எசாயா |
|
அதிகாரம்
42
|
ஆண்டவரின் ஊழியர் 1 இதோ! என் ஊழியர்! அவருக்கு நான் ஆதரவு அளிக்கிறேன்: நான் தேர்ந்துகொண்டவர் அவர்: அவரால் என் நெஞ்சம் பூரிப்படைகின்றது: அவருள் என் ஆவி தங்கும்படி செய்தேன்: அவர் மக்களினங்களுக்கு நீதி வழங்குவார்.2 அவர் கூக்குரலிடமாட்டார்: தம்குரலை உயர்த்தமாட்டார்: தம் குரலொலியைத் தெருவில் எழுப்பவுமாட்டார்.3 நெரிந்த நாணலை முறியார்: மங்கி எரியும் திரியை அணையார்: உண்மையாகவே நீதியை நிலை நாட்டுவார்.4 உலகில் நீதியை நிலைநாட்டும்வரை அவர் சோர்வடையார்: மனம் தளரமாட்டார்: அவரது நீதிநெறிக்காகத் தீவு நாட்டினர் காத்திருப்பர்.5 விண்ணுலகைப் படைத்து விரித்து, மண்ணுலகைப் பரப்பி உயிரினங்களைத் தோன்றச் செய்து, அதன் மக்களுக்கு உயிர்மூச்சுத் தந்து, அதில் நடமாடுவோர்க்கு ஆவியை அளித்தவருமான இறைவனாகிய ஆண்டவர் கூறுவது இதுவே:6 ஆண்டவராகிய நான் நீதியை நிலைநாட்டுமாறு உம்மை அழைத்தேன்: உம் கையைப் பற்றிப்பிடித்து, உம்மைப் பாதுகாப்பேன்: மக்களுக்கு உடன்படிக்கையாகவும் பிற இனத்தாருக்கு ஒளியாகவும் நீர் இருக்குமாறு செய்வேன்.7 பார்வை இழந்தோரின் கண்களைத் திறக்கவும், கைதிகளின் தளைகளை அறுக்கவும், இருளில் இருப்போரைச் சிறையினின்று மீட்கவும் உம்மை அழைத்தேன்.8 நானே ஆண்டவர்: அதுவே என் பெயர்: என் மாட்சியைப் பிறருக்கோ, என் புகழைச் சிலைகளுக்கோ விட்டுக்கொடேன்.9 முன்னர் நான் அறிவித்தவை நிகழ்ந்துவிட்டன: புதியனவற்றை நான் அறிவிக்கிறேன்: அவை தோன்றுமுன்னே உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன்.
புகழ்ச்சிப் பா 10 ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்: உலகின் எல்லையெங்கும் அவர் புகழ்ப் பாடுங்கள்: கடலில் பயணம் செய்வோரே, கடல்வாழ் உயிரினங்களே, தீவு நாடுகளே, அவற்றில் குடியிருப்போரே, அவரைப் போற்றுங்கள்.11 பாலைநிலமும் அதன் நகர்களும் கேதாரியர் வாழ் ஊர்களும் பேரொலி எழுப்பட்டும்: சேலா வாழ் மக்களும் மகிழ்ந்து பாடட்டும்: மலைகளின் உச்சியிலிருந்து அவர்கள் ஆர்ப்பரிக்கட்டும்.12 அவர்கள் ஆண்டவருக்கு மாட்சி அளிப்பார்கள்: அவர் புகழைத் தீவு நாட்டினரிடையே அறிவிப்பார்கள்.13 ஆண்டவர் வலியோன் எனப் புறப்பட்டுச் செல்வார்: போர்வீரரைப்போல் தீராச் சினம் கொண்டு எழுவார்: உரத்தக்குரல் எழுப்பி, முழக்கமிடுவார்: தம் பகைவருக்கு எதிராக வீரத்துடன் செயல்படுவார்.
தம் மக்களுக்கு ஆண்டவரின் உதவி 14 வெகுகாலமாய் நான் மௌனம் காத்துவந்தேன்: அமைதியாய் இருந்து என்னைக் கட்டுப்படுத்திக்கொண்டேன், இப்பொழுதோ, பேறுகாலப் பெண்போல் வேதனைக்குரல் எழுப்புகின்றேன்: பெருமூச்சு விட்டுத் திணறுகின்றேன்.15 மலைகளையும் குன்றுகளையும் பாழாக்குவேன்: அவற்றின் புல்பூண்டுகளை உலர்ந்து போகச் செய்வேன்: ஆறுகளைத் திட்டுகளாக மாற்றுவேன்: ஏரிகளை வற்றிப்போகச் செய்வேன். 16 பார்வையற்றோரை அவர்கள் அறியாத பாதையில் நடத்திச் செல்வேன்: அவர்கள் பழகாத சாலைகளில் வழிநடத்துவேன்: அவர்கள்முன் இருளை ஒளியாக்குவேன்: கரடுமுரடான இடங்களைச் சமதளமாக்குவேன்: இவை நான் அவர்களுக்காகச் செய்யவிருப்பன: நான் அவர்களைக் கைநெகிழ மாட்டேன்.17 சிலைகள்மேல் நம்பிக்கை வைப்போரும், படிமங்களிடம், நீங்கள் எங்கள் தெய்வங்கள் என்போரும் இழிநிலையடைந்து, மானக்கேடுறுவர்.
கற்றுக் கொள்ளாத இஸ்ரயேல் 18 செவிடரே, கேளுங்கள்: குருடரே, கவனமாய்ப் பாருங்கள்.19 குருடாய் இருப்பவன் எவன்? என் ஊழியன்தான்! செவிடாய் இருப்பவன் எவன்? நான் அனுப்பும் தூதன் தான்! எனக்கு அர்ப்பணிக்கப்பட்டவன் போல் குருடன் யார்? ஆண்டவரின் ஊழியன்போல் பார்வையற்றவன் யார்?20 பலவற்றை நீ பார்த்தும், கவனம் செலுத்தவில்லை: உன் செவிகள் திறந்திருந்தும் எதுவும் உன் காதில் விழவில்லை.21 ஆண்டவர் தம் நீதியின் பொருட்டுத் தம் திருச்சட்டத்தைச் சிறப்பித்து மேன்மைப்படுத்த ஆர்வமுற்றார்.22 ஆனால் இந்த மக்களினம் கொள்ளையடிக்கப்பட்டுச் சூறையாடப்பட்டது: அவர்கள் அனைவரும் குழிகளில் சிக்கினர்: சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டனர்: விடுவிப்பார் எவருமிலர்: கவர்ந்து செல்லப்பட்டனர்: கொள்ளைப் பொருளாயினர்: திருப்பி அனுப்பு என்று சொல்வாரில்லை.23 உங்களுள் எவன் இதற்குச் செவி கொடுப்பான்? எவன் வருங்காலத்திற்காகக் கவனித்துக் கேட்பான்?24 யாக்கோபைக் கொள்ளைக்காரரிடமும் இஸ்ரயேலலைக் கள்வரிடமும் ஒப்புவித்தவர் யார்? ஆண்டவரன்றோ? அவருக்கு எதிராக அன்றோ நாம் பாவம் செய்தோம்! மக்கள் அவருடைய நெறிகளைப் பின்பற்ற விரும்பவில்லை: அவரது திருச்சட்டத்திற்குக் கீழ்ப்படியவில்லை.25 ஆகவே அவர் அவர்கள்மேல் தம் கோபக்கனலைக் கொட்டினார்: கடும் போர் மூண்டது: அவரது சினம் அவர்களைச் சூழ்ந்து பற்றி எரிந்தது: ஆயினும் அவர்கள் உணரவில்லை: அவர்களை நெருப்பு சுட்டெரித்தது: ஆயினும் அவர்கள் சிந்தையில் கொள்ளவில்லை. |