Chapter: Verses:
Start  End 
 
 
திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

யோசுவா

அதிகாரம் 6

எரிகோவைக் கைப்பற்றல்
1 இஸ்ரயேல் மக்களுக்கு அஞ்சி, எரிகோ இறுக்கமாக அடைக்கப்பட்டது. ஒருவரும் வெளியே வரவுமில்லை; உள்ளே போகவுமில்லை.2 கடவுள் யோசுவாவிடம், "பார்! எரிகோவையும், அதன் மன்னனையும், அதன் வலிமை மிக்க போர்வீரர்களையும் உன் கையில் ஒப்படைத்துவிட்டேன்.3 போர்வீரர்களாகிய நீங்கள் அனைவரும் நகரை வளைத்துக் கொண்டு அதை ஒருமுறை சுற்றி வாருங்கள். இவ்வாறு ஆறு நாள்கள் செய்யுங்கள்.4 ஏழு குருக்கள் கொம்புகளால் ஆகிய எக்காளங்களைப் பேழைக்கு முன் ஏந்திச் செல்லட்டும். ஏழாம் நாளில் நீங்கள் நகரை ஏழுமுறை சுற்றி வாருங்கள். அப்பொழுது குருக்கள் எக்காளங்களை முழங்கட்டும்.5 அவர்களுடைய எக்காளத்தின் நீண்ட முழக்கத்தை நீங்கள் கேட்டவுடன், நீங்கள் அனைவரும் பேரொலி எழுப்புங்கள். அப்பொழுது நகரின் மதில்கள் இடிந்துவிழும். உடனே மக்கள் அவரவர்களுக்கு முன்னே உள்ள பகுதிக்கு ஏறிச்செல்ல வேண்டும்" என்றார்.6 நூனின் மகனாகிய யோசுவா குருக்களை அழைத்து அவர்களிடம், "உடன்படிக்கைப் பேழையைத் தூக்கிக் கொள்ளுங்கள். ஏழு குருக்களும் ஏழு எக்காளங்களை ஆண்டவரது பேழைக்குமுன் ஏந்திக்கொண்டு போகட்டும்" என்று உரைத்துவிட்டு,7 மக்களை நோக்கி, முன்னால் போங்கள்; நகரைச் சுற்றி வாருங்கள். போர்வீரர்கள் ஆண்டவரது பேழைக்குமுன் செல்லட்டும்" என்றார்.8 இவ்வாறு யோசுவா மக்களுக்குக் கூறியவுடன் கொம்புகளால் ஆகிய ஏழு எக்காளங்களை ஏந்திய ஏழு குருக்கள் ஆண்டவரின் முன் எக்காளம் முழங்கிக்கொண்டே நடந்து சென்றனர். உடன்படிக்கைப் பேழை அவர்களுக்குப் பின் சென்றது.9 முன்னணி வீரர் எக்காளங்களை ஊதிய குருக்களுக்குமுன் நடந்து சென்றனர். பின்னணி வீரர் பேழைக்குப்பின் நடந்து சென்றனர். எக்காளங்கள் தொடர்ந்து முழங்கின.10 யோசுவா மக்களை நோக்கி, "நான் சொல்லும் நாள்வரை நீங்கள் ஆரவாரம் செய்யாமலும், யாதோர் ஓசை எழுப்பாமலும் இருங்கள். உங்கள் வாயினின்று ஒரு வார்த்தையும் புறப்படலாகாது. நான் கூறும்பொழுது ஆர்ப்பரியுங்கள்" என்று கட்டளையிட்டார்.11 ஆண்டவரின் பேழை நகரை ஒருமுறை சுற்றி வந்தது. பின்னர் அவர்கள் பாளையத்திற்கு வந்து அங்கே இரவைக் கழித்தார்கள்.12 யோசுவா அதிகாலையில் எழுந்தார். குருக்கள் ஆண்டவரின் பேழையைச் சுமந்து சென்றார்கள்.13 கொம்புகளாலான ஏழு எக்காளங்களை ஏந்திய ஏழு குருக்கள் ஆண்டவரின் பேழைக்குமுன் அவற்றை முழங்கிக்கொண்டே நடந்து சென்றனர். முன்னணி வீரர் அவர்களுக்கு முன் நடந்து சென்றனர். பின்னணி வீரர் ஆண்டவரின் பேழைக்குப்பின் நடந்து சென்றனர். எக்காளங்கள் தொடர்ந்து முழங்கின.14 இரண்டாம் நாளிலும் அவர்கள் நகரை ஒருமுறை சுற்றி வந்தனர். பின்னர் பாளையத்திற்குத் திரும்பினர். இவ்வாறு ஆறுநாள்கள் செய்தனர்.15 ஏழாம் நாள் வைகறையில் அவர்கள் எழுந்து முன்போலவே நகரை ஏழுமுறை சுற்றி வந்தனர். அன்று மட்டும் நகரை ஏழுமுறை சுற்றி வந்தனர்.16 ஏழாவது முறை குருக்கள் எக்காளங்களை முழங்குகையில் யோசுவா மக்களிடம், "இப்பொழுது ஆரவாரம் செய்யுங்கள். ஏனெனில் ஆண்டவர் உங்களிடம் நகரை ஒப்படைத்துவிட்டார்.17 நகரும் அதனுள் இருக்கும் அனைத்தும் ஆண்டவருக்குரியன. ஆகவே அவை அழிவுக்குரியன. விலைமாது இராகாபும் அவருடன் வீட்டில் உள்ள அனைவரும் உயிருடன் இருப்பர். ஏனெனில் நாம் அனுப்பிய போர்வீரர்களை அவர் ஒளித்துவைத்தார்.18 நீங்கள் அழிந்து போகாதபடி கைப்பற்றிய பொருள்களிலிருந்து விலகி நில்லுங்கள். நீங்கள் அழிவுக்குரியவற்றிலிருந்து எதையாவது கவர்ந்தால், இஸ்ரயேலின் பாளையத்தையும் அழிவுக்குரியதாக்கிக் கலங்கச் செய்வீர்கள்.19 எல்லா வெள்ளியும் பொன்னும் வெண்கல இரும்புப் பாத்திரங்களும் ஆண்டவருக்குப் புனிதமானவை. எனவே ஆண்டவரின் கருவூலத்தைச் சேரும்" என்றார்.20 மக்கள் ஆரவாரம் செய்தனர். எக்காளங்கள் முழங்கின. எக்காளத்தின் ஓசையைக் கேட்ட மக்கள் பேரொலி எழுப்பினர். மதில் இடிந்து விழுந்தது. மக்கள் நகரினுள் நுழைந்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் அவரவர்களுக்கு முன்னிருந்த பகுதியைத் தாக்கி நகரைக் கைப்பற்றினர்.21 நகரில் இருந்த அனைத்தையும் அழித்தனர். ஆண் பெண், இளைஞர் முதியோர், ஆடு, மாடு கழுதை அனைத்தையும் வாள் முனையால் அழித்தனர்.22 நாட்டை உளவு பார்த்த இரண்டுபேரிடம் யோசுவா, "விலைமாதின் வீட்டுக்குச் செல்லுங்கள். அவருக்கு வாக்களித்தபடி அங்கிருந்து அப்பெண்ணையும், அவருக்குரிய அனைத்தையும் வெளியே கொண்டுவாருங்கள்" என்றார்.23 உளவு பார்த்த இளைஞர்கள் சென்றனர். இராகாபையும் அவர் தந்தையையும் தாயையும் அவர் சகோதரர்களையும் அவருக்கிருந்த அனைத்தையும் வெளியே கொண்டுவந்தனர். அவருடைய உறவினர்களையும் அழைத்து வந்தனர். அவர்களை இஸ்ரயேலின் பாளையத்திற்கு வெளியே தங்கச் செய்தனர்.24 நகரையும் அதனுள் இருந்த அனைத்தையும் நெருப்பிலிட்டு எரித்தனர். வெள்ளியையும், பொன்னையும், வெண்கல இரும்புப் பாத்திரங்களையும் மட்டுமே ஆண்டவரது வீட்டின் கருவூலத்தின் சேர்த்தனர்.25 விலைமாது இராகாபையும் அவர் தந்தையின் வீட்டாரையும் அவரைச் சார்ந்த அனைவரையும் யோசுவா உயிருடன் காப்பாற்றினார். அவர் இஸ்ரயேல் நடுவில் இன்றுவரை வாழ்கின்றார். ஏனெனில் எரிகோவை உளவு பார்க்க அனுப்பப்பட்ட தூதர்களை அவர் ஒளித்துவைத்தார்.எபி 11:31 26 அச்சமயம் யோசுவா எழுந்து, "எரிகோ என்னும் இந்நகரை மீண்டும் கட்டும் மனிதன் சபிக்கப்பட்டவன். அவன் கடைக்கால் இடுகையில் தன் முதல் மகனையும், அதன் வாயிற்கால்களை இடுகையில் தன் கடைசி மகனையும் இழப்பான்" என்றார்.1 அர 16:34 27 ஆண்டவர் யோசுவாவுடன் இருந்தார். அவரது புகழ் நாடு முழுவதும் பரவிற்று.


திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

Free counters!