யோபு |
|
அதிகாரம்
14
|
வலிமைமிகு செயல்களில் தெரியும் கடவுளின் ஞானம் ..............தொடர்ச்சி 1 பெண்ணிடம் பிறந்த மனிதருக்கு வாழ்நாளோ குறைவு. வருத்தமோ மிகுதி.2 மலர்போல் பூத்து அவர்கள் உலர்ந்து போகின்றனர்: நிழல்போல் ஓடி அவர்கள் நிலையற்றுப் போகின்றனர்.3 இத்தகையோர்மீதா உம் கண்களை வைப்பீர்? தீர்ப்பிட அவர்களை உம்மிடம் கொணர்வீர்?4 அழுக்குற்றதினின்று அழுக்கற்றதைக் கொணர முடியுமா? யாராலும் முடியவே முடியாது.5 அவர்களுடைய நாள்கள் உண்மையாகவே கணிக்கப்பட்டுள்ளன. அவர்களுடைய திங்கள்களின் எண்ணிக்கை உம்மிடம் உள்ளது: அவர்கள் கடக்க இயலாத எல்லையைக் குறித்தீர்.6 எனவே அவர்களிடமிருந்து உம் பார்வையைத் திருப்பும்: அப்பொழுது, கூலியாள்கள் தம் நாள் முடிவில் இருப்பது போல், அவர்கள் ஓய்ந்து மகிழ்வர்.7 மரத்திற்காவது நம்பிக்கையுண்டு: அது தறிக்கப்பட்டால் மீண்டும் துளிர்க்கும்: அதன் குருத்துகள் விடாது துளிர்க்கும்.8 அதன் வேர் மண்ணில் பழமை அடைந்தாலும், அதன் அடிமரம் நிலத்தில் பட்டுப்போனாலும்,9 தண்ணீர் மணம் பட்டதும் அது துளிர்க்கும்: இளஞ்செடிபோல் கிளைகள் விடும்.10 ஆனால், மனிதர் மடிகின்றனர்: மண்ணில் மறைகின்றனர்: உயிர் போனபின் எங்கே அவர்கள்?11 ஏரியில் தண்ணீர் இல்லாது போம்: ஆறும் வறண்டு காய்ந்துபோம்.12 மனிதர் படுப்பர்: எழுந்திருக்கமாட்டார்: வானங்கள் அழியும்வரை அவர்கள் எழுவதில்லை: அவர்கள் துயிலிலிருந்து எழுப்பப்படுவதில்லை.13 ஓ! என்னைப் பாதாளத்தில் ஒளித்து வைக்கமாட்டீரா? உமது சீற்றம் தணியும்வரை மறைத்து வைக்கமாட்டீரா? என்னை நினைக்க ஒருநேரம் குறிக்கமாட்டீரா?14 மனிதர் மாண்டால், மறுபடியும் வாழ்வரா? எனக்கு விடிவு வரும்வரை, என் போராட்ட நாள்களெல்லாம் பொறுத்திருப்பேன்.15 நீர் அழைப்பீர்: உமக்கு நான் பதிலளிப்பேன்: உம் கைவினையாம் என்னைக் காண விழைவீர்.16 அப்பொழுது, என் காலடிகளைக் கணக்கிடுவீர்: என் தீமைகளைத் துருவிப் பார்க்கமாட்டீர்.17 என் மீறுதலைப் பையிலிட்டு முத்திரையிட்டீர்: என் குற்றத்தை மூடி மறைத்தீர்.18 ஆனால் மலை விழுந்து நொறுங்கும்: பாறையும் தன் இடம்விட்டுப் பெயரும்.19 கற்களைத் தண்ணீர் தேய்த்துக் கரைக்கும்: நிலத்தின் மண்ணை வெள்ளம் அடித்துப்போகும்: இவ்வாறே ஒரு மனிதனின் நம்பிக்கையை அழிப்பீர்.20 ஒடுக்குவீர் அவனை எப்பொழுதும்: ஒழிந்துபோவான் அவனும்: அவனது முகத்தை உருக்குலைத்து, விரட்டியடிப்பீர்.21 புதல்வர்கள் புகழ்பெறினும் அவன் அறிந்தான் இல்லை: கதியிழந்தாலும் அதை அவன் கண்டான் இல்லை.22 அவன் உணர்வது தன் ஊனின் வலியையே: அவன் புலம்புவது தன் பொருட்டே. |