திருப்பாடல்கள் (சங்கீதங்கள்) |
|
அதிகாரம்
66
|
நன்றி புகழ்ப்பா (பாடகர் தலைவர்க்கு; தாவீதின் புகழ்ப்பாடல்) 1 அனைத்துலகோரே! கடவுளைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்!2 அவரது பெயரின் மாட்சியைப் புகழ்ந்து பாடுங்கள்; அவரது புகழை மேன்மைப்படுத்துங்கள்.3 கடவுளை நோக்கி 'உம் செயல்கள் எவ்வளவு அஞ்சத்தக்கவை; உமது மாபெரும் ஆற்றலின் காரணமாக உம் எதிரிகள் உமது முன்னலையில் கூனிக் குறுகுவர்;4 அனைத்துலகோர் உம்மைப் பணிந்திடுவர்; அவர்கள் உம் புகழ் பாடிடுவர்; உம் பெயரைப் புகழ்ந்து பாடிடுவர்' என்று சொல்லுங்கள். (சேலா)5 வாரீர்! கடவுளின் செயல்களைப் பாரீர்! அவர் மானிடரிடையே ஆற்றிவரும் செயல்கள் அஞ்சுவதற்கு உரியவை.6 கடலை உலர்ந்த தரையாக அவர் மாற்றினார்; ஆற்றை அவர்கள் நடந்து கடந்தார்கள். அங்கே அவரில் நாம் அகமகிழ்ந்தோம்.விப 14:21; யோசு 3:14-17 7 அவர் தமது வலிமையால் என்றென்றும் அரசாள்கிறார்! அவர்தம் கண்கள் வேற்றினத்தாரைக் கவனித்து வருகின்றன; கலகம் செய்வோர் அவருக்கு எதிராய்த் தலைதூக்காதிருப்பாராக! (சேலா)8 மக்களினங்களே! நம் கடவுளைப் போற்றுங்கள்; அவரைப் புகழ்ந்துபாடும் ஒலி கேட்கச் செய்யுங்கள்.9 நம்மை உயிர்வாழச் செய்தவர் அவரே; அவர் நம் கால்களை இடற விடவில்லை.10 கடவுளே! எங்களை ஆய்ந்து, வெள்ளியைப் புடமிடுவதுபோல் புடமிட்டீர்;11 கண்ணியில் எங்களை விழும்படி செய்தீர்; பளுவான சுமைகளை எங்கள் முதுகின் மீது சுமத்தினீர்.12 மனிதரை எங்கள் தலைகள்மீது நடந்துபோகச் செய்தீர்: நெருப்பிலும் தண்ணீரிலும் அகப்பட்டிருந்தோம்; ஆயினும், நீர் எங்களைப் பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டுவந்து சேர்த்தீர்.13 எரிபலியுடன் உமது இல்லத்தினுள் செல்வேன்; என் பொருத்தனைகளை உமக்குச் செலுத்துவேன்.14 அவற்றை என் துன்ப வேளையில் என் நா உரைத்தது; என் வாய் உறுதி செய்தது.15 கொழுத்த கன்றுகளை, செம்மறிக்கிடாய்களின் நறும்புகையோடு, உமக்கு எரிபலியாகச் செலுத்துவேன்; காளைகளையும் வெள்ளாட்டுக் கிடாய்களையும் உமக்குப் பலியிடுவேன். (சேலா)16 கடவுளுக்கு அஞ்சி நடப்போரே! அனைவரும் வாரீர்! கேளீர்! அவர் எனக்குச் செய்ததனை எடுத்துரைப்பேன்.17 அவரிடம் மன்றாட என் வாய்திறந்தது; அவரை ஏத்திப் புகழ என் நா எழுந்தது.18 என் உள்ளத்தில் தீய எண்ணங்களை வளர்த்திருந்தேனாகில், என் தலைவர் எனக்குச் செவிசாய்த்திருக்கமாட்டார்.19 ஆனால், உண்மையில் கடவுள் எனக்குச் செவிகொடுத்தார்; என் விண்ணப்பக் குரலை உற்றுக் கேட்டார்.20 என் மன்றாட்டைப் புறக்கணியாத கடவுள்போற்றி! தம் பேரன்பை என்னிடமிருந்து நீக்காத இறைவன் போற்றி! |