Chapter: Verses:
Start  End 
 
 
திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

சாலமோனின் ஞானம் (ஞானாகமம்)

அதிகாரம் 8

ஞானத்தின் இயல்பும் மேன்மையும் ..............தொடர்ச்சி
1 ஞானம் - ஒருகோடி முதல் மறு கோடிவரை ஆற்றலோடு செல்கிறது: எல்லாவற்றையும் முறையாக ஒழுங்குபடுத்துகிறது.

ஞானத்தின்மீது நாட்டம்
2 ஞானத்தின்மேல் நான் அன்பு கூர்ந்தேன்: என் இளமைமுதல் அதைத் தேடினேன்: என் வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொள்ள விரும்பினேன்: அதன் அழகில் மயங்கினேன்.3 கடவுளோடு ஒன்றுபட்ட வாழ்வினால் ஞானம் தன் உயர்குடிப் பிறப்பில் மேன்மை பாராட்டுகிறது. அதனால் அனைத்துலகின் ஆண்டவர் அதன்மேல் அன்புகூர்ந்தார்.4 ஞானமே கடவுளைப் பற்றிய மெய்யறிவுக்குப் புகுமுகம் செய்து வைக்கிறது: அவருடைய செயல்களைத் தேர்வுசெய்வதும் அதுவே.5 வாழ்வில் விரும்பத்தக்க உடைமையாகச் செல்வம் விளக்குமாயின், அனைத்தையும் ஆக்கும் ஞானத்தை விடச் சிறந்த செல்வம் ஏது?6 அறிவுத்திறன் ஆற்றல் மிக்கது என்றால், ஞானத்தவிட, இருப்பவற்றை உருவாக்கும் கலைஞன் வேறு யார்?7 ஒருவர் நீதியின்மேல் அன்புகூர்கின்றாரோ? ஞானத்தின் உழைப்பு அவரிடம் நற்பண்புகளால் மிளிரும். ஏனெனில் தன்னடக்கம், விவேகம், நீதி, துணிவு ஆகியவற்றை ஞானம் கற்பிக்கின்றது. இவற்றைத்தவிர வாழ்வில் மனிதருக்குப் பயனுள்ளவை வேறு ஒன்றுமில்லை.8 ஒருவர் பரந்த பட்டறிவு பெற ஏங்குகின்றாரோ? ஞானம் இறந்த காலத்தை அறியும்: எதிர்காலத்தை உய்த்துணரும்: உரைகளின் நுட்பங்களையும் புதிர்களின் விடைகளையும் அறியும். அடையாளங்களையும் வியத்தகு செயல்களையும் பருவங்கள், காலங்களின் பயன்களையும் முன்னறியும்.9 ஆகையால் என்னோடு கூடிவாழும் பொருட்டு ஞானத்தைத் தேர்ந்தெடுக்க முடிவு செய்தேன்: ஏனெனில் நன்மை செய்ய அது என்னை ஆற்றுப்படுத்தும் என்றும், கவலைகளிலும் துயரத்திலும் எனக்கு ஆறுதல் தரும் என்றும் நான் அறிவேன்.10 அதை முன்னிட்டு மக்கள் கூட்டத்தில் தான் பெருமை பெறுவேன்: இளைஞனாய் இருந்தாலும் மூப்பர்களிடையே நன்மதிப்பு அடைவேன்.11 நீதிவழங்கும்போது அறிவுக்கூர்மையோடு காணப்படுவேன். ஆள்வோர் என்னைக் கண்டு வியப்புறுவர்.12 நான் பேசாமல் இருக்கும் பொழுது நான் பேசும்படி அவர்கள் காத்திருக்கிறார்கள்: நான் பேசும்பொழுது எனக்குச் செவிசாய்ப்பார்கள்: நான் நீண்ட உரையாற்றும் பொழுது வாயடைத்து நிற்பார்கள்.13 ஞானத்தினால் நான் இறவாமை எய்துவேன்: எனக்குப்பின் வருபவர்களுக்கு என்றும் நீங்கா நினைவை விட்டுச்செல்வேன்.14 நான் மக்கள் மீது ஆட்சிசெலுத்துவேன்: நாடுகள் எனக்கு அடிபணியும்.15 அச்சுறுத்தும் மன்னர்கள்கூட என்னைப்பற்றிக் கேள்வியுற்று அஞ்சுவார்கள். மக்கள் நடுவில் நல்லவனாகவும் போரில் வல்லவனாகவும் இருப்பேன்.16 நான் வீட்டிற்கு வந்தபின் ஞானத்தோடு இளைப்பாறுவேன். ஏனெனில் அதன் தோழமையில் கசப்பே இல்லை: அதனோடு வாழ்வதில் துன்பமே இல்லை. அது தருவதெல்லாம் இன்பமும் மகிழ்ச்சியுமே!17 இவற்றைப்பற்றியயெல்லாம் எனக்குள் எண்ணிப் பார்த்தபொழுது - ஞானத்துடன் கொள்ளும் உறவால் இறவாமை கிட்டும்: அதனுடைய நட்புறவில் தூய மகிழ்ச்சி பிறக்கும்:18 அதனுடைய உழைப்பால் குறைபடாத செல்வம் கொழிக்கும்; அதன் தோழமையில் பயிற்சி பெறுவதால் அறிவுத்திறன் உண்டாகும்; அதனோடு கலந்துரையாடுவதால் பெரும்புகழ் கிடைக்கும் என்றெல்லாம் என் உள்ளத்தில் எண்ணிப் பார்த்த பொழுது - அதை எனக்கென அடைவது எப்படி என்று தேடி அலைந்தேன். 19 நான் குழந்தையாய் இருந்த பொழுது நல்லியல்புடன் இருந்தேன். நல்ல உள்ளம் என் பங்காய் அமைந்தது.20 நல்லவனாய் இருந்ததால் மாசற்ற உடலினுள் புகுந்தேன்.21 ஆனால், கடவுள் எனக்கு ஞானத்தை ஈந்தாலொழிய, அதை அடைய முடியாது என்று நான் உணர்ந்துகொண்டேன். அது யாருடைய கொடை என அறிவது அறிவுத் திறனின் அடையாளம். எனவே நான் ஆண்டவரை வேண்டினேன்: கெஞ்சி மன்றாடினேன்: என் முழு உள்ளத்தோடு சொன்னேன்:


திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

Free counters!