பகலில் மேகத்திலும் உங்களுக்குமுன் சென்றாரே. இப்படியிருந்தும், இந்தக் காரியத்தில் நீங்கள் அவரை விசுவாசியாமற் போனீர்கள். 34. ஆகையால் கர்த்தர் உங்கள் வார்த்தைகளின் சத்தத்தைக் கேட்டு, கடுங்கோபங்கொண்டு: 35. உங்கள் பிதாக்களுக்குக் கொடுப்பேன் என்று நான் ஆணையிட்ட அந்த நல்ல தேசத்தை இந்தப் பொல்லாத சந்ததியாராகிய மனிதரில் ஒருவரும் காண்பதில்லை என்றும், 36. எப்புன்னேயின் குமாரனாகிய காலேப்மாத்திரம் அதைக் காண்பான்; அவன் கர்த்தரை உத்தமமாய்ப் பின்பற்றினபடியினால், நான் அவன் மிதித்துவந்த தேசத்தை அவனுக்கும் அவன் பிள்ளைகளுக்கும் கொடுப்பேன் என்றும் ஆணையிட்டார். 37. அன்றியும் உங்கள் நிமித்தம் கர்த்தர் என்மேலும் கோபங்கொண்டு: நீயும் அதில் பிரவேசிப்பதில்லை; 38. உனக்கு முன்பாக நிற்கிற நூனின் குமாரனாகிய யோசுவா அதில் பிரவேசிப்பான்; அவனைத் திடப்படுத்து; அவனே அதை இஸ்ரவேலுக்குச் சுதந்தரமாகப் பங்கிடுவான். 39. கொள்ளையாவார்கள் என்று நீங்கள் சொன்ன உங்கள் குழந்தைகளும், இந்நாளிலே நன்மை தீமை அறியாத உங்கள் பிள்ளைகளும் அதில் பிரவேசிப்பார்கள்; அவர்களுக்கு அதைக் கொடுப்பேன்; அவர்கள் அதைச் சுதந்தரித்துக்கொள்வார்கள். 40. நீங்களோ திரும்பிக்கொண்டு, சிவந்த சமுத்திரத்தின் வழியாய் வனாந்தரத்திற்குப் பிரயாணப்பட்டுப்போங்கள் என்றார். 41. அப்பொழுது நீங்கள் எனக்குப் பிரதியுத்தரமாக: கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தோம்; நம்முடைய தேவனாகிய கர்த்தர் எங்களுக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் நாங்கள் போய் யுத்தம்பண்ணுவோம் என்று சொல்லி, நீங்கள் யாவரும் உங்கள் ஆயுதங்களைத் தரித்துக்கொண்டு, மலையின்மேல் ஏற ஆயத்தமாயிருந்தீர்கள். 42. அப்பொழுது கர்த்தர் என்னைப் பார்த்து: நீங்கள் உங்கள் சத்துருக்களுக்கு முன்பாக முறிந்துபோகாதபடிக்கு, போகாமலும் யுத்தம்பண்ணாமலும் இருப்பீர்களாக; நான் உங்கள் நடுவே இரேன் என்று அவர்களுக்குச் சொல் என்றார். 43. அப்படியே நான் உங்களுக்குச் சொன்னேன்; நீங்களோ செவிகொடாமல், கர்த்தருடைய கட்டளைக்கு விரோதமாகத் துணிந்து மலையின்மேல் ஏறினீர்கள். 44. அந்த மலையிலே குடியிருந்த எமோரியர் உங்களை எதிர்க்கும்படி புறப்பட்டுவந்து, தேனீக்கள் துரத்துகிறதுபோல உங்களைத் துரத்தி, உங்களைச் சேயீர் தொடங்கி ஓர்மாமட்டும் முறிய அடித்தார்கள். 45. நீங்கள் திரும்பிவந்து, கர்த்தருடைய சமுகத்தில் அழுதீர்கள்; கர்த்தர் உங்கள் சத்தத்தைக் கேட்கவில்லை, உங்களுக்குச் செவிகொடுக்கவும் இல்லை. 46. இப்படி காதேசிலே தங்கி, அங்கே வெகுநாளாயிருந்தீர்கள்.
Chapter 2
1. கர்த்தர் எனக்குச் சொல்லியபடி நாம் திரும்பி, சிவந்த சமுத்திரத்திற்குப் போகிற வழியாய் வனாந்தரத்திற்குப் பிரயாணம்பண்ணி, அநேக நாள் சேயீர் நாட்டைச் சுற்றித்திரிந்தோம். 2. அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: 3. நீங்கள் இந்த மலைநாட்டைச் சுற்றித்திரிந்தது போதும்; வடக்கே திரும்புங்கள். 4. ஜனங்களுக்கு நீ கட்டளையிடவேண்டியது என்னவென்றால்: சேயீரிலே குடியிருக்கிற ஏசாவின் புத்திரரான உங்கள் சகோதரரின் எல்லையைக் கடக்கப்போகிறீர்கள்; அவர்கள் உங்களுக்குப் பயப்படுவார்கள்; நீங்களோ மிகவும் எச்சரிக்கையாயிருங்கள்; 5. அவர்களோடே போர்செய்யவேண்டாம்; அவர்கள் தேசத்திலே ஒரு அடி நிலமும் உங்களுக்குக் கொடேன்; சேயீர் மலைநாட்டை ஏசாவுக்குச் சுதந்தரமாகக் கொடுத்திருக்கிறேன். 6. போஜனபதார்த்தங்களை அவர்கள் கையிலே பணத்திற்கு வாங்கிப் புசித்து, தண்ணீரையும் அவர்கள் கையிலே பணத்திற்கு வாங்கிக் குடியுங்கள். 7. உன் தேவனாகிய கர்த்தர் உன் கைக்கிரியைகளிலெல்லாம் உன்னை ஆசீர்வதித்து வருகிறார்; இந்தப் பெரிய வனாந்தரவழியாய் நீ நடந்துவருகிறதை அறிவார்; இந்த நாற்பது வருஷமும் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருந்தார்; உனக்கு ஒன்றும் குறைவுபடவில்லை என்று சொல் என்றார். 8. அப்படியே நாம் சேயீரிலே குடியிருக்கிற நம்முடைய சகோதரராகிய ஏசாவின் புத்திரரை விட்டுப் புறப்பட்டு, அந்தரவெளி வழியாய் ஏலாத்மேலும், எசியோன்கேபேர்மேலும் போய், திரும்பிக்கொண்டு, மோவாப் வனாந்தரவழியாய் வந்தோம். 9. அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: நீ மோவாபை வருத்தப்படுத்தாமலும், அவர்களோடே போர்செய்யாமலும் இரு; அவர்கள் தேசத்தில் உனக்கு ஒன்றும் சுதந்தரமாகக் கொடேன்; ஆர் என்னும் பட்டணத்தின் சீமையை லோத் புத்திரருக்குச் சுதந்தரமாகக் கொடுத்தேன். 10. திரளானவர்களும் ஏனாக்கியரைப்போல நெடியவர்களுமான பலத்த ஜனங்களாகிய ஏமியர் அதில் முன்னே குடியிருந்தார்கள். 11. அவர்களும் ஏனாக்கியரையொத்த இராட்சதர் என்று எண்ணப்பட்டார்கள்; மோவாபியரோ அவர்களை ஏமியர் என்று சொல்லுகிறார்கள். 12. ஓரியரும் சேயீரில் முன்னே குடியிருந்தார்கள்; கர்த்தர் தங்களுக்குச் சுதந்தரமாகக் கொடுத்த தேசத்தாரை இஸ்ரவேல் துரத்தினதுபோல, ஏசாவின் புத்திரர் அந்த ஓரியரைத் துரத்தி, அவர்களைத் தங்கள் முகத்திற்கு முன்பாக அழித்து, அவர்கள் இருந்த ஸ்தானத்தில் குடியேறினார்கள். 13. நீங்கள் எழுந்து, சேரேத் ஆற்றைக் கடந்துபோங்கள் என்று சொன்னார்; அப்படியே சேரேத் ஆற்றைக் கடந்தோம். 14. யுத்த மனிதரான அந்தச் சந்ததியெல்லாம் கர்த்தர் தங்களுக்கு ஆணையிட்டபடியே பாளயத்தின் நடுவிலிருந்து மாண்டுபோக, நாம் காதேஸ்பர்னேயாவை விட்டுப் புறப்பட்டது முதற்கொண்டு, சேரேத் ஆற்றைக் கடக்குமட்டும், சென்ற காலம் முப்பத்தெட்டு வருஷமாயிற்று. 15. அவர்கள் பாளயத்தின் நடுவிலிருந்து மாண்டு ஒழியுமட்டும் கர்த்தரின் கை அவர்களை நிர்மூலமாக்கும்படிக்கு அவர்களுக்கு விரோதமாயிருந்தது. 16. யுத்தமனிதர் எல்லாரும் ஜனத்தின் நடுவிலிருந்து செத்துத் தீர்ந்தபின்பு, 17. கர்த்தர் என்னை நோக்கி: 18. நீ ஆர் பட்டணம் இருக்கிற மோவாபின் எல்லையை இன்றைக்குக் கடந்து, 19. அம்மோன் புத்திரருக்கு எதிராகச் சேரப்போகிறாய்; நீ அவர்களை வருத்தப்படுத்தவும் அவர்களோடே போர்செய்யவும் வேண்டாம்; அம்மோன் புத்திரரின் தேசத்தில் ஒன்றும் உனக்குச் சுதந்தரமாகக் கொடேன்; அதை லோத் புத்திரருக்குச் சுதந்தரமாகக் கொடுத்திருக்கிறேன். 20. அதுவும் இராட்சதருடைய தேசமாக எண்ணப்பட்டது; முற்காலத்தில் இராட்சதர் அதிலே குடியிருந்தார்கள், அம்மோனியர் அவர்களைச் சம்சூமியர் என்று சொல்லுகிறார்கள். 21. அவர்கள் திரளானவர்களும் ஏனாக்கியரைப்போல நெடியவர்களுமான பலத்த ஜனங்களாயிருந்தார்கள்; கர்த்தரோ சேயீரில் குடியிருந்த ஏசாவின் புத்திரருக்கு முன்பாக ஓரியரை அழிக்க, அவர்கள் அந்த ஜனங்களைத் துரத்திவிட்டு, அவர்கள் இருந்த ஸ்தானத்தில் இந்நாள்வரைக்கும் குடியிருக்கிறதுபோலவும், 22. கப்தோரிலிருந்து புறப்பட்ட கப்தோரியர் ஆசேரீம் தொடங்கி ஆசாமட்டும் குடியிருந்த ஆவியரை அழித்து, அவர்கள் இருந்த ஸ்தானத்திலே குடியேறினதுபோலவும், 23. கர்த்தர் அவர்களை இவர்களுக்கு முன்பாக அழியப்பண்ண, இவர்கள் அவர்களைத் துரத்திவிட்டு, அவர்கள் இருந்த ஸ்தானத்திலே குடியேறினார்கள். 24. நீங்கள் எழுந்து பிரயாணம்பண்ணி, அர்னோன் ஆற்றைக் கடந்துபோங்கள்; எஸ்போனின் ராஜாவாகிய சீகோன் என்னும் எமோரியனையும் அவன் தேசத்தையும் உன் கையிலே ஒப்புக்கொடுத்தேன்; இதுமுதல் அதைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி அவனோடே யுத்தஞ்செய். 25. வானத்தின்கீழ் எங்குமுள்ள ஜனங்கள் உன்னாலே திகிலும் பயமும் அடையும்படி செய்ய இன்று நான் தொடங்குவேன்; அவர்கள் உன் கீர்த்தியைக் கேட்டு, உன்னிமித்தம் நடுங்கி, வேதனைப்படுவார்கள் என்றார். 26. அப்பொழுது நான் கெதெமோத் வனாந்தரத்திலிருந்து எஸ்போனின் ராஜாவாகிய சீகோனிடத்தில், சமாதான வார்த்தைகளைச் சொல்லும்படி ஸ்தானாபதிகளை அனுப்பி: 27. நான் உம்முடைய தேசத்தைக் கடந்துபோகும்படி உத்தரவுகொடும்; வலதுபுறம் இடதுபுறம் சாயாமல் பெரும்பாதை வழியாய் நடப்பேன். 28. சேயீரில் குடியிருக்கிற ஏசாவின் புத்திரரும், ஆர் பட்டணத்தில் குடியிருக்கிற மோவாபியரும் எனக்குச் செய்ததுபோல, நீரும், நான் யோர்தானைக் கடந்து, எங்கள் தேவனாகிய கர்த்தர் எங்களுக்குக் கொடுக்கிற தேசத்தில் சேருமட்டும், 29. எனக்குப் புசிக்க ஆகாரத்தையும் குடிக்கத் தண்ணீரையும் கிரயத்துக்குத் தாரும்; நான் கால்நடையாய்க் கடந்துபோகமாத்திரம் உத்தரவுகொடும் என்று சொல்லி அனுப்பினேன். 30. ஆனாலும் தன் தேசத்தைக் கடந்துபோகும்படி, எஸ்போனின் ராஜாவாகிய சீகோன் நமக்கு உத்தரவு கொடுக்கவில்லை; இந்நாளில் இருக்கிறதுபோல, உன் தேவனாகிய கர்த்தர் அவனை உன் கையில் ஒப்புக்கொடுக்கும்படி, அவன் மனதைக் கடினப்படுத்தி, அவன் இருதயத்தை உரங்கொள்ளப்பண்ணியிருந்தார். 31. அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: இதோ, சீகோனையும் அவன் தேசத்தையும் உனக்கு ஒப்புக்கொடுக்கப்போகிறேன்; இதுமுதல் அவன் தேசத்தை வசப்படுத்தி, சுதந்தரித்துக்கொள் என்றார். 32. சீகோன் தன்னுடைய எல்லா ஜனங்களோடுங்கூட நம்மோடே யுத்தம்பண்ணப் புறப்பட்டு, யாகாசிலே வந்தான். 33. அவனை நம்முடைய தேவனாகிய கர்த்தர் நமக்கு ஒப்புக்கொடுத்தார்; நாம் அவனையும் அவன் குமாரரையும் அவனுடைய சகல ஜனங்களையும் முறிய அடித்து, 34. அக்காலத்தில் அவன் பட்டணங்களையெல்லாம் பிடித்து, சகல பட்டணங்களிலும் இருந்த ஸ்திரீ புருஷரையும், பிள்ளைகளையும், ஒருவரையும் மீதியாக வைக்காமல் சங்காரம்பண்ணினோம். 35. மிருகஜீவன்களையும் நாம் பிடித்த பட்டணங்களில் கொள்ளையடித்த பொருள்களையுமாத்திரம் நமக்கென்று வைத்துக்கொண்டோம். 36. அர்னோன் ஆற்றங்கரையில் இருக்கிற ஆரோவேரும் ஆற்றண்டையில் இருக்கிற பட்டணமும் தொடங்கி, கீலேயாத்வரைக்கும் நமக்கு எதிர்த்துநிற்கத்தக்க அரணிப்பான பட்டணம் இருந்ததில்லை, எல்லாவற்றையும் நம்முடைய தேவனாகிய கர்த்தர் நமக்கு ஒப்புக்கொடுத்தார். 37. அம்மோன் புத்திரருடைய தேசத்தையும், யாபோக் ஆற்றங்கரையிலுள்ள இடங்களையும், மலைகளிலுள்ள பட்டணங்களையும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் நமக்கு விலக்கின மற்ற இடங்களையும் சேராமல் விலகிப்போனாய்.
Chapter 3
1. பின்பு நாம் திரும்பி, பாசானுக்குப் போகிற வழியாய்ப் போனோம்; பாசானின் ராஜாவாகிய ஓக் தன்னுடைய சகல ஜனங்களோடும் நம்மோடே எதிர்த்து யுத்தம்பண்ணும்படி புறப்பட்டு, எத்ரேயிக்கு வந்தான். 2. அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: அவனுக்குப் பயப்படவேண்டாம்; அவனையும் அவனுடைய ஜனங்கள் எல்லாரையும் அவன் தேசத்தையும் உன் கையில் ஒப்புக்கொடுத்தேன்; எஸ்போனிலே குடியிருந்த எமோரியரின் ராஜாவாகிய சீகோனுக்கு நீ செய்ததுபோல, அவனுக்கும் செய்வாய் என்றார். 3. அப்படியே நம்முடைய தேவனாகிய கர்த்தர் பாசானின் ராஜாவாகிய ஓகையும் அவனுடைய சகல ஜனங்களையும் நம்முடைய கையில் ஒப்புக்கொடுத்தார்; அவனுக்கு ஒருவரும் மீதியாயிராமற்போகுமட்டும் அவனை முறிய அடித்தோம். 4. அக்காலத்திலே அவனுடைய பட்டணங்களையெல்லாம் பிடித்தோம்; அவர்களிடத்தில் நாம் பிடித்துக்கொள்ளாத பட்டணம் இல்லை; பாசானிலிருந்த ஓகின் ராஜ்யமான அறுபது பட்டணங்களுள்ள அர்கோப் தேசம் முழுவதையும் பிடித்தோம். 5. அந்தப் பட்டணங்களெல்லாம் உயர்ந்த மதில்களாலும் வாசல்களாலும் தாழ்ப்பாள்களாலும் அரணாக்கப்பட்டிருந்தது; அவைகள் அன்றி, மதிலில்லாத பட்டணங்களும் அநேகம். 6. அவைகளையும் சங்காரம்பண்ணினோம்; நாம் எஸ்போனின் ராஜாவாகிய சீகோனுக்குச் செய்ததுபோல, அந்த எல்லாப் பட்டணங்களிலுமுள்ள புருஷரையும் ஸ்திரீகளையும் பிள்ளைகளையும் சங்காரம்பண்ணினோம். 7. ஆனாலும் பட்டணங்களிலுள்ள ஆஸ்தியையும் சகல மிருகஜீவன்களையும் நமக்கென்று கொள்ளையிட்டோம். 8. இப்படியே யோர்தானுக்கு இப்புறத்திலுள்ள அர்னோன் நதிதொடங்கி, எர்மோன் மலைவரைக்குமுள்ள தேசத்தை நாம் அக்காலத்தில் எமோரியருடைய இரண்டு ராஜாக்களிடத்திலுமிருந்து பிடித்தோம். 9. சீதோனியர் எர்மோனைச் சீரியோன் என்கிறார்கள்; எமோரியரோ அதைச் சேனீர் என்கிறார்கள். 10. சமனான நாட்டின் எல்லாப் பட்டணங்களையும், கீலேயாத் முழுவதையும், சல்காயி, எத்ரேயி என்னும் பாசானிலிருந்த ஓகுடைய ராஜ்யத்தின் பட்டணங்கள்மட்டுமுள்ள பாசான் முழுவதையும் பிடித்தோம். 11. மீந்திருந்த இராட்சதரில் பாசானின் ராஜாவாகிய ஓக் என்பவன்மாத்திரம் தப்பியிருந்தான்; இரும்பினாற் செய்த அவனுடைய கட்டில் மனிதருடைய கை முழத்தின்படியே, ஒன்பது முழ நீளமும் நாலு முழ அகலமுமாயிருந்தது; அது அம்மோன் புத்திரருடைய ரப்பாபட்டணத்தில் இருக்கிறதல்லவா? 12. அக்காலத்திலே சுதந்தரமாகப் பெற்றுக்கொண்ட தேசத்தை அர்னோன் நதியருகேயுள்ள ஆரோவேர் தொடங்கி, கீலேயாத் மலைநாட்டில் பாதியையும், அதிலிருக்கிற பட்டணங்களையும், ரூபனியருக்கும் காத்தியருக்கும் கொடுத்தேன். 13. கீலேயாத்தின் மற்றப் பங்கையும், ஓகின் ராஜ்யமாயிருந்த பாசான் முழுவதையும், மனாசேயின் பாதிக் கோத்திரத்துக்குக் கொடுத்ததும் அன்றி, இராட்சத தேசமென்னப்பட்ட பாசானுக்குள்ளான அர்கோப் சீமை யாவையும் கொடுத்தேன். 14. மனாசேயின் குமாரனாகிய யாவீர் அர்கோப் சீமை முழுவதையும் கேசூரியர் மாகாத்தியர் என்பவர்களுடைய எல்லைமட்டும் கட்டிக்கொண்டு, அதற்குத் தன் நாமத்தின்படியே பாசான் அவோத்யாயீர் என்று பேரிட்டான், அது இந்நாள்வரைக்கும் வழங்கிவருகிறது. 15. மாகீருக்குக் கீலேயாத்தைக் கொடுத்தேன். 16. மேலும் கீலேயாத் தொடங்கி அர்னோன் நதி ஓடுகிற பள்ளத்தாக்கும், கடையாந்தரமுமான அம்மோன் புத்திரரின் எல்லையாகிய யாபோக்கு ஆறுமட்டும் இருக்கிற தேசத்தையும், 17. கின்னரேத் தொடங்கி அஸ்தோத்பிஸ்காவுக்குத் தாழ்வாய்க் கிழக்கே இருக்கிற உப்புக்கடலான சமனான வெளியின் கடல்மட்டும், யோர்தானின் எல்லைக்குள் அடங்கிய சமனான வெளியையும், ரூபனியருக்கும் காத்தியருக்கும் கொடுத்தேன். 18. அக்காலத்திலே நான் உங்களை நோக்கி: உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு இந்த தேசத்தைச் சுதந்தரமாகக் கொடுத்தார்; யுத்தஞ்செய்யத்தக்கவர்களாகிய நீங்கள் எல்லாரும் இஸ்ரவேல் புத்திரரான உங்கள் சகோதரருக்கு முன்னே ஆயுதபாணிகளாக நடந்து போங்கள். 19. உங்கள் மனைவிகளும் உங்கள் பிள்ளைகளும் உங்கள் ஆடுமாடுகளும்மாத்திரம் நான் உங்களுக்குக் கொடுத்த உங்கள் பட்டணங்களில் இருக்கட்டும்; உங்களுக்குத் திரளான ஆடுமாடுகள் உண்டென்று அறிவேன். 20. ஆனாலும் கர்த்தர் உங்களை இளைப்பாறப்பண்ணினதுபோல, உங்கள் சகோதரரையும் இளைப்பாறப்பண்ணி, யோர்தானுக்கு அப்புறத்தில் உங்கள் தேவனாகிய கர்த்தர் கொடுக்கிற தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுமட்டும் நீங்கள் இருந்து, பின்பு அவரவர் நான் உங்களுக்குக் கொடுத்த உங்கள் சுதந்தரத்துக்குத் திரும்புவீர்களாக என்றேன். 21. அக்காலத்திலே நான் யோசுவாவை நோக்கி: உங்கள் தேவனாகிய கர்த்தர் அந்த இரண்டு ராஜாக்களுக்கும் செய்தவைகளையெல்லாம் உன் கண்கள் கண்டது; நீ போய்ச் சேரும் எல்லா ராஜ்யங்களுக்கும் கர்த்தர் அப்படியே செய்வார். 22. அவர்களுக்குப் பயப்படீர்களாக; உங்கள் தேவனாகிய கர்த்தர் தாமே உங்களுக்காக யுத்தம்பண்ணுவார் என்று சொன்னேன். 23. அக்காலத்திலே நான் கர்த்தரை நோக்கி: 24. கர்த்தராகிய ஆண்டவரே, நீர் உமது அடியேனுக்கு உமது மகத்துவத்தையும் உமது வல்லமையுள்ள கரத்தையும் காண்பிக்கத் தொடங்கினீர்; வானத்திலும் பூமியிலும் உம்முடைய கிரியைகளுக்கும் உம்முடைய வல்லமைகளுக்கும் ஒப்பாகச் செய்யத்தக்க தேவன் யார்? 25. நான் கடந்துபோய் யோர்தானுக்கு அப்புறத்திலுள்ள அந்த நல்ல தேசத்தையும், அந்த நல்ல மலையையும், லீபனோனையும் பார்க்கும்படி உத்தரவு கொடுத்தருளும் என்று வேண்டிக்கொண்டேன். 26. கர்த்தரோ உங்கள் நிமித்தம் என்மேல் கோபங்கொண்டு, எனக்குச் செவிகொடாமல், என்னை நோக்கி: போதும், இனி இந்தக் காரியத்தைக்குறித்து என்னோடே பேசவேண்டாம். 27. நீ பிஸ்காவின் கொடுமுடியில் ஏறி, உன் கண்களை மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலும் கிழக்கிலும் ஏறெடுத்து, உன் கண்களினாலே அதைப் பார்; இந்த யோர்தானை நீ கடந்துபோவதில்லை. 28. நீ யோசுவாவுக்குக் கட்டளை கொடுத்து, அவனைத் திடப்படுத்திப் பலப்படுத்து; அவன் இந்த ஜனங்களுக்கு முன்பாகக் கடந்துபோய், அவனே நீ காணும் தேசத்தை அவர்களுக்குப் பங்கிட்டுக்கொடுப்பான் என்றார். 29. பின்பு பெத்பெயோருக்கு எதிரான பள்ளத்தாக்கில் தங்கியிருந்தோம்.
Chapter 4
1. இஸ்ரவேலரே, நீங்கள் பிழைத்திருக்கும்படிக்கும், உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கிற தேசத்தில் நீங்கள் பிரவேசித்து அதைச் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கும், நீங்கள் கைக்கொள்வதற்கு நான் உங்களுக்குப் போதிக்கிற கட்டளைகளையும் நியாயங்களையும் கேளுங்கள். 2. நான் உங்களுக்குக் கற்பிக்கும் உங்கள் தேவனாகிய கர்த்தரின் கட்டளைகளை நீங்கள் கைக்கொள்ளும்படி, நான் உங்களுக்குக் கற்பிக்கிற வசனத்தோடே நீங்கள் ஒன்றும் கூட்டவும் வேண்டாம், அதில் ஒன்றும் குறைக்கவும் வேண்டாம். 3. பாகால்பேயோரின் நிமித்தம் கர்த்தர் செய்ததை உங்கள் கண்கள் கண்டிருக்கிறது; பாகால்பேயோரைப் பின்பற்றின மனிதரையெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன் நடுவில் இராதபடிக்கு அழித்துப்போட்டார். 4. ஆனாலும் உங்கள் தேவனாகிய கர்த்தரைப் பற்றிக்கொண்ட நீங்களெல்லாரும் இந்நாள்வரைக்கும் உயிரோடிருக்கிறீர்கள். 5. நீங்கள் சுதந்தரித்துக்கொள்ளும்படி பிரவேசிக்கும் தேசத்தில் நீங்கள் கைக்கொள்ளும்பொருட்டு, என் தேவனாகிய கர்த்தர் எனக்குக் கற்பித்தபடியே, நான் உங்களுக்குக் கட்டளைகளையும் நியாயங்களையும் போதித்தேன். 6. ஆகையால் அவைகளைக் கைக்கொண்டு நடவுங்கள்; ஜனங்களின் கண்களுக்குமுன்பாகவும் இதுவே உங்களுக்கு ஞானமும் விவேகமுமாய் இருக்கும்; அவர்கள் இந்தக் கட்டளைகளையெல்லாம் கேட்டு, இந்தப் பெரிய ஜாதியே ஞானமும் விவேகமுமுள்ள ஜனங்கள் என்பார்கள். 7. நம்முடைய தேவனாகிய கர்த்தரை நாம் தொழுதுகொள்ளுகிறபோதெல்லாம், அவர் நமக்குச் சமீபமாயிருக்கிறதுபோல, தேவனை இவ்வளவு சமீபமாய்ப் பெற்றிருக்கிற வேறே பெரிய ஜாதி எது? 8. இந்நாளில் நான் உங்களுக்கு விதிக்கிற இந்த நியாயப்பிரமாணம் முழுமைக்கும் ஒத்த இவ்வளவு நீதியுள்ள கட்டளைகளையும் நியாயங்களையும் பெற்றிருக்கிற வேறே பெரிய ஜாதியும் எது? 9. ஓரேபிலே உன் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நீ நிற்கும்போது, கர்த்தர் என்னை நோக்கி: ஜனங்களை என்னிடத்தில் கூடிவரச்செய்து, என் வார்த்தைகளை அவர்கள் கேட்கும்படி பண்ணுவேன்; அவர்கள் பூமியில் உயிரோடிருக்கும் நாளெல்லாம் எனக்குப் பயந்திருக்கும்படி அவைகளைக் கற்றுக்கொண்டு, தங்கள் பிள்ளைகளுக்கும் போதிக்கக்கடவர்கள் என்று சொல்லிய நாளில், 10. உன் கண்கள் கண்ட காரியங்களை நீ மறவாதபடிக்கும், உன் ஜீவனுள்ள நாளெல்லாம் அவைகள் உன் இருதயத்தை விட்டு நீங்காதபடிக்கும் நீ எச்சரிக்கையாயிருந்து, உன் ஆத்துமாவைச் சாக்கிரதையாய்க் காத்துக்கொள்; அவைகளை உன் பிள்ளைகளுக்கும் உன் பிள்ளைகளின் பிள்ளைகளுக்கும் அறிவிக்கக்கடவாய். 11. நீங்கள் சேர்ந்துவந்து, மலையின் அடிவாரத்தில் நின்றீர்கள்; அந்த மலையில் வானத்தை அளாவிய அக்கினி எரிய, இருளும் மேகமும் அந்தகாரமும் சூழ்ந்தது. 12. அந்த அக்கினியின் நடுவிலிருந்து கர்த்தர் உங்களோடே பேசினார்; வார்த்தைகளின் சத்தத்தை நீங்கள் கேட்டீர்கள்; அந்தச் சத்தத்தை நீங்கள் கேட்டதேயன்றி, ஒரு ரூபத்தையும் காணவில்லை. 13. நீங்கள் கைக்கொள்ளவேண்டும் என்று அவர் உங்களுக்குக் கட்டளையிட்ட பத்துக் கற்பனைகளாகிய தம்முடைய உடன்படிக்கையை அவர் உங்களுக்கு அறிவித்து, அவைகளை இரண்டு கற்பலகைகளில் எழுதினார். 14. நீங்கள் சுதந்தரித்துக்கொள்ளப்போகிற தேசத்தில் நீங்கள் கைக்கொள்ளவேண்டிய கட்டளைகளையும் நியாயங்களையும் உங்களுக்குப் போதிக்கவேண்டுமென்று அக்காலத்திலே கர்த்தர் எனக்குக் கட்டளையிட்டார். 15. கர்த்தர் ஓரேபிலே அக்கினியின் நடுவிலிருந்து உங்களோடே பேசின நாளில், நீங்கள் ஒரு ரூபத்தையும் காணவில்லை. 16. ஆகையால் நீங்கள் உங்களைக் கெடுத்துக்கொண்டு, ஆண் உருவும், பெண் உருவும், 17. பூமியிலிருக்கிற யாதொரு மிருகத்தின் உருவும், ஆகாயத்தில் பறக்கிற செட்டையுள்ள யாதொரு பட்சியின் உருவும், 18. பூமியிலுள்ள யாதொரு ஊரும் பிராணியின் உருவும், பூமியின்கீழ்த் தண்ணீரிலுள்ள யாதொரு மச்சத்தின் உருவுமாயிருக்கிற இவைகளில் யாதொரு உருவுக்கு ஒப்பான விக்கிரகத்தை உங்களுக்கு உண்டாக்காதபடிக்கும், 19. உங்கள் கண்களை வானத்திற்கு ஏறெடுத்து, உங்கள் தேவனாகிய கர்த்தர் வானத்தின் கீழெங்கும் இருக்கிற எல்லா ஜனங்களுக்கும் ஏற்படுத்தின வானத்தின் சர்வ சேனைகளாகிய சந்திர சூரிய நட்சத்திரங்களை நோக்கி, அவைகளைத் தொழுது சேவிக்க இணங்காதபடிக்கும், உங்கள் ஆத்துமாக்களைக்குறித்து மிகவும் எச்சரிக்கையாயிருங்கள். 20. இந்நாளில் நீங்கள் இருக்கிறதுபோல, தமக்குச் சுதந்தரமான ஜனமாயிருக்கும்படி, கர்த்தர் உங்களைச் சேர்த்துக்கொண்டு, உங்களை எகிப்து என்னும் இருப்புக்காளவாயிலிருந்து புறப்படப்பண்ணினார். 21. கர்த்தர் உங்கள் நிமித்தம் என்மேல் கோபங்கொண்டு, நான் யோர்தானைக் கடந்துபோவதில்லை என்றும், உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கிற அந்த நல்ல தேசத்தில் நான் பிரவேசிப்பதில்லை என்றும் ஆணையிட்டார். 22. அதினால் இந்த தேசத்தில் நான் மரணமடையவேண்டும்; நான் யோர்தானைக் கடந்துபோவதில்லை; நீங்களோ கடந்துபோய், அந்த நல்ல தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்வீர்கள். 23. நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களோடே பண்ணின உடன்படிக்கையை மறந்து, உங்கள் தேவனாகிய கர்த்தர் வேண்டாம் என்று விலக்கின எவ்வித சாயலான விக்கிரகத்தையும் உங்களுக்கு உண்டாக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள். 24. உன் தேவனாகிய கர்த்தர் பட்சிக்கிற அக்கினி, அவர் எரிச்சலுள்ள தேவன். 25. நீங்கள் பிள்ளைகளும் பிள்ளைகளின் பிள்ளைகளும் பெற்று, தேசத்தில் வெகுநாள் இருந்தபின்பு, நீங்கள் உங்களைக் கெடுத்து, யாதொரு விக்கிரகத்தையாவது யாதொரு சாயலான சுரூபத்தையாவது பண்ணி, உன் தேவனாகிய கர்த்தருக்குக் கோபம் உண்டாக்க அவர் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தால், 26. நீங்கள் யோர்தானைக் கடந்து சுதந்தரிக்கப்போகிற தேசத்தில் இராமல், சீக்கிரமாய் முற்றிலும் அழிந்துபோவீர்கள் என்று, இந்நாளில் உங்களுக்கு விரோதமாய் வானத்தையும் பூமியையும் சாட்சி வைக்கிறேன்; நீங்கள் அதிலே நெடுநாள் இராமல் நிர்மூலமாக்கப்படுவீர்கள். 27. கர்த்தர் உங்களைப் புறஜாதிகளுக்குள்ளே சிதற அடிப்பார்; கர்த்தர் உங்களைக் கொண்டுபோய் விடப்போகிற ஜாதிகளிடத்திலே கொஞ்ச ஜனங்களாய் மீந்திருப்பீர்கள். 28. அங்கே காணாமலும் கேளாமலும் சாப்பிடாமலும் முகராமலும் இருக்கிற மரமும் கல்லுமான, மனுஷர் கைவேலையாகிய தேவர்களைச் சேவிப்பீர்கள். 29. அப்பொழுது அங்கேயிருந்து உன் தேவனாகிய கர்த்தரைத் தேடுவாய்; உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் அவரைத் தேடும்போது, அவரைக் கண்டடைவாய். 30. நீ வியாகுலப்பட இவைகளெல்லாம் உன்னைத் தொடர்ந்து பிடிக்கும்போது, கடைசி நாட்களில் உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் திரும்பி அவர் சத்தத்திற்குக் கீழ்ப்படிவாயானால், 31. உன் தேவனாகிய கர்த்தர் இரக்கமுள்ள தேவனாயிருக்கிறபடியால், அவர் உன்னைக் கைவிடவுமாட்டார், உன்னை அழிக்கவுமாட்டார், உன் பிதாக்களுக்குத் தாம் ஆணையிட்டுக் கொடுத்த உடன்படிக்கையை மறக்கவுமாட்டார். 32. தேவன் மனுஷனைப் பூமியிலே சிருஷ்டித்த நாள்முதல், உனக்கு முன் இருந்த பூர்வநாட்களில், வானத்தின் ஒருமுனை தொடங்கி அதின் மறுமுனைமட்டுமுள்ள எவ்விடத்திலாகிலும் இப்படிப்பட்ட பெரிய காரியம் நடந்ததுண்டோ, இப்படிப்பட்ட காரியம் கேள்விப்பட்டதுண்டோ; 33. அக்கினியின் நடுவிலிருந்து பேசுகிற தேவனுடைய சத்தத்தை நீ கேட்டதுபோல, யாதொரு ஜனமாவது கேட்டதும் உயிரோடிருந்ததும் உண்டோ, 34. அல்லது உங்கள் தேவனாகிய கர்த்தர் எகிப்திலே உங்கள் கண்களுக்கு முன்பாக உங்களுக்குச் செய்தபடியெல்லாம் தேவன் அந்நிய ஜாதிகளின் நடுவிலிருந்து ஒரு ஜனத்தைச் சோதனைகளினாலும், அடையாளங்களினாலும், அற்புதங்களினாலும், யுத்தத்தினாலும், வல்லமையுள்ள கரத்தினாலும், ஓங்கிய புயத்தினாலும், மகா பயங்கரமான செயல்களினாலும், தமக்கென்று தெரிந்துகொள்ள வகைபண்ணினதுண்டோ என்று நீ விசாரித்துப்பார். 35. கர்த்தரே தேவன், அவரையல்லாமல் வேறொருவரும் இல்லை என்பதை நீ அறியும்படிக்கு, இது உனக்குக் காட்டப்பட்டது. 36. உன்னை உபதேசிக்கும்படிக்கு, அவர் வானத்திலிருந்து தமது சத்தத்தை உனக்குக் கேட்கப்பண்ணி, பூமியிலே தமது பெரிய அக்கினியை உனக்குக் காண்பித்தார்; அக்கினியின் நடுவிலிருந்து உண்டான அவருடைய வார்த்தைகளைக் கேட்டாய். 37. அவர் உன் பிதாக்களில் அன்புகூர்ந்தபடியால், அவர்களுடைய பின்சந்ததியைத் தெரிந்துகொண்டு, 38. உன்னிலும் பலத்த பெரிய ஜாதிகளை உனக்கு முன்னின்று துரத்தவும், உன்னை அழைத்துக்கொண்டுபோய், இந்நாளில் இருக்கிறதுபோல, அவர்கள் தேசத்தை உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கவும், உன்னைத் தமது முகத்துக்குமுன் தமது மிகுந்த வல்லமையினால் எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார். 39. ஆகையால், உயர வானத்திலும் தாழ பூமியிலும் கர்த்தரே தேவன், அவரைத் தவிர ஒருவரும் இல்லை என்பதை நீ இந்நாளில் அறிந்து, உன் மனதிலே சிந்தித்து, 40. நீயும் உனக்குப் பின்வரும் உன் பிள்ளைகளும் நன்றாயிருக்கும்படிக்கும், உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு என்றைக்கும் கொடுக்கிற தேசத்திலே நீ நீடித்த நாளாயிருக்கும்படிக்கும், நான் இன்று உனக்குக் கற்பிக்கிற அவருடைய கட்டளைகளையும் அவருடைய கற்பனைகளையும் கைக்கொள்ளக்கடவாய் என்றான். 41. முற்பகையின்றிக் கைப்பிசகாய் பிறனைக் கொன்றவன் அடைக்கலப்பட்டணங்களில் ஒரு பட்டணத்தில் தப்பியோடிப்போய்ப் பிழைத்திருக்கும்படியாக, 42. ரூபனியரைச் சேர்ந்த சமபூமியாகிய வனாந்தரத்திலுள்ள பேசேரும், காத்தியரைச் சேர்ந்த கீலேயாத்திலுள்ள ராமோத்தும், மனாசேயரைச் சேர்ந்த பாசானிலுள்ள கோலானுமாகிய, 43. மூன்று பட்டணங்களை மோசே யோர்தானுக்கு இப்புறத்தில் சூரியோதய திசையிலே ஏற்படுத்தினான். 44. இதுவே மோசே இஸ்ரவேல் புத்திரருக்கு விதித்த பிரமாணம். 45. இஸ்ரவேல் புத்திரர் எகிப்திலிருந்து புறப்பட்டபின்பு, யோர்தானுக்கு இப்புறத்தில் எஸ்போனில் குடியிருந்த எமோரியரின் ராஜாவாகிய சீகோனுடைய தேசத்திலுள்ள பெத்பேயோருக்கு எதிரான பள்ளத்தாக்கிலே, அவர்களுக்கு மோசே சொன்ன சாட்சிகளும் கட்டளைகளும் நியாயங்களும் இவைகளே. 46. மோசேயும் இஸ்ரவேல் புத்திரரும் எகிப்திலிருந்து புறப்பட்டபின்பு அந்த ராஜாவை முறிய அடித்து, 47. யோர்தானுக்கு இப்புறத்தில் சூரியோதய திசையில் அர்னோன் ஆற்றங்கரையிலுள்ள ஆரோவேர் தொடங்கி எர்மோன் என்னும் சீயோன் மலைவரைக்குமுள்ள தேசமும், 48. யோர்தானுக்கு இப்புறத்தில் சூரியோதய திசையில் அஸ்தோத் பிஸ்காவுக்கும் தாழ்ந்த சமனான வெளியைச்சேர்ந்த கடல்மட்டுமுள்ள சமனான வெளியனைத்துமாகிய, 49. எமோரியருடைய இரண்டு ராஜாக்களின் தேசங்களான சீகோனுடைய தேசத்தையும், பாசானின் ராஜாவாகிய ஓகின் தேசத்தையும் கட்டிக்கொண்டார்கள்.
Chapter 5
1. மோசே இஸ்ரவேலர் எல்லாரையும் அழைப்பித்து, அவர்களை நோக்கி: இஸ்ரவேலரே, நான் இன்று உங்கள் காதுகள் கேட்கச் சொல்லும் கட்டளைகளையும் நியாயங்களையும் கேளுங்கள்; நீங்கள் அவைகளின்படியே செய்யும்படிக்கு அவைகளைக் கற்றுக் கைக்கொள்ளக்கடவீர்கள். 2. நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஓரேபிலே நம்மோடே உடன்படிக்கைபண்ணினார். 3. அந்த உடன்படிக்கையைக் கர்த்தர் நம்முடைய பிதாக்களுடன் பண்ணாமல், இந்நாளில் இங்கே உயிரோடிருக்கிற நம்மெல்லாரோடும் பண்ணினார். 4. கர்த்தர் மலையிலே அக்கினியின் நடுவிலிருந்து முகமுகமாய் உங்களோடே பேசினார். 5. கர்த்தருடைய வார்த்தையை உங்களுக்கு அறிவிக்கும்படி, அக்காலத்திலே நான் கர்த்தருக்கும் உங்களுக்கும் நடுவாக நின்றேன்; நீங்கள் அக்கினிக்குப் பயந்து மலையில் ஏறாமல் இருந்தீர்கள்; அப்பொழுது அவர் சொன்னது என்னவென்றால்: 6. உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் நானே. 7. என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம். 8. மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சுரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்கவேண்டாம். 9. நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக் குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன். 10. என்னிடத்தில் அன்புகூர்ந்து, என் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறைமட்டும் இரக்கஞ்செய்கிறவராயிருக்கிறேன். 11. உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக; கர்த்தர் தம்முடைய நாமத்தை வீணிலே வழங்குகிறவனைத் தண்டியாமல் விடார். 12. உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிட்டபடியே, ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிப்பாயாக. 13. ஆறுநாளும் நீ வேலைசெய்து, உன் கிரியைகளையெல்லாம் நடப்பிப்பாயாக. 14. ஏழாம் நாளோ உன் தேவனாகிய கர்த்தருடைய ஓய்வுநாள்; அதிலே நீயானாலும், உன் குமாரனானாலும், உன் குமாரத்தியானாலும், உன் வேலைக்காரனானாலும், உன் வேலைக்காரியானாலும், உன் எருதானாலும், உன் கழுதையானாலும், உனக்கு இருக்கிற மற்றெந்த மிருகஜீவனானாலும், உன் வாசல்களில் இருக்கிற அந்நியனானாலும் யாதொரு வேலையும் செய்யவேண்டாம்; நீ இளைப்பாறுவதுபோல உன் வேலைக்காரனும் உன் வேலைக்காரியும் இளைப்பாறவேண்டும்; 15. நீ எகிப்துதேசத்தில் அடிமையாயிருந்தாய் என்றும், உன் தேவனாகிய கர்த்தர் உன்னை அவ்விடத்திலிருந்து வல்லமையுள்ள கரத்தினாலும் ஓங்கிய புயத்தினாலும் புறப்படப்பண்ணினார் என்றும் நினைப்பாயாக; ஆகையால் ஓய்வுநாளை ஆசரிக்க உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிட்டார். 16. உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கும், நீ நன்றாயிருப்பதற்கும், உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிட்டபடியே, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக. 17. கொலை செய்யாதிருப்பாயாக. 18. விபசாரம் செய்யாதிருப்பாயாக. 19. களவு செய்யாதிருப்பாயாக. 20. பிறனுக்கு விரோதமாகப் பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக. 21. பிறனுடைய மனைவியை இச்சியாதிருப்பாயாக; பிறனுடைய வீட்டையும், அவனுடைய நிலத்தையும், அவனுடைய வேலைக்காரனையும், அவனுடைய வேலைக்காரியையும், அவனுடைய எருதையும், அவனுடைய கழுதையையும், பின்னும் பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக என்றார். 22. இந்த வார்த்தைகளைக் கர்த்தர் மலையிலே அக்கினியிலும் மேகத்திலும் காரிருளிலும் இருந்து உங்கள் சபையார் எல்லாரோடும் மகா சத்தத்துடனே சொன்னார்; அவைகளோடு ஒன்றும் கூட்டாமல், அவைகளை இரண்டு கற்பலகைகளில் எழுதி, என்னிடத்தில் கொடுத்தார். 23. மலை அக்கினியாய் எரிகையில் இருளின் நடுவிலிருந்து உண்டான சத்தத்தை நீங்கள் கேட்டபோது, கோத்திரத் தலைவரும் மூப்பருமாகிய நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வந்து: 24. இதோ, நம்முடைய தேவனாகிய கர்த்தர் நமக்குத் தம்முடைய மகிமையையும் தம்முடைய மகத்துவத்தையும் காண்பித்தார்; அக்கினியின் நடுவிலிருந்து உண்டான அவருடைய சத்தத்தையும் கேட்டோம்; தேவன் மனுஷனோடே பேசியும், அவன் உயிரோடிருக்கிறதை இந்நாளிலே கண்டோம். 25. இப்பொழுது நாங்கள் சாவானேன்? இந்தப் பெரிய அக்கினி எங்களைப் பட்சிக்குமே; நாங்கள் இன்னும் நம்முடைய தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கேட்போமாகில் சாவோம். 26. நாங்கள் கேட்டதுபோல, அக்கினியின் நடுவிலிருந்து பேசுகிற ஜீவனுள்ள தேவனுடைய சத்தத்தை மாம்சமானவர்களில் யாராவது கேட்டு உயிரோடிருந்தது உண்டோ? 27. நீரே சமீபித்துப்போய், நம்முடைய தேவனாகிய கர்த்தர் சொல்வதையெல்லாம் கேட்டு, நம்முடைய தேவனாகிய கர்த்தர் சொல்வதையெல்லாம் நீரே எங்களுக்குச் சொல்லவேண்டும்; நாங்கள் கேட்டு, அதின்படியே செய்வோம் என்றீர்கள். 28. நீங்கள் என்னோடே பேசுகையில், கர்த்தர் உங்கள் வார்த்தைகளைக் கேட்டு, கர்த்தர் என்னை நோக்கி: இந்த ஜனங்கள் உன்னோடே சொன்ன வார்த்தைகளைக் கேட்டேன்; அவர்கள் சொன்னது எல்லாம் நன்றாய்ச் சொன்னார்கள். 29. அவர்களும் அவர்கள் பிள்ளைகளும் என்றென்றைக்கும் நன்றாயிருக்கும்படி, அவர்கள் எந்நாளும் எனக்குப் பயந்து, என் கற்பனைகளையெல்லாம் கைக்கொள்வதற்கேற்ற இருதயம் அவர்களுக்கு இருந்தால் நலமாயிருக்கும். 30. நீ போய்: உங்கள் கூடாரங்களுக்குத் திரும்பிப்போங்கள் என்று அவர்களுக்குச் சொல். 31. நீயோ இங்கே என்னிடத்தில் நில்; நான் அவர்களுக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும் தேசத்தில் அவர்கள் செய்யும்படி நீ அவர்களுக்குப் போதிக்கவேண்டிய சகல கற்பனைகளையும் கட்டளைகளையும் நியாயங்களையும் உனக்குச் சொல்லுவேன் என்றார். 32. உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கற்பித்தபடியே செய்யச் சாவதானமாயிருங்கள்; வலதுபுறம் இடதுபுறம் சாயாதிருப்பீர்களாக. 33. நீங்கள் சுதந்தரிக்கும் தேசத்திலே பிழைத்துச் சுகித்து நீடித்திருக்கும்படி, உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு விதித்த வழிகளெல்லாவற்றிலும் நடக்கக்கடவீர்கள்.
Chapter 6
1. நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து, உயிரோடிருக்கும் நாளெல்லாம், நீயும் உன் குமாரனும் உன் குமாரத்தியும், நான் உனக்கு விதிக்கிற அவருடைய எல்லாக் கற்பனைகளையும் கட்டளைகளையும் கைக்கொள்ளுகிறதினாலே உன் வாழ்நாட்கள் நீடித்திருக்கும்படி, 2. நீங்கள் சுதந்தரிக்கப்போகிற தேசத்திலே கைக்கொள்வதற்காக, உங்களுக்குப் போதிக்கவேண்டும் என்று உங்கள் தேவனாகிய கர்த்தர் கற்பித்த கற்பனைகளும் கட்டளைகளும் நியாயங்களும் இவைகளே. 3. இஸ்ரவேலே, நீ நன்றாயிருப்பதற்கும், உன் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சொன்னபடி, பாலும் தேனும் ஓடுகிற தேசத்தில் நீ மிகவும் விருத்தியடைவதற்கும், அவைகளுக்குச் செவிகொடுத்து, அவைகளின்படி செய்யச் சாவதானமாயிரு. 4. இஸ்ரவேலே, கேள்: நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர். 5. நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக. 6. இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிற இந்த வார்த்தைகள் உன் இருதயத்தில் இருக்கக்கடவது. 7. நீ அவைகளை உன் பிள்ளைகளுக்குக் கருத்தாய்ப் போதித்து, நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக்குறித்துப் பேசி, 8. அவைகளை உன் கையின்மேல் அடையாளமாகக் கட்டிக்கொள்வாயாக; அவைகள் உன் கண்களுக்கு நடுவே ஞாபகக்குறியாய் இருக்கக்கடவது. 9. அவைகளை உன் வீட்டு நிலைகளிலும், உன் வாசல்களிலும் எழுதுவாயாக. 10. உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுப்பேன் என்று ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களாகிய உன் பிதாக்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்த தேசத்தில் உன்னைப் பிரவேசிக்கப்பண்ணும்போதும், நீ கட்டாத வசதியான பெரிய பட்டணங்களையும், 11. நீ நிரப்பாத சகல நல்ல வஸ்துக்களாலும் நிரம்பிய வீடுகளையும், நீ வெட்டாமல் வெட்டப்பட்டிருக்கிற துரவுகளையும், நீ நடாத திராட்சத்தோட்டங்களையும் ஒலிவத்தோப்புகளையும், அவர் உனக்குக் கொடுப்பதினால், நீ சாப்பிட்டுத் திர்ப்தியாகும்போதும், 12. நீ அடிமைப்பட்டிருந்த வீடாகிய எகிப்துதேசத்திலிருந்து உன்னைப் புறப்படப்பண்ணின கர்த்தரை மறவாதபடிக்கு எச்சரிக்கையாயிரு. 13. உன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து, அவருக்கே ஆராதனைசெய்து, அவருடைய நாமத்தைக்கொண்டே ஆணையிடுவாயாக. 14. உன் தேவனாகிய கர்த்தருடைய கோபம் உன்மேல் மூண்டு, உன்னைப் பூமியில் வைக்காமல் அழித்துப்போடாதபடிக்கு, உங்களைச் சுற்றிலும் இருக்கிற ஜனங்களின் தேவர்களாகிய அந்நிய தேவர்களைப் பின்பற்றாதிருப்பீர்களாக. 15. உன் நடுவிலிருக்கிற உன் தேவனாகிய கர்த்தர் எரிச்சலுள்ள தேவனாயிருக்கிறாரே. 16. நீங்கள் மாசாவிலே செய்ததுபோல, உங்கள் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பீர்களாக. 17. உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கற்பித்த அவருடைய கற்பனைகளையும் அவருடைய சாட்சிகளையும் அவருடைய கட்டளைகளையும் கருத்தாய்க் கைக்கொள்வீர்களாக. 18. நீ நன்றாயிருக்கிறதற்கும், கர்த்தர் உன் பிதாக்களுக்கு ஆணையிட்டுக்கொடுத்த நல்ல தேசத்தில் நீ பிரவேசித்து, அதைச் சுதந்தரிப்பதற்கும், 19. கர்த்தர் தாம் சொன்னபடி, உன் சத்துருக்களையெல்லாம் உன் முகத்திற்கு முன்பாகத் துரத்திவிடுவதற்கும், நீ கர்த்தருடைய பார்வைக்குச் செம்மையும் நன்மையுமாய் இருக்கிறதைச் செய்வாயாக. 20. நாளைக்கு உன் புத்திரன்: நம்முடைய தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கட்டளையிட்ட இந்தச் சாட்சிகளும் கட்டளைகளும் நியாயங்களும் என்ன என்று உன்னிடத்தில் கேட்டால்; 21. நீ உன் புத்திரனை நோக்கி: நாங்கள் எகிப்திலே பார்வோனுக்கு அடிமைகளாயிருந்தோம்; கர்த்தர் பலத்த கையினாலே எங்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார். 22. கர்த்தர் எங்கள் கண்களுக்கு முன்பாக, எகிப்தின்மேலும் பார்வோன்மேலும் அவன் குடும்பம் அனைத்தின்மேலும் கொடிதான பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் விளங்கப்பண்ணி, 23. தாம் நம்முடைய பிதாக்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்த தேசத்துக்கு எங்களை அழைத்துக்கொண்டுபோய், அதை நமக்குக் கொடுக்கும்படி எங்களை அவ்விடத்திலிருந்து புறப்படப்பண்ணினார். 24. இந்நாளில் இருக்கிறதுபோல, நம்மை அவர் உயிரோடே காப்பதற்கும், எந்நாளும் நன்றாயிருக்கிறதற்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து இந்த எல்லாக் கட்டளைகளின்படியேயும் செய்யக் கர்த்தர் நமக்குக் கட்டளையிட்டார். 25. நம்முடைய தேவனாகிய கர்த்தர் நமக்குக் கட்டளையிட்டபடியே நாம் அவர் சமுகத்தில் இந்த எல்லாக் கட்டளைகளின்படியும் செய்யச் சாவதானமாயிருந்தால், நமக்கு நீதியாயிருக்கும் என்று சொல்வாயாக.
Chapter 7
1. நீ சுதந்தரிக்கப்போகிற தேசத்தில் உன் தேவனாகிய கர்த்தர் உன்னைப் பிரவேசிக்கப்பண்ணி, உன்னைப்பார்க்கிலும் ஜனம் பெருத்த ஜாதிகளாகிய ஏத்தியர், கிர்காசியர், எமோரியர், கானானியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் என்னும் ஏழு பலத்த ஜாதிகளை உனக்கு முன்பாகத் துரத்தி, 2. உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உன்னிடத்தில் ஒப்புக்கொடுக்கும்போது, அவர்களை முறிய அடித்து, அவர்களைச் சங்காரம் பண்ணக்கடவாய்; அவர்களோடே உடன்படிக்கைபண்ணவும் அவர்களுக்கு இரங்கவும் வேண்டாம். 3. அவர்களோடே சம்பந்தம் கலவாயாக; உன் குமாரத்திகளை அவர்கள் குமாரருக்குக் கொடாமலும், அவர்கள் குமாரத்திகளை உன் குமாரருக்குக் கொள்ளாமலும் இருப்பாயாக. 4. என்னைப் பின்பற்றாமல், அந்நிய தேவர்களைச் சேவிக்கும்படி அவர்கள் உன் குமாரரை விலகப்பண்ணுவார்கள்; அப்பொழுது கர்த்தருடைய கோபம் உங்கள்மேல் மூண்டு, உங்களைச் சீக்கிரத்தில் அழிக்கும். 5. நீங்கள் அவர்களுக்குச் செய்யவேண்டியது என்னவென்றால்: அவர்கள் பலிபீடங்களை இடித்து, அவர்கள் சிலைகளைத் தகர்த்து, அவர்கள் தோப்புகளை வெட்டி, அவர்கள் விக்கிரகங்களை அக்கினியிலே எரித்துப்போடவேண்டும். 6. நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்த ஜனம், பூச்சக்கரத்திலுள்ள எல்லா ஜனங்களிலும் உன் தேவனாகிய கர்த்தர் உன்னைத் தமக்குச் சொந்தமாயிருக்கும்படி தெரிந்துகொண்டார். 7. சகல ஜனங்களிலும் நீங்கள் திரட்சியான ஜனமென்று கர்த்தர் உங்கள்பேரில் அன்புவைத்து உங்களைத் தெரிந்துகொள்ளவில்லை; நீங்கள் சகல ஜனங்களிலும் கொஞ்சமாயிருந்தீர்கள். 8. கர்த்தர் உங்களில் அன்புகூர்ந்ததினாலும், உங்கள் பிதாக்களுக்கு இட்ட ஆணையைக் காக்கவேண்டும் என்பதினாலும்; கர்த்தர் பலத்த கையினால் உங்களைப் புறப்படப்பண்ணி, அடிமைத்தன வீடாகிய எகிப்தினின்றும் அதின் ராஜாவான பார்வோனின் கையினின்றும் உங்களை மீட்டுக்கொண்டார். 9. ஆகையால் உன் தேவனாகிய கர்த்தரே தேவன் என்றும், தம்மில் அன்புகூர்ந்து, தமது கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கு அவர் ஆயிரம் தலைமுறைமட்டும் உடன்படிக்கையையும் தயவையும் காக்கிற உண்மையுள்ள தேவன் என்றும், 10. தம்மைப் பகைக்கிறவர்களுக்குப் பிரத்தியட்சமாய்ப் பதிலளித்து அவர்களை அழிப்பார் என்றும், தம்மைப் பகைக்கிறவனுக்கு அவர் தாமதியாமல் பிரத்தியட்சமாய்ப் பதிலளிப்பார் என்றும் நீ அறியக்கடவாய். 11. ஆகையால் நீ செய்யும்படி நான் இன்று உனக்குக் கட்டளையிடுகிற கற்பனைகளையும் கட்டளைகளையும் நியாயங்களையும் கைக்கொள்வாயாக. 12. இந்த நியாயங்களை நீங்கள் கேட்டு, கைக்கொண்டு, அவைகளின்படி செய்வீர்களானால், அப்பொழுது உன் தேவனாகிய கர்த்தர் உன் பிதாக்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்த உடன்படிக்கையையும் கிருபையையும் உனக்காகக் காத்து, 13. உன்மேல் அன்புவைத்து, உன்னை ஆசீர்வதித்து, உனக்குக் கொடுப்பேன் என்று உன் பிதாக்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்த தேசத்தில் உன்னைப் பெருகப்பண்ணி, உன் கர்ப்பக்கனியையும், உன் நிலத்தின் கனிகளாகிய உன் தானியத்தையும், உன் திராட்சரசத்தையும், உன் எண்ணெயையும், உன் மாடுகளின் பலனையும், உன் ஆட்டுமந்தைகளையும் ஆசீர்வதிப்பார். 14. சகல ஜனங்களைப்பார்க்கிலும் நீ ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்; உங்களுக்குள்ளும் உங்கள் மிருகஜீவன்களுக்குள்ளும் ஆணிலாகிலும் பெண்ணிலாகிலும் மலடிருப்பதில்லை. 15. கர்த்தர் சகல நோய்களையும் உன்னைவிட்டு விலக்குவார்; உனக்குத் தெரிந்திருக்கிற எகிப்தியரின் கொடிய ரோகங்களில் ஒன்றும் உன்மேல் வரப்பண்ணாமல், உன்னைப் பகைக்கிற யாவர்மேலும் அவைகளை வரப்பண்ணுவார். 16. உன் தேவனாகிய கர்த்தர் உன்னிடத்தில் ஒப்புக்கொடுக்கும் சகல ஜனங்களையும் நிர்மூலமாக்கக்கடவாய்; உன் கண் அவர்களுக்கு இரங்காதிருப்பதாக; அவர்கள் தேவர்களை நீ சேவியாமல் இருப்பாயாக; அது உனக்குக் கண்ணியாயிருக்கும். 17. அந்த ஜாதிகள் என்னிலும் ஜனம் பெருத்தவைகள், நான் அவர்களைத் துரத்திவிடுவது எப்படி என்று உன் இருதயத்தில் சொல்லிக்கொண்டாயானால், 18. உன் தேவனாகிய கர்த்தர் பார்வோனுக்கும் எகிப்தியர் யாவருக்கும் செய்ததையும், 19. உன் கண்கள் கண்ட பெரிய சோதனைகளையும், அடையாளங்களையும் அற்புதங்களையும், உன் தேவனாகிய கர்த்தர் உன்னைப் புறப்படப்பண்ணிக் காண்பித்த பலத்த கையையும் ஓங்கிய புயத்தையும் நன்றாய் நினைத்து, அவர்களுக்குப் பயப்படாதிரு; நீ பார்த்துப் பயப்படுகிற எல்லா ஜனங்களுக்கும் உன் தேவனாகிய கர்த்தர் அப்படியே செய்வார். 20. மீதியாயிருந்து உனக்குத் தப்பி ஒளித்துக்கொள்ளுகிறவர்களும் அழிந்துபோகுமட்டும் உன் தேவனாகிய கர்த்தர் அவர்களுக்குள்ளே குளவிகளை அனுப்புவார். 21. அவர்களைப் பார்த்துப் பயப்படவேண்டாம்; உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குள்ளே இருக்கிறார், அவர் வல்லமையும் பயங்கரமுமான தேவன். 22. அந்த ஜாதிகளை உன் தேவனாகிய கர்த்தர் கொஞ்சம் கொஞ்சமாய் உன்னைவிட்டுத் துரத்திவிடுவார்; நீ அவர்களை ஒருமிக்க நிர்மூலமாக்கவேண்டாம்; நிர்மூலமாக்கினால் காட்டுமிருகங்கள் உன்னிடத்தில் பெருகிப்போகும். 23. உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உன்னிடத்தில் ஒப்புக்கொடுத்து, அவர்கள் அழியுமட்டும் அவர்களை மிகவும் கலங்கடிப்பார். 24. அவர்களுடைய ராஜாக்களை உன் கையில் ஒப்புக்கொடுப்பார்; அவர்கள் பேர் வானத்தின்கீழ் இராதபடிக்கு அவர்களைச் சங்கரிக்கக்கடவாய்; நீ அவர்களைச் சங்கரித்துத் தீருமட்டும் ஒருவரும் உனக்கு எதிர்த்து நிற்கமாட்டார்கள். 25. அவர்கள் தேவர்களின் விக்கிரகங்களை அக்கினியினால் சுட்டெரிக்கக்கடவாய்; நீ அவைகளால் சிக்கிக்கொள்ளாதபடிக்கு, அவைகளில் இருக்கிற வெள்ளியையும் பொன்னையும் இச்சியாமலும், அதை எடுத்துக்கொள்ளாமலும் இருப்பாயாக; அவைகள் உன் தேவனாகிய கர்த்தருக்கு அருவருப்பானவைகள். 26. அவைகளைப்போல நீ சாபத்துக்குள்ளாகாதபடி அருவருப்பானதை உன் வீட்டிலே கொண்டுபோகாயாக; அதைச் சீ என்று வெறுத்து முற்றிலும் அருவருக்கக்கடவாய், அது சாபத்திற்குள்ளானது.
Chapter 8
1. நீங்கள் பிழைத்துப் பெருகி, கர்த்தர் உங்கள் பிதாக்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்த தேசத்திலே பிரவேசித்து, அதைச் சுதந்தரிக்கும்படி நான் இன்று உங்களுக்கு விதிக்கிற எல்லாக் கட்டளைகளின்படியும் செய்யச் சாவதானமாயிருப்பீர்களாக. 2. உன் தேவனாகிய கர்த்தர் உன்னைச் சிறுமைப்படுத்தும்படிக்கும், தம்முடைய கட்டளைகளை நீ கைக்கொள்வாயோ கைக்கொள்ளமாட்டாயோ என்று அவர் உன்னைச் சோதித்து, உன் இருதயத்திலுள்ளதை நீ அறியும்படிக்கும், உன்னை இந்த நாற்பது வருஷமளவும் வனாந்தரத்திலே நடத்திவந்த எல்லா வழியையும் நினைப்பாயாக. 3. அவர் உன்னைச் சிறுமைப்படுத்தி, உன்னைப் பசியினால் வருத்தி, மனுஷன் அப்பத்தினால் மாத்திரம் அல்ல, கர்த்தருடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்பதை உனக்கு உணர்த்தும்படிக்கு, நீயும் உன் பிதாக்களும் அறியாதிருந்த மன்னாவினால் உன்னைப் போஷித்தார். 4. இந்த நாற்பது வருஷமும் உன்மேலிருந்த வஸ்திரம் பழையதாய்ப் போகவும் இல்லை, உன் கால் வீங்கவும் இல்லை. 5. ஒருவன் தன் புத்திரனைச் சிட்சிக்கிறதுபோல உன் தேவனாகிய கர்த்தர் உன்னைச் சிட்சிக்கிறார் என்று நீ உன் இருதயத்தில் அறிந்துகொள்வாயாக. 6. ஆகையால், உன் தேவனாகிய கர்த்தருடைய வழிகளில் நடந்து, அவருக்குப் பயப்படும்படிக்கு, அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளக்கடவாய். 7. உன் தேவனாகிய கர்த்தர் உன்னை நல்ல தேசத்திலே பிரவேசிக்கப்பண்ணுகிறார்; அது பள்ளத்தாக்குகளிலும் மலைகளிலுமிருந்து புறப்படுகிற ஆறுகளும் ஊற்றுகளும் ஏரிகளுமுள்ள தேசம்; 8. அது கோதுமையும் வாற்கோதுமையும் திராட்சச்செடிகளும் அத்திமரங்களும் மாதளஞ்செடிகளுமுள்ள தேசம்; அது ஒலிவமரங்களும், எண்ணெயும் தேனுமுள்ள தேசம்; 9. அது தாழ்ச்சியில்லாமல் அப்பம் புசிக்கத்தக்கதும் ஒன்றும் உனக்குக் குறைவுபடாததுமான தேசம்; அது கல்லுகள் இரும்பாயிருக்கிறதும், செம்பு வெட்டி எடுக்கத்தக்க மலைகளுள்ளதுமான தேசம். 10. ஆகையால், நீ புசித்துத் திர்ப்தியடைந்திருக்கையில், உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுத்த அந்த நல்ல தேசத்துக்காக அவரை ஸ்தோத்திரிக்கக்கடவாய். 11. உன் தேவனாகிய கர்த்தரை மறவாதபடிக்கும், நான் இன்று உனக்கு விதிக்கிற அவருடைய கற்பனைகளையும் நியாயங்களையும் கட்டளைகளையும் கைக்கொள்ளாமற் போகாதபடிக்கும் எச்சரிக்கையாயிரு. 12. நீ புசித்துத் திர்ப்தியாகி, நல்ல வீடுகளைக் கட்டி, அவைகளில் குடியிருக்கும்போதும், 13. உன் ஆடுமாடுகள் திரட்சியாகி, உனக்கு வெள்ளியும் பொன்னும் பெருகி, உனக்கு உண்டானவையெல்லாம் வர்த்திக்கும்போதும், 14. உன் இருதயம் மேட்டிமையடையாமலும், உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினவரும், 15. உன்னுடைய பின்நாட்களில் உனக்கு நன்மை செய்யும்பொருட்டு, உன்னைச் சிறுமைப்படுத்தி, உன்னைச் சோதித்து, கொள்ளிவாய்ச் சர்ப்பங்களும் தேள்களும், தண்ணீரில்லாத வறட்சியுமுள்ள பயங்கரமான பெரிய வனாந்தரவழியாய் உன்னை அழைத்துவந்தவரும், உனக்காகப் பாறையான கன்மலையிலிருந்து தண்ணீர் புறப்படப்பண்ணினவரும், 16. உன் பிதாக்கள் அறியாத மன்னாவினால் வனாந்தரத்திலே உன்னைப் போஷித்துவந்தவருமான உன் தேவனாகிய கர்த்தரை நீ மறவாமலும், 17. என் சாமார்த்தியமும் என் கைப்பெலனும் இந்த ஐசுவரியத்தை எனக்குச் சம்பாதித்தது என்று நீ உன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளாமலும் இருக்க எச்சரிக்கையாயிருந்து, 18. உன் தேவனாகிய கர்த்தரை நினைப்பாயாக; அவரே உன் பிதாக்களுக்கு ஆணையிட்டுக்கொடுத்த தம்முடைய உடன்படிக்கையை உறுதிப்படுத்தும்படி, இந்நாளில் உனக்கு உண்டாயிருக்கிறதுபோல, ஐசுவரியத்தைச் சம்பாதிக்கிறதற்கான பெலனை உனக்குக் கொடுக்கிறவர். 19. உன் தேவனாகிய கர்த்தரை நீ மறந்து, வேறே தேவர்களைப் பின்பற்றி அவர்களைச் சேவித்து, அவர்களைப் பணிந்துகொள்வாயானால், நிச்சயமாய் அழிந்துபோவீர்கள் என்று இன்று உங்களுக்குச் சாட்சியாய் அறிவிக்கிறேன். 20. உன் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்திற்கு நீங்கள் கீழ்ப்படியாமற்போவதினால், கர்த்தர் உங்களுக்கு முன்பாக அழித்த ஜாதிகளைப்போல நீங்களும் அழிவீர்கள்.
Chapter 9
1. இஸ்ரவேலே, கேள்: நீ இப்பொழுது யோர்தானைக் கடந்து, உன்னிலும் ஜனம் பெருத்ததும் பலத்ததுமான ஜாதிகளைத் துரத்தி, வானத்தையளாவிய மதில் சூழ்ந்த பெரிய பட்டணங்களைப் பிடித்து, 2. ஏனாக்கின் புத்திரராகிய பெரியவர்களும் நெடியவர்களுமான ஜனங்களைத் துரத்திவிடப்போகிறாய்; இவர்கள் செய்தியை நீ அறிந்து, ஏனாக் புத்திரருக்கு முன்பாக நிற்பவன் யார் என்று சொல்லப்படுவதை நீ கேட்டிருக்கிறாய். 3. உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு முன்பாகக் கடந்துபோகிறவர் என்பதை இன்று அறியக்கடவாய்; அவர் பட்சிக்கிற அக்கினியைப்போல அவர்களை அழிப்பார்; அவர்களை உனக்கு முன்பாக விழப்பண்ணுவார்; இவ்விதமாய்க் கர்த்தர் உனக்குச் சொன்னபடியே, நீ அவர்களைச் சீக்கிரமாய்த் துரத்தி, அவர்களை அழிப்பாய். 4. உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உனக்கு முன்பாகத் துரத்துகையில், நீ உன் இருதயத்திலே: என் நீதியினிமித்தம் இந்த தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி கர்த்தர் என்னை அழைத்துவந்தார் என்று சொல்லாயாக; அந்த ஜாதிகளுடைய ஆகாமியத்தினிமித்தமே கர்த்தர் அவர்களை உனக்கு முன்பாகத் துரத்திவிடுகிறார். 5. உன் நீதியினிமித்தமும் உன் இருதயத்தினுடைய உத்தமத்தினிமித்தமும் நீ அவர்கள் தேசத்தைச் சுதந்தரிக்கும்படி பிரவேசிப்பதில்லை; அந்த ஜாதிகளுடைய ஆகாமியத்தினிமித்தமாகவும், ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்னும் உன் பிதாக்களுக்குக் கர்த்தர் ஆணையிட்டுச் சொன்ன வார்த்தையை நிறைவேற்றும்படியாகவும், உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உனக்கு முன்பாகத் துரத்திவிடுகிறார். 6. ஆகையால், உன் நீதியினிமித்தம் உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு அந்த நல்ல தேசத்தைச் சுதந்தரிக்கக் கொடார் என்பதை அறியக்கடவாய்; நீ வணங்காக் கழுத்துள்ள ஜனம். 7. நீ வனாந்தரத்தில் உன் தேவனாகிய கர்த்தருக்குக் கடுங்கோபம் உண்டாக்கினதை நினை, அதை மறவாயாக; நீங்கள் எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட நாள்முதல், இவ்விடத்தில் வந்து சேருமட்டும், கர்த்தருக்கு விரோதமாய்க் கலகம்பண்ணினீர்கள். 8. ஓரேபிலும் நீங்கள் கர்த்தருக்குக் கடுங்கோபம் உண்டாக்கினதினால், கர்த்தர் உங்களை அழிக்கத்தக்கதான உக்கிரங்கொண்டார். 9. கர்த்தர் உங்களோடே பண்ணின உடன்படிக்கைப் பலகைகளாகிய கற்பலகைகளைப் பெற்றுக்கொள்ளும்படி நான் மலையில் ஏறினபோது, நாற்பதுநாள் இரவும்பகலும் மலையில் தங்கி அப்பம் புசியாமலும் தண்ணீர் குடியாமலும் இருந்தேன். 10. அப்பொழுது தேவனுடைய விரலினால் எழுதியிருந்த இரண்டு கற்பலகைகளைக் கர்த்தர் என்னிடத்தில் ஒப்புக்கொடுத்தார்; சபை கூடியிருந்த நாளில் கர்த்தர் மலையிலே அக்கினியின் நடுவிலிருந்து உங்களுடனே பேசின வார்த்தைகளின்படியே அவைகளில் எழுதியிருந்தது. 11. இரவும் பகலும் நாற்பதுநாள் முடிந்து, கர்த்தர் எனக்கு அந்த உடன்படிக்கையின் இரண்டு கற்பலகைகளைக் கொடுக்கிறபோது, 12. கர்த்தர் என்னை நோக்கி: நீ எழுந்து, சீக்கிரமாய் இவ்விடம் விட்டு, இறங்கிப்போ; நீ எகிப்திலிருந்து அழைத்துக்கொண்டுவந்த உன் ஜனங்கள் தங்களைக் கெடுத்துக்கொண்டார்கள்; நான் அவர்களுக்கு விதித்த வழியை அவர்கள் சீக்கிரமாக விட்டு விலகி, வார்ப்பிக்கப்பட்ட விக்கிரகத்தைத் தங்களுக்காக உண்டாக்கினார்கள் என்றார். 13. பின்னும் கர்த்தர் என்னை நோக்கி: இந்த ஜனங்களைப் பார்த்தேன்; அது வணங்காக் கழுத்துள்ள ஜனம். 14. ஆகையால், நான் அவர்களை அழித்து, அவர்கள் பேரை வானத்தின்கீழ் அற்றுப்போகப்பண்ணும்படி, நீ என்னை விட்டுவிடு; அவர்களைப்பார்க்கிலும் உன்னைப் பலத்ததும் ஜனம் பெருத்ததுமான ஜாதியாக்குவேன் என்றார். 15. அப்பொழுது நான் திரும்பி மலையிலிருந்து இறங்கினேன், மலையானது அக்கினி பற்றி எரிந்துகொண்டிருந்தது; உடன்படிக்கையின் இரண்டு பலகைகளும் என் இரண்டு கைகளில் இருந்தது. 16. நான் பார்த்தபோது, நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்து, வார்ப்பிக்கப்பட்ட கன்றுக்குட்டியை உங்களுக்கு உண்டாக்கி, கர்த்தர் உங்களுக்கு விதித்த வழியைச் சீக்கிரமாய் விட்டு விலகினதைக் கண்டேன். 17. அப்பொழுது நான் என் இரண்டு கைகளிலும் இருந்த அந்த இரண்டு பலகைகளையும் ஓங்கி எறிந்து, அவைகளை உங்கள் கண்களுக்கு முன்பாக உடைத்துப்போட்டேன். 18. கர்த்தரைக் கோபப்படுத்துவதற்கு நீங்கள் அவருடைய சமுகத்தில் பொல்லாப்புச் செய்து நடப்பித்த உங்களுடைய சகல பாவங்கள் நிமித்தமும், நான் கர்த்தருக்கு முன்பாக முன்போல இரவும்பகலும் நாற்பதுநாள் விழுந்துகிடந்தேன்; நான் அப்பம் புசிக்கவுமில்லை, தண்ணீர் குடிக்கவுமில்லை. 19. கர்த்தர் உங்களை அழிக்கும்படி உங்கள்மேல் கொண்டிருந்த கோபத்திற்கும் உக்கிரத்திற்கும் பயந்திருந்தேன்; கர்த்தர் அந்த முறையும் என் மன்றாட்டைக் கேட்டார். 20. ஆரோன்மேலும் கர்த்தர் மிகவும் கோபங்கொண்டு, அவனை அழிக்கவேண்டும் என்றிருந்தார்; அப்பொழுது ஆரோனுக்காகவும் விண்ணப்பம்பண்ணினேன். 21. உங்கள் பாவக்கிரியையாகிய அந்தக் கன்றுக்குட்டியை நான் எடுத்து அக்கினியில் எரித்து, அதை நொறுக்கி, தூளாய்ப்போகுமட்டும் அரைத்து, அந்தத் தூளை மலையிலிருந்து ஓடுகிற ஆற்றிலே போட்டுவிட்டேன். 22. தபேராவிலும், மாசாவிலும், கிப்ரோத் அத்தாவாவிலும் கர்த்தருக்குக் கடுங்கோபம் உண்டாக்கினீர்கள். 23. நீங்கள் போய், நான் உங்களுக்குக் கொடுத்த தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள் என்று கர்த்தர் காதேஸ்பர்னேயாவிலிருந்து உங்களை அனுப்புகையிலும், நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரை விசுவாசியாமலும், அவருடைய சத்தத்துக்குச் செவிகொடாமலும், அவருடைய வாக்குக்கு விரோதமாய்க் கலகம்பண்ணினீர்கள். 24. நான் உங்களை அறிந்த நாள்முதற்கொண்டு, நீங்கள் கர்த்தருக்கு விரோதமாகக் கலகம்பண்ணுகிறவர்களாயிருந்தீர்கள். 25. கர்த்தர் உங்களை அழிப்பேன் என்று சொன்னபடியினால், நான் முன்போல் கர்த்தரின் சமுகத்தில் இரவும் பகலும் நாற்பதுநாள் விழுந்துகிடந்தேன்; அப்பொழுது நான் கர்த்தரை நோக்கிப் பண்ணின விண்ணப்பமாவது: 26. கர்த்தராகிய ஆண்டவரே, தேவரீர் உம்முடைய மகத்துவத்தினாலே மீட்டு, பலத்த கையினால் எகிப்திலிருந்து கொண்டுவந்த உமது ஜனத்தையும், உமது சுதந்தரத்தையும் அழிக்காதிருப்பீராக. 27. கர்த்தர் அவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணியிருந்த தேசத்தில் அவர்களைப் பிரவேசிக்கப்பண்ணக்கூடாமற் போனபடியினாலும், அவர்களை வெறுத்தபடியினாலும், அவர்களை வனாந்தரத்தில் கொன்றுபோடும்படிக்கே கொண்டுவந்தார் என்று நாங்கள் விட்டுப் புறப்படும்படி நீர் செய்த தேசத்தின் குடிகள் சொல்லாதபடிக்கு, 28. தேவரீர் இந்த ஜனங்களின் முரட்டாட்டத்தையும், இவர்கள் ஆகாமியத்தையும், இவர்கள் பாவத்தையும் பாராமல், உமது தாசராகிய ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களை நினைத்தருளும். 29. நீர் உமது மகா பலத்தினாலும், ஓங்கிய புயத்தினாலும் புறப்படப்பண்ணின இவர்கள் உமது ஜனமும் உமது சுதந்தரமுமாயிருக்கிறார்களே என்று விண்ணப்பம்பண்ணினேன்.
Chapter 10
1. அக்காலத்திலே கர்த்தர் என்னை நோக்கி: நீ முந்தினவைகளுக்கொத்த இரண்டு கற்பலகைகளை வெட்டிக்கொண்டு, மலையின்மேல் ஏறி, என்னிடத்தில் வா; ஒரு மரப்பெட்டியையும் செய்வாயாக. 2. நீ உடைத்துப்போட்ட முந்தின பலகைகளில் இருந்த வார்த்தைகளை நான் அந்தப் பலகைகளில் எழுதுவேன்; நீ அவைகளைப் பெட்டியிலே வைப்பாயாக என்றார். 3. அப்படியே நான் சீத்திம் மரத்தினால் ஒரு பெட்டியைச் செய்து, முந்தினவைகளுக்கொத்த இரண்டு கற்பலகைகளை வெட்டி, அவைகளை என் கையிலே எடுத்துக்கொண்டு மலையில் ஏறினேன். 4. முன்னே சபைகூடிவந்த நாளில் கர்த்தர் மலையில் அக்கினி நடுவிலிருந்து உங்களுக்கு விளம்பின பத்துக் கற்பனைகளையும் அவர் முன் எழுதியிருந்தபிரகாரம் அந்தப் பலகைகளில் எழுதி, அவைகளை என்னிடத்தில் தந்தார். 5. அப்பொழுது நான் திரும்பி மலையிலிருந்து இறங்கி, அந்தப் பலகைகளை நான் செய்த பெட்டியிலே வைத்தேன்; கர்த்தர் எனக்குக் கட்டளையிட்டபடியே அவைகள் அதிலே வைத்திருக்கிறது. 6. பின்பு இஸ்ரவேல் புத்திரர் பெனெயாக்கானுக்கடுத்த பேரோத்திலேயிருந்து மோசெராவுக்குப் பிரயாணம்பண்ணினார்கள்; அங்கே ஆரோன் மரித்து அடக்கம்பண்ணப்பட்டான்; அவன் ஸ்தானத்திலே அவன் குமாரனாகிய எலெயாசார் ஆசாரியனானான். 7. அங்கேயிருந்து குத்கோதாவுக்கும், குத்கோதாவிலிருந்து ஆறுகளுள்ள நாடாகிய யோத்பாத்துக்கும் பிரயாணம்பண்ணினார்கள். 8. அக்காலத்திலே கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமப்பதற்கும், இந்நாள்வரைக்கும் நடந்துவருகிறதுபோல, கர்த்தருடைய சந்நிதியிலே நின்று அவருக்கு ஆராதனை செய்வதற்கும், அவர் நாமத்தைக்கொண்டு ஆசீர்வதிப்பதற்கும், கர்த்தர் லேவியின் கோத்திரத்தைப் பிரித்தெடுத்தார். 9. ஆகையால் லேவிக்கு அவன் சகோதரரோடே பங்கும் சுதந்தரமும் இல்லை; உன் தேவனாகிய கர்த்தர் அவனுக்குச் சொன்னபடி, கர்த்தரே அவனுக்குச் சுதந்தரம். 10. நான் முந்தின பிரகாரமாகவே நாற்பதுநாள் இரவும் பகலும் மலையில் இருந்தேன்; கர்த்தர் அந்த முறையும் என் மன்றாட்டைக் கேட்டு, உன்னை அழிக்காமல் விட்டார். 11. கர்த்தர் என்னை நோக்கி: நான் கொடுப்பேன் என்று அவர்களுடைய பிதாக்களுக்கு ஆணையிட்ட தேசத்தில் அவர்கள் போய் அதைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி, நீ எழுந்து, ஜனத்திற்கு முன்பாகப் பிரயாணப்பட்டுப் போ என்றார். 12. இப்பொழுதும் இஸ்ரவேலே, நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளிலெல்லாம் நடந்து, அவரிடத்தில் அன்புகூர்ந்து, உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் தேவனாகிய கர்த்தரைச் சேவித்து, 13. நான் இன்று உனக்குக் கற்பிக்கிற கர்த்தருடைய கற்பனைகளையும் அவருடைய கட்டளைகளையும் உனக்கு நன்மையுண்டாகும்படி கைக்கொள்ளவேண்டும் என்பதையே அல்லாமல், வேறே எதை உன் தேவனாகிய கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார். 14. இதோ, வானங்களும் வானாதிவானங்களும், பூமியும் அதிலுள்ள யாவும், உன் தேவனாகிய கர்த்தருடையவைகள். 15. ஆனாலும் கர்த்தர் உன் பிதாக்கள்மேல் அன்புகூரும்பொருட்டு அவர்களிடத்தில் பிரியம் வைத்து, அவர்களுக்குப்பின் அவர்களுடைய சந்ததியாகிய உங்களை, இந்நாளில் இருக்கிறபடியே, சகல ஜாதிகளுக்குள்ளும் தமக்கென்று தெரிந்துகொண்டார். 16. ஆகையால் நீங்கள் இனி உங்கள் பிடரியைக் கடினப்படுத்தாமல், உங்கள் இருதயத்தின் நுனித்தோலை விருத்தசேதனம்பண்ணுங்கள். 17. உங்கள் தேவனாகிய கர்த்தர் தேவாதி தேவனும், கர்த்தாதி கர்த்தரும், மகத்துவமும் வல்லமையும் பயங்கரமுமான தேவனுமாயிருக்கிறார்; அவர் பட்சபாதம் பண்ணுகிறவரும் அல்ல, பரிதானம் வாங்குகிறவரும் அல்ல. 18. அவர் திக்கற்ற பிள்ளைக்கும் விதவைக்கும் நியாயஞ்செய்கிறவரும், அந்நியன்மேல் அன்புவைத்து அவனுக்கு அன்னவஸ்திரம் கொடுக்கிறவருமாய் இருக்கிறார். 19. நீங்களும் எகிப்துதேசத்தில் அந்நியராயிருந்தபடியால், அந்நியரைச் சிநேகிப்பீர்களாக. 20. உன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து, அவரைச் சேவித்து, அவரைப் பற்றிக்கொண்டிருந்து, அவருடைய நாமத்தைக்கொண்டு ஆணையிடுவாயாக. 21. அவரே உன் புகழ்ச்சி; உன் கண் கண்ட இந்தப் பெரிய பயங்கரமான காரியங்களை உன்னிடத்தில் செய்த உன் தேவன் அவரே. 22. உன் பிதாக்கள் எழுபதுபேராய் எகிப்துக்குப் போனார்கள்; இப்பொழுதோ உன் தேவனாகிய கர்த்தர் உன்னைத் திரட்சியிலே வானத்தின் நட்சத்திரங்களைப்போலாக்கினார்.
Chapter 11
1. நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் அன்புகூர்ந்து, அவருடைய பிரமாணங்களையும், அவருடைய கட்டளைகளையும், அவருடைய நியாயங்களையும், அவருடைய கற்பனைகளையும் எப்பொழுதும் கைக்கொள்வாயாக. 2. உங்கள் தேவனாகிய கர்த்தர் செய்த சிட்சையையும், அவருடைய மகத்துவத்தையும், அவருடைய பலத்த கையையும், அவருடைய ஓங்கிய புயத்தையும், 3. அவர் எகிப்தின் நடுவிலே எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுக்கும், அவன் தேசம் அனைத்திற்கும் செய்த அவருடைய அடையாளங்களையும், அவருடைய கிரியைகளையும், 4. எகிப்திய சேனையும் அவர்கள் குதிரைகளும் இரதங்களும் உங்களைப் பின்தொடர்ந்துவருகையில், கர்த்தர் சிவந்த சமுத்திரத்தின் ஜலத்தை அவர்கள்மேல் புரளப்பண்ணி, இந்நாள்வரைக்கும் இருக்கிறதுபோல, அவர்களை அழித்த அவருடைய செய்கையையும், 5. நீங்கள் இவ்விடத்திற்கு வருமளவும் அவர் உங்களுக்கு வனாந்தரத்தில் செய்ததையும், 6. பூமி தன் வாயைத் திறந்து, எலியாப் என்னும் ரூபன் குமாரனுடைய மக்களான தாத்தானையும் அபிராமையும், அவர்கள் குடும்பங்களையும், அவர்கள் கூடாரங்களையும், இஸ்ரவேலர் எல்லாருக்குள்ளும் அவர்களுக்கு இருந்த அவர்களுடைய சகல பொருள்களையும் விழுங்கும்படி செய்ததையும், அறியாமலும் காணாமலும் இருக்கிற உங்கள் பிள்ளைகளுடன் நான் பேசவில்லை; இன்று நீங்களே அறிந்துகொள்ளுங்கள். 7. கர்த்தர் செய்த மகத்துவமான கிரியைகளையெல்லாம் உங்கள் கண்கள் அல்லவோ கண்டது. 8. ஆகையால் நீங்கள் பலப்படும்படிக்கும், 9. நீங்கள் சுதந்தரிக்கப்போகிற தேசத்துக்குள் பிரவேசித்து அதைச் சுதந்தரிக்கும்படிக்கும், கர்த்தர் உங்கள் பிதாக்களுக்கும் அவர்கள் சந்ததிக்கும் கொடுப்பேன் என்று அவர்களுக்கு ஆணையிட்ட பாலும் தேனும் ஓடுகிற தேசத்தில் நீங்கள் நீடித்து வாழும்படிக்கும், இன்று நான் உங்களுக்குக் கற்பிக்கிற கற்பனைகளையெல்லாம் கைக்கொள்வீர்களாக. 10. நீ சுதந்தரிக்கப்போகிற தேசம் நீ விட்டுவந்த எகிப்து தேசத்தைப்போல் இராது; அங்கே நீ விதையை விதைத்து, கீரைத்தோட்டத்திற்கு நீர்ப்பாய்ச்சுகிறதுபோல உன் காலால் நீர்ப்பாய்ச்சி வந்தாய். 11. நீங்கள் சுதந்தரிக்கப்போகிற தேசமோ, மலைகளும் பள்ளத்தாக்குகளுமுள்ள தேசம்; அது வானத்தின் மழைத் தண்ணீரைக் குடிக்கும் தேசம்; 12. அது உன் தேவனாகிய கர்த்தர் விசாரிக்கிற தேசம், வருஷத்தின் துவக்கமுதல் வருஷத்தின் முடிவுமட்டும் எப்பொழுதும் உன் தேவனாகிய கர்த்தரின் கண்கள் அதின்மேல் வைக்கப்பட்டிருக்கும். 13. நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்தில் உங்கள் முழு இருதயத்தோடும் உங்கள் முழு ஆத்துமாவோடும் அன்புகூர்ந்து, அவரைச் சேவிக்கும்படி, நான் இன்று உங்களுக்குக் கற்பிக்கிற என் கற்பனைகளுக்குக் கீழ்ப்படிந்தால், 14. நீ உன் தானியத்தையும் உன் திராட்சரசத்தையும் உன் எண்ணெயையும் சேர்க்கும்படிக்கு, நான் ஏற்றகாலத்தில் உங்கள் தேசத்தில் முன்மாரியையும் பின்மாரியையும் பெய்யப்பண்ணி, 15. மிருகஜீவன்களுக்காக உன் வெளிகளிலே புல் முளைக்கும்படி செய்வேன், நீ சாப்பிட்டுத் திர்ப்தியடைவாய் என்கிறார். 16. உங்கள் இருதயம் வஞ்சிக்கப்படாமலும், நீங்கள் வழிவிலகி அந்நிய தேவர்களைச் சேவித்து அவர்களை நமஸ்கரியாமலும் இருக்கும்படி எச்சரிக்கையாயிருங்கள். 17. இல்லாவிடில் கர்த்தருடைய கோபம் உங்கள்மேல் மூண்டு, மழை பெய்யாமற்போகவும், தேசம் தன் பலனைக் கொடாமலிருக்கவும் வானத்தை அடைத்துப்போடுவார்; கர்த்தர் உங்களுக்குக் கொடுத்த நல்ல தேசத்திலிருந்து நீங்கள் சீக்கிரத்தில் அழிந்துபோவீர்கள். 18. ஆகையால் கர்த்தர் உங்கள் பிதாக்களுக்குக் கொடுப்பேன் என்று அவர்களுக்கு ஆணையிட்ட தேசத்தில் உங்கள் நாட்களும், உங்கள் பிள்ளைகளின் நாட்களும், பூமியின்மேல் வானம் இருக்கும் நாட்களைப்போல அநேகமாயிருக்கும்படிக்கு, 19. நீங்கள் என் வார்த்தைகளை உங்கள் இருதயத்திலும் உங்கள் ஆத்துமாவிலும் பதித்து, அவைகளை உங்கள் கையின்மேல் அடையாளமாகக் கட்டி, உங்கள் கண்களின் நடுவே ஞாபகக்குறியாக வைத்து, 20. அவைகளை உங்கள் பிள்ளைகளுக்கு உபதேசித்து, நீங்கள் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியிலே நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக்குறித்துப் பேசுவீர்களாக. 21. அவைகளை உங்கள் வீட்டு நிலைகளிலும் உங்கள் வாசல்களிலும் எழுதுவீர்களாக. 22. நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்தில் அன்புகூர்ந்து, அவர் வழிகளிலெல்லாம் நடந்து, அவரைப் பற்றிக்கொண்டிருக்கும்படி, நான் உங்களுக்குச் செய்யக் கற்பிக்கிற இந்தக் கற்பனைகளையெல்லாம் ஜாக்கிரதையாய்க் கைக்கொள்வீர்களானால், 23. கர்த்தர் உங்களுக்கு முன்பாக அந்த ஜாதிகளையெல்லாம் துரத்திவிடுவார்; உங்களைப்பார்க்கிலும் ஜனம் பெருத்த பலத்த ஜாதிகளை நீங்கள் துரத்துவீர்கள். 24. உங்கள் உள்ளங்கால் மிதிக்கும் இடமெல்லாம் உங்களுடையதாயிருக்கும்; வனாந்தரத்தையும் லீபனோனையும் தொடங்கி, ஐபிராத்து நதியையும் தொடங்கி, கடைசிச் சமுத்திரம்வரைக்கும் உங்கள் எல்லையாயிருக்கும். 25. உங்கள்முன் ஒருவரும் எதிர்த்து நிற்பதில்லை; உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சொன்னபடி உங்களால் உண்டாகும் பயமும் கெடியும் நீங்கள் மிதிக்கும் பூமியின்மேலெல்லாம் வரப்பண்ணுவார். 26. இதோ, இன்று நான் உங்களுக்கு முன்பாக ஆசீர்வாதத்தையும் சாபத்தையும் வைக்கிறேன். 27. இன்று நான் உங்களுக்குக் கற்பிக்கிற உங்கள் தேவனாகிய கர்த்தரின் கற்பனைகளுக்குக் கீழ்ப்படிந்தீர்களானால் ஆசீர்வாதமும், 28. எங்கள் தேவனாகிய கர்த்தரின் கற்பனைகளுக்குக் கீழ்ப்படியாமல், இன்று நான் உங்களுக்கு விதிக்கிற வழியைவிட்டு விலகி, நீங்கள் அறியாத வேறே தேவர்களைப் பின்பற்றுவீர்களானால் சாபமும் வரும். 29. நீ சுதந்தரிக்கப்போகிற தேசத்தில் உன் தேவனாகிய கர்த்தர் உன்னைப் பிரவேசிக்கப்பண்ணும்போது, கெரிசீம் மலையின்மேல் ஆசீர்வாதத்தையும் ஏபால் மலையின்மேல் சாபத்தையும் கூறக்கடவாய். 30. அவைகள் யோர்தானுக்கு அப்புறத்திலே சூரியன் அஸ்தமிக்கிற மேற்குவழியாய்க் கானானியர் குடியிருக்கிற நாட்டு வெளியிலே கில்காலுக்கு எதிரான மோரே என்னும் சமபூமியின் அருகேயல்லவோ இருக்கிறது? 31. உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கிற தேசத்தைச் சுதந்தரிப்பதற்கு, நீங்கள் யோர்தானைக் கடந்துபோய், அதைச் சுதந்தரித்துக்கொண்டு, அதிலே குடியிருப்பீர்கள். 32. ஆகையால் உங்களுக்கு இன்று நான் ஏற்படுத்துகிற சகல கட்டளைகளையும், நியாயங்களையும் கைக்கொண்டு நடக்கக்கடவீர்கள்.
Chapter 12
1. உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சுதந்தரிக்கக் கொடுக்கிற தேசத்திலே, நீங்கள் பூமியில் உயிரோடிருக்கும் நாளெல்லாம் கைக்கொண்டு நடக்கவேண்டிய கட்டளைகளும் நியாயங்களுமாவன: 2. நீங்கள் துரத்திவிடும் ஜாதிகள் தங்கள் தேவர்களைச் சேவித்த உயர்ந்த மலைகளின்மேலும், மேடுகளின்மேலும், பச்சையான சகல மரங்களின் கீழுமுள்ள இடங்களையெல்லாம் முற்றிலும் அழித்து, 3. அவர்கள் பலிபீடங்களை இடித்து, அவர்கள் சிலைகளைத் தகர்த்து, அவர்கள் தோப்புகளை அக்கினியால் சுட்டெரித்து, அவர்கள் தேவர்களின் விக்கிரகங்களை நொறுக்கி, அவைகளின் பேரும் அவ்விடத்தில் இராமல் அழியும்படி செய்யக்கடவீர்கள். 4. உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு நீங்கள் அப்படிச் செய்யாமல், 5. உங்கள் தேவனாகிய கர்த்தர் தம்முடைய நாமம் விளங்கும்படி, உங்கள் சகல கோத்திரங்களிலும் தெரிந்துகொள்ளும் ஸ்தானமாகிய அவருடைய வாசஸ்தலத்தையே நாடி, அங்கே போய், 6. அங்கே உங்கள் சர்வாங்க தகனங்களையும், உங்கள் பலிகளையும், தசமபாகங்களையும், உங்கள் கை ஏறெடுத்துப் படைக்கும் படைப்புகளையும், உங்கள் பொருத்தனைகளையும், உங்கள் உற்சாகபலிகளையும், உங்கள் ஆடுமாடுகளின் தலையீற்றுகளையும் கொண்டுவந்து, 7. அங்கே உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியிலே புசித்து, நீங்கள் கையிட்டுச் செய்ததும், உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களை ஆசீர்வதித்ததுமான யாவுக்காகவும் நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் சந்தோஷப்படுவீர்களாக. 8. இங்கே இந்நாளில் நாம் அவனவன் தன்தன் பார்வைக்குச் சரியானதையெல்லாம் செய்கிறதுபோல நீங்கள் செய்யாதிருப்பீர்களாக. 9. உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கும் இளைப்பாறுதலிலும் சுதந்தரத்திலும் நீங்கள் இன்னும் பிரவேசிக்கவில்லையே. 10. நீங்கள் யோர்தானைக் கடந்துபோய், உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சுதந்தரிக்கக் கொடுக்கும் தேசத்தில் குடியேறும்போதும், சுற்றிலும் இருக்கிற உங்கள் சத்துருக்களையெல்லாம் அவர் விலக்கி, உங்களை இளைப்பாறப்பண்ணுகிறதினால் நீங்கள் சுகமாய் வசித்திருக்கும்போதும், 11. உங்கள் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் ஓர் இடம் உண்டாயிருக்கும்; அங்கே நீங்கள் நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் உங்கள் சர்வாங்க தகனங்களையும், உங்கள் பலிகளையும், உங்கள் தசமபாகங்களையும், உங்கள் கை ஏறெடுத்துப் படைக்கும் படைப்புகளையும், நீங்கள் கர்த்தருக்கு நேர்ந்துகொள்ளும் விசேஷித்த எல்லாப் பொருத்தனைகளையும் கொண்டுவந்து, 12. உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் நீங்களும், உங்கள் குமாரரும், உங்கள் குமாரத்திகளும், உங்கள் வேலைக்காரரும், உங்கள் வேலைக்காரிகளும், உங்களோடு பங்கும் சுதந்தரமும் இல்லாமல் உங்கள் வாசல்களில் இருக்கிற லேவியனும் சந்தோஷப்படுவீர்களாக. 13. கண்ட இடமெல்லாம் நீ உன் சர்வாங்க தகனபலிகளை இடாதபடிக்கு எச்சரிக்கையாயிரு. 14. உன் கோத்திரங்கள் ஒன்றில் கர்த்தர் தெரிந்துகொள்ளும் இடத்தில்மாத்திரம் நீ உன் சர்வாங்க தகனபலிகளையிட்டு, நான் உனக்குக் கற்பிக்கிற யாவையும் அங்கே செய்வாயாக. 15. ஆனாலும் உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு அருளும் ஆசீர்வாதத்திற்குத்தக்கதாய், நீ உன் வாசல்களிலெங்கும் உன் இஷ்டப்படியே மிருகஜீவன்களை அடித்துப் புசிக்கலாம்; தீட்டுப்பட்டவனும் தீட்டுப்படாதவனும், அவைகளை, வெளிமானையும் கலைமானையும் புசிக்கிறதுபோல புசிக்கலாம். 16. இரத்தத்தைமாத்திரம் புசிக்கவேண்டாம்; அதைத் தண்ணீரைப்போல் தரையிலே ஊற்றிவிடவேண்டும். 17. உன் தானியத்திலும் உன் திராட்சரசத்திலும் உன் எண்ணெயிலும் தசமபாகத்தையும், உன் ஆடுமாடுகளின் தலையீற்றுகளையும், நீ நேர்ந்துகொள்ளும் உன்னுடைய சகல பொருத்தனைகளையும், உன் உற்சாகக் காணிக்கைகளையும், உன் கை ஏறெடுத்துப் படைக்கும் படைப்புகளையும், நீ உன் வாசல்களில் புசிக்கவேண்டாம். 18. உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்துகொள்ளும் ஸ்தானத்தில் நீயும் உன் குமாரனும், உன் குமாரத்தியும், உன் வேலைக்காரனும், உன் வேலைக்காரியும், உன் வாசல்களில் இருக்கிற லேவியனும், உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் அதைப் புசித்து, நீ கையிட்டுச் செய்யும் எல்லாக் காரியத்திலும் உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் சந்தோஷப்படுவாயாக. 19. நீ உன் தேசத்திலிருக்கும் நாளெல்லாம் லேவியனைக் கைவிடாதபடிக்கு எச்சரிக்கையாயிரு. 20. உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சொன்னபடி, உன் எல்லையை விஸ்தாரமாக்கும்போது, நீ இறைச்சி புசிக்க ஆசைகொண்டு, இறைச்சி புசிப்பேன் என்பாயானால், நீ உன் இஷ்டப்படி இறைச்சி புசிக்கலாம். 21. உன் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் ஸ்தானம் உனக்குத் தூரமானால், கர்த்தர் உனக்கு அளித்த உன் ஆடுமாடுகளில் எதையாகிலும் நான் உனக்கு விதித்தபடி நீ அடித்து, உன் இஷ்டப்படி உன் வாசல்களிலே புசிக்கலாம். 22. வெளிமானையும் கலைமானையும் புசிக்கிறதுபோல நீ அதைப் புசிக்கலாம்; தீட்டுப்பட்டவனும் தீட்டுப்படாதவனும் அதைப் புசிக்கலாம். 23. இரத்தத்தைமாத்திரம் புசிக்காதபடிக்கு எச்சரிக்கையாயிரு; இரத்தமே உயிர்; மாம்சத்தோடே உயிரையும் புசிக்கவேண்டாம். 24. அதை நீ சாப்பிடாமல் தண்ணீரைப்போல் தரையிலே ஊற்றிவிடவேண்டும். 25. நீ கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்வதினால், நீயும் உனக்குப் பின்வரும் உன் பிள்ளைகளும் நன்றாயிருக்கும்படி நீ அதைச் சாப்பிடலாகாது. 26. உனக்குரிய பரிசுத்த வஸ்துக்களையும், உன் பொருத்தனைகளையும் கர்த்தர் தெரிந்துகொள்ளும் ஸ்தானத்திற்கு நீ கொண்டுவந்து, 27. உன் தேவனாகிய கர்த்தருடைய பலிபீடத்தின்மேல் உன் சர்வாங்க தகனபலிகளை மாம்சத்தோடும் இரத்தத்தோடும்கூடப் பலியிடக்கடவாய்; நீ செலுத்தும் மற்றப் பலிகளின் இரத்தமும் உன் தேவனாகிய கர்த்தருடைய பலிபீடத்தின்மேல் ஊற்றப்படக்கடவது; மாம்சத்தையோ நீ புசிக்கலாம். 28. நீ உன் தேவனாகிய கர்த்தரின் பார்வைக்கு நன்மையும் செம்மையுமானதைச் செய்வதினால், நீயும் உனக்குப் பின்வரும் உன் பிள்ளைகளும் என்றென்றைக்கும் நன்றாயிருக்கும்படிக்கு, நான் உனக்குக் கற்பிக்கிற இந்த எல்லா வார்த்தைகளையும் நீ கவனித்துக் கேள். 29. நீ சுதந்தரிக்கப்போகிற தேசத்தின் ஜாதிகளை உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு முன்பாகச் சங்கரிக்கும்போதும், நீ அவர்கள் தேசத்தைச் சுதந்தரித்து அதிலே குடியிருக்கும்போதும், 30. அவர்கள் உனக்கு முன்பாக அழிக்கப்பட்டபின்பு, நீ அவர்களைப் பின்பற்றிச் சிக்கிக்கொள்ளாதபடிக்கும், இந்த ஜாதிகள் தங்கள் தேவர்களைச் சேவித்தபடி நானும் சேவிப்பேன் என்று சொல்லி அவர்களுடைய தேவர்களைக்குறித்துக் கேட்டு விசாரியாதபடிக்கும் எச்சரிக்கையாயிரு. 31. உன் தேவனாகிய கர்த்தருக்கு அப்படிச் செய்யாயாக; கர்த்தர் வெறுக்கிற அருவருப்பான யாவையும் அவர்கள் தங்கள் தேவர்களுக்குச் செய்து, தங்கள் குமாரரையும் தங்கள் குமாரத்திகளையும் தங்கள் தேவர்களுக்கு அக்கினியிலே சுட்டெரித்தார்களே. 32. நான் உனக்கு விதிக்கிற யாவையும் செய்யும்படி கவனமாயிரு; நீ அதனோடே ஒன்றும் கூட்டவும் வேண்டாம், அதில் ஒன்றும் குறைக்கவும் வேண்டாம்.
Chapter 13
1. உங்களுக்குள்ளே ஒரு தீர்க்கதரிசியாகிலும், சொப்பனக்காரனாகிலும் எழும்பி: 2. நீங்கள் அறியாத வேறே தேவர்களைப் பின்பற்றி, அவர்களைச் சேவிப்போம் வாருங்கள் என்று சொல்லி, உங்களுக்கு ஒரு அடையாளத்தையும் அற்புதத்தையும் காண்பிப்பேன் என்று குறிப்பாய்ச் சொன்னாலும், அவன் சொன்ன அடையாளமும் அற்புதமும் நடந்தாலும், 3. அந்தத் தீர்க்கதரிசியாகிலும், அந்தச் சொப்பனக்காரனாகிலும் சொல்லுகிறவைகளைக் கேளாதிருப்பீர்களாக; உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்தில் நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் உங்கள் முழு ஆத்துமாவோடும் அன்புகூருகிறீர்களோ இல்லையோ என்று அறியும்படிக்கு உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களைச் சோதிக்கிறார். 4. நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரைப் பின்பற்றி, அவருக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொண்டு, அவர் சத்தத்தைக் கேட்டு, அவரைச் சேவித்து, அவரைப் பற்றிக்கொள்வீர்களாக. 5. அந்தத் தீர்க்கதரிசியும், அந்தச் சொப்பனக்காரனும் கொலைசெய்யப்படக்கடவன்; நீங்கள் நடக்கும்படி உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு விதித்த வழியை விட்டு உங்களை விலக்கும்படி, அவன், உங்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணினவரும் உங்களை அடிமைத்தன வீட்டிலிருந்து நீங்கலாக்கி மீட்டுக்கொண்டவருமான உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமான துரோகப்பேச்சைப் பேசினான்; இப்படிப்பட்ட தீமையை உங்களிடத்திலிருந்து விலக்குவீர்களாக. 6. உன் தாய்க்குப் பிறந்த உன் சகோதரனாகிலும், உன் குமாரனாகிலும், உன் குமாரத்தியாகிலும், உன் மார்பிலுள்ள உன் மனைவியாகிலும், உன் பிராணனைப்போலிருக்கிற உன் சிநேகிதனாகிலும் உன்னை நோக்கி: நாம் போய் வேறே தேவர்களைச் சேவிப்போம் வாருங்கள் என்று சொல்லி, 7. உன்னைச் சுற்றிலும் உனக்குச் சமீபத்திலாகிலும் உனக்குத் தூரத்திலாகிலும், தேசத்தின் ஒருமுனை தொடங்கி மறுமுனைமட்டுமுள்ள எவ்விடத்திலாகிலும் இருக்கிற ஜனங்களுடைய தேவர்களில், நீயும் உன் பிதாக்களும் அறியாத அந்நிய தேவர்களைச் சேவிக்கும்படி இரகசியமாய் உன்னை ஏவிவிட்டால், 8. நீ அவனுக்குச் சம்மதியாமலும், அவனுக்குச் செவிகொடாமலும், உன் கண் அவன்மேல் இரக்கங்கொள்ளாமலும், அவனைத் தப்பவிடாமலும், அவனை ஒளித்துவைக்காமலும், 9. அவனைக் கொலைசெய்துபோடவேண்டும்; அவனைக் கொலைசெய்வதற்கு, முதல் உன் கையும் பின்பு சகல ஜனத்தின் கையும் அவன்மேல் இருக்கக்கடவது. 10. அடிமைத்தன வீடாகிய எகிப்து தேசத்திலிருந்து உன்னைப் புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தரை விட்டு விலகும்படி அவன் உன்னை ஏவினபடியினால், அவன் சாகும்படி அவன்மேல் கல்லெறியக்கடவாய். 11. இஸ்ரவேலர் யாவரும் அதைக் கேட்டுப் பயந்து, இனி உன் நடுவே இப்படிப்பட்ட தீமையான காரியத்தைச் செய்யாதிருப்பார்கள். 12. உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் குடியிருக்கும்படி கொடுக்கும் பட்டணங்கள் ஒன்றில் பேலியாளின் மக்களாகிய துஷ்டமனிதர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு, 13. நீங்கள் அறியாத வேறே தேவர்களைச் சேவிக்கப்போவோம் வாருங்கள் என்று தங்கள் பட்டணத்தின் குடிகளை ஏவினார்கள் என்கிற செய்தியைக் கேள்விப்படும்போது, 14. நீ நன்றாய் விசாரித்து, கேட்டாராய்ந்து, அப்படிப்பட்ட அருவருப்பான காரியம் உன் நடுவே நடந்தது மெய்யும் நிச்சயமும் என்று காண்பாயானால், 15. அந்தப் பட்டணத்தின் குடிகளைப் பட்டயக்கருக்கினால் வெட்டி, அதையும் அதிலுள்ள யாவற்றையும் அதின் மிருகஜீவன்களையும் பட்டயக்கருக்கினால் சங்காரம்பண்ணி, 16. அதில் கொள்ளையிட்டதையெல்லாம் அதின் நடுவீதியிலே கூட்டி, உன் தேவனாகிய கர்த்தருக்கு என்று அந்தப் பட்டணத்தையும், அதில் கொள்ளையிடப்பட்ட யாவற்றையும் முழுவதும் அக்கினியில் சுட்டெரிக்கக்கடவாய்; அது இனிக் கட்டப்படாமல், நித்திய மண்மேடாயிருக்கக்கடவது. 17. சபிக்கப்பட்ட பொருளில் ஒன்றும் உன் கையில் இருக்கவேண்டாம். நான் இன்று உனக்குக் கற்பிக்கிற உன் தேவனாகிய கர்த்தரின் கற்பனைகளையெல்லாம் நீ கைக்கொண்டு, உன் தேவனாகிய கர்த்தருடைய பார்வைக்குச் செம்மையானதைச் செய்யும்படி, அவர் சத்தத்திற்குச் செவிகொடுப்பாயானால், 18. கர்த்தர் தமது கோபத்தின் உக்கிரத்தைவிட்டுத் திரும்பி, உனக்குத் தயைசெய்து, உனக்கு இரங்கி, அவர் உன் பிதாக்களுக்கு ஆணையிட்டபடி உன்னை விருத்தியடையப்பண்ணுவார்.
Chapter 14
1. நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரின் பிள்ளைகள்; செத்தவனுக்காகக் கீறிக்கொள்ளாமலும், உங்கள் கண்களுக்கு இடையிலே சவரம்பண்ணாமலும் இருப்பீர்களாக. 2. நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்தமான ஜனங்கள்; பூமியின்மீதெங்குமுள்ள எல்லா ஜனங்களிலும் உங்களையே கர்த்தர் தமக்குச் சொந்த ஜனங்களாயிருக்கத் தெரிந்துகொண்டார். 3. அருவருப்பானதொன்றையும் புசிக்கவேண்டாம். 4. நீங்கள் புசிக்கத்தகும் மிருகங்களாவன: மாடும், செம்மறியாடும், வெள்ளாடும், 5. மானும், வெளிமானும், கலைமானும், வரையாடும், புள்ளிமானும், சருகுமானும், புல்வாயுமே. 6. மிருகங்களில் விரிகுளம்புள்ளதாயிருந்து, குளம்புகள் இரண்டாகப் பிரிந்திருக்கிறதும், அசைபோடுகிறதுமான சகல மிருகங்களையும் நீங்கள் புசிக்கலாம்; 7. அசைபோடுகிறவைகளிலும், விரிகுளம்புள்ளவைகளிலும், நீங்கள் புசிக்கத்தகாதவைகள் எவையென்றால்: ஒட்டகமும், முசலும், குழிமுசலுமே; அவைகள் அசைபோட்டும் அவைகளுக்கு விரிகுளம்பில்லை; அவைகள் உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக. 8. பன்றியும் புசிக்கத்தகாது; அது விரிகுளம்புள்ளதாயிருந்தும், அசைபோடாதிருக்கும்; அது உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக; இவைகளின் மாம்சத்தைப் புசியாமலும் இவைகளின் உடலைத் தொடாமலும் இருப்பீர்களாக. 9. ஜலத்திலிருக்கிற எல்லாவற்றிலும் சிறகும் செதிளும் உள்ளவைகளையெல்லாம் நீங்கள் புசிக்கலாம். 10. சிறகும் செதிளும் இல்லாத யாதொன்றையும் புசிக்கலாகாது; அது உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக. 11. சுத்தமான சகல பட்சிகளையும் நீங்கள் புசிக்கலாம். 12. நீங்கள் புசிக்கத்தகாதவைகள் எவையென்றால்: கழுகும், கருடனும், கடலுராஞ்சியும், 13. பைரியும், வல்லூறும், சகலவித பருந்தும், 14. சகலவித காகங்களும், 15. தீக்குருவியும், கூகையும், செம்புகமும், சகலவிதமான டேகையும், 16. ஆந்தையும், கோட்டானும், நாரையும், 17. கூழக்கடாவும், குருகும், நீர்க்காகமும், 18. கொக்கும், சகலவித ராஜாளியும், புழுக்கொத்தியும், வௌவாலுமே. 19. பறக்கிறவைகளில் ஊர்வன யாவும் உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக; அவைகள் புசிக்கத்தகாதவைகள். 20. சுத்தமான பறவைகள் யாவையும் நீங்கள் புசிக்கலாம். 21. தானாய் இறந்துபோனதொன்றையும் புசிக்கவேண்டாம்; உங்கள் வாசல்களில் இருக்கிற பரதேசிக்கு அதைப் புசிக்கக்கொடுக்கலாம்; அல்லது அந்நியனுக்கு அதை விற்றுப்போடலாம்; நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்த ஜனங்கள். வெள்ளாட்டுக்குட்டியை அதின் தாயின் பாலிலே சமைக்கவேண்டாம். 22. நீ உன் தேவனாகிய கர்த்தருக்கு எப்பொழுதும் பயந்திருக்கப் பழகும்படிக்கு, வருஷந்தோறும் நீ விதைக்கிற விதைப்பினாலே வயலில் விளையும் எல்லாப் பலனிலும் தசமபாகத்தைப் பிரித்து, 23. உன் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் ஸ்தானத்திலே, உன் தானியத்திலும் உன் திராட்சரசத்திலும் உன் எண்ணெயிலும் தசமபாகத்தையும் உன் ஆடுமாடுகளின் தலையீற்றுகளையும் அவருடைய சந்நிதியில் புசிப்பாயாக. 24. உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதிக்கும் காலத்தில், உன் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொண்ட ஸ்தானம் உனக்கு வெகு தூரமாயிருக்கிறதினால், வழிப்பிரயாணத்தின் வெகு தொலையினிமித்தம், நீ அதைக் கொண்டுபோகக்கூடாதிருக்குமானால், 25. அதைப் பணமாக்கி, பணமுடிப்பை உன் கையிலே பிடித்துக்கொண்டு, உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்துகொண்ட ஸ்தலத்திற்குப் போய், 26. அங்கே உன் இஷ்டப்படி ஆடுமாடு, திராட்சரசம், மதுபானம் முதலான சகலத்தையும் பணம்கொடுத்து வாங்கி, உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில், நீயும் உன் குடும்பத்தாரும் உன் வாசல்களில் இருக்கிற லேவியனும் புசித்துச் சந்தோஷப்படுவீர்களாக. 27. லேவியனுக்கு உன்னோடே பங்கும் சுதந்தரமும் இல்லாதபடியால் அவனைக் கைவிடாயாக. 28. மூன்றாம் வருஷத்தின் முடிவிலே அவ்வருஷத்தில் உனக்கு வந்த பலன் எல்லாவற்றிலும் தசமபாகத்தைப் பிரித்து, உன் வாசல்களில் வைக்கக்கடவாய். 29. லேவியனுக்கு உன்னோடே பங்கும் சுதந்தரமும் இல்லாதபடியினால், அவனும், உன் வாசல்களில் இருக்கிற பரதேசியும், திக்கற்றவனும், விதவையும் வந்து புசித்துத் திர்ப்தியடைவார்களாக; அப்பொழுது உன் கை செய்யும் வேலையிலெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பார்.
Chapter 15
1. ஏழாம் வருஷத்தின் முடிவிலே விடுதலைபண்ணுவாயாக. 2. விடுதலையின் விபரமாவது: பிறனுக்குக் கடன்கொடுத்தவன் எவனும், கர்த்தர் நியமித்த விடுதலை கூறப்பட்டபடியால், அந்தக் கடனைப் பிறன் கையிலாகிலும் தன் சகோதரன் கையிலாகிலும் தண்டாமல் விட்டுவிடக்கடவன். 3. அந்நிய ஜாதியான் கையிலே நீ கடனைத் தண்டலாம்; உன் சகோதரனிடத்திலோ உனக்கு வரவேண்டியதை உன் கை விட்டுவிடக்கடவது. 4. எளியவன் உனக்குள் இல்லாதிருக்கும்படியாக இப்படிச் செய்யவேண்டும்; இன்று நான் உனக்குக் கற்பிக்கிற எல்லாக் கற்பனைகளின்படியும் நீ செய்யும்படி, உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்பாயானால், 5. உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரிக்கும்படி கொடுக்கும் தேசத்தில், உன்னை மேன்மேலும் ஆசீர்வதிப்பார். 6. உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சொன்னபடி உன்னை ஆசீர்வதிப்பதினால், நீ அநேகம் ஜாதிகளுக்குக் கடன் கொடுப்பாய், நீயோ கடன் வாங்குவதில்லை; நீ அநேகம் ஜாதிகளை ஆளுவாய், உன்னையோ அவர்கள் ஆளுவதில்லை. 7. உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்தின் எந்த வாசலிலும் உன் சகோதரரில் எளியவனான ஒருவன் இருந்தால், எளியவனாகிய உன் சகோதரனுக்கு உன் இருதயத்தை நீ கடினமாக்காமலும், உன் கையை மூடாமலும், 8. அவனுக்கு உன் கையைத் தாராளமாய்த் திறந்து, அவனுடைய அவசரத்தினிமித்தம் அவனுக்குத் தேவையானதைக் கடன்கொடுப்பாயாக. 9. விடுதலை வருஷமாகிய ஏழாம் வருஷம் கிட்டியிருக்கிறதென்று சொல்லி, உன் இருதயத்திலே பொல்லாத நினைவு கொண்டு, உன் ஏழைச் சகோதரனுக்குக் கொடாமல் மறுத்து, அவன்மேல் வன்கண் வைக்காதபடிக்கும், அவன் உன்னைக் குறித்துக் கர்த்தரை நோக்கி அபயமிடாதபடிக்கும் எச்சரிக்கையாயிரு; அப்படிச் செய்வாயானால் அது உனக்குப் பாவமாயிருக்கும். 10. அவனுக்குத் தாராளமாய்க் கொடுப்பாயாக; அவனுக்குக் கொடுக்கும்போது உன் இருதயம் விசனப்படாதிருப்பதாக; அதினிமித்தமாக உன் தேவனாகிய கர்த்தர் உன்னுடைய எல்லாக் கிரியைகளிலும், நீ கையிட்டுச் செய்யும் எல்லாக் காரியங்களிலும் உன்னை ஆசீர்வதிப்பார். 11. தேசத்திலே எளியவர்கள் இல்லாதிருப்பதில்லை; ஆகையால் உன் தேசத்திலே சிறுமைப்பட்டவனும் எளியவனுமாகிய உன் சகோதரனுக்கு உன் கையைத் தாராளமாய்த் திறக்கவேண்டும் என்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன். 12. உன் சகோதரனாகிய எபிரெய புருஷனாகிலும் எபிரெய ஸ்திரீயாகிலும் உனக்கு விலைப்பட்டால், ஆறுவருஷம் உன்னிடத்தில் சேவிக்கவேண்டும்; ஏழாம் வருஷத்தில் அவனை விடுதலைபண்ணி அனுப்பிவிடுவாயாக. 13. அவனை விடுதலைபண்ணி அனுப்பிவிடும்போது அவனை வெறுமையாய் அனுப்பிவிடாமல், 14. உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதித்ததின்படி, உன் ஆட்டுமந்தையிலும் உன் களத்திலும் உன் ஆலையிலும் எடுத்து அவனுக்குத் தாராளமாய்க் கொடுத்து அனுப்பிவிடுவாயாக. 15. நீ எகிப்துதேசத்தில் அடிமையாயிருந்ததையும், உன் தேவனாகிய கர்த்தர் உன்னை மீட்டுக்கொண்டதையும் நினைவுகூரக்கடவாய்; ஆகையால் நான் இன்று இந்தக் காரியத்தை உனக்குக் கட்டளையிடுகிறேன். 16. ஆனாலும், அவன் உன்னிடத்தில் நன்மைபெற்று, உன்னையும் உன் குடும்பத்தையும் நேசிப்பதினால்: நான் உன்னைவிட்டுப் போகமாட்டேன் என்று உன்னுடனே சொல்வானேயாகில், 17. நீ ஒரு கம்பியை எடுத்து, அவன் காதைக் கதவோடே சேர்த்துக் குத்துவாயாக; பின்பு அவன் என்றைக்கும் உனக்கு அடிமையாயிருக்கக்கடவன்; உன் அடிமைப்பெண்ணுக்கும் அப்படியே செய்யக்கடவாய். 18. அவனை விடுதலையாக்கி அனுப்பிவிடுவது உனக்கு விசனமாய்க் காணப்படவேண்டாம்; இரட்டிப்பான கூலிக்கு ஈடாக ஆறு வருஷம் உன்னிடத்தில் சேவித்தானே; இப்படி உன் தேவனாகிய கர்த்தர் நீ செய்யும் எல்லாவற்றிலும் உன்னை ஆசீர்வதிப்பார். 19. உன் ஆடுமாடுகளில் தலையீற்றாகிய ஆணையெல்லாம் உன் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்தமாக்கக்கடவாய்; உன் மாட்டின் தலையீற்றை வேலைகொள்ளாமலும், உன் ஆட்டின் தலையீற்றை மயிர் கத்தரியாமலும் இருப்பாயாக. 20. கர்த்தர் தெரிந்துகொள்ளும் ஸ்தலத்திலே வருஷந்தோறும் நீயும் உன் வீட்டாருமாய் உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் அப்படிப்பட்டவைகளைப் புசிக்கக்கடவீர்கள். 21. அதற்கு முடம் குருடு முதலான யாதொரு பழுது இருந்தால், அதை உன் தேவனாகிய கர்த்தருக்குப் பலியிடவேண்டாம். 22. அப்படிப்பட்டதை நீ உன் வாசல்களிலே, கலைமானையும் வெளிமானையும் புசிப்பதுபோலப் புசிக்கலாம்; தீட்டுப்பட்டவனும் தீட்டுப்படாதவனும் அதைப் புசிக்கலாம். 23. அதின் இரத்தத்தைமாத்திரம் சாப்பிடாமல், அதைத் தண்ணீரைப்போலத் தரையிலே ஊற்றிவிடக்கடவாய்.
Chapter 16
1. ஆபிப் மாதத்தைக் கவனித்திருந்து, அதில் உன் தேவனாகிய கர்த்தருக்குப் பஸ்காவை ஆசரிக்கக்கடவாய்; ஆபிப்மாதத்திலே இராக்காலத்தில் உன் தேவனாகிய கர்த்தர் உன்னை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினாரே. 2. கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் ஸ்தானத்தில், உன் தேவனாகிய கர்த்தருக்குப் பஸ்காவின் பலியாகிய ஆடுமாடுகளைப் பலியிடுவாயாக. 3. நீ எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட நாளை நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் நினைக்கும்படி, பஸ்காப்பலியுடனே புளிப்புள்ள அப்பம் புசியாமல், சிறுமையின் அப்பமாகிய புளிப்பில்லாத அப்பங்களை ஏழுநாள்வரைக்கும் புசிக்கக்கடவாய்; நீ தீவிரமாய் எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்டபடியினால் இப்படிச் செய்யவேண்டும். 4. ஏழுநாளளவும் உன் எல்லைகளிலெங்கும் புளிப்புள்ள அப்பம் உன்னிடத்தில் காணப்படலாகாது; நீ முதல்நாள் சாயங்காலத்தில் இட்ட பலியின் மாம்சத்தில் ஏதாகிலும் இராமுழுதும் விடியற்காலம்வரைக்கும் வைக்கவேண்டாம். 5. உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் உன்னுடைய வாசல்களில் எதிலும் நீ பஸ்காவை அடிக்கவேண்டாம். 6. உன் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் ஸ்தானத்திலே, நீ எகிப்திலிருந்து புறப்பட்ட நேரமாகிய சாயங்காலத்திலே சூரியன் அஸ்தமிக்கிறபோது பஸ்காவை அடித்து, 7. உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்துகொண்ட ஸ்தானத்திலே, அதைப் பொரித்துப் புசித்து, விடியற்காலத்திலே உன் கூடாரங்களுக்குத் திரும்பிப்போவாயாக. 8. நீ ஆறுநாளும் புளிப்பில்லாத அப்பம் புசிக்கவேண்டும், ஏழாம் நாள் உன் தேவனாகிய கர்த்தருக்கு ஆசரிக்கப்படும் நாளாயிருக்கும்; அதிலே யாதொரு வேலையும் செய்யவேண்டாம். 9. ஏழு வாரங்களை எண்ணுவாயாக; அறுப்பு அறுக்கத் தொடங்கும் காலமுதல் நீ அந்த ஏழு வாரங்களையும் எண்ணவேண்டும். 10. அவைகள் முடிந்தபோது வாரங்களின் பண்டிகையை உன் தேவனாகிய கர்த்தருக்கு என்று ஆசரித்து, உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதித்ததற்குத் தக்கதாய் உன் கைக்கு நேர்ந்த மனப்பூர்வமான காணிக்கையாகிய பகுதியைச் செலுத்தி, 11. உன் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் ஸ்தானத்திலே, நீயும், உன் குமாரனும், உன் குமாரத்தியும், உன் வேலைக்காரனும், உன் வேலைக்காரியும், உன் வாசல்களில் இருக்கிற லேவியனும், உன்னிடத்தில் இருக்கிற பரதேசியும், திக்கற்ற பிள்ளையும், விதவையும், உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் சந்தோஷப்பட்டு, 12. நீ எகிப்தில் அடிமையாயிருந்ததை நினைத்து, இந்தக் கட்டளைகளைக் கைக்கொண்டு இவைகளின்படி செய்யக்கடவாய். 13. நீ உன் களத்தின் பலனையும் உன் ஆலையின் பலனையும் சேர்த்தபின்பு, கூடாரப்பண்டிகையை ஏழுநாள் ஆசரித்து, 14. உன் பண்டிகையில் நீயும், உன் குமாரனும், உன் குமாரத்தியும், உன் வேலைக்காரனும், உன் வேலைக்காரியும், உன் வாசல்களில் இருக்கிற லேவியனும், பரதேசியும், திக்கற்ற பிள்ளையும், விதவையும் சந்தோஷப்படக்கடவீர்கள்; 15. உனக்கு உண்டான எல்லா வரத்திலும் உன் கைகளுடைய எல்லாக் கிரியையிலும் உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதித்தபடியினால், கர்த்தர் தெரிந்துகொள்ளும் ஸ்தானத்தில் உன் தேவனாகிய கர்த்தருக்கு ஏழுநாளளவும் பண்டிகையை ஆசரித்துச் சந்தோஷமாயிருப்பாயாக. 16. வருஷத்தில் மூன்றுதரம் புளிப்பில்லாத அப்பப்பண்டிகையிலும், வாரங்களின் பண்டிகையிலும், கூடாரப்பண்டிகையிலும், உன் ஆண்மக்கள் எல்லாரும் உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்துகொள்ளும் ஸ்தானத்திலே, அவர் சந்நிதிக்கு முன்பாக வந்து காணப்படக்கடவர்கள். 17. ஆனாலும் அவர்கள் கர்த்தருடைய சந்நிதியில் வெறுங்கையோடே வராமல், உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு அருளிய ஆசீர்வாதத்திற்குத்தக்கதாக, அவனவன் தன் தன் தகுதிக்கு ஏற்றபடி காணிக்கையைக் கொண்டுவரக்கடவன். 18. உன் தேவனாகிய கர்த்தர் உன் கோத்திரங்கள்தோறும் உனக்குக் கொடுக்கும் வாசல்களிலெல்லாம், நியாயாதிபதிகளையும் தலைவரையும் ஏற்படுத்துவாயாக; அவர்கள் நீதியுடன் ஜனங்களுக்கு நியாயத்தீர்ப்புச் செய்யக்கடவர்கள். 19. நியாயத்தைப் புரட்டாதிருப்பாயாக; முகதாட்சிணியம் பண்ணாமலும், பரிதானம் வாங்காமலும் இருப்பாயாக; பரிதானம் ஞானிகளின் கண்களைக் குருடாக்கி, நீதிமான்களின் நியாயங்களைத் தாறுமாறாக்கும். 20. நீ பிழைத்து, உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு நீதியையே பின்பற்றுவாயாக. 21. நீ உன் தேவனாகிய கர்த்தருக்கு உண்டாக்கும் பலிபீடத்தண்டையில் யாதொரு தோப்பையும் உண்டாக்கவேண்டாம்; 22. யாதொரு சிலையையும் நிறுத்தவேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தர் அதை வெறுக்கிறார்.
Chapter 17
1. பழுதும் அவலட்சணமுமுள்ள யாதொரு மாட்டையாவது ஆட்டையாவது உன் தேவனாகிய கர்த்தருக்குப் பலியிடவேண்டாம்; அது உன் தேவனாகிய கர்த்தருக்கு அருவருப்பாயிருக்கும். 2. உன் தேவனாகிய கர்த்தரின் கண்களுக்கு முன்பாக எந்தப் புருஷனாவது ஸ்திரீயாவது உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற வாசல்கள் ஒன்றில் அக்கிரமஞ்செய்து, அவருடைய உடன்படிக்கையை மீறி, 3. நான் விலக்கியிருக்கிற வேறே தேவர்களையாவது சந்திரசூரியர் முதலான வானசேனைகளையாவது சேவித்து, அவைகளை நமஸ்கரிக்கிறதாகக் காணப்பட்டால், 4. அது உன் செவிகேட்க உனக்கு அறிவிக்கப்படும்போது, நீ அதை நன்றாய் விசாரிக்கக்கடவாய்; அது மெய் என்றும், அப்படிப்பட்ட அருவருப்பு இஸ்ரவேலில் நடந்தது நிச்சயம் என்றும் கண்டாயானால், 5. அந்த அக்கிரமத்தைச் செய்த புருஷனையாவது ஸ்திரீயையாவது உன் வாசல்களுக்கு வெளியே கொண்டுபோய், அப்படிப்பட்டவர்கள் சாகும்படி கல்லெறியக்கடவாய். 6. சாவுக்குப் பாத்திரமானவன் இரண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினால் கொலைசெய்யப்படக்கடவன்; ஒரே சாட்சியினுடைய வாக்கினால் அவன் கொலைசெய்யப்படலாகாது. 7. அவனைக் கொலைசெய்கிறதற்குச் சாட்சிகளுடைய கைகள் முந்தியும் எல்லா ஜனங்களுடைய கைகள் பிந்தியும் அவன்மேல் இருப்பதாக; இப்படியே தீமையை உன் நடுவிலிருந்து விலக்கக்கடவாய். 8. உன் வாசல்களில் இரத்தப்பழிகளைக் குறித்தும், வியாச்சியங்களைக் குறித்தும், காயம்பட்ட சேதங்களைக்குறித்தும் வழக்கு நேரிட்டு, நியாயந்தீர்ப்பது உனக்கு அரிதாயிருந்தால், நீ எழுந்து, உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்து ஏற்படுத்தின ஸ்தானத்திற்குப் போய், 9. லேவியரான ஆசாரியரிடத்திலும் அந்நாட்களில் இருக்கிற நியாயாதிபதியினிடத்திலும் விசாரிக்கவேண்டும்; நியாயம் இன்னதென்று அவர்கள் உனக்கு அறிவிப்பார்கள். 10. கர்த்தர் தெரிந்துகொண்ட இடத்திலிருந்து அவர்கள் உனக்கு அறிவிக்கும் தீர்ப்புக்கு நீ இணங்கி, அவர்கள் உனக்கு விதிக்கிறபடி செய்யக் கவனமாயிருப்பாயாக. 11. அவர்கள் உனக்கு அறிவிக்கும் தீர்ப்பை விட்டு வலதுபுறம் இடதுபுறம் சாயாமல், அவர்கள் உனக்கு உணர்த்தும் பிரமாணத்தின்படியும், உனக்குச் சொல்லும் நியாயத்தீர்ப்பின்படியும் செய்யக்கடவாய். 12. அங்கே உன் தேவனாகிய கர்த்தருக்கு ஆராதனை செய்யும்படி நிற்கிற ஆசாரியனுடைய சொல்லையாகிலும், நியாயாதிபதியினுடைய சொல்லையாகிலும் கேளாமல், ஒருவன் இடும்புசெய்தால், அவன் சாகக்கடவன்; இப்படியே தீமையை இஸ்ரவேலிலிருந்து விலக்கக்கடவாய். 13. அப்பொழுது ஜனங்கள் எல்லாரும் அதைக் கேட்டு, பயந்து, இனி இடும்பு செய்யாதிருப்பார்கள். 14. உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்தில் நீ போய்ச் சேர்ந்து, அதைச் சுதந்தரித்துக்கொண்டு, அதில் குடியேறினபின், நீ: என்னைச் சுற்றிலும் இருக்கிற சகல ஜாதிகளையும் போல, நானும் எனக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்தவேண்டும் என்பாயானால்; 15. உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்துகொள்பவனையே உனக்கு ராஜாவாக வைக்கக்கடவாய்; உன் சகோதரருக்குள்ளிருக்கிற ஒருவனையே உன்மேல் ராஜாவாக ஏற்படுத்தக்கடவாய்; உன் சகோதரன் அல்லாத அந்நியனை ராஜாவாக ஏற்படுத்தக்கூடாது. 16. அவன் அநேக குதிரைகளைச் சம்பாதியாமலும், அநேக குதிரைகளைத் தனக்குச் சம்பாதிக்கும்படிக்கு ஜனங்களைத் திரும்ப எகிப்திற்குப் போகப்பண்ணாமலும் இருக்கக்கடவன்; இனி அந்த வழியாய் நீங்கள் திரும்பிப்போகவேண்டாம் என்று கர்த்தர் உங்களுக்குச் சொல்லியிருக்கிறாரே. 17. அவன் இருதயம் பின்வாங்கிப் போகாதபடி அவன் அநேகம் ஸ்திரீகளைப் படைக்கவேண்டாம்; வெள்ளியும் பொன்னும் தனக்கு மிகுதியாய்ப் பெருகப்பண்ணவும் வேண்டாம். 18. அவன் தன் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும்போது, அவனுடைய இருதயம் அவன் சகோதரர்பேரில் மேட்டிமைகொள்ளாமலும், கற்பனையைவிட்டு வலதுபுறம் இடதுபுறம் சாயாமலும், 19. இந்த நியாயப்பிரமாணத்தின் எல்லா வார்த்தைகளையும், இந்தக் கட்டளைகளையும் கைக்கொண்டு, இவைகளின்படி செய்வதற்காகத் தன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்திருக்கும்படி கற்றுக்கொள்ளும்பொருட்டு, 20. அவன் லேவியராகிய ஆசாரியரிடத்திலிருக்கிற நியாயப்பிரமாண நூலைப்பார்த்து, தனக்காக ஒரு பிரதியை எழுதி, தன்னிடத்தில் வைத்துக்கொண்டு, தன் ஜீவனுள்ள நாளெல்லாம் அதை வாசிக்கக்கடவன்; இப்படிச் செய்வதினால், தானும் தன் குமாரரும் இஸ்ரவேலின் நடுவே தங்கள் ராஜ்யத்திலே நீடித்து வாழுவார்கள்.
Chapter 18
1. லேவியராகிய ஆசாரியருக்கும் லேவி கோத்திரத்தார் அனைவருக்கும் இஸ்ரவேல் புத்திரருடன் பங்கும் சுதந்தரமும் இல்லாதிருப்பதாக; கர்த்தருக்கு இடப்படும் தகனபலிகளையும் அவருக்குச் சுதந்தரமானவைகளையும் அவர்கள் புசிப்பார்களாக. 2. அவர்கள் சகோதரருக்குள்ளே அவர்களுக்குச் சுதந்தரமில்லை; கர்த்தர் அவர்களுக்குச் சொல்லியபடியே, அவரே அவர்கள் சுதந்தரம். 3. ஜனத்தினிடத்தில் பெற்றுக்கொள்ளவேண்டிய ஆசாரியருக்குரிய வரத்தாவது: ஜனங்கள் பலியிடும் ஆடுமாடுகளில் முன்னந்தொடையையும் தாடைகளையும் இரைப்பையையும் ஆசாரியனுக்குக் கொடுக்கவேண்டும். 4. உன் தானியம், திராட்சரசம், எண்ணெய், ஆட்டுரோமம் என்னும் இவைகளின் முதற்பலனையும் அவனுக்குக் கொடுக்கவேண்டும். 5. அவனும் அவன் குமாரரும் எந்நாளும் கர்த்தரின் நாமத்தை முன்னிட்டு ஆராதனை செய்யும்படி நிற்கும்பொருட்டு, உன் தேவனாகிய கர்த்தர் உன் கோத்திரத்தார் எல்லாருக்குள்ளும் அவனையே தெரிந்துகொண்டார். 6. இஸ்ரவேலில் எவ்விடத்திலுமுள்ள உன் வாசல்கள் யாதொன்றிலே தங்கின ஒரு லேவியன் அவ்விடத்தை விட்டு, கர்த்தர் தெரிந்துகொண்ட ஸ்தானத்திற்கு மனப்பூர்வமாய் வந்தால், 7. அங்கே கர்த்தருடைய சந்நிதியில் நிற்கும் லேவியராகிய தன் எல்லாச் சகோதரரைப்போலும் தன் தேவனாகிய கர்த்தரின் நாமத்தை முன்னிட்டு ஊழியஞ்செய்வான். 8. அப்படிப்பட்டவர்கள் தங்கள் பிதாக்களுடைய ஆஸ்தியின் விலைக்கிரயத்தை அநுபவிக்கிறதும் அல்லாமல், சாப்பாட்டிற்காகச் சமமான பாகத்தையும் பெற்றுக்கொள்வார்கள். 9. உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்தில் நீ போய்ச் சேரும்போது, அந்த ஜாதிகள் செய்யும் அருவருப்புகளின்படி செய்யக் கற்றுக்கொள்ளவேண்டாம். 10. தன் மகனையாவது தன் மகளையாவது தீக்கடக்கப்பண்ணுகிறவனும், குறிசொல்லுகிறவனும், நாள்பார்க்கிறவனும், அஞ்சனம் பார்க்கிறவனும், சூனியக்காரனும், 11. மந்திரவாதியும், சன்னதக்காரனும், மாயவித்தைக்காரனும், செத்தவர்களிடத்தில் குறிகேட்கிறவனும் உங்களுக்குள்ளே இருக்கவேண்டாம். 12. இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவன் எவனும் கர்த்தருக்கு அருவருப்பானவன்; இப்படிப்பட்ட அருவருப்புகளின் நிமித்தம் உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உன் முன்னின்று துரத்திவிடுகிறார். 13. உன் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நீ உத்தமனாயிருக்கக்கடவாய். 14. நீ துரத்திவிடப்போகிற இந்த ஜாதிகள் நாள்பார்க்கிறவர்களுக்கும் குறிசொல்லுகிறவர்களுக்கும் செவிகொடுக்கிறார்கள்; நீ அப்படிச் செய்கிறதற்கு உன் தேவனாகிய கர்த்தர் உத்தரவுகொடார். 15. உன் தேவனாகிய கர்த்தர் என்னைப் போல ஒரு தீர்க்கதரிசியை உனக்காக உன் நடுவே உன் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணுவார்; அவருக்குச் செவிகொடுப்பீர்களாக. 16. ஓரேபிலே சபை கூட்டப்பட்ட நாளில்: நான் சாகாதபடி என் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தை இனி நான் கேளாமலும், இந்தப் பெரிய அக்கினியை இனி நான் காணாமலும் இருப்பேனாக என்று உன் தேவனாகிய கர்த்தரை நீ வேண்டிக்கொண்டதின்படியெல்லாம் அவர் செய்வார். 17. அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: அவர்கள் சொன்னது சரியே. 18. உன்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை நான் அவர்களுக்காக அவர்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணி, என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன்; நான் அவருக்குக் கற்பிப்பதையெல்லாம் அவர்களுக்குச் சொல்லுவார். 19. என் நாமத்தினாலே அவர் சொல்லும் என் வார்த்தைகளுக்குச் செவிகொடாதவன் எவனோ அவனை நான் விசாரிப்பேன். 20. சொல்லும்படி நான் கட்டளையிடாத வார்த்தையை என் நாமத்தினாலே சொல்லத் துணியும் தீர்க்கதரிசியும், வேறே தேவர்களின் நாமத்தினாலே பேசும் தீர்க்கதரிசியும் சாகக்கடவன். 21. கர்த்தர் சொல்லாத வார்த்தை இன்னதென்று நான் எப்படி அறிவேன் என்று நீ உன் இருதயத்தில் சொல்வாயாகில், 22. ஒரு தீர்க்கதரிசி கர்த்தரின் நாமத்தினாலே சொல்லும் காரியம் நடவாமலும் நிறைவேறாமலும்போனால், அது கர்த்தர் சொல்லாத வார்த்தை; அந்தத் தீர்க்கதரிசி அதைத் துணிகரத்தினால் சொன்னான்; அவனுக்கு நீ பயப்படவேண்டாம்.
Chapter 19
1. உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்தின் ஜாதிகளை உன் தேவனாகிய கர்த்தர் வேரற்றுப்போகப் பண்ணுவதினால், நீ அவர்கள் தேசத்தைச் சுதந்தரித்துக்கொண்டு, அவர்கள் பட்டணங்களிலும் அவர்கள் வீடுகளிலும் குடியேறும்போது, 2. நீ உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரிக்கக் கொடுக்கும் உன் தேசத்தின் நடுவிலே, உனக்காக மூன்று பட்டணங்களைப் பிரித்துவைக்கக்கடவாய். 3. கொலைசெய்தவன் எவனும் அங்கே ஓடிப்போகும்படி உன் தேவனாகிய கர்த்தர் உன்னைச் சுதந்தரிக்கப்பண்ணப்போகிற உன் தேசத்தின் எல்லையை நீ மூன்று பங்காகப் பகுத்து அதற்கு வழியை உண்டுபண்ணக்கடவாய். 4. கொலைசெய்து அங்கே ஓடிப்போய், உயிரோடிருக்கத்தக்கவன் யாரென்றால்: தான் முன்னே பகைத்திராத பிறனொருவனை மனதறியாமல் கொன்றவன்தானே. 5. ஒருவன் விறகுவெட்ட மற்றொருவனோடே காட்டில் போய், மரத்தை வெட்டத் தன் கையிலிருந்த கோடரியை ஓங்கும்போது, இரும்பானது காம்பை விட்டுக் கழன்று மற்றவன்மேல் பட்டதினால் அவன் இறந்துபோனால், 6. இரத்தப்பழிக்காரன் தன் மனம் எரிகையில், கொலைசெய்தவனை வழி தூரமாயிருக்கிறதினாலே பின்தொடர்ந்து பிடித்து, அவனைக் கொன்றுபோடாதபடிக்கு, இவன் அந்தப் பட்டணங்கள் ஒன்றில் ஓடிப்போய் உயிரோடிருப்பானாக; இவன் அவனை முன்னே பகைக்காதபடியினால், இவன்மேல் சாவுக்கான குற்றம் சுமரவில்லை. 7. இதினிமித்தம் மூன்று பட்டணங்களை உனக்காகப் பிரித்துவைக்கக்கடவாய் என்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன். 8. நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் அன்புகூர்ந்து, எந்நாளும் அவர் வழிகளில் நடப்பதற்காக, இன்று நான் உனக்குக் கற்பிக்கிற இந்த எல்லாக் கற்பனைகளையும் கைக்கொண்டு அதின்படி செய்து, 9. உன் தேவனாகிய கர்த்தர் உன் பிதாக்களுக்கு ஆணையிட்டபடியே, அவர் உன் எல்லையை விஸ்தாரமாக்கி, உன் பிதாக்களுக்குக் கொடுப்பேன் என்று சொன்ன தேசம் முழுவதையும் உனக்குக் கொடுத்தால், 10. அப்பொழுது உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும் உன் தேசத்தில் குற்றமில்லாத இரத்தம் சிந்தப்படுகிறதினால் உன்மேல் இரத்தப்பழி சுமராதபடிக்கு, இந்த மூன்று பட்டணங்களும் அல்லாமல் இன்னும் மூன்று பட்டணங்களை ஏற்படுத்தக்கடவாய். 11. ஒருவன் பிறனொருவனைப் பகைத்து, அவனுக்குப் பதிவிருந்து, அவனுக்கு விரோதமாய் எழும்பி, அவன் சாகும்படி அவனை அடித்து, இந்தப் பட்டணங்களில் ஒன்றில் ஓடிப்போயிருப்பானாகில், 12. அந்தப் பட்டணத்தின் மூப்பர்கள் ஆள் அனுப்பி, அங்கேயிருந்து அவனைக் கொண்டுவரும்படி செய்து, அவன் சாகும்படிக்கு அவனை இரத்தப்பழி வாங்குகிறவன் கையில் ஒப்புக்கொடுக்கக்கடவர்கள். 13. உன் கண் அவனுக்கு இரங்கவேண்டாம்; குற்றமில்லாத இரத்தப்பழியை இஸ்ரவேலை விட்டு விலக்கக்கடவாய்; அப்பொழுது நீ நன்றாயிருப்பாய். 14. உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும் தேசத்தில் உன் கைவசமாயிருக்கும் காணியாட்சியிலே முன்னோர்கள் குறித்திருக்கிற பிறனுடைய எல்லையை ஒற்றிப்போடாயாக. 15. ஒருவன் எந்த அக்கிரமத்தையாவது எந்தப் பாவத்தையாவது செய்தான் என்று சொல்லப்பட்டால், ஒரே சாட்சியினால் நியாயந்தீர்க்கக்கூடாது; இரண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினாலே காரியம் நிலைவரப்படவேண்டும். 16. ஒருவன்மேல் ஒரு குற்றத்தைச் சுமத்தும்படி, ஒரு பொய்ச்சாட்சிக்காரன் அவன்மேல் சாட்சிசொல்ல எழும்பினால், 17. வழக்காடுகிற இருவரும் கர்த்தருடைய சந்நிதியில் அக்காலத்தில் இருக்கும் ஆசாரியர்களுக்கும் நியாயாதிபதிகளுக்கும் முன்பாக வந்து நிற்பார்களாக. 18. அப்பொழுது நியாயாதிபதிகள் நன்றாய் விசாரணைசெய்யக்கடவர்கள்; சாட்சி கள்ளச்சாட்சி என்றும், தன் சகோதரன்மேல் அபாண்டமாய்க் குற்றஞ்சாற்றினான் என்றும் கண்டால், 19. அவன் தன் சகோதரனுக்குச் செய்ய நினைத்தபடியே அவனுக்குச் செய்யக்கடவீர்கள்; இவ்விதமாய்த் தீமையை உன் நடுவிலிருந்து விலக்குவாயாக. 20. மற்றவர்களும் அதைக் கேட்டுப் பயந்து, இனி உங்களுக்குள்ளே அப்படிப்பட்ட தீமையைச் செய்யாதிருப்பார்கள். 21. உன் கண் அவனுக்கு இரங்கவேண்டாம்; ஜீவனுக்கு ஜீவன், கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல், கைக்குக் கை, காலுக்குக் கால் கொடுக்கப்படவேண்டும்.
Chapter 20
1. நீ உன் சத்துருக்களுக்கு எதிராக யுத்தஞ்செய்யப் புறப்பட்டுப் போகையில், குதிரைகளையும் இரதங்களையும், உன்னிலும் பெரிய கூட்டமாகிய ஜனங்களையும் கண்டால், அவர்களுக்குப் பயப்படாயாக; உன்னை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார். 2. நீங்கள் யுத்தஞ்செய்யத் தொடங்கும்போது, ஆசாரியன் சேர்ந்துவந்து, ஜனங்களிடத்தில் பேசி: 3. இஸ்ரவேலரே, கேளுங்கள்; இன்று உங்கள் சத்துருக்களுடன் யுத்தஞ்செய்யப் போகிறீர்கள்; உங்கள் இருதயம் துவளவேண்டாம்; நீங்கள் அவர்களைப் பார்த்துப் பயப்படவும் கலங்கவும் தத்தளிக்கவும் வேண்டாம். 4. உங்களுக்காக உங்கள் சத்துருக்களோடே யுத்தம்பண்ணவும் உங்களை இரட்சிக்கவும் உங்களோடேகூடப் போகிறவர் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று சொல்லவேண்டும். 5. அன்றியும் அதிபதிகள் ஜனங்களை நோக்கி: புதுவீட்டைக் கட்டி, அதைப் பிரதிஷ்டைபண்ணாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டுக்குத் திரும்பிப்போகக்கடவன்; அவன் யுத்தத்திலே செத்தால் வேறொருவன் அதைப் பிரதிஷ்டைபண்ணவேண்டியதாகும். 6. திராட்சத்தோட்டத்தை நாட்டி, அதை அநுபவியாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டுக்குத் திரும்பிப்போகக்கடவன்; அவன் யுத்தத்திலே செத்தால் வேறொருவன் அதை அநுபவிக்கவேண்டியதாகும். 7. ஒரு பெண்ணைத் தனக்கு நியமித்துக்கொண்டு, அவளை விவாகம்பண்ணாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டுக்குத் திரும்பிப்போகக்கடவன்; அவன் யுத்தத்திலே செத்தால் வேறொருவன் அவளை விவாகம்பண்ணவேண்டியதாகும் என்று சொல்லவேண்டும். 8. பின்னும் அதிபதிகள் ஜனங்களுடனே பேசி: பயங்காளியும் திடனற்றவனுமாயிருக்கிறவன் எவனோ, அவன் தன் சகோதரரின் இருதயத்தைத் தன் இருதயத்தைப்போலக் கரைந்துபோகப்பண்ணாதபடிக்கு, தன் வீட்டுக்குத் திரும்பிப்போகக்கடவன் என்று சொல்லவேண்டும். 9. அதிபதிகள் ஜனங்களோடே பேசி முடிந்தபின்பு, ஜனங்களை நடத்தும்படி, சேனைத்தலைவரை நியமிக்கக்கடவர்கள். 10. நீ ஒரு பட்டணத்தின்மேல் யுத்தம்பண்ண நெருங்கும்போது, அந்தப் பட்டணத்தாருக்குச் சமாதானம் கூறக்கடவாய். 11. அவர்கள் உனக்குச் சமாதானமான உத்தரவுகொடுத்து, வாசலைத் திறந்தால், அதிலுள்ள ஜனங்கள் எல்லாரும் உனக்குப் பகுதிகட்டுகிறவர்களாகி, உனக்கு ஊழியஞ்செய்யக்கடவர்கள். 12. அவர்கள் உன்னோடே சமாதானப்படாமல், உன்னோடே யுத்தம்பண்ணுவார்களானால், நீ அதை முற்றிக்கைபோட்டு, 13. உன் தேவனாகிய கர்த்தர் அதை உன் கையில் ஒப்புக்கொடுக்கும்போது, அதிலுள்ள புருஷர்கள் எல்லாரையும் பட்டயக்கருக்கினால் வெட்டி, 14. ஸ்திரீகளையும் குழந்தைகளையும் மிருகஜீவன்களையும் மாத்திரம் உயிரோடே வைத்து, பட்டணத்திலுள்ள எல்லாவற்றையும் கொள்ளையிட்டு, உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு ஒப்புக்கொடுத்த உன் சத்துருக்களின் கொள்ளைப்பொருளை அநுபவிப்பாயாக. 15. இந்த ஜாதிகளைச்சேர்ந்த பட்டணங்களாயிராமல், உனக்கு வெகுதூரத்திலிருக்கிற சகல பட்டணங்களுக்கும் இப்படியே செய்வாயாக. 16. உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கிற ஏத்தியர், எமோரியர், கானானியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் என்னும் ஜனங்களின் பட்டணங்களிலேமாத்திரம் சுவாசமுள்ளதொன்றையும் உயிரோடே வைக்காமல், 17. அவர்களை உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிட்டபடியே சங்காரம்பண்ணக்கடவாய். 18. அவர்கள் தங்கள் தேவர்களுக்குச் செய்கிற தங்களுடைய சகல அருவருப்புகளின்படியே நீங்களும் செய்ய உங்களுக்குக் கற்றுக்கொடாமலும், நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாமலும் இருக்கும்படி இப்படிச் செய்யவேண்டும். 19. நீ ஒரு பட்டணத்தின்மேல் யுத்தம்பண்ணி அதைப் பிடிக்க அநேக நாள் அதை முற்றிக்கைபோட்டிருக்கும்போது, நீ கோடரியை ஓங்கி, அதின் மரங்களை வெட்டிச் சேதம்பண்ணாயாக; அவைகளின் கனியை நீ புசிக்கலாமே; ஆகையால் உனக்குக் கொத்தளத்திற்கு உதவும் என்று அவைகளை வெட்டாயாக; வெளியின் விருட்சங்கள் மனுஷனுடைய ஜீவனத்துக்கானவைகள். 20. புசிக்கிறதற்கேற்ற கனிகொடாத மரம் என்று நீ அறிந்திருக்கிற மரங்களைமாத்திரம் வெட்டியழித்து, உன்னோடு யுத்தம்பண்ணுகிற பட்டணம் பிடிபடுமட்டும் அதற்கு எதிராகக் கொத்தளம் போடலாம்.
Chapter 21
1. உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரிக்கக் கொடுக்கும் தேசத்தில், கொலைசெய்யப்பட்டுக் கிடக்கிற ஒருவனை வெளியிலே கண்டு, அவனைக் கொன்றவன் இன்னான் என்று தெரியாதிருந்தால், 2. உன் மூப்பரும் உன் நியாயாதிபதிகளும் புறப்பட்டுப்போய், கொலைசெய்யப்பட்டவனைச் சுற்றிலும் இருக்கும் பட்டணங்கள்மட்டும் அளப்பார்களாக. 3. கொலைசெய்யப்பட்டவனுக்குச் சமீபமான பட்டணத்து மூப்பர், வேலையில் பண்படாததும் நுகத்தடியில் பிணைக்கப்படாததுமான ஒரு கிடாரியைப் பிடித்து, 4. உழுது விதையாத தரிசான பள்ளத்தாக்கிலே அதைக் கொண்டுபோய், அந்தப் பள்ளத்தாக்கிலே அதின் தலையை வெட்டிப்போடக்கடவர்கள். 5. உன் தேவனாகிய கர்த்தர் தமக்கு ஆராதனை செய்யவும் கர்த்தருடைய நாமத்திலே ஆசீர்வதிக்கவும் லேவியின் குமாரராகிய ஆசாரியரைத் தெரிந்துகொண்டபடியால், அவர்களும் அத்தருணத்தில் வந்திருக்கவேண்டும்; அவர்கள் வாக்கின்படியே சகல வழக்கும் சகல காயச்சேதமும் தீர்க்கப்படவேண்டும். 6. கொலைசெய்யப்பட்டவனுக்குச் சமீபமான பட்டணத்தின் மூப்பர் எல்லாரும் பள்ளத்தாக்கிலே தலை வெட்டப்பட்ட கிடாரியின்மேல் தங்கள் கைகளைக் கழுவி: 7. எங்கள் கைகள் அந்த இரத்தத்தைச் சிந்தினதும் இல்லை, எங்கள் கண்கள் அதைக் கண்டதும் இல்லை; 8. கர்த்தாவே, நீர் மீட்டுக்கொண்ட உமது ஜனமாகிய இஸ்ரவேலின்மேல் குற்றமில்லாத இரத்தப்பழியைச் சுமத்தாமல், உமது ஜனமாகிய இஸ்ரவேலின்மேல் கிருபையுள்ளவராயிரும் என்று சொல்வார்களாக; அப்பொழுது இரத்தப்பழி அவர்களுக்கு நிவிர்த்தியாகும். 9. இப்படிக் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதை நீ செய்வாயாகில், குற்றமில்லாத இரத்தப்பழியை உன் நடுவிலிருந்து விலக்கிப்போடுவாய். 10. நீ உன் சத்துருக்களுக்கு எதிராக யுத்தத்திற்குப் புறப்பட்டு, உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உன் கையில் ஒப்புக்கொடுக்கிறதினால், அவர்களைச் சிறைபிடித்துவந்து, 11. சிறைகளில் ரூபவதியான ஒரு ஸ்திரீயைக்கண்டு, அவளை விவாகம்பண்ண விரும்பி, 12. அவளை உன் வீட்டிற்குள் அழைத்துக்கொண்டுபோவாயானால், அவள் தன் தலையைச் சிரைத்து, தன் நகங்களைக் களைந்து, 13. தன் சிறையிருப்பின் வஸ்திரத்தையும் நீக்கி, உன் வீட்டிலிருந்து, ஒரு மாதமட்டும் தன் தகப்பனையும் தாயையும் நினைத்துத் துக்கங்கொண்டாடக்கடவள்; அதன்பின்பு நீ அவளோடே சேர்ந்து, அவளுக்குப் புருஷனாயிரு, அவள் உனக்கு மனைவியாயிருப்பாள். 14. அவள்மேல் உனக்குப் பிரியமில்லாமற்போனால், நீ அவளைப் பணத்திற்கு விற்காமல், அவளைத் தன் இஷ்டப்படி போகவிடலாம்; நீ அவளைத் தாழ்மைப்படுத்தினபடியினால் அவளாலே ஆதாயம் பெறும்படி தேடவேண்டாம். 15. இரண்டு மனைவிகளையுடைய ஒருவன், ஒருத்தியின்மேல் விருப்பாயும் மற்றவள்மேல் வெறுப்பாயும் இருக்க, இருவரும் அவனுக்குப் பிள்ளைகளைப் பெற்றார்களேயாகில், முதற்பிறந்தவன் வெறுக்கப்பட்டவளின் புத்திரனானாலும், 16. தகப்பன் தனக்கு உண்டான ஆஸ்தியைத் தன் பிள்ளைகளுக்குப் பங்கிடும் நாளில், வெறுக்கப்பட்டவளிடத்தில் பிறந்த முதற்பேறானவனுக்கு சேஷ்டபுத்திர சுதந்தரத்தைக் கொடுக்கவேண்டுமேயல்லாமல், விரும்பப்பட்டவளிடத்தில் பிறந்தவனுக்குக் கொடுக்கலாகாது. 17. வெறுக்கப்பட்டவளிடத்தில் பிறந்தவனை சேஷ்டபுத்திரனாக அங்கிகரித்து, தனக்கு உண்டான ஆஸ்திகளிலெல்லாம் இரண்டு பங்கை அவனுக்குக் கொடுக்கவேண்டும்; அவன் தன் தகப்பனுடைய முதற்பலன், சேஷ்டபுத்திர சுதந்தரம் அவனுக்கே உரியது. 18. தன் தகப்பன் சொல்லையும் தன் தாயின் சொல்லையும் கேளாமலும், அவர்களால் தண்டிக்கப்பட்டும், அவர்களுக்குக் கீழ்ப்படியாமலும் போகிற அடங்காத துஷ்டப்பிள்ளை ஒருவனுக்கு இருந்தால், 19. அவன் தகப்பனும் அவன் தாயும் அவனைப் பிடித்து, அவன் இருக்கும் பட்டணத்தின் மூப்பரிடத்துக்கும் அவ்விடத்து வாசலுக்கும் அவனைக் கொண்டுபோய்: 20. எங்கள் மகனாகிய இவன் அடங்காத துஷ்டனாயிருக்கிறான்; எங்கள் சொல்லைக் கேளான்; பெருந்தீனிக்காரனும் குடியனுமாயிருக்கிறான் என்று பட்டணத்தின் மூப்பரோடே சொல்லுவார்களாக. 21. அப்பொழுது அவன் சாகும்படி அந்தப் பட்டணத்து மனிதரெல்லாரும் அவன்மேல் கல்லெறியக்கடவர்கள்; இப்படியே தீமையை உன் நடுவிலிருந்து விலக்கிப்போடவேண்டும்; இஸ்ரவேலர் எல்லாரும் அதைக் கேட்டுப் பயப்படுவார்கள். 22. கொலைசெய்யப்பட ஒருவன்மேல் சாவுக்குப் பாத்திரமான பாவம் உண்டாயிருக்க, அவனைக் கொலைசெய்யும்படி மரத்திலே தூக்கிப்போடுவாயானால், 23. இரவிலே அவன் பிரேதம் மரத்திலே தொங்கலாகாது; அந்நாளிலேதானே அதை அடக்கம்பண்ணவேண்டும்; தூக்கிப்போடப்பட்டவன் தேவனால் சபிக்கப்பட்டவன்; ஆகையால் உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும் உன் தேசத்தைத் தீட்டுப்படுத்தாயாக.
Chapter 22
1. உன் சகோதரனுடைய மாடாவது ஆடாவது வழிதப்பிப்போகிறதைக் கண்டாயானால், அதைக் காணாதவன்போல் இராமல், அதை உன் சகோதரனிடத்துக்குத் திருப்பிக்கொண்டு போகக்கடவாய். 2. உன் சகோதரன் உனக்குச் சமீபமாயிராமலும் உனக்கு அறிமுகமாயிராமலும் இருந்தால், நீ அதை உன் வீட்டிற்குக் கொண்டுபோய், அதை உன் சகோதரன் தேடிவருமட்டும் உன்னிடத்திலே வைத்து, அவனுக்குத் திரும்பக் கொடுக்கக்கடவாய். 3. அப்படியே அவன் கழுதையைக் குறித்தும் செய்யக்கடவாய்; அவன் வஸ்திரத்தைக்குறித்தும் அப்படியே செய்யக்கடவாய்; உன் சகோதரனிடத்திலிருந்து காணாமற்போனவைகளில் எதையாகிலும் கண்டுபிடித்தாயானால் அப்படியே செய்யக்கடவாய்; அவைகளை நீ காணாதவன்போல் விட்டுப்போகலாகாது. 4. உன் சகோதரனுடைய கழுதையாவது அவனுடைய மாடாவது வழியிலே விழுந்துகிடக்கிறதைக் கண்டாயானால், அதைக் காணாதவன்போல விட்டுப்போகாமல், அவனோடேகூட அதைத் தூக்கியெடுத்துவிடுவாயாக. 5. புருஷரின் உடைகளை ஸ்திரீகள் தரிக்கலாகாது, ஸ்திரீகளின் உடைகளைப் புருஷர் தரிக்கலாகாது; அப்படிச் செய்கிறவர்கள் எல்லாரும் உன் தேவனாகிய கர்த்தருக்கு அருவருப்பானவர்கள். 6. வழியருகே ஒரு மரத்திலாவது தரையிலாவது குஞ்சுகளாயினும் முட்டைகளாயினுமுள்ள ஒரு குருவிக்கூடு உனக்குத் தென்படும்போது, தாயானது குஞ்சுகளின்மேலாவது முட்டைகளின்மேலாவது அடைகாத்துக்கொண்டிருந்தால், நீ குஞ்சுகளோடே தாயையும் பிடிக்கலாகாது. 7. தாயைப் போகவிட்டு, குஞ்சுகளை மாத்திரம் எடுத்துக்கொள்ளலாம்; அப்பொழுது நீ நன்றாயிருப்பாய்; உன் நாட்களும் நீடித்திருக்கும். 8. நீ புதுவீட்டைக் கட்டினால், ஒருவன் உன் மெத்தையிலிருந்து விழுகிறதினாலே, நீ இரத்தப்பழியை உன் வீட்டின்மேல் சுமத்திக்கொள்ளாதபடிக்கு, அதற்குக் கைப்பிடிசுவரைக் கட்டவேண்டும். 9. உன் திராட்சத்தோட்டத்திலே பற்பலவிதமான விதையை விதைக்காயாக; இப்படிச் செய்தால் நீ விதைத்தவைகளின் பயிரையும், திராட்சத்தோட்டத்தின் பலனையும் தீட்டுப்படுத்துவாய். 10. மாட்டையும் கழுதையையும் பிணைத்து உழாதிருப்பாயாக. 11. ஆட்டுமயிரும் பஞ்சுநூலும் கலந்த வஸ்திரத்தை உடுத்திக்கொள்ளாயாக. 12. நீ தரித்துக்கொள்ளுகிற உன் மேல்சட்டையின் நான்கு ஓரங்களிலும் தொங்கல்களை உண்டுபண்ணுவாயாக. 13. ஒரு ஸ்திரீயை விவாகம்பண்ணின ஒருவன் அவளிடத்தில் பிரவேசித்தபின்பு அவளை வெறுத்து: 14. நான் இந்த ஸ்திரீயை விவாகம்பண்ணி, அவளிடத்தில் சேர்ந்தபோது கன்னிமையைக் காணவில்லை என்று அவள்மேல் ஆவலாதியான விசேஷங்களைச் சாற்றி, அவளுக்கு அவதூறு உண்டாக்கினால்; 15. அந்த ஸ்திரீயின் தகப்பனும் அவள் தாயும் அவளுடைய கன்னிமையின் அடையாளத்தைப் பட்டணத்து வாசலிலுள்ள மூப்பரிடத்தில் கொண்டுவரக்கடவர்கள். 16. அங்கே அந்தப் பெண்ணின் தகப்பன்: என் மகளை இந்த மனிதனுக்கு மனைவியாகக் கொடுத்தேன், இவன் அவளை வெறுத்து, 17. நான் உன் மகளிடத்தில் கன்னிமையைக் காணவில்லையென்று ஆவலாதியான விசேஷங்களை அவள்மேல் சாற்றுகிறான்; என் மகளுடைய கன்னிமையின் அடையாளம் இங்கே இருக்கிறது என்று மூப்பரிடத்தில் சொல்வானாக; பின்பு பட்டணத்து மூப்பருக்கு முன்பாக அந்த வஸ்திரத்தை விரிக்கக்கடவர்கள். 18. அப்பொழுது அந்தப் பட்டணத்து மூப்பர் அந்த மனிதனைப் பிடித்து, அவனைத் தண்டித்து, 19. அவன் இஸ்ரவேலில் ஒரு கன்னியை அவதூறுபண்ணினதினாலே, அவன் கையில் நூறு வெள்ளிக்காசை அபராதமாக வாங்கி, பெண்ணின் தகப்பனுக்குக் கொடுக்கக்கடவர்கள்; அவளோ அவனுக்கு மனைவியாயிருக்கவேண்டும்; அவன் தன் ஜீவனுள்ளளவும் அவளைத் தள்ளிவிடக்கூடாது. 20. அந்தப் பெண்ணிடத்தில் கன்னிமை காணப்படவில்லையென்னும் சங்கதி மெய்ப்பட்டதேயானால், 21. அந்தப் பெண்ணை அவள் தகப்பனுடைய வீட்டுவாசலுக்கு முன்பாகக் கொண்டுவந்து, அவள் இஸ்ரவேலில் மதிகெட்ட காரியத்தைச் செய்து, தன் தகப்பன் வீட்டிலே வேசித்தனம்பண்ணினபடியினாலே, அவளுடைய பட்டணத்து மனிதர் அவளைக் கல்லெறிந்து கொல்லக்கடவர்கள்; இப்படியே தீமையை உன் நடுவிலிருந்து விலக்கக்கடவாய். 22. புருஷனுக்கு விவாகம்பண்ணப்பட்ட ஸ்திரீயோடே ஒருவன் சயனிக்கக் கண்டுபிடிக்கப்பட்டால், அந்த ஸ்திரீயோடே சயனித்த மனிதனும் அந்த ஸ்திரீயும் இருவரும் சாகவேண்டும்; இப்படியே தீமையை இஸ்ரவேலிலிருந்து விலக்கக்கடவாய். 23. கன்னிகையான ஒரு பெண் ஒருவனுக்கு நியமிக்கப்பட்டிருக்கையில், மற்றொருவன் அவளை ஊருக்குள்ளே கண்டு, அவளோடே சயனித்தால், 24. அப்பொழுது அந்தப் பெண் ஊருக்குள்ளிருந்தும் கூக்குரலிடாததினாலும், அந்த மனிதன் பிறனுடைய மனைவியைக் கற்பழித்தபடியினாலும், இருவரையும் அந்தப் பட்டணத்து வாசலுக்குமுன் கொண்டுபோய், அவர்கள்மேல் கல்லெறிந்து கொல்லக்கடவீர்கள்; இப்படியே தீமையை உன் நடுவிலிருந்து விலக்கக்கடவாய். 25. ஒருவனுக்கு நியமிக்கப்பட்ட பெண்ணை வெளியிலே ஒருவன் கண்டு, அவளைப் பலவந்தமாய்ப் பிடித்து, அவளோடே சயனித்தானேயாகில், அவளோடே சயனித்த மனிதன் மாத்திரம் சாகக்கடவன். 26. பெண்ணுக்கு ஒன்றும் செய்யலாகாது; பெண்ணின்மேல் சாவுக்கு ஏதுவான குற்றம் இல்லை; இக்காரியம் ஒருவன் மற்றொருவன்மேல் எழும்பி அவனுடைய ஜீவனை வாங்கினதுபோல இருக்கிறது. 27. வெளியிலே அவன் அவளைக் கண்டுபிடித்தான்; நியமிக்கப்பட்ட பெண் அப்பொழுது கூக்குரலிட்டும் அவளைக் காப்பாற்றுவார் இல்லாமற்போயிற்று. 28. நியமிக்கப்படாத கன்னியாஸ்திரீயாகிய ஒரு பெண்ணை ஒருவன் கண்டு, கையைப் பிடித்து அவளோடே சயனிக்கையில், அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால், 29. அவளோடே சயனித்த மனிதன் பெண்ணின் தகப்பனுக்கு ஐம்பது வெள்ளிக்காசைக் கொடுக்கக்கடவன்; அவன் அவளைக் கற்பழித்தபடியினால், அவள் அவனுக்கு மனைவியாயிருக்கவேண்டும்; அவன் உயிரோடிருக்குமளவும் அவளைத் தள்ளிவிடக்கூடாது. 30. ஒருவனும் தன் தகப்பனுடைய மனைவியைச் சேரலாகாது; தன் தகப்பன் மானத்தை அவன் வெளிப்படுத்தலாகாது.
Chapter 23
1. விதையடிக்கப்பட்டவனும், கோசமறுபட்டவனும் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது. 2. வேசிப்பிள்ளையும் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது; அவனுக்குப் பத்தாம் தலைமுறையானவனும் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது. 3. அம்மோனியனும் மோவாபியனும் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது; பத்தாம் தலைமுறையிலும் என்றைக்கும் அவர்கள் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது. 4. நீங்கள் எகிப்திலிருந்து புறப்பட்டு வருகிற வழியிலே, அவர்கள் அப்பத்தோடும் தண்ணீரோடும் உங்களுக்கு எதிர்கொண்டு வராததினிமித்தமும், உன்னைச் சபிக்கும்படியாய் மெசொப்பொத்தாமியாவின் ஊராகிய பேத்தோரிலிருந்த பேயோரின் குமாரன் பிலேயாமுக்குக் கூலிபேசி அவனை அழைப்பித்ததினிமித்தமும் இப்படிச் செய்யவேண்டும். 5. உன் தேவனாகிய கர்த்தர் பிலேயாமுக்குச் செவிகொடுக்கச் சித்தமில்லாமல், உன் தேவனாகிய கர்த்தர் உன்மேல் அன்புகூர்ந்தபடியினால், உன் தேவனாகிய கர்த்தர் அந்தச் சாபத்தை உனக்கு ஆசீர்வாதமாக மாறப்பண்ணினார். 6. நீ உன் ஆயுள்நாட்களுள்ளளவும் ஒருக்காலும் அவர்கள் சமாதானத்தையும் நன்மையையும் தேடாதே. 7. ஏதோமியனை அருவருக்காயாக, அவன் உன் சகோதரன்; எகிப்தியனை அருவருக்காயாக, அவன் தேசத்திலே பரதேசியாயிருந்தாய். 8. மூன்றாம் தலைமுறையில் அவர்களுக்குப் பிறந்த பிள்ளைகள் கர்த்தருடைய சபைக்கு உட்படலாம். 9. நீ படையெடுத்து உன் சத்துருக்களுக்கு விரோதமாய்ப் புறப்படும்போது, தீதான காரியங்கள் எல்லாவற்றிற்கும் விலகியிருப்பாயாக. 10. இராக்காலத்தில் சம்பவித்த தீட்டினாலே அசுத்தமாயிருக்கிற ஒருவன் உங்களிலிருந்தால், அவன் பாளயத்திற்கு வெளியே போய், பாளயத்திற்குள் வராமல், 11. சாயங்காலத்திலே ஜலத்தில் ஸ்நானம்பண்ணி, சூரியன் அஸ்தமிக்கும்போது பாளயத்திற்குள் வரக்கடவன். 12. நீ வெளிக்குப் போயிருக்கத்தக்க இடம் பாளயத்திற்குப் புறம்பே இருக்கவேண்டும். 13. உன் ஆயுதங்களோடே ஒரு சிறு கோலும் உன்னிடத்தில் இருக்கக்கடவது; நீ மலஜலாதிக்குப் போகும்போது, அதனால் மண்ணைத் தோண்டி, மலஜலாதிக்கிருந்து, உன்னிலிருந்து கழிந்துபோனதை மூடிப்போடக்கடவாய். 14. உன் தேவனாகிய கர்த்தர் உன்னை இரட்சிக்கவும், உன் சத்துருக்களை உனக்கு ஒப்புக்கொடுக்கவும், உன் பாளயத்திற்குள்ளே உலாவிக்கொண்டிருக்கிறார்; ஆகையால், அவர் உன்னிடத்தில் அசுசியான காரியத்தைக் கண்டு, உன்னைவிட்டுப் போகாதபடிக்கு, உன் பாளயம் சுத்தமாயிருக்கக்கடவது. 15. தன் எஜமானுக்குத் தப்பி உன்னிடத்தில் வந்த வேலைக்காரனை அவனுடைய எஜமான் கையில் ஒப்புக்கொடாயாக. 16. அவன் உனக்கு இருக்கிற உன் வாசல்கள் ஒன்றிலே தனக்குச் சம்மதியான இடத்தைத் தெரிந்துகொண்டு, அதிலே உன்னுடனே இருப்பானாக; அவனை ஒடுக்கவேண்டாம். 17. இஸ்ரவேலின் குமாரத்திகளில் ஒருத்தியும் வேசியாயிருக்கக்கூடாது; இஸ்ரவேலின் குமாரரில் ஒருவனும் ஆண்புணர்ச்சிக்காரனாயிருக்கக்கூடாது. 18. வேசிப்பணயத்தையும், நாயின் கிரயத்தையும் எந்தப் பொருத்தனையினாலாகிலும் உன் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்திலே கொண்டுவராயாக; அவைகள் இரண்டும் உன் தேவனாகிய கர்த்தருக்கு அருவருப்பானவைகள். 19. கடனாகக் கொடுக்கிற பணத்துக்கும் ஆகாரத்துக்கும், கடனாகக் கொடுக்கிற வேறே எந்தப் பொருளுக்கும், உன் சகோதரன் கையில் வட்டி வாங்காயாக. 20. அந்நியன் கையில் நீ வட்டிவாங்கலாம்; நீ சுதந்தரிக்கப்போகிற தேசத்தில் உன் தேவனாகிய கர்த்தர் நீ கையிடும் வேலையிலெல்லாம் உன்னை ஆசீர்வதிக்கும்படி உன் சகோதரன் கையிலே வட்டி வாங்காயாக. 21. நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பொருத்தனை பண்ணியிருந்தால், அதைச் செலுத்தத் தாமதஞ்செய்யாதே; உன் தேவனாகிய கர்த்தர் அதை நிச்சயமாய் உன் கையில் கேட்பார்; அது உனக்குப் பாவமாகும். 22. நீ பொருத்தனைபண்ணாதிருந்தால், உன்மேல் பாவம் இல்லை. 23. உன் வாயினால் சொன்னதை நிறைவேற்றவேண்டும்; உன் தேவனாகிய கர்த்தருக்கு உன் வாயினால் நீ பொருத்தனைபண்ணிச் சொன்ன உற்சாகபலியைச் செலுத்தித் தீர்ப்பாயாக. 24. நீ பிறனுடைய திராட்சத்தோட்டத்தில் பிரவேசித்தால், உன் ஆசைதீர திராட்சப்பழங்களைத் திர்ப்தியாகப் புசிக்கலாம்; உன் கூடையிலே ஒன்றும் எடுத்துக்கொண்டு போகக்கூடாது. 25. பிறனுடைய விளைச்சலில் பிரவேசித்தால், உன் கையினால் கதிர்களைக் கொய்யலாம்; நீ அந்த விளைச்சலில் அரிவாளை இடலாகாது.
Chapter 24
1. ஒருவன் ஒரு ஸ்திரீயை விவாகம்பண்ணிக்கொண்டபின்பு, அவளிடத்தில் இலச்சையான காரியத்தைக் கண்டு, அவள்மேல் பிரியமற்றவனானால், அவன் தள்ளுதலின் சீட்டை எழுதி, அவள் கையிலே கொடுத்து, அவளைத் தன் வீட்டிலிருந்து அனுப்பிவிடலாம். 2. அவள் அவனுடைய வீட்டைவிட்டுப் போனபின்பு, வேறொருவனுக்கு மனைவியாகலாம். 3. அந்த இரண்டாம் புருஷனும் அவளை வெறுத்து, தள்ளுதலின் சீட்டை எழுதி, அவள் கையிலே கொடுத்து, அவளைத் தன் வீட்டிலிருந்து அனுப்பிவிட்டாலும், அவளை விவாகம்பண்ணின அந்த இரண்டாம் புருஷன் இறந்துபோனாலும், 4. அவள் தீட்டுப்பட்டபடியினால், அவளைத் தள்ளிவிட்ட அவளுடைய முந்தின புருஷன் திரும்பவும் அவளை மனைவியாகச் சேர்த்துக்கொள்ளக்கூடாது; அது கர்த்தருக்கு முன்பாக அருவருப்பானது; உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும் தேசத்தின்மேல் பாவம் வரப்பண்ணாயாக. 5. ஒருவன் ஒரு பெண்ணைப் புதிதாய் விவாகம்பண்ணியிருந்தால், அவன் யுத்தத்திற்குப் புறப்படவேண்டாம்; அவன்மேல் யாதொரு வேலையும் சுமத்தவேண்டாம்; அவன் ஒரு வருஷபரியந்தம் தன் வீட்டில் தன் இஷ்டப்படியிருந்து, தான் விவாகம்பண்ணின ஸ்திரீயைச் சந்தோஷப்படுத்துவானாக. 6. திரிகையின் அடிக்கல்லையாவது அதின் மேற்கல்லையாவது ஒருவரும் அடகாக வாங்கக்கூடாது; அது ஜீவனை அடகு வாங்குவதுபோலாகும். 7. தன் சகோதரராகிய இஸ்ரவேல் புத்திரரில் ஒருவனைத் திருடி, அதினால் ஆதாயந்தேடி, அவனை விற்றுப்போட்ட ஒருவன் அகப்பட்டால், அந்தத் திருடன் கொலைசெய்யப்படவேண்டும்; இப்படியே தீமையை உன் நடுவிலிருந்து விலக்கக்கடவாய். 8. குஷ்டரோகத்தைக்குறித்து லேவியராகிய ஆசாரியர் உங்களுக்குப் போதிக்கும் யாவையும் கவனித்துச் செய்யும்படி மிகவும் எச்சரிக்கையாயிருங்கள்; நான் அவர்களுக்குக் கட்டளையிட்டபடியே செய்யக் கவனமாயிருப்பீர்களாக. 9. நீங்கள் எகிப்திலிருந்து புறப்பட்டு வருகிற வழியிலே உங்கள் தேவனாகிய கர்த்தர் மிரியாமுக்குச் செய்ததை நினைத்துக்கொள்ளுங்கள். 10. பிறனுக்கு நீ ஏதாகிலும் கடனாகக் கொடுத்தால், அவன் கொடுக்கும் அடகை வாங்க நீ அவன் வீட்டிற்குள் பிரவேசிக்கவேண்டாம். 11. வெளியே நிற்பாயாக; கடன் வாங்கினவன் அந்த அடகை வெளியே உன்னிடத்தில் கொண்டுவருவானாக. 12. அவன் தரித்திரனானால், நீ அவன் அடகை வைத்துக்கொண்டு நித்திரை செய்யாமல், 13. அவன் தன் வஸ்திரத்தைப் போட்டுப் படுத்துக்கொண்டு உன்னை ஆசீர்வதிக்கும்படி, பொழுதுபோகும்போது, திரும்ப அந்த அடகை அவனுக்குக் கொடுத்துவிடவேண்டும்; அது உன் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக உனக்கு நீதியாயிருக்கும். 14. உன் சகோதரரிலும், உன் தேசத்தின் வாசல்களிலுள்ள அந்நியரிலும் ஏழையும் எளிமையுமான கூலிக்காரனை ஒடுக்காயாக. 15. அவன் வேலைசெய்த நாளில்தானே, பொழுதுபோகுமுன்னே, அவன் கூலியை அவனுக்குக் கொடுத்துவிடவேண்டும்; அவன் ஏழையும் அதின்மேல் ஆவலுமாயிருக்கிறான்; அதைக் கொடாவிட்டால் அவன் உன்னைக்குறித்துக் கர்த்தரை நோக்கி முறையிடுவான்; அது உனக்குப் பாவமாயிருக்கும். 16. பிள்ளைகளுக்காகப் பிதாக்களும், பிதாக்களுக்காகப் பிள்ளைகளும் கொலைசெய்யப்படவேண்டாம்; அவனவன் செய்த பாவத்தினிமித்தம் அவனவன் கொலைசெய்யப்படவேண்டும். 17. நீ அந்நியனுடைய நியாயத்தையும் திக்கற்ற பிள்ளையின் நியாயத்தையும் புரட்டாமலும், விதவையின் வஸ்திரத்தை அடகாக வாங்காமலும் இருந்து, 18. நீ எகிப்திலே அடிமையாயிருந்ததையும், உன் தேவனாகிய கர்த்தர் உன்னை அங்கேயிருந்து மீட்டுக்கொண்டுவந்ததையும் நினைப்பாயாக; ஆகையால், இப்படிச் செய்யும்படி நான் உனக்குக் கட்டளையிடுகிறேன். 19. நீ உன் பயிரை அறுக்கையில் உன் வயலிலே ஒரு அரிக்கட்டை மறதியாய் வைத்துவந்தாயானால், அதை எடுத்து வரும்படி திரும்பிப் போகவேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தர் உன் கைப்பிரயாசத்திலெல்லாம் உன்னை ஆசீர்வதிக்கும்படி, அதைப் பரதேசிக்கும் திக்கற்ற பிள்ளைக்கும் விதவைக்கும் விட்டுவிடுவாயாக. 20. நீ உன் ஒலிவமரத்தை உதிர்த்துவிட்டபின்பு, கொம்பிலே தப்பியிருக்கிறதைப் பறிக்கும்படி திரும்பிப் போகவேண்டாம்; அதைப் பரதேசிக்கும் திக்கற்ற பிள்ளைக்கும் விதவைக்கும் விட்டுவிடுவாயாக; 21. நீ உன் திராட்சப்பழங்களை அறுத்தபின்பு, மறுபடியும் அதை அறுக்கத் திரும்பிப்போகவேண்டாம்; அதைப் பரதேசிக்கும் திக்கற்ற பிள்ளைக்கும் விதவைக்கும் விட்டுவிடுவாயாக. 22. நீ எகிப்திலே அடிமையாயிருந்ததை நினைப்பாயாக; ஆகையால், இப்படிச் செய்யும்படி நான் உனக்குக் கட்டளையிடுகிறேன்.
Chapter 25
1. மனிதருக்குள்ளே வழக்குண்டாய், அவர்கள் நியாயம் விசாரிக்கப்பட நியாயஸ்தலத்திலே வந்தால், நியாயாதிபதிகள் நீதிமானை நீதிமான் என்றும் குற்றவாளியைக் குற்றவாளி என்றும் தீர்க்கக்கடவர்கள். 2. குற்றவாளி அடிகளுக்குப் பாத்திரவானானால், நியாயாதிபதி அவனைக் கீழே கிடக்கப்பண்ணி, அவன் குற்றத்திற்குத் தக்கதாய்த் தனக்கு முன்பாகக் கணக்கின்படி அவனை அடிப்பிக்கக்கடவன். 3. அவனை நாற்பது அடிவரைக்கும் அடிக்கலாம்; அவனை அதிலும் அதிகமாய் அடிக்கிறதினால் உன் சகோதரன் உன் கண்களுக்கு முன்பாக நீசனாய்த் தோன்றுவான்; ஆதலால் அவனை அதிகமாய் அடிக்கவேண்டாம். 4. போரடிக்கிற மாட்டை வாய்கட்டாயாக. 5. சகோதரர் ஒன்றாய்க் குடியிருக்கும்போது, அவர்களில் ஒருவன் புத்திரசந்தானமில்லாமல் மரித்தால், மரித்தவனுடைய மனைவி புறத்திலிருக்கிற அந்நியனுக்கு மனைவியாகக்கூடாது; அவளுடைய புருஷனின் சகோதரன் அவளைத் தனக்கு மனைவியாகக் கொண்டு, அவளிடத்தில் சேர்ந்து, புருஷனுடைய சகோதரன் செய்யவேண்டிய கடமையைச் செய்யக்கடவன். 6. மரித்த சகோதரனுடைய பேர் இஸ்ரவேலில் அற்றுப்போகாதபடிக்கு, அவன் பேரை அவள் பெறும் தலைப்பிள்ளைக்குத் தரிக்கவேண்டும். 7. அவன் தன் சகோதரனுடைய மனைவியை விவாகம்பண்ண மனதில்லாதிருந்தால், அவன் சகோதரனுடைய மனைவி வாசலில் கூடிய மூப்பரிடத்துக்குப்போய்: என் புருஷனுடைய சகோதரன் தன் சகோதரனுடைய பேரை இஸ்ரவேலில் நிலைக்கப்பண்ணமாட்டேன் என்கிறான்; புருஷனுடைய சகோதரன் செய்யவேண்டிய கடமையைச் செய்ய அவன் மனதில்லாதிருக்கிறான் என்று சொல்வாளாக. 8. அப்பொழுது அந்தப் பட்டணத்து மூப்பர் அவனை அழைப்பித்து அவனோடே பேசியும், அவன் அவளை விவாகம்பண்ணிக்கொள்ள எனக்குச் சம்மதமில்லை என்று பிடிவாதமாய்ச் சொன்னால், 9. அவன் சகோதரனுடைய மனைவி மூப்பரின் கண்களுக்கு முன்பாக அவனிடத்தில் வந்து, அவன் காலிலிருக்கிற பாதரட்சையைக் கழற்றி, அவன் முகத்திலே துப்பி, தன் சகோதரன் வீட்டைக் கட்டாதவனுக்கு இப்படியே செய்யப்படவேண்டும் என்று சொல்லக்கடவள். 10. இஸ்ரவேலில் அப்படிப்பட்டவன் வீடு, பாதரட்சை கழற்றிப்போடப்பட்டவன் வீடு என்னப்படும். 11. புருஷர் ஒருவரோடொருவர் சண்டைபண்ணிக்கொண்டிருக்கையில், ஒருவனுடைய மனைவி தன் புருஷனை அடிக்கிறவன் கைக்கு அவனைத் தப்புவிக்கும்படி வந்து, தன் கையை நீட்டி, அடிக்கிறவன் மானத்தைப் பிடித்ததுண்டானால், 12. அவளுடைய கையைத் தறிக்கக்கடவாய்; உன் கண் அவளுக்கு இரங்கவேண்டாம். 13. உன் பையிலே பெரிதும் சிறிதுமான பலவித நிறைகற்களை வைத்திருக்கவேண்டாம். 14. உன் வீட்டில் பெரிதும் சிறிதுமான பலவித படிகளையும் வைத்திருக்கவேண்டாம். 15. உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்தில் உன் நாட்கள் நீடித்திருக்கும்படி, குறையற்ற சுமுத்திரையான நிறைகல்லும், குறையற்ற சுமுத்திரையான படியும் உன்னிடத்தில் இருக்கவேண்டும். 16. இவைமுதலான அநியாயத்தைச் செய்கிறவன் எவனும் உன் தேவனாகிய கர்த்தருக்கு அருவருப்பானவன். 17. எகிப்திலிருந்து புறப்பட்டு வருகிற வழியிலே, அமலேக்கு தேவனுக்குப் பயப்படாமல் உனக்கு எதிராக வந்து, 18. நீ இளைத்து விடாய்த்திருக்கையில், பின்வருகிற உன் பாளயத்திலுள்ள பலவீனரையெல்லாம் வெட்டினான் என்பதை நினைத்திரு. 19. உன் தேவனாகிய கர்த்தர் நீ சுதந்தரித்துக்கொள்ள உனக்குக் கொடுக்கும் தேசத்தின் சுற்றுப்புறத்தாராகிய உன்னுடைய சத்துருக்களையெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் விலக்கி, உன்னை இளைப்பாறப்பண்ணும்போது, நீ அமலேக்கின் பேரை வானத்தின்கீழ் இராதபடிக்கு அழியப்பண்ணக்கடவாய்; இதை மறக்கவேண்டாம்.
Chapter 26
1. உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும் தேசத்தில் நீ போய்ச் சேர்ந்து, அதைக் கட்டிக்கொண்டு, அதில் வாசம்பண்ணும்போது, 2. உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் உன் தேசத்தில் நீ பயிரிடும் நிலத்தின் கனிகளிலெல்லாம் முந்தின பலனை எடுத்து, ஒரு கூடையிலே வைத்து, உன் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொண்டிருக்கும் ஸ்தானத்திற்குப் போய், 3. அந்நாட்களில் இருக்கும் ஆசாரியனிடத்தில் சென்று, அவனை நோக்கி: கர்த்தர் எங்களுக்குக் கொடுக்க நம்முடைய பிதாக்களுக்கு ஆணையிட்ட தேசத்தில் வந்து சேர்ந்தேன் என்று இன்று உம்முடைய தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் அறிக்கையிடுகிறேன் என்பாயாக. 4. அப்பொழுது ஆசாரியன் அந்தக் கூடையை உன் கையிலிருந்து வாங்கி, அதை உன் தேவனாகிய கர்த்தரின் பலிபீடத்திற்கு முன்பாக வைக்கக்கடவன். 5. அப்பொழுது நீ உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் நின்று வசனித்துச் சொல்லவேண்டியது என்னவென்றால்: என் தகப்பன் அழிவுக்கு நேரான சீரியா தேசத்தானாயிருந்தான்; அவன் கொஞ்சம் ஜனங்களோடே எகிப்துக்குப்போய், அவ்விடத்தில் பரதேசியாய்ச் சஞ்சரித்து, அங்கே பெரிய பலத்த திரட்சியான ஜாதியானான். 6. எகிப்தியர் எங்களை ஒடுக்கி, எங்களைச் சிறுமைப்படுத்தி, எங்கள்மேல் கடினமான வேலையைச் சுமத்தினபோது, 7. எங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டோம்; கர்த்தர் எங்கள் சத்தத்தைக் கேட்டு, எங்கள் சிறுமையையும் எங்கள் வருத்தத்தையும் எங்கள் ஒடுக்கத்தையும் பார்த்து, 8. எங்களைப் பலத்த கையினாலும், ஓங்கிய புயத்தினாலும், மகா பயங்கரங்களினாலும், அடையாளங்களினாலும், அற்புதங்களினாலும், எகிப்திலிருந்து புறப்படப்பண்ணி, 9. எங்களை இவ்விடத்துக்கு அழைத்துவந்து, பாலும் தேனும் ஓடுகிற தேசமாகிய இந்தத் தேசத்தை எங்களுக்குக் கொடுத்தார். 10. இப்பொழுதும், இதோ, கர்த்தாவே, தேவரீர் எனக்குக் கொடுத்த நிலத்தினுடைய கனிகளின் முதற்பலனைக் கொண்டுவந்தேன் என்று சொல்லி, அதை உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் வைத்து, உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் பணிந்து, 11. நீயும் லேவியனும், உன்னிடத்தில் இருக்கிற பரதேசியும் உன் தேவனாகிய கர்த்தர் உனக்கும் உன் வீட்டாருக்கும் அநுக்கிரகம்பண்ணின சகல நன்மைகளினிமித்தமும் சந்தோஷப்படுவீர்களாக. 12. தசமபாகம் செலுத்தும் வருஷமாகிய மூன்றாம் வருஷத்திலே, நீ உன் வரத்திலெல்லாம் பத்தில் ஒன்றை எடுத்து, லேவியனும் பரதேசியும் திக்கற்ற பிள்ளையும் விதவையும் உன் வாசல்களில் புசித்துத் திர்ப்தியாகும்படி அவர்களுக்குக் கொடுத்துத் தீர்ந்தபின்பு, 13. நீ உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் போய் அவரை நோக்கி: தேவரீர் எனக்குக் கொடுத்த எல்லாக் கட்டளைகளின்படியும், நான் பரிசுத்தமான பொருள்களை என் வீட்டிலிருந்து எடுத்துவந்து, லேவியனுக்கும் பரதேசிக்கும் திக்கற்ற பிள்ளைக்கும் விதவைக்கும் கொடுத்தேன்; உம்முடைய கட்டளைகளில் ஒன்றையும் நான் மீறவும் இல்லை மறக்கவும் இல்லை. 14. நான் துக்கங்கொண்டாடும்போது அதில் புசிக்கவும் இல்லை, தீட்டான காரியத்துக்கு அதில் ஒன்றும் எடுக்கவும் இல்லை; இழவுகாரியத்துக்காக அதில் ஒன்றும் படைக்கவும் இல்லை; நான் என் தேவனாகிய கர்த்தரின் சத்தத்திற்குக் கீழ்ப்படிந்து, தேவரீர் எனக்குக் கட்டளையிட்டபடி சகலமும் செய்தேன். 15. நீர் உமது பரிசுத்த வாசஸ்தலமாகிய பரலோகத்திலிருந்து நோக்கிப்பார்த்து, உமது ஜனங்களாகிய இஸ்ரவேலரையும், நீர் எங்கள் பிதாக்களுக்கு ஆணையிட்டபடியே, எங்களுக்குக் கொடுத்த பாலும் தேனும் ஓடுகிற தேசத்தையும் ஆசீர்வதியும் என்று சொல்வாயாக. 16. இந்தக் கட்டளைகளின்படியும் நியாயங்களின்படியும் நீ செய்யும்பொருட்டு, இன்று உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிடுகிறார்; ஆகையால் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் அவைகளைக் காத்து நடக்கக்கடவாய். 17. கர்த்தர் எனக்கு தேவனாயிருப்பார் என்றும், நான் அவர் வழிகளில் நடந்து, அவர் கட்டளைகளையும் அவர் கற்பனைகளையும் அவர் நியாயங்களையும் கைக்கொண்டு, அவர் சத்தத்திற்குக் கீழ்ப்படிவேன் என்றும் நீ இன்று அவருக்கு வாக்குக்கொடுத்தாய். 18. கர்த்தரும் உனக்கு வாக்குக்கொடுத்து உனக்குச் சொல்லியிருக்கிறபடி: நீ என்னுடைய கட்டளைகளையெல்லாம் கைக்கொண்டால், எனக்குச் சொந்த ஜனமாயிருப்பாய் என்றும், 19. நான் உண்டுபண்ணின எல்லா ஜாதிகளைப்பார்க்கிலும், புகழ்ச்சியிலும் கீர்த்தியிலும் மகிமையிலும் உன்னைச் சிறந்திருக்கும்படி செய்வேன் என்றும், நான் சொன்னபடியே, நீ உன் தேவனாகிய கர்த்தரான எனக்குப் பரிசுத்த ஜனமாயிருப்பாய் என்றும், அவர் இன்று உனக்குச் சொல்லுகிறார் என்றான்.
Chapter 27
1. பின்பு மோசே, இஸ்ரவேலின் மூப்பர் கூட இருக்கையில், ஜனங்களை நோக்கி: நான் இன்று உங்களுக்கு விதிக்கிற கட்டளைகளையெல்லாம் கைக்கொள்ளுங்கள். 2. உன் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கும் தேசத்திற்கு நீ போக யோர்தானைக் கடக்கும் நாளில், நீ பெரிய கல்லுகளை நாட்டி, அவைகளுக்குச் சாந்து பூசி, 3. உன் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சொன்னபடி உனக்குக் கொடுக்கும் பாலும் தேனும் ஓடுகிற தேசத்திற்குள் பிரவேசிக்கும்படி நீ கடந்துபோனபின்பு, இந்த நியாயப்பிரமாண வார்த்தைகள் யாவையும் அவைகளில் எழுதக்கடவாய். 4. மேலும் நீங்கள் யோர்தானைக் கடந்தபோது, இன்று நான் உங்களுக்குக் கட்டளையிட்டபடி அந்தக் கல்லுகளை ஏபால் மலையிலே நாட்டி, அவைகளுக்குச் சாந்து பூசி, 5. அங்கே இருப்பாயுதம்படாத கற்களாலே உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டக்கடவாய். 6. நீ உன் தேவனாகிய கர்த்தரின் பலிபீடத்தை முழுக்கற்களாலே கட்டி, அதின்மேல் உன் தேவனாகிய கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலிகளையும், 7. சமாதானபலிகளையும் இட்டு, உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் புசித்துச் சந்தோஷமாயிருந்து, 8. அந்தக் கல்லுகளில் இந்த நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளையெல்லாம் துலக்கமாய் எழுதக்கடவாய் என்று கட்டளையிட்டான். 9. பின்னும் மோசே, லேவியராகிய ஆசாரியர்களும் கூட இருக்கையில், இஸ்ரவேலர் எல்லாரையும் நோக்கி: இஸ்ரவேலே, கவனித்துக் கேள்; இந்நாளிலே உன் தேவனாகிய கர்த்தருக்கு ஜனமானாய். 10. ஆகையால் நீ உன் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிந்து, இன்று நான் உனக்கு விதிக்கிற அவருடைய கற்பனைகளின்படியும் அவருடைய கட்டளைகளின்படியும் செய்வாயாக என்று சொன்னான். 11. மேலும் அந்நாளிலே மோசே ஜனங்களை நோக்கி: 12. நீங்கள் யோர்தானைக் கடந்தபின்பு, ஜனங்கள் ஆசீர்வதிக்கப்படும்படி கெரிசீம் மலையில் சிமியோன், லேவி, யூதா, இசக்கார், யோசேப்பு, பென்யமீன் என்னும் கோத்திரங்கள் நிற்கவேண்டும். 13. சாபங்கூறப்படும்பொருட்டு ஏபால் மலையில் ரூபன், காத், ஆசேர், செபுலோன், தாண், நப்தலி என்னும் கோத்திரங்கள் நிற்கவேண்டும். 14. அப்பொழுது லேவியர் உரத்த சத்தமிட்டு இஸ்ரவேல் மனிதர் எல்லாரையும் பார்த்து: 15. கர்த்தருக்கு அருவருப்பான காரியமாகிய தொழிலாளிகளுடைய கைவேலையால் செய்யப்பட்டதும் வார்ப்பிக்கப்பட்டதுமான யாதொரு விக்கிரகத்தை உண்டுபண்ணி ஒளிப்பிடத்திலே வைக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; அதற்கு ஜனங்களெல்லாரும் பிரதியுத்தரமாக ஆமென் என்று சொல்லக்கடவர்கள். 16. தன் தகப்பனையும் தன் தாயையும் தூஷிக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள். 17. பிறனுடைய எல்லைக்குறியை ஒற்றிப்போடுகிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள். 18. குருடனை வழிதப்பச்செய்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள். 19. பரதேசி திக்கற்றவன் விதவை ஆகிய இவர்களுடைய நியாயத்தைப் புரட்டுகிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள். 20. தன் தகப்பன் மனைவியோடே சயனிக்கிறவன், தன் தகப்பனுடைய மானத்தைத் திறந்தபடியினாலே, சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள். 21. யாதொரு மிருகத்தோடே புணர்ச்சி செய்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள். 22. தன் தகப்பனுக்காவது தாய்க்காவது குமாரத்தியாகிய தன் சகோதரியோடே சயனிக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள். 23. தன் மாமியோடே சயனிக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள். 24. ஒளிப்பிடத்திலே பிறனைக் கொலைசெய்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள். 25. குற்றமில்லாதவனைக் கொலைசெய்யும்படி பரிதானம் வாங்குகிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள். 26. இந்த நியாயப்பிரமாண வார்த்தைகளையெல்லாம் கைக்கொண்டு நடவாதவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.
Chapter 28
1. இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளின்படியெல்லாம் செய்ய நீ கவனமாயிருக்கும்படிக்கு, அவர் சத்தத்திற்கு உண்மையாய்ச் செவிகொடுப்பாயானால், உன் தேவனாகிய கர்த்தர் பூமியிலுள்ள சகல ஜாதிகளிலும் உன்னை மேன்மையாக வைப்பார். 2. நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்துக்குச் செவிகொடுக்கும்போது, இப்பொழுது சொல்லப்படும் ஆசீர்வாதங்களெல்லாம் உன்மேல் வந்து உனக்குப் பலிக்கும். 3. நீ பட்டணத்திலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்; வெளியிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய். 4. உன் கர்ப்பத்தின் கனியும், உன் நிலத்தின் கனியும், உன் மாடுகளின் பெருக்கமும், உன் ஆடுகளின் மந்தைகளுமாகிய உன் மிருகஜீவன்களின் பலனும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும். 5. உன் கூடையும், மாப்பிசைகிற உன் தொட்டியும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும். 6. நீ வருகையிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய், நீ போகையிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய். 7. உனக்கு விரோதமாய் எழும்பும் உன் சத்துருக்களைக் கர்த்தர் உனக்கு முன்பாக முறிய அடிக்கப்படும்படி ஒப்புக்கொடுப்பார்; ஒரு வழியாய் உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள்; ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள். 8. கர்த்தர் உன் களஞ்சியங்களிலும், நீ கையிடும் எல்லா வேலையிலும் உனக்கு ஆசீர்வாதம் கட்டளையிடுவார்; உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்திலே உன்னை ஆசீர்வதிப்பார். 9. நீ உன் தேவனாகிய கர்த்தரின் கட்டளைகளைக் கைக்கொண்டு, அவர் வழிகளில் நடக்கும்போது, கர்த்தர் உனக்கு ஆணையிட்டபடியே, உன்னைத் தமக்குப் பரிசுத்த ஜனமாக நிலைப்படுத்துவார். 10. அப்பொழுது கர்த்தருடைய நாமம் உனக்குத் தரிக்கப்பட்டது என்று பூமியின் ஜனங்களெல்லாம் கண்டு, உனக்குப் பயப்படுவார்கள். 11. உனக்குக் கொடுப்பேன் என்று கர்த்தர் உன் பிதாக்களுக்கு ஆணையிட்ட தேசத்தில், கர்த்தர் உன் கர்ப்பத்தின் கனியிலும், உன் மிருகஜீவன்களின் பலனிலும், உன் நிலத்தின் கனியிலும் உனக்குப் பரிபூரண நன்மை உண்டாகக் கட்டளையிடுவார். 12. ஏற்றகாலத்தில் உன் தேசத்திலே மழை பெய்யவும், நீ கையிட்டுச்செய்யும் வேலைகளையெல்லாம் ஆசீர்வதிக்கவும், கர்த்தர் உனக்குத் தமது நல்ல பொக்கிஷசாலையாகிய வானத்தைத் திறப்பார்; நீ அநேகம் ஜாதிகளுக்குக் கடன்கொடுப்பாய், நீயோ கடன் வாங்காதிருப்பாய். 13. இன்று நான் உங்களுக்கு விதிக்கிற வார்த்தைகள் யாவையும் விட்டு விலகி வேறே தேவர்களைச் சேவிக்கும்படி, நீ வலதுபுறம் இடதுபுறம் சாயாமல், 14. இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தரின் கட்டளைகளைக் கைக்கொள்ளவும் அவைகளின்படி நடக்கவும் அவைகளுக்குச் செவிகொடுத்துவந்தால், கர்த்தர் உன்னை வாலாக்காமல் தலையாக்குவார், நீ கீழாகாமல் மேலாவாய். 15. இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தருடைய எல்லாக் கற்பனைகளின்படியும் கட்டளைகளின்படியும் நடக்கக் கவனமாயிருக்கிறதற்கு, அவர் சத்தத்திற்குச் செவிகொடாதேபோவாயாகில், இப்பொழுது சொல்லப்படும் சாபங்களெல்லாம் உன்மேல் வந்து, உனக்குப் பலிக்கும். 16. நீ பட்டணத்திலும் சபிக்கப்பட்டிருப்பாய், வெளியிலும் சபிக்கப்பட்டிருப்பாய். 17. உன் கூடையும், மாப்பிசைகிற உன் தொட்டியும் சபிக்கப்பட்டிருக்கும். 18. உன் கர்ப்பத்தின் கனியும், உன் நிலத்தின் கனியும், உன் மாடுகளின் பெருக்கமும், உன் ஆடுகளின் மந்தைகளும் சபிக்கப்பட்டிருக்கும். 19. நீ வருகையிலும் சபிக்கப்பட்டிருப்பாய், நீ போகையிலும் சபிக்கப்பட்டிருப்பாய். 20. என்னைவிட்டு விலகி நீ செய்துவருகிற உன் துர்க்கிரியைகளினிமித்தம் சீக்கிரத்தில் கெட்டுப்போய் அழியுமட்டும், நீ கையிட்டுச் செய்கிறதெல்லாவற்றிலும் கர்த்தர் உனக்குச் சாபத்தையும் சஞ்சலத்தையும் கேட்டையும் வரப்பண்ணுவார். 21. நீ சுதந்தரிக்கும் தேசத்தில் கர்த்தர் உன்னை நிர்மூலமாக்குமட்டும் கொள்ளைநோய் உன்னைப் பிடித்துக்கொள்ளப்பண்ணுவார். 22. கர்த்தர் உன்னை ஈளையினாலும், காய்ச்சலினாலும், உஷ்ணத்தினாலும், எரிபந்தத்தினாலும், வறட்சியினாலும், கருக்காயினாலும், விஷப்பனியினாலும் வாதிப்பார்; நீ அழியுமட்டும் இவைகள் உன்னைப் பின்தொடரும். 23. உன் தலைக்குமேலுள்ள வானம் வெண்கலமும், உனக்குக் கீழுள்ள பூமி இரும்புமாய் இருக்கும். 24. உன் தேசத்து மழையைக் கர்த்தர் புழுதியும் மண்ணுமாக பெய்யப்பண்ணுவார்; நீ அழியுமட்டும் அப்படியே வானத்திலிருந்து உன்மேல் இறங்கிவரும். 25. உன் சத்துருக்களுக்கு முன்பாக நீ முறிய அடிக்கப்படும்படி கர்த்தர் செய்வார்; ஒரு வழியாய் அவர்களுக்கு எதிராகப் புறப்படுவாய், ஏழு வழியாய் அவர்களுக்கு முன்பாக ஓடிப்போவாய்; நீ பூமியிலுள்ள எல்லா ராஜ்யங்களிலும் சிதறுண்டுபோவாய். 26. உன் பிணம் ஆகாயத்துப் பறவைகளுக்கும் பூமியின் மிருகங்களுக்கும் இரையாகும்; அவைகளை விரட்டுவாரில்லாதிருப்பார்கள். 27. நீ குணமாகாதபடி கர்த்தர் உன்னை எகிப்தின் எரிபந்தமான பருக்களினாலும், மூலவியாதியினாலும், சொறியினாலும், சிரங்கினாலும் வாதிப்பார். 28. கர்த்தர் உன்னைப் புத்திமயக்கத்தினாலும், குருட்டாட்டத்தினாலும், மனத்திகைப்பினாலும் வாதிப்பார். 29. குருடன் அந்தகாரத்திலே தடவித்திரிகிறதுபோல, நீ பட்டப்பகலிலே தடவிக்கொண்டு திரிவாய்; உன் வழிகளில் ஒன்றும் உனக்கு வாய்க்காதேபோம்; உதவிசெய்வாரில்லாமல் நீ எந்நாளும் ஒடுக்கப்படுகிறவனும் பறிகொடுக்கிறவனுமாய் இருப்பாய். 30. பெண்ணை உனக்கு நியமிப்பாய், வேறொருவன் அவளுடன் சயனிப்பான்; வீட்டைக் கட்டுவாய், அதிலே குடியிருக்கமாட்டாய்; திராட்சத்தோட்டத்தை நாட்டுவாய், அதின் பலனை அனுபவிக்கமாட்டாய். 31. உன் மாடுகள் உன் கண்களுக்கு முன்பாக அடிக்கப்படும், நீ அதில் ஒன்றும் புசிப்பதில்லை; உன் கழுதை உனக்கு முன்பாகக் கொள்ளையிட்டுக் கொண்டுபோகப்பட்டு, உனக்குத் திரும்ப அகப்படாமற்போம்; உன் ஆடுகள் உன் சத்துருக்களுக்குக் கொடுக்கப்படும், விடுவிப்பார் ஒருவரும் உனக்கு இல்லாதிருப்பார்கள். 32. உன் குமாரரும் உன் குமாரத்திகளும் அந்நிய ஜனங்களுக்கு ஒப்புக்கொடுக்கப்படுவார்கள்; அவர்களைக் காண உன் கண்கள் நாடோறும் பார்த்துப் பார்த்துப் பூத்துப்போம்; உன் கையில் பெலனில்லாதிருக்கும். 33. உன் நிலத்தின் கனியையும், உன் பிரயாசத்தின் எல்லாப் பலனையும் நீ அறியாத ஜனங்கள் புசிப்பார்கள்; நீ சகல நாளும் ஒடுக்கப்பட்டும் நொறுக்கப்பட்டும் இருப்பாய். 34. உன் கண்கள் காணும் காரியங்களினாலே மதிமயங்கிப்போவாய். 35. உன் உள்ளங்கால் தொடங்கி உன் உச்சந்தலைமட்டும் குணமாகாதபடிக்கு, கர்த்தர் உன்னை முழங்கால்களிலும் தொடைகளிலும் கொடிய எரிபந்தப் பருக்களினாலே வாதிப்பார். 36. கர்த்தர் உன்னையும், உனக்காக நீ ஏற்படுத்திக்கொண்ட ராஜாவையும், நீயும் உன் பிதாக்களும் அறியாத ஜாதிகளிடத்துக்குப் போகப்பண்ணுவார்; அங்கே நீ மரமும் கல்லுமான அந்நிய தேவர்களைச் சேவிப்பாய். 37. கர்த்தர் உன்னைக் கொண்டுபோய் விடும் எல்லா ஜனங்களுக்குள்ளும் பிரமிப்பும் பழமொழியும் பரியாசச் சொல்லுமாவாய். 38. மிகுந்த விதையை வயலுக்குக் கொண்டுபோவாய், கொஞ்சம் அறுப்பாய்; வெட்டுக்கிளி அதைப் பட்சித்துப்போடும். 39. திராட்சத்தோட்டங்களை நாட்டிப் பயிரிடுவாய், ஆனாலும் நீ திராட்சரசம் குடிப்பதும் இல்லை, திராட்சப்பழங்களைச் சேர்ப்பதும் இல்லை; பூச்சி அதைத் தின்றுபோடும். 40. ஒலிவமரங்கள் உன் எல்லைகளிலெங்கும் இருக்கும், ஆனாலும் அதின் எண்ணெயை நீ பூசிக்கொள்வதில்லை; உன் ஒலிவமரத்தின் பிஞ்சுகள் உதிர்ந்துபோம். 41. நீ குமாரரையும் குமாரத்திகளையும் பெறுவாய், ஆனாலும் அவர்கள் உன்னோடேகூட இரார்கள்; அவர்கள் சிறைப்பட்டுப்போவார்கள். 42. உன் மரங்களெல்லாவற்றையும் உன் நிலத்தின் கனிகளையும் விட்டில் பட்சித்துப்போடும். 43. உன் நடுவிலிருக்கிற அந்நியன் உனக்கு மேற்பட்டு மேன்மேலும் உயர்ந்திருப்பான்; நீ மிகவும் தாழ்த்தப்பட்டுப்போவாய். 44. அவன் உன்னிடத்தில் கடன்படான், நீ அவனிடத்தில் கடன்படுவாய்; அவன் தலையாயிருப்பான், நீ வாலாயிருப்பாய். 45. உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு விதித்த அவருடைய கற்பனைகளையும் கட்டளைகளையும் கைக்கொள்ளும்படி, நீ அவர் சத்தத்திற்குச் செவிகொடாதபடியினால், இந்தச் சாபங்கள் எல்லாம் உன்மேல் வந்து, நீ அழியுமட்டும் உன்னைத் தொடர்ந்து பிடித்து, 46. உன்னிலும் உன் சந்ததியிலும் என்றைக்கும் அடையாளமாகவும் அற்புதமாகவும் இருக்கும். 47. சகலமும் பரிபூரணமாயிருக்கையில், நீ மனமகிழ்ச்சியோடும் களிப்போடும் உன் தேவனாகிய கர்த்தரைச் சேவியாமற்போனதினிமித்தம், 48. சகலமும் குறைவுபட்டு, பட்டினியோடும் தாகத்தோடும் நிர்வாணத்தோடும், கர்த்தர் உனக்கு விரோதமாய் அனுப்பும் சத்துருக்களைச் சேவிப்பாய்; அவர்கள் உன்னை அழித்துத் தீருமட்டும், இருப்பு நுகத்தடியை உன் கழுத்தின்மேல் போடுவார்கள். 49. கிழவன் என்று முகம்பாராமலும், வாலிபன் என்று இரங்காமலும் இருக்கும் கொடிய முகமுள்ளதும், 50. உனக்குத் தெரியாத பாஷையைப் பேசுகிறதுமான ஜாதியை வெகுதூரத்திலுள்ள பூமியின் கடையாந்தரத்திலிருந்து கர்த்தர் உன்மேல் கழுகு பறக்கும் வேகமாய் வரப்பண்ணுவார். 51. நீ அழியுமட்டும் அந்த ஜாதியான் உன் மிருகஜீவன்களின் பலனையும், உன் நிலத்தின் கனியையும் புசிப்பான்; அவன் உன்னை அழித்துத் தீருமட்டும் உன் தானியத்திலும், திராட்சரசத்திலும், எண்ணெயிலும், உன் மந்தைகளிலுள்ள ஆடுமாடுகளிலும் உனக்கு ஒன்றும் மீதியாக வைக்கமாட்டான். 52. உன் தேசமெங்கும் நீ நம்பியிருக்கும் உயரமும் அரணிப்புமான உன் மதில்கள் விழுமளவும், அவன் உன் வாசல்களிலெங்கும் உன்னை முற்றிகைப்போடுவான்; உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுத்த உன்னுடைய தேசமெங்குமுள்ள உன்னுடைய வாசல்கள்தோறும் உன்னை முற்றிகைப்போடுவான். 53. உன் சத்துருக்கள் உன்னை முற்றிகைப்போட்டு நெருக்குங்காலத்தில், உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுத்த உன் கர்ப்பக்கனியான உன் புத்திரபுத்திரிகளின் மாம்சத்தைத் தின்பாய். 54. உன் சத்துருக்கள் உன் வாசல்களிலெங்கும் உன்னை முற்றிகைப்போட்டு நெருக்குங்காலத்தில், உன்னிடத்தில் செருக்கும் சுகசெல்வமுமுள்ள மனிதன் சகலத்தையும் இழந்து, தன் இல்லாமையினாலே தான் தின்னும் தன் பிள்ளைகளின் மாம்சத்திலே, 55. தன் சகோதரனுக்காகிலும், தன் மார்பில் இருக்கிற மனைவிக்காகிலும், தனக்கு மீந்திருக்கிற தன் மக்களில் ஒருவனுக்காகிலும் கொஞ்சமேனும் கொடாதபடி அவர்கள்மேல் வன்கண்ணாயிருப்பான். 56. உன்னிடத்தில் சுகசெல்வத்தினாலும் செருக்கினாலும் தன் உள்ளங்காலைத் தரையின்மேல் வைக்க அஞ்சின செருக்கும் சுகசெல்வமுமுள்ள ஸ்திரீ தன் கால்களின் நடுவே புறப்பட்ட தன் நஞ்சுக்கொடியினிமித்தமும், தான் பெற்ற பிள்ளைகளினிமித்தமும், தன் மார்பில் இருக்கிற புருஷன்மேலும் தன் குமாரன்மேலும் தன் குமாரத்தியின்மேலும் வன்கண்ணாயிருப்பாள்; 57. உன் சத்துருக்கள் உன் வாசல்களில் உன்னை முற்றிகைப்போட்டு நெருக்குங்காலத்தில், சகலமும் குறைவுபடுவதினால், அவைகளை இரகசியமாய்த் தின்னுவான். 58. உன் தேவனாகிய கர்த்தர் என்னும் மகிமையும் பயங்கரமுமான நாமத்திற்குப் பயப்படும்படிக்கு, நீ இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற இந்த நியாயப்பிரமாண வார்த்தைகளின்படியெல்லாம் நடக்கக் கவனமாயிராவிட்டால், 59. கர்த்தர் நீங்காத பெரிய வாதைகளாலும் நீங்காத கொடிய ரோகங்களாலும் உன்னையும் உன் சந்ததியையும் அதிசயமாய் வாதித்து, 60. நீ கண்டு பயந்த எகிப்து வியாதிகளெல்லாம் உன்மேல் வருவிப்பார்; அவைகள் உன்னைப் பற்றிக்கொள்ளும். 61. இந்த நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதியிராத எல்லாப் பிணியையும் வாதையையும் நீ அழியுமளவும் கர்த்தர் உன்மேல் வரப்பண்ணுவார். 62. திரட்சியிலே வானத்து நட்சத்திரங்களைப்போல் இருந்த நீங்கள், உங்கள் தேவனாகிய கர்த்தரின் சத்தத்திற்குச் செவிகொடாமற்போனதினால், கொஞ்சம் ஜனமாய்ப்போவீர்கள். 63. கர்த்தர் உங்களுக்கு நன்மை செய்யவும் உங்களைப் பெருகப்பண்ணவும் எப்படி உங்கள்மேல் இரம்மியமாயிருந்தாரோ, அப்படியே கர்த்தர் உங்களை அழிக்கவும் உங்களை அதம்பண்ணவும் இரம்மியமாயிருப்பார்; நீங்கள் சுதந்தரிக்கப்போகிற தேசத்திலிருந்து பிடுங்கிப்போடப்படுவீர்கள். 64. கர்த்தர் உன்னைப் பூமியின் ஒரு முனை துவக்கி பூமியின் மறுமுனைமட்டும் இருக்கிற எல்லா ஜனங்களுக்குள்ளும் சிதற அடிப்பார்; அங்கே நீயும் உன் பிதாக்களும் அறியாத மரமும் கல்லுமான அந்நிய தேவர்களைச் சேவிப்பாய். 65. அந்த ஜாதிகளுக்குள்ளே உனக்கு இளைப்பாறுதல் இராது, உன் உள்ளங்கால்கள் தங்கித் தரிக்க இடமும் இராது; அங்கே கர்த்தர் உனக்குத் தத்தளிக்கிற இருதயத்தையும், சோர்ந்துபோகிற கண்களையும், மனச்சஞ்சலத்தையும் கொடுப்பார். 66. உன் ஜீவன் உனக்குச் சந்தேகத்தில் ஊசலாடும்; உன் ஜீவனைப்பற்றி நம்பிக்கையில்லாமல் இரவும் பகலும் திகில்கொண்டிருப்பாய். 67. நீ பயப்படும் உன் இருதயத்தின் திகிலினாலும், உன் கண்கள் காணும் காட்சியினாலும், விடியற்காலத்தில் எப்பொழுது சாயங்காலம் வருமோ என்றும், சாயங்காலத்தில், எப்பொழுது விடியற்காலம் வருமோ என்றும் சொல்லுவாய். 68. இனிக் காணாதிருப்பாய் என்று நான் உனக்குச் சொன்னவழியாய், கர்த்தர் உன்னைக் கப்பல்களிலே எகிப்திற்குத் திரும்பக் கொண்டுபோகப்பண்ணுவார்; அங்கே உங்கள் சத்துருக்களுக்கு வேலைக்காரராகவும் வேலைக்காரிகளாகவும் விற்கப்படுவீர்கள்; உங்களைக் கொள்வாரும் இல்லாதிருப்பார்கள் என்றான்.
Chapter 29
1. ஓரேபிலே இஸ்ரவேல் புத்திரரோடே பண்ணிக்கொண்ட உடன்படிக்கையை அல்லாமல், மோவாபின் தேசத்திலே அவர்களோடே உடன்படிக்கைபண்ணக் கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்ட வார்த்தைகள் இவைகளே. 2. மோசே இஸ்ரவேலர் எல்லாரையும் வரவழைத்து, அவர்களை நோக்கி: எகிப்துதேசத்தில் உங்கள் கண்களுக்கு முன்பாகப் பார்வோனுக்கும் அவனுடைய எல்லா ஊழியக்காரருக்கும் அவனுடைய தேசமுழுவதற்கும், 3. கர்த்தர் செய்த பெரிய சோதனைகளையும், பெரிய அடையாளங்களையும், அற்புதங்களையும் கண்ணாரக் கண்டீர்களே. 4. ஆகிலும் கர்த்தர் உங்களுக்கு உணரத்தக்க இருதயத்தையும், காணத்தக்க கண்களையும், கேட்கத்தக்க காதுகளையும் இந்நாள்வரைக்கும் கொடுக்கவில்லை. 5. கர்த்தராகிய நான் உங்கள் தேவன் என்று நீங்கள் அறிந்துகொள்ளும்படிக்கு, நான் நாற்பது வருஷம் உங்களை வனாந்தரத்தில் நடத்தினேன்; உங்கள்மேலிருந்த வஸ்திரம் பழையதாய்ப் போகவும் இல்லை, உங்கள் காலிலிருந்த பாதரட்சைகள் பழையதாய்ப் போகவும் இல்லை. 6. நீங்கள் அப்பம் சாப்பிடவும் இல்லை, திராட்சரசமும் மதுவும் குடிக்கவும் இல்லை என்றார். 7. நீங்கள் இவ்விடத்துக்கு வந்தபோது, எஸ்போனின் ராஜாவாகிய சீகோனும், பாசானின் ராஜாவாகிய ஓகும் நம்மோடே யுத்தஞ்செய்யப் புறப்பட்டார்கள்; நாம் அவர்களை முறிய அடித்து, 8. அவர்களுடைய தேசத்தைப் பிடித்து, அதை ரூபனியருக்கும் காத்தியருக்கும் மனாசேயின் பாதிக் கோத்திரத்திற்கும் சுதந்தரமாகக் கொடுத்தோம். 9. இப்பொழுதும் நீங்கள் செய்வதெல்லாம் உங்களுக்கு வாய்க்கும்படிக்கு, இந்த உடன்படிக்கையின் வார்த்தைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்வீர்களாக. 10. உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சொன்னபடியேயும், உன் பிதாக்களாகிய ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் ஆணையிட்டுக் கொடுத்தபடியேயும், இன்று உன்னைத் தமக்கு ஜனமாக ஏற்படுத்திக்கொள்ளவும், தாம் உனக்கு தேவனாயிருக்கவும், 11. நீ உன் தேவனாகிய கர்த்தருடைய உடன்படிக்கைக்கும் இன்று அவர் உன்னோடே பண்ணுகிற அவருடைய ஆணையுறுதிக்கும் உட்படும்படிக்கு, 12. உங்கள் கோத்திரங்களின் தலைவரும் உங்கள் மூப்பரும் உங்கள் அதிபதிகளும் இஸ்ரவேலின் சகல புருஷரும், 13. உங்கள் பிள்ளைகளும், உங்கள் மனைவிகளும், உங்கள் பாளயத்துக்குள்ளிருக்கிற உங்கள் விறகுக்காரனும், உங்கள் தண்ணீர்க்காரனுமான அந்நியர் எல்லாரும் இன்று உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சமுகத்தில் நிற்கிறீர்களே. 14. நான் உங்களோடேமாத்திரம் இந்த உடன்படிக்கையையும் இந்த ஆணையையும் உறுதியையும் பண்ணாமல், 15. இன்று இங்கே நம்மோடேகூட நம்முடைய தேவனாகிய கர்த்தருடைய சமுகத்தில் நிற்கிறவர்களோடேயும், இன்று இங்கே நம்மோடே இராதவர்களோடேயும்கூட அதைப் பண்ணுகிறேன். 16. நாம் எகிப்து தேசத்தில் குடியிருந்ததையும், நாம் கடந்துவந்த இடங்களிலிருந்த ஜாதிகளின் நடுவில் நடந்துவந்ததையும் நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். 17. அவர்களுடைய அருவருப்புகளையும், அவர்களிடத்திலிருக்கிற மரமும் கல்லும் வெள்ளியும் பொன்னுமான அவர்களுடைய நரகலான தேவர்களையும் கண்டிருக்கிறீர்கள். 18. ஆகையால், அந்த ஜாதிகளின் தேவர்களைச் சேவிக்கப் போகும்படி, இன்று நம்முடைய தேவனாகிய கர்த்தரைவிட்டு அகலுகிற இருதயமுள்ள ஒரு புருஷனாகிலும் ஸ்திரீயாகிலும் குடும்பமாகிலும் கோத்திரமாகிலும் உங்களில் இராதபடிக்கும், நஞ்சையும் எட்டியையும் முளைப்பிக்கிற யாதொரு வேர் உங்களில் இராதபடிக்கும் பாருங்கள். 19. அப்படிப்பட்டவன் இந்த ஆணையுறுதியின் வார்த்தைகளைக் கேட்டும், தாகத்தினிமித்தம் வெறிக்கக் குடித்து, மன இஷ்டப்படி நடந்தாலும் எனக்குச் சுகமுண்டாயிருக்கும் என்று தன் உள்ளத்தைத் தேற்றிக்கொண்டால், கர்த்தர் அவனை மன்னிக்கச் சித்தமாயிரார். 20. அப்பொழுது கர்த்தரின் கோபமும் எரிச்சலும் அந்த மனிதன்மேல் புகையும்; இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற சாபங்களெல்லாம் அவன்மேல் தங்கும்; கர்த்தர் அவன் பேரை வானத்தின்கீழ் இராதபடிக்குக் குலைத்துப்போடுவார். 21. இந்த நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதியிருக்கிற உடன்படிக்கையினுடைய சகல சாபங்களின்படியும் அவனுக்குத் தீங்காக கர்த்தர் இஸ்ரவேல் கோத்திரங்கள் எல்லாவற்றிற்கும் அவனைப் புறம்பாக்கிப்போடுவார். 22. அப்பொழுது உங்களுக்குப்பின் எழும்பும் தலைமுறையான உங்கள் பிள்ளைகளும், தூரதேசத்திலிருந்து வரும் அந்நியரும், கர்த்தர் இந்த தேசத்துக்கு வருவித்த வாதைகளையும் நோய்களையும் காணும்போதும், 23. கர்த்தர் தமது கோபத்திலும் தமது உக்கிரத்திலும் சோதோமையும் கொமோராவையும் அத்மாவையும் செபோயீமையும் கவிழ்த்துப்போட்டதுபோல, இந்த தேசத்தின் நிலங்களெல்லாம் விதைப்பும் விளைவும் யாதொரு பூண்டின் முளைப்பும் இல்லாதபடிக்கு, கந்தகத்தாலும் உப்பாலும் எரிக்கப்பட்டதைக் காணும்போதும், 24. அந்த ஜாதிகளெல்லாம் கர்த்தர் இந்த தேசத்திற்கு ஏன் இப்படிச் செய்தார்; இந்த மகா கோபம் பற்றியெரிந்ததற்குக் காரணம் என்ன என்று சொல்லுவார்கள். 25. அதற்கு: அவர்களுடைய பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் அவர்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணினபோது, அவர்களோடே பண்ணின உடன்படிக்கையை அவர்கள் விட்டுப்போய், 26. தாங்கள் அறியாமலும் தங்களுக்கு ஒரு பலனும் அளிக்காமலும் இருக்கிற தேவர்களாகிய வேறே தேவர்களைச் சேவித்து, அவைகளைப் பணிந்துகொண்டபடியினாலே, 27. கர்த்தர் இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற சாபங்கள் எல்லாவற்றையும் இந்தத் தேசத்தின்மேல் வரப்பண்ண, அதின்மேல் கோபம் மூண்டவராகி, 28. அவர்களைக் கோபத்தினாலும் உக்கிரத்தினாலும் மகா எரிச்சலினாலும் அவர்களுடைய தேசத்திலிருந்து வேரோடே பிடுங்கி, இந்நாளில் இருக்கிறதுபோல, அவர்களை வேறே தேசத்தில் எறிந்துவிட்டார் என்று சொல்லப்படும். 29. மறைவானவைகள் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியவைகள்; வெளிப்படுத்தப்பட்டவைகளோ, இந்த நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளின்படியெல்லாம் செய்யும்படிக்கு, நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கும் என்றென்றைக்கும் உரியவைகள்.
Chapter 30
1. நான் உனக்கு முன்பாக வைத்த ஆசீர்வாதமும் சாபமுமாகிய இந்தக் காரியங்களெல்லாம் உன்மேல் வரும்போது: நீ உன் தேவனாகிய கர்த்தரால் துரத்திவிடப்பட்டு, எல்லா ஜாதிகளிடத்திலும் போயிருக்கும்போது, நீ உன் இருதயத்திலே சிந்தனைசெய்து, 2. உன் தேவனாகிய கர்த்தரிடத்துக்கே திரும்பி, இன்று நான் உனக்குக் கற்பிக்கிறபடியெல்லாம், நீயும் உன் பிள்ளைகளும் உங்கள் முழு இருதயத்தோடும் உங்கள் முழு ஆத்துமாவோடும் அவருடைய சத்தத்திற்குச் செவிகொடுத்தால், 3. உன் தேவனாகிய கர்த்தர் உன் சிறையிருப்பைத் திருப்பி, உனக்கு இரங்கி, உன் தேவனாகிய கர்த்தர் உன்னைச் சிதற அடித்த எல்லா ஜனங்களிடத்திலும் இருக்கிற உன்னைத் திரும்பச் சேர்த்துக்கொள்ளுவார். 4. உன்னுடையவர்கள் வானத்தின் கடையான திசைமட்டும் துரத்துண்டிருந்தாலும், உன் தேவனாகிய கர்த்தர் அங்கே இருக்கிற உன்னைக் கூட்டி, அங்கேயிருந்து உன்னைக் கொண்டுவந்து, 5. உன் பிதாக்கள் சுதந்தரித்திருந்த தேசத்தை நீ சுதந்தரிக்கும்படிக்கு, உன் தேவனாகிய கர்த்தர் அதில் உன்னைச் சேர்த்து, உனக்கு நன்மைசெய்து, உன் பிதாக்களைப்பார்க்கிலும் உன்னைப் பெருகப்பண்ணுவார். 6. உன் தேவனாகிய கர்த்தரில் நீ உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் அன்புகூர்ந்து பிழைக்கும்படி, உன் தேவனாகிய கர்த்தர் உன் இருதயத்தையும் உன் சந்ததியாரின் இருதயத்தையும் விருத்தசேதனம்பண்ணி, 7. இந்தச் சாபங்களையெல்லாம் உன் சத்துருக்கள்மேலும் உன்னைத் துன்பப்படுத்தின உன் பகைஞர்மேலும் சுமரப்பண்ணுவார். 8. நீயோ மனந்திரும்பி, கர்த்தரின் சத்தத்திற்குச் செவிகொடுத்து, நான் இன்று உனக்குக் கற்பிக்கிற அவருடைய எல்லாக் கற்பனைகளின்படியும் செய்வாய். 9. அப்பொழுது உனக்கு நன்மை உண்டாகும்படி உன் தேவனாகிய கர்த்தர் உன் கைகள் செய்யும் எல்லா வேலைகளிலும், உன் கர்ப்பத்தின் கனியிலும், உன் மிருகஜீவனின் பலனிலும், உன் நிலத்தின் கனியிலும் உனக்குப் பரிபூரணமுண்டாகச் செய்வார். 10. உன் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்திற்குச் செவிகொடுத்து, இந்த நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதியிருக்கிற அவருடைய கற்பனைகளையும் அவருடைய கட்டளைகளையும் கைக்கொள்ளும்போதும், உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் திரும்பும்போதும், கர்த்தர் உன் பிதாக்கள்மேல் சந்தோஷமாயிருந்ததுபோல, உன்மேலும் உனக்கு நன்மை உண்டாகத் திரும்பவும் சந்தோஷமாயிருப்பார். 11. நான் இன்று உனக்கு விதிக்கிற கட்டளை உனக்கு மறைபொருளும் அல்ல, அது உனக்குத் தூரமானதும் அல்ல. 12. நாங்கள் அதைக் கேட்டு, அதின்படி செய்யும்பொருட்டு, எங்கள்நிமித்தம் வானத்துக்கு ஏறி, அதை எங்களுக்குக் கொண்டுவருகிறவன் யாரென்று நீ சொல்லத்தக்கதாக, அது வானத்திலுள்ளதும் அல்ல; 13. நாங்கள் அதைக் கேட்டு, அதின்படி செய்யும்பொருட்டு, எங்கள்நிமித்தம் சமுத்திரத்தைக் கடந்து, அதைக் கொண்டுவருகிறவன் யார் என்று நீ சொல்லத்தக்கதாக, அது சமுத்திரத்திற்கு அப்புறத்திலுள்ளதும் அல்ல; 14. நீ அந்த வார்த்தையின்படியே செய்யும்பொருட்டு, அது உனக்கு மிகவும் சமீபமாய் உன் வாயிலும் உன் இருதயத்திலும் இருக்கிறது. 15. இதோ, ஜீவனையும் நன்மையையும், மரணத்தையும் தீமையையும் இன்று உனக்கு முன்னே வைத்தேன். 16. நீ பிழைத்துப் பெருகும்படிக்கும், நீ சுதந்தரிக்கப்போகிற தேசத்தில் உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதிக்கும்படிக்கும், நீ உன் தேவனாகிய கர்த்தரில் அன்புகூரவும், அவர் வழிகளில் நடக்கவும், அவர் கற்பனைகளையும் கட்டளைகளையும் நியாயங்களையும் கைக்கொள்ளவும், நான் இன்று உனக்குக் கற்பிக்கிறேன். 17. நீ கேளாதபடிக்கு, மனம் பேதித்து, இழுப்புண்டுபோய், வேறே தேவர்களைப் பணிந்து, அவர்களைச் சேவிப்பாயானால், 18. நீங்கள் சுதந்தரிக்கிறதற்கு யோர்தானைக் கடந்துபோகிற தேசத்தில் நெடுநாள் வாழாமல், நிச்சயமாய் அழிந்துபோவீர்கள் என்பதை இன்று உங்களுக்கு அறிவிக்கிறேன். 19. நான் ஜீவனையும் மரணத்தையும், ஆசீர்வாதத்தையும் சாபத்தையும் உனக்குமுன் வைத்தேன் என்று உங்கள்மேல் வானத்தையும் பூமியையும் இன்று சாட்சிவைக்கிறேன்; ஆகையால், நீயும் உன் சந்ததியும் பிழைக்கும்படிக்கு, நீ ஜீவனைத் தெரிந்துகொண்டு, 20. கர்த்தர் உன் பிதாக்களாகிய ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் கொடுப்பேன் என்று அவர்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்த தேசத்திலே குடியிருக்கும்படிக்கு, உன் தேவனாகிய கர்த்தரில் அன்புகூர்ந்து, அவர் சத்தத்திற்குச் செவிகொடுத்து, அவரைப் பற்றிக்கொள்வாயாக; அவரே உனக்கு ஜீவனும் தீர்க்காயுசுமானவர் என்றான்.
Chapter 31
1. பின்னும் மோசே போய் இஸ்ரவேலர் யாவரையும் நோக்கி: 2. இன்று நான் நூற்றிருபது வயதுள்ளவன்; இனி நான் போக்கும் வரத்துமாயிருக்கக்கூடாது; இந்த யோர்தானை நீ கடந்துபோவதில்லை என்று கர்த்தர் என்னோடே சொல்லியிருக்கிறார். 3. உன் தேவனாகிய கர்த்தர்தாமே உனக்கு முன்பாகக் கடந்துபோவார், அவரே உனக்கு முன்னின்று, அந்த தேசத்தாரை அழிப்பார்; நீ அவர்கள் தேசத்தைச் சுதந்தரிப்பாய்; கர்த்தர் சொன்னபடியே யோசுவா உனக்கு முன்பாகக் கடந்துபோவான். 4. கர்த்தர் அழித்த எமோரியரின் ராஜாக்களாகிய சீகோனுக்கும், ஓகுக்கும், அவர்கள் தேசத்திற்கும் செய்ததுபோலவே அவர்களுக்கும் செய்வார். 5. நான் உங்களுக்கு விதித்த கட்டளைகளின்படி அவர்களுக்குச் செய்வதற்கு கர்த்தர் அவர்களை உங்களுக்கு ஒப்புக்கொடுப்பார். 6. நீங்கள் பலங்கொண்டு திடமனதாயிருங்கள், அவர்களுக்குப் பயப்படவும் திகைக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தர்தாமே உன்னோடேகூட வருகிறார்; அவர் உன்னை விட்டு விலகுவதும் இல்லை, உன்னைக் கைவிடுவதும் இல்லை என்று சொன்னான். 7. பின்பு மோசே யோசுவாவை அழைத்து, இஸ்ரவேலர் எல்லாரும் பார்த்திருக்க, அவனை நோக்கி: பலங்கொண்டு திடமனதாயிரு; கர்த்தர் இவர்களுக்குக் கொடுப்பேன் என்று இவர்களுடைய பிதாக்களுக்கு ஆணையிட்ட தேசத்துக்கு நீ இந்த ஜனத்தை அழைத்துக்கொண்டுபோய், அதை இவர்கள் சுதந்தரிக்கும்படி செய்வாய். 8. கர்த்தர்தாமே உனக்கு முன்பாகப் போகிறவர், அவர் உன்னோடே இருப்பார்; அவர் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை; நீ பயப்படவும் கலங்கவும் வேண்டாம் என்றான். 9. மோசே இந்த நியாயப்பிரமாணத்தை எழுதி, அதைக் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கிற லேவிபுத்திரரான ஆசாரியருக்கும் இஸ்ரவேலுடைய மூப்பர் எல்லாருக்கும் ஒப்புவித்து, 10. அவர்களுக்குக் கட்டளையிட்டது என்னவென்றால்: விடுதலையின் வருஷமாகிய ஒவ்வொரு ஏழாம் வருஷத்தின் முடிவிலே கூடாரப்பண்டிகையில், 11. உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்துகொள்ளும் ஸ்தானத்தில், இஸ்ரவேலர் எல்லாரும் அவருடைய சந்நிதியில் சேர்ந்து வந்திருக்கும்போது, இந்த நியாயப்பிரமாணத்தை இஸ்ரவேலர் எல்லாரும் கேட்க அவர்களுக்கு முன்பாக வாசிக்கக்கடவாய். 12. புருஷர்களும் ஸ்திரீகளும் பிள்ளைகளும் உன் வாசல்களிலிருக்கும் அந்நியர்களும் கேட்டு, கற்றுக்கொண்டு, உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து, இந்த நியாயப்பிரமாண வார்த்தைகளின்படியெல்லாம் செய்யக் கவனமாயிருக்கும்படிக்கும், 13. அதை அறியாத அவர்கள் பிள்ளைகளும் கேட்டு, நீங்கள் யோர்தானைக் கடந்து சுதந்தரிக்கப்போகிற தேசத்தில் உயிரோடிருக்கும் நாளெல்லாம், உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பயப்படக் கற்றுக்கொள்ளும்படிக்கும் ஜனத்தைக்கூட்டி, அதை வாசிக்கவேண்டும் என்றான். 14. பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி: இதோ, நீ மரிக்குங்காலம் சமீபித்திருக்கிறது; நான் யோசுவாவுக்குக் கட்டளை கொடுக்கும்படி, அவனை அழைத்துக்கொண்டு, ஆசரிப்புக் கூடாரத்தில் வந்து நில்லுங்கள் என்றார்; அப்படியே மோசேயும் யோசுவாவும் போய், ஆசரிப்புக் கூடாரத்தில் நின்றார்கள். 15. கர்த்தர் கூடாரத்திலே மேகஸ்தம்பத்தில் தரிசனமானார்; மேகஸ்தம்பம் கூடார வாசல்மேல் நின்றது. 16. கர்த்தர் மோசேயை நோக்கி: நீ உன் பிதாக்களோடே படுத்துக்கொள்ளப்போகிறாய்; இந்த ஜனங்கள் எழும்பி, தாங்கள் போயிருக்கும் தேசத்திலுள்ள அந்நிய தேவர்களைச் சோரமார்க்கமாய்ப் பின்பற்றி, என்னைவிட்டு, தங்களுடனே நான் பண்ணின உடன்படிக்கையை மீறுவார்கள். 17. அந்நாளிலே நான் அவர்கள்மேல் கோபங்கொண்டு, அவர்களைக் கைவிட்டு, என் முகத்தை அவர்களுக்கு மறைப்பேன்; அதினால் அவர்கள் பட்சிக்கப்படும்படிக்கு அநேக தீங்குகளும் இக்கட்டுகளும் அவர்களைத் தொடரும்; அந்நாளிலே அவர்கள்: எங்கள் தேவன் எங்கள் நடுவே இராததினாலே அல்லவா இந்தத் தீங்குகள் எங்களைத் தொடர்ந்தது என்பார்கள். 18. அவர்கள் வேறே தேவர்களிடத்தில் திரும்பிப்போய்ச் செய்த சகல தீமைகளினிமித்தமும் நான் அந்நாளிலே என் முகத்தை மறைக்கவே மறைப்பேன். 19. இப்பொழுது நீங்கள் இந்தப் பாட்டை எழுதிக்கொண்டு, இதை இஸ்ரவேல் புத்திரருக்குப் படிப்பித்து, இந்தப் பாட்டு எனக்குச் சாட்சியாக இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே இருக்கும்படி இதை அவர்கள் வாயில் வழங்கப்பண்ணுங்கள். 20. நான் அவர்கள் பிதாக்களுக்கு ஆணையிட்டுக்கொடுத்த பாலும் தேனும் ஓடுகிற தேசத்தில் அவர்களைப் பிரவேசிக்கப்பண்ணினபின்பு, அவர்கள் புசித்துத் திர்ப்தியாகிக் கொழுத்துப்போயிருக்கும்போது, அவர்கள் வேறே தேவர்களிடத்தில் திரும்பி, அவர்களைச் சேவித்து, எனக்குக் கோபம் மூட்டி, என் உடன்படிக்கையை மீறுவார்கள். 21. அநேக தீங்குகளும் இக்கட்டுகளும் அவர்களைத் தொடரும்போது, அவர்கள் சந்ததியாரின் வாயில் மறந்துபோகாதிருக்கும் இந்தப் பாட்டே அவர்களுக்கு விரோதமான சாட்சிபகரும்; நான் ஆணையிட்டுக்கொடுத்த தேசத்தில் அவர்களைப் பிரவேசிக்கப்பண்ணாதிருக்கிற இப்பொழுதே அவர்கள் கொண்டிருக்கும் எண்ணம் இன்னது என்று அறிவேன் என்றார். 22. அன்றைக்கே மோசே அந்தப் பாட்டை எழுதி, அதை இஸ்ரவேல் புத்திரருக்குப் படிப்பித்தான். 23. அவர் நூனின் குமாரனாகிய யோசுவாவை நோக்கி: நீ பலங்கொண்டு திடமனதாயிரு, இஸ்ரவேல் புத்திரருக்கு நான் ஆணையிட்டுக்கொடுத்த தேசத்தில் நீ அவர்களை நடத்திக்கொண்டுபோவாய்; நான் உன்னோடிருப்பேன் என்று கட்டளையிட்டார். 24. மோசே இந்த நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகள் முழுவதையும் ஒரு புஸ்தகத்தில் எழுதி முடித்தபின்பு, 25. மோசே கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கிற லேவியரை நோக்கி: 26. நீங்கள் இந்த நியாயப்பிரமாண புஸ்தகத்தை எடுத்து, அதை உங்கள் தேவனாகிய கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியின் பக்கத்திலே வையுங்கள்; அங்கே அது உனக்கு விரோதமான சாட்சியாயிருக்கும். 27. நான் உன் கலகக்குணத்தையும் உன் கடினக் கழுத்தையும் அறிந்திருக்கிறேன்; இன்று நான் இன்னும் உங்களுடன் உயிரோடிருக்கையில், கர்த்தருக்கு விரோதமாகக் கலகம்பண்ணினீர்களே; என் மரணத்திற்குப்பின்பு எவ்வளவு அதிகமாய்க் கலகம்பண்ணுவீர்கள்! 28. உங்கள் கோத்திரங்களிலுள்ள மூப்பர் உங்கள் அதிபதிகள் எல்லாருடைய காதுகளும் கேட்கத்தக்கதாக நான் இந்த வார்த்தைகளைச் சொல்லவும், அவர்களுக்கு விரோதமாக வானத்தையும் பூமியையும் சாட்சிவைக்கவும் அவர்களை என்னிடத்தில் கூடிவரச்செய்யுங்கள். 29. என் மரணத்திற்குப்பின்பு நீங்கள் நிச்சயமாய் உங்களைக் கெடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட வழியை விட்டு விலகுவீர்கள்; ஆகையால், கடைசி நாட்களில் தீங்கு உங்களுக்கு நேரிடும்; உங்கள் கைக்கிரியைகளினாலே கர்த்தரைக் கோபப்படுத்தும்படிக்கு, அவர் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்வீர்கள் என்பதை அறிவேன் என்று சொல்லி, 30. இஸ்ரவேல் சபையார் எல்லாரும் கேட்க மோசே இந்தப் பாட்டின் வார்த்தைகளை முடியும்வரையும் சொன்னான்.
Chapter 32
1. வானங்களே, செவிகொடுங்கள், நான் பேசுவேன்; பூமியே, என் வாய்மொழிகளைக் கேட்பாயாக. 2. மழையானது இளம்பயிரின்மேல் பொழிவதுபோல, என் உபதேசம் பொழியும்; பனித்துளிகள் புல்லின்மேல் இறங்குவதுபோல, என் வசனம் இறங்கும். 3. கர்த்தருடைய நாமத்தை பிரசித்தம்பண்ணுவேன்; நம்முடைய தேவனுக்கு மகத்துவத்தைச் செலுத்துங்கள். 4. அவர் கன்மலை; அவர் கிரியை உத்தமமானது; அவர் வழிகளெல்லாம் நியாயம், அவர் நியாயக்கேடில்லாத சத்தியமுள்ள தேவன்; அவர் நீதியும் செம்மையுமானவர். 5. அவர்களோ தங்களைக் கெடுத்துக்கொண்டார்கள், அவர்கள் அவருடைய பிள்ளைகள் அல்ல; இதுவே அவர்கள் காரியம்; அவர்கள் மாறுபாடும் தாறுமாறுமுள்ள சந்ததியார். 6. விவேகமில்லாத மதிகெட்ட ஜனங்களே, இப்படியா கர்த்தருக்குப் பதிலளிக்கிறீர்கள். உன்னை ஆட்கொண்ட பிதா அவரல்லவா? உன்னை உண்டாக்கி உன்னை நிலைப்படுத்தினவர் அவரல்லவா? 7. பூர்வநாட்களை நினை; தலைமுறை தலைமுறையாய்ச் சென்ற வருஷங்களைக் கவனித்துப்பார்; உன் தகப்பனைக் கேள், அவன் உனக்கு அறிவிப்பான்; உன் மூப்பர்களைக் கேள், அவர்கள் உனக்குச் சொல்லுவார்கள். 8. உன்னதமானவர் ஜாதிகளுக்குச் சுதந்தரங்களைப் பங்கிட்டு, ஆதாமின் புத்திரரை வெவ்வேறாய்ப் பிரித்தகாலத்தில், இஸ்ரவேல் புத்திரருடைய தொகைக்குத்தக்கதாய், சர்வஜனங்களின் எல்லைகளைத் திட்டம்பண்ணினார். 9. கர்த்தருடைய ஜனமே அவருடைய பங்கு; யாக்கோபு அவருடைய சுதந்தரவீதம். 10. பாழான நிலத்திலும் ஊளையிடுதலுள்ள வெறுமையான அவாந்தரவெளியிலும் அவர் அவனைக் கண்டுபிடித்தார், அவனை நடத்தினார், அவனை உணர்த்தினார், அவனைத் தமது கண்மணியைப்போலக் காத்தருளினார். 11. கழுகு தன் கூட்டைக் கலைத்து, தன் குஞ்சுகளின்மேல் அசைவாடி, தன் செட்டைகளை விரித்து, அவைகளை எடுத்து, அவைகளைத் தன் செட்டைகளின்மேல் சுமந்துகொண்டுபோகிறது போல, 12. கர்த்தர் ஒருவரே அவனை வழிநடத்தினார்; அந்நிய தேவன் அவரோடே இருந்ததில்லை. 13. பூமியிலுள்ள உயர்ந்த ஸ்தானங்களின்மேல் அவனை ஏறிவரப்பண்ணினார்; வயலில் விளையும் பலனை அவனுக்குப் புசிக்கக் கொடுத்தார்; கன்மலையிலுள்ள தேனையும், கற்பாறையிலிருந்து வடியும் எண்ணெயையும் அவன் உண்ணும்படி செய்தார். 14. பசுவின் வெண்ணெயையும், ஆட்டின் பாலையும், பாசானில் மேயும் ஆட்டுக்குட்டிகள் ஆட்டுக்கடாக்கள் வெள்ளாட்டுக்கடாக்கள் இவைகளுடைய கொழுப்பையும், கொழுமையான கோதுமையையும், இரத்தம்போன்ற சுயமான திராட்சரசத்தையும் சாப்பிட்டாய். 15. யெஷூரன் கொழுத்துப்போய் உதைத்தான்; கொழுத்து, ஸ்தூலித்து, நிணம் துன்னினபோது, தன்னை உண்டாக்கின தேவனை விட்டு, தன் ரட்சிப்பின் கன்மலையை அசட்டைபண்ணினான். 16. அந்நிய தேவர்களால் அவருக்கு எரிச்சலை மூட்டினார்கள்; அருவருப்பானவைகளினால் அவரைக் கோபப்படுத்தினார்கள். 17. அவர்கள் தேவனுக்குப் பலியிடவில்லை; தாங்கள் அறியாதவைகளும், தங்கள் பிதாக்கள் பயப்படாதவைகளும், நூதனமாய்த் தோன்றிய புது தெய்வங்களுமாகிய பேய்களுக்கே பலியிட்டார்கள். 18. உன்னை ஜெநிப்பித்த கன்மலையை நீ நினையாமற்போனாய்; உன்னைப் பெற்ற தேவனை மறந்தாய். 19. கர்த்தர் அதைக் கண்டு, தமது குமாரரும் தமது குமாரத்திகளும் தம்மைக் கோபப்படுத்தினதினிமித்தம் மனமடிவாகி, அவர்களைப் புறக்கணித்து: 20. என் முகத்தை அவர்களுக்கு மறைப்பேன்; அவர்களுடைய முடிவு எப்படியிருக்கும் என்று பார்ப்பேன்; அவர்கள் மகா மாறுபாடுள்ள சந்ததி; உண்மையில்லாத பிள்ளைகள். 21. தெய்வம் அல்லாதவைகளினால் எனக்கு எரிச்சலை மூட்டி, தங்கள் மாயைகளினால் என்னைக் கோபப்படுத்தினார்கள்; ஆகையால் மதிக்கப்படாத ஜனங்களினால் அவர்களுக்கு எரிச்சலை உண்டாக்கி, மதிகெட்ட ஜாதியினால் அவர்களைக் கோபப்படுத்துவேன். 22. என் கோபத்தினால் அக்கினி பற்றிக்கொண்டது, அது தாழ்ந்த நரகமட்டும் எரியும்; அது பூமியையும் அதின் பலனையும் அழித்து, பர்வதங்களின் அஸ்திபாரங்களை வேகப்பண்ணும். 23. தீங்குகளை அவர்கள்மேல் குவிப்பேன்; என்னுடைய அம்புகளையெல்லாம் அவர்கள்மேல் பிரயோகிப்பேன். 24. அவர்கள் பசியினால் வாடி, எரிபந்தமான உஷ்ணத்தினாலும், கொடிய வாதையினாலும் மாண்டுபோவார்கள்; துஷ்ட மிருகங்களின் பற்களையும், தரையில் ஊரும் பாம்புகளின் விஷத்தையும் அவர்களுக்குள் அனுப்புவேன். 25. வெளியிலே பட்டயமும், உள்ளே பயங்கரமும், வாலிபனையும் கன்னியையும் குழந்தையையும் நரைத்த கிழவனையும் அழிக்கும். 26. எங்கள் கை உயர்ந்ததென்றும், கர்த்தர் இதையெல்லாம் செய்யவில்லை என்றும் அவர்களுடைய பகைஞர் தப்பெண்ணங்கொண்டு சொல்லுவார்கள் என்று, 27. நான் சத்துருவின் குரோதத்திற்கு அஞ்சாதிருந்தேனானால், நான் அவர்களை மூலைக்குமூலை சிதற அடித்து, மனிதருக்குள் அவர்களுடைய பெயர் அற்றுப் போகப்பண்ணுவேன் என்று சொல்லியிருப்பேன். 28. அவர்கள் யோசனைகெட்ட ஜாதி, அவர்களுக்கு உணர்வு இல்லை. 29. அவர்கள் ஞானமடைந்து, இதை உணர்ந்து, தங்கள் முடிவைச் சிந்தித்துக்கொண்டால் நலமாயிருக்கும் என்றார். 30. அவர்களுடைய கன்மலை அவர்களை விற்காமலும், கர்த்தர் அவர்களை ஒப்புக்கொடாமலும் இருந்தாரானால், ஒருவன் ஆயிரம்பேரைத் துரத்தி, இரண்டுபேர் பதினாயிரம்பேரை ஓட்டுவதெப்படி? 31. தங்கள் கன்மலை நம்முடைய கன்மலையைப்போல் அல்ல என்று நம்முடைய சத்துருக்களே தீர்மானிக்கிறார்கள். 32. அவர்களுடைய திராட்சச்செடி, சோதோமிலும் கொமோரா நிலங்களிலும் பயிரான திராட்சச்செடியிலும் தாழ்ந்த ஜாதியாயிருக்கிறது, அவைகளின் பழங்கள் பித்தும் அவைகளின் குலைகள் கசப்புமாய் இருக்கிறது. 33. அவர்களுடைய திராட்சரசம் வலுசர்ப்பங்களின் விஷமும் விரியன் பாம்புகளின் கொடிய விஷமுமானது. 34. இது என்னிடத்தில் வைத்துவைக்கப்பட்டு, என் பொக்கிஷங்களில் இது முத்திரை போடப்பட்டிருக்கிறதில்லையோ? 35. பழிவாங்குவதும் பதிலளிப்பதும் எனக்கு உரியது; ஏற்றகாலத்தில் அவர்களுடைய கால் தள்ளாடும்; அவர்களுடைய ஆபத்துநாள் சமீபமாயிருக்கிறது; அவர்களுக்கு நேரிடும் காரியங்கள் தீவிரித்து வரும். 36. கர்த்தர் தம்முடைய ஜனங்களை நியாயந்தீர்த்து, அவர்கள் பெலன் போயிற்றென்றும், அடைக்கப்பட்டவர்களாவது விடுதலை பெற்றவர்களாவது ஒருவரும் இல்லையென்றும் காணும்போது, தம்முடைய ஊழியக்காரர்மேல் பரிதாபப்படுவார். 37. அப்பொழுது அவர்: அவர்கள் பலியிட்ட பலிகளின் கொழுப்பைத் தின்று, பானபலிகளின் திராட்சரசத்தைக் குடித்த அவர்களுடைய தெய்வங்களும் அவர்கள் நம்பின கன்மலையும் எங்கே? 38. அவைகள் எழுந்து உங்களுக்குச் சகாயம்பண்ணி உங்களுக்கு மறைவிடமாயிருக்கட்டும். 39. நான் நானே அவர், என்னோடே வேறே தேவன் இல்லை என்பதை இப்பொழுது பாருங்கள்; நான் கொல்லுகிறேன், நான் உயிர்ப்பிக்கிறேன்; நான் காயப்படுத்துகிறேன், நான் சொஸ்தப்படுத்துகிறேன்; என் கைக்குத் தப்புவிப்பார் இல்லை. 40. நான் என் கரத்தை வானத்திற்கு நேராக உயர்த்தி, நான் என்றென்றைக்கும் ஜீவித்திருக்கிறவர் என்கிறேன். 41. மின்னும் என் பட்டயத்தை நான் கருக்காக்கி, என் கையானது நியாயத்தைப் பிடித்துக்கொள்ளுமானால், என் சத்துருக்களிடத்தில் பழிவாங்கி, என்னைப் பகைக்கிறவர்களுக்குப் பதிலளிப்பேன். 42. கொலையுண்டும் சிறைப்பட்டும் போனவர்களுடைய இரத்தத்தாலே என் அம்புகளை வெறிகொள்ளப்பண்ணுவேன்; என் பட்டயம் தலைவர் முதற்கொண்டு சகல சத்துருக்களின் மாம்சத்தையும் பட்சிக்கும். 43. ஜாதிகளே, அவருடைய ஜனங்களோடேகூடக் களிகூருங்கள்; அவர் தமது ஊழியக்காரரின் இரத்தத்திற்குப் பழிவாங்கி, தம்முடைய சத்துருக்களுக்குப் பதிலளித்து, தமது தேசத்தின்மேலும் தமது ஜனங்களின்மேலும் கிருபையுள்ளவராவார். 44. மோசேயும் நூனின் குமாரனாகிய யோசுவாவும் வந்து, இந்தப் பாட்டின் வார்த்தைகளையெல்லாம் ஜனங்கள் கேட்கத்தக்கதாகச் சொன்னார்கள். 45. மோசே இந்த வார்த்தைகளையெல்லாம் இஸ்ரவேலர் யாவருக்கும் சொல்லி முடித்தபின்பு, 46. அவர்களை நோக்கி: இந்த நியாயப்பிரமாண வார்த்தைகளின்படியெல்லாம் உங்கள் பிள்ளைகள் செய்யும்படி கவனமாயிருக்க, நீங்கள் அவர்களுக்குக் கற்பிக்கும்படி, நான் இன்று உங்களுக்குச் சாட்சியாய் ஒப்புவிக்கிற வார்த்தைகளையெல்லாம் உங்கள் மனதிலே வையுங்கள். 47. இது உங்களுக்கு வியர்த்தமான காரியம் அல்லவே; இது உங்கள் ஜீவனாயிருக்கிறது, நீங்கள் சுதந்தரித்துக்கொள்ளும்படி யோர்தானைக் கடந்துபோய்ச் சேரும் தேசத்தில் இதினால் உங்கள் நாட்களை நீடிக்கப்பண்ணுவீர்கள் என்றான். 48. அந்த நாளிலேதானே கர்த்தர் மோசேயை நோக்கி: 49. நீ எரிகோவுக்கு எதிரான மோவாப் தேசத்திலுள்ள இந்த அபாரீம் என்னும் மலைகளிலிருக்கிற நேபோ பர்வதத்தில் ஏறி, நான் இஸ்ரவேல் சந்ததியாருக்குக் காணியாட்சியாகக் கொடுக்கும் கானான் தேசத்தைப் பார்; 50. நீங்கள் சீன் வனாந்தரத்திலுள்ள காதேசிலே மேரிபாவின் தண்ணீர் சமீபத்தில் இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே என்னைப் பரிசுத்தம்பண்ணாமல், அவர்கள் நடுவே என் கட்டளைகளை மீறினதினாலே, 51. உன் சகோதரனாகிய ஆரோன் ஓர் என்னும் மலையிலே மரித்து, தன் ஜனத்தாரிடத்தில் சேர்க்கப்பட்டதுபோல நீயும் ஏறப்போகிற மலையிலே மரித்து, உன் ஜனத்தாரிடத்தில் சேர்க்கப்படுவாய். 52. நான் இஸ்ரவேல் புத்திரருக்குக் கொடுக்கப்போகிற எதிரேயிருக்கிற தேசத்தை நீ பார்ப்பாய்; ஆனாலும் அதற்குள் நீ பிரவேசிப்பதில்லை என்றார்.
Chapter 33
1. தேவனுடைய மனுஷனாகிய மோசே தான் மரணமடையுமுன்னே இஸ்ரவேல் புத்திரரை ஆசீர்வதித்த ஆசீர்வாதமாவது: 2. கர்த்தர் சீனாயிலிருந்து எழுந்தருளி, சேயீரிலிருந்து அவர்களுக்கு உதயமானார்; பாரான் மலையிலிருந்து பிரகாசித்து, பதினாயிரங்களான பரிசுத்தவான்களோடே பிரசன்னமானார்; அவர்களுக்காக அக்கினிமயமான பிரமாணம் அவருடைய வலதுகரத்திலிருந்து புறப்பட்டது. 3. மெய்யாகவே அவர் ஜனங்களைச் சிநேகிக்கிறார்; அவருடைய பரிசுத்தவான்கள் எல்லாரும் உம்முடைய கையில் இருக்கிறார்கள்; அவர்கள் உம்முடைய பாதத்தில் விழுந்து, உம்முடைய வார்த்தைகளினால் போதனையடைவார்கள். 4. மோசே நமக்கு ஒரு நியாயப்பிரமாணத்தைக் கற்பித்தான்; அது யாக்கோபின் சபைக்குச் சுதந்தரமாயிற்று. 5. ஜனங்களின் தலைவரும் இஸ்ரவேலின் கோத்திரங்களும் கூட்டங்கூடினபோது அவர் யெஷூரனுக்கு ராஜாவாயிருந்தார். 6. ரூபன் சாவாமல் பிழைப்பானாக; அவன் ஜனம் கொஞ்சமாயிராது என்றான். 7. அவன் யூதாவைக்குறித்து: கர்த்தாவே, யூதாவின் சத்தத்தைக் கேட்டு, அவன் தன் ஜனத்தோடே திரும்பச் சேரப்பண்ணும்; அவன் கை பலக்கக்கடவது; அவனுடைய சத்துருக்களுக்கு அவனை நீங்கலாக்கி விடுவிக்கிற சகாயராயிருப்பீராக என்றான். 8. லேவியைக்குறித்து: நீ மாசாவிலே பரீட்சைபார்த்து, மேரிபாவின் தண்ணீரிடத்தில் வாக்குவாதம்பண்ணின உன் பரிசுத்த புருஷன் வசமாய் உன்னுடைய தும்மீம் ஊரீம் என்பவைகள் இருப்பதாக. 9. தன் தகப்பனுக்கும் தன் தாய்க்கும்: நான் உங்களைப் பாரேன் என்று சொல்லி, தன் சகோதரரை அங்கிகரியாமல், தன் பிள்ளைகளையும் அறியாமலிருக்கிறவன் வசமாய் அவைகள் இருப்பதாக; அவர்கள் உம்முடைய வார்த்தைகளைக் கைக்கொண்டு, உம்முடைய உடன்படிக்கையைக் காக்கிறவர்கள். 10. அவர்கள் யாக்கோபுக்கு உம்முடைய நியாயங்களையும், இஸ்ரவேலுக்கு உம்முடைய பிரமாணத்தையும் போதித்து, உமது சந்நிதானத்திலே தூபவர்க்கத்தையும், உமது பலிபீடத்தின்மேல் சர்வாங்க தகனபலிகளையும் இடுவார்கள். 11. கர்த்தாவே, அவன் சம்பத்தை ஆசீர்வதித்து, அவன் கைக்கிரியையின்மேல் பிரியமாயிரும்; அவனைப் பகைத்து அவனுக்கு விரோதமாய் எழும்புகிறவர்கள் திரும்ப எழுந்திராதபடி அவர்களுடைய இடுப்புகளை நொறுக்கிவிடும் என்றான். 12. பென்யமீனைக்குறித்து: கர்த்தருக்குப் பிரியமானவன், அவரோடே சுகமாய்த் தங்கியிருப்பான்; அவனை எந்நாளும் அவர் காப்பாற்றி, அவன் எல்லைக்குள்ளே வாசமாயிருப்பார் என்றான். 13. யோசேப்பைக்குறித்து: கர்த்தரால் அவனுடைய தேசம் ஆசீர்வதிக்கப்படுவதாக; அது வானத்தின் செல்வத்தினாலும், பனியினாலும், ஆழத்திலுள்ள நீரூற்றுகளினாலும், 14. சூரியன் பக்குவப்படுத்தும் அருமையான கனிகளினாலும், சந்திரன் பக்குவப்படுத்தும் அருமையான பலன்களினாலும், 15. ஆதிபர்வதங்களில் உண்டாகும் திரவியங்களினாலும், நித்திய மலைகளில் பிறக்கும் அரும்பொருள்களினாலும், 16. நாடும் அதின் நிறைவும் கொடுக்கும் அருமையான தானியங்களினாலும் ஆசீர்வதிக்கப்படுவதாக. முட்செடியில் எழுந்தருளினவரின் தயை யோசேப்புடைய சிரசின்மேலும், தன் சகோதரரில் விசேஷித்தவனுடைய உச்சந்தலையின்மேலும் வருவதாக. 17. அவன் அலங்காரம் அவன் தலையீற்றுக் காளையினுடைய அலங்காரத்தைப்போலவும், அவன் கொம்புகள் காண்டாமிருகத்தின் கொம்புகளைப்போலவும் இருக்கும்; அவைகளாலே ஜனங்களை ஏகமாய் தேசத்தின் கடையாந்தரங்கள்மட்டும் முட்டித் துரத்துவான்; அவைகள் எப்பிராயீமின் பதினாயிரங்களும் மனாசேயின் ஆயிரங்களுமானவைகள் என்றான். 18. செபுலோனைக்குறித்து: செபுலோனே, நீ வெளியே புறப்பட்டுப்போகையிலும், இசக்காரே, நீ உன் கூடாரங்களில் தங்குகையிலும் சந்தோஷமாயிரு. 19. ஜனங்களை அவர்கள் மலையின்மேல் வரவழைத்து, அங்கே நீதியின் பலிகளை இடுவார்கள்; கடல்களிலுள்ள சம்பூரணத்தையும் மணலுக்குள்ளே மறைந்திருக்கும் பொருள்களையும் அநுபவிப்பார்கள் என்றான். 20. காத்தைக்குறித்து: காத்துக்கு விஸ்தாரமான இடத்தைக் கொடுக்கிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்; அவன் சிங்கத்தைப்போல் தங்கியிருந்து, புயத்தையும் உச்சந்தலையையும் பீறிப்போடுவான். 21. அவன் தனக்காக முதல் இடத்தைப் பார்த்துக்கொண்டான்; அங்கே தனக்கு நியாயப்பிரமாணிகன் கொடுத்த பங்கு பத்திரமாயிருக்கிறது; ஆனாலும் அவன் ஜனத்தின் முன்னணியாய் வந்து, மற்ற இஸ்ரவேலுடனே கர்த்தரின் நீதியையும் அவருடைய நியாயங்களையும் நடப்பிப்பான் என்றான். 22. தாணைக்குறித்து: தாண் ஒரு பாலசிங்கம், அவன் பாசானிலிருந்து பாய்வான் என்றான். 23. நப்தலியைக்குறித்து: நப்தலி கர்த்தருடைய தயவினாலே திர்ப்தியடைந்து, அவருடைய ஆசீர்வாதத்தினாலே நிறைந்திருப்பான். நீ மேற்றிசையையும் தென்திசையையும் சுதந்தரித்துக்கொள் என்றான். 24. ஆசேரைக்குறித்து: ஆசேர் புத்திரபாக்கியமுடையவனாய், தன் சகோதரருக்குப் பிரியமாயிருந்து, தன் காலை எண்ணெயிலே தோய்ப்பான். 25. இரும்பும் வெண்கலமும் உன் பாதரட்சையின் கீழிருக்கும்; உன் நாட்களுக்குத்தக்கதாய் உன் பெலனும் இருக்கும் என்றான். 26. யெஷூரனுடைய தேவனைப்போல் ஒருவரும் இல்லை; அவர் உனக்குச் சகாயமாய் வானங்களின்மேலும் தமது மாட்சிமையோடு ஆகாயமண்டலங்களின் மேலும் ஏறிவருகிறார். 27. அநாதி தேவனே உனக்கு அடைக்கலம்; அவருடைய நித்திய புயங்கள் உனக்கு ஆதாரம்; அவர் உனக்கு முன்னின்று சத்துருக்களைத் துரத்தி, அவர்களை அழித்துப்போடு என்று கட்டளையிடுவார். 28. இஸ்ரவேல் சுகமாய்த் தனித்து வாசம்பண்ணுவான்; யாக்கோபின் ஊற்றானது தானியமும் திராட்சரசமுமுள்ள தேசத்திலே இருக்கும்; அவருடைய வானமும் பனியைப் பெய்யும். 29. இஸ்ரவேலே, நீ பாக்கியவான்; கர்த்தரால் ரட்சிக்கப்பட்ட ஜனமே, உனக்கு ஒப்பானவன் யார்? உனக்குச் சகாயஞ்செய்யும் கேடகமும் உனக்கு மகிமைபொருந்திய பட்டயமும் அவரே; உன் சத்துருக்கள் உனக்கு இச்சகம் பேசி அடங்குவார்கள்; அவர்கள் மேடுகளை மிதிப்பாய், என்று சொன்னான்.
Chapter 34
1. பின்பு மோசே மோவாபின் சமனான வெளிகளிலிருந்து எரிகோவுக்கு எதிரான நேபோ மலையிலிருக்கும் பிஸ்காவின் கொடுமுடியில் ஏறினான்; அப்பொழுது கர்த்தர் அவனுக்கு, தாண்மட்டுமுள்ள கீலேயாத் தேசம் அனைத்தையும், 2. நப்தலி தேசம் அனைத்தையும், எப்பிராயீம் மனாசே என்பவர்களின் தேசத்தையும், கடைசிச் சமுத்திரம்வரைக்குமுள்ள யூதா தேசம் அனைத்தையும், 3. தென்புறத்தையும், சோவார் வரைக்குமுள்ள பேரீச்சமரங்களின் பட்டணம் என்னும் ஊர்முதற்கொண்டு எரிகோவின் பள்ளத்தாக்காகிய சமனான பூமியையும் காண்பித்தார். 4. அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கி: நான் உங்கள் சந்ததிக்குக் கொடுப்பேன் என்று ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் ஆணையிட்ட தேசம் இதுதான், இதை உன் கண் காணும்படி செய்தேன்; ஆனாலும் நீ அவ்விடத்திற்குக் கடந்துபோவதில்லை என்றார். 5. அப்படியே கர்த்தரின் தாசனாகிய மோசே மோவாப் தேசமான அவ்விடத்திலே கர்த்தருடைய வார்த்தையின்படியே மரித்தான். 6. அவர் அவனை மோவாப் தேசத்திலுள்ள பெத்பேயோருக்கு எதிரான பள்ளத்தாக்கிலே அடக்கம்பண்ணினார். இந்நாள்வரைக்கும் ஒருவனும் அவன் பிரேதக்குழியை அறியான். 7. மோசே மரிக்கிறபோது நூற்றிருபது வயதாயிருந்தான்; அவன் கண் இருளடையவுமில்லை, அவன் பெலன் குறையவுமில்லை. 8. இஸ்ரவேல் புத்திரர் மோவாபின் சமனான வெளிகளில் மோசேக்காக முப்பது நாள் அழுதுகொண்டிருந்தார்கள்; மோசேக்காக அழுது துக்கங்கொண்டாடின நாட்கள் முடிந்தது. 9. மோசே நூனின் குமாரனாகிய யோசுவாவின்மேல் தன் கைகளை வைத்தபடியினால் அவன் ஞானத்தின் ஆவியினால் நிறையப்பட்டான்; இஸ்ரவேல் புத்திரர் அவனுக்குக் கீழ்ப்படிந்து, கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே செய்தார்கள். 10. மோசே எகிப்துதேசத்திலே பார்வோனுக்கும், அவனுடைய எல்லா ஊழியக்காரருக்கும், அவனுடைய தேசம் அனைத்திற்கும் செய்யும்படி கர்த்தர் அவனை அனுப்பிச் செய்வித்த சகல அடையாளங்களையும் அற்புதங்களையும், 11. அவன் இஸ்ரவேலர் எல்லாருக்கும் பிரத்தியட்சமாய்ச் செய்த சகல வல்லமையான கிரியைகளையும், மகா பயங்கரமான செய்கைகளையும் பார்த்தால், 12. கர்த்தரை முகமுகமாய் அறிந்த மோசேயைப்போல, ஒரு தீர்க்கதரிசியும் இஸ்ரவேலில் அப்புறம் எழும்பினதில்லை என்று விளங்கும்.
(April28th2012)
|