யோசுவா |
|
அதிகாரம்
2
|
யோசுவாவின் ஒற்றர்களும் இராகாபும் 1 நூனின் மகனாகிய யோசுவா சித்திமிலிருந்து இரண்டு ஒற்றர்களை வேவு பார்க்க அனுப்பினார். அவர்களிடம், "நீங்கள் சென்று நிலப்பகுதியையும், குறிப்பாக எரிகோ நகரையும் பாருங்கள்" என்றார். அவர்கள் சென்று இராகாபு என்ற பெயருள்ள விலைமாதின் வீட்டுக்கு வந்து, அங்குத் தங்கினர்.எபி 11:31; யாக் 2:25 2 சில இஸ்ரயேலர், இரவில் நாட்டைப்பற்றிய உளவு அறிய வந்தனர் என்ற செய்தி எரிகோ மன்னனுக்கு எட்டியது.3 உடனே அவன், "உன் வீட்டுக்கு வந்து உன்னோடு தங்கியிருக்கும் ஆள்களை வெளியே கொண்டுவா. ஏனெனில் அவர்கள் நாடு முழுவதையும் உளவறிய வந்துள்ளனர்" என்று இராகாபிடம் சொல்லுமாறு ஆள் அனுப்பினான்.4 அப்பெண் அவ்விருவரையும் அழைத்து ஒளித்துவைத்த பின், "சில மனிதர்கள் என்னிடம் வந்தனர். அவர்கள் எங்கிருந்து வந்தவர்கள் என்று எனக்குத் தெரியாது.5 இருட்டியபின் வாயில் கதவு சாத்தப்படும்பொழுது அவர்கள் வெளியே சென்றார்கள். அவர்கள் எங்கே சென்றார்கள் என்று தெரியவில்லை. விரைவாக அவர்களைப் பின்தொடர்ந்து பிடியுங்கள்" என்றார்.6 அவர் அவர்களை மாடியில் ஏற்றி அங்கிருந்த சணல் தட்டைகளுக்குள் மறைத்து வைத்தார்.7 அந்த ஆள்கள் யோர்தானுக்குச் செல்லும் வழியில் ஆற்றந்துறைவரை அவர்களைத் தேடிச் சென்றனர். தேடி வந்தவர்கள் வெளியேறியதும் வாயிற்கதவு மூடப்பட்டது.8 அவரோ, மாடியில் இருந்த ஒற்றர்கள் உறங்குமுன் அவர்களிடம் சென்றார்.9 அவர்களிடம் அவர், "இந்நாட்டை ஆண்டவர் உங்களுக்கு அளிப்பார் என்று நான் அறிவேன். ஏனெனில் உங்களைப் பற்றிய அச்சம் எங்களிடையே எழுந்துள்ளது. உலகில் வாழ்வோர் அனைவரும் உங்கள்முன் நடுங்குகின்றனர்.10 எகிப்தினின்று நீங்கள் வெளியேறும்பொழுது செங்கடலின் நீரை ஆண்டவர் வற்றச்செய்தது பற்றி அவர்கள் கேள்விப் பட்டுள்ளனர். நீங்கள் கீழை யோர்தானில் இரண்டு எமோரிய அரசர்களான சீகோனுக்கும் ஓகுக்கும் செய்ததையும் அவர்களை அழித்ததையும் அவர்கள் அறிவார்கள்.விப 14:21; எண் 21:21-35 11 அதைக் கேள்விப்பட்டவுடன் எங்கள் இதயம் கலக்கமுற்றது. உங்கள் முன்னிலையில் எங்கள் உள்ளம் தளர்ந்திருக்கிறது. ஏனெனில் உங்கள் கடவுளாகிய ஆண்டவர், மேலே விண்ணுலகம் முதல் கீழே மண்ணுலகம் அனைத்திற்கும் கடவுள்.12 நான் உங்களுக்கு இரக்கம் காட்டியதுபோல் நீங்களும் என் தந்தை வீட்டிற்கு இரக்கம் காட்டுவீர்கள் என்று இப்பொழுது எனக்கு ஆண்டவரின் பெயரால் வாக்குறுதி அளியுங்கள். நம்பத் தகுந்த அடையாளம் ஒன்றினை எனக்குக் கொடுங்கள்.13 என் தாய், தந்தை, என் சகோதர சகோதரிகள் மற்றும் அவர்களுக்குச் சொந்தமான குடும்பங்கள் அனைத்தையும் வாழவிடுங்கள். சாவிலிருந்து எங்கள் உயிர்களைக் காப்பாற்றுங்கள்" என்றார்.14 அதற்கு அந்த ஒற்றர்கள், "எங்கள் உயிர் உம்கையில் உள்ளது. எங்களைப் பற்றி வெளியில் சொல்லாமல் இருந்தால் ஆண்டவர் எங்களுக்கு நாட்டை அளிக்கும்போது நாங்கள் உங்களுக்கு இரக்கம் காட்டுவோம். நம்பிக்கையுடன் நடந்துகொள்வோம்" என்றனர்.15 அவர் ஒரு கயிற்றின்மூலம் அவர்களைச் சாளரம் வழியாக இறக்கிவிட்டார். ஏனெனில், அவரது வீடு கோட்டைச் சுவரோடு இணைந்திருந்தது. அங்கே அவர் வாழ்ந்து வந்தார்.16 அவர் அவர்களிடம், "உங்களைத் துரத்துபவர்கள் கண்டுபிடிக்காதபடி நீங்கள் மலையை நோக்கிப் போங்கள். துரத்துபவர்கள் திரும்பும்வரை அங்கே மூன்று நாள்கள் ஒளிந்து கொள்ளுங்கள். பின்னர், உங்கள் வழியே செல்லுங்கள்" என்றார்.17 அப்பொழுது ஒற்றர்கள், "நீர் எங்களிடமிருந்து பெற்ற வாக்குறுதியிலிருந்து நாங்கள் தவற மாட்டோம்.18 நாங்கள் இந்நாட்டுக்குத் திரும்பி வரும்பொழுது நீர் இந்தச் சிவப்புக் கயிற்றை எங்களை இறக்கிவிட்ட சாளரத்தில் கட்டிவையும். உம் தாய், தந்தை, உம் சகோதரர்கள், மற்றும் உம் தந்தை வீட்டில் உள்ள அனைத்தையும் உம் வீட்டில் சேர்த்து வைத்திரும்.19 உம் வீட்டடிலிருந்து கதவுக்கு வெளியே எவராவது வந்தால் அவரது சாவுக்கு அவரே பொறுப்பாவார். நாங்கள் குற்றமற்றவர்கள். ஆனால் உம்மோடு வீட்டிலிருப்பவர் மீது எவராவது கை வைத்ததால் அந்த இரத்தப்பழி எங்கள் தலைமீது விழும்.20 நமக்குள் நடந்த இந்தப் பேச்சு வார்த்தையை நீர் வெளிப்படுத்தினால், எங்களிடமிருந்து நீர் பெற்ற வாக்குறுதிக்கு நாங்கள் பொறுப்பாளிகள் அல்ல" என்றனர்.21 அவர், "உங்கள் வார்த்தைப்படியே ஆகட்டும்" என்று சொல்லி அவர்களை அனுப்பி வைத்தார். அவர்கள் வெளியே சென்றபின் அவர் ஒரு கருஞ்சிவப்புக் கயிற்றைச் சாளரத்தில் கட்டி வைத்தார்.22 அவர்கள் மலைக்குச் சென்று, துரத்தி வந்தவர்கள் திரும்பிச் செல்லும் வரை மூன்று நாள்கள் அங்கே தங்கினார்கள். துரத்தியவர்கள் வழிநெடுகத்தேடியும் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.23 அங்கே தங்கியிருந்த இரண்டு ஒற்றர்களும் மலையிலிருந்து கீழே இறங்கிப் பயணம் செய்து நூனின் மகன் யோசுவாவிடம் வந்து தங்களுக்கு நடந்த அனைத்தையும் எடுத்துரைத்தனர்.24 மேலும், அவர்கள் யோசுவாவிடம், "நாடு அனைத்தையும் கடவுள் நம் கையில் ஒப்படைத்துள்ளார். நாட்டில் வாழ்பவர் அனைவரும் நம்மைக் கண்டு நடுங்குகின்றனர்" என்றார்கள். |