திருவெளிப்பாடு |
|
அதிகாரம்
9
|
ஐந்தாம் எக்காளம் 1 பிறகு ஐந்தாம் வானதூதர் எக்காளம் முழக்கினார். அப்பொழுது வானிலிருந்து நிலத்தின்மீது விழுந்து கிடந்த ஒரு விண்மீனைக் கண்டேன். படுகுழி வாயிலின் திறவுகோல் அதற்குக் கொடுக்கப்பட்டது.2 அது படுகுழி வாயிலைத் திறக்கவே, பெரும் சூளையிலிருந்து புகை எழுவது போல் அக்குழியிலிருந்து புகை கிளம்பியது. அப்புகையால் கதிரவனும் வான்வெளியும் இருண்டு போயின.3 புகையிலிருந்து வெட்டுக்கிளிகள் கிளம்பி நிலத்துக்கு வந்தன. நிலத்தில் ஊர்ந்து திரியும் தேள்களுக்கு உள்ள ஆற்றல் அவற்றுக்குக் கொடுக்கப்பட்டது.4 நிலத்தின் புற்பூண்டுகளுக்கோ மரங்களுக்கோ தீங்கு இழைக்காமல், தங்கள் நெற்றியில் கடவுளின் முத்திரை இல்லாதவர்களுக்கு மட்டும் தீங்கு செய்யுமாறு அவற்றுக்குக் கட்டளையிடப்பட்டது.5 ஆனால் அவர்களைக் கொல்லாமல் ஐந்து மாதம் வரை வதைக்க மட்டும் வெட்டுக்கிளிகளுக்குக் கட்டளை கொடுக்கப்பட்டது. தேள் மனிதரைக் கொட்டித் துன்புறுத்துவதுபோல் அவை அவர்களை வதைத்தன.6 அக்காலத்தில் மனிதர் சாவைத் தேடுவார்கள்: ஆனால் சாக மாட்டார்கள். சாக விரும்புவார்கள்: ஆனால் சாவு அவர்களை அணுகாது.7 போருக்கு ஆயத்தமாய் இருக்கும் குதிரைகளைப்போல் அந்த வெட்டுக்கிளிகள் காணப்பட்டன. அவற்றின் தலைகளில் பொன் முடிகள் போன்றவை தென்பட்டன. அவற்றின் முகங்கள் மனித முகங்கள்போல் இருந்தன.8 அவற்றின் முடி பெண்களின் கூந்தலையும், பற்கள் சிங்கங்களின் பற்களையும் ஒத்திருந்தன.9 அவற்றின் மார்பில் இரும்பாலான மார்புக் கவசம் அணிந்திருந்தது போலத் தோன்றியது. சிறகுகளின் இரைச்சல் போருக்கு விரையும் தேர்ப்படையின் இரைச்சல் போன்று இருந்தது.10 தேள்களைப் போல் அவை வாலும், கொடுக்கும் கொண்டிருந்தன. ஐந்து மாதம் மனிதருக்குத் தீங்கு இழைக்கும் ஆற்றல் அவற்றின் வால்களில் இருந்தது.11 படுகுழியின் வானதூதரே அவற்றுக்கு அரசன். அவருக்கு எபிரேய மொழியில் அபத்தோன் என்றும், கிரேக்க மொழியில் அப்பொல்லியோன் என்றும் பெயர்.12 முதலாவது கேடு கடந்துவிட்டது. இதோ! இன்னும் இரண்டு கேடுகள் வரவிருக்கின்றன.
ஆறாம் எக்காளம் 13 பிறகு ஆறாம் வானதூதர் எக்காளம் முழக்கினார். அப்பொழுது கடவுள் திருமுன் இருந்த பொன் பலிபீடத்தின் நான்கு கொம்புகளிலிருந்தும் எழுந்த ஒரு குரலைக் கேட்டேன்.14 அக்குரல் அந்த வானதூதரிடம், யூப்பிரத்தீசு பேராற்றின் அருகில் கட்டப்பட்டுக் கிடக்கும் வானதூதர் நால்வரையும் அவிழ்த்துவிடு என்றது.15 அவ்வாறே மனிதருள் மூன்றில் ஒரு பகுதியினரைக் கொல்லும்படி குறிக்கப்பட்டிருந்த ஆண்டு, மாதம், நாள், மணிக்காக ஆயத்தமாய் இருந்த அந்த நான்கு வானதூதர்களும் அவிழ்த்துவிடப்பட்டார்கள்.16 குதிரைப்படையின் எண்ணிக்கையைச் சொல்லக் கேட்டேன். அது இருபது கோடி.17 நான் கண்ட காட்சியில், குதிரைகளையும் அவற்றின் மேல் ஏறியிருந்தவர்களையும் கண்டேன். அவர்கள் நெருப்பு, பதுமராகம், கந்தகம் ஆகியவற்றின் நிறங்களைக் கொண்ட மார்புக் கவசங்களை அணிந்திருந்தார்கள்.
அக்குதிரைகளின் தலைகள் சிங்கங்களின் தலைகள் போன்று இருந்தன: அவற்றின் வாயிலிருந்து நெருப்பும் புகையும் கந்தகமும் வெளிவந்தன.18 அவற்றின் வாயிலிருந்து வெளிப்பட்ட நெருப்பு, புகை, கந்தகம் ஆகிய இம்மூன்று வாதைகளால் மனிதருள் மூன்றில் ஒரு பகுதியினர் கொல்லப்பட்டனர்.19 அக்குதிரைகளின் ஆற்றல் அவற்றின் வாயிலும் வாலிலும் இருந்தது. அவற்றின் வால்கள் பாம்புபோன்று இருந்தன. அவை தங்கள் தலையைக்கொண்டு தீங்கு இழைத்து வந்தன.20 அந்த வாதைகளால் கொல்லப்படாமல் எஞ்சிய மனிதர்கள் தங்கள் செயல்களை விட்டு மனம் மாறவில்லை. பேய்களையும் பொன், வெள்ளி, வெண்கலம், கல், மரம் ஆகியவற்றால் செய்யப்பட்ட, பார்க்கவோ கேட்கவோ நடக்கவோ முடியாத சிலைகளையும் வணங்குவதை அவர்கள் விட்டுவிடவில்லை.21 தாங்கள் செய்துவந்த கொலை, பில்லிசூனியம், பரத்தைமை, களவு ஆகியவற்றை விட்டு அவர்கள் மனம் மாறவில்லை. |