திருப்பாடல்கள் (சங்கீதங்கள்) |
|
அதிகாரம்
89
|
நாடு இடருற்றபோது பாடியது (எஸ்ராகியரான ஏத்தானின் அறப்பாடல்) (1 அர 4:31) 1 ஆண்டவரின் பேரன்பைப்பற்றி நான் என்றும் பாடுவேன்; நீர் உண்மையுள்ளவர் எனத் தலைமுறைதோறும் என் நாவால் அறிவிப்பேன். 2 உமது பேரன்பு என்றென்றும் நிலைத்துள்ளது என்று அறிவிப்பேன்; உமது உண்மை வானைப்போல் உறுதியானது. 3 நீர் உரைத்தது: 'நான் தேர்ந்து கொண்டவனோடு உடன்படிக்கை செய்துகொண்டேன்; என் ஊழியன் தாவீதுக்கு ஆணையிட்டு நான் கூறியது: 4 உன் வழிமரபை என்றென்றும் நிலைக்கச் செய்வேன்; உன் அரியணையைத் தலைமுறை தலைமுறையாக நிலைத்திருக்கச் செய்வேன்' (சேலா) 2 சாமு 7:12-16;
1 குறி 17:11-14;
திபா 132:11;
திப 2:30 5 ஆண்டவரே, வானங்கள் உம் வியத்தகு செயல்களைப் புகழ்கின்றன; தூயவர் குழுவினில் உமது உண்மை விளங்கும். 6 வான்வெளியில் ஆண்டவருக்கு நிகரானவர் யார்? தெய்வ மைந்தர் குழுவில் ஆண்டவருக்கு இணையானவர் யார்? 7 தூயவர் குழுவில் அவர் அஞ்சுதற்குரிய இறைவன்; அவரைச் சூழ்ந்துள்ள அனைவருக்கும் மேலாக அஞ்சுதற்கு உரியவர். 8 படைகளின் கடவுளாகிய ஆண்டவரே! உம்மைப்போல் ஆற்றல் மிக்கவர் யார்? ஆண்டவரே! உம் உண்மை உம்மைச் சூழ்ந்துள்ளது. 9 கொந்தளிக்கும் கடல்மீது நீர் ஆட்சி செலுத்துகின்றீர்; பொங்கியெழும் அதன் அலைகளை அடக்குகின்றீர். 10 இராகாபைப் பிணமென நசுக்கினீர்; உம் எதிரிகளை உம் வலிய புயத்தால் சிதறடித்தீர். 11 வானமும் உமதே! வையமும் உமதே! பூவுலகையும் அதில் நிறைந்துள அனைத்தையும் நிலைநிறுத்தியவர் நீரே! 12 வடக்கையும் தெற்கையும் படைத்தவர் நீரே! தாபோரும் எர்மோனும் உம் பெயரைக் களிப்புடன் புகழ்கின்றன. 13 வன்மைமிக்கது உமது புயம்; வலிமைகொண்டது உமது கை; உயர்ந்து நிற்பது உம் வலக்கை;14 நீதியும் நேர்மையும் உம் அரியணைக்கு அடித்தளம்; பேரன்பும் உண்மையும் உமக்கு முன்னே செல்லும். 15 விழாவின் பேரொலியை அறிந்த மக்கள் பேறுபெற்றோர்; ஆண்டவரே! உம் முகத்தின் ஒளியில் அவர்கள் நடப்பார்கள். 16 அவர்கள் நாள்முழுவதும் உம் பெயரில் களிகூர்வார்கள்; உமது நீதியால் அவர்கள் மேன்மை அடைவார்கள். 17 ஏனெனில், நீரே அவர்களது ஆற்றலின் மேன்மை; உமது தயவால் எங்கள் வலிமை உயர்த்தப்பட்டுள்ளது. 18 நம் கேடயம் ஆண்டவருக்கு உரியது; நம் அரசர் இஸ்ரயேலின் தூயவருக்கு உரியவர்.
கடவுள் தாவீதுக்கு அளித்த வாக்குறுதி 19 முற்காலத்தில் உம் பற்றுமிகு அடியார்க்கு நீர் காட்சி தந்து கூறியது: "வீரன் ஒருவனுக்கு வலிமை அளித்தேன்; மக்களினின்று தேர்ந்தெடுக்கப்பட்டவனை உயர்த்தினேன். 20 என் ஊழியன் தாவீதைக் கண்டுபிடித்தேன்; என் திருத்தைலத்தால் அவனுக்குத் திருப்பொழிவு செய்தேன். 1சாமு 13:14; 16:12;
திப 13:22 21 என் கை எப்பொழுதும் அவனோடு இருக்கும்; என் புயம் உண்மையாகவே அவனை வலிமைப்படுத்தும். 22 எதிரி எவனாலும் அவனை வஞ்சிக்க முடியாது; தீயவன் எவனாலும் அவனை ஒடுக்க இயலாது. 23 அவனுடைய எதிரிகளை அவன் கண்முன் நசுக்குவேன்; அவனை வெறுப்போரை வெட்டிக் கொல்வேன். 24 என் வாக்குப் பிறழாமையும் பேரன்பும் அவனோடு இருக்கும்; என் பெயரால் அவனது வலிமை உயர்த்தப்படும். 25 அவன் கையைக் கடல்வரைக்கும் அவன் வலக்கையை ஆறுகள் வரைக்கும் எட்டச் செய்வேன். 26 'நீரே என் தந்தை, என் இறைவன், என் மீட்பின் பாறை' என்று அவன் என்னை அழைப்பான். 27 நான் அவனை என் தலைப்பேறு ஆக்குவேன்; மண்ணகத்தின் மாபெரும் மன்னன் ஆக்குவேன். திவெ 1:5 28 அவன்மீது கொண்ட பேரன்பு என்றும் நிலைக்குமாறு செய்வேன்; அவனோடு நான் செய்துகொண்ட உடன்படிக்கையும் எப்பொழுதும் நிலைத்திருக்கும். 29 அவனது வழிமரபை என்றென்றும் நிலைநிறுத்துவேன்; அவனது அரியணையை வான்வெளி உள்ளவரை நிலைக்கச் செய்வேன். 30 அவன் புதல்வர் என் திருச்சட்டத்தைக் கைவிட்டாலோ, என் நீதிநெறிகளின்படி நடக்காவிடிலோ, 31 என் விதிகளை மீறினாலோ, என் கட்டளைகளைக் கடைப்பிடிக்காவிடிலோ, 32 அவர்களது குற்றத்திற்காக அவர்களைப் பிரம்பினால் தண்டிப்பேன்; அவர்களின் தீச்செயலுக்காக அவர்களைக் கசையால் அடிப்பேன்; 33 ஆயினும், என் பேரன்பை தாவீதைவிட்டு விலக்கமாட்டேன்; என் வாக்குப்பிறாழாமையினின்று வழுவமாட்டேன். 34 என் உடன்படிக்கையை நான் மீறமாட்டேன். என் வாக்குறுதியை நான் மாற்றமாட்டேன். 35 ஒரே முறையாய் என் புனிதத்தின் மீது ஆணையிட்டுக் கூறினேன்; ஒருபோதும் அவனுக்கு நான் பொய் உரைக்கமாட்டேன். 36 அவனது வழிமரபு என்றென்றும் நிலைத்திருக்கும்; அவனது அரியணை கதிரவன் உள்ளளவும் என்முன் நிலைக்கும். 37 அது விண்ணின் உண்மையான சான்றென உறுதியாயிருக்கும்; நிலாவென என்றென்றும் நிலைத்திருக்கும்." (சேலா)
அரசரின் தோல்வி குறித்துப் புலம்பியது 38 ஆயினும், திருப்பொழிவு பெற்றவரை இப்போது நீர் புறக்கணித்துத் தள்ளிவிட்டீர்; அவர்மீது கடுஞ்சினம் கொண்டுள்ளீர். 39 உம் ஊழியருடன் செய்துகொண்ட உடன்படிக்கையை வெறுத்து ஒதுக்கினீர்; அவரது மணிமுடியைப் புழுதில் தள்ளி இழிவுபடுத்தினீர். 40 அவருடைய மதில்களைத் தகர்த்துவிட்டீர்; அவருடைய அரண்களைப் பாழடையச் செய்தீர். 41 வழிப்போக்கர் அனைவரும் அவரைக் கொள்ளையிடுகின்றனர்; அடுத்து வாழ்வோரின் பழிப்புக்கு அவர் ஆளானார். 42 அவருடைய எதிரிகளின் கை ஓங்கச் செய்தீர்; அவருடைய பகைவர் அனைவரும் அக்களிக்கச் செய்தீர். 43 அவரது வாளின் முனையை வளைத்துவிட்டீர்; போரில் அவரால் எதிர்த்து நிற்க முடியாதபடி செய்தீர். 44 அவரது மாட்சி அவரைவிட்டு விலகச் செய்தீர்; அவரது அரியணையைக் கீழே தள்ளிவிட்டீர், 45 அவரது இளமையைச் சுருக்கிவிட்டீர்; அவருக்கு வெட்கத்தை ஆடையாக்கினீர்.(சேலா)
விடுதலைக்காக வேண்டல் 46 எவ்வளவு காலம் மறைந்திருப்பீர் ஆண்டவரே! என்றென்றுமா? எவ்வளவு காலம் உமது சினம் நெருப்பென எரிந்து கொண்டிருக்கும்? 47 எங்கள் ஆயுள் எவ்வளவு குறுகியது என்பதை நினைத்தருளும்; மானிடர் அனைவரையும் வீணாகவா படைத்துள்ளீர்? 48 என்றும் சாவைக் காணாமல் இருப்பவர் எவர்? பாதாளத்தின் பிடியினின்று தன்னைக் காத்துக் கொள்பவர் எவர்? (சேலா) 49 என் தலைவரே! தொடக்க காலத்தில் நீர் காட்டிய பேரன்பு எங்கே? தாவீதுக்கு உமது வாக்குப் பிறாழாமையை முன்னிட்டு உறுதியாகக் கூறியது எங்கே? 50 என் தலைவரே! உம் ஊழியர்மீது சுமத்தப்படும் பழியை நினைத்துப்பாரும்; மக்களினங்களின் பழிச்சொற்கள் அனைத்தையும் என் நெஞ்சில் தாங்குகிறேன். 51 ஆண்டவரே! உம் எதிரிகள் அவர் மேல் பழி சுமத்துகின்றனர்; அவர்கள் உம்மால் திருப்பொழிவு பெற்றவரைச் சென்றவிடமெல்லாம் தூற்றுகின்றனர். 52 ஆண்டவர் என்றென்றும் புகழப்பெறுவாராக! ஆமென், ஆமென். |