திருப்பாடல்கள் (சங்கீதங்கள்) |
|
அதிகாரம்
46
|
நம்மோடு வாழும் கடவுள் (பாடகர் தலைவர்க்கு; கோராக்கியரின் பாடல்;'இளமகளிர்' என்ற மெட்டு) 1 கடவுள் நமக்கு அடைக்கலமும் ஆற்றலுமாய் உள்ளார்; இடுக்கணுற்ற வேளைகளில் நமக்கு உற்ற துணையும் அவரே.2 ஆகையால், நிலவுலகம் நிலைகுலைந்தாலும், மலைகள் ஆழ்கடலில் அதிர்ந்து நடுங்கினாலும்,3 கடலின் அலைகள் கொந்தளித்துப் பொங்கினாலும், அவற்றின் பெருக்கால் குன்றுகள் அதிர்ந்து நடுங்கினாலும் எங்களுக்கு அச்சமென்பதே இல்லை. (சேலா)4 ஆறு ஒன்று உண்டு, அதன் கால்வாய்கள் உன்னதரான கடவுளின் திரு உறைவிடமான நகருக்குப் பேரின்பம் அளிக்கின்றன.5 அந்நகரின் நடுவில் கடவுள் இருக்கின்றார்; அது ஒருபோதும் நிலைகுலையாது; வைகறைதோறும் கடவுள் துணை அதற்கு உண்டு.6 வேற்றினத்தார் கலக்கமுற்றனர்; அரசுகள் ஆட்டம் கண்டன; கடவுளின் குரல் முழங்கிற்று; பூவுலகம் கரைந்தது.7 படைகளின் ஆண்டவர் நம்மோடு இருக்கின்றார்; யாக்கோபின் கடவுளே நமக்கு அரண். (சேலா)8 வாரீர்! ஆண்டவரின் செயல்களைக் காணீர்! அவர் உலகில் ஆற்றியுள்ள திகைப்பூட்டும் நிகழ்ச்சிகளைப் பாரீர்!9 உலகின் கடையெல்லைவரை போர்களைத் தடுத்து நிறுத்துகின்றார்; வில்லை ஒடிக்கின்றார்; ஈட்டியை முறிக்கின்றார்; தேர்களைத் தீக்கு இரையாக்குகின்றார்.10 அமைதி கொண்டு, நானே கடவுள் என உணர்ந்து கொள்ளுங்கள்; வேற்றினத்தாரிடையே நான் உயர்ந்திருப்பேன்; பூவுலகில் நானே மாட்சியுடன் விளங்குவேன்.11 படைகளின் ஆண்டவர் நம்மோடு இருக்கின்றார்; யாக்கோபின் கடவுளே நமக்கு அரண். |