விவிலியத்தில் உள்ள ஆழமான இறையியல் பகுதியாக விளங்குவது உரோமையர் திருமுகமாகும். தூய பவுல் எழுதிய போதனையின் சுருக்கம் இந்நூலில் அடங்கியுள்ளது எனலாம். இத்திருமுகக் கருத்துக்களின் அடிப்படையில் திருச்சபையின இறையியல் கோட்பாடுகள் பல வடிவங்களில் வளர்ச்சியடைந்துள்ளன. இதனைத் தூய பவுல் கைப்பட எழுதவில்லை; மாறாக 16:22இல் காண்கிறபடி தெர்த்தியு என்பவரை எழுத்தாளராகக் கொண்டு எழுதியுள்ளார். சூழலும் நோக்கமும்தூய பவுல் இத்திருமுகத்தை எழுதும்போது உரோமைக்குச் சென்றிருக்கவில்லை. எனினும் அக்காலத்தில் திருச்சபை அங்கே வேரூன்றியிருந்தது. வேறு பல நற்செய்தியாளர்கள் அங்குச் சென்று மறைப்பணி புரிந்திருந்தனர். அது உரோமைப் பேரரசின் தலை நகராக இருந்ததால், பல நாடுகளிலிருந்து கிறிஸ்தவர்கள் அங்குப் போய் வாழ்ந்து வந்தனர். இந்த உரோமை சபையைக் சந்திக்க விழைந்தார் பவுல். ஸ்பெயின் நாடு போகும் வழியில் உரோமைக் கிறிஸ்தவர்களைச் சந்திக்கத் திட்டமிட்டார் (15:28) மாசிதோனியா, அக்காயா ஆகிய நாடுகிளலிருந்து இறைமக்கள் கொடுத்த காணிக்கையை எருசலேம் கொண்டு போகுமுன் கொரிந்து நகரிலிருந்து இத்திருமுகத்தை அவா கி.பி. 57-58 காலக் கட்டத்தில் வரைந்திருக்க வேண்டும். பவுல் இத்திருமுகத்தை எழுதுமுன் கலாத்தியருக்கு ஒரு திருமுகத்தை எழுதியிருந்தார். நம்பிக்கையினால் இறைவனுக்கு ஏற்புடைமை ஆதல் குறித்து அத்திருமுகத்தில் சொல்லப்பட்ட கருத்துக்கள் பல சர்ச்சசைகளை உருவாக்கியிருக்க வேண்டும். அத்துடன் செயல்கள், சட்டங்கள் ஆகியவற்றை விட நம்பிக்கையே மேலானது என்னும் பவுலின் போதனையும் கடும் எதிர்ப்புக்குள்ளாகியது. சிலர் தவறான கருத்துக்களை உரோமையிலும் பரப்பி, செயல்கள் மற்றும் சட்டத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்க முனைந்தனர்; யூத மறைக்கெதிரான பல தவறான கருத்துக்களைப பவுல் பரப்பிக் குழப்பம் ஏற்படுத்துவதாகத் கூறினர். எனவே பவுல் இத்திருமுகத்தை எழுதுகிறார். தம்முடைய போதனையைக் குறித்தும் தம் திருத்தூதுப் பணியைக் குறித்தும் தெளிவான கண்ணோட்டத்தை உரோமைக் கிறிஸ்தவர்கள் பெறவேண்டும்; தாம் அவர்களைச் சந்திக்கும்முன் அவர்கள தம்மைப் பற்றிய தவறான கருத்துக்களைக் கைவிட வேண்டும் எனறெல்லாம் எண்ணி அவர் இத்திருமுகத்தை எழுதியதாகத் தெரிகிறது. எருசலேம் மக்களுக்கான நன்கொடையை நேரில் சென்று கொடுக்குமுன் தம்மையும் தாம் திரட்டிய கொடையையும் அவர்கள் ஏற்றுக்கொள்ளும்படி (15:31), அவர்களைத் தயாரிப்பதும் இத்திருமுகத்தின் சில பகுதிகளின் (குறிப்பாக அதி 9-11) நோக்கமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. உள்ளடக்கம்இத்திருமுகத்தின் அதி 1-11 வரையிலான பகுதியில் ஆழமான இறையியல் கொள்கைகள் காணப்படுகின்றன. 1:17 இல் பவுல் திருமுகத்தின் மையக் கருத்தை முன் வைக்கிறார்; நம்பிக்கையினால் இறைவனுக்கு ஏற்புடையவரே வாழ்வு பெறுவர் என்கிறார். தொடர்ந்து இக்கருத்து விளக்கம் பெறுகிறது. யூதர்கள் என்றாலும் பிற இனத்தவர்கள் என்றாலும் அவர்கள் கடவுளுக்குக் கீழ்ப்படியாதவர்களே. மனித குலம் முழுவதுமே பாவத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளது. எனவே எல்லாருக்கும் மீட்புதேவை. இந்த மீட்பு இயேசு மீது நம்பிக்கை கொளவதால் வருகிறது. திருச்சட்டத்தினாலோ, விருத்தசேதனத்தினாலோ இது வருவதில்லை. தொடர்ந்து, புதுவாழ்வு பற்றிப் பேசும் பவுல் அதை ஆவிக்குரிய வாழ்வு என்கிறார். ஏனெனில் தூய ஆவியால் நம்பிக்கை கொள்வோர் பாவம், சாவு ஆகியவற்றின் பிடியிலிருந்து விடுதலை பெறுகின்றனர். 9-11 அதிகாரங்களில் யூதர்களைப் பற்றிப் பேசுகிறார் பவுல், யூதர்கள் கிறிஸ்துவைப் புறக்கணித்தது கடவுளின் திட்டப்படி மனிதகுலம் முழுவதும் கிறிஸ்து இயேசு வழியாகக் கடவுளின் அருளைப் பெறவே என்றும், பிற இனத்தார் இப்போது மனம் மாறியிருப்பது யூதர்களிடையே போட்டி மனப்பான்மையை வளர்க்கவே என்றும், கடவுள் யூதர்களுக்குக் கொடுத்த வாக்கு மாறுவதில்லை என்பதால் யூதர்கள் ஒருநாள் மனம் மாறுவர் என்றும் அவர் குறிப்பிடுகிறார். 12 முதல் 15 வரையுள்ள அதிகாரங்களில் நடைமுறை ஒழுங்குகள் தரப்பட்டுள்ளன. உரோமைத் திருச்சபையில் யூதக் கிறிஸ்தவர்களும் பிற இனத்துக் கிறிஸ்தவர்களும் இருந்ததை மனத்தில் கொண்டு, அவர்கள் அன்புடன் கிறிஸ்தவ நெறிப்படி வாழும் முறைகுறித்துப் பவுல் பேசுகிறார். 16ஆம் அதிகாரம்: சில கையெழுத்துப்படிகளில் 15:1-16:24 வரையுள்ள பகுதி நீக்கப்பட்டு, 16:25-27 இல் உள்ள இறுதி வாழ்த்து 14ஆம் அதிகாரத்துடன் சேர்க்கப்பட்டுள்ளது. எனவே 15 மற்றும் 16 ஆம் அதிகாரம் வேறு ஒருவரால் எழுதப்பட்டது என்பர் சிலர். இருப்பனும் 15 ஆம்அதிகாரம் கருத்தின் அடிப்படையில் முன்னைய அதிகாரங்களுடன்ஒத்துபபோகிறது. 16ஆம் அதிகாரத்தில் 26 பேரைப் பவுல் வாழ்த்துகிறார். இவர்கள் பவுல் சென்றிராத உரோமைச் சபையின் உறுபபினர்களாக இருக்க முடியாது; எபேசலில் பணிபுரிந்தவர்களாக இருக்க வேண்டும். இவ்வதிகாரம் இத்திருமுகத்தை எடுத்துச்சென்ற பெய்பா, செல்லும் வழியில், எபேசிலிருந்த பணியாளர்களிடம் கொடுக்க வேண்டிய வாழ்த்து மடலாக இருக்கலாம். அது காலப்போக்கில் உரோமையர் திருமுகத்துடனே இணைக்கப் பெற்றிருக்க வேண்டும். அமைப்பு- முன்னுரை (வாழ்த்து, நன்றியும் மன்றாட்டும்) 1:1 - 17
- மனிதருக்கு மீட்பு தேவை 1:18 - 3:20
- கடவுள் மனிதரைத் தமக்கு ஏற்புடையவராக்கும் முறை 3:21 - 4:25
- கிறிஸ்துவோடு இணைந்த நிலையில் புதுவாழ்வு 5:1 - 8:39
- கடவுளின் மீட்புத் திட்டத்தில் இஸ்ரயேலர் 9:1 - 11:36
- கிறிஸ்தவ வாழ்வு 12:1 - 15:13
- முடிவுரையும் வாழ்த்தும் 15:14 - 16:27
|