Chapter: Verses:
Start  End 
 
 
திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

அரசர்கள் (இராஜாக்கள்) - முதல் நூல்

அதிகாரம் 10

சேபா நாட்டு அரசியின் வருகை (2 குறி 9:1-12)
1 ஆண்டவரின் பெயரை முன்னிட்டு, சாலமோன் அடைந்திருந்த புகழைப் பற்றிச் சேபா நாட்டு அரசி கேள்வியுற்றுக் கடினமான கேள்விகள் மூலம் அவரைச் சோதிக்க வந்தார்.2 அவர் பரிவாரங்களோடும், நறுமணப் பொருள், மிகுதியான பொன், விலையுயர்ந்த கற்கள், ஆகியவற்றைச் சுமந்துவந்த ஒட்டகங்களோடும், எருசலேமுக்கு வந்து சேர்ந்தார். அவர் சாலமோனிடம் தம் மனத்திலிருந்த கேள்விகள் அனைத்தையும் வெளிப்படுத்தினார்.3 சாலமோன் அவருடைய கேள்விகளுக்கெல்லாம் விடை கூறினார். அவர் கேட்டவற்றுள் பதிலளிக்க இயலாதபடி எதுவும் அரசருக்குப் புதிராகத் தோன்றவில்லை.4 சேபாவின் அரசி, சாலமோனுக்கிருந்த பல்வகை ஞானம், அவர் கட்டியிருந்த அரண்மனை,5 அவர் உண்டு வந்த உணவு வகைகள், அவருடைய அலுவலரின் வரிசைகள், பணியாளர்களின் சுறுசுறுப்பு, அவர்களுடைய சீருடை, பானம் பரிமாறுவோரின் திறமை, ஆண்டவரின் இல்லத்தில் அவர் செலுத்திய எரிபலிகள் ஆகியவற்றைக் கண்டு பேச்சற்றுப் போனார்.6 அவர் அரசரை நோக்கிக் கூறியது: உம்முடைய செயல்களையும் ஞானத்தையும் பற்றி என் நாட்டில் நான் கேள்விப்பட்டது உண்மையே எனத் தெரிகிறது.7 நான் இங்கு வந்து அவற்றை நேரில் காணும் வரை, அச்செய்திகளை நம்பவில்லை. இப்பொழுதோ இங்குள்ளவற்றில் பாதியைக் கூட அவர்கள் எனக்குச் சொல்லவில்லையென அறிகிறேன். உண்மையில் நான் கேள்விப்பட்டதை விட, உம் ஞானமும் செல்வமும் மிகுதியாய் இருக்கின்றன.8 உம்முடைய மனைவியர் நற்பேறு பெற்றோர்! எப்போதும் உமக்குப் பணிபுரிந்து உம்முடைய ஞானம் நிறைந்த மொழிகளைக் கேட்கும் உம்முடைய பணியாளரும் நற்பேறு பெற்றவரே!9 உம்மீது பரிவு கொண்டு உம்மை இஸ்ரயேலின் அரியணையில் அமர்த்திய உம் கடவுளாகிய ஆண்டவர் போற்றி! போற்றி! ஆண்டவர் இஸ்ரயேலின் மீது என்றென்றும் அன்பு கொண்டுள்ளதால், அவர்களுக்கு நீதி நியாயம் வழங்க உம்மை அரசராக ஏற்படுத்தியுள்ளார்.10 அவர் ஏறத்தாழ நாலாயிரத்து எண்ணூறு கிலோ பொன், ஏராளமான நறுமணப் பொருள்கள், விலையுயர்ந்த கற்கள் ஆகியவற்றை அரசருக்கு அளித்தார். சேபாவின் அரசியிடமிருந்து வந்தது போல, அத்துணை நறுமணப் பொருள்கள் அரசர் சாலமோனுக்கு அதன் பிறகு வந்ததே இல்லை.11 ஓபீரிலிருந்து பொன்னைக் கொணர்ந்த ஈராமின் கப்பல்கள் அங்கிருந்து வாசனை மரங்களையும் விலையுயர்ந்த கற்களையும் கொண்டு வந்தன.12 அவ்வாசனை மரங்களால் அரசர் ஆண்டவரின் இல்லத்திற்கும் அரண்மனைக்கும் ஊன்றுகால்களையும் பாடகருக்கு இசைக் கருவிகளையும் யாழ்களையும் செய்தார். அத்தகைய வாசனை மரங்கள் அதன்பின் அங்கு வந்ததுமில்லை: இன்றுவரை காணப்படவுமில்லை.13 அரசர் சாலமோன் சேபாவின் அரசிக்கு ஏராளமான பரிசுகள் கொடுத்ததுமன்றி, அவர் விரும்பிக் கேட்டவற்றையெல்லாம் கொடுத்தார். அதன்பின் அவர் தம் பணியாளர்களோடு தம் சொந்த நாட்டுக்குத் திரும்பிப்போனார்.

சாலமோனின் செல்வச் சிறப்பு (2 குறி 9:13-28)
14 சாலமோனுக்கு ஆண்டுதோறும் வந்து கொண்டிருந்த பொன்னின் நிறை ஏறத்தாழ இருபத்தி ஏழாயிரம் கிலோ.15 அதைத் தவிர, அவரிடம் வியாபாரிகளும், வணிகர்களும் அரபு நாட்டு அரசர்கள் அனைவரும் உள்நாட்டு ஆளுநர்களும் பொன் கொண்டு வருவதுண்டு.16 அரசர் சாலமோன் பொன் தகட்டால் இருநூறு கேடயங்கள் செய்தார். ஒவ்வொரு கேடயத்திற்கும் ஏறத்தாழ ஏழு கிலோ பொன் பயன்படுத்தப்பட்டது.17 மேலும் அவர் முந்நூறு சிறு கேடயங்களையும் பொன் தகட்டால் செய்தார். ஒவ்வொரு சிறு கேடயத்திற்கும் ஏறத்தாழ இரண்டு கிலோ பொன் பயன்படுத்தப்பட்டது. அவற்றை அரசர் லெபனோனின் வனம் எனப்பட்ட மாளிகையில் வைத்தார்.18 அரசர் தந்தத்தினால் பெரியதோர் அரியணை செய்து அதைப் பசும்பொன்னால் வேய்ந்தார்.19 அவ்வரியணைக்கு ஆறு படிகள் இருந்தன. அரியணையின் பின்புற உச்சி காளையின் தலை உருவம் கொண்டிருந்தது. இருக்கையின் இரு புறமும் கைப்பிடிகள் இருந்தன. அவற்றின் அருகே இரு சிங்கங்கள் வடிவங்கள் நின்றன.20 ஆறு படிகளின் இருபக்கத்திலும் ஒவ்வொரு சிங்கமாக பன்னிரு சிங்க வடிவங்கள் இருந்தன. வேறெந்த அரசனுக்கும் இத்தகைய அரியணை இருந்ததில்லை.21 சாலமோன் அரசரின் பான பாத்திரங்கள் எல்லாம் தங்கத்தாலும் லெபனோனின் வனம் எனப்பட்ட மாளிகையின் கலன்கள் அனைத்தும் பசும் பொன்னாலும் ஆனவை. ஒன்றும் வெள்ளியானால் செய்யப்படவில்லை: சாலமோனின் காலத்தில் வெள்ளியை யாரும் உயர்வாக மதிக்கவில்லை.22 அரசரின் வணிகக் கப்பல்கள், ஈராமின் கப்பல்களோடு சென்று கடல் வாணிபம் செய்தன. வணிகக் கப்பல்கள் மூன்று ஆண்டுக்கு ஒருமுறை, பொன், வெள்ளியையும் தந்தம், குரங்கு, மயில் ஆகியவற்றையும் கொண்டு வந்தன.23 உலகின் மன்னர் அனைவருள்ளும் சாலமோன் அரசரே செல்வத்திலும் ஞானத்திலும் மிகச் சிறந்து விளங்கினார்.24 சாலமோனுக்கு ஆண்டவர் அருளியிருந்த ஞானத்தை நேரில் கேட்டறிய எல்லா நாட்டு மக்களும் அவரை நாடி வந்தனர்.25 அவர்கள் ஒவ்வொருவரும் ஆண்டுதோறும் வெள்ளியாலும், பொன்னாலுமான பொருள்கள், பட்டாடைகள், படைக் கலன்கள், நறுமணப் பொருள்கள், குதிரைகள், கோவேறு கழுதைகள் ஆகியவற்றை அன்பளிப்பாக அரசருக்குக் கொண்டு வந்தனர்.26 சாலமோன் ஆயிரத்து நானூறு தேர்களும் பன்னீராயிரம் குதிரை வீரர்களும் கொண்ட படையொன்றைத் திரட்டினார். அதனைத் தேர்ப்டை நகர்களிலும் எருசலேமில் அரசனுடனும் நிறத்தி வைத்தார்.27 அவருடைய ஆட்சியின் போது, எருசலேமில் வெள்ளிக் கற்களைப் போலவும், கேதுரு மரங்கள் செப்பேலா சமவெளியின் காட்டத்தி போலவும் மிகுதியாய் இருந்தன.28 சாலமோன் எகிப்திலிருந்தும் கேவேயிலிருந்தும் குதிரைகளை இறக்குமதி செய்தார். அரசரின் வணிகர் அவற்றைக் கேவேயிலிருந்து விலைக்கு வாங்கி வந்தனர்.29 எகிப்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு தேரின் விலை அறுநூறு வெள்ளிக்காசு. ஒரு குதிரைகள் விலை நூற்றைம்பது வெள்ளிக்காசு. இவ்வாறே, அவர்கள் இத்தியரின் அனைத்து மன்னர்களுக்கும் சிரியாவின் மன்னர்களுக்கும் அவற்றை ஏற்றுமதி செய்தார்கள்.


திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

Free counters!