Chapter: Verses:
Start  End 
 
 
திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

சாலமோனின் ஞானம் (ஞானாகமம்)

அதிகாரம் 5

தீர்ப்புநாளில் நல்லாரும் பொல்லாரும் ..............தொடர்ச்சி
1 அப்பொழுது நீதிமான்கள் தங்களைத் துன்புறுத்தியோர் முன்பும் தங்கள் உழைப்பைப் பொருட்படுத்தாதோர் முன்பும் துணிவோடு நிற்பார்கள்.2 இறைப்பற்றில்லாதவர்கள் அவர்களைக் கண்டு பேரச்சத்தால் நடுங்குவார்கள்: எதிர்பாரா வகையில் அவர்கள் அடைந்த மீட்பைப்பற்றித் திடுக்கிடுவார்கள்.3 அவர்கள் உளம் வருந்தி, ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்வார்கள்: மிகுந்த மனத்துயருடன் பெருமூச்சு விட்டுப் பின்வருமாறு சொல்வார்கள்:4 இவர்களைத்தானே நாம் முன்பு எள்ளி நகையாடினோம்: வசைமொழிக்கு ஆளாக்கினோம். நாம் மூடர்கள், அவர்களது வாழ்க்கை மடமையானது என்று எண்ணினோம்: அவர்களது முடிவு இழிவானது என்று கருதினோம்.5 கடவுளின் மக்களாக அவர்கள் எவ்வாறு எண்ணப்பட்டார்கள்? தூயவர்கள் நடுவில் அவர்களுக்கு எவ்வாறு பங்கு கிடைத்தது?6 எனவே நாமே உண்மையின் வழியிலிருந்து தவறிவிட்டோம். நீதியின் ஒளி நம்மீது படரவில்லை: கதிரவன் நம்மீது எழவில்லை.7 நெறிகேடும் அழிவும் நிறைந்த வழியில் நாம் மனமுவந்து நடந்தோம்: பாதை இல்லாப் பாலைநிலங்களில் பயணம் செய்தோம்: ஆண்டவரின் வழியையோ அறிந்திலோம்!8 இறுமாப்பால் நமக்குக் கிடைத்த பயன் என்ன? செல்வச் செருக்கால் நமக்கு விளைந்த நன்மை என்ன?9 இவை அனைத்தும் நிழல்போலக் கடந்துபோயின: புரளி போல விரைந்து சென்றன.10 அலைமோதும் நீர்ப்பரப்பைக் கிழித்துக்கொண்டு கப்பல் செல்கிறது. அது சென்ற தடத்தை யாரும் காண முடியாது: அதன் அடித்தட்டின் சுவடுகள் அலைகளில் புலப்படுவதில்லை.11 பறவை காற்றில் பறந்து செல்கிறது. அது சென்ற வழியின் அடையாளமே தெரிவதில்லை. அது சிறகடித்துச் செல்லும்போது மென்காற்றின்மீது மோதுகிறது; அது பறந்தோடும் வேகத்தில் காற்றைக் கிழித்துக் கொண்டு செல்கிறது; இறக்கைகளை அசைத்துக் காற்றை ஊடுருவிச் செல்கிறது. பின்னர் அதன் போக்கினது சுவடே தென்படுவதில்லை.12 இலக்கை நோக்கி எய்த அம்பு காற்றைக் கிழித்துக்கொண்டு செல்கிறது. பிளவுண்ட காற்று உடனே கூடிவிடுகிறது. ஆனால் அம்பு சென்ற வழியை ஒருவரும் அறிவதில்லை.13 இவற்றைப் போன்றதே நம் நிலையும்! நாம் பிறந்தோம்: உடனே இறந்துபட்டோம். பிறரிடம் காட்டுவதற்கு நம்மிடம் நற்பண்பின் அடையாளம் எதுவுமில்லை. நம்முடைய தீமையால் நம்மையே அழித்துக்கொண்டோம்.14 இறைப்பற்றில்லாதவர்களின் நம்பிக்கை காற்றில் அடித்துச் செல்லும் பதர்போன்றது: புயலால் சிதறடிக்கப்படும் உறைபனிபோன்றது: காற்றால் அங்கும் இங்கும் கலைக்கப்படும் புகைபோன்றது: ஒரே நாள் தங்கும் விருந்தினர்களின் நினைவுபோல் அது மறக்கப்படும்.15 நீதிமான்களோ என்றென்றும் வாழ்கிறார்கள். அவர்களுக்குரிய கைம்மாறு ஆண்டவரிடம் உள்ளது. அவர்களைப்பற்றிய கவலை உன்னத இறைவனுக்கு உண்டு.16 அவர்கள் மாட்சிமிக்க பொன்முடியைப் பெறுவார்கள்: ஆண்டவருடைய கையிலிருந்து மணிமுடியைப் பெறுவார்கள். அவர் தம் வலக்கையால் அவர்களை அரவணைப்பார்: தம் புயத்தால் அவர்களைப் பாதுகாப்பார்.17 ஆர்வம் என்னும் படைக்கலத்தால் அவர் தம்மை முழுதும் மூடிக்கொள்வார்: தம் எதிரிகளைப் பழிவாங்கப் படைப்பினைப் படைக்கலமாகக் கொள்வார்.18 நீதியை அவர் மார்புக்கவசமாக அணிந்து கொள்வார்: நடுநிலை தவறாத தீர்ப்பைத் தலைக்கவசமாகப் புனைந்து கொள்வார்.19 வெல்ல முடியாத கேடயமாகத் தூய்மையை அவர் கொண்டிருப்பார்.20 அவர் கடுஞ்சினத்தைக் கூரிய வாளாகக் கொள்வார். உலகம் அவரோடு சேர்ந்து அறிவிலிகளை எதிர்த்துப் போராடும்.21 மின்னல் கீற்று இலக்கை நோக்கி நேராகப் பாயும்: நாணேற்றிய வில்லினின்று புறப்படும் அம்புபோல் அது முகில்களிலிருந்து குறியை நோக்கித் தாவும்.22 எறியப்படும் கவண்கல்லைப் போலச் சினம் செறிந்த கல்மழை விழும். கடல் நீர் அவர்கள்மீது சீறிப்பாயும். ஆறுகள் இரக்கமின்றி அவர்களை மூழ்கடிக்கும்.23 புயல் அவர்களை எதிர்த்து வீசும்: அது சூறாவளிபோல் அவர்களைப் புடைத்தெடுக்கும். முறைகேடு மண்ணுலகையே பாழாக்கும். தீவினை வலியோரின் அரியணைகளைக் கவிழ்க்கும்.


திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

Free counters!