திருப்பாடல்கள் (சங்கீதங்கள்) |
|
அதிகாரம்
92
|
புகழ்ச்சிப் பாடல் (ஓய்வு நாளுக்கான புகழ்ப்பாடல்) 1 ஆண்டவருக்கு நன்றியுரைப்பது நன்று; உன்னதரே! உமது பெயரைப் புகழ்ந்து பாடுவது நன்று. 2 காலையில் உமது பேரன்பையும் இரவில் உமது வாக்குப் பிறழாமையையும் 3 பத்துநரம்பு வீணையோடும் தம்புரு, சுரமண்டல இசையோடும் எடுத்துரைப்பது நன்று. 4 ஏனெனில், ஆண்டவரே! உம் வியத்தகு செயல்களால் என்னை மகிழ்வித்தீர்; உம் வலிமைமிகு செயல்களைக் குறித்து நான் மகிழ்ந்து பாடுவேன். 5 ஆண்டவரே! உம் செயல்கள் எத்துணை மேன்மையாவை; உம் எண்ணங்கள் எத்துணை ஆழமானவை. 6 அறிவிலிகள் அறியாததும் மூடர் உணராததும் இதுவே:7 பொல்லார் புல்லைப்போன்று செழித்து வளரலாம்; தீமை செய்வோர் அனைவரும் பூத்துக் குலுங்கலாம்! ஆனால், அவர்கள் என்றும் அழிவுக்கு உரியவரே;8 நீரோ ஆண்டவரே! என்றுமே உயர்ந்தவர். 9 ஏனெனில், ஆண்டவரே! உம் எதிரிகள் - ஆம், உம் எதிரிகள் - அழிவது திண்ணம்; தீமை செய்வோர் அனைவரும் சிதறுண்டுபோவர். 10 காட்டைருமைக்கு நிகரான வலிமையை எனக்கு அளித்தீர்; புது எண்ணெயை என்மேல் பொழிந்தீர். 11 என் எதிரிகளின் வீழ்ச்சியை நான் கண்ணாரக் கண்டேன்; எனக்கு எதிரான பொல்லார்க்கு நேரிட்டதை நான் காதாரக் கேட்டேன். 12 நேர்மையாளர் பேரீச்சை மரமெனச் செழித்தோங்குவர்; லெபனோனின் கேதுரு மரமெனத் தழைத்து வளர்வர். 13 ஆண்டவரின் இல்லத்தில் நடப்பட்டோர் நம் கடவுளின் கோவில் முற்றங்களில் செழித்தோங்குவர். 14 அவர்கள் முதிர் வயதிலும் கனிதருவர்; என்றும் செழுமையும் பசுமையுமாய் இருப்பர்;15 'ஆண்டவர் நேர்மையுள்ளவர்; அவரே என் பாறை; அவரிடம் அநீதி ஏதுமில்லை' என்று அறிவிப்பர். |