செப்பனியா |
|
முன்னுரை |
கி.மு. ஏழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் செப்பனியா இறைவாக்கு உரைத்தார். அவர் இறைவாக்கு உரைத்த காலம் யோசியா அரசன் கி.மு. 621 இல் செயல்படுத்திய சமயச் சீர்திருத்தத்திற்கு முன்னைய பத்தாண்டாக இருக்கலாம். ஏனைய இறைவாக்கு நூல்களில் மிகுதியாகக் காணப்படும் கருத்துக்களையே இந்நூலும் கொண்டுள்ளது: அழிவின் நாள் நெருங்கிவிட்டது; அப்பொழுது யூதா வேற்றுத் தெய்வங்களை வழிபட்டதற்காகத் தண்டிக்கப்படும்; எருசலேம் அழிவுற்றாலும் மீண்டும் ஒரு நாள் முன்னைய நன்னிலைக்கு உயர்த்தப்படும்; பணிவும் நேர்மையும் மிக்க மக்கள் அங்கு மீண்டும் வாழ்வார்கள். நூலின் பிரிவுகள் - ஆண்டவர் தீர்ப்பு வழங்கும் நாள் 1:1 - 2:3
- வேற்றினத்தாரின் அழிவு 2:4 - 15
- எருசலேமின் அழிவும் மீட்பும் 3:1 - 20
|
|
அதிகாரம்
1
|
1 ஆமோனின் மகன் யோசியா யூதாவின் அரசனாய் இருந்தபொழுது செப்பனியாவுக்கு ஆண்வரின் வாக்கு அருளப்பட்டது. இவர் எசேக்கியாவின் கொள்ளுப் பேரனும் அமரியாவின் பேரனும் கெதலியாவின் மகனுமான கூசியாவின் மைந்தர் ஆவார். 2 அர 22:1-23:30; 2 குறி 34:1-35:27.
ஆண்டவர் தீர்ப்பு வழங்கும் நாள் 2 "மண்ணுலகில் எதுவும் இராதவாறு 3 அனைத்தையும் அழித்துவிடுவேன்," என்கிறார் ஆண்டவர். "மனிதரையும் விலங்குகளையும் அழிப்பேன்; வானத்துப் பறவைகளையும் கடல் மீன்களையும் ஒழிப்பேன்; கொடியவர்களை இடறிவிழச் செய்வேன்; மனித இனம் மண்ணுலகில் இல்லாதவாறு அற்றுப் போகச் செய்வேன்," என்கிறார் ஆண்டவர். 4 யூதாவுக்கும் எருசலேமில் வாழும் அனைவர்க்கும் எதிராக நான் கையை ஓங்குவேன். பாகால் வழிபாட்டில் எஞ்சியிருப்பதையும் அந்தச் சிலை வழிபாட்டு அர்ச்சகர்களின் பெயரையும் அழித்து விடுவேன். 5 வீட்டின் மேல்தளத்திலிருந்து வான் படைகளை வணங்குவோரையும், ஆண்டவரை வணங்கி அவர் பெயராலும் மில்க்கோம் தெய்வத்தின் பெயராலும் ஆணையிடுவோரையும் ஒழித்து விடுவேன். 6 ஆண்டவரைவிட்டு விலகிச் செல்வோரையும் ஆண்டவரைத் தேடாது, அவரை அறிய முயலாது இருப்போரையும் அழித்துவிடுவேன். 7 தலைவராகிய ஆண்டவர் திருமுன் மௌனமாயிருங்கள்; ஏனெனில் ஆண்டவரின் நாள் அண்மையில் உள்ளது; பலி ஒன்றை ஆண்டவர் ஏற்பாடு செய்துள்ளார்; தாம் அழைத்தவர்களை அவர் புனிதப்படுத்தியுள்ளார் 8 ஆண்டவரது பலியின் நாளில் தலைவர்களையும் அரசனுடைய புதல்வர்களையும் வெளிநாட்டு ஆடை அணிந்துள்ள அனைவரையும் தண்டிப்பேன். 9 வாயிற்படியை மிதிக்காமல் தாண்டி வந்து, தங்கள் தலைவனின் வீட்டை வன்செயலாலும் வஞ்சனையாலும் நிரப்புகிறவர்களை அந்நாளில் தண்டிப்பேன். 10 ஆண்டவர் கூறுகின்றார்: "அந்நாளில் எருசலேமின் மீன் வாயிலிருந்து கூக்குரலும், புதிய நகர்ப் பகுதியிலிருந்து புலம்பலும், குன்றுகளிலிருந்து இடிந்துவிழும் பேரொலியும் கேட்கும். 11 நகரின் கீழ்ப்பகுதியில் குடியிருப்போரே! கதறி அழுங்கள்; ஏனெனில், வணிகர் அனைவர்க்கும் அழிவு வருகின்றது; பணம் படைத்தவர் அனைவரும் வெட்டி வீழ்த்தப்படுகின்றனர்; 12 அக்காலத்தில், நான் கையில் விளக்கேந்திக் கொண்டு எருசலேமைச் சோதித்துப் பார்ப்பேன்; 'ஆண்டவர் நன்மையும் செய்யார்; தீமையும் செய்யார்' என்று தங்கள் உள்ளங்களில் சொல்லிக் கொண்டு பஞ்சணையில் சாய்ந்து கொழுத்திருப்போரைத் தண்டிப்பேன். 13 அவர்களுடைய உடைமைகள் கொள்ளையடிக்கப்படும்; வீடுகள் பாழாக்கப்படும்; அவர்கள் வீடுகள் கட்டிக்கொள்வார்கள்; ஆனால் அவற்றில் குடியிருக்கப்போவதில்லை; திராட்சைத் தோட்டங்களைப் பயிர் செய்தாலும், அவற்றின் இரசத்தைக் குடிக்கப் போவதில்லை." 14 ஆண்டவரின் மாபெரும் நாள் அண்மையில் உள்ளது; அது விரைந்து நெருங்கிக் கொண்டிருக்கிறது; ஆண்டவரது நாளின் பேரொலி கசப்பை உண்டாக்கும்; மாவீரனையும் கலங்கி அலறும்படி செய்யும். 15 அந்த நாள் கடும் சினத்தின் நாள்; துன்பமும் துயரமும் நிறைந்த நாள்; பேரழிவும் பேரிழப்பும் கொண்டு வரும் நாள்; இருட்டும் காரிருளும் கவிந்த நாள்; 16 அரண்சூழ் நகர்களுக்கும் உயரமான கொத்தளங்களுக்கும் எதிராக எக்காளமும் போர் முழக்கமும் கேட்கும் நாள். 17 மானிடர்மேல் துன்பம் வரச்செய்வேன்; பார்வையற்றோர்போல் அவர்கள் தடுமாறுவர்; ஏனெனில் ஆண்டவருக்கு எதிராகப் பாவம் செய்தனர்; அவர்களது இரத்தம் புழுதி போல் கொட்டப்படும்; சதைப்பிண்டம் சாணம்போல் எறியப்படும். 18 ஆண்டவரது சினத்தின் நாளில், அவர்களது வெள்ளியும் பொன்னும் அவர்களைக் காப்பாற்றா. உலகம் முழுவதும் அவரது வெஞ்சினத் தீக்கு இரையாகும். உலகில் வாழும் அனைவரையும் அவர் நொடிப்பொழுதில் முற்றிலும் அழித்துவிடுவார். |