Chapter: Verses:
Start  End 
 
 
திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

எசாயா

அதிகாரம் 26

மோவாபுக்கு எதிரான தண்டனைத் தீர்ப்பு ..............தொடர்ச்சி
1 அந்நாளில் யூதா நாட்டில் இந்தப் பாடல் பாடப்படும்: நமக்கொரு வலிமைமிகு நகர் உண்டு: நம்மைக் காக்க அவர் கொத்தளங்களை அமைத்துள்ளார்:2 வாயில்களைத் திறந்துவிடுங்கள்: அவர்மீது நம்பிக்கை கொண்ட நேர்மையான மக்களினம் உள்ளே வரட்டும்.3 அவர்கள் மனஉறுதி கொண்டவர்கள்: உம்மீது நம்பிக்கை உடையவர்கள்: அவர்களை அமைதியால் நீர் உறுதிப்படுத்துகின்றீர்.4 ஆண்டவர்மீது என்றென்றும் நம்பிக்கை கொள்ளுங்கள்: ஏனெனில், ஆண்டவர், என் ஆண்டவர் என்றுமுள கற்பாறை!5 உயரத்தில் வாழ்வோரை அவர் தாழ்த்துகின்றார்: வானுற உயர்ந்த நகரைத் தகர்க்கின்றார்: அதைத் தரைமட்டமாக்கி, புழுதியோடு புழுதியாக, மண்ணோடு மண்ணாகச் செய்கின்றார்.6 காலடிகள்-எளியோரின் காலடிகளும் ஏழைகளின் பாதங்களும்-அதை மிதிக்கும்.7 நீதிமான்களின் நெறிகள் நேரியவை: நீர் நேர்மையாளரின் வழியைச் செம்மையாக்குகின்றீர்.8 ஆண்டவரே, உமது நீதியின் நெறியில் நடந்து, உமக்காகக் காத்திருக்கிறோம், உமது திருப்பெயரும் உமது நினைவும் எங்களுக்கு இன்பமாய் உள்ளன.9 என் நெஞ்சம் இரவில் உம்மை நாடுகின்றது: எனக்குள்ளிருக்கும் ஆவி ஏக்கத்தோடு உம்மைத் தேடுகின்றது: உம் நீதித்தீர்ப்புகள் நிலவுலகில் நிலைத்திருக்கையில் வாழ்வோர் நேர்மையைக் கற்றுக் கொள்வர்.10 கொடியவர்களுக்கு நீர் இரக்கம் காட்டினாலும் அவர்கள் நேரியன செய்யக் கற்றுக் கொள்வதில்லை: நேர்மை நிறைந்த நாட்டில் அவர்கள் அநீதி செய்கின்றனர்: ஆண்டவரின் மாட்சியை அவர்கள் காண்பதில்லை.11 ஆண்டவரே, ஓங்கிய உம் கையை அவர்கள் காண்பதில்லை: உம் மக்கள்மீது நீர் கொண்ட பேரார்வத்தை அவர்கள் கண்டு நாணட்டும்! உம் பகைவர்களுக்காக மூட்டிய தீ அவர்களை விழுங்கட்டும்!12 ஆண்டவரே, நிறைவாழ்வை நீர் எங்களுக்கு உரியதாக்குவீர்! ஏனெனில், எங்கள் செயல்கள் அனைத்தையும் எங்களுக்காகச் செய்கின்றவர் நீரே.13 எங்கள் கடவுளாகிய ஆண்டவரே, உம்மைத்தவிர வேறு தலைவர்கள் எங்கள்மேல் ஆட்சி செலுத்தினார்கள்: ஆனால், உமது பெயரைமட்டுமே நாங்கள் போற்றுகின்றோம்.14 அவர்கள் செத்து மடிந்தார்கள், இனி உயிர்வாழ மாட்டார்கள். அவர்களின் நிழல்கள் உயிர்பெற்றெழ மாட்டா: ஏனெனில் நீர் அவர்களைத் தண்டித்து, அழித்துவிட்டீர்: அவர்களைப் பற்றிய நினைவுகள் யாவற்றையும் இல்லாததொழித்தீர்.15 இந்த இனம் வளரச் செய்தீர்: ஆண்டவரே, இந்த இனம் வளரச் செய்தீர்: நீர் மாட்சியுடன் விளங்குகின்றீர்: நாட்டின் எல்லைகள் அனைத்தையும் விரிவுபடுத்தினீர்.16 ஆண்டவரே, துயரத்தில் உம்மைத் தேடினோம்: நீர் எங்களைத் தண்டிக்கும்போது, உம்மை நோக்கி மன்றாடினோம்.17 பேறுகாலம் நெருங்குகையில், கருவுற்றவள் தன் வேதனையில் வருந்திக் கதறுவதுபோல், ஆண்டவரே, நாங்களும் உம் முன்னிலையில் இருக்கின்றோம்!18 நாங்களும் கருவுற்று வேதனையில் துடித்தோம்: ஆனால், காற்றைப் பெற்றெடுத்தவர் போலானோம்: நாடு விடுதலை பெற, நாங்கள் எதையும் சாதிக்கவில்லை: உலகில் குடியிருக்க, எவரும் பிறக்கப் போவதில்லை.19 இறந்த உம்மக்கள் உயிர் பெறுவர்: அவர்களின் உயிரற்ற உடல்கள் மீண்டும் எழும்: புழுதியில் வாழ்வோரே, விழித்தெழுந்து மகிழ்ந்து பாடுங்கள்: ஏனெனில், நீர் பெய்விக்கும் பனி ஒளியின் பனி: இறந்தோர் நிழல்களின் நாட்டிலும் அதை விழச்செய்கின்றீர்.

தண்டனையும் முன்னைய நிலைக்குக் கொணரலும்
20 என் மக்களே! நீங்கள் போய் உங்கள் அறைக்குள் நுழைந்து, உள்ளிருந்து கதவுகளைத் தாழிட்டுக் கொள்ளுங்கள்: கடும் சினம் தணியும்வரை சற்று ஒளிந்து கொள்ளுங்கள்.21 மண்ணுலகில் வாழ்வோர் தமக்கு எதிராகச் செய்த தீச் செயலுக்குத் தண்டனை வழங்க, ஆண்டவர் தம் திருத்தலத்திலிருந்து புறப்படுகின்றார்: மண்ணுலகம் தன் இரத்தப்பழியை வெளிக் கொணரும்: அதில் கொலை செய்யப்பட்டவர்களை இனியும் இது மூடிமறைக்காது.


திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

Free counters!