Chapter: Verses:
Start  End 
 
 
திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

மக்கபேயர் - முதல் நூல்

அதிகாரம் 9

யூதாவின் முடிவு
1 நிக்கானோரும் அவனது படையும் போரில் வீழ்ச்சியுற்றதைத் தெமேத்திரி கேள்வியுற்றபோது, பாக்கீதையும் ஆல்கிமையும் யூதேயா நாட்டுக்கு இரண்டாம் முறையாகத் தன் வலப்படைப் பிரிவோடு அனுப்பினான்.2 அவர்கள் கில்காலுக்குப் போகும் வழியாய்ச் சென்று, அர்பேலாவில் இருந்த மெசலோத்தை முற்றுகையிட்டார்கள்: அதைக் கைப்பற்றிய பலரைக் கொன்றார்கள்.3 அவர்கள் நூற்று ஐம்பத்திரண்டாம் ஆண்டு முதல் மாதத்தில் எருசலேமுக்கு எதிரே பாசறை அமைத்தார்கள். கி.மு. 160 4 அங்கிருந்து புறப்பட்டு இருபதாயிரம் காலாள்களோடும் இரண்டாயிரம் குதிரை வீரர்களோடும் பெரேயாவுக்குப் போனார்கள். 5 எலாசாவில் யூதா பாசறை அமைத்தார். தேர்ந்தெடுத்த வீரர்கள் மூவாயிரம் பேர் அவரோடு இருந்தனர்.6 அவர்கள், எதிரிப்படைகளின் பெரும் கூட்டத்தைக் கண்டு பெரிதும் அஞ்சினார்கள்: பலர் பாசறையினின்று ஓடிவிட்டனர்: அவர்களுள் எண்ணூறு பேரே எஞ்சியிருந்தனர்.7 தம் படை சிதறியோடியதையும் போர் உடனடியாக நடக்கவிருந்ததையும் யூதா கண்டு, அவர்களை ஒன்றுசேர்ப்பதற்கு நேரம் இல்லாததால் மனமுடைந்துபோனார்.8 அவர் மனம் தளர்ந்திருந்தபோதிலும் தம்முடன் எஞ்சியிருந்தவர்களை நோக்கி, எழுவோம்: நம் பகைவரை எதிர்த்துச் செல்வோம். ஒருவேளை நம்மால் அவர்களை எதிர்த்துப் போரிட முடியும்! என்று முழங்கினார்.9 ஆனால் அவர்கள், நாம் மிகச் சிலராய் இருப்பதால் இப்போது போரிட முடியாது. முதலில் நம் உயிரைக் காப்பாற்றிக்கொள்வோம்: பின்னர் நம் சகோதரர்களுடன் திரும்பி வந்து அவர்களோடு போரிடுவோம் என்று சொல்லி அவரது மனத்தை மாற்ற முயன்றார்கள். 10 அதற்கு யூதா, அவர்களுக்குப் புறமுதுகு காட்டி ஓடுவது என்பது நாம் செய்யக்கூடாத செயல். நமது காலம் வந்திருக்குமானால் நம் உறவின் முறையினருக்காக ஆண்மையுடன் இறப்போம். நமது பெருமைக்கு இழுக்கு ஏற்படாமல் பார்த்துக் கொள்வோம் என்றார்.11 பாக்கீதின் படையினர் பாசறையை விட்டுப் புறப்பட்டுத் தாக்குதலுக்கு ஆயத்தமாக நின்றார்கள்: குதிரை வீரர்கள் இரு பிரிவுகளாகப் பிரிந்தார்கள்: கவணெறிவோரும் வில்லாளரும் படைக்குமுன் சென்றார்கள்: அவ்வாறே முன்னணி வீரர்கள் எல்லாரும் சென்றார்கள். பாக்கீது வலப்படைப் பிரிவில் இருந்தான்.12 குதிரைப்படையின் இரு பிரிவுகளுக்கு நடுவே காலாட்படை முன்னேறிச் செல்ல எக்காளங்கள் முழங்கின. யூதாவின் பக்கம் இருந்தவர்களும் தங்களின் எக்காளங்களை முழங்கினார்கள்.13 படைகளின் இரைச்சலால் நிலம் நடுங்கியது: காலைமுதல் மாலைவரை போர் நடந்தது.14 பாக்கீதும் அவனது வலிமை மிகு படையும் வலப்பக்கத்தில் இருக்க யூதா கண்டார். மனவுறுதி கொண்ட அனைவரும் யூதாவோடு சேர்ந்து கொண்டார்கள்.15 வலப்படைப்பிரிவை முறியடித்து அதை அசோத்து மலைவரை துரத்திச் சென்றார்கள்.16 வலப்படைப் பிரிவு முறியடிக்கப்பட்டதைக் கண்ட இடப்படைப் பிரிவு, திரும்பி யூதாவையும் அவருடன் இருந்தவர்களையும் நெருங்கிப் பின்தொடர்ந்து சென்றது.17 போர் கடுமையாகவே, இரு தரப்பிலும் பலர் காயப்பட்டு மடிந்தனர்.18 யூதாவும் மடிந்தார்: மற்றவர்கள் தப்பி ஓடிவிட்டார்கள்.19 யோனத்தானும் சீமோனும் தங்கள் சகோதரரான யூதாவைத் தூக்கிக் கொண்டுபோய் மோதயின் நகரில் தங்கள் மூதாதையரின் கல்லறையில் அடக்கம் செய்தார்கள்.20 அவருக்காக அழுதார்கள்: இஸ்ரயேல் மக்கள் எல்லாரும் அவருக்காகப் பெரிதும் துயரம் கொண்டாடினார்கள்: பல நாள் அழுது புலம்பினார்கள்:21 இஸ்ரயேலின் மீட்பராகிய மாவீரர் வீழ்ந்தது எவ்வாறு? என்று ஓலமிட்டார்கள்.22 யூதாவின் பிற செயல்கள், போர்கள், தீரச் செயல்கள், பெருமை ஆகியவை மிகப் பல. ஆகவேஅவை எழுதப்படவில்லை.

4. யோனத்தானின் தலைமை
23 யூதாவின் இறப்புக்குப்பின் நெறி கெட்டவர்கள் இஸ்ரயேல் எங்கும் தலைதூக்கினார்கள்: அநீதி செய்பவர்கள் அனைவரும் நடமாடினார்கள்.24 அக்காலத்தில் பெரியதொரு பஞ்சம் ஏற்பட்டதால் நாட்டு மக்கள் அனைவரும் அவர்கள் பக்கம் சேர்ந்து கொண்டார்கள்.25 பாக்கீது இறைப்பற்றில்லாத மனிதர்களைத் தேர்ந்து கொண்டு அவர்களை நாட்டுக்குத் தலைவர்களாக ஏற்படுத்தினான்.26 அவர்கள் யூதாவின் நண்பர்களைத் தேடிக்கண்டுபிடித்துப் பாக்கீதிடம் அவர்களை அழைத்துச்சென்றார்கள். அவன் அவர்களைப் பழிவாங்கி எள்ளி நகையாடினான்.27 எனவே இஸ்ரயேலில் கடுந்துயர் ஏற்பட்டது. இறைவாக்கினர்களின் காலத்துக்குப் பின அதுவரை அவர்களிடையே இவ்வாறு நேர்ந்ததில்லை.28 யூதாவின் நண்பர்கள் அனைவரும் ஒன்றுகூடி யோனத்தானிடம்,29 உம் சகோதரரான யூதா இறந்தது முதல் நம் எதிரிகளையும் பாக்கீதையும் நம் இனத்தாருக்குள்ளேயே நம்மைப் பகைக்கிறவர்களையும் எதிர்த்துப் போராட அவரை ஒத்தவர் ஒருவரும் இல்லை. 30 ஆதலால் நம் போர்களை நடத்திச்செல்ல அவருக்குப் பதிலாக இன்று உம்மையே எங்கள் தலைவராகவும் வழிகாட்டியாகவும் தேர்ந்து கொண்டோம் என்றார்கள்.31 அப்போது யோனத்தான் தம் சகோதரரான யூதாவுக்குப் பதிலாய்த் தலைமை ஏற்றார்.

யோனத்தானின் போர்
32 இதை அறிந்த பாக்கீது அவரைக் கொல்லத் தேடினான்.33 யோனத்தானும் அவருடைய சகோதரரான சீமோனும் அவரோடு இருந்தவர்களும் இதைக் கேள்வியுற்று, தெக்கோவா எனும் பாலைநிலத்திற்கு ஓடிப்போய் ஆஸ்பார் குளத்து அருகே பாசறை அமைத்தார்கள்.34 இதை ஓய்வுநாளில் அறியவந்த பாக்கீது தன் படைகள் அனைத்துடன் யோர்தானைக் கடந்தான்.35 மக்கள் தலைவரெனத் தம் சகோதரரைத் தம் நண்பர்களாகிய நபத்தேயரிடம் யோனத்தான் அனுப்பி, தங்களிடம் இருந்த திரளான பொருள்களை அவர்களுடைய பொருள்களோடு சேர்த்து வைக்கும்படி கேட்கச் செய்தார்.36 அப்போது யாம்பிரியின் மக்கள் மெதாபாவினின்று புறப்பட்டு யோவானையும் அவரிடம் இருந்த அனைத்தையும் கைப்பற்றிச் சென்றார்கள்.37 இந்நிகழ்ச்சிக்குப்பிறகு, யாம்பிரியின் மக்கள் சிறப்பானதொரு மணவிழாவைக் கொண்டாடுகிறார்கள்: கானான் நாட்டு உயர்குடியினர் ஒருவரின் மகளை நாதபாதிலிருந்து பெரும் பாதுகாப்புடன் மணவிழாவுக்கு அழைத்துவருகிறார்கள் என்று யோனத்தானிடமும் சீமோனிடமும் தெரிவிக்கப்பட்டது.38 அவர்கள் தங்கள் சகோதரரான யோவான் குருதி சிந்தி இறந்ததை நினைவுகூர்ந்து, புறப்பட்டுச் சென்று மலையின் ஒரு மறைவான இடத்தில் ஒளிந்து கொண்டார்கள்.39 அவர்கள் தலை நிமிர்ந்து பார்த்தபோது கூச்சலிடும் கூட்டத்தையும் எராளமான மூட்டை முடிச்சுகளையும் கண்டார்கள். மணமகனும் அவனுடைய நண்பர்களும் உறவினர்களும் படைக்கலங்கள் தாங்கியவண்ணம் மேளதாளங்களோடும் பாடகர் குழுவினரோடும் பெண் வீட்டாரை எதிர்கொண்டு சென்றார்கள்.40 யூதர்கள் தாங்கள் பதுங்கியிருந்த இடத்தினின்று அவர்கள்மீது பாய்ந்து அவர்களைக் கொலைசெய்தார்கள். பலர் காயமுற்று மடிந்தார்கள்: மற்றவர்கள் மலைக்கு ஓடிப்போனார்கள். அவர்களின் அனைத்துப் பொருள்களையும் யூதர்கள் எடுத்துக்கொண்டார்கள்.41 இவ்வாறு மணவிழா மகிழ்ச்சி துயரமாய் மாறியது: இன்னிசை ஒப்பாரியாக மாறியது.42 தங்களுடைய சகோதரர் குருதி சிந்தி இறந்ததற்காக முழுதும் பழிதீர்த்துக்கொண்டபின் அவர்கள் யோர்தானையொட்டிய சதுப்பு நிலத்திற்குத் திரும்பினார்கள்.43 இதை அறிந்த பாக்கீதும் பெரும்படையோடு யோர்தான் நதியின் கரைகளை ஓய்வு நாளில் சென்றடைந்தான்.44 யோனத்தான் தம்முடன் இருந்தவர்களை நோக்கி, நாம் இப்போது எழுந்து நம்முடைய உயிருக்காகப் போராடுவோம்: ஏனெனில் முன்னைய நிலைமையைவிட இக்கட்டான நிலைமையில் இப்போது இருக்கிறோம்.45 பாருங்கள்! நமக்கு முன்னும் பின்னும் போர் நடந்து கொண்டிருக்கிறது. யோர்தானின் நீர் இரு பக்கமும் உள்ளது: அதுபோலச் சதுப்பு நிலங்களும் காடுகளும் உள்ளன. நாம் தப்பிக்கவே வழி இல்லை.46 நம்முடைய பகைவர்களிடமிருந்து காப்பாற்றப்பட விண்ணக இறைவனிடம் மன்றாடுங்கள் என்றார்.47 போர் தொடங்கியது. பாக்கீதைத் தாக்க யோனத்தான் கையை ஓங்கினார். ஆனால் அவன் தப்பிப் பின்னடைந்தான்.48 யோனத்தானும் அவரோடு இருந்தவர்களும் யோர்தானில் குதித்து அக்கரைக்கு நீந்திச் சென்றார்கள். ஆனால் பகைவர்கள் யோர்தானைக் கடந்து அவர்களை எதிர்த்து வரவில்லை.49 அன்று பாக்கீதின் படையில் ஆயிரம் பேர் மடிந்தனர்.50 பாக்கீது எருசலேம் திரும்பினான்: யூதேயாவில் அரண்சூழ் நகர்களைக் கட்டினான்: எரிகோ, எம்மாவு, பெத்கோரான், பெத்தேல், தம்னாத்தா, பாரத்தோன், தெபோன் ஆகிய நகரங்களில் கோட்டைகளைக் கட்டியெழுப்பி உயர்ந்த மதில்கள், கதவுகள், தாழ்ப்பாள்கள் கொண்டு அவற்றை வலுப்படுத்தினான்.51 இஸ்ரயேலுக்குத் தொல்லை கொடுக்க அந்த நகரங்களில் காவற்படையை நிறுவினான்:52 பெத்சூர், கசாரா ஆகிய நகரங்களையும் எருசலேம் கோட்டையையும் வலுப்படுத்தி, போர்வீரர்களை அங்கு நிறுத்தி உணவுப்பொருள்களைச் சேமித்துவைத்தான்: 53 நாட்டுத் தலைவர்களின் மைந்தர்களைப் பிணைக்கைதிகளாக்கி அவர்களை எருசலேம் கோட்டையில் காவலில் வைத்தான்.54 நூற்று ஐம்பத்து மூன்றாம் ஆண்டு இரண்டாம் மாதம் ஆல்கிம் திருஉறைவிடத்தின் உள்முற்றத்து மதில்களை இடித்துத் தள்ளக் கட்டளையிட்டான்: இவ்வாறு இறைவாக்கினர்களின் வேலைப்பாடுகளைத் தகர்த்தெறியத் திட்டமிட்டான்: அவ்வாறே தகர்த்தெறியத் தொடங்கினான். கி.மு. 159 55 தொடங்கிய அந்த நேரத்திலேயே ஆல்கிம் நோயால் தாக்கப்பட்டான். அவனுடைய வேலைகள் தடைபட்டன. அவனது வாய் அடைபட்டது: பக்கவாதத்தால் தாக்குண்டான். அவனால் ஒன்றும் பேச முடியவில்லை: தன் குடும்பக் காரியங்களைக்கூடக் கவனிக்க முடியவில்லை.56 இச்சூழலில் ஆல்கிம் மிகுந்த துன்பத்துக்கு உள்ளாகி இறந்தான்.57 பாக்கீது அவன் இறந்ததை அறிந்து தெமேத்திரி மன்னனிடம் திரும்பினான். யூதேயா நாட்டில் இரண்டு ஆண்டு காலம் அமைதி நிலவியது.58 நெறிகெட்டவர்கள் அனைவரும் சூழ்ச்சி செய்து, யோனத்தானும் அவனோடு இருக்கிறவர்களும் அமைதியோடும் பாதுகாப்போடும் வாழ்கிறார்கள். எனவே இப்போது பாக்கீதை அழைத்துவருவோம். அவர் ஒரே இரவில் அவர்கள் எல்லாரையும் சிறைப்பிடிப்பார் என்று சொல்லிக் கொண்டார்கள்.59 உடனே அவர்கள் பாக்கீதிடம் சென்று கலந்து ஆலோசித்தார்கள்.60 அவன் பெரும் படையொடு புறப்பட்டான்: யோனத்தானையும் அவரோடு இருந்தவர்களையும் கைது செய்யும்படி யூதேயாவிலிருந்த தன் கூட்டாளிகள் அனைவருக்கும் இரகசியமாக மடல் அனுப்பினான். ஆனால் அவர்களால் முடியவில்லை: ஏனெனில் அவர்களின் சூழ்ச்சி வெளியாகிவிட்டது.61 இந்தச் சூழ்ச்சிக்குக் காரணமாய் இருந்த நாட்டுத் தலைவர்களுள் ஐம்பது பேரை யோனத்தானின் ஆள்கள் பிடித்துக் கொலை செய்தார்கள்.62 பிறகு யோனத்தானும் சீமோனும் அவர்களுடைய ஆள்களும் பாலை நிலத்தில் இருந்த பெத்பாசிக்குச் சென்று இடிபட்ட அதன் பகுதிகளைக் கட்டி நகரை வலுப்படுத்தினார்கள்.63 பாக்கீது இதை அறிந்ததும் தன் படை முழுவதையும் கூட்டினான்: யூதேயாவில் இருந்தவர்களுக்கு இது பற்றிச் செய்தி அனுப்பினான்.64 பிறகு புறப்பட்டுப் பெத்பாசிக்கு எதிரே பாசறை அமைத்தான்: படைப்பொறிகள் செய்தான்: பல நாள் அதை எதிர்த்துப் போர் புரிந்தான்.65 யோனத்தான் தம் சகோதரரான சீமோனை நகரில் விட்டுவிட்டு நாட்டுக்குள் சிறிய படையோடு சென்றார்:66 ஒதமேராவையும் அவனுடைய உறவினர்களையும் பாசிரோன் மக்களையும் அவர்களுடைய கூடாரங்களில் வெட்டிவீழ்த்தினார்: பிறகு தம் வீரர்களோடு முன்னேறிச் சென்று அவர்களைத் தாக்கத் தொடங்கினார்.67 சீமோனும் அவரோடு இருந்தவர்களும் நகரிலிருந்து வெளியே வந்து படைக்கலங்களுக்குத் தீ வைத்தார்கள்:68 பாக்கீரை எதிர்த்துப் போரிட்டு முறியடித்தார்கள்: அவனை மிகுந்த துன்பத்துக்கு உட்படுத்தினார்கள். இதனால் அவனுடைய சூழ்ச்சியும் படையெடுப்பும் பயனற்றுப்போயின.69 ஆகவே அந்நாட்டுக்கு வரும்படி தனக்கு ஆலோசனை கூறியிருந்த நெறிகெட்டவர்கள்மீது பாக்கீது கடுஞ் சீற்றங் கொண்டு அவாகளுள் பலரைக் கொன்றான்: தானும் தன் நாட்டுக்குத்திரும்பிப்போக முடிவு செய்தான்.70 இதை அறிந்த யோனத்தான், பாக்கீதுடன் சமாதானம் செய்வதற்கும், கைதிகளை அவன் தம்மிடம் ஒப்படைப்பதற்கும் தூதர்களை அனுப்பினார்.71 பாக்கீது அதற்கு இசைந்து அவரது சொற்படியே செய்தான்: தன் வாழ்நாள் முழுவதும் அவருக்குத் தீங்கிழைக்க முயல்வதில்லை என்று ஆணையிட்டான்.72 தான் யூதேயா நாட்டிலிருந்து முன்பு சிறைப்படுத்தியவர்களை அவரிடம் ஒப்படைத்தான்: தன் நாட்டுக்குத் திரும்பி வந்தபின் அவர்களின் எல்லைக்குள் அவன் கால் வைக்கவே இல்லை. 73 இவ்வாறு இஸ்ரயேலில் போரின்றி அமைதி நிலவியது. யோனத்தான் மிக்மாசில் குடியேறி மக்களுக்கு நீதி வழங்கத் தொடங்கினார்: இறைப்பற்றில்லாதவர்களை இஸ்ரயேலிலிருந்து அழித்தொழித்தார்.


திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

Free counters!