Chapter: Verses:
Start  End 
 
 
திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

நீதிமொழிகள் (பழமொழி ஆகமம்)

அதிகாரம் 23

முப்பது முதுமொழிகள் - 6
1 ஆளுநர் வீட்டில் நீ உணவு கொள்ள உட்காரும்போது, உனக்குமுன் இருப்பதை நன்றாய்க் கவனித்துப் பார்.2 உனக்கு அப்போது அடங்காப் பசி இருந்தாலும், உன் தொண்டையில் கத்தி இருப்பதாக நினைத்துக்கொள்.3 அவர் தரும் சுவையான உண்டியை உண்ண ஆவல் கொள்ளாதே: அது உன்னை வஞ்சிக்க விழையும் உணவாயிருக்கலாம்.

முப்பது முதுமொழிகள் - 7
4 செல்வராக வேண்டுமென்று பாடுபட்டு உருக்குலைந்து போகாதே: அதனால் உனது அறிவை இழந்து விடாதே.5 இல்லாமற்போகும் பொருள் மேல் நீ கண்ணும் கருத்துமாய் இருப்பானேன்? கழுகுபோல அது தனக்குச் சிறகுகளை வளர்த்துக்கொண்டு வானத்தில் பறந்து போகுமன்றோ?

முப்பது முதுமொழிகள் - 8
6 கஞ்சர் தரும் உணவை உண்ணாதே: அவரது அறுசுவை உண்டியை உண்ண ஆவல் கொள்ளாதே.7 அவர் தமக்குள் கணக்குப் பார்த்துக் கொண்டிருப்பார்: உண்டு பருகு என்று அவர் சொன்னாலும், அவருக்கு உன்மீது அக்கறை இல்லாதிருக்கலாம்.8 நீ உண்ட உணவை வாந்தியெடுக்க நேரிடும்: நீ உரைத்த புகழுரை பயனற்றதாகும்.

முப்பது முதுமொழிகள் - 9
9 மதிகேடர் காதில் விழும்படி எதையும் பேசாதே: உன் அறிவுரைகளை அவர் மதிக்கமாட்டார்.

முப்பது முதுமொழிகள் - 10
10 வழிவழிச் சொத்தின் எல்லையை மாற்றி அமைக்காதே: உன் நிலத்தின் எல்லையைத் தள்ளித் தள்ளி, திக்கற்றவர்களின் நிலத்தை எடுத்துக்கொள்ள முயலாதே.11 ஏனெனில் அவர்களின் மீட்பர் வல்லவர். அவர் அவர்கள் சார்பில் உனக்கு எதிராக வழக்காடுவார்.

முப்பது முதுமொழிகள் - 11
12 நல்லுரை கேட்பதில் சிந்தனையைச் செலுத்து: அறிவூட்டும் மொழிகளுக்குச் செவிகொடு.

முப்பது முதுமொழிகள் - 12
13 பிள்ளைகளைத் தண்டித்துத் திருத்தத் தயங்காதே: பிரம்பினால் அடித்தால் சாகமாட்டார்கள். 14 நீ பிரம்பினால் அவர்களை அடித்தால், அவர்களைப் பாதாளத்துக்குத் தப்புவிக்கிறவனாவாய்.

முப்பது முதுமொழிகள் - 13
15 பிள்ளாய், நீ ஞானமுள்ளவனாயிருந்தால், நான் மனமகிழ்ச்சி அடைவேன். 16 உன் நாவு நேர்மையானவற்றைப் பேசினால், என் உள்ளம் களிகூரும்.

முப்பது முதுமொழிகள் - 14
17 வளமுடன் இருக்கும் பாவிகளைப்போல நீயும் இருக்கவேண்டுமென்று ஏங்காதே: ஆண்டவரிடம் எப்போதும் அச்சம் உள்ளவனாயிரு. 18 அப்பொழுது உன் வருங்காலம் வளமானதாயிருக்கும்: உன் நம்பிக்கையும் வீண்போகாது.

முப்பது முதுமொழிகள் - 15
19 பிள்ளாய், இதைக் கவனி: ஞானமுள்ளவனாயிரு: உன் மனத்தை நன்னெறியில் செலுத்து. 20 குடிகாரரோடு சேராதே: பெருந்தீனியரோடு சேர்ந்து கொண்டு அவர்களைப் போலப் புலால் உண்ணாதே. 21 குடிகாரரும் பெருந்தீனியரும் முடிவில் ஏழைகளாவர்: உண்டு குடித்த மயக்கம் கந்தையை உடுத்தும்.

முப்பது முதுமொழிகள் - 16
22 பெற்ற தந்தைக்குச் செவிகொடு: உன் தாய் முதுமை அடையும்போது அவளை இழிவாக எண்ணாதே. 23 மெய்ம்மையை விலைகொடுத்தாயினும் வாங்கு: ஆனால் அதை விற்பனை செய்யாதே: அவ்வாறே ஞானத்தையும் நல்லுரையையும் உணர்வையும் விலை கொடுத்துப்பெறு. 24 நேர்மையான பிள்ளையின் தந்தை மிகவும் களிகூர்வார்: ஞானமுள்ள பிள்ளையைப் பெற்ற தகப்பன் அவர் பொருட்டு மகிழ்ச்சி அடைவார். 25 நீ உன் தந்தையையும் உன் தாயையும் மகிழ்விப்பாயாக: உன்னைப் பெற்றவளைக் களிகூரச் செய்வாயாக.

முப்பது முதுமொழிகள் - 17
26 மகனே, நான் சொல்வதைக் கவனி: என் வழிகளில் உன் கவனத்தைச் செலுத்து. 27 விலைமகள் ஒரு படுகுழி: பரத்தை ஓர் ஆழ்கிணறு. 28 அவள் கள்வனைப்போலப் பதுங்கி இருப்பாள்: அவள் ஏராளமான பேரை வஞ்சிப்பவள்.

முப்பது முதுமொழிகள் - 18
29 துன்பக் கதறல், துயரக் கண்ணீர், ஓயாத சண்டை, ஒழியாத புலம்பல், காரணம் தெரியாமல் கிடைத்த புண்கள், கலங்கிச் சிவந்திருக்கும் கண்கள்-இவை அனைத்தையும் அனுபவிப்பவர் யார்?30 திராட்சை இரச மதுவில் நீந்திக் கொண்டிருப்பவர்களே, புதுப்புது மதுக் கலவையைச் சுவைத்துக் களிப்பவர்களே,31 மதுவைப் பார்த்து, இந்த இரசத்தின் சிவப்பென்ன! பாத்திரத்தில் அதன் பளபளப்பென்ன! எனச் சொல்லி மகிழாதீர். அது தொண்டைக்குள் செல்லும்போது இனிமையாயிருக்கும்:32 பிறகோ அது பாம்புபோலக் கடிக்கும்: விரியனைப் போலத் தீண்டும்.33 உன் கண் என்னென்னவோ வகையான காட்சிகளைக் காணும்: உன் உள்ளத்திலிருந்து ஏறுமாறான சொற்கள் வெளிப்படும்.34 கடல் அலைமீது மிதந்து செல்வது போலவும், பாய்மர நுனியில் படுத்துறங்குவது போலவும் உனக்குத் தோன்றும்.35 என்னை அடித்தார்கள், எனக்கு நோகவில்லை: என்னை அறைந்தார்கள், நான் அதை உணரவில்லை: நான் எப்போது விழித்தெழுவேன்? அதை இன்னும் கொடுக்கும்படி கேட்பேன் என்று நீ சொல்வாய்.


திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

Free counters!