Chapter: Verses:
Start  End 
 
 
திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

திருப்பாடல்கள் (சங்கீதங்கள்)

அதிகாரம் 149

மக்களில் மகிழ்ச்சியுறும் மாமன்னர் போற்றி!
1 அல்லேலூயா! ஆண்டவருக்குப் புதியதொரு பாடலைப் பாடுங்கள்; அவருடைய அன்பர் சபையில் அவரது புகழைப் பாடுங்கள். 2 இஸ்ரயேல் தன்னை உண்டாக்கினவரைக் குறித்து மகிழ்ச்சி கொள்வதாக! சீயோனின் மக்கள் தம் அரசரை முன்னிட்டுக் களிகூர்வார்களாக! 3 நடனம் செய்து அவரது பெயரைப் போற்றுவார்களாக; மத்தளம் கொட்டி, யாழிசைத்து அவரைப் புகழ்ந்து பாடுவார்களாக! 4 ஆண்டவர் தம் மக்கள் மீது விருப்பம் கொள்கின்றார்; தாழ்நிலையிலுள்ள அவர்களுக்கு வெற்றியளித்து மேன்மைப் படுத்துவார். 5 அவருடைய அன்பர் மேன்மையடைந்து களிகூர்வராக! மெத்தைகளில் சாய்ந்து மகிழ்ந்து கொண்டாடுவராக! 6 அவர்களின் வாய் இறைவனை ஏத்திப் புகழட்டும்; அவர்களின் கையில் இருபுறமும் கூர்மையான வாள் இருக்கட்டும். 7 அவர்கள் வேற்றினத்தாரிடம் பழிதீர்த்துக் கொள்வார்கள்; மக்களினங்களுக்கு தண்டனைத் தீர்ப்பிடுவார்கள்; 8 வேற்றின மன்னர்களை விலங்கிட்டுச் சிறைசெய்வார்கள்; உயர்குடி மக்களை இரும்பு விலங்குகளால் கட்டுவார்கள். 9 முன்குறித்து வைத்த தீர்ப்பை அவர்களிடம் நிறைவேற்றுவார்கள்; இத்தகைய மேன்மை ஆண்டவர் தம் அன்பர் அனைவருக்கும் உரித்தானது. அல்லேலூயா!


திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

Free counters!