திருப்பாடல்கள் (சங்கீதங்கள்) |
|
அதிகாரம்
60
|
விடுதலைக்காக மன்றாடல் (பாடகர் தலைவர்க்கு; 'சான்றுபகர் லீலி மலர்' என்ற மெட்டு; ஆராம் நகராயிம், ஆராம் சோபா என்ற அரசுகளோடு தாவீது போர் புரிகையில், யோவாபு திரும்பி வந்து பள்ளத்தாக்கில் பன்னீராயிரம் ஏதோமியரை வெட்டி வீழ்த்தியபோது படிப்பினையாகத் தாவீது பாடிய கழுவாய்ப் பாடல்) (2 சாமு 8:13; 1 குறி 18:12) 1 கடவுளே! நீர் எங்களை வெறுத்து ஒதுக்கிவிட்டீர்; எங்களை நொறுக்கிவிட்டீர்; எங்கள்மீது சீற்றம் கொண்டீர்; இப்பொழுதோ, எங்களை நோக்கித் திரும்பியருளும்.2 நிலத்தை நீர் அதிரச் செய்தீர்; அதில் பிளவு உண்டாகச் செய்தீர்; அதன் வெடிப்புகளைச் சீர்ப்படுத்தும், அது ஆட்டம் கண்டுள்ளது;3 உம் மக்களைக் கடும் துன்பத்தைக் காணச் செய்தீர்; மதியை மயக்கும் மதுவை எங்களுக்குக் குடிக்கக் கொடுத்தீர்.4 உமக்கு அஞ்சி நடப்போர் அம்பினின்று தப்பித்துக்கொள்ளுமாறு அவர்களுக்கெனக் கொடி ஒன்றை ஏற்றிவைத்தீர். (சேலா)5 உம் அன்பர்கள் விடுதலை பெறுமாறு, உமது வலக்கரத்தால் எங்களுக்குத் துணை செய்யும்; எங்கள் விண்ணப்பத்திற்குப் பதிலளியும்!6 கடவுள் தமது தூயகத்தினின்று இவ்வாறு உரைத்தார்; வெற்றிக் களிப்பிடையே செக்கேமைப் பங்கிடுவேன்; சுக்கோத்துப் பள்ளத்தாக்கை அளந்து கொடுப்பேன்.7 கிலயாது என்னுடையது; மனாசேயும் என்னுடையதே; எப்ராயிம் என் தலைச்சீரா; யூதா என் செங்கோல்!8 மோவாபு எனக்குப் பாதம்கழுவும் பாத்திரம்; ஏதோமின்மீது என் மிதியடியை எறிவேன்; பெலிஸ்தியாவை வென்று ஆர்ப்பரிப்பேன்.9 அரண்சூழ் நகரினுள் என்னை இட்டுச் செல்பவர் யார்? ஏதோம்வரை என்னைக் கூட்டிச் செல்பவர் யார்?10 கடவுளே! நீர் எங்களைக் கைவிட்டு வீட்டீர் அன்றோ! கடவுளே! நீர் எங்கள் படைகளோடு புறப்படவில்லை அன்றோ!11 எதிரியை மேற்கொள்ள எங்களுக்கு உதவும்; மனிதர் தரும் உதவியோ வீண்.12 கடவுளின் துணையால் வீரத்துடன் போரிடுவோம்; அவரே நம் எதிரிகளை மிதித்து விடுவார். |