எசாயா |
|
அதிகாரம்
28
|
வடநாட்டிற்கு எதிரான எச்சரிக்கை 1 எப்ராயிமின் குடிவெறியரின் மாண்புமிகு மணிமுடிக்கு ஐயோ கேடு! வாடுகின்ற மலராய், அதன் மேன்மை மிகு எழில் குலைகின்றதே! பள்ளத்தாக்கில் அது அமைந்துள்ளதே! நறுமணம் பூசிய தலைவர்கள் மது மயக்கத்தால் வீழ்ந்து கிடக்கின்றனரே! 2 இதோ ஆற்றலும் வலிமையும் மிக்கோன் என் தலைவரிடம் உள்ளான்: அவன் கல்மழையென, அழிக்கும் புயலென, கரை புரண்டோடும் பெருவெள்ளமென வந்து, தன் கைவன்மையால் அதைத் தரையில் வீழ்த்துவான்.3 எப்ராயிம் குடிவெறியரின் மாண்புமிகு மணிமுடி கால்களால் மிதிக்கப்படும்.4 வாடுகின்ற மலராய் அதன் மேன்மை மிகு எழில் குலைகின்றது: நறுமணம் பூசிய தலைவர்கள் வீழ்ந்து கிடக்கின்றனர்: இது கோடைக்காலம் வரும் முன் பழுத்த அத்திப்பழம் போலாகும்: அதைக் காண்பவன் தன் கைக்கு எட்டியதும் அதை விழுங்கி விடுவான். 5 அந்நாளில் படைகளின் ஆண்டவரே, தம் மக்களுள் எஞ்சியோருக்கு எழில்மிகு மணிமுடியாகவும் மாண்புமிகு மகுடமாகவும் இருப்பார்.6 நீதி வழங்க அமர்வோனுக்கு நீதியின் உணர்வாகவும் நகரவாயிலைத் தாக்குவோர் புறமுதுகிடுமாறு போராடுவோர்க்கு ஆற்றலாகவும் அவர் இருப்பார்.
எசாயாவும் யூதாவின் குடிகார இறைவாக்கினரும் 7 குருக்களும் இறைவாக்கினரும் திராட்சை இரசத்தால் தடுமாறுகின்றனர்: மதுவால் தள்ளாடுகின்றனர்: அவர்கள் மதுவால் மதி மயங்குகின்றனர்: திராட்சை மதுவுக்கு அடிமையாகின்றனர்: மதுவால் மயங்குகின்றனர்: காட்சி காணுகையில் மருள்கின்றனர்: நீதி வழங்குகையில் தடுமாறுகின்றனர்!8 மேசைகள் எல்லாம் வாந்தியால் நிறைந்துள்ளன: அழுக்குப் படியாத இடமே இல்லை!9 இவன் யாருக்கு அறிவு புகட்டுவான்? யாருக்குச் செய்தியைப் புரியுமாறு எடுத்துரைப்பான்? பால்குடி மறந்தோர்க்கா? தாய்ப்பாலை விட்டு அகன்றோர்க்கா?10 ஏனெனில் கட்டளை மேல் கட்டளை, கட்டளைமேல் கட்டளை: அளவு நூலுக்குமேல் அளவுநூல், அளவு நூலுக்கு மேல் அளவுநூல்: இங்கே கொஞ்சம், அங்கே கொஞ்சம் என்கின்றனர்.11 ஆனால் குழறிய பேச்சும் புரியாத மொழியும் கொண்டோர் மூலம் ஆண்டவர் இம்மக்களுக்குப் பாடம் கற்பிப்பார்.12 இதோ உள்ளது இளைப்பாற்றி: களைத்தவன் இளைப்பாறட்டும்: இதோ உள்ளது இளைப்பாற்றி என்று அவர்களுக்குச் சொன்னாலும் செவி கொடுக்க மாட்டார்கள்.13 ஆதலால் ஆண்டவரின் வார்த்தை அவர்களுக்குக் கட்டளைமேல் கட்டளையாகவும் அளவுநூல்மேல் அளவு நூலாகவும் இங்கே கொஞ்சம் அங்கே கொஞ்சமாகவும் இருக்கும்: அவர்கள் புறப்பட்டுச்செல்கையில் நிலை தடுமாறி வீழ்வர்: நொறுக்கப்படுவர்: கண்ணியில் சிக்குண்டு பிடிபடுவர்.
சீயோனின் மூலைக்கல் 14 ஆதலால், எருசலேமிலுள்ள இம்மக்களை ஆள்வோரே! இகழ்வோரே! ஆண்டவரின் வார்த்தையைக் கேளுங்கள்.15 நாங்கள் சாவோடு ஓர் உடன்படிக்கை செய்துள்ளோம்: பாதாளத்துடன் ஓர் உடன்பாடு ஏற்படுத்தியுள்ளோம். பகைவன் பெருவெள்ளமெனப் பாய்ந்துவந்தாலும் அவனால் எங்களை அணுக இயலாது. ஏனெனில், பொய்மையை நாங்கள் எங்கள் புகலிடமாய்க் கொண்டுள்ளோம்: வஞ்சகத்தை எங்களுக்கு மறைவிடமாய் ஆக்கியுள்ளோம்16 ஆதலால், ஆண்டவராகிய என் தலைவர் கூறுவது இதுவே: இதோ! சீயோனில் நான் ஓர் அடிக்கல் நாட்டுகின்றேன்: அது பரிசோதிக்கப்பட்ட கல்: விலையுயர்ந்த மூலைக்கல்: உறுதியான அடித்தளமாய் அமையும் கல்: நம்பிக்கை கொண்டோன் பதற்றமடையான்.17 நீதியை அளவு நூலாகவும், நேர்மையைத் தூக்கு நூலாகவும் அமைப்பேன். பொய்மை எனும் புகலிடத்தைக் கல்மழை அழிக்கும்: மறைவிடத்தைப் பெருவெள்ளம் அடித்துச் செல்லும்.18 சாவுடன் நீங்கள் செய்த உடன்படிக்கை முறிந்து போகும்: பாதாளத்துடன் நீங்கள் செய்த உடன்பாடு நிலைத்து நிற்காது: பகைவன் பெருவெள்ளமெனப் பாய்ந்து வரும்போது நீங்கள் அவனால் நசுக்கப்படுவீர்கள்.19 பகை உங்களைக் கடக்கும் பொழுதெல்லாம் உங்களை வாரிக்கொண்டு போகும்: அது காலைதோறும், பகலும் இரவும், பாய்ந்து வரும்: அச்செய்தியை உணர்வதே மிகவும் திகிலூட்டும்.20 கால் நீட்டப் படுக்கையின் நீளம் போதாது: போர்த்திக் கொள்ளப் போர்வையின் அகலம் பற்றாது.21 ஆண்டவர் பெராசிம் மலைமேல் கிளர்ந்தெழுந்ததுபோல் எழுவார்! கிபயோன் பள்ளத்தாக்கில் செய்ததுபோல் செயலாற்றக் கொதித்தெழுவார்! தம் பணியை நிறைவேற்றுவார்! விந்தையானது அவர் தம் செயல்! புதிரானது அவர்தம் பணி!22 உங்கள் தளைகள் கடினமாகாதபடி இகழ்வதை விட்டுவிடுங்கள்: ஏனெனில் நாடு முழுவதையும் அழித்தொழிக்குமாறு படைகளின் ஆண்டவராகிய என் தலைவர் இட்ட ஆணையை நான் கேட்டேன்.23 செவி கொடுங்கள்: நான் கூறுவதைக் கேளுங்கள்: செவிசாய்த்து நான் சொல்வதைக் கவனியுங்கள்:24 விதைப்பதற்கென உழுபவர்கள் நாள்தோறும் உழுது கொண்டிருப்பார்களா? நிலத்தை நாள்தோறும் கிளறிப் பரம்படிப்பார்களா?25 அதன் மேற்பரப்பைச் சமமாக்கியபின் உளுந்தைத் தூவிச் சீரகத்தை விதைப்பார்களன்றோ? வாற்கோதுமையைக் கோதுமைப் பாத்திகளிலும், தானியங்களை ஓரங்களில் உரிய இடத்திலும் விதைப்பார்களன்றோ?26 இந்த நடைமுறையை அவர்கள் கற்றுக் கொள்கின்றார்கள்: அவர்களின் கடவுள் அவர்களுக்குக் கற்றுத் தருகின்றார்:27 உளுந்து இருப்புக் கோலால் அடிக்கப்படுவதில்லை: சீரகத்தின் மேல் வண்டி உருளை உருட்டப்படுவதில்லை: ஆனால் உளுந்து கோலாலும் சீரகம் தடியாலும் தட்டியடிக்கப்படும்.28 உணவுக்கான தானியத்தை யாரும் நொறுக்குவார்களா? இல்லை: அதை அவர்கள் இடைவிடாது போரடிப்பதில்லை. வண்டி உருளையையும் குதிரையையும் அதன்மேல் ஓட்டும்போது, அதை அவர்கள் நொறுக்குவதில்லை.29 படைகளின் ஆண்டவரிடமிருந்து இந்த அறிவு வருகின்றது: அவர் திட்டமிடுவதில் வியப்புக்குரியவர்: செயற்படுத்தும் அறிவில் சிறப்புக்குரியவர். |