|
மக்கபேயர் - முதல் நூல் |
|
அதிகாரம்
16
|
யூதா, யோவானின் வெற்றி 1 யோவான் கசாராவினின்று
ஏறிச்சென்று கெந்தபாய்
செய்தவற்றைத் தன் தந்தையாகிய
சீமோனிடம் அறிவித்தார்.2 அப்போது சீமோன் தம் மூத்த
மைந்தர்களாகிய யூதா, யோவான் ஆகிய
இருவரையும் அழைத்து அவர்களை
நோக்கி, நானும் என் சகோதரர்களும்
என் தந்தையின் குடும்பமும் எங்கள்
இளமைமுதல் இந்நாள்வரை இஸ்ரயேலில்
போர்களை நடத்திவந்துள்ளோம்:
இஸ்ரயேலைக் காப்பாற்றுவதில் பல
முறை வெற்றி பெற்றோம்.3 இப்போது நான்
முதியவனாகியவிட்டேன். நீங்கள்
விண்ணக இறைவனின் இரக்கத்தால்
வளர்ச்சி அடைந்திருக்கிறீர்கள்.
ஆதலால் நீங்கள் என் சகோதரதரான
யோனத்தானுக்கும் எனக்கும்
பதிலாய் இருந்து நம்
மக்களுக்காகப் போரிடுங்கள்.
விண்ணக இறைவனின் உதவி உங்களோடு
இருப்பதாக என்று கூறினார்.4 பின்னர் நாட்டிலிருந்து
இருபதாயிரம் காலாள்களையும்
குதிரைவீரர்களையும் யோவான்
தேர்ந்து கொண்டார். அவர்கள்
கெந்தபாயை எதிர்த்துச் சென்று,
அன்று இரவு மோதயினில்
தங்கினார்கள்:5 மறுநாள் காலையில் எழுந்து
சமவெளியை அடைந்தார்கள்.
காலாட்படையினரும்
குதிரைப்படையினரும் கொண்ட பெரும்
படை ஒன்று அவர்களை எதிர்த்து
வந்து கொண்டிருந்தது. இரு
படைகளுக்கும் நடுவே காட்டாறு
ஒன்று ஓடிற்று.6 யோவானும் அவருடைய
படைவீரர்களும் பகைவர்களுக்கு
எதிரே அணிவகுத்து நின்றார்கள்.
தம் வீரர்கள் ஆற்றைக் கடக்க
அஞ்சியதைக் கண்டு தாமே முதலில்
கடந்தார். அதைக் கண்ட அவருடைய
வீரர்களும் அவரைத் தொடர்ந்து
ஆற்றைக் கடந்தார்கள்.7 பகைவரின்
குதிரைப்படையினர் பெருந்திரளாய்
இருந்ததால் அவர் தம் படையைப்
பிரித்துக் குதிரைப் படையினரைக்
காலாட்படையினருக்கு நடுவில்
இருக்கச் செய்தார்.8 அவர்கள் எக்காளங்களை
முழக்கவே கெந்தபாயும் அவனுடைய
படைவீரர்களும் தப்பியோடினார்கள்:
அவர்களுள் பலர் காயப்பட்டு
மடிந்தார்கள்: எஞ்சியவர்கள்
கிதரோனில் இருந்த கோட்டையை நோக்கி
ஓடினார்கள்.9 அப்போது யோவானின் சகோதரரான
யூதா காயமடைந்தார். ஆனால் யோவான்
கெந்தபாய் கட்டிய கிதரோன்வரை
சென்று பகைவர்களைத்
துரத்தியடித்தார்.10 அவர்கள் அசோத்தின்
வயல்களில் இருந்த
காவல்மாடங்களுக்குள்
தப்பியோடினார்கள். அசோத்து நகரை
யோவான் தீக்கிரையாக்கினார்.
அவர்களுள் ஏறத்தாழ இரண்டாயிரம்
பேர் மடிந்தனர். பின் அவர்
பாதுகாப்புடன் யூதேயா
திரும்பினார்.
சீமோனும் அவருடைய மைந்தர்களும் கொலை செய்யப்படுதல் 11 எரிகோ சமவெளிக்கு அபூபு
மகன் தாலமி ஆளுநராக
நியமிக்கப்பட்டிருந்தான்.
அவனிடம் திரளான வெள்ளியும்
பொன்னும் இருந்தன: 12 ஏனெனில் அவன் தலைமைக்
குருவின் மருமகன்.13 ஆனால் அவன் பேராசை கொண்டு,
நாட்டைத் தன் ஆளுகைக்குள்
கொண்டுவரத் திட்டமிட்டான்:
சீமோனையும் அவருடைய
மைந்தர்களையும் வஞ்சகமாகக்
கொன்றுவிட எண்ணினான்.14 யூதேயா நாட்டின்
நகரங்களைச் சிமோன் பார்வையிட்டு
அவற்றின் தேவைகளை
நிறைவேற்றிவந்தார்: நூற்று
எழுபத்தேழாம் ஆண்டு சபாத்து
என்னும் பதினொராம் மாதம் தம்
மைந்தர்களாகிய மத்தத்தியா, யூதா
ஆகியோரோடு எரிகோவுக்கு இறங்கிச்
சென்றார். கி.மு. 134 15 அபூபு மகன் தான்
கட்டிருந்த தோக்கு என்னும் சிறு
கோட்டைக்குள் அவர்களை வஞ்சகமாய்
வரவேற்று அவர்களுக்குப் பெரிய
விருந்து ஏற்பாடு செய்தான்: ஆனால்
அவ்விடத்தில் தன் ஆள்களுள் சிலரை
ஒளித்துவைத்திருந்தான். 16 சீமோனும் அவருடைய
மைந்தர்களும் குடிமயக்கத்தில்
இருந்தபோது தாலமியும் அவனைச்
சேர்ந்தவர்களும் எழுந்து வந்து
தங்கள் படைக்கலங்களை
எடுத்துக்கொண்டு விருந்து
நடைபெற்ற மன்றத்துக்குள்
புகுந்து சீமோனையும் அவருடைய
மைந்தர் இருவரையும் பணியாளர்
சிலரையும் கொன்றார்கள்.17 இவ்வாறு தாலமி
இஸ்ரயேலுக்கு நம்பிக்கைத்
துரோகம் செய்து, நன்மைக்குப்
பதிலாகத் தீமை புரிந்தான்.18 தாலமி இச்செய்திகளை
அந்தியோக்கு மன்னனுக்கு
எழுதியனுப்பி, தனக்கு உதவியாகப்
படைகளை அனுப்பவும் அவர்களின்
நாட்டையும் நகரங்களையும்
தனக்குக் கொடுத்து விடவும்
கேட்டுக்கொண்டான்.19 யோவானைக் கொல்வதற்காக
வேறு சிலரைக் கசாராவுக்கு
அனுப்பினான்: தான் வெள்ளியும்
பொன்னும் அன்பளிப்புகளும்
வழங்கப் படைத்தலைவர்கள் தன்னிடம்
வந்துசேருமாறு அவர்களுக்கு
எழுதியனுப்பினான். 20 எருசலேமையும் கோவில்
அமைந்திருந்த மலையையும் கைப்பற்ற
வேறு சிலரை அனுப்பினான்.21 ஆனால் ஒருவர் கசாராவில்
இருந்த யோவானிடம் முன்னதாகவே
ஓடிச்சென்று, அவருடைய தந்தையும்
சகோதரர்களும் அழிந்ததை அறிவித்து,
அவரையும் கொலைசெய்யத் தாலமி
ஆள்களை அனுப்பியிருக்கிறான்
என்று எச்சரித்தார்.22 யோவான் இதைக்
கேள்வியுற்றுப் பெரிதும்
திகிலடைந்தார்: தம்மைக் கொலைசெய்ய
வந்தவர்களைப் பிடித்துக்
கொன்றார்: ஏனெனில் அவர்கள்
தம்மைக் கொல்லத் தேடினவர்கள்
என்று அறிந்திருந்தார்.23 யோவான் தம் தந்தைக்குப்
பிறகு தலைமைக் குருவான நாள்முதல்
புரிந்த மற்றச் செயல்களும்
போர்களும் தீரச் செயல்களும்
கட்டியெழுப்பிய மதில்களும்24 மற்றச் சாதனைகளும்
தலைமைக் குருவின் குறிப்பேட்டில்
வரையப்பட்டுள்ளன. |