ஆசிரியர் இயேசு கிறிஸ்து நிறுவிய இறையாட்சி பற்றிய நற்செய்தியைத் திருத்தூதர் மத்தேயு முதன்முதலில் எழுதினார் என்றும் அதனை அரமேய மொழியில் எழுதினார் என்றும் திருச்சபை மரபு கருதுகிறது. எனினும் இன்று நம்மிடையே இருக்கும் கிரேக்க மத்தேயு நற்செய்தி நூல் ஒரு மொழிபெயர்ப்பு நூலாகத் தோன்றவில்லை. இயேசுவைப் பின்பற்றிய ஒரு திருததூதர் தாமே நேரில் கண்ட, கேட்ட, நிகழ்ச்சிகளை நூலாக வடித்திருக்கிறார் என்பதை விட, அவரது வழிமரபில் வந்த சீடரோ, குழுவினரோ இதனைத் தொகுத்து எழுதியிருக்கவேண்டும் எனக்கொள்வதே சிறப்பு. சூழல்எருசலேம் கோவிலின் அழிவுக்குப் பின்னர் யூதச்சங்கங்கள் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்திய ஒரு காலக்கட்டத்தில்இந்நூல் எழுதப்படடிருக்க வேண்டும். இயேசுவின் சீடர்கள் யூதத் தொழுகைக் கூடங்களை விட்டுவிட்டுத் திருச்சபையாகக் கூடிவரத் தொடங்கிவிட்ட காலத்தில் இந்நூல் தோன்றியிருக்கிறது. அத்தகைய தொடக்கக் காலத் திருச்சபைக்குள்ளும் அறம் மன்னிப்பு, நல்லுறவு ஆகியவை இன்றியமையாதவை எனக் கற்பிக்க வேண்டிய சூழல் காணப்படுவதையும் இதைப் படிப்பவர் உய்த்துணரலாம். உள்ளடக்கம்கிரேக்க மொழி பேசும் யூதர் நிறைந்த அந்தியோக்கியா போன்ற நகரங்களில் யூதக் கிறிஸ்தவர்களும் பிற இனத்துக்கிறிஸ்தவர்களும் திருச்சபையில் உறுப்பினர்களாக இருந்தனர். இவர்களுக்குள் பல சிக்கல்கள் இருந்தன. இது தவிர யூதக்கிறிஸ்தவர்கள் பலர் மற்ற யூதர்களால் துன்புறுத்தப்பட்ட நிலையில் மனத் தளர்ச்சியடைந்து இருந்தனர். இயேசுதான் உண்மையான மெசியாவா என்ற ஐயப்பாடு அவர்கள் உள்ளத்தில் எழுந்தது. இச்சிக்கல்களுக்குத் தீர்வுகாண இந்நூல் எழுதப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. யூதர்கள் எதிர்பார்த்திருந்த மெசியா இயேசுதாம் என யூதக் கிறிஸ்தவர்களுக்கு அழுத்தமாக இந்நூல் கூறுகிறது. அவர் இறைமகன் என்பது வலியுறுத்தப்படுகிறது. அவருடைய வருகையில் இறையாட்சி இலங்குகிறது எனும் கருத்தும் சுட்டிக்காட்டப்படுகிறது. யூதக் கிறிஸ்தவர்கள் பிற இனத்தாரையும் சீடராக்கும் பணியைச் செய்ய இந்நூல் அறை கூவல் விடுக்கிறது. பிற இனத்தார் திருச்சட்டம் பெறாதவர்கள. இப்போது அவர்கள் கிறிஸ்தவர்களாக மாறிடினும் திருச்சட்டத்தின் உயர்வு பற்றி அவர்களுக்குச் சொல்லப்படுகிறது. கிறிஸ்து திருச்சட்டத்தின் நிறைவு எனவும் வலியுறுத்தப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் மத்தேயு, இறையாட்சியின் நெறிகள் யூதச் சமய நெறிகளைவிட மேலானவை எனக் கூறிக் கிறிஸ்தவ மதிப்பீடுகளைத் தொகுத்துப் புதிய சட்டநூலாகத் திருச்சபைக்கு வழங்குகிறார்; யாவரும் இப்புதிய சட்டத் தொகுப்பைக் கடைப்பிடிக்க அறை கூவல் விடுக்கிறார் (மத் 28:20) இதற்கு இயேசுவின் வாழ்க்கை நிகழ்வுகள், முக்கியமாக அவரின் கலிலேயப் பணிகள் எவ்வாறு அடிப்படையாக அமைகின்றன எனவும் இந்நூல் சுட்டிக்காட்டுகிறது. இந்நூலில் கிறிஸ்தியல், திருச்சபையில், நிறைவுகால இயல் ஆகியவற்றிற்கான அடிப்படைகள் பிணைந்து கிடக்கின்றன. அமைப்புதிருச்சட்ட நூலில் ஐந்து நூல்கள் அமைந்திருப்பதுபோல் இந்நூலிலும் முகவுரை, முடிவுரை நீங்கலாக ஐம்பெரும் பகுதிகள் அமைந்திருக்கக் காணலாம். ஒவ்வொரு பகுதியிலும் ஒரு நிகழ்ச்சிப் பகுதியும் ஓர் அறிவுரைப் பகுதியும் காணப்படுகின்றன. முன்னுரைஇயேசுவின் பிறப்பும் குழந்தைப் பருவமும் 1 - 2 பகுதி; 1. விண்ணரசு பறைசாற்றப்படல் 3 - 7- நிகழ்ச்சி (3,4)
- அறிவுரை (5-7) (மலைப்பொழிவு)
பகுதி; 2. விணணரசுப் பணி 8 - 10- நிகழ்ச்சி (8,9)
- அறிவுரை (10) (திருத்தூதர் பொழிவு)
பகுதி; 3. விண்ணரசின் தன்மை 11:1 - 13:52- நிகழ்ச்சி (11,12)
- அறிவுரை (13:1-52) (உவமைப் பொழிவு)
பகுதி; 4 விண்ணரசின் அமைப்பு 13:53 - 18:35- நிகழ்ச்சி (13:53 -17)
- அறிவுரை (18) (திருச்சபைப் பொழிவு)
பகுதி; 5. விண்ணரசின் வருகை 19 -25- நிகழ்ச்சி (19-23)
- அறிவுரை (24,25) (நிறைவுகாலப் பொழிவு)
முடிவுரைஇயேசு துன்புற்று இறத்தலும் உயிர்தெழுதலும் 26 - 28 |