செக்கரியா |
|
அதிகாரம்
6
|
நான்கு தேர்கள் பற்றிய காட்சி 1 மீண்டும் நான் என் கண்களை உயர்த்திப் பார்த்தபோது, இரு மலைகளுக்கு இடையிலிருந்து நான்கு தேர்கள் புறப்பட்டு வருவதைக் கண்டேன்: அம்மலைகள் வெண்கல மலைகள்.2 முதல் தேரில் சிவப்புக் குதிரைகளும், இரண்டாவது தேரில் கறுப்புக் குதிரைகளும்,3 மூன்றாவதில் வெள்ளைக் குதிரைகளும், நான்காவதில் புள்ளிகளை உடைய கறுப்புநிற வலிமையான குதிரைகளும் பூட்டப்பட்டிருந்தன. 4 என்னோடு பேசிக்கொண்டிருந்த தூதரிடம் நான் "என் தலைவரே! இவை என்ன?" என்று கேட்டேன். 5 அத்தூதர், "இவை அனைத்துலக ஆண்டவரின் திருமுன்னிருந்து புறப்பட்டுச் செல்கின்ற வானகத்தின் நாற்றிசைக் காற்றுகள். 6 கறுப்புக் குதிரைகள் பூட்டிய தேர் வடநாட்டை நோக்கிச் செல்கிறது; வெண்ணிறக் குதிரைகள் அவற்றைப் பின்தொடர்ந்து போகின்றன; புள்ளியுள்ள கறுப்புநிறக் குதிரைகளோ தென்னாட்டை நோக்கிச் செல்கின்றன" என்று கூறினார். 7 வலிமையான குதிரைகள் புறப்பட்டுச் சென்று உலகெங்கும் சுற்றிவருவதற்குத் துடித்தன. அப்போது அவர், போய் உலகைச் சுற்றி வாருங்கள் என்றார். அவ்வாறே அவை உலகெங்கும் சுற்றித் திரிந்தன.8 பின்பு அவர் என்னை நோக்கிக் கூக்குரலிட்டு, இதோ பார்! வடநாட்டை நோக்கிச் சென்றவை அந்நாட்டில் எனது உள்ளம் அமைதி கொள்ளும்படி செய்திருக்கின்றன என்றார்.
யோசுவாவை முடிசூட்டுவிக்க ஆண்டவரது கட்டளை 9 மீண்டும் ஆண்டவரது வாக்கு எனக்கு அருளப்பட்டது:10 நாடுகடத்தப்பட்டுப் பாபிலோனிலிருந்து திரும்பி வந்திருக்கின்ற என் தாய், தோபியா, எதாயா என்பவர்களிடமிருந்து நன்கொடைகளைப் பெற்றுக்கொள்: அன்றைக்கே செப்பனியாவின் மகனான யோசியாவின் இல்லத்திற்குப் போ.11 அங்கே அவர்களிடம் பெற்றுக்கொண்ட பொன் வெள்ளியைக் கொண்ட முடி செய்து, தலைமைக் குருவும் யோசதாக்கின் மகனுமான யோசுவாவின் தலையில் அதைச் சூட்டு:12 சூட்டியபின் இவ்வாறு சொல்: படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: இதோ, தளிர் என்னும் பெயர் கொண்ட மனிதர் தம் இடத்திலிருந்து துளிர்ப்பார்: ஆண்டவரின் கோவிலைக் கட்டியெழுப்புவார்:13 ஆண்டவரின் கோவிலைக் கட்டியெழுப்புவதுமன்றி, அரச மாண்பைக் கொண்டவராய், அரியணையில் வீற்றிருந்து அவர் ஆட்சி செலுத்துவார்: ஓர் குருவும் தமது அரியணையில் அமர்ந்திருப்பார்.14 அவர்கள் இருவர்க்கிடையேயும் நல்லிணக்கம் நிலைபெறும். அந்த மணிமுடி ஆண்டவரின் கோவிலில் எல்தாய், தொபியா, எதாயா என்பவர்களுக்கும் செப்பனியாவின் மகன் யோசியாவிற்கும் நினைவுச் சின்னமாய் இருக்கும்.15 தொலைவில் இருப்போரும் வந்து ஆண்டவரின் கோவிலைக் கட்டியெழுப்பத் துணைபுரிவர்: அப்போது படைகளின் ஆண்டவரே என்னை உங்களிடம் அனுப்பினார் என்பதை நீங்கள் உணர்ந்துகொள்வீர்கள். உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்கு ஆர்வத்துடன் செவிசாய்த்து நடந்தீர்களானால் இவையெல்லாம் நிறைவேறும். |