திருப்பாடல்கள் (சங்கீதங்கள்) |
|
அதிகாரம்
38
|
துன்புற்றவரின் மன்றாட்டு (தாவீதின் புகழ்ப்பா; நினைவு கூர்தலுக்காகப் பாடியது) 1 ஆண்டவரே, என்மீது சினங்கொண்டு என்னைக் கண்டியாதேயும்; என் மீது சீற்றம்கொண்டு என்னைத் தண்டியாதேயும்;2 ஏனெனில், உம் அம்புகள் என்னுள் பாய்ந்திருக்கின்றன; உமது கை என்னை அழுத்திக் கொண்டிருக்கின்றது.3 நீர் கடுஞ்சினங்கொண்டதால் என் உடலில் நலமே இல்லை; என் பாவத்தால் என் எலும்புகளில் வலுவே இல்லை.4 என் குற்றங்கள் தலைக்குமேல் போய்விட்டன; தாங்கவொண்ணாச் சுமைபோல அவை என்னை வெகுவாய் அழுத்துகின்றன.5 என் புண்கள் அழுகி நாற்றமெடுக்கின்றன; என் மதிகேடுதான் இதற்கெல்லாம் காரணம்.6 நான் மிகவும் ஒடுங்கிப்போனேன்; நாளெல்லாம் துயருற்றுத் திரிகின்றேன்.7 என் குடல் முற்றிலும் வெந்து போயிற்று; என் உடலில் சற்றேனும் நலம் இல்லை.8 நான் வலுவற்றுப் போனேன்; முற்றிலும் நொறுங்கிப்போனேன்; என் உள்ளக் கொதிப்பினால் கதறுகின்றேன்.9 என் தலைவரே, என் பெருமூச்செல்லாம் உமக்குத் தெரியும்; என் வேதனைக் குரல் உமக்கு மறைவாயில்லை. 10 என் உள்ளம் வேதனையால் துடிக்கின்றது; என் வலிமை என்னைவிட்டு அகன்றது; என் கண்களும்கூட ஒளி இழந்தன. 11 என் நண்பர்களும் தோழர்களும் நான் படும் வாதை கண்டு விலகி நிற்கின்றனர்; என் உறவினரும் என்னைவிட்டு ஒதுங்கி நிற்கின்றனர்.12 என் உயிரைப் பறிக்கத்தேடுவோர் எனக்குக் கண்ணி வைக்கின்றனர்; எனக்குத் தீங்கிழைக்கத் துணிந்தோர் என் அழிவைப் பற்றிப் பேசுகின்றனர்; எப்போதும் எனக்கெதிராய்ச் சூழ்ச்சி செய்கின்றனர்.13 நானோ செவிடர்போல் காது கேளாமலும் ஊமைபோல் வாய் திறவாமலும் இருக்கின்றேன்.14 உண்மையாகவே, நான் செவிப்புலனற்ற மனிதர்போலும் மறுப்புரை கூறாத நாவினர் போலும் ஆனேன்;15 ஏனெனில் ஆண்டவரே, நான் உம்மையே நம்பியிருக்கின்றேன்; என் தலைவராகிய கடவுளே, செவிசாய்த்தருளும்.16 'அவர்கள் என்னைப் பார்த்துக் களிக்க விடாதேயும்; என் கால் தடுமாறினால் அவர்கள் பெருமை கொள்வர்' என்று சொன்னேன்.17 நான் தடுமாறி விழும் நிலையில் இருக்கின்றேன்; நான் எப்போதும் வேதனையில் உள்ளேன்.18 என் குற்றத்தை நான் அறிக்கையிடுகின்றேன்; என் பாவத்தின் பொருட்டு நான் அஞ்சுகின்றேன்.19 காரணமின்றி என்னைப் பகைப்போர் வலுவாய் உள்ளனர்; வீணாக என்னை வெறுப்போர் பலராய் உள்ளனர்;20 நன்மைக்குப் பதிலாக அவர்கள் எனக்குத் தீமை செய்கின்றனர்; நன்மையே நாடும் என்னைப் பகைக்கின்றனர்;21 ஆண்டவரே! என்னைக் கைவிடாதேயும்; என் கடவுளே! என்னைவிட்டு அகன்றுவிடாதேயும்.22 என் தலைவரே! மீட்பரே! எனக்குத் துணைசெய்ய விரைந்து வாரும். |