கொலோசையருக்கு எழுதிய திருமுகம் |
|
அதிகாரம்
4
|
குடும்ப ஒழுக்கம் ..............தொடர்ச்சி 1 தலைவர்களே, உங்கள் அடிமைகளை உங்களுக்கு இணையாகக் கருதி நேர்மையோடு நடத்துங்கள். உங்களுக்கும் விண்ணகத்தில் ஆண்டவர் ஒருவர் உண்டு என்பதை நினைவிற்கொள்ளுங்கள்.
அறிவுரை 2 தொடர்ந்து இறைவனிடம் வேண்டுங்கள். விழிப்போடும் நன்றி உணர்வோடும் அதில் ஈடுபடுங்கள்.3 நாங்கள் நற்செய்தியை அறிவிப்பதற்கான வாய்ப்பைக் கடவுள் உருவாக்கித் தருமாறு அவரிடம் எங்களுக்காகவும் வேண்டுங்கள். அப்பொழுது கிறிஸ்துவைப் பற்றிய மறைபொருளை நாங்கள் எடுத்துரைக்க முடியும். இம்மறைபொருளின் பொருட்டே நான் சிறைப்பட்டிருக்கிறேன்.4 நான் பேசவேண்டிய முறையில் பேசி இம்மறை பொருளை வெளிப்படுத்தும் ஆற்றலைப் பெற எனக்காக வேண்டுங்கள்.5 திருச்சபையைச் சேராதவர்களிடம் ஞானத்தோடு நடந்துகொள்ளுங்கள். காலத்தை நன்கு பயன்படுத்துங்கள்.6 உங்கள் பேச்சு எப்பொழுதும் இனியதாயும் சுவையுடையதாயும் இருப்பதாக! ஒவ்வொருவருக்கும் தகுந்த மறுமொழி அளிக்க நீங்கள் அறிந்திருக்கவேண்டும்.
5. முடிவுரை தம்மைப் பற்றிய செய்திகள் 7 என்னைப்பற்றிய செய்திகளையெல்லாம் அன்பார்ந்த சகோதரர் திக்கிக்கு உங்களுக்குத் தெரிவிப்பார். அவர் ஆண்டவரது பணியில் என் உடன்பணியாளர், நம்பிக்கைக்குரிய திருத்தொண்டர்.8 எங்களைப்பற்றிய செய்திகளை உங்களுக்குத் தெரிவித்து உங்கள் உள்ளங்களை ஊக்குவிக்கவே அவரை உங்களிடம் அனுப்பி வைக்கிறேன்.9 நம்பிக்கைக்குரிய அன்பார்ந்த சகோதரர் ஒனேசிமுவையும் அவரோடு அனுப்பிவைக்கிறேன். அவர் உங்கள் திருச்சபையைச் சேர்ந்தவர். அவர்கள் இங்கு நடப்பவை அனைத்தையும் உங்களுக்குத் தெரிவிப்பார்கள்.
இறுதி வாழ்த்து 10 என் உடன்கைதியாயிருக்கும் அரிஸ்தர்க்கு உங்களை வாழ்த்துகிறார். பர்னபாவின் ஒன்றுவிட்ட சகோதரர் மாற்கும் உங்களுக்கு வாழ்த்துக் கூறுகிறார். இவருக்கு நீங்கள் செய்ய வேண்டிவைபற்றி ஏற்கெனவே அறிவுறுத்தியுள்ளோம். இவர் உங்களிடம் வந்தால் வரவேற்பு அளியுங்கள்.11 யுஸ்து என்னும் இயேசுவும் உங்களை வாழ்த்துகிறார். விருத்தசேதனம் பெற்றவர்களுள் இவர்கள் மட்டுமே இறையாட்சிக்காக என்னுடன் உழைப்பவர்கள். இவர்கள் எனக்கு ஆறுதலாயிருந்து வருகின்றார்கள்.12 கிறிஸ்து இயேசுவின் பணியாளரும் உங்கள் திருச்சபையைச் சேர்ந்தவருமான எப்பப்பிரா உங்களை வாழ்த்துகிறார். எல்லாச் சூழ்நிலைகளிலும் கடவுளின் திருவுளத்தை முழுமையாக நிறைவேற்றுவதில் நீங்கள் தேர்ச்சிபெற்றவர்களாயும் நிலைத்து நிற்பவர்களாயும் இருக்கவேண்டுமென இவர் எப்போதும் உங்களுக்காக இறைவனிடம் வருந்தி வேண்டி வருகிறார்.13 இவர் உங்களுக்காகவும் லவோதிக்கேயா, எராப்பொலி நகரத்தைச் சேர்ந்தவர்களுக்காகவும் கடுமையாக உழைக்கிறார் என்பதற்கு நான் சாட்சி.14 அன்பார்ந்த மருத்துவர் லூக்காவும், தேமாவும் உங்களை வாழ்த்துகின்றனர்.15 லவோதிக்கேயாவிலுள்ள சகோதரர் சகோதரிகளுக்கும் நிம்பாவுக்கும் அச்சகோதரி வீட்டில் கூடும் திருச்சபைக்கும் வாழ்த்துக் கூறுங்கள்.16 இத்திருமுகத்தை நீங்கள் வாசித்தபின்பு லவோதிக்கேயா திருச்சபையிலும் வாசிக்க ஏற்பாடு செய்யுங்கள். அவ்வாறே லவோதிக்கேயா திருச்சபையிலிருந்து வரும் திருமுகத்தையும் நீங்களும் வாசியுங்கள்.17 ஆண்டவரது பணியில் தாம் பெற்றுள்ள திருத்தொண்டை தாம் பெற்றுள்ள திருத்தொண்டை நிறைவேற்றி முடிக்கக் கவனமாயிருக்குமாறு அர்க்கிப்பிடம் சொல்லுங்கள்.18 பவுலாகிய நான் இவ்வாழ்த்தை என் கைப்பட எழுதுகிறேன். சிறைப்பட்டிருக்கும் என்னை நினைத்துக் கொள்ளுங்கள். இறையருள் உங்களோடிருப்பதாக! |