Chapter: Verses:
Start  End 
 
 
திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

எபிரேயருக்கு எழுதிய திருமுகம்

முன்னுரை

பவுலுடன் தொடர்புப்படுத்தப்படும் இறுதியான திருமுகம் இந்த எபிரேயர் திருமுகம். இது ஒரு திருமுகம் என வழங்கப்பட்டாலும், இதில் திருமுக அமைப்பு இல்லை; மாறாக ஓர் இறையியல் கட்டுரையாகவே இது அமைந்துள்ளது. நூலின் இறுதியில் மட்டும் வாசகர்களுக்கு அறிவுரைகள் தரப்பட்டுள்ளன.

ஆசிரியர்

எபிரேயருக்கு எழுதிய திருமுகத்திற்கும் பவுலின் திருமுகங்களுக்கும் இடையே ஒற்றுமைகள் இருப்பினும் வேற்றுமைகள் மிகுதியாக இருப்பதால் இத்திருமுகத்தைப் பவுல் எழுதியிருக்க இயலாது என அனைவரும் இப்போது ஒரு மனதாக ஏற்றுக் கொள்கின்றனர். அப்பொல்லோ எழுதியிருக்கலாம் என்பர் சிலர். இருப்பினும் யாரால் எழுதப்பட்டது என்னும் கேள்விகளுக்குத் தெளிவான விடை காண இயலவில்லை.

சூழலும் நோக்கமும்

இத்திருமுகம் யூதக் கிறிஸ்தவர்களுக்கு எழுதப்பட்டதாகும். அவர்கள் பழைய ஏற்பாட்டில் தோய்ந்தவர்கள்; தங்கள் நம்பிக்கையில் தளர்ச்சி ஏற்பட்டு, நம்பிக்கையை இழந்துவிடக்கூடிய ஆபத்தில் இருந்தவர்கள். அவர்கள் கிறிஸ்தவ நம்பிக்கையில் உறுதியாய் நில்லாமல் மீண்டும் யூதச் சமயத்திற்குத் திரும்ப நினைத்தார்கள்; தாங்கள் பெற்றுக் கொண்ட நற்செய்தியை யூதமயமாக்க விரும்பினார்கள் (கலா 2:14). ஒரு வேளை இந்த வாசகர்களில் பலர் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்ட யூதக் குருக்களாகவும் இருக்கலாம் (திப 6:7).

இத்திருமுகத்தில் எருசலேம் கோவில் மற்றும் அதன் வழிபாடுகள் நிகழ் காலத்தில் விரிவாகத் தரப்படுவதால் கி.பி. 70இல் நடந்த எருசலேம் கோவில் அழிவுக்கு முன்னர் இது எழுதப்பட்டது என்பர் சிலர்.

ஆயினும் இக்கருத்தைப் பலர் ஏற்றுக் கொள்வதில்லை. ஏனெனில் கோவிலிலும் அதன வழிபாடுகளும் கிறிஸ்துவின் செயல்களுக்கும் தன்மைக்கும் முன் அடையாளமாக மட்டுமே தரப்படுகின்றன. தன்னிலேயே அவற்றை விளக்குவது ஆசிரியரின் நோக்கமல்ல. திருமுகம் கி.பி. 80ஆம் ஆண்டிலிருந்து 85ஆம் ஆண்டுக்குள் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்றே எல்லாரும் நம்புகின்றனர்.

உள்ளடக்கம்

கிறிஸ்துவின் மேன்மையை இந்நூலின் மையக் கருத்தாகும். முன்னுரையில் கிறிஸ்து முழுமையான, முடிவான வெளிப்பாட்டைத் தருகிறார் எனக் கூறப்பட்டுள்ளது. இறைவாக்கினருக்கும் வானதுர்தருக்கும் பழைய உடன்படிக்கையின் இணைப்பாளரான மோசேக்கும் மேலானவராகக் கிறிஸ்து காட்டப்படுகிறார். கிறிஸ்துவின் குருத்துவம் பழைய ஏற்பாட்டுக் குருத்துவத்தினின்று முற்றிலும் மாறுபட்டதும் அதற்கு மேம்பட்டதுமாகும் எனச சுட்டிக் காட்டப்படுகிறது. ஏனெனில் கிறிஸ்துவின் குருத்துவம் பழைய ஏற்பாட்டின் வாக்குறுதியை நிறைவு செய்கிறது (8:1-13); கிறிஸ்துவின் பலியும் எக்காலத்துக்கும் உரிய ஒரே பலியாய் விளங்கி; பழைய ஏற்பாட்டுப் பலிகளை நிறைவு செய்கிறது; கிறிஸ்துவின் சாவு, உயிர் பெற்றெழுதல், விண்ணேற்றம் ஆகியன விண்ணகத் தூயகத்தை நமக்குத் திறந்து வைத்துள்ளன என்னும் கருத்துக்களை வலியுறுத்தப்படுகின்றன.

இத்தகைய காரணங்களினால், கிறிஸ்துவின் மீது நம்பிக்கை கொண்டோர் கிறிஸ்துவை விட்டு மீண்டும் யூத முறைக்குத் திரும்பலாகாது என்று கேட்டுக் கொளகிறார் ஆசிரியர்; அவ்வாறு செய்தால் பாலைவனத்தில் கிளர்ச்சி செய்த இஸ்ரயேலர் போல் இவர்களும் தண்டிக்கப்படுவார்கள் என எச்சரிக்கை விடுக்கிறார்.

அமைப்பு
  1. முன்னுரை: கடவுள் தம் மகன் முலமாக நம்மிடம் பேசியுள்ளார். 1:1 - 3
  2. கடவுளின் மகன் வானதூதரைவிட மேலானவர் 1:4 - 2:18
  3. இயேசு கிறிஸ்து மோசேக்கும் யோசுவாவுக்கும் மேலானவர் 3:1 - 4:3
  4. இயேசு கிறிஸ்துவின் குருத்துவத்தின் மேன்மை 4:14 - 7:28
  5. இயேசு கிறிஸ்துவின் உடன்படிக்கையின் மேன்மை 8:1 - 9:28
  6. இயேசு கிறிஸ்து பலியின் மேன்மை 10:1 - 39
  7. நம்பிக்கையின் மேன்மை 11:1 - 12:29
  8. கடவுளுக்கு உகந்த வாழ்க்கை 13:1 - 19
  9. இறுதி வாழ்த்துரை 13:20 - 21
  10. முடிவுரை 13:22 - 25


அதிகாரம் 1

1. முன்னுரை
கடவுள் தம் மகன் மூலமாக நம்மிடம் பேசியுள்ளார்
1 பலமுறை, பலவகைகளில் முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக நம் மூதாதையரிடம் பேசிய கடவுள், 2 இவ்விறுதி நாள்களில் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார்: இவரை எல்லாவற்றுக்கும் உரிமையாளராக்கினார்: இவர் வழியாக உலகங்களைப் படைத்தார்.3 கடவுளுடைய மாட்சிமையின் சுடரொளியாகவும், அவருடைய இயல்பின் அச்சுப் பதிவாகவும் விளங்கும் இவர், தம் வல்லமைமிக்க சொல்லால் எல்லாவற்றையும் தாங்கி நடத்துகிறார். மக்களைப் பாவங்களிலிருந்து தூய்மைப் படுத்தியபின், விண்ணகத்தில் இவர் பெருமைமிக்க கடவுளின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார்.

2. கடவுளின் மகன் வானதூதரைவிட மேலானவர்
4 இவ்வாறு இறைமகன் வான தூதரைவிடச் சிறந்ததொரு பெயரை உரிமைப்பேறாகப் பெற்றார். அந்நிலைக்கு ஏற்ப அவர்களைவிட இவர் மேன்மை அடைந்தார்.5 ஏனெனில், கடவுள் வானதூதர் எவரிடமாவது நீ என் மைந்தர்: இன்று நான் உம்மைப் பெற்றெடுத்தேன் என்றும், நான் அவருக்குத் தந்தையாயிருப்பேன், அவர் எனக்கு மகனாயிருப்பார் என்றும் எப்போதாவது கூறியதுண்டா?6 மேலும் அவர் தம் முதற்பேறான இவரை உலகிற்கு அனுப்பியபோது, கடவுளின் தூதர் அனைவரும் அவரை வழிபடுவார்களாக என்றார்.7 வானதூதரைக் குறித்து அவர் தம் தூதரைக் காற்றுகளாகவும் தம் பணியாளரைத் தீப்பிழம்புகளாகவும் செய்கிறார் என்றார்.8 தம் மகனைக் குறித்து, இறைவனே, என்றுமுளது உமது அரியணை: உம் ஆட்சியின் செங்கோல் வளையாத செங்கோல்.9 நீதியே உமது விருப்பம்: அநீதி உமக்கு வெறுப்பு: எனவே கடவுள், உமக்கே உரிய கடவுள், மகிழ்ச்சியின் நெய்யால் உம்மீது அருள்பொழிவு செய்து அரசத் தோழரினும் மேலாய் உயர்த்தினார் என்றார்.10 மீண்டும், ஆண்டவரே, நீர் தொடக்கத்தில் பூவுலகுக்கு அடித்தளம் இட்டீர். விண்ணுலகம் உமது கைவினைப் பொருள் அன்றோ!11 அவையோ அழிந்துவிடும்: நீரோ நிலைத்திருப்பீர். அவையெல்லாம் ஆடைபோல் பழமையாகும்:12 போர்வையைப்போல் அவற்றை நீர் சுருட்டிவிடுவீர்: ஆடையைப்போல் அவற்றை மாற்றிவிடுவீர். நீரோ மாறாதவர்! உமது காலமும் முடிவற்றது என்றார் அவர்.13 மேலும், கடவுள், வானதூதர் எவரிடமாவது, எப்போதாவது, நான் உம் பகைவரை உமக்குக் கால்மணையாக்கும் வரை நீர் என் வலப்பக்கம் வீற்றிரும் என்று கூறியதுண்டா?14 அவர்கள் அனைவரும் ஊழியம் புரியும் ஆவிகள் அல்லவா? மீட்பை உரிமைப்பேறாகப் பெறவிருப்போருக்குத் தொண்டாற்ற அனுப்பப்பட்டவர்கள் அல்லவா?


திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

Free counters!