|
மக்கபேயர் - முதல் நூல் |
|
அதிகாரம்
6
|
நான்காம் அந்தியோக்கின் முடிவு 1 அந்தியோக்கு மன்னன் மேற்கு
மாநிலங்கள் வழியாகச் சென்றபோது,
பாரசீக நாட்டு எலிமாய் நகர் பொன்,
வெள்ளி ஆகியவற்றுக்குப்
புகழ்பெற்றது என்று
கேள்விப்பட்டான்.2 அதன் கோவிலில் மிகுந்த
செல்வம் இருந்தது என்றும் கிரேக்க
நாட்டை முதன்முதல் ஆண்ட மாசிடோனிய
மன்னரான பிலிப்பின் மகன்
அலெக்சாண்டர் அங்கே விட்டுச்
சென்றிருந்த பொற்கேடயங்களும்
மார்புக்கவசங்களும்
படைக்கலங்களும் அங்கு இருந்தன
என்றும் அறிய வந்தான்.3 எனவே அந்தியோக்கு
புறப்பட்டு நகரைக் கைப்பற்றிக்
கொள்ளையடிக்க முயன்றான்: ஆனால்,
முடியவில்லை: ஏனெனில் அந்த நகர
மக்கள் அவனது திட்டத்தை
அறிந்திருந்தார்கள்.4 அவர்கள் அவனை எதிர்த்துப்
போரிட்டார்கள். ஆகவே அவன் பின்
வாங்கி, பெரும் ஏமாற்றத்துடன்
அங்கிருந்து பாபிலோனுக்குத்
தப்பிச் சென்றான்.5 யூதேயா நாட்டை எதிர்த்துச்
சென்றிருந்த அவனுடைய படைகள்
முறியடிக்கப்பட்ட செய்தியை அவன்
பாரசீகத்தில் இருந்தபோது தூதர்
ஒருவர் அவனுக்கு அறிவித்தார்:6 லீசியா வலிமை வாய்ந்த
படையோடு முதலில் சென்று
யூதர்கள்முன் புறமுதுகு காட்டி
ஓடிவிட்டான்: முறியடிக்கப்பட்ட
படைகளிடமிருந்து யூதர்கள்
கொள்ளையடித்த படைக்கலன்கள்,
மிகுதியான பொருள்கள் ஆகியவற்றால்
அவர்கள் வலிமை மிக்கவர்கள்
ஆனார்கள்:7 எருசலேமில் இருந்த
பலிபீடத்தின்மேல் அந்தியோக்கு
செய்து வைத்திருந்த நடுங்க
வைக்கும் தீட்டை அவர்கள்
தகர்த்தெறிந்தார்கள்:
திருஉறைவிடத்தைச் சுற்றிலும்
முன்புபோல் உயர்ந்த மதில்கள்
எழுப்பியுள்ளார்கள்: அவனுடைய
நகராகிய பெத்சூரைச் சுற்றிலும்
அவ்வாறே செய்திருக்கிறார்கள்
என்றும் எடுத்துரைத்தார்.8 இச்செய்தியைக் கேட்ட
மன்னன் அதிர்ச்சியடைந்து மிகவும்
நடுங்கினான்: தான்
திட்டமிட்டவண்ணம் நடவாததால்
துயரம் தாங்காது நோயுற்றுப்
படுத்த படுக்கையானான்:9 கடுந்துயரம் அவனை
ஆட்கொண்டதால் அங்குப் பல நாள்
கிடந்தான்: தான் விரைவில்
சாகவிருந்ததை உணர்ந்தான்.10 ஆகவே அவன் தன் நண்பர்
எல்லாரையும் அழைத்து, என்
கண்களினின்று தூக்கம்
அகன்றுவிட்டது: கவலையினால் என்
உள்ளம் உடைந்து விட்டது.11 'எவ்வளவு துயரத்திற்கு
ஆனானேன்! நான் ஆட்சியில்
இருந்தபோது அன்பு செலுத்தி, அன்பு
பெற்றேனே' என்று எனக்குள்
சொல்லிக்கொண்டேன்.12 ஆனால் எருசலேமில் நான்
புரிந்த தீமைகளை இப்போது
நினைவுகூர்கிறேன்: அங்கு இருந்த
பொன், வெள்ளிக் கலன்கள்
அனைத்தையும் கவர்ந்து சென்றேன்:
யூதாவில் குடியிருந்தவர்களைக்
காரணமின்றி அழித்தொழிக்கும்படி
கட்டளையிட்டேன். 13 இதனால்தான் இந்தக்கேடுகள்
எனக்கு வந்துற்றன என நான் அறிவேன்.
இப்போது அயல்நாட்டில் துயர
மிகுதியால்
அழிந்துகொண்டிருக்கிறேன் என்று
கூறினான்.14 அவன் தன் நண்பர்களுள்
ஒருவனான பிலிப்பை அழைத்துத் தன்
பேரரசு முழுவதற்கும் அவனைப்
பொறுப்பாளியாக ஏற்படுத்தினான்:15 தன் மகன் அந்தியோக்கை
வளர்த்து ஆளாக்கி அரசனாக்கும்படி
தன் அரச முடியையும் ஆடையையும்
கணையாழியையும் அவனுக்கு
அளித்தான்.16 நூற்று நாற்பத்தொன்பதாம்
ஆண்டு பாரசீகத்திலேயே
அந்தியோக்கு மன்னன் இறந்தான். கி.மு. 163
ஐந்தாம் அந்தியோக்கும் லீசியாவும் புரிந்த போர்கள் 17 மன்னன் இறந்துவிட்டான்
என்று லீசியா அறிந்ததும், அவனுடைய
மகன் அந்தியோக்கை அவனுடைய
தந்தைக்க பதிலாக மன்னனாக
ஏற்படுத்தினான்: யூப்பாத்தோர்
என்று அவனுக்குப் பெயரிட்டான்.
இந்த லீசியாதான் அவனை
இளவயதிலிருந்து
வளர்த்துவந்திருந்தான்.18 இதற்கிடையில் எருசலேம்
கோட்டையில் இருந்த பகைவர்கள்
திருஉறைவிடத்தைச் சுற்றி இருந்த
இஸ்ரயேலரை வளைத்துக்கொண்டார்கள்:
அவர்களுக்குத் தொடர்ந்து கேடு
விளைவித்துப் பிற இனத்தாரை
வலுப்படுத்த முயன்றுவந்தார்கள்.19 எனவே யூதா பகைவர்களை
அழித்தொழிக்க முடிவுசெய்து
அவர்களை முற்றுகையிட மக்கள்
அனைவரையும் கூட்டுவித்தார்.20 நூற்று ஐம்பதாம் ஆண்டு
அவர்கள் எல்லாரும் ஒன்று கூடிக்
கோட்டையை முற்றுகையிட்டார்கள்:
முற்றுகை மேடுகளும்
படைப்பொறிகளும் அமைத்தார்கள். கி.மு. 162 21 முற்றுகைக்கு
உள்ளானவர்களுள் சிலர் வெளியே
தப்பிவந்தனர். இஸ்ரயேலில்
இறைப்பற்றில்லாத சிலர்
அவர்களுடன் சேர்ந்துகொண்டனர்.22 இவர்கள் எல்லாரும்
மன்னனிடம் சென்று
முறையிட்டார்கள்: எவ்வளவு காலம்
எங்களுக்கு நீதி வழங்காமலும்
எங்கள் உறவின் முறையினரை
பழிவாங்காமலும் இருப்பீர்?23 நாங்கள் உம்முடைய
தந்தைக்குப் பணிபுரியவும், அவரது
சொற்படி நடக்கவும் அவருடைய
கட்டளைகளுக்குக் கீழ்ப்படியவும்
விருப்பம் கொண்டிருந்தோம்.24 இதனால் எங்களுடைய மக்களின்
மைந்தர்கள் கோட்டையை
முற்றுகையிட்டார்கள்:
எங்களுக்குப் பகைவர்கள் ஆனார்கள்:
கண்ணில்பட்ட எம்மவர் எல்லாரையும்
கொலை செய்தார்கள்: எங்கள் உரிமைச்
சொத்துக்களைப்
பறித்துக்கொண்டார்கள்:25 எங்களை மட்டுமல்ல,
அவர்களின் எல்லையைச் சுற்றிலும்
உள்ள எல்லா நாடுகளையுமே
தாக்கினார்கள்.26 எருசலேம் கோட்டையைக்
கைப்பற்ற இன்று அதை
முற்றுகையிட்டிருக்கிறார்கள்:
திருஉறைவிடத்தையும்
பெத்சூரையும்
வலுப்படுத்தியுள்ளார்கள்.27 நீர் விரைந்து அவர்களைத்
தடுக்காவிடில் இவற்றைவிடக்
கொடியவற்றையும் செய்வார்கள்.
அவர்களை அடக்குவது உமக்கு
முடியாமற்போகும் என்று
கூறினார்கள்.28 இதைக் கேட்ட மன்னன் சினங்
கொண்டான்: தன் நண்பர்கள், படைத்
தலைவர்கள், குதிரைப்படைத்
தலைவர்கள் அனைவரையும்
ஒன்றுகூட்டினான்.29 அயல்நாடுகளிலிருந்தும்
தீவுகளிலிருந்தும் கூலிப்படைகள்
அவனிடம் வந்து சேர்ந்துகொண்டன.30 அவனுடைய படை ஓர் இலட்சம்
காலாள்களையும் இருபதாயிரம்
குதிரை வீரர்களையும் போருக்குப்
பயிற்சி பெற்றிருந்த
முப்பத்திரண்டு யானைகளையும்
கொண்டிருந்தது.31 அவர்கள் இதுமேயா வழியாகச்
சென்று பெத்சூருக்கு எதிரே பாசறை
அமைத்துப் பல நாள்
போர்புரிந்தார்கள்: படைப்
பொறிகளும் செய்துகொண்டார்கள்.
ஆனால், முற்றுகையிடப்பட்ட
யூதர்கள் வெளியேறி
படைப்பொறிகளைத் தீக்கரையாக்கி
வீரத்தோடு போர்செய்தார்கள்.32 கோட்டையிலிருந்து யூதா
புறப்பட்டு மன்னனுடைய பாசறைக்கு
எதிராய்ப் பெத்செக்கரியாவில்
பாசறை அமைத்தார். 33 விடியற்காலையில் மன்னன்
எழுந்து பெத்செக்கரியாவுக்குப்
போகும் வழியில் தன் படையை வேகமாய்
நடத்திச் சென்றான். படை வீரர்கள்
போருக்கு ஆயத்தமாகி எக்காளங்களை
முழங்கினார்கள்.34 யானைகளைப் போருக்குத்
தூண்டியெழுப்ப அவர்கள்
அவற்றுக்குத் திராட்சை மதுவையும்
முசுக்கட்டைப் பழச்சாற்றையும்
கொடுத்தார்கள்.35 யானைகளைக்
காலாட்படையினரிடையே பிரித்துக்
கொடுத்தார்கள். ஒவ்வொரு
யானையோடும் இரும்பு கவசங்களையும்
வெண்கலத் தலைச்சீராக்களையும்
அணிந்த ஆயிரம் வீரர்களையும்
ஐந்நூறு தேர்ந்தெடுத்த
குதிரைவீரர்களையும்
ஒதுக்கிவைத்தார்கள்.36 இவர்கள் குறிப்பிட்ட
நேரத்திற்கு முன்னதாகவே யானைகள்
இருந்த இடங்களில் ஆயத்தமாய்
இருந்தார்கள்: எங்கெல்லாம் அவை
சென்றனவோ அங்கெல்லாம் இவர்களும்
சென்றார்கள்: அவற்றைவிட்டுப்
பிரியவேயில்லை.37 ஒவ்வொரு யானைமீதும்
மரத்தினால் செய்யப்பட்ட வலிமை
பொருந்திய அம்பாரி ஒன்று
வைக்கப்பட்டு மூடப்பட்டிருந்தது:
அது யானையோடு வலுவான கயிற்றினால்
பிணைக்கப்பட்டிருந்தது. ஒவ்வோர்
அம்பாரியிலும் நான்கு வீரர்கள்
இருந்து கொண்டு போர் செய்தார்கள்.
யானைப் பாகனும் யானைமீது
அமர்ந்திருந்தான். யானைப் பாகனைக் குறிக்க, மூலபாடம் 'இந்தியன்' என்னும் சொல்லை ஆள்கிறது. 38 எஞ்சிய குதிரை வீரர்கள்
படையின் இரு பக்கமும்
நிறுத்தப்பட்டார்கள்: இவர்கள்
ஆங்காங்கே தாக்கி,
காலாட்படைக்குப் பாதுகாப்புக்
கொடுத்தார்கள்.39 பொன், வெண்கலக்
கேடயங்களின்மேல் கதிரவனின் ஒளி
பட்டபோது மலைகள் அவற்றால்
ஒளிர்ந்து எரியும் தீப்பந்தம்போல
மிளிர்ந்தன.40 மன்னனுடைய படையின் ஒரு
பகுதி உயர்ந்த மலைகள்மீது
பரவியிருந்தது: மற்றொரு பகுதி
சமவெளியில் இருந்தது. படைவீரர்கள்
உறுதியாகவும் ஒழுங்காகவும்
முன்னேறிச் சென்றார்கள்.41 படைத்திரளின்
பேரொலியையும் அதன் அணி வகுப்பால்
ஏற்பட்ட பேரிரைச்சலையும்
படைக்கலங்களால் உண்டான சல
சலப்பையும் கேட்டவர்கள் அனைவரும்
நடுங்கினர்: ஏனென்றால் படை மிகப்
பெரியதும் வலிமைமிக்கதுமாய்
இருந்தது.42 யூதாவும் அவருடைய படையும்
போர் புரிய முன்னேறிச் செல்லவே
மன்னனுடைய படையில் அறுநூறு பேர்
மாண்டனர்.43 மன்னனுக்குரிய
படைக்கலங்களைத் தாங்கிய ஒரு
யானையை அவரான் என்னும் எலயாசர்
கண்டார். அது மற்றெல்லா
யானைகளையும்விடப் பெரியதாய்
இருந்தது. எனவே அதன்மேல் இருந்தது
மன்னன்தான் என்று எலயாசர்
எண்ணினார்.44 அவர் தம் மக்களைக்
காப்பதற்கும் நிலையான புகழைத்
தமக்கென்று தேடிக்கொள்வதற்கும்
தம் உயிரைத் தியாகம் செய்தார்.45 காலாட்படையின் நடுவே
வலப்புறத்திலும்
இடப்புறத்திலும் இருந்தவர்களைக்
கொன்றவண்ணம் துணிவோடு அந்த யானையை
நோக்கி ஓடினார். அவர்கள் இரு
பக்கமும் சிதறி ஓடினார்கள்.46 அவர் அந்த யானைக்கு
அடியில் புகுந்து, கீழிருந்து
அதைக் குத்திக் கொன்றார். அது
நிலத்தில் அவர்மேல் விழ அவர்
அங்கேயே இறந்தார்.47 மன்னனுடைய வலிமையையும்
அவனுடைய படைவீரர்களின் கடும்
தாக்குதலையும் கண்டு யூத மக்கள்
அவர்களிடமிருந்து
தப்பியோடினார்கள்.48 மன்னனுடைய படைவீரர்கள்
அவர்களைத் துரத்திக்கொண்டு
எருசலேம்வரை சென்றார்கள்.
யூதேயாவுக்கும் சீயோன் மலைக்கும்
எதிரே மன்னன் பாசறை அமைத்தான்.49 அவன் பெத்சூரில்
இருந்தவர்களோடு சாமாதானம்
செய்துகொண்டான். அவர்கள்
நகரைவிட்டு வெளியேறினார்கள்:
ஏனெனில் முற்றுகையை எதிர்த்து
நிற்க அவர்களுக்கு உணவுப்
பொருள்கள் அங்குக் கிடைக்கவில்லை.
அதற்குக் காரணம் நிலத்துக்கு அது
ஓய்வு ஆண்டு.50 மன்னன் பெத்சூரைக்
கைப்பற்றி அதைக் காப்பதற்குக்
காவற்படை ஒன்றை நிறுவினான்.51 பிறகு திருஉறைவிடத்தை
எதிர்த்துப் பல நாள்
முற்றுகையிட்டான்: முற்றகை
மேடுகளையும் படைப்பொறிகளையும்
நிறுவினான்: நெருப்பையும்
கற்களையும் எறியவல்ல
கருவிகளையும் அம்பு எய்யும்
வில்களையும் கவண்களையும்
செய்தான்.52 அவற்றுக்கு ஈடு கொடுக்கும்
முறையில் யூதர்களும்
படைப்பொறிகளை நிறுவிப் பல நாள்
அவர்களை எதிர்த்துப்
போராடினார்கள்.53 அது ஏழாவது ஆண்டாக
இருந்ததால் உணவுக்கிடங்கில்
உணவுப் பொருள்கள் ஒன்றும் இல்லை.
பிற இனத்தாரிடமிருந்து
பாதுகாப்புத் தேடி யூதேயா
வந்திருந்தவர்கள்
உணவுக்கிடங்கில் எஞ்சியிருந்ததை
உண்டு தீர்த்து விட்டார்கள்.54 திருஉறைவிடத்தில் சில
வீரர்களே இருந்தார்கள்: பஞ்சம்
கடுமையாகத் தாக்கியதால்
மற்றவர்கள் அவரவர் தம்
வீடுகளுக்குச் சிதறிபோய்
விட்டார்கள்.55 அந்தியோக்கு மன்னன்
உயிருடன் இருந்தபோது, தன் மகன்
அந்தியோக்கை ஆளாக்கி
அரசனாக்கும்படி நியமித்திருந்த
பிலிப்பு,56 மன்னனோடு சென்றிருந்த
படைகளுடன் பாரசீகம், மேதியா ஆகிய
நாடுகளிலிருந்து
திரும்பிவந்துள்ளான் என்றும்,
ஆட்சியைக் கைப்பற்ற முயன்று
வருகிறான் என்றும் லீசியா
கேள்விப்பட்டான்.57 எனவே, அவன் உடனே
பின்வாங்குவதற்குக் கட்டளை
பிறப்பித்து, மன்னனிடமும்
படைத்தலைவர்களிடமும்
வீரர்களிடமும், நாளுக்கு நாள்
நாம் வலிமைகுன்றி வருகிறோம்.
உணவுப்பொருள்களும் மிகக்
குறைவாகவே உள்ளன. நாம் எந்த இடத்தை
எதிர்த்து
முற்றுகையிட்டியிருக்கிறோமோ
அந்த இடம் வலிமை வாய்ந்தது. நமது ஆட்சியின் நடவடிக்கைகளையும் நாம் கவனிக்க வேண்டிய உடனடித் தேவை ஏற்பட்டுள்ளது.58 ஆதலால் இப்போது இந்த
மனிதர்களோடு நல்லறவு
பாராட்டுவோம்: அவர்களோடும்
அவர்களுடைய இனத்தார் அனைவரோடும்
சமாதானம் செய்துகொள்வோம்.59 அவர்கள் முன்புபோலத்
தங்கள் சட்டங்களின்படி நடக்க
விட்டுவிடுவோம். அவர்களுடைய
சட்டங்களை நாம் அழித்ததானால்தான்
அவர்கள் சினங்கொண்டு
இவற்றையெல்லாம் செய்தார்கள்
என்று உரைத்தான்.60 அவனது கூற்று
மன்னனுக்கும்
படைத்தலைவர்களுக்கும்
ஏற்புடையதாய் இருந்தது. லீசியா
யூதர்களோடு சமாதானம் செய்துகொள்ள
முன்வர, அவர்களும் அதற்கு
இசைந்தார்கள்.61 மேலும் மன்னனும்
படைத்தலைவர்களும் ஆணையிட்டு
ஒப்பந்தத்தை
உறுதிப்படுத்தினார்கள். அதன்
விளைவாக யூதர்கள் கோட்டையை விட்டு
வெளியேறினார்கள்.62 ஆனால் மன்னன் சீயோன்
மலைக்குச் சென்று அது எத்துணை
வலிமை வாய்ந்த கோட்டை என்று
கண்டபோது, தான் கொடுத்திருந்த
ஆணையை மீறினான்: அதைச் சுற்றிலும்
இருந்த மதில்களை அழிக்கும்படி
கட்டளையிட்டான்:63 பின்னர், அவன் அங்கிருந்து
விரைந்து அந்தியோக்கி நகருக்குத்
திரும்பினான்: அந்நகர் பிலிப்பின்
கட்டுப்பாட்டில் இருக்கக் கண்டு,
அவனோடு போரிட்டு நகரை வன்முறையில்
காப்பாற்றினான். |