Chapter: Verses:
Start  End 
 
 
திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

நீதிமொழிகள் (பழமொழி ஆகமம்)

அதிகாரம் 28

சாலமோனின் வேறு சில நீதிமொழிகள் ..............தொடர்ச்சி
1 பொல்லாங்கு செய்தோரை எவரும் பின்தொடர்ந்து செல்லாதிருந்தும், அவர்கள் ஓடிக்கொண்டே இருப்பார்கள்: நேர்மையானவர்களோ அச்சமின்றிச் சிங்கம் போல் இருப்பார்கள்.2 ஒரு நாட்டில் அறிவும் விவேகமுமுள்ள தலைவர்கள் இருந்தால், அதன் ஆட்சி வலிமைவாய்ந்ததாய் நிலைத்திருக்கும்: ஆனால் ஒரு நாட்டினர் தீவினை புரிவார்களாயின், ஆளுகை அடுத்தடுத்துக் கைமாறிக் கொண்டே இருக்கும்.3 ஏழைகளை ஒடுக்கும் கொடிய அதிகாரி, விளைச்சலை அழிக்கும் பெருமழைக்கு ஒப்பானவன்.4 நீதிபோதனையைப் புறக்கணிப்போரே, பொல்லாரைப் புகழ்வர்: அதைக் கடைப்பிடித்து நடப்போர் அவர்களை எதிர்ப்பர்.5 தீயோருக்கு நியாயம் என்றால் என்ன என்பதே தெரியாது: ஆண்டவரை வழிபடுபவரோ எல்லாவற்றையும் நன்குணர்பவர்.6 முறைகேடாய் நடக்கும் செல்வரைவிட, மாசற்றவராய் இருக்கும் ஏழையே மேல்.7 அறிவுக்கூர்மையுள்ள மகன் நீதிச் சட்டத்தைக் கடைபிடித்து நடப்பான்: ஊதாரிகளோடு சேர்ந்துகொண்டு திரிபவன் தன் தந்தைக்கு இழிவு வரச் செய்வான்.8 அநியாய வட்டி வாங்கிச் செல்வத்தைப் பெருக்குகிறவரது சொத்து, ஏழைகளுக்கு இரங்குகிறவரைச் சென்றடையும்.9 ஒருவர் திருச்சட்டத்திற்குக் கீழ்ப்படியாதிருப்பாரானால், கடவுளும் அவர் வேண்டுதலை அருவருத்துத் தள்ளுவார்.10 நேர்மையானவர்களைத் தீயவழியில் செல்லத் தூண்டுபவர், தாம் வெட்டின குழியில் தாமே விழுவார்: தீது செய்யாதவர்கள் வளம்பட வாழ்வார்கள்.11 செல்வர் தம்மை ஞானமுள்ளவர் என்று எண்ணிக்கொள்வார்: உணர்வுள்ள ஏழையோ அவரது உண்மையான தன்மையை நன்கறிவார்.12 நேர்மையானவர்கள் ஆட்சியுரிமை பெற்றால் மக்கள் பெருமிதம் கொள்வர்: பொல்லார் தலைமையிடத்திற்கு வந்தால், மற்றவர்கள் மறைவாக இருப்பார்கள். 13 தம் குற்றப் பழிகளை மூடிமறைப்பவரின் வாழ்க்கை வளம் பெறாது: அவற்றை ஒப்புக்கொண்டு விட்டுவிடுகிறவர் கடவளின் இரக்கம் பெறுவார். 14 எப்போதும் கடவுளுக்கு அஞ்சி வாழ்பவர் நற்பேறு பெறுவார்: பிடிவாதமுள்ளவரோ தீங்கிற்கு உள்ளாவார். 15 கொடுங்கோல் மன்னன் ஏழைக்குடிமக்களுக்கு முழக்கமிடும் சிங்கமும் இரைதேடி அலையும் கரடியும் போலாவான்.16 அறிவில்லாத ஆட்சியாளர் குடி மக்களை வதைத்துக் கொடுமைப்படுத்துவார்: நேர்மையற்ற முறையில் கிடைக்கும் வருவாயை வெறுப்பவர் நீண்டகாலம் வாழ்வார்.17 கொலை செய்தவன் தப்பியோடுவதாக எண்ணிப் படுகுழியை நோக்கி விரைகிறான்: அவனை எவரும் தடுக்க வேண்டாம்.18 நேர்மையாக நடப்பவருக்குத் தீங்கு வராது: தவறான வழியில் நடப்பவர் தீங்கிற்கு உள்ளாவார்.19 உழுது பயிரிடுகிறவர் நிரம்ப உணவு பெறுவார்: வீணானவற்றில் காலத்தைக் கழிப்பவர் எப்போதும் வறுமை நிறைந்தவராய் இருப்பார்.20 உண்மையுள்ள மனிதர் நலன்கள் பல பெறுவார்: விரைவிலேயே செல்வராகப் பார்க்கிறவர் தண்டனைக்குத் தப்பமாட்டார்.21 ஓரவஞ்சனை காட்டுவது நன்றல்ல: ஆனால் ஒரு வாய்ச் சோற்றுக்காகச் சட்டத்தை மீறுவோருமுண்டு.22 பிறரைப் பொறாமைக் கண்ணோடு பார்ப்பவர் தாமும் செல்வராக வேண்டுமென்று துடிக்கிறார்: ஆனால் தாம் வறியவராகப்போவதை அவர் அறியார்.23 முகப்புகழ்ச்சி செய்கிறவரைப் பார்க்கிலும் கடிந்துகொள்ளுகிறவரே முடிவில் பெரிதும் பாராட்டப்படுவார்.24 பெற்றோரின் பொருளைத் திருடிவிட்டு, அது குற்றமில்லை என்று சொல்கிறவன், கொள்ளைக்காரரை விடக் கேடுகெட்டவன்.25 பேராசைக்கொண்டவன் சண்டை மூளச் செய்வான்: ஆண்டவரையே நம்பியிருப்பவர் நலமுடன் வாழ்வார்.26 தன் சொந்தக் கருத்தையே நம்பி வாழ்பவன் முட்டாள்: ஞானிகளின் நெறியில் நடப்பவரோ தீங்கினின்று விடுவிக்கப்படுவர்.27 ஏழைகளுக்குக் கொடுப்பவருக்குக் குறைவு எதுவும் ஏற்படாது: அவர்களைக் கண்டும் காணாததுபோல் இருப்பவர் பல சாபங்களுக்கு ஆளாவார்.28 பொல்லார் தலைமையிடத்திற்கு வந்தால், மற்றவர்கள் மறைவாக இருப்பார்கள்: அவர்கள் வீழ்ச்சியுற்றபின் நேர்மையானவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவார்கள்.


திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

Free counters!